உங்கள் உருக்கமான அன்பின் ஜெபங்களை
ஆவலோடு எதிர் நோக்கி நிற்கின்றோம்.

"அன்றியும் மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்" (லூக்கா 24 : 47, 48)

"இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும், இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார். இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம்.........." (அப் 5 : 31, 32)

"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்" (1 தீமோ 2 : 4)

"முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும் பின்பு புற ஜாதியாரிடத்திலும் நான் போய் அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பி குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்ய வேண்டுமென்று அறிவித்தேன்" (அப் 26 : 20)

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. கடந்த சில காலமாக ஒவ்வொரு வருடமும் நாங்கள் ஒரு குழுவாக இணைந்து 2 வாகனங்களை வாடகைக்கு அமர்த்திப் பல்லாயிரக்கணக்கான தேவனுடைய சுவிசேஷப் பிரசுரங்களை வட இந்திய மாநிலப் பகுதிகளில் குறிப்பாக இமயமலைப் பிராந்தியங்களில் ஜெபத்துடன் விநியோகித்து வருகின்றோம் என்பதை தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். எங்களிடம் சுவிசேஷப் பிரசுரங்களைப் பெற்றுச் சென்றிருக்கும் மக்களுடைய உள்ளங்களில் தேவன் எப்படி கிரியை செய்திருக்கின்றார்? தேவப்பிள்ளைகளாகிய உங்களுடைய தியாக அன்பு, தேவ ஊழியர்களாகிய எங்களுடைய பிரயாசங்கள் யாவற்றின் பிரதி பலன் என்ன என்பதை முடிவில்லாத நித்தியம் மட்டுமே நமக்கு வெளிப்படுத்தும். "என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல் அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" (ஏசாயா 55 : 11) என்ற தேவ வாக்கின்படி நாம் வடக்கே விதைத்த தேவனுடைய வார்த்தைகள் நிச்சயமாக நித்தியமான பலனை ஒரு நாள் நிச்சயமாகக் கொடுக்கும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். அதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது. அதற்கு ஆதாரமாக ஒரு உண்மைச் சரித்திரத்தை நான் இங்கு குறிப்பிட ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு பேருந்து மார்க்கமாகச் செல்லுவீர்களானால் அந்த பேருந்து வழித் தடத்தில் வரும் கிணத்துக்கடவு என்ற பெரிய ஊருக்குச் சமீபமாக தாமரைக்குளம் என்ற இடத்தைக் காண்பீர்கள். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் கயிறு திரிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதை நீங்கள் காணலாம். தென்னை மரங்களால் சூழப்பட்ட அந்த அழகிய கிராமத்தில் வைராக்கியமான இந்துக் குடும்பத்தில் பிறந்த ஒரு வாலிபன் தனது இந்து மார்க்கத்தில் மிகுந்த பக்தியுடையோனாக இருந்து தங்கள் வீட்டிலுள்ள ஒரு அறையில் இந்து விக்கிரகங்களை வைத்து பூஜையும் செய்து வந்தான். அவன் ஒரு முருக பக்தனாகவும் இருந்தான். அவனுடைய தகப்பனார் அவனை ஒவ்வொரு மாதமும் பழனி மலையிலுள்ள இந்துக் கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள இந்துக் கடவுளை இருவருமாக வழிபட்டு வந்தார்கள். தாமரைக்குளம் என்ற அந்த ஊரிலிருந்து அந்த வாலிபன் தினமும் பேருந்தில் பிரயாணம் செய்து கோவையிலுள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் கல்வி பயின்று வந்தான். அப்படி கல்வி பயின்று வரும் நாட்கள் ஒன்றில் தன்னுடைய பேருந்தில் தனது இருக்கைக்கு அருகில் உள்ள இடத்தில் இரண்டு கிறிஸ்தவ துண்டுப் பிரதிகளை அவன் கண்டான். அந்த இரண்டு கைப்பிரதிகளும் ஒன்றேதான் என்பதை அவன் கண்டான். யாரோ ஒரு தேவ ஊழியர் அல்லது ஒரு கர்த்தருடைய பிள்ளை அதை அங்கே யாரும் எடுத்துப் படிப்பதற்காக விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அதில் ஒன்றை எடுத்துப் படிக்க அவன் ஆசை கொண்டு எடுப்பான், சற்று நேரத்தில் அவன் அதை அப்படியே அங்கு வைத்து விடுவான். திரும்பவும் அதை எடுப்பான், பழையபடியும் அதை அது இருந்த இடத்திலேயே வைத்து விடுவான். அந்தப் போராட்டத்தின் இறுதியாக, அதில் ஒன்றை எடுத்து அவன் ஆர்வத்துடன் படித்தான். அந்த துண்டுப் பிரதியில் ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரண தியாக பலியைக் குறித்து எழுதப்பட்டிருந்தது. தன்னுடைய இந்து மார்க்கத்தில் ஆடுகள், கோழிகள் இவைகளின் இரத்தம் பலியாக செலுத்தப்படும்போது இங்கே கிறிஸ்து பெருமான் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தையே பாவ மாந்தரின் மீட்புக்காக சிந்தி அவர்களை தனக்கென்று மீட்டுக் கொள்ளும் எல்லையற்ற அன்பின் அதிசயக் காட்சி அந்தக் கைப்பிரதியில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கைப்பிரதியின் வார்த்தைகள் அந்த வாலிபனின் உள்ளத்தை அதிகமாக தொட்டு நிற்கவே அவன் உடனே அந்தக் கைப்பிரதியில் காணப்பட்ட முகவரிக்கு கடிதம் எழுதி ஆண்டவர் இயேசுவை குறித்து அதிகமாக அறியத் தொடங்கினான். அதின் மூலமாக ஆண்டவர் இயேசுவின் மலைப் பிரசங்கம் பகுதி போன்றவைகள் அவனை அதிகமாக கவரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆண்டவர் இயேசுவை முகமுகமாக எப்படியாகிலும் தரிசிக்க வேண்டி அவருடைய காட்சிக்காக ஏங்கிக்கிடந்தான். இந்த நிலையில் அன்பின் ஆண்டவர் அந்த வாலிபனுக்கு தமது சிலுவைக்காட்சியை காண்பிக்காத போதினும் தம்மை ஒரு வெண்ணங்கி தரித்த நீண்ட ஆயுசுள்ள கர்த்தராக அவனுக்கு காண்பிக்கவே தனது இந்து தெய்வங்கள் யாவையும் உதறித் தள்ளிவிட்டு ஆண்டவருடைய அன்பின் அடியானாக அவருக்கு ஊழியம் செய்யும் தொண்டனாக மாறினார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் பாவ மன்னிப்பையும், இரட்சிப்பின் மறுபிறப்பின் நிச்சயத்தையும் பெற்று கர்த்தருக்கு முழு நேர ஊழியம் செய்யும் பொருட்டாக மத்திய பிரதேசத்திலுள்ள ஜபல்பூர் என்ற இடத்தில் உள்ள வேதாகம கல்லூரியில் வேதசாஸ்திரம் கற்று குருவானவர் ஆனார்கள்.

மேற்கண்ட குருவானவர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன் அவர்கள்தான் இன்று இங்கு கோத்தகிரி பரிசுத்த லூக்கா தேவாலயத்தின் குருவானவராக கர்த்தருக்கு மகிமையாக ஊழியம் செய்து கொண்டிருக்கின்றார்கள். எந்த ஒரு தனி மனிதனின் முகத்துக்கும் பயப்படாமல் தேவனுடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை மிகுந்த தைரியத்தோடு பிரசங்கிப்பதுடன் பாவத்தை வன்மையாகக் கண்டித்து உணர்த்திப் பேசுகின்றார்கள். எந்த ஒரு பெயர், புகழ்ச்சியை ஏற்றுக் கொள்ள முற்றும் விரும்பாத மிகவும் எளிமையான தேவ ஊழியர் அவர்களாவார்கள். அவர்களின் பரிசுத்த ஊழியத்தின் மூலமாக உண்மையில் திருச்சபையில் ஒரு உயிர் மீட்சியைக் காண முடிகின்றது. தேவ ஜனம் ஆசீர்வதிக்கப்படுகின்றது. கர்த்தருக்கே மகிமை.

பேருந்தில் தான் கண்டெடுத்த ஒரு சிறிய சுவிசேஷ துண்டுப் பிரதி எத்தனை வைராக்கியமான ஒரு இந்து பூஜாரியை கர்த்தர் ஒருவருக்கே உத்தமமாக ஊழியம் செய்யும் ஒரு பரிசுத்த குருவானவராக மாற்றிவிட்டதே! அந்தக் கைப்பிரதியை பேருந்தில் அந்த இடத்தில் வைத்துவிட்டுச் சென்ற தேவப்பிள்ளை தனது அற்பமான பிரயாசம் இத்தனையானதொரு மாட்சியான பலனைப் பின் நாட்களில் பிறப்பிக்கும் என்பதை கனவில் கூட எண்ணிப் பார்த்திருக்கமாட்டார்கள். குருவானவர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன் அவர்களையும், அவர்கள் திருப்பணிவிடை செய்யும் கோத்தகிரியிலுள்ள பரிசுத்த லூக்கா தேவாலயத்தையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். நாம் வடக்கே ஆத்தும பாரத்தோடும், மிகுதியான ஜெபத்தோடும், உபவாசத்தோடும் மக்களுக்கு கொடுக்கும் தேவனுடைய வார்த்தைகளடங்கிய சுவிசேஷ பங்குகளும், இதர தேவனுடைய பிரசுரங்களும் நிச்சயமாக ஏற்ற காலங்களில் இப்படிப்பட்ட ஆச்சரியமான காரியங்களை கர்த்தருக்கு மகிமையாக நடப்பிக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம். தொடர்ந்து நாம் நமது பரிசுத்த பணிகளில் கர்த்தரை முன்வைத்து முன் செல்லுவோம். கர்த்தர் நமக்காக யாவையும் செய்து முடிப்பார்.

கடந்த நாட்களில் நாம் வடக்கே கொடுத்த கைப்பிரதிகளைப் படித்த மக்களில் சிலர் அவ்வப்போது நமது தேவ ஊழியர்களோடு தொலை பேசியில் தொடர்பு கொள்ளுவதையும், சிலர் நேரிடையாகவே சென்று இரட்சிப்பின் காரியத்தைக் குறித்து நமது ஊழியர்களோடு விளக்கங்கள் கேட்பதையும், நமது தேவ ஊழியர்களும் தவனமுள்ள ஆத்துமாக்களை நேரில் சென்று சந்திப்பதையும் குறித்து நாம் கர்த்தருக்கு துதி செலுத்துவோம்.

கர்த்தருக்குச் சித்தமானால், இந்த ஆண்டிலும் வரவிருக்கும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தேவனுடைய பரிசுத்த பணிகளை வடக்கே இமயமலைகளில் நிறைவேற்ற ஜெபத்தோடு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றோம். ஏற்கெனவே, இந்த ஊழியங்களின் ஆசீர்வாதங்களுக்காக நாங்கள் தேவ பெலத்தால் உபவாசங்களை எடுத்திருக்கின்றோம். வழக்கம்போல இரண்டு வாகனங்களை ஒரு முழுமையான மாதத்திற்கு வாடகைக்கு அமர்த்தி நாங்கள் ஒரு குழுவாக ஆண்டவருடைய ஊழியங்களை மேற்கொள்ளவிருக்கின்றோம். கர்த்தருடைய ஊழியத்திற்குத் தேவையான சுவிசேஷப் பிரசுரங்கள் ஏற்ற நேரத்தில் அச்சிடப்படவும், விலைக்கு வாங்கப்படவிருக்கும் சுவிசேஷ பங்குகள் விலை சகாயமாக அச்சிடப்பட்டு நமக்குக் கிடைக்கவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். நம்முடைய ஊழியத்திற்குத் தேவையான சுவிசேஷ பிரசுரங்களுக்கு சிவகாசியில் உள்ள ஓரேப் அச்சகத்தாருக்கு நாம் உறுதியான ஆர்டர் கொடுத்து விட்டோம். "சாந்தி மார்க்கம்" என்று ஹிந்தியில் அழைக்கப்படும் இந்தி மொழி லூக்கா சுவிசேஷங்களுக்கு அலகாபாத்திலுள்ள இந்திய வேதாகம சங்கத்தாரிடம் ஆர்டர் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் ஜெபித்துக் கொள்ளுங்கள். கர்த்தருக்கே மகிமை. அனைத்து சுவிசேஷ பிரசுரங்களும் நேர்த்தியாக அச்சிடப்பட்டு போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாகப் போய்ச் சேரவும், மழைகளினால் அவைகள் சேதமடையாதிருக்கவும், கொடிய தந்திர சாத்தான் அவைகளுக்கு தீங்கு செய்யாதிருக்கவும் உங்கள் உருக்கமான ஜெபங்களை அதிகமதிகமாக எதிர் நோக்குகின்றோம். அன்பாக உங்கள் தனி ஜெபங்கள் மற்றும் குடும்ப ஜெபங்களில் வரவிருக்கும் தேவ ஊழியங்களுக்காக உருக்கமாக ஜெபித்துக் கொள்ளுங்கள். அதற்கான பிரதி பலன் பரலோகில் உங்களுக்கு நிச்சயமாக உண்டு.

நாம் நமது தேவ ஊழியங்களை விரிவான அளவில் 2 வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி ஒரு குழுவாக செய்வதால் சாத்தானுடைய முழுமையான எதிர்ப்புக்கும், தேவப் பகைஞரான மக்களுக்கும் நாம் இலக்காக இருக்கின்றோம். எனினும் "உலகத்திலிருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்" (1 யோ 4 : 4) என்ற தேவ வாக்கின்படி சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கின்றார். அவர் நமது கரங்களில் நாம் செய்யும்படியாகத் தந்த தம்முடைய ஊழியத்தை அற்புதமாக நடத்தி முடித்து தமது உன்னத நாமத்தை மகிமைப்படுத்துவார் என்று நாம் முழுமையாக விசுவாசிப்போம்.


 
 

எனக்கு முன்பாக உள்ளதான எனது மரணத்தைக் கண்ணீரோடு நான் நினைவுகூருகின்றேன். எனது மரணத்தையும், எனது மறுமை வாழ்வின் முடிவற்ற நித்திய யுகாயுகங்களையும் நான் அடிக்கடிச் சிந்திக்கக்கூடாதபடி சத்துருவாகிய பிசாசு வெகு தந்திரமாக என் மனக்கண்களை இருட்டடிப்புச் செய்து கொண்டேயிருக்கின்றான். அவனுக்கு நான் எதிர்த்து நிற்பேனாக.

"உன்னுடைய அனைத்துச் செயல்களிலும், சிந்தனைகளிலும் இன்று நான் மரிக்கப் போகின்றேன் என்ற கண்ணோட்டத்தில் காரியங்களைச் செய். உன்னுடைய நண்பர்களையும், உனது உடமைகளையும் நம்பி உன்னுடைய விலையேறப்பெற்ற ஆத்தும இரட்சிப்பின் காரியத்தைப் பின்னுக்கென்று ஒத்திப் போட்டு விடாதே. நீ நினைக்கின்றபடியல்ல, உன் நண்பர்களும், உனக்கு அருமையானவர்களும் உன்னை வெகு சீக்கிரத்திலேயே மறந்து விடுவார்கள். யாராவது ஒருவர் மரிப்பதை நீ காண்பாயானால் நீயும் கூட அதே ரஸ்தாவில்தான் வெகு சீக்கிரமாக பயணப்பட்டுச் செல்ல வேண்டும் என்பதை மறந்து விடாதே. காலையில் நீ எழுந்ததும், மாலையில் நான் உயிர் வாழப்போவதில்லை என்ற எண்ணமும், மாலை நேரத்துக்குள் பிரவேசிக்கையில் அடுத்து வரும் விடிபகல் வேளையை நான் காண மாட்டேன் என்ற நினைவும் உன்னைப் பலமாக ஆட்கொள்ள வேண்டும். மரிக்க எப்பொழுதும் ஆயத்தமாயிரு. ஆயத்தமற்ற நிலையில் நீ இருக்கையில் மரணம் தனது குளிர்ந்த கரத்தை நீட்டி உன்னைப் பிடித்துக் கொள்ளாதபடி நீ உன்னை மகா விழிப்புடன் காத்துக் கொண்டு மரணத்தை மகிழ்ச்சியோடு சந்திக்க எப்பொழுதும் ஆயத்தமாயிரு"

(பரிசுத்தவான் தாமஸ் கெம்பிஸ்)


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM