|
|
இமயமலை பிராந்தியங்களில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
"மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படி செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" (ஏசாயா 55 : 10-11)
தம்மில் அன்புகூர்ந்து, தம்முடைய கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும், கிருபையையும் காக்கிற மகத்துவமும், பயங்கரமுமான தேவனுக்கு எல்லா துதியும், கனமும், மகிமையும், புகழ்ச்சியும் உண்டாவதாக. ஆமென். கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் நாங்கள் 10 நாட்கள் பேஜ்நாத் என்ற இடத்தை தங்குமிடமாக வைத்துக் கொண்டு அதைச் சுற்றிலும் இருந்த அநேக கிராமங்களிலும், அந்த இடங்களிலிருந்த பல கல்விக்கூடங்களிலும் நாங்கள் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்த பின்பு அங்கிருந்து 23 கி.மீ. தொலைவிலுள்ள பாகேஷ்வர் பட்டணத்திற்குச் சென்றோம். இதுவும் இந்து மக்களின் ஒரு புண்ணிய ஷேத்திரமாகக் கருதப்படுகின்றது. இந்த இடத்தில் கோமதி, சரயு என்ற இரண்டு நதிகள் சங்கமாகின்றன. இந்த நதிகள் சங்கமாகின்ற இடத்தில் ஒரு இந்துக் கோயில் இருக்கின்றது. கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் புரதான காசிப்பட்டணத்தின் சிறப்பு இதற்குள்ளது என்று சொல்லப்படுகின்றது. அங்கிருக்கும் கடவுள்தான் இங்கும் இருப்பதாக இந்து மக்கள் கருதுகின்றனர். அதின் காரணமாக ஒவ்வொரு நாளும் பக்கத்து ஊர்கள் மற்றும் பட்டணங்களிலிருந்து மரித்தோரின் பிணங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு நதிகளின் சங்கமத்தில் உள்ள ஆற்றங்கரையில் வைத்து எரிக்கப்பட்ட வண்ணமாக உள்ளன. இந்த பாகேஷ்வர் பட்டணத்தில் நீங்கள் இருந்தால் பிணங்கள் மஞ்சள் துணியில் சுற்றப்பட்டு மக்கள் தங்கள் தோள்களின் மேல் சுமந்து கொண்டு எரிப்பதற்காகக் கொண்டு செல்லுவதை நீங்கள் காணலாம். காசிப்பட்டணத்தில் எரிக்கப்பட்டு பிணத்தின் சாம்பல் கங்கை நதியில் போடப்படும் பொழுது அந்த ஆத்துமா கைலாசம் செல்லும் என்ற நம்பிக்கை எத்தனை உறுதியாக மக்களுக்கு உள்ளதோ அதே நம்பிக்கை இங்கும் உள்ளதால் பிணங்கள் இங்குள்ள ஆற்றின் படுகையில் எரிந்த வண்ணமாக இருப்பதையும் அதின் புகை குறிப்பாக மாலை நேரத்தில் நதியைச் சுற்றியுள்ள பகுதியை மூடியிருப்பதையும் நாம் காணலாம். தங்களுடைய பாவங்களுக்காக தமது ஜீவனையே கொடுத்து பரலோக பேரின்ப வாழ்க்கையை ஆயத்தம் செய்து வைத்துள்ள அன்பின் இரட்சகர் இயேசு கிறிஸ்துவை ஏற்று அந்த மக்கள் நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள அவர்களுக்காக ஜெபிப்பது நம்மேல் விழுந்த கடமையாகும்.
இந்த பாகேஷ்வர் பட்டணத்தில் நாங்கள் இங்குள்ள அரசாங்க ஓய்வு விடுதியில் தங்கினோம். நாங்கள் எல்லாரும் ஒன்றாக ஒரே இடத்தில் தங்கிக்கொள்ள வசதியாக முன்கூட்டியே இந்த விடுதியிலுள்ள பொது அறையை (Dormitory) நாங்கள் புக் பண்ணிக் கொண்டோம். நல்ல காற்றோட்டமும், வெளிச்சமுமான இந்த முதல் மாடி அறை நாங்கள் ஜெபிப்பதற்கும், ஆண்டவர் சமூகத்தில் எங்களை உடைத்து ஊற்றுவதற்கும் மிகவும் வசதியாக இருந்தது. கழிப்பறை வசதிகளும், நாங்கள் குளிப்பதற்கான இடமும் எங்கள் அறையை ஒட்டியே இருந்தது. ஆனால், நாங்கள் உணவருந்த ஏற்ற இடம் அருகில் இல்லை. ஒரு நாள் நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதியில் சாப்பிட்டோம். நாங்கள் சாப்பிட்ட ஆகாரத்திற்கான கட்டண தொகையைக் கண்ட நாங்கள் அதற்கப்பால் அங்கு சாப்பிடவே இல்லை. ஒவ்வொரு முறையும் நாங்கள் எங்கள் ஆகாரத்தைச் சாப்பிட சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டியதாக இருந்தது. ஆனால், காலை ஆகாரத்தை நாங்கள் எங்கள் வாகனங்களில் சென்று சாப்பிட்டுவிட்டு அப்படியே தேவனுடைய ஊழியத்தைச் செய்ய வெளியிடங்களுக்குப் போய்விடுவோம். இராச்சாப்பாட்டிற்கு நாங்கள் எல்லாரும் நடந்தே சென்று நடந்தே திரும்பி வந்தோம்.
நாங்கள் எடுத்து வந்த தேவனுடைய பிரசுரங்கள் எல்லாம் மக்களுக்குக் கொடுத்து தீர்ந்துவிட்டபடியால் 80 கி.மீ. தொலைவிலுள்ள அல்மோரா பட்டணம் சென்று அங்குள்ள குஷ்டரோக மருத்துவமனையில் நாங்கள் விட்டு வந்த தேவனுடைய பிரசுரங்களை எங்களுடைய வாகனங்களை அனுப்பி எடுத்து வந்தோம். |
பாடலிசின்னா, மட்டேலாவில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள். |
நாங்கள் பாகேஷ்வர் போய்ச் சேர்ந்த ஓரிரு நாட்களில் கால நிலை மோசமாகியது. பெரிய மழைகள் பெய்யக் கூடிய அறிகுறி தென்பட்டது. வானம் மழை மேகங்களால் கறுத்து மூடியிருந்தது. எங்களுக்கு மனதில் ஒரே கவலையாக இருந்தது. தேவ ஊழியம் மழை காரணமாக தடைபட்டுவிடுமோ என்று நாங்கள் பெரிதும் அஞ்சினோம். ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் வாகனங்களில் கர்த்தருடைய பிரசுரங்களை போதுமான அளவிற்கு எடுத்துக்கொண்டு நாங்கள் எல்லாரும் ஒன்று கூடி அந்த நாளின் தேவ ஊழியங்களை அன்பின் ஆண்டவர் ஆசீர்வதித்துத் தரும்படியாக ஜெபித்துவிட்டு புறப்பட்டோம். அப்பொழுது மழை தூறிக் கொண்டிருந்தது. அந்த நாள் முழுவதும் அடை மழை பெய்து கொண்டேதான் இருக்கும் என்ற கவலையோடு நாங்கள் கிளம்பினோம். பாகேஷ்வர் பட்டணத்தைக் கடந்து அல்மோரா பட்டணம் செல்லும் பெரும் பாதையில் நாங்கள் சில கி.மீ. தூரம் சென்று கொண்டிருந்தோம். அதன் பின்னர் வாகனங்கள் ஒரு ரஸ்தா பிரிவில் பெரும் வழியை விட்டு விட்டு வலக்கைப் பக்கமாக மேல் நோக்கி ஏறத் தொடங்கின. வரவர உச்சிப்பகுதிக்கே வந்து அதற்கப்பால் அவைகள் மலையின் அடிவாரம் நோக்கி கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கின.

எங்கள் வழித்தடத்தில் முதலாவது எங்களுக்கு எதிர்ப்பட்ட கிராமம் பாட்லி ஆகும். அந்த கிராமத்தில் எங்கள் வாகனங்களை நிறுத்தி மழையின் காரணமாக வீடுகளின் ஓரமாக ஒதுங்கியிருந்த மக்களுக்கும், மழையைப் பொருட்படுத்தாது ரஸ்தாவில் போய்க் கொண்டிருந்தவர்களுக்கும் சுவிசேஷ பிரசுரங்களை ஜெபத்துடன் விநியோகித்தோம். நாங்கள் பாட்லி கிராமத்தைக் கடந்து கோலா, பிட்டாரி, சொக்கானிசினா போன்ற கிராமங்களைக் கடந்து கீழ் நோக்கிய பாதையில் வந்து கொண்டிருந்தோம். நாங்கள் எங்கள் பாதையில் சந்தித்த மேற்கண்ட இடங்களிலும் தேவ ஊழியம் செய்யத் தவறவில்லை. நாங்கள் சென்று கொண்டிருந்த மலைப் பாதையின் காட்சிகள் மிகவும் ரம்மியமாக இருந்தது. அதில் ஒரு கிராமப் புறக்காட்சியை நீங்கள் காணலாம். கர்த்தருடைய கிருபையால் இப்பொழுது மழைத் தூறல் முற்றும் நின்று வானத்தின் மழை மேகங்கள் அகலத் தொடங்கின. அதைக் கண்ட எங்கள் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

நாங்கள் இறங்கு முகமாக இறங்கி பாடலிசின்னா என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த இடத்திலிருந்து பார்த்தால் நாங்கள் கடந்து வந்த மேட்டிலுள்ள இடங்கள் மிக அழகாக காட்சி அளித்தன. அந்தக் காட்சியைப் பரவசமாகப் பார்த்துக் கொண்டிருந்த எங்களண்டை ஒரு மனிதர் வந்து "அதோ தொலைவில் பாருங்கள், அந்த பெரிய வீட்டில் ஒரு ராணி வாழ்ந்து வந்தார்கள். ஆம், இந்த அழகிய பள்ளத்தாக்கின் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வாழ்வதற்காகவே அந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். இப்பொழுது அவர்கள் இறந்துவிட்டார்கள். அவர்களின் வீடும் விலைக்கு விற்கப்பட்டுவிட்டது" என்றார். ஏழையோ, பணக்காரனோ இந்த உலகின் அனைத்து மாந்தரும் தேவனுடைய படைப்பின் மாட்சியில் மயங்கிவிடுகின்றனர். ஆனால், அதைப் படைத்த படைப்பாளியாம் தேவனை சற்றும் நினைப்பதில்லை. அவருக்கு தங்கள் உள்ளத்தில் தங்க இடம் கொடுப்பதில்லை. தேவனுடைய படைப்பின் அழகில் மயங்கிய அந்த ராணியின் வீட்டை நீங்கள் இந்த செய்தியில் காணலாம்.

நாங்கள் பாடலிசின்னாவில் எங்கள் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்த கடைவீதியிலும், அங்கிருந்த ஆரம்பப் பள்ளியிலும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். மக்கள் மிகவும் சந்தோசத்தோடு அவைகளை எங்களிடமிருந்து பெற்று ஆசை ஆவலாக வாசித்தார்கள். பள்ளி மாணவ மாணவியரும் அப்படியே எங்களிடமிருந்து சுவிசேஷ பிரதிகளைப் பெற்றுப் படித்தார்கள்.

நாங்கள் பாடலிசின்னா கிராமத்திலிருந்து அதைச் சுற்றி வளைத்து கீழ் முகமாக இறங்கினோம். அந்த இடத்தில் ஒரு பள்ளியின் முன்பு நிறைய பிள்ளைகள் காணப்பட்டனர். பள்ளி இன்னும் ஆரம்பிக்கவில்லை. அந்தப் பள்ளி மாணவ மாணவியருக்கொல்லாம் பிரதிகளைக் கொடுத்தோம். அந்த இடத்திலிருந்து காப்ளிகர் என்ற இடத்திற்கு வந்து அந்த கிராமத்திலும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்துவிட்டு பில்லோரி சோனா, பில்லோரி ஆகிய இடங்களில் எங்கள் வாகனங்களை நிறுத்தி சுவிசேஷப் பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டே மலை உச்சியிலிருந்து சமதரைக்கு இறங்கிவிட்டோம். அல்மோரா பட்டணம் செல்லும் பிரதான பேருந்து ரஸ்தாவுக்கே நாங்கள் வந்து சேர்ந்தோம். இந்த இடத்தின் பெயர் மட்டேலா என்பதாகும். இங்கு ஒரு பெரிய மக்னீஷிய தொழிற்கூடம் இருப்பதை நாங்கள் கண்டோம். இந்த தொழிற்சாலையில் வேலை செய்வோருக்கும் நாங்கள் தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்தோம். மட்டேலா என்ற அந்த இடத்தின் கடைவீதிக்கு டீ குடிக்க வந்த அந்த தொழிற்கூட தொழிலாளர்கள் அவர்கள். அவர்களில் சற்று உயர்வான பணியில் இருப்போர்களில் சிலர் எங்களிடம் வந்து கிறிஸ்தவ சி.டி.க்களை கேட்டுப் பெற்றுச் சென்றனர். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. அன்பின் ஆண்டவர் தமது வார்த்தைகளின் மூலமாக அவர்களுடைய உள்ளங்களில் கிரியை செய்ய அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். மட்டேலாவில் நாங்கள் எங்கள் வாகனங்களைக் கடை வீதியில் நிறுத்தி தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். கர்த்தருடைய கிருபையால் நாங்கள் அன்று 70 கி.மீ. தொலைவு பிரயாணம் செய்து தேவ ஊழியத்தை நிறைவேற்றியிருந்தோம். |
| ரீமாவில் நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
பாகேஷ்வரிலிருந்து ரீமா என்ற இடம் 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. பாகேஷ்வருக்கும், ரீமாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிறைய கிராமங்கள் இருப்பதை மனதில் கொண்டு ஒரு நாள் காலை நேரத்தில் போதுமான தேவனுடைய பிரதிகளை எடுத்துக் கொண்டு நாங்கள் தேவனுக்கு நேராக ஜெபங்களை ஏறெடுத்துவிட்டு பிரயாணப்பட்டோம். கடந்த நாட்களில் நமது ஊழியங்களில் கலந்து கொண்ட நமது பாஸ்டர் சகோதரன் சுசில் தோப்பு அவர்கள் பாகேஷ்வர் பட்டணத்தில் தேவ ஊழியம் செய்து கொண்டிருப்பதால் அவர்களும் நமது ஊழியத்தில் எங்களோடு மிகுந்த மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்கள். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.
நாங்கள் பாகேஷ்வர் பட்டணத்தின் ஓரமாக பயணப்பட்டு குறிப்பிட்ட ஓரிடத்தில் கோமதி நதியைக் கடந்து மலைகளின் வழியாகச் சென்று கொண்டிருந்தோம். எங்கள் பாதையில் நாங்கள் சந்தித்த முதல் கிராமம் பாலிகாட் என்பதாகும் அங்கு தேவ ஊழியம் செய்துவிட்டு எங்கள் வழித்தடத்தில் இருந்த தோயா, பாட்னிகோட், தூபாட், லால்பண்ட், சீடாங், கருலி, கஜ்லி, டேங்கர் என்ற மலைக் கிராமங்களில் எல்லாம் நம்முடைய வாகனங்களை நிறுத்தி அந்த கிராமங்களிலிருந்த கிராமவாசிகளுக்கு ஆண்டவருடைய பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டே சென்று ஜோல்சாடக் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். அந்த ஊரின் முகப்பு காட்சியை நீங்கள் இங்கு காணலாம். இங்குள்ள கடைவீதியில் உள்ள மக்களுக்கு நாங்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்துவிட்டு இங்குள்ள உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோம். பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பாக எங்களை அனுமதித்த காரணத்தால் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் தான் கொண்டு வந்திருந்த அழகான படச் சுருளை பள்ளி மாணவ மாணவிகளுக்குக் காண்பித்து சுவிசேஷம் அறிவித்தார்கள். அதின் பின்னர் அந்தப் பள்ளியிலிருந்த 140 மாணவ மாணவியருக்கும் 5 ஆசிரிய பெருமக்களுக்கும் தேவனுடைய நற்செய்தி பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினோம்.

நாங்கள் அங்கிருந்து பால்சன், சாந்திகேத், டோபார்ட், பான்கேத், ஹோராலி, சீமாசர்தி, ஒடயார், காப்லி போன்ற கிராமங்களில் எங்கள் வாகனங்களை நிறுத்தி, நிறுத்தி அங்குள்ள சிறிய கடை வீதிகளிலும், அதையொட்டியுள்ள கிராமத்தின் வீடுகளுக்கும் சென்று சுவிசேஷ பிரசுரங்களை விநியோகித்தோம். பொதுவாக நாங்கள் வடக்கே தேவ ஊழியங்களுக்குச் செல்லும் மாதம் அக்டோபர் ஆனபடியால் அந்தச் சமயத்தில் அங்கு கிடைக்கக் கூடிய ஒரே பழம் கொய்யா மாத்திரமே. நாங்கள் சென்ற ரீமா வழித்தடத்தில் கிராமங்களில் கொய்யா மரங்கள் பழுத்து குலுங்குவதை நாங்கள் காண முடிந்தது. நடு மத்தியான நேரம் நாங்கள் சென்றதால் பசியின் காரணமாக கிராம மக்களிடம் கேட்டு பழங்களை வாங்கிச் சாப்பிட்டோம். அநேகமாக பழங்களை மக்கள் எங்களுக்கு இலவசமாகவே தந்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. அவர்களிடம் பழங்களை வாங்கின நாங்கள் அவர்களுக்கு ஆண்டவருடைய வார்த்தைகளையும் தவறாது கொடுத்தோம்.

இறுதியாக நாங்கள் ரீமா என்ற ஒரு பெரிய கிராமத்திற்கு நண்பகலை நன்றாகத் தாண்டிய நேரத்தில் வந்து சேர்ந்தோம். நாங்கள் எல்லாரும் மிகவும் பசியாக இருந்தபடியால் அங்குள்ள ஒரு டீ கடைக்குச் சென்று எங்கள் பசி ஆற்ற அங்கிருந்தவைகளை வாங்கிச் சாப்பிட்டு எங்கள் பசியை ஆற்றிக் கொண்டு அந்த பெரிய கிராமத்திலுள்ள கடை வீதியிலும், கொஞ்சம் கிராம வீடுகளிலும் கர்த்தருடைய வார்த்தைகளை ஜெபத்துடன் வழங்கினோம். மலைச் சரிவில் அழகாக அமைந்திருக்கும் ரீமா கிராமத்தையும் அதின் அழகிய வீடுகளையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். நாங்கள் அங்கிருந்து பாகேஷ்வர் திரும்பும் வழித்தடத்திலும் முன்பு வாங்காத சிலருக்கு சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தோம்.
நாங்கள் திரும்பும் பாதையில் ரஸ்தா ஓரமாக கொய்யா மரங்களின் நிழலில் ஒரு வாலிபன் நாங்கள் கொடுத்த தேவனுடைய பிரசுரங்களை மிகுந்த ஆர்வத்தோடு தன் மட்டாக வாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டு நாங்கள் பெரிதும் ஆச்சரியம் அடைந்தோம். சுமார் 2 மணி நேரமாவது அவன் அதை அங்கே வாசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். காரணம், நாங்கள் அந்த வழியாக வந்து இப்பொழுது அதே வழியாக திரும்பிப் போக எங்களுக்கு அவ்வளவு நேரம் ஆகியிருந்தது. பாஸ்டர் சகோதரன் அந்த வாலிபனைக் கண்டு அந்தக் காரியத்தை எங்களுக்குச் சொல்லி இன்னும் வாசித்துக் கொண்டிருந்த அவனை நாங்கள் பார்க்கும்படியாக எங்களுக்குச் சொன்னார்கள். அதைக் கண்ட எங்கள் உள்ளம் ஆண்டவரில் மகிழ்ந்தது. கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. அந்த வாலிபனோடு ஆண்டவர் தமது வார்த்தைகளின் மூலமாகப் பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
பாகேஷ்வர் பட்டணத்திற்கு அப்பால் இன்னும் பல இடங்களுக்கு நாங்கள் சென்று அநேக ஆரம்ப, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளிலும், கிராமங்களிலும் ஆண்டவருடைய பிரசுரங்களைக் கொடுத்து தேவ ஊழியம் செய்தோம். அதின் பின்னர் பாகேஷ்வரிலிருந்து 80 கி. மீ. தொலைவிலுள்ள கோசி என்ற இடத்தை மையமாக வைத்து ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் வாகனங்களில் சென்று நாங்கள் இதுவரை சுவிசேஷம் அறிவித்திராத புதிய இடங்களுக்குச் சென்று ஆண்டவருக்கு ஊழியம் செய்தோம். நாங்கள் எப்படியாக ஒவ்வொரு நாளும் எங்கள் இரு வாகனங்களுடன் புறப்பட்டுச் சென்று எத்தனை எத்தனை கிராமங்களை சுவிசேஷத்துடன் சந்தித்தோம் என்பதை நம் அன்பின் ஆண்டவர் அறிகின்றவராக இருக்கின்றார். அந்த ஊழியங்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் விபரமாக எழுதி தேவ பிள்ளைகளாகிய உங்களுக்கு விளக்க இயலாதவனாக இருக்கின்றேன். நாங்கள் சென்று ஊழியங்கள் செய்த கிராமங்களின் பெயர்கள், பள்ளிக்கூடங்களைக் குறித்த விபரங்கள் யாவும் இரண்டு நோட்டுகளில் நமது தேவ ஊழியர் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களால் விபரமாக எழுதப்பட்டு எனக்கு முன்பாக உள்ளது. அவைகள் யாவற்றையும் மனுஷீக பெலத்தால் கம்பியூட்டரில் டைப் செய்யக் கூடாதவனாக இருக்கின்றேன். உங்கள் சகோதரனை அன்பாக மன்னியுங்கள்.
ஒரே ஒரு காரியத்தை மாத்திரம் நான் உங்களுக்கு மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூற முடியும். ஆம், தேவன் எங்கள் கரங்களில் கிருபையாகத் தந்த இந்த அருமையான ஊழியத்தை உண்மையோடும், உத்தமத்தோடும், ஆத்தும பாரத்தோடும் நிறைவேற்றி முடித்தோம். நானும், சகோதரன் நார்ட்டன் அவர்களும் இங்கிருந்து புறப்படும்போது எந்த ஒரு நிலையிலும் பெற்ற பிள்ளைகளோடு பாசத்தின் காரணமாக ஊருக்குத் தொடர்பு கொள்ளாமல் தேவ ஊழியத்தை எந்த ஒரு உலக சிந்தையும் இல்லாமல் முழு மனதோடு செய்ய வேண்டும் என்ற ஒரே ஏக்கத்தோடு நாங்கள் சென்றோம். அதின் காரணமாக எங்கள் செல்போன்களை துண்டித்து வைத்திருந்தோம். ஏதாவது மிகவும் தேவையானால் மட்டும் எங்களைத் தொடர்பு கொள்ள வசதியாக பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் செல் நம்பரைக் கொடுத்திருந்தோம். நாங்கள் எங்கள் மலை நாட்டு தேவ ஊழியங்களை கர்த்தருக்கு மகிமையாக முடித்து இமயமலைகளிலிருந்து அடிவாரப்பட்டணம் ஹல்த்வானி புறப்படும் கடைசி சமயம் எங்களுக்குக் கிடைத்த கடைசி செய்தி சகோதரன் நார்ட்டன் அவர்களின் கடைசி மகன் பெஞ்சமீன் அவர்களின் இரண்டாம் சின்ன குமாரத்தி பென்சியா பாட்னாவில் மரித்துப் போனாள் என்ற செய்திதான். பெஞ்சமீன் அவர்கள் பீஹாரில் மிஷனரியாக பணி ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள். பெற்ற தகப்பனும், மகனுமாக அந்த துயரச் செய்தியை அழு குரலோடு எங்களுக்கு முன்பாகப் பகிர்ந்து கொண்ட காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. பாவியாகிய நான் இங்கிருந்து மலை ஊழியத்திற்குப் புறப்படும்போது இராக்காலங்களில் தேவ சமூகத்தில் அதிகமான நேரம் ஜெபத்தில் செலவிட வசதியாக முழங்கால்களுக்கு கீழாகப் போட்டு ஜெபிக்க வசதியாக ஒரு மிருதுவான அதே சமயம் திண்ணமான ஒரு படுதாவை மறவாது எடுத்து வைத்துக் கொண்டேன். ஊழிய நாட்களில் உடுத்துவதற்கு பழைய துணிகளையே துவைத்து எடுத்துச் சென்றேன். கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தவும், ஊழியங்களில் ஒரு பெரிய தேவ ஆசீர்வாதம் காணவும் ஆத்துமாக்கள் கர்த்தரண்டை மனந்திரும்பவும், நாங்கள் எங்களை இவ்விதமாக தேவனுக்கு முன்பாகத் தாழ்த்துவது எங்களுக்கு மிகவும் அவசியமாகத் தெரிந்தது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
|
நாங்கள் எங்கள் ஊழிய நாட்களின் முடிவுக்கு வந்து கொண்டிருந்தோம். கொடுக்கப்பட வேண்டிய தேவனுடைய பிரசுரங்கள் அடங்கிய பெட்டிகள் சில மீதமாகி விட்டன. இன்னும் ஒரே ஒரு நாள்தான் மீதியாக இருந்தது. எனக்கிருந்த கவலை சொல்லி மாளாது. அவைகளை தனது ஊழியத்திற்கு எடுத்துச் செல்ல நமது பாஸ்டர் சகோதரன் ஜேம்ஸ் அவர்கள் மிகுந்த சந்தோசத்தின் ஆயத்த நிலையிலிருந்தாலும், இந்த மலை நாட்டு ஊழியத்திற்காக எத்தனையோ ஆயிரங்கள் செலவு செய்து அச்சிட்ட அந்தப் பிரதிகள் அனைத்தையும் எந்த விதத்திலும் மலை நாட்டு மக்கள் கரங்களிலேயே கொடுத்துவிட்டே செல்ல வேண்டும் என்ற பரிசுத்த ஆவல் என் உள்ளத்தை வாட்டி வதைப்பதாக இருந்தது.

கடைசி நாளில் நாங்கள் எங்கள் வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்று ஊழியத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். இரண்டு வாகனங்களிலும் இன்னும் கொடுக்கப்பட வேண்டிய சில அட்டைப் பெட்டிகள் இருந்தன. அதைக் குறித்த என்னுடைய உள்ளத்தின் பாரம் கர்த்தர் ஒருவருக்கே தெரிவதாக இருந்தது. குறிப்பிட்ட ஒரு இடம் வந்தபோது அந்த இடத்தில் வலது கைப்பக்கமாக ஒரு நல்ல மோட்டார் வாகன ரஸ்தா செல்லுவதை நான் கவனித்தேன். அன்பின் ஆண்டவருடைய ஏவுதலால் நான் அந்தப் பாதை வழியாக எங்கள் வாகனத்தைச் செலுத்தும்படியாக டிரைவர் நரேஷ் அவர்களை நான் கேட்டேன். இதற்கிடையில் எங்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்த எங்கள் வாகனம் வேறு வழியாக கோசிக்குப் போய்க் கொண்டிருந்தது. நாங்கள் சென்று கொண்டிருந்த வழித்தடத்தில் ரோன் டால் என்ற பெரிய ஊர் இருப்பதாகவும் அங்கு ஒரு பெரிய மேல் நிலைப் பள்ளி இருப்பதாகவும் நாங்கள் கேட்டறிந்தோம். உடனே, நமது அடுத்த வாகனத்தை திரும்பி வரும்படியாக எங்கள் செல் போன் மூலம் கேட்டுக் கொண்டோம். சற்று நேரத்திற்கெல்லாம் அந்த வாகனம் விரைந்து வந்து சேர்ந்தது. நேராக நமது தேவ ஊழியர்கள் மேல் நிலைப் பள்ளிக்குச் சென்று தேவனுடைய பிரசுரங்களை பிள்ளைகளுக்குக் கொடுக்க பிரின்ஸ்பாலிடம் அனுமதி கேட்டார்கள். அந்த அன்பான மனிதர் "பிள்ளைகளுக்கு இப்பொழுது எழுத்து தேர்வு நடந்து கொண்டிருக்கின்றது என்றும் இந்த மணி நேரம் தேர்வு முடிவடையும், அப்பொழுது நீங்கள் வந்து எல்லாருக்கும் கொடுங்கள்" என்று கூறிவிட்டார். எங்களுக்கிருந்த மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. அந்த மணி நேரத்திற்குள்ளாக நாங்கள் ரோன் டால் ஊருக்கு மேலாக இருந்த மற்றொரு இடத்திற்குச் சென்று தேவனுடைய பிரசுரங்களை கொடுத்துவிட்டு வந்தோம். நமது தேவ ஊழியர்கள் மேல் நிலைப் பள்ளியின் பிரதான வாயிலில் காத்திருந்து, தேர்வு முடிந்ததுதான் தாமதம் எல்லா மாணவ மாணவியருக்கும் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்ததுடன், அங்கிருந்த ஆசிரிய பெருமக்களுக்கும் கொடுத்தனர். கர்த்தருக்கே துதி உண்டாவதாக. ரோன் டால் என்ற அந்த அழகிய கிராமத்தையும், அங்கிருந்த மேல்நிலைப் பள்ளியின் பிரதான நுழை வாயிலில் நமது தேவ ஊழியர்கள் ஆவலோடு காத்து நிற்பதையும், மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலுகின்ற மாணவ மணவிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவனுடைய பிரசுரங்களுடன் போய்க் கொண்டிருப்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

ஆ, தேவன் எவ்வளவு நல்லவர். இப்பொழுது எங்கள் கைவசம் ஒரு பெட்டி என்ன ஒரே ஒரு துண்டுப் பிரசுரம் கூட மீதியாகவில்லை. நாங்கள் கொண்டு வந்த அனைத்துப் பிரசுங்களையும் கொடுத்து முடித்திருந்தோம். எங்களுக்கிருந்த சந்தோசத்திற்கு எல்லையேது! ஆம், அவர் நாமம் அதிசமானவர் அல்லவா! அல்லேலூயா.

நாங்கள் எத்தனை எத்தனையோ பள்ளிகளை தேவனுடைய சுவிசேஷத்துடன் சந்தித்திருக்கின்றோம். அவைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பள்ளிகளின் படங்களை இங்கு வெளியிட்டிருக்கின்றோம். அங்கு சுவிசேஷ பிரசுரங்களை வாங்கின மாணவ மாணவியர்களுக்காக, படச் சுருளின் மூலமாக சுவிசேஷம் கேட்டவர்களுக்காக அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். எத்தனை எத்தனையோ கிராமங்களுக்கு நாங்கள் சென்று ஆயிரக்கணக்கான தேவனுடைய பிரசுரங்களை அந்த மக்களுக்குக் கொடுத்திருக்கின்றோம். தேவனுடைய வார்த்தைகள் அந்த மக்களுடைய உள்ளங்களில் கிரியை செய்ய அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். நாங்கள் சென்ற கிராமப் புறங்களில் எங்களிடம் தேவனுடைய பிரசுரங்களை வாங்கி ஆவலாக வாசிக்கும் மக்களின் சில படங்களையும் நீங்கள் காணலாம். அந்த மக்களின் படங்களை நீங்கள் காணும் போது சாத்தானாம் பிசாசினால் நித்திய எரி நரகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த மக்கள் எப்படியாவது நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளவும், எந்த ஒரு நிலையிலும் அவர்களுடைய நித்திய மீட்புக்காக சிந்தப்பட்ட தேவ மைந்தனாம் நம் அருமை இரட்சகரின் பரிசுத்த இரத்தம் பயனில்லாமல் போய்விடாதபடி அந்த மக்களுக்காகவும் உள்ளத்தின் பாரத்தோடு மன்றாடிக் கொள்ளுங்கள்.

தேவனுடைய திருவுளத்திற்கு உகந்த இந்த இமயமலை தேவ ஊழியங்களை நாங்கள் சென்று செய்து வர உங்கள் தியாக அன்பின் காணிக்கைகளை எங்களுக்கு மிகுந்த தேவ அன்போடு கொடுத்து ஆதரித்தீர்கள். கர்த்தரில் நாங்கள் உங்களுக்கு மிகவும் நன்றி கடன்பட்டுள்ளோம். அத்துடன் நாம் நாடிச் செல்லுகின்ற நமது இன்ப பரதீசிலும் அன்பின் ஆண்டவர் அதற்கான பிரதி பலன்களை தப்பாமல் உங்களுக்கு அருளிச் செய்வார். "நாம் வீணாக ஓடி, வீணாகப் பிரயாசப்பட்டதில்லை என்ற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் நமக்கு உண்டாயிருப்பதற்கு" (பிலி 2 : 14) நாம் தேவனுக்குச் செய்த ஊழியங்களுக்காக தொடர்ந்து நாம் உள்ளத்தின் பாரத்தோடு தேவ சமூகத்தில் ஜெபித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம். அதற்கான தேவ கிருபைகளை ஆண்டவர்தாமே நம் எல்லாருக்கும் தந்தருள்வாராக. ஆமென். |
 |
 |
|
|