இந்த தேவ எக்காள இதழ் உங்கள் கரங்களை வந்தடையும் போது நாங்கள் எங்கள் இமயமலை தேவ ஊழியங்களுக்காக வடக்கே கடந்து சென்று கொண்டிருப்போம். கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டிலும் 2 வாகனங்களை முழுமையாக ஒரு மாத காலத்திற்கு நாங்கள் வாடகைக்கு அமர்த்தி மொத்தம் ஒன்பது பேர் கொண்ட ஒரு குழுவாக தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளை இமயமலைகளின் கடையாந்திர பகுதிகளில் இருக்கும் சிறிதும், பெரிதுமான ஏராளமான கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு கொடுக்க இருக்கின்றோம். எங்களுக்குப் பேச வாய்ப்புகள் கிடைக்கும் கல்விக்கூடங்கள் போன்ற இடங்களில் தேவனுடைய சுவிசேஷத்தை தேவபெலத்தால் அறிவிக்கவிருக்கின்றோம்.
"நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" (மாற்கு 16 : 15) "மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்கு சாட்சிகளாயிருக்கிறீர்கள்" (லூக்கா 24 : 47-48) "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்" (1 தீமோ 2 : 4) என்ற ஆண்டவருடைய ஜீவனுள்ள வார்த்தைகளின் அடிப்படையில் நாங்கள் எங்கள் சுவிசேஷப் பிரயாணத்தை கர்த்தரை முன் வைத்து மேற் கொள்ளுகின்றோம். நமதருமை இரட்சகர் "நகரத்தைப் பார்த்து அதற்காக கண்ணீர் விட்டழுததையும்" (லூக்கா 19 : 42) நரக பாதாளத்திற்குச் சென்று அங்கு நித்திய நித்திய காலமாக நரக அக்கினியின் உக்கிரகத்தை அனுபவிக்கப் போகும் ஆத்துமாக்களை நினைத்து "மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடே ஜெபம் செய்து அதினிமித்தம் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந் துளிகளாக தரையிலே விழுந்த கோரக் காட்சியையும்" (லூக்கா 22 : 44) எங்கள் உள்ளத்தில் நினைத்தவர்களாக நஷ்டப்பட்டுப் போகும் ஒரு ஆத்துமாவின் விலை மதிப்பை நாங்கள் கண்ணீரோடு உணர்ந்து மிகுந்த ஆத்தும பாரத்தோடும், ஜெபத்தோடும் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை மக்களுக்குக் கொடுக்கவும், அவைகளை வாங்கி வாசிக்கும் மக்களுடைய உள்ளங்களில் ஆண்டவர் தம்முடைய வார்த்தைகளின் மூலமாக பேசவும், அவர்களும் நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளவும் நீங்கள் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
எந்த ஒரு நிலையிலும் எங்களின் சுயம், பெருமை இந்த மாட்சிமையான தேவ ஊழியத்தில் தலை காட்டாதிருக்கவும், ஒவ்வொரு நாளும் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் தேவ ஊழியங்களுக்கு முன்னும் பின்னும் நாங்கள் அதிகமாக ஜெபிக்கவும், எப்பொழுதும் நாங்கள் ஜெப நிலையிலேயே காணப்படவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
அன்பின் ஆண்டவர் எங்களுக்கு எங்கள் ஊழிய நாட்கள் ஒவ்வொன்றிலும் நல்ல ஊழிய வாய்ப்புகளைத் தந்தருளவும், ஏராளமான ஆரம்ப, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளை நாங்கள் சந்தித்து அதில் கல்வி பயிலும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியருக்கும், ஆசிரிய பெரு மக்களுக்கும் சுவிசேஷப் பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுக்கவும் நீங்கள் ஜெபிக்க வேண்டும். "இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்" (வெளி 3 : 8) என்ற தேவ வார்த்தையின்படி எங்களுக்கு முன்பாக அவருடைய வார்த்தைகளை நாங்கள் தடையின்றிக் கொடுக்க திறந்த வாசல்களை அவர் தந்தருள உங்கள் ஜெபங்கள் தேவை.
இந்த வாகன தேவ ஊழியங்களில் பங்கு பெறும் ஒவ்வொரு தேவ ஊழியரின் குடும்பங்களுக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டும். எங்களுடைய ஊழிய கால நாட்கள் முழுமையிலும் அந்த அன்பின் குடும்பத்தினரை வியாதி பிணிகள் அணுகாதிருக்கவும், சத்துருவினிடமிருந்து எந்த ஒரு தாக்குதல்களும் அவர்களுக்கு ஏற்படாதிருக்கவும், அதின் காரணமாக தேவ ஊழியர்கள் தங்கள் ஊழியத்தை ஒரு மாத காலம் எந்த ஒரு தடையுமின்றி தேவ சமாதானத்தோடு நிறைவேற்றிக் கர்த்தரை மகிமைப்படுத்தவும் உங்கள் ஜெபங்களை ஆவலாக எதிர்நோக்குகின்றோம்.
அதே போன்று 2 வாகனங்களின் ஓட்டுனர்களின் குடும்பங்களுடைய பாதுகாப்புக்காகவும், வாகனங்கள் இரண்டும் நமது ஊழிய நாட்கள் முழுமையிலும் எந்த ஒரு பழுதின்றி சிறப்பாக ஓடவும் அவைகளை ஓட்டுபவர்களின் உடல் நலம் தேவ பாதுகாவலுக்காகவும் உங்கள் அன்பின் ஜெபம் தேவை.
நாங்கள் இப்பொழுது திரும்பவுமாக செல்லுகின்ற உத்தராஞ்சல் மாநிலம் தற்பொழுது காங்கிரஸ் ஆளுகையிலிருந்து மாறி பாரதீய ஜனதா கட்சிக்கு சென்றிருப்பதால் சாத்தானாம் பிசாசு எங்களுக்கு தீங்கு செய்ய கண் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும், உலகத்திலிருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர் என்ற தேவ வாக்கை மனதில் கொண்டவர்களாக கர்த்தருக்கு எங்களை ஒப்புவித்துக் கடந்து செல்லுகின்றோம். நீங்களும் இந்தக் காரியத்தை மனதில் வைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள்.
மிக அதிகமாக நாம் பணம் செலவிட்டு அச்சிட்டதும், விலை கொடுத்து வாங்கினதுமான பல்லாயிரக்கணக்கான ஆண்டவருடைய சுவிசேஷப் பிரசுரங்கள் அனைத்தையும் அன்பின் ஆண்டவர் தம்முடைய இரத்தக் கோட்டைக்குள்ளாகப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளவும், அவைகளுக்கு மழைகள் மற்றும் சத்துருவினால் உண்டாகும் இடையூறுகளால் எந்த ஒரு சேதமும் ஏற்படாதிருக்கவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
அன்பின் ஆண்டவர் எங்களுக்கு நல்ல இளைப்பாறும் ஸ்தலங்களை நாங்கள் செல்லுகின்ற இடங்களில் ஆயத்தம் பண்ணித் தரவும், நாங்கள் தங்கும் இடங்களில் அதிகமான மணி நேரங்களை ஜெபத்திலும், வேத வசன தியானத்திலும் நாங்கள் செலவிடவும், எந்த ஒரு நிலையிலும் நாங்கள் தேவனுக்குப் பிரியமற்ற வீண் வார்த்தைகளைப் பேசாதிருக்கவும், எங்களுடைய ஒரே கவனம் கர்த்தரை மகிமைப்படுத்துவதாக இருக்கவும், எங்களுடைய இராக்கால இளைப்பாறுதல்கள் எல்லா தேவ சமாதானம் நிறைந்ததாகவும் இருக்க அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். நாங்கள் புசிக்கும் ஆகாரங்கள் குடிக்கும் தண்ணீரை ஆண்டவர் எங்களுக்கு ஆசீர்வதித்துத் தரவும், ஜலதோஷம், இருமல் போன்ற கொடுந் தொல்லைகளுக்கு நாங்கள் விலக்கிக் காக்கப்படவும் உங்கள் ஜெபங்கள் தேவை.
தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் தியாக அன்போடு உங்களை ஒடுக்கிக் கொடுத்த உங்கள் காணிக்கைகள் எந்த ஒரு நிலையிலும் தேவையற்ற விதத்தில் வீண் விரயமாகாதிருக்கவும், அநாவசியமான பணச் செலவுகள் எங்களுக்கு ஏற்படாதிருக்கவும் நாங்கள் கொண்டு செல்லும் பணத்தில் இறுதியில் மீதியான துணிக்கைகளைக் கூடச் சேர்க்கும் விதத்தில் கர்த்தர் தம்முடைய அற்புதத்தை நடப்பிக்கவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
நாங்கள் கொண்டு செல்லுகின்ற அனைத்து தேவனுடைய பிரசுரங்களையும் நாங்கள் மக்களுக்குக் மகிழ்ச்சியோடு கொடுத்து முடித்து சந்தோசமாகத் திரும்பவும், "அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" (ஏசாயா 55 : 11) என்ற தேவ வாக்கு நமது ஊழியத்தில் வந்து பலிக்கவும் உங்கள் அன்பின் ஜெபம் தேவை.
இந்த உண்மையும், உத்தமமும், தேவனுடைய இருதயத்திற்கு உகந்த ஊழியத்திற்கு எதிராக தந்திர சாத்தான் எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளும், உபாய தந்திரங்களும் அவமாய்ப் போகவும், கர்த்தர் வெற்றி சிறக்கவும், அவருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படவும், தேவனை அறியாத ஏராளமான புற மதஸ்தர் தங்களுடைய பாவங்களுக்காக மரித்த தங்கள் அன்பின் இரட்சகரை ஜீவ தேவனாகக் கண்டு அவரில் அடைக்கலம் புகவும் உங்கள் உருக்கமான ஜெபங்களை ஆவலாக எதிர் நோக்குகின்றோம்.
உங்கள் ஜெபங்கள்தான் எங்கள் ஊழியங்களில் அதிசயங்களையும், அற்புதங்களையும் நடப்பிக்கும் ஏதுக்களாகும். தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் எங்களுக்காக பாரத்தோடு ஜெபித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நாங்கள் எங்கள் ஊழிய நாட்கள் ஒவ்வொன்றிலும் திட்டமாக உணர்ந்து கர்த்தருக்கு துதி செலுத்துவோம்.
நாம் வீணாக ஓடி வீணாகப் பிரயாசப்பட்டதில்லை என்ற மகிழ்ச்சி (பிலி 2 : 14) கிறிஸ்துவின் நாளில் நமக்கு உண்டாயிருப்பதற்கு தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் உங்கள் தனி ஜெபங்கள், குடும்ப ஜெபங்கள், விசுவாசிகளாக நீங்கள் கூடி ஜெபிக்கும் ஜெபக்கூட்டங்களில் இந்த எளிய ஊழியத்தை மறவாது அன்பாக நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள். அதற்கான பிரதி பலன் பரலோகில் உங்களுக்கு உண்டு. |