மகனே அதை நினைத்துக் கொள்



அன்றொரு நாள் ஒரு மனிதன் என்னிடம் வந்து "நீங்கள் நரகத்தைக் குறித்து பிரசங்கியாதபடியால் உங்கள் பிரசங்கத்தை நான் அதிகம் விரும்புகின்றேன். நரகத்தைக் குறித்த பொய் உபதேசத்தை நீங்கள் நம்பாதவர்கள் என்று நான் கருதுகின்றேன்" என்று கூறினான்.

நியாயத் தீர்ப்பு நாளிலே எந்த ஒரு மனிதனும் எனக்கு எதிராக எழுந்து நின்று பூவுலகில் நான் இருந்த நாட்களில் தேவனின் மெய் சத்தியத்தின் ஒரு பகுதியை மாத்திரம் பிரசங்கித்த உண்மையற்ற தேவ ஊழியன் என்று என்னைக் குறித்து குற்றம் சுமத்த நான் விரும்பவில்லை.

ஒரு மனிதன் மெய்யானதோர் தேவ ஊழியனானால் தேவன் அவனுக்கு கற்பித்த அனைத்துச் சத்தியங்களையும் ஒளிவு மறைவின்றி மக்களுக்குக் கட்டாயம் கூற வேண்டும். வேத புத்தகத்தின் ஒரு பகுதியிலுள்ள சத்தியங்களைப் பொறுக்கி எடுத்து அவை உண்மையென்றும், மற்றொரு பாகத்தின் சத்தியங்களைக் குறித்து அவை தவறு என்றும் அவன் ஒருக்காலும் சொல்லக் கூடாது.

மோட்சத்தின் அனைத்து அழகையும், மகிமையையும், சொல்லொண்ணா பேரின்பங்களையும் சிறப்பித்துக் கூறும் தேவனின் வேத புத்தகம் நரகத்தைக் குறித்தும் எனக்குக் கூறுகின்றது. லூக்கா சுவிசேஷம் 16 ஆம் அதிகாரத்தில் தேவ மைந்தன் நரகத்தைக் குறித்து மிகவும் விரிவாக வரைந்துள்ள சித்திரத்தைக் காட்டிலும் துலாம்பரமானதோர் சித்திரத்தை நாம் வேறெங்கும் காண இயலாது.

பரம எஜமானனாகிய அவர் ஒருவரைத் தவிர இவ்விதமானதோர் படத்தை வரைய எந்த ஒரு மனிதனாலும் கூடவே கூடாது. ஏனெனில், அவர் ஒருவரால்தான் வருங்காலத்தை உற்று நோக்க இயலும். அவர் பூவுலகத்தில் இருந்தபோது வருங்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்கள் யாவும் அவருக்குத் தெரிந்தன. நரகத்தைக் குறித்து நடுநடுங்க வைக்கும் பூரண சத்தியத்தைத் தம்மளவில் அவர் பின்னால் தள்ளி வைத்து மறைக்காமல் அதின் முழுமைக் காட்சியையுமே நமக்குத் தந்துவிட்டார்.

ஒரு தாய் தன் மகனை மிகவும் அகிமாகப் பாசத்துடன் நேசிப்பவளானால் அவன் பாவ வழியில் செல்லுகையில் அவன் மேலுள்ள பூரண தாயடைவான அன்பின் பெருக்கினால் அவனுக்கு முன்னாலுள்ள ஆபத்தையும், அழிவையும் குறித்து அவள் அவனை எச்சரிக்கின்றாள். பாவத்தில் அழியும் மனுக்குலத்தைக் குறித்து அவர்களைச் சிருஷ்டித்த பரம தாயாகிய கர்த்தரும் அவர்களை மேற்கண்ட தாயைப் போன்றே அவர்களுக்கு முன்புள்ள பயங்கர அழிவைக் குறித்து எச்சரிக்கின்றார்.

 

நமது நினைவுகள் நித்தியமானவை

நாம் இந்த உலகத்தை விட்டு மறுமைக்குள் கடந்து செல்லுகையில் இந்த உலகத்தில் நமக்குள்ள நினைவுகள் அனைத்தும் மறுமை உலகத்திற்கும் தொடர்ந்து வருகின்றது என்பதைப் பரிசுத்த வேத புத்தகம் மிகத் தெளிவாக ரூபகாரப்படுத்துகின்றது. "மகனே அதை நினைத்துக் கொள்" என்று தேவன் சொல்லும் போது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அதை நினைவு கூர்ந்தே தீரவேண்டும். நாம் இந்த உலகத்தில் சிறிதும், பெரிதுமான எவ்வளவோ காரியங்களைச் செய்கின்றோம். அவை அனைத்தும் நித்தியமாக நமது நினைவிலிருந்தே அற்றுப் போயிற்று என்றும் கூட நாம் நினைத்துக் கொள்ளுகின்றோம். ஜாண் காஃப் என்பவர் தனது தாயைப்படுத்தின பாடுகளைக் குறித்துப் பேசுகையில் "என்னை உயிரோடு கொல்லும் அந்த நினைவுகள் என்னைவிட்டுப் போகக் கூடியது சாத்தியமானால் எனது வலது கரத்தையே அதற்கு விலைக் கிரயமாக வெட்டிக் கொடுக்கத் தயார்" என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். அந்த நினைவுகள் அவனது கல்லறை வரை அவனைத் தொடர்ந்து செல்லும். அவன் அதை எக்காலத்தும் மறக்கவே இயலாது.

இந்த உலகத்தில் நாம் செய்த அநேக செயல்கள் நம்மால் மறக்கப்பட்டு போய்விட்ட போதினும் அவைகள் யாவும் நம் நினைவின் ஆழத்தில்தான் இன்னும் புதையுண்டு கிடக்கின்றன. அவை யாவற்றையும் தேவன் ஒன்றன் பின் ஒன்றாக நம் நினைவுக்கு கொண்டு வருகையில் அவை யாவும் திரும்பவுமாக நம் நெஞ்சில் பசுமையாகத் துளிர்விட்டுத் தோன்றும். "மகனே அதை நினைத்துக் கொள்" என்று கர்த்தர் சொல்லுகையில் நமது நினைவின் இரகசிய நரம்பைக் கர்த்தர் தொடுவார். உடன் தானே மறைந்து கிடக்கும் அனைத்து நினைவுகளும் பொங்கி வரும் நீர் ஊற்றைப் போன்று கொப்பளித்துக் கொண்டு வரும். நாம் அவற்றை ஒருக்காலும் மறக்கவியலாது. மாறாக நாம் அவற்றை நினைவுகூர்ந்தே தீரவேண்டும்.

நான் இரண்டு தடவைகள் மரணத்தின் விழிம்பில் இருந்திருக்கின்றேன். ஒரு முறை நான் தண்ணீரில் முற்றும் மூழ்கிவிட்டேன். அப்பொழுது தண்ணீரின் ஆழத்திற்குள் நான் ஒரு தடவை சென்று மறுபடியும் மூழ்கிக் கொண்டிருந்தேன். என்ன நினைக்கின்றீர்கள்? அந்த எனது நிர்ப்பந்தமான அகால மரண வேளையில் நான் செய்த அனைத்துச் செயல்களும், நான் எண்ணிய எனது நெஞ்சின் நினைவுகள் யாவும் ஒரு கண் இமைக்கும் நேரப் பொழுதில் படச் சுருளில் காண்பது போல என் கண்களுக்கு முன்னர் அவை வந்து நின்றன. அதைக் குறித்து நீங்கள் என்னை விவரித்துக் கூறச் சொன்னால் அதைச் செய்ய இயலாத நிலையிலிருக்கின்றேன்.

மற்றொரு தடவை வேல்ஸ் தெருவிலுள்ள நதிப் பாலத்தின் தண்ணீரில் நான் மூழ்கியிருக்கின்றேன். நமது காரியம் இத்துடன் முடிவுற்றது என்று நான் அப்பொழுது நினைத்ததுண்டு. அந்தச் சமயத்திலும் ஒரு கணப் பொழுதில் நான் கடந்த காலங்களில் செய்து மறந்த செயல்கள் அனைத்தும் திரும்பவுமாகப் பூரணத் தெளிவுடன் எனது நினைவிற்கு வந்தன. "மகனே அதை நினைத்துக் கொள்" என்று தேவன் எனக்குச் சொல்லும் பட்சத்தில் நாம் கட்டாயம் நினைத்துத்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு செயலும் திரும்பவும் நம் நினைவிற்கு வரும்.

மனிதன் தன் காதுகளினால் கேட்கும் ஒவ்வொரு காரியத்தையும் தன் நினைவில் கொண்டிருப்பான் என்பது நிரூபிக்கப்பட்டதோர் உண்மை என்பதாய் விஞ்ஞானிகள் இப்பொழுது கூறுகின்றனர். அது அவன் நினைவில் எங்கயோ ஓரிடத்தில் சேமிக்கப்பட்டு என்றாவது ஒரு நாள் கட்டாயம் வெளி வரத்தான் செய்யும் என்று கூறுகின்றனர்.

நான் ஒரு வேலைக்காரப் பெண்ணைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கின்றேன். தனது எஜமானர் எபிரேயு பாஷையில் எழுதப்பட்டப் புத்தகம் ஒன்றை சத்தமாக வாசிப்பதை அவள் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள். சில சமயத்திற்குப் பின்னர் அப்பெண் மிகவும் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது எபிரேய மொழியில் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டேயிருந்தாள். எபிரேய மொழியின் ஒரு அச்சரம் கூடத் தெரியாத அவள் எவ்வாறு அம்மொழியில் பேசினாள்? அவள் தனது எஜமானர் அதை வாசிப்பதைக் கேட்டிருந்தாள். அவ்வளவுதான், அவை அனைத்தும் அவள் நினைவில் பதிந்து விட்டது.

எனவே, என் நண்பனே, நாம் மறந்துவிட்டோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நமது செயல்கள் யாவும் காலப் போக்கில் நாம் கண்ணீருடன் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய சமயம் வந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் செய்த செயல்களும், நாம் பேசிய வார்த்தைகளும் "மகனே அதை நினைத்துக் கொள்" என்று தேவன் சொல்லுகையில் அவை யாவும் முண்டியடித்துக் கொண்டு நம் நினைவிற்கு வந்து கொண்டிருக்கும். மற்றொரு விதமாக நாம் சொல்லுவதாயின் தேவன் ஒவ்வொரு மனிதனையும் அவன் சுய சரிதையை அவனைக் கொண்டே எழுத வைப்பார். நீ எழுதின சுய சரிதையை வேறுவிதமாக நீ மாற்றி வாசிக்க முற்பட்டால் தேவன் அதைத் தடுத்து நீ எழுதின பிரகாரமாகவே அதனை உன்னைக் கொண்டு வாசிக்கப்பண்ணுவார்.

 

நரகம் மெய்யானதொன்று

இப்பொழுதும் என் நண்பர்களே, பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடம் நரகத்தைக் குறித்த சத்தியங்களை உங்களுக்குப் போதிக்கும்படியாக இப்பொழுதே மன்றாடிக் கேளுங்கள். ஏனெனில், நரகம் என்பது பொய் என்றும், அதைக் குறித்துச் சொல்லப்பட்ட சத்தியம் எதுவும் உண்மையல்லவென்றும் சொல்லி உங்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் சத்துருவாகிய பிசாசானவனின் பயங்கர ஆளுகைக்குள் உங்களில் அநேகர் சிக்குண்டு இருக்கின்றீர்கள். தேவனின் சத்திய வேதாகமத்தை நாம் நம்புகிறவர்களானால் கட்டாயம் நரகத்தையும் நம்பாதிருக்க முடியாது. மோட்சத்தைக் குறித்துப் பேசுகின்ற அப்புத்தகம் தானே நரகத்தைக் குறித்தும் பேசுகின்றது. பாவத்தின் பிரதி பலன், அதாவது பாவத்தின் பின் விளைவுகள் இல்லை என்ற கருத்து பிசாசினிடமிருந்து வந்ததேயல்லாமல் தேவனிடமிருந்து வந்ததொன்றல்ல.

ஆதாமையும், ஏவாளையும் பாவம் செய்யத் தூண்டிய சாத்தான், அவர்கள் பாவஞ் செய்தால் சாவதில்லை என்று கூறினான். ஆனால், தேவன், அப்படிச் செய்தால் சாவீர்கள் என்று கூறினார். அவரது இரட்சிப்பை ஏற்று நரகாக்கினைக்கு விலகி ஓடாத பட்சத்தில் நமது ஆத்துமாக்களுக்கு சம்பவிக்கப் போகும் பேரழிவுகளை என்னவென்று சொல்லுவது?

பைத்தியக்காரர்களைப் பராமரிக்கும் விடுதியொன்றிலுள்ள ஒரு மனிதனைக் குறித்துக் கூறப்பட்டதை பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒரு வேளை அந்த மனிதன் இன்றும் உயிரோடிருப்பான் என்று நான் நினைகின்றேன். அவன் எப்பொழுதும் "ஐயோ, நான் மட்டும் கீழ்ப்படிந்திருந்தால்" "ஐயோ, நான் மட்டும் கீழ்ப்படிந்திருந்தால்" என்று சதா அழுது கூக்குரலிட்டுக் கொண்டே யிருப்பானாம். நாள் முழுவதும் அவனின் கதறல் இது ஒன்றுதானாம்.

அதைக் குறித்த சரித்திரம் இதுதான். அம்மனிதன் ஒரு ரயில்வே கம்பெனியால் நதியின் குறுக்காகக் கட்டப்பட்டதொரு தொங்கு பாலத்தைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தான். ஒரு சமயம் விரைவாக ஒரு ரயில் குறிப்பிட்டதான ஒரு மணி வேளையில் அந்த தொங்கு பாலத்தைக் கடந்து செல்லவிருப்பதாக அவனுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தனர். பாலத்தைக் கண்காணித்து வந்த அவன், நதியில் படகுகளை செலுத்தும் சில படகோட்டிகளின் விடாப் பிடியான வேண்டுகோள்களுக்கு இணங்கி அந்த தொங்கு பாலத்தைப் படகுகள் செல்ல வசதியாக சற்று நேரம் உயர்த்திக் கொடுத்தான். அவ்வளவுதான், என்ன பயங்கரம்! சில நொடிப் பொழுதுக்குள்ளாக அந்த விரைவு ரயில் விரைந்து வந்து நதியில் விழுந்து மூழ்கிற்று. ரயிலிலுள்ள அநேகர் பரிதாபகரமாக மாண்டு மடிந்தனர். அதனைக் கண்ணுற்ற அம்மனிதன் அழுதான், அங்கலாய்த்தான், தரையிலே உருண்டு புரண்டான், இறதியில் துக்கம் தாங்காது பைத்தியக்காரனுமானான். "நான் மட்டும் ரயில் கம்பெனியின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து பாலத்தை உயர்த்தாமல் காத்திருந்தால் இத்தனை உயிர் நஷ்டம் ஏற்பட்டிராதே!" என்ற வார்த்தைகளே அவனுடைய கூக்குரலாக இருந்தது.

நித்திய அக்கினி சூழையாகிய நரகத்தின் சிறையிலிருந்து அநேக மாந்தர் "அந்தோ, நான் சுவிசேஷத்தின் அழைப்புகளுக்கு மாத்திரம் கீழ்ப்படிந்திருந்தால்" "இரட்சிப்பின் அழைப்பு எனக்குக் கொடுக்கப்பட்ட சமயம் நான் முன்னெழுந்து சென்று அதை ஏற்றுக் கொண்டிருப்பேனானால்" "பிரசங்கியாரின் எச்சரிப்பின் வார்த்தைகளுக்கு நான் மாத்திரம் செவி கொடுத்திருந்தால்" "இயேசு என் இதயக் கதவை அன்புடன் தட்டி நிற்கையில் நான் மாத்திரம் உடன் எழுந்து என் இதயக் கதவை அவருக்குத் திறந்திருந்தால் இந்தக் கதி எனக்கு ஏற்பட்டிராதே" என்று அலறிக் கதறித் தங்கள் பற்களைக் கடிக்கும் எண்ணற்ற துயர ஓலோலங்களை நரகத்தில் நாம் கேட்கலாம் என்று நான் திட்டமாக நம்புகின்றேன்.

நான் சில காலத்திற்கு முன்னர் ஒரு மனிதனைக் குறித்து இவ்விதமாக வாசித்தேன். ஒரு அலங்கார விடுதியின் முன்பாக அவன் நின்று தனது குதிரையில் அவன் ஏறிக் கொண்டிருந்தான். அந்தச் சமயம் அப்பட்டணத்திலுள்ள தேவாலயத்தின் உதவிக் குருவானவர் அவ்வழியே அவனைக் கடந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அவன் அவரைப் பார்த்து மிகவும் ஏளனமாக "நரகத்திற்கு இங்கிருந்து எவ்வளவு தூரம் உண்டு என்று உம்மால் சொல்லக் கூடுமா?" என்று கேட்டான். அந்தப் பரியாசக்காரனுக்கு பதிற் கூறாமல் உதவிக் குருவானவர் தம் பாதையில் விரைவாகச் சென்று கொண்டிருந்தார். அவர் சென்று கொண்டிருந்த தெருவின் ஒரு மூலைக்கு அவர் வந்து சேரவே அங்கே ஒரு கூட்டம் மக்கள் குழுமியிருந்தனர். அந்தக் கூட்டத்தின் மத்தியில் ஒரு வாலிபன் விழுந்து கிடந்தான். அவன் ஏறிச் சவாரி செய்த அவனின் குதிரை அவனைத் தூக்கி வீசவே அவன் பூமியில் விழுந்து பிடறி முறிந்து அங்கே செத்துக் கிடந்தான். குருவானவரிடம் முதலில் நரகத்திற்கு தூரம் கேட்ட நாஸ்திகன்தான் அந்த வாலிபன். ஒரு தெருவைக் கடந்து செல்லும் நேரத்திற்கு முன்பதாகவே சடுதியான அகால மரணத்தின் மூலமாக அவன் நித்திய எரிநரகத்துக்குக் கடந்து சென்று விட்டான்.

இன்று அநேக மக்கள் நித்தியத்துக்கடுத்த காரியங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவற்றைக் குறித்து அவர்கள் பரியாசம் செய்து கேலியும் பேசி வருகின்றனர். நித்திய எரி நரகத்தைக் குறித்து நான் சாதுர்யமாய்ப் பேசி அதனைக் குறித்து நான் இதமான வார்த்தைகளைக் கூறுவதைப் பார்க்கிலும் நான் எனது வலது கரத்தைத் தறிக்க கொடுப்பதை மிகவும் மகிழ்ச்சியாகக் கருதுவேன்.

வருகிற ஞாயிறு இரவு நீ ஒருக்கால் முடிவில்லாத நித்தியத்தினுக் குள்ளிருக்கக் கூடும். அப்பொழுது உன் நினைவுகள் உன்னைத் தொடரும். நான் செய்யும் இப்பிரசங்கத்தின் மூல வாக்கியத்தை இன்று நீ ஒரு வேளை மறந்துவிடக்கூடும். ஆனால், அன்று தேவன் "மகனே அதை நினைத்துக் கொள்" என்று உன்னைப் பார்த்துக் கூறும் சமயம் எனது பிரசங்கத்தின் மூல வாக்கியம் மாத்திரமல்ல எனது பிரசங்கம் முழுமையும் தானாக உன் நினைவுக்கு ஓடி வரும். தேவ ஆவியானவர் தாமே பிரசங்கத்தின் மூல வாக்கியத்தின் மூலமாக உங்கள் ஆத்துமாக்களில் பரிசுத்த அக்கினியை மூளச் செய்து உங்கள் ஆத்துமாக்களைப் பாதாள வல்லடிக்கு விலக்கி மீட்டுக் காப்பாராக.

தனது ஜீவனின் உயிர்ப் பிச்சைக்காகத் தனது சகோதரனாகிய காயீனிடம் கதறி மன்றாடிய தனது அன்புச் சகோதரன் ஆபேலின் கதறலின் சத்தத்தைக் காயீன் பின் நாட்களில் மறந்து சமாதானத்துடன் இருந்திருப்பான் என்று நீங்கள் எண்ணகின்றீர்களா? ஆபேலின் கதறலும், அவனது இரத்தமும், அவனின் ஜீவனற்ற சடலத்தின் காட்சியும் இந்த ஆறாயிரம் ஆண்டு காலங்களாகக் காயீனைத் தொடராது விட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? அருமை இரட்சகரை தனது முத்தத்தினால் காட்டிக் கொடுத்த யூதாஸ் தான் கொடுத்த முத்தத்தையும் "'யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷ குமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்" என்ற ஆண்டவரின் அன்பு கனிந்த வார்த்தைகளையும் மறந்திருப்பான் என்று நினைக்கின்றீர்களா? ஜலப் பிரளயத்திற்கு முன்னாலுள்ள பொல்லாத மாந்தர், நோவா எத்தனையான மன உருக்கத்துடன் அவர்கள் தங்கள் பாவ வழிகளை விட்டு மனந்திரும்பும் படியாக எத்தனைப் பரிவுடன் மன்றாடினார் என்பதை அவ்வளவு எளிதாக மறந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்து சென்றுவிட்ட போதினும் அம்மக்கள் அந்த நினைவுகளை மறந்துவிட்டிருப்பார்கள் என்று நினைக்கின்றீர்களா? இல்லவே இல்லை. மறுமை உலகுக்கும் தங்கள் நினைவுகளை கட்டாயம் எடுத்துச் சென்றிருப்பார்கள். இந்த உலகத்தில் நீங்கள் மறந்துவிடலாம். சில ஆண்டுகளில் புழுக்கள் உங்கள் சரீரத்தை தின்று தீர்த்துவிடலாம். ஆனால், அந்த சரீரத்தால் செய்யப்பட்டச் செயல்கள் நித்திய நித்திய காலமாக நினைவு கூறப்படும். இப்பூவுலகத்தில் உங்களது இரட்சிப்புக்காக நீங்கள் கொண்டிருந்த பொன்னான தருணங்களை நீங்கள் மறந்து போயிருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் நித்தியத்தில் உங்கள் நினைவுக்கு மீண்டும் வந்து சேரும்.

நான் பேசிக் கொண்டிருக்கும் இக்கூட்டங்களைக் குறித்து உங்களில் சிலர் ஏளனம் பண்ணி நிந்தித்து தூஷித்து மிகவும் அற்பமாகவும், நல்ல பரபரப்பான பொழுது போக்கு வேளையாயும் எண்ணலாம். ஆனால், ஒன்றை மறந்து விடாதீர்கள். ஒரு நாள் வருகின்றது. அப்பொழுது நீங்கள் பகடி செய்யக்கூடிய விசேஷித்த சுவிசேஷக் கூட்டங்கள் எதுவுமிராது. ஜெபிக்கும் உங்கள் பக்தியுள்ள தாய்மார்களை இப்பொழுது நீங்கள் பகடி செய்யலாம். ஆனால், முடிவற்ற நித்தியத்தில் உங்களுக்காக ஜெபிக்கவும், உங்கள் ஆத்துமாக்களுக்காக பரிந்து மன்றாடவும் பக்தியுள்ள தாய்மார்கள் அங்கில்லை என்பதை நீங்கள் மறக்க வேண்டாம். பரிசுத்த வேதாகமத்தை இன்று நீங்கள் அற்பமாக எண்ணலாம். ஆனால், நித்தியத்தில் நீங்கள் கிண்டல் பேசித் தூற்றித் திரிய ஆசீர்வதிக்கப்பட்ட வேதாகமங்கள் எதுவும் அங்கு கிடையாது என்பதைத் திட்டமாக நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இரட்சண்ய அழைப்புகள் விடுக்க அவ்வுலகில் சுவிசேஷப் பிரசங்கிகள் எவரும் கிடையாது. இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள உங்களைத் தூண்டி ஏவவும் உங்களுக்காக ஜெபிக்கவும் அங்கு உங்களுக்கு மனைவிகள் இல்லை.

 

இரட்சிப்பு இப்பொழுதே ஆயத்தமாயிருக்கின்றது

கர்த்தருக்கே துதி உண்டாகட்டும். இரட்சிப்பை நீங்கள் இந்த நிமிஷமே பெற்றுக் கொள்ளவியலும். சுவிசேஷம் அனைவருக்கும் தாராளமாகப் பிரசங்கிக்கப்பட்டு வருவதும், திறந்த வேதாகமம் உள்ளதுமானதோர் நாட்டிலே நீங்கள் இருக்கின்றீர்கள். சுவிசேஷத்தை உங்கள் இருப்பிடங்களுக்கும், நீங்கள் பணிபுரியும் அலுவலகங்களுக்கும், வியாபாரஸ்தலங்களுக்கும் சுவிசேஷகர்கள் சுமந்து கொண்டு வந்து அதனை உங்களுடன் அன்புடன் பகிர்ந்து கொள்ளும் பாக்கியமுள்ள ஒரு தேசத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். அவர்கள் அப்படி சுவிசேஷத்துடன் உங்களண்டை வருகையில் நீங்கள் அவர்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்று கூறி எள்ளி நகையாடலாம். ஆனால், ஐயோ, நாட்கள் வந்து கொண்ருக்கின்றன! ஒரு வேளை அந்த நாட்கள் நீ கற்பனை செய்வதற்கும் மிகவும் துரிதமாக வந்து கொண்டிருக்கலாம். அந்த நாட்களில் உங்களண்டை சுவிசேஷத்துடன் வர நண்பர்கள் எவருமிருக்கமாட்டார்கள். இயேசுவண்டை வரும்படியாக உங்களை அழைப்பார் ஒருவருமிரார்.

உங்களில் சிலர் உங்களுக்காக ஜெபிக்கும் பக்தியுள்ள பிள்ளைகளை உடையவர்களாயிருக்கின்றீர்கள். ஆனால், நீங்கள் அவர்களை உதாசீனம் பண்ணுகின்றீர்கள். அன்றொரு நாள் ஒரு சிறுமி என்னண்டை வந்து மனந்திரும்பாத தன்னுடைய அப்பா, அம்மாவுக்காக ஜெபிக்கும்படியாக என்னை அன்புடன் வேண்டினாள். நீங்கள் கடந்து செல்லும் மறுமையில் உங்கள் ஆத்தும இரட்சிப்புக்காக ஜெபிக்கும் குழந்தைகள் ஒருவருமில்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இருதயக் கதவைத் திரும்பவுமாக தட்டி நிற்கக்கூடிய அன்பின் இரட்சகர் இயேசு அங்கிருக்கமாட்டார்.

எனது நண்பன் ஸாங்கியின் "தொண்ணுற்றொன்பது ஆடுகளை வனத்திலே விட்டுவிட்டு காணாமற் போனதொன்றைத் தேடிச் சென்ற நல்ல மேய்ப்பன் இயேசு" என்ற இனிய பாடலை நீங்கள் மீண்டுமொரு முறை மறுமையில் கேட்க மாட்டீர்கள். "பாதை காட்டும் மாயெகோவா, பரதேசியான நான்" என்ற உங்கள் பக்தியுள்ள தாய்மார்கள் உங்களுக்குக் கற்றுத் தந்த பழம்பெரும் ஆசீர்வதிக்கப்பட்ட ஞானப்பாடலை திரும்பவும் அவ்வுலகில் நீங்கள் கேட்கப் போவதில்லை. அதனை நீங்கள் அவ்வுலகில் பாட விரும்பினால் இங்கேயே நீங்கள் கட்டாயம் இரட்சிப்பைக் கண்டடைதல் வேண்டும். தேவனுடைய ராஜ்யத்துக்குள் நீங்கள் வரவிரும்பினால், உங்கள் ஜெபிக்கும் தாய்மார்கள், பரிந்து மன்றாடும் தேவ ஊழியர்கள், பரிசுத்த விசுவாசிகள் போன்றோரால் உங்களுக்கு அளிக்கப்படும் இரட்சண்யத்தை இவ்வுலகிலேயே நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். ஆம், என் அருமை சிநேகிதர்களே, இந்த இரவு நமது எழுப்புதல் கூட்டத்தின் நடுவில் அசைவாடிக் கொண்டிருக்கும் தேவதூதர்கள் யார் யார் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளுவார்களோ அந்த அன்புள்ள மக்களை கரம் நீட்டி அரவணைத்து வரவேற்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

"மரணத்திற்குப் பின்னர் மனிதனுடைய கிரியைகளின் பலாபலன்கள் உண்டென்று சொல்லும் உன்னுடைய சித்தாந்தங்களை குறித்து வேறு எவரிடமும் போய் சொல்லு. எனக்கு நரகத்தின் பேரில் எவ்வித நம்பிக்கையும் கிடையாது" என்று கூறும் நாஸ்தீகர்களின் வார்த்தைகளை நான் இவ்வேளைதனில் நினைவு கூறுகின்றேன்.

உங்களிடத்தில் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். அந்த சூதாட்டக்காரர்கள், அந்தக் கள்ளர்கள், வேசிகள், குடிகாரர்கள், தேவனுடைய பத்து கற்பனைகளை தங்கள் கால்களின் கீழ்ப் போட்டு மிதித்த துன்மார்க்கர், தேவனின் வார்த்தைகளுக்கு கண்ணியமும், மரியாதையும் கொடாது, அவருடைய போதனைகளைத் தங்கள் முதுகுக்குப் புறம்பாக எறிந்து போட்ட நீசர்கள் அனைவரும் வெள்ளம் போல தேவனுடைய ராஜ்யமாகிய மோட்சத்தில் வாரி சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? பூமியின் முகத்தில் எவ்விடத்தில் தானும் வைக்கக் கொஞ்சமும் அருகதையற்ற பாதகர்கள் என்று தேவனால் தீர்மானிக்கப்பட்டு அவரால் சர்வ நாசம் செய்யப்பட்ட ஜலப் பிரளயத்துக்கு முன்னாலுள்ள பூர்வீக உலகத்தின் தீய மாந்தர் யாவரையும் தேவன் அப்படியே தமது இன்ப பரதீசுக்குள் வாரி சேர்த்துக் கொண்டு விடுவார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? பூமிக்கே பொருந்தாத அக்கொடியவர்கள் பரலோகில் போய் அங்குள்ள பரிசுத்த பக்தர்களோடு ஒன்று சேர்ந்து வாழ்வது கூடும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

நாம் முன்னர் கூறியது போன்று மனந்திரும்பி மறுபடியும் பிறவாத ஒரு மனிதன் அவன் சென்றடைந்த மோட்சத்தையே நரக பாதாளமாக்கிவிடுவான். மனந்திரும்பாத மனிதனால் மோட்சத்தில் தரித்திருக்க இயலாது. இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் உங்களில் சிலருக்கு பொறுமையாக அமர்ந்து ஆண்டவருடைய வார்த்தைகளை ஏன் கேட்க இயலவில்லை? அந்த மணி நேரம் முடிவடைவதற்கு முன்னர் நீங்கள் வெளியே அடிக்கடி எழுந்து போக விரும்புவதன் காரணம் யாது? உங்களால் தொடர்ச்சியாக இங்கு அமர ஆசையின்றி நேரத்தைப் போக்க ஏதோ ஒன்றைக் குடிக்கவும், உணவருந்தவும் இங்கிருந்து வெளியே போய் வருகின்றீர்கள். என் இருதயத்தின் அடித்தளத்திலிருந்து உங்களுக்குக் கூறுகின்றேன். மனந்திரும்பி தேவனோடு சஞ்சரிக்காததோர் மனிதனுக்கு மோட்சம் நரகமாகிவிடும். அவனால் அங்கு ஒரு கண நேரம் கூடத் தாமதிக்கவியலாது. "ஓ, இந்த மோட்சத்தில் என்னால் இருக்க இயலாது" என்று சொல்லி அவன் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்துவிடுவான். என் சிநேகிதனே, மோட்சமானது ஆயத்தமாயிருக்கும் தேவ மக்களுக்கென்று தேவனால் ஆயத்தம் செய்யப்பட்டதோர் இடமாகும். தேவனால் பிறவாத எந்த ஒரு மனிதனும் அந்த மகிமையின் ராஜ்யத்தை ஒருக்காலும் கண்ணேறிட்டுப் பார்க்கக் கூட இயலாது.

 

மனுஷன் எதை விதைக்கின்றானோ அதையே அறுப்பான்

1868 ஆம் ஆண்டு நான் பாரீஸ் சென்னிறிருந்த சமயம் அங்கு நடந்ததோர் வேதாகம கண்காட்சியை நான் காணச் சென்றிருந்தேன். காட்சி சாலையின் சுவரில் ஒரு படம் தொங்கிக் கொண்டிருந்தது. அது களைகளை விதைக்கும் ஒரு மனிதனின் காட்சியாகும். படத்தின் கீழ் "களைகளை விதைக்கும் மனிதன்" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அவனுடைய முகம் பித்துப் பிடித்த பேயனைப் போல கோர பயங்கரமாயிருந்தது. ஒரு துஷ்ட தேவதையின் முகத்தைப் போல அவன் முகம் எனக்குத் தென்பட்டது. அவனுடைய கரத்திலே களை வித்துக்கள் அடங்கியதோர் கூடை இருந்தது. அவன் ஒவ்வொரு முறையும் ஒரு களையை பூமியிலே விதைக்கையில் ஒரு பாம்பு ஒன்று அவன் கரத்தின் வழியாக ஊர்ந்து நகர்ந்து ஏறி அவன் உடலையே நன்றாக வளைத்துச் சுற்றிக் கொள்ளும். அவனுக்கு சற்று தூரத்திலுள்ள மரக் கூட்டம் ஒன்றில் பூமியின் நானாவித துஷ்ட மிருகங்களும் குடி இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தப் படமானது என் மனதிலே அப்படியே பதிந்து விட்டது. ஆம், "களைகளை விதைக்கும் மனிதன்"

என் சிநேகிதர்களே, நீங்கள் களைகளை விதைத்தால் களைகளையேதான் அறுப்பீர்கள். மதுபானம் விற்போரும், சூதாட்டக்காரர்களும், கொலை பாதகரும், மற்றவர்களை நாசமடையப் பண்ணியவர்களும் மனந்திரும்பாமல் பரலோகத்திற்குள் பிரவேசிக்கக்கூடும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ? இல்லவே இல்லை. என் நண்பர்காள், களைகளை விதைப்போர் களைகளையேதான் கட்டாயம் அறுக்க வேண்டும்.

"மகனே அதை நினைத்துக் கொள்" நீங்கள் எனது பிரசங்கத்தை மறந்துவிட்டாலும், பிரசங்கத்தின் மூல வாக்கியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். இங்கு நடைபெற்ற கூட்டத்தை நினைத்துக் கொள்ளங்கள். அன்பின் தேவன் இங்கு நடப்பித்த கிரியைகளை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிப் பாருங்கள். மேலே பாருங்கள். தேவன் உங்களை நேசிக்கின்றார்! வெகு அப்பால், நித்தியத்தின் கரையில் நீங்கள் இந்தக் காட்சிகளை எல்லாம் காண்பீர்கள். 1876 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக் கிழமை இரவு நீங்கள் பங்கேற்ற இக்கூட்டம் நித்தியத்தில் உங்கள் நினைவுக்கு வரும். இக்கூட்டத்தின் பாடகர் குழுவினரை நீங்கள் உங்கள் மனக்கண்களுக்கு முன்னர் காண்பீர்கள். இங்கிருக்கும் எனது நண்பன் ஸாங்கி பாடிய பாடல்களை நீங்கள் நினைவு கூறுவீர்கள். "மகனே அதை நினைத்துக் கொள்" என்ற பொருளில் நான் பிரசங்கித்த பிரசங்கத்தை நினைவு கூறுவீர்கள். அன்பின் இரட்சகர் தாமே உங்கள் உள்ளத்தை ஏவி எழுப்பி நீங்கள் மனந்திரும்பி நரக அக்கினியான தேவ கோபாக்கினைக்குத் தப்பிக் கர்த்தரின் அன்பின் மார்புக்கு நேராக அடைக்கலம் தேடி ஓடக் கிருபை செய்வாராக.

என் அன்பார்ந்த சகோதரர்களே, நித்தியத்துக்கடுத்த காரியங்களோடு நீங்கள் விளையாட வேண்டாம். கண்ணைப் பறிக்கும் கிளைகளாக வெடித்துச் சிதறிப் பரவும் அக்கினியான வானத்தின் மின்னலோடு விளையாடுங்கள். துரிதமாகப் பரவக்கூடிய கொடிய தொத்து வியாதிகளோடு விளையாடுங்கள். ஆனால், நித்திய நியாயத் தீர்ப்போடு மாத்திரம் எக்காரணத்தைக் கொண்டும் விளையாடாதேயுங்கள். தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகளைப்போலான வழிகள் அல்ல. வானத்திற்கும் பூமிக்குமுள்ள உயரத்தைப் போலவே தேவனின் வழிகள் நம்முடைய வழிகளுக்கு அப்பாற்பட்டதாயிருக்கின்றது. அந்தோ, கல்வாரியின் மூலமாக ஒருவன் தேவ கோபாக்கினைக்குத் தப்பி நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவனுக்கு எவ்வித நம்பிக்கையுமே கிடையாது.

 

தாமதம் அபாயகரமானது

சில ஆண்டு காலங்களுக்கு முன்னர் இதைப் போலொத்த என்னுடைய கூட்டம் ஒன்றில் தேவச் செய்தியைக் கேட்க வந்திருந்த மனிதன் ஒருவனைக் குறித்து மிகுந்த ஆத்தும பாரம் எனக்கு உண்டாயிற்று. ஒரு நாள் கூட்ட முடிவின் போது அனைவரையும் நான் எழுந்திருக்கும்படியாகக் கூறினேன். அவர்களில் மேற் குறிப்பிட்ட மனிதனை மாத்திரம் நான் தனித்து அழைத்துச் சென்று இரட்சகர் இயேசுவுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும்படியாக அவனிடம் நான் மன்றாடினேன். அப்படிச் செய்ய விரும்புவதாகவே அவனும் கூறினான். அவனுடைய உள்ளங் கால் முதல் உச்சந் தலை வரை அவனது சரீரம் நடுநடுங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்த போது அவன் தன்னைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்து விடுவான் என்று நான் உறுதியாக நம்பினேன். அவன் அவ்விதமாக நடுநடுங்குவதைக் குறித்து நான் வினவியபோது தனது சக நண்பர்களைக் குறித்து தான் அஞ்சுவதாக என்னிடம் சொன்னான்.

அதின் காரணம் இதுதான். ஒவ்வொரு நாளும் எனது கூட்டங்களுக்கு தொழிற்கூடங்களின் முதலாளிகளும், அங்கு பணிபுரியும் குமஸ்தாக்களும் வந்து கலந்து கொண்டிருந்தனர். இந்த மக்கள், கூட்டத்தில் தங்களை இயேசுவுக்கு ஒப்புக் கொடுப்போரையும், கூட்டத்தில் கலந்து கொள்ளுவோரையும் குறித்து ஏளனமாகப் பேசி பரிகாசம் செய்தனர். இவர்களின் நிந்தை பரியாசங்களைக் கண்டு அநேகர் பயந்ததைப் போலவே இந்த மனிதனும் தனக்குள் பயந்து கொண்டிருந்தான். அந்த மாந்தரின் ஏளனச் சொற்களை கர்த்தருக்காகப் பொறுத்துக் கொண்டு கிறிஸ்து பெருமானை துணிவுடன் ஏற்றுக் கொள்ளும்படியாக நான் அவனுக்குத் தேவ ஆலோசனை கூறினேன். ஆனால், அவனோ அவ்விதம் செய்யத் தயக்கம் காண்பிக்கின்றவனாகவே இருந்தான். ஆண்டவரை ஏற்றுக் கொள்ளாதவனாகவே ஒவ்வொரு இரவும் வெறுமையாக அவன் தனது வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தான்.

சில நாட்களுக்குப் பின்னர் இந்த மனிதனைக் காண வரும்படியாக எனக்குத் தகவல் வந்தது. அப்பொழுது அவன் சுகயீனமாக இருந்தான். அவனது அறைக்கு நான் அவனைக் காணச் சென்றேன். பதினோராம் மணி வேளையில் தனக்கு ஏதாகிலும் நம்பிக்கை உண்டா என்று அவன் என்னைப் பார்த்துக் கேட்டான். அவனுக்கு முன்னாலுள்ள அனைத்து நம்பிக்கையையும் நான் அவனுக்கு முன்னர் வைத்தேன். ஒவ்வொரு நாளும் நான் அவனைப் போய் பார்த்து வந்தேன். எனது எதிர்பார்ப்புக்கு முற்றும் மாறாக அவன் நல்ல சுகம் அடைய ஆரம்பித்தான். அவன் நல்ல சுகம் பெற்றவுடன் நான் அவனிடம் சென்று இரட்சகரைத் தன் இதய நாயகராக ஏற்று ஜீவிக்க அவனிடம் மனதுருகி மன்றாடினேன். அவன் எனக்குக் கீழ்க்கண்டவாறு பதிலளித்தான்:-

"நல்லது, மரணத்திற்கேதுவான எனது வியாதிப் படுக்கையில் நான் என்னைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பதாகப் பொருத்தனை பண்ணிக் கொண்டது மெய்தான். ஆயினும், நான் சற்று பொறுக்க வேண்டியது அவசியமாகின்றது. நான் மிச்சிக்கன் பட்டணம் சென்று அங்கு எனக்கென்று ஒரு பண்ணையை வாங்கி குடி அமர்ந்த பின்னர் ஆண்டவரை நான் ஏற்றுக் கொள்ளுவேன்" என்று அவன் என்னிடம் கூறினான்.

"கிறிஸ்து இரட்சகர் உன்னை இவ்விடத்தில் தானே தமக்கென்று பிடிக்காத பட்சத்தில் மிச்சிக்கன் பட்டணத்திலும் உன்னைப் பிடிக்கப் போவதில்லை" என்றேன் நான். நான் எவ்வளவோ முயன்று அவன் தன்னை இரட்சகருக்கு நிபந்தனையின்றி ஒப்புக் கொடுத்து விடும்படியாக கெஞ்சிக்கேட்ட போதினும் அவன் அடுத்த வசந்த காலம் வரைத் தனது இரட்சிப்பின் காரியத்தை ஒத்திப் போட்டான்.

"என் நண்பனே, நீ அடுத்த வசந்த காலம் வரை ஜீவிக்க இயலாது" என்றேன் நான்.

"நான் சுகம் பெற்று பூரண ஆரோக்கியமடைவதை நீங்கள் என்னில் காணவில்லையா?" என்றான் அவன்.

"அடுத்த வசந்த காலம் வரை வீணாக நீ ஏன் அந்த மோசத்திற்குரிய துணிவை எடுக்க வேண்டும்?" என்றேன் நான்.

"ஆம், மூடி பிரசங்கியார் அவர்களே, நான் அப்படித்தான் எடுக்க வேண்டும். நீங்கள் ஏன் உங்களை இது சம்பந்தமாக வீணாக அலட்டிக் கொள்ளுகின்றீர்கள்? இனி எனது ஆத்துமத்தைக் குறித்து நீங்கள் என்னிடம் எதுவும் பேச வேண்டாம். அந்தப் பொறுப்பு என்னுடையதாகும்" என்றான் அவன்.

சரியாக ஒரு வாரம் கடந்து சென்றிருந்தது. அந்த மனிதனுடைய மனைவி உடனடியாக வரும்படி என்னை அழைத்தாள். நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றபோது அவள் மிகுந்த கிலேசத்திலிருந்தாள். அந்த வியாதி அவள் புருஷனுக்குத் திரும்பவுமாக வந்து விட்டது. என்னைப் பார்க்க அந்த மனிதன் விருப்பம் எதுவும் தெரிவித்ததுண்டோ என்று நான் அவன் மனைவியிடம் கேட்டேன். "இல்லை, தனக்கு இனி எவ்வித நம்பிக்கையும் கிடையாது" என்று அவன் தன்னிடம் கூறியதாக அவள் என்னிடம் சொன்னதுடன் தனது கணவன் இந்நிலையில் மரித்து நரகம் செல்லுவதைப் பார்க்கத் தனக்கு சகிக்கவில்லை என்று கூறினாள்.

நான் அவன் படுத்திருந்த அறைக்குச் சென்றேன். அவன் என்னிடம் பேசவில்லை. நான் அவனது கால்களண்டை சென்று நின்று அவனின் சுக நலத்தை விசாரித்தேன். ஓ, எத்தனை கோரமாக அவன் என்னை உற்று நோக்கினான் தெரியுமா? "நீங்கள் இனி என்னிடம் பேசத் தேவையில்லை. என் மனைவி, என் பிள்ளைகளுடன் தானே பேசுங்கள். இனி எனக்குத் துளிதானும் நம்பிக்கையே இல்லை" என்று அவன் என்னிடம் சொன்னான். அந்த அறையில் இருந்த இரும்பு அடுப்பு ஒன்றை அவன் எனக்குச் சுட்டிக் காண்பித்து "என் இருதயம் அந்த அடுப்பைப்போல இப்பொழுது கடினமாகிவிட்டது. நான் கடந்த முறை வியாதியாயிருந்தபோது ஆண்டவர் என் இருதயக் கதவண்டை வந்து நின்று அன்பொழுக என்னை அழைத்தார். நானும் அவரை என் ஆத்தும நேசராக அங்கீகாரம் செய்து அவருக்குத் தொண்டு புரியப் போவதாகப் பொருத்தனை செய்தேன். என் பொருத்தனையை நான் நிறைவேற்றவில்லை. அதனை நான் தகர்த்தெறிந்தேன். இன்று நான் கட்டாயம் அவர் இல்லாமல்தான் கண்ணீரின் கதறுதலோடுதான் மரிக்க வேண்டும்" என்றான் அவன்.

நான் அவனண்டை ஜெபிக்கும்படியாக முழங்காற்படியிட்டேன். "நீங்கள் இனி எனக்காக ஜெபிக்கத் தேவையில்லை" என்று அவன் என்னிடம் கூறினான். எனினும், நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். அந்த ஜெபம் என் தலையைத் தாண்டி அதற்கப்பால் செல்லவில்லை என்று நான் கண்டு கொண்டேன்.

அந்த நாளின் பகற்காலம் முழுமையிலும் அவன் உயிரோடிருந்து "அறுப்புக் காலம் சென்றது, கோடை காலமும் முடிந்தது. நானோ இரட்சிக்கப்படவில்லை" என்ற தேவ வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தான். கட்டிலிலே அவன் மிகுந்த வேதனையிலும், வியாகுலத்திலும் படுத்திருந்தான். சூரியன் மேற்கு வானத்தின் அடியில் இறங்கிச் செல்லும் அஸ்தமன நேரத்தின் போது அவனுடைய மனைவி ஆறாத் துயரத்தில் அவன் மீது சாய்ந்தாள். அவன் இறுதியாக "அறுப்புக் காலம் சென்றது, கோடை காலமும் முடிந்தது, நானோ இரட்சிக்கப்படவில்லை" என்ற வார்த்தைகளைக் கூறிக்கொண்டே மகா நிர்ப்பந்தமான முடிவில்லாத நித்தியத்திற்குள் பிரவேசித்தான்.

பூவுலகில் அவன் கிறிஸ்து அற்றதோர் வாழ்க்கையையே வாழ்ந்தான். கிறிஸ்துவின்றியே மரித்தான். கிறிஸ்து அற்ற பாடைத் துணிகளாலேயே அவன் சுற்றப்பட்டுக் கிறிஸ்தற்ற கல்லறைக்குள்ளாகவே அவன் அடக்கம் செய்யப்பட்டான்.

என் அன்பார்ந்த நண்பர்களே, அறுப்புக் காலம் கடந்து செல்லுகின்றது, கோடை காலம் வெகு சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வரப்போகின்றது. ஆண்டவர் உங்களைத் தமக்கென்று மீட்டுக் கொள்ள நீங்கள் அவருக்கு இடம் கொடுக்கமாட்டீர்களா? ஏழைப் பாவியே, அன்பின் நேசர் உன் இருதயக் கதவண்டை, வந்து தட்டி நிற்கின்றார். இரக்கத்திலும், கிருபையிலும் ஐசுவரியமுள்ள அன்பின் தேவனை உன் ஆத்தும மணவாளனாக இந்த நிமிஷமே ஏற்று அவரை உன் சொந்தக் கன்மலையாக்கிக் கொள்.

(D.L.Moody, The Great American Preacher)


 
 

மானிட வாழ்வின் பாவங்களிலே முதன்மை ஸ்தானத்தை பிடித்து நிற்கும் விபச்சாரப் பாவத்தை சாத்தான் ஒரு தாலந்திலே வைத்து அதைப் போத்திப்பாரின் வீட்டில் இருந்த யோசேப்புக்கு நேராக நீட்டுகின்றான். அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கும் யோசேப்புடன் ஒரு மல் யுத்தமே செய்து தனது பரிசு பொருளை பலவந்தமாக திணிக்க முயற்சிக்கின்றான். அந்த கடுஞ்சோதனை நேரத்தில் யோசேப்பு பயத்தோடும் நடுக்கத்தோடும் நினைவுகூறும் ஒரே ஒரு நபர் தேவனாகும். அங்கு யோசேப்பு அவரை "என் தேவன்" என்று தந்தைக்குரிய தனிப்பாசத்தோடு குறிப்பிடுகின்றார். தனது சிறு பிராயம் முதல் தன்னை ஆட்கொண்ட தன் அன்பின் பரம தகப்பனை தனது பாவச் செயலால் துக்கப்படுத்த யோசேப்புக்கு மனம் வரவில்லை. பாவ சோதனை நேரங்களில் நம்மை தமது இரத்த கிரயத்துக்கு கொண்ட இயேசு இரட்சகரை சிலுவையில் தொங்கும் தேவ ஆட்டுக் குட்டியாக நினைவுகூருவது பாவத்திலிருந்து நம்மை நிச்சயமாக தடுத்து நிறுத்தும்.


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM