வேறொரு சுவிசேஷம்
(சாத்தானின் சுவிசேஷம்) கலா 1 : 6

சாத்தான் எதையும் தோற்றுவிக்கமாட்டான். ஆனால், ஏற்கெனவே இருக்கிற ஏதாவது ஒன்றைப்போல போலியாக நடிப்பான். தேவனுக்கு அவருடைய ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்து இருப்பது போல சாத்தானுக்கு "கேட்டின் மகன்" (2 தெச 2 : 3) இருக்கிறான். ஒரு பரிசுத்த திரித்துவம் இருப்பது போல சாத்தானுக்கு ஒரு பாவத் திரித்துவமும் உள்ளது (பிசாசானவன், மிருகம், கள்ளத்தீர்க்கத்தரிசி) (வெளி 20 : 10) தேவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்படுபவர்கள் இருப்பது போல "பொல்லாங்கனுடைய புத்திரர்" (மத் 13 : 38) என்று விவரிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். தேவன் தம்முடைய பிள்ளைகளில் செயலாற்றி தம்முடைய சித்தத்தின்படி செய்வதற்கு அவர்களுக்கு விருப்பத்தையும், வாஞ்சையையும் தருவது போல (பிலி 2 : 13) சாத்தான் "கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில்" (எபே 2 : 2) கிரியை செய்கின்றான். "தேவ பக்தியின் இரகசியம்" (1 தீமோ 3 : 16) என்று நாம் வாசிப்பது போல "அக்கிரமத்தின் இரகசியம்" (2 தெச 2 : 7) என்றும் நாம் வாசிக்கின்றோம். தேவன் தம்முடைய தூதரைக் கொண்டு தம் அடியாரின் நெற்றிகளில் முத்திரையிடுவதைப் போல (வெளி 7 : 3) சாத்தானும் தனக்கு அடிமைப்பட்டவர்களின் நெற்றிகளில் தன் பணியாட்களைக் கொண்டு அடையாளம் போடுகிறான் (வெளி 13 : 16) "ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார் (1 கொரி 2 : 10) என்று சொல்லப்பட்டிருப்பது போல சாத்தானுடைய ஆழங்கள் (வெளி 2 : 24) என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. இரட்சகர் இயேசு அற்புதம் செய்தது போல, சாத்தானும் அற்புதங்கள் செய்கின்றான் (2 தெச 2 : 9) அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள் (வெளி 16 : 14) என்று நாம் காண்கின்றோம். கிறிஸ்துவுக்குச் சிங்காசனம் இருப்பது போல, சாத்தானுக்கும் ஒரு சிங்காசனம் இருக்கிறது (வெளி 2 : 13) கிறிஸ்துவுக்கு அவருடைய சபையிருப்பது போல சாத்தானுக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது (வெளி 2 : 9) கிறிஸ்து உலகத்துக்கு ஒளியாயிருக்கிறார் (யோவான் 8 : 12) சாத்தானும் கூட ஒளியின் தூதனைப்போல நடிக்கிறான் (2 கொரி 11 : 14) கிறிஸ்து அப்போஸ்தலர்களை நியமித்தார் (லூக்கா 6 : 13) சாத்தானுக்கும் ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள் (2 கொரி 11 : 15) எனவே, "சாத்தானின் சுவிசேஷம்" என்பதை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும்.

சாத்தான் முதல் தரமான போலி நடிப்புக்காரன். கர்த்தர் நல்ல விதைகளை விதைத்த நிலத்திலேயே அவன் சுறுசுறுப்பாக விடா முயற்சியுடன் வேலை செய்கின்றான். கோதுமைப் பயிரைப் போன்று காணப்படும் களைகளை கோதுமையினிடையே விதைத்து கோதுமையின் வளர்ச்சியைத் தடுக்க அவன் முயல்கின்றான். சுருங்கச் சொன்னால், தன் போலி நடிப்புகளால் கிறிஸ்துவின் வேலையைப் பயனற்றதாக்குவது அவனுடைய நோக்கம். எனவே, கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு எதிராக சாத்தான் தன் போலி சுவிசேஷத்தைப் பரப்புகின்றான். சாத்தானின் சுவிசேஷம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் போலக் காணப்படுவதால் இரட்சிக்கப்படாத திரளான மக்கள் தவறான நாசத்தின் வழியில் நடத்தப்படுகிறார்கள்.

சாத்தானின் சுவிசேஷத்தைக் குறித்துத்தான் அப்போஸ்தலனாகிய பவுல், "உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன், வேறொரு சுவிசேஷம் இல்லையே, சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல" (கலா 1 : 6, 7) என்று எழுதினார். பொய் சுவிசேஷம் பவுலின் காலத்திலேயே அறிவிக்கப்பட்டது. அதைப் பிரசிங்கித்தவர்கள் மேல் ஒரு கொடிய சாபம் சுமத்தப்பட்டவது. "நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்" (கலா 1 : 8) என்று பவுல் கூறினார். நாம் இப்போது பொய் சுவிசேஷத்தின் விபரங்களை எடுத்துக் கூற அல்லது அது எப்படிப்பட்டது என்று விவரித்துக்காட்ட முற்படுவோம்.

சாத்தானின் சுவிசேஷம், அடிப்படை மாறுபாடுகளையுடைய ஒரு கொள்கை அல்ல, அது குழப்பம் உண்டாக்கும் ஒரு செயல் திட்டமும் அல்ல. அது சச்சரவையும், சண்டையையும் உண்டாக்குவதில்லை. அது சமாதானத்தையும், ஒருமைப்பாட்டையும் நாடுகிறது. அது, தாயை மகளுக்கு எதிராகவும், தகப்பனை மகனுக்கு விரோதமாகவும் எழுப்பி விடுவதில்லை. மனித இனம் ஒரு பெரிய சகோதரர் கூட்டம் என்று கருதும்படி எல்லாரும் உடன் பிறந்த சகோதரர் என்ற உணர்வை ஊட்டி வளர்க்கப் பார்க்கிறது. அது மனிதனின் இயற்கை நிலைமையைக் குறைகூறாமல், அவனை முன்னேற்றம் அடையச் செய்யவும், உயர்த்தவும் முயல்கிறது. அது கல்வியையும், நாகரீக வளர்ச்சியையும் ஆதரித்து, மனிதனில் உள்ள மேலானதைக் கவனிக்கச் செய்கிறது. இந்த உலகத்தை வசதியான, மனதுக்குப் பிடித்த ஒரு மனோகர வாழுமிடமாக மாற்றி, கிறிஸ்து இல்லாவிட்டாலும் குறை எதுவும் இல்லை என்றும், தேவனைத் தேட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மனிதரை எண்ணச் செய்வது அதின் நோக்கம். மனிதனை இந்த உலகத்தைப்பற்றியே அதிகமாகச் சிந்திக்கச் செய்து, வரும் உலகத்தைப் பற்றி நினைக்க நேரமோ, விருப்பமோ இல்லாதபடி செய்துவிட அது பெரு முயற்சி செய்கிறது. தன்னலம் மறுப்பு, தாராள மனப்பான்மை, சமுதாய சேவை, அன்புச் செயல்கள் ஆகியவற்றை அது பெருகச் செய்கிறது. பிறருடைய நன்மைக்காக வாழ வேண்டும், எல்லாரிடமும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அது போதிக்கிறது. இப்படிப்பட்ட போதனைகளை மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். ஏனெனில், மனிதன் சுபாவத்தின்படி பாவத்தில் விழுந்த நிலைமையில் இருக்கிறவன், தேவனுடைய ஜீவனுக்கு அந்நியன், அக்கிரமங்களிலும், பாவங்களிலும் மரித்தவன். மறுபடியும் பிறப்பதில்தான் அவனுடைய ஒரே நம்பிக்கை உள்ளது என்ற உண்மைகளை இந்தப் போதனை புறக்கணிக்கின்றது.

நற்செயல்களால் இரட்சிப்படையலாம் என்பது சாத்தானின் சுவிசேஷம். இது கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு மாறானது. முற்றும் விரோதமானது. மனிதனுடைய தகுதியைப் பார்த்து தேவன் அவனை ஏற்றுக் கொள்ளுகிறார் என்று இந்த உபதேசம் நம்பச் செய்கிறது. "நல்லவனாக இரு, நல்லதையே செய்" என்பது சாத்தானின் தந்திர உபதேசத்தின் அழுத்தமான வலியுறுத்தல். பாவத்தால் சீர்கெட்டுப்போன மனித சுபாவத்தில் நலமான எதுவும் இல்லை என்பதை இந்தப் போதனை ஒப்புக்கொள்ளுவதில்லை. இரட்சிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை முக்கியப்படுத்தாமல், இரட்சிப்பினால் உண்டாகும் குணத்தைப் பற்றி அது பேசுகிறது. இரட்சிப்பின் அனுபவம் இருந்தால்தான் இரட்சிப்பின் நற்குணசீலங்கள் உருவாகும் என்ற உண்மையை இப்போதனை சொல்லுவதில்லை. கிறிஸ்து இயேசுவுக்குள் மனிதர் புது சிருஷ்டிகளாக மாற்றப்படுவதைவிட பழைய மனிதனையே உயர்வடையச் செய்வது சாத்தியமானது என்று இப்போதனை கருதச் செய்கிறது. சமாதான பிரபுவாகிய கிறிஸ்துவின் கிரியையும், வருகையும் நடைபெறாமலேயே உலகத்தில் சமாதானம் நிலவ முடியும் என்பது இப்போதனையின் எதிர்பார்ப்பு.

சாத்தானால் அனுப்பப்படும் அநேகர் குருப்பட்டம் பெற்றவர்கள். இன்றைய பிரசங்க பீடங்களில் நிற்கும் ஆயிரக்கணக்கான பிரசங்கிகள் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை சத்தியங்களைப் பிரசங்கிக்காமல் சத்தியத்தை விட்டு விலகி கட்டுக்கதைகளுக்குச் செவிசாய்த்துவிட்டார்கள். பாவத்தின் பெருங் கொடுமையைப் பெரிதாக்கிக் காட்டாமல், பாவத்தின் நித்திய விளைவுகளை நடுக்கத்தோடு தேவ ஜனத்திற்கு எடுத்துரைக்காமல், பாவம் என்பது வெறும் அறியாமைதான் என்றும், நன்மையற்ற நிலைதான் பாவம் என்றும் அறிவித்து பாவத்தின் உண்மைத் தன்மையை மறைத்துக் காட்டுகிறார்கள். தங்கள் பிரசங்கத்தைக் கேட்பவர்கள் "வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ளும்படியாக" எச்சரிப்பதற்குப் பதிலாக, மிக்க அன்பும், இரக்கமும் உள்ள தேவன் தாம் படைத்த எவரையும் நித்திய நரகத்துக்கும், அக்கினியின் கொடும் வேதனைக்கும் உட்படுத்தமாட்டார் என்று பிரசிங்கித்து தேவனை பொய்யராக்குகிறார்கள். "இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது" என்று உறுதியாகக் கூறுவதற்குப் பதிலாகக் கிறிஸ்துவின் முன்மாதிரியைச் சுட்டிக் காண்பித்து அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்ற புத்தி சொல்லுகிறார்கள். அவர்களைப் பற்றி "எப்படியென்றால், அவர்கள் தேவ நீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலை நிறுத்தத் தேடுகிறபடியால் தேவ நீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்" (ரோமர் 10 : 3) என்றுதான் கூறவேண்டும். அவர்கள் கொடுக்கும் செய்தி மிகவும் சரியானதாகத் தோன்றலாம், அவர்களுடைய நோக்கம் மிகவும் புகழ்ச்சிக்குரியதாகத் தெரியலாம். ஆனால், அவர்களைப் பற்றி, "அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக் கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால், அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக் கொண்டால் அது ஆச்சரியமல்லவே, அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத் தக்கதாயிருக்கும்" (2 கொரி 11 : 13 -15) என்று வாசிக்கின்றோம்.

இன்று நூற்றுக்கணக்கான சபைகளில் தேவனுடைய முழு ஆலோசனையை வலியுறுத்திக்கூறி, அவருடைய இரட்சிப்பின் வழியை தெரிவிக்கக்கூடிய ஊழியர்கள் இல்லை. அப்படிப்பட்ட சபைகளில் உள்ள பெரும்பான்மையான மக்களும் தாங்களாகவே சத்தியத்தைக் கற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அல்ல. தேவனுடைய வார்த்தைகள் வழக்கமாக வாசிக்கப்படும் குடும்ப ஜெப வேளையும் இப்போது பல கிறிஸ்தவர்களின் வீடுகளில் இல்லை. பிரசங்க பீடத்தில் தேவனுடைய வார்த்தைகள் விளக்கமாகக் கூறப்படுவதில்லை. பிரசங்கம் கேட்கும் சபை மக்கள் ஆண்டவருடைய வார்த்தைகளை தங்கள் மட்டாக வாசிப்பதில்லை. வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தின் தேவைகள் மிகுதியாக இருப்பதால் தேவனைச் சந்திக்க ஆயத்தமாவதற்கு திரளான மக்களுக்கு நேரமில்லை. வாஞ்சை, விருப்பங்களும் கிடையாது. தேவனுடைய வார்த்தைகளைப் படித்து தாங்களாகவே சத்தியத்தை அறிந்து கொள்ள சோம்பல் படுவோர், தங்கள் போதகர்களையே சார்ந்திருக்கின்றார்கள்.

நீதிமொழிகள் 14 : 12 ஆம் வசனத்தில் இவ்வாறு வாசிக்கின்றோம்:- "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு, அதின் முடிவோ மரண வழிகள்" இந்த வசனம் கூறுகிற மரணத்தில் முடியும் வழியில் பிசாசு நடக்கச் செய்து அவர்களை ஏமாற்றுகிறான். மனிதன் தன் சொந்த முயற்சியால் இரட்சிப்படையலாம் என்று போதிக்கும் சாத்தானின் சுவிசேஷம் மரணத்தில் முடியும் வழியாகும். இந்த வழி "செம்மையாகத் தோன்றலாம்". அதாவது இந்தப் போதனை நம்பத்தக்க விதத்தில் அறிவிக்கப்படுவதால் ஜென்ம சுபாவம் கொண்ட குணப்படாத மனிதனை அது கவருகிறது. கேட்பவர்கள் ஒப்புக்கொள்ளத் தக்கவிதத்தில் இந்தப் போதனை தந்திரமாகவும், கவர்ச்சிகரமாகவும் கொடுக்கப்படுகிறது. இப்படிப் போதிப்பவர்கள் கிறிஸ்தவ சமயச் சொற்களையும், தங்கள் நோக்கத்திற்கு ஏற்ற விதத்தில் தேவனுடைய வசனங்களையும் பயன்படுத்துவார்கள். உயர்ந்த குறிக்கோள்களை தேவனுடைய ஜனத்துக்கு முன்பாக வைப்பார்கள். வேதசாஸ்திர கல்லூரிகளில் படித்தவர்களும் இப்படிப் பிரசங்கிப்பதால் எண்ணற்ற மக்கள் ஏமாற்றப்பட்டு பிடிக்கப்படுகிறார்கள்.

கள்ள நாணயம் அடிப்பவரின் வெற்றி, எந்த அளவுக்கு கள்ள நாணயம் உண்மை நாணயத்தைப் போல் இருக்கிறது என்பதைப் பொருத்தது. தவறான போதனை, முழு உண்மையையும் மறுத்துப் பேசாமல், அதைத் திரித்துப் போதிக்கிறது. எனவேதான், சத்தியத்தை முழுவதும் மறுப்பதைக் காட்டிலும் பாதிப் பொய் சொல்லுவது அதிக ஆபத்தானது. பொய்களின் பிதாவாகிய பிசாசு கிறிஸ்தவ அடிப்படை உண்மைகளை முழுவதும் மறுக்கமாட்டான். சத்தியத்தை தான் ஒப்புக்கொள்ளுவதுபோலக் காட்டுவான். ஆனால் அதற்கு தவறான விளக்கம் கொடுத்து கேட்பவர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் செய்வான். உதாரணமாக, தேவன் என்று ஒருவர் இல்லை என்று அவன் துணிந்து கூறமாட்டான். தேவன் இருக்கிறார் என்பதை அவன் ஒப்புக்கொள்ளுவான், ஆனால் அவருடைய பரிசுத்த தன்மைகளைக் குறித்து பொய் வர்ணனை கொடுப்பான். தேவன் எல்லா மனிதருக்கும் பரலோக தந்தை என்று போதிப்பான். ஆனால், "நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள்" (கலா 3 : 26) என்றும், "அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்" (யோ 1 : 12) என்றும் தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது. இந்த வேத வசனத்தின் அடிப்படையிலான உறுதியை அவன் வெளிக்காட்டமாட்டான். மேலும், தேவன் மிகவும் இரக்கம் உள்ளவர் எனவே, எந்த ஒரு மனிதனையும் அவர் நரகத்தில் தள்ளமாட்டார் என்று அடித்துப் பேசுவான். ஆனால், "ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான்" (வெளி 20 : 15) என்று தேவனே கூறுகின்றார்.

மனித வரலாற்றின் மையமாயிருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் சாத்தான் பொருட்படுத்தாமல் விட்டுவிடமாட்டான். மாறாக, இயேசு கிறிஸ்துதான் உலகத்தில் வாழ்ந்த மனிதரில் மிக மேலானவர் என்று கூறுவான். அவருடைய இரக்கச் செயல்கள், அவருடைய நற்குணங்களின் சிறப்பு, அவருடைய போதனைகளின் அருமை பெருமை ஆகியவற்றை அவன் குறிப்பிட்டுப் பேசுவான். சாத்தானின் சுவிசேஷம் கிறிஸ்து இரட்சகரின் வாழ்க்கையைப் புகழ்ந்து பேசும். ஆனால், பாவிகளின் பதிலாளாக அவர் அடைந்த சிலுவை மரணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது. சிலுவையில் அவர் நிறைவேற்றிய பாவம் போக்கும் மீட்பின் செயல் மிக முக்கியமானது. பிசாசு அதைப் பற்றிப் பேசமாட்டான். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நம்புவதற்கு ஆதாரமில்லை என்பான். சாத்தானின் சுவிசேஷம் இரட்சகர் இயேசுவின் இரத்தமில்லாத செய்தி. அது சிலுவை இல்லாத கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறது. கிறிஸ்து, மனிதனாக வெளிப்பட்ட தேவன் அல்ல, பின்பற்றத்தக்க மனிதன் மட்டுமே என்று அது கூறுகிறது.

நாம் சிந்திக்கும் இந்த சத்தியத்தை 2 கொரி 4 : 3-4 இல் உள்ள தேவ வசனங்கள் விளக்குகின்றன. "எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறை பொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்கு பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்" சாத்தான், கிறிஸ்துவின் சுவிசேஷ ஒளியை மறைத்து அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்குகிறான். கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பதிலாக தன் சொந்த செய்தியைக் கொடுத்து இவ்வாறு செய்கிறான். உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும், சாத்தான் என்றும் அவன் பொருத்தமாக அழைக்கப்படுகின்றான் (வெளி 12 : 9) மனிதன் தன்னில் தானே உயர்ந்த பண்புகளுள்ளவன், அவன் உயர்ந்தவித வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது அவனுடைய உபதேசம்.

மீண்டும் நீதிமொழிகள் 14 : 12 ஆம் வசனத்தைக் குறிப்பிடுகின்றேன். "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு, அதின் முடிவோ மரண வழிகள்" நரகத்திற்குச் செல்லும் பாதை நல்ல எண்ணங்களால் அமைக்கப்பட்டதுதான் என்று சொல்லப்பட்டிருப்பதில் ஓரளவு உண்மை இருக்கிறது. அக்கினிக்கடலில் பங்கடையும் பலர் நல்ல நோக்கங்களோடும், உண்மையான தீர்மானங்களோடும், மேலான விதத்தில் வாழவேண்டும் என்ற எண்ணத்தோடும் வாழ்பவர்கள்தான். அவர்கள் நீதியாய் நடந்து, நியாயமாய் செயல்புரிந்து, பெருந்தன்மையோடு வாழ்கிறார்கள். தங்கள் நேர்மையான நடத்தையைப்பற்றிப் பெருமைப்படுகிறார்கள். தங்கள் சுய நீதியைப் பார்த்து தேவன் தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் நன்னடத்தையும், இரக்கமும் உள்ளவர்கள். ஆனால் தாங்கள் தேவனுக்கு முன் குற்றவாளிகள், பாவத்தில் அழிகிறவர்கள், நரகத்துக்குரியவர்கள் என்று அவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை. தங்களை மீட்டு இரட்சிக்கும் இரட்சகர் தங்களுக்கு வேண்டும் என்ற எண்ணம் அவர்களில் இல்லை. இதுதான் " மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி" இந்த வழிதான் பலருக்கு நலமானதாகத் தோன்றுகிறது. இந்த வழியைத்தான் ஏமாற்றப்பட்டுள்ள ஏராளமான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நம்முடைய பக்திக்கடுத்த காரியங்களாலேயே நாம் இரட்சிக்கப்பட முடியும் என்ற எண்ணத்தைக் கொண்டு பிசாசு மனிதரை ஏமாற்றுகிறான். ஆனால் தேவன் தமது வசனத்தில் கூறுவது:- "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" (எபே 2 : 8) "நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே..........................நம்மை இரட்சித்தார்" (தீத்து 3 : 5) என்றும் வேதம் கூறுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன், குருப்பட்டம் பெறாத ஒரு பிரசங்கியும், ஆர்வம் மிக்க கிறிஸ்தவ ஊழியருமான ஒருவரோடு பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அந்த நண்பர் பிரசங்கம் செய்வதிலும், சபை வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவர் பேசிய விதத்திலிருந்து அவர் மறுபடியும் பிறந்த அனுபவமுள்ளவரா என்ற சந்தேகம் எனக்கு உண்டாயிற்று. அதைப் பற்றி அவரிடம் பேசினபோது அவருடைய வேத அறிவு மிகவும் குறைவானது என்றும், பாவிகளுக்காக கிறிஸ்து நிறைவேற்றி முடித்த மீட்பின் செயலைப் பற்றி மிகவும் தெளிவற்ற எண்ணம்தான் அவருக்கிருந்தது என்றும் தெரிந்தது. அவரைப் பற்றி ஒன்றும் பேசாமல், எளிதில் விளங்குகிற விதத்தில் இரட்சிப்பின் வழியை அவருக்கு அறிவித்து, வேத வசனத்தைத் தாமே படித்துப் பார்க்குமாறு அவரை உற்சாகப்படுத்தினோம். அவர் இரட்சிக்கப்படாதவராயிருந்தால் தேவன் அவருக்கு இரட்சகராகிய கிறிஸ்துவை வெளிப்படுத்துவார் என்று நம்பி அப்படிச் செய்தோம்.

ஒரு இரவு அந்த நண்பர் சொன்னதைக் கேட்டு சந்தோசப்பட்டோம். பல ஆண்டுகளாகப் பிரசங்கம் செய்து வந்த அவர் அதற்கு முந்தின இரவுதான் கிறிஸ்துவைத் தன் சொந்த அனுபவத்தில் கண்டடைந்ததாகக் கூறினார். அதுவரைக்கும், கிறிஸ்துவை மனிதர் பின்பற்றத்தக்க ஒருவராகத்தான் தாம் அறிவித்து வந்ததாக அவரே கூறினார். சிலுவையில் மரித்த கிறிஸ்துவை அவர் பிரசங்கிக்கவில்லை. அந்த ஊழியரைப்போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் ஒரு வேளை சிறுவர்களாக இருந்த நாட்களில் ஆண்டவரைப் பற்றி ஞாயிறு பள்ளிகளில் படித்திருக்கலாம். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, போதனைகள் ஆகியவற்றைப்பற்றிய சரித்திரங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். இயேசு கிறிஸ்து உண்மையாகவே உலகத்தில் வாழ்ந்தார் என்பதை அவர்கள் நம்புகிறார்கள். அவ்வப்போது அவருடைய போதனைகளை கைக்கொள்ளும்படியாகப் பிரசங்கிக்கின்றார்கள். தாங்கள் இரட்சிப்படைவதற்கு இவை போதும் என்பது அவர்கள் எண்ணம். இயேசு என்ற ஒருவர் இருந்ததே இல்லை என்று சாதிக்கும் நாஸ்தீகர்களோடு அவர்கள் பழக நேரிட்டாலும், இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். எனினும் அவர்கள் விசுவாசத்தைப் பரிசோதித்துப் பார்த்தால், அவர்கள் கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லப்படும் பல விபரங்களை நம்பினாலும், உண்மையில் அவரை அவர்கள் விசுவாசிப்பதில்லை என்பது தெரியும். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விவரங்களை நம்புவதால் தாங்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒருபோதும் ஒப்புக்கொடுக்கவில்லை. தங்கள் இருதயத்தில் அவரை உண்மையில் விசுவாசித்து ஏற்றுக் கொண்டதுமில்லை.

கிறிஸ்துவைப் பற்றிய போதனைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு, உள்ளத்தை அவருக்குக் கொடாமலும், வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்காமலும் இருப்பது "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற" வழியில் நடக்கும் ஒரு நிலைமையாகும். அதின் முடிவு "மரண வழிகள்"

வெறும் அறிவுக்குரிய விதத்தில் மட்டுமே கிறிஸ்துவை விசுவாசித்து அதற்கு மேல் போகாமலிருப்பது "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற" வழியில் நடக்கும் இன்னொரு நிலைமையாகும். ஆனால் அதின் முடிவு "மரண வழிகள்"

நீங்கள் என்ன நிலைமையில் இருக்கிறீர்கள்? "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற" ஆனால் மரணத்தில் முடிகிற பாதையில் பிரயாணம் செய்கின்றீர்களா? அல்லது, ஜீவனுக்குப் போகிற நெருக்கமான வழியில் நடக்கிறீர்களா? மரணத்துக்கு நடத்துகிற விசாலமான வழியை விட்டு உண்மையாகவே விலகிவிட்டீர்களா? கிறிஸ்துவின் அன்பு, அவருக்குப் பிரிமில்லாத அனைத்தையும் பற்றிய வெறுப்பையும், பயத்தையும் உங்கள் உள்ளத்தில் உண்டாக்கியிருக்கிறதா? அவர் உங்கள் மேல் இராஜாவாகவிருப்பதை விரும்புகின்றீர்களா? (லூக்கா 19 : 14) தேவன் உங்களை ஏற்றுக் கொள்ளும்படி நீங்கள் கிறிஸ்துவின் நீதியிலும் அவருடைய இரத்தத்திலும் மட்டுமே உங்கள் முழு நம்பிக்கையை வைத்திருக்கின்றீர்களா?

ஞானஸ்நானம், திடப்படுத்தல், போன்ற புறம்பான சமயச் சடங்குகளை மட்டுமே நம்பியிருப்போரும், சமுதாயத்தில் மதிக்கப்படுவதற்காக பக்தியுள்ளோராய் வாழ்வோரும், ஆலயத்திற்குச் செல்லுவது மக்கள் விரும்பும் ஒரு பழக்கமானதால் கோவிலுக்குப் போகிறவர்களும், ஒரு சபையில் சேர்ந்தால் கிறிஸ்தவர்களாகலாம் என்று நினைத்து ஏதோ ஒரு சபைப் பிரிவில் இணைந்திருப்பவர்களும் நித்திய மரணத்தில் முடிவடையும் வழியில் நடப்பவர்கள். நம்முடைய உள்ளெண்ணம் சுத்தமாயிருக்கலாம், நம்முடைய செயல் திட்டம் உயர்ந்ததாயிருக்கலாம், நம்முடைய நோக்கங்கள் நல்லவைகளாக இருக்கலாம், நம்முடைய பக்தி முயற்சிகள் உண்மையாயிருக்கலாம், ஆனாலும், நாம் தேவனுடைய குமாரனை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் தேவன் நம்மை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

இரட்சகர் இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய பாவம் போக்கும் பலியைப்பற்றிப் பிரசங்கித்து விட்டு, தேவன் கேட்பதெல்லாம் தம் குமாரனை நாம் "விசுவாசிக்க வேண்டும்" என்பதே என்று கூறுவது அதிக போலிப் பகட்டான உபதேசமாகும். குற்ற உணர்ச்சி அடைந்து, தங்கள் பாவத்திற்காக மனம் வருந்தாத ஆயிரக்கணக்கான மக்கள் இப்படிப்பட்ட பிரசங்கத்தைக் கேட்டு தாங்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று தங்களையே ஏமாற்றிக் கொள்ளுகின்றனர். "நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள்" (லூக்கா 13 : 3) என்று ஆண்டவர் கூறினார். பாவத்தை வெறுப்பதும், பாவம் செய்ததற்காகத் துக்கப்படுவதும், பாவத்தை விட்டுத் திரும்புவதுமே "மனந்திரும்புதல்" ஆகும். பரிசுத்த ஆவியானவரால் இருதயம் நொறுக்கப்பட்டால்தான் மனந்திரும்புதல் நிகழும். நொறுங்குண்ட இருதயம்தான் இரட்சிப்படையத்தக்க விதத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்.

கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதாக எண்ணிக் கொண்டு தங்களையே ஏமாற்றிக் கொள்ளுகிற ஆயிரக்கணக்கான மக்களும் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவரை முதலாவது தங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதரை இரட்சித்து அவர்களைப் பாவத்திலேயே விட்டுவிட தேவ குமாரன் இந்த உலகத்துக்கு வரவில்லை. பாவங்களைப் போக்கி மக்களை மீட்கவே அவர் வந்தார் (மத் 1 : 21) தேவனுடைய அதிகாரத்தைப் புறக்கணித்து வாழ்ந்த நிலைமையிலிருந்து விடுவிக்கப்படுதலும், நம் சித்தப்படி நடப்பதையும், நம்மையே பிரியப்படுத்தி வாழ்வதை உதறித் தள்ளுதலும், நாம் விரும்பும் வழியை விட்டுவிட்டு தேவனுடைய வழியைத் தெரிந்து கொள்ளுவதும் (ஏசாயா 55 : 7) பாவங்கள் நீங்கி இரட்சிக்கப்படுதலாகும். தேவனுடைய அதிகாரத்திற்கு ஒருவன் தன்னை ஒப்புவித்தலும், அவருடைய ஆளுகைக்கு தன்னை மனதார கையளிப்பதும், அவரால் வழிநடத்தப்பட தன்னை சமர்ப்பிப்பதும் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுதலாகும். கிறிஸ்துவின் நுகத்தைத் தன்மேல் ஏற்றுக் கொள்ளாமலும், தன் வாழ்க்கையின் எல்லாக் காரியங்களிலும் அவருக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பாமலும் இருக்கும் ஒருவன், தான் கிறிஸ்து இரட்சகரால் மீட்கப்பட்டவன் என்று எண்ணினால் அவன் தந்திரப் பிசாசினால் ஏமாற்றப்பட்டவன்.

மத்தேயு ஏழாம் அதிகாரத்தில், இரண்டு இடங்களில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பலனும், சாத்தானின் போலிப் போதனையின் விளைவும் ஏறத்தாழ ஒன்றுபோலிருக்கக் காண்கின்றோம். முதலாவது, வசனங்கள் 13, 14 "இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்" இரண்டாவது, வசனங்கள் 22, 23. "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கத்தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்" ஆம், இதை வாசிக்கும் சகோதரனே, நாம் கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி பலவற்றைச் செய்யலாம், அவர் நாமத்தில் பிரசங்கம் செய்யலாம், உலகம் நம்மை அறிந்திருக்கலாம், திருச்சபை நம்மை அறிந்திருக்கலாம், அப்படியிருந்தாலும் ஆண்டவர் "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை" என்று சொல்ல வேண்டிய நிலைமையில் நாம் இருக்கக்கூடும்! எனவே, நாம் நமது ஆவிக்குரிய நிலைமையில் எங்கே இருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்ளுவது எவ்வளவு அவசியம்! நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து நாம் உண்மையில் விசுவாசம் உடையவர்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தேவ வசனத்தைக் கொண்டு நம்மை நாமே அளந்து அறிந்து, நாம் சாத்தானால் ஏமாற்றப்பட்டிருக்கின்றோமா என்பதைக் கண்டுணர வேண்டும். நாம் நம் வீட்டை மணல் மேல் கட்டிக்கொண்டிருக்கின்றோமா அல்லது இயேசு கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் நம் வீடு எழுப்பப்படுகிறதா? என்பதை அறிந்து கொள்ளுவது எவ்வளவு அவசியம்! பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்து பார்ப்பாராக, நம்முடைய மாம்ச சித்தத்தை அவர் உடைப்பாராக. தேவனுக்கு விரோதமாக நம்மிலிருக்கும் பகைமையை அவர் துண்டித்துப் போடுவாராக. நம்மில் ஆழமான மனந்திரும்புதலை உண்டாக்கி, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியை உற்று நோக்கிப் பார்க்கக் கிருபை செய்வாராக. ஆமென்.

A.W.PINK


 
 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM