இமயமலை பிராந்தியங்களில் நடைபெற்ற
வாகன தேவ ஊழியங்கள்



"சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறார் என்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கிறது" (ஏசாயா 52 : 7)

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. நாங்கள் கௌசானி என்ற இடத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலுள்ள பேஜ்நாத் என்ற இடத்திற்கு ஒரு நாள் காலை வேளை புறப்பட்டு எங்கள் வாகனங்களுடன் வந்தோம். எங்கள் வழித்தடத்தில் நாங்கள் சந்தித்த மக்களுக்குத் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டே பேஜ்நாத் என்ற இடத்திலுள்ள அரசாங்க ஓய்வு விடுதிக்கு வந்து சேர்ந்தோம். பேஜ்நாத் என்ற இடம் இந்து மக்களின் ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு ஓடும் சரயு நதிக்கு அருகிலுள்ள பேஜ்நாதர் கோயிலுக்கு அங்குள்ள கடவுளை வழிபட இந்து மக்கள் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வங்காளி மக்கள் திரளாக வருகின்றனர். கருங்கற்களால் பெரிதும், சிறிதுமான கோபுரங்களாகக் கட்டப்பட்ட அந்தக் கோயிலைப் பாதுகாக்க போலீஸ்காரர் எப்பொழுதும் அங்கு நின்று கொண்டிருக்கின்றனர். கோயிலுக்கு அருகிலுள்ள சரயு நதியில் ஏராளமான பெரிய மீன்கள் நிலையாக ஒரு இடத்தில் அசைவாடிக் கொண்டிருக்கின்றன. அவைகளை தெய்வங்களாக எண்ணி மக்கள் அவைகளுக்கு ஆகாரங்களைப் போட்ட வண்ணமாக இருக்கின்றனர். நதியின் இழுப்புத் தண்ணீர் ஒரு பக்கம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தபோதினும் அந்த மீன்கள் அந்த இழுப்பு தண்ணீரில் செல்லாமல் ஓரிடத்தில் நிலையாக நின்று கொண்டிருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இரவும் பகலும் அந்த மீன்கள் அங்கேயேதான் அசைவாடிக் கொண்டிருக்குமாம். அந்த இடத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். அந்தப் பண்டைய காலத்துக் கோயிலுக்கு மேலாகத்தான் மலை உச்சியில் நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதி இருந்தது. அந்த அரசு விடுதியில் தங்க அத்தனை இலகுவில் இடம் கிடைத்துவிடாது என்று சொல்லப்படுகின்றது. பித்தோர்காரிலிருந்த நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் பல நாட்களுக்கு முன்பாக வந்து நாங்கள் தங்குவதற்கு வசதியாக அந்த இடத்தில் 3 அறைகளை முன் பதிவு செய்து வைத்திருந்தார்கள். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.

அந்த அரசாங்க ஓய்வு விடுதியை அன்பின் ஆண்டவர் எங்களுக்காக ஆயத்தம் செய்து வைத்திருந்தார். நாங்கள் வசதியாக தங்கிக் கொள்ளுவதற்கும், ஜெபிப்பதற்கும் அந்த இடம் மிகவும் ஏற்றதாகவும், மிகவும் விசாலமாகவும் இருந்தது. குளிப்பதற்கு வெந்நீர் எப்பொழுதும் கிடைப்பதாக இருந்தது. எங்களுக்கான ஆகாரங்களையும் நாங்கள் கடைவீதியில் பொருட்கள் வாங்கிக் கொடுத்து அங்குள்ள சமையலறையில் அங்குள்ள பணியாளர்கள் சுசில் குமார் மற்றும் மனோஜ் இருவரையும் கொண்டு சமைத்து சாப்பிட்டோம். காஸ் அடுப்புக்கு தனியாகப் பணம் கொடுத்து அத்துடன் அங்குள்ள மானேஜர் மற்றும் மேற்கண்ட 2 பணியாளர்களுக்கும் நாங்கள் ஆகாரம் கொடுத்தோம். அந்த தனித்த இடத்தில் எங்களுக்கு வீட்டுச் சாப்பாடு போல நல்ல சுத்தமான ஆகாரம் கிடைத்து வந்தது. அந்த தயவைப் பாராட்டிய ஆண்டவருக்கு நாங்கள் துதி செலுத்துகின்றோம். காலை வேளைகளில் அந்த அரசாங்க விடுதிக்கு கீழாக பிரதான ரஸ்தா ஓரமாக இருந்த ஒரு சிறிய ஹோட்டலில் நாங்கள் எங்கள் காலை ஆகாரத்தைச் சாப்பிட்டோம். சுத்தம் சற்று குறைவாக இருந்தபோதினும் சுவையாகவும், விலை மிகவும் குறைவாகவும் இருந்தது. நாங்கள் அந்த அழகான அரசாங்க ஓய்வு விடுதியில் தங்க வேண்டுமென்பது ஆண்டவருடைய திருவுளச் சித்தமாக இருந்தது என்பதை நாங்கள் பின்னர்தான் கண்டு கொண்டோம். மலை உச்சியில் இருக்கும் பேஜ்நாத் என்ற இடத்தின் அழகான அரசாங்க ஓய்வு விடுதியையும், அதற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும் எங்கள் வாகனங்களையும் நீங்கள் காணலாம்.

அந்த ஓய்வு விடுதிக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெரிய நிழல் மரம் எங்கள் கவனத்தை மிகவும் கவர்ந்தது. நம் தமிழ் நாட்டின் அடர்த்தியான நிழல் தரும் மரமான வேம்பு மரத்திற்கு அதை நாம் ஒப்பிடலாம். ஆனால், அதின் இலைகள் பூவரசு மரத்தின் இலைகளுக்கு ஒப்பாக நல்ல அகலமாக இருக்கின்றது. நாங்கள் சென்ற சமயம் மரத்தில் கொத்துக் கொத்தாக வெண் பூக்களும் காணப்பட்டன. எந்த ஒரு நிலையிலும் அந்த மரத்தின் இலைகள் உதிராமல் கூடுதலான நாட்கள் அப்படியே இருக்கும் என்று அங்குள்ளவர்கள் எங்களிடம் சொன்னார்கள். அந்த மரத்தின் நிழலுக்கு இமயமலைகளின் பற்பலவிதமான வண்ணப் பறவைகள் பறந்து வந்து அதின் இலைகளுக்குள்ளாக அமர்ந்து பாடுவதைக் கண்டு நான் மகிழ்ந்தேன். அந்த மரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு சமயமும் என் உள்ளத்தில் உண்டான ஒரு எண்ணம் என்னவெனில், மறுபடியும் பிறந்த ஒரு பரிசுத்த தேவப்பிள்ளை பாவ உலகில் ஒரு குளிர் தரும் நிழல் மரம் என்பதுதான். இந்த உலகத்தின் பாடுகள், துயரங்கள், கண்ணீர்கள், வாழ்க்கைப் போராட்டங்களில் பாறைக்குள் தேரையாகச் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஒரு மெய்க்கிறிஸ்தவன் உண்மையாகவே ஒரு நிழல் மரமாக இருப்பான் என்பதை என்னால் அந்த இடத்தில் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது. "அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான்" (எரேமியா 17 : 8) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு முன்பாக அந்த மரம் பூக்களோடு நிற்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

 

மனோஜ் அவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்தது.

அந்த அரசாங்க ஓய்வு இல்லத்தில் பணிபுரிந்த மனோஜ் என்ற தம்பி அங்கிருந்து 22 கி.மீ. தொலைவிலுள்ள பாகேஷ்வர் என்ற இடத்தைச் சேர்ந்தவன் ஆவான். ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்த அவனுக்கு பேஜ்நாத் அரசாங்க ஓய்வு இல்லத்தின் மானேஜர் தங்களுடைய அரசாங்க ஓய்வு இல்லத்தில் அப்பொழுது காலியாக இருந்த ஒரு வேலையைக் கொடுத்தார். அவனுக்கு அந்த அன்பைச் செய்ய அந்த மானேஜருடைய உள்ளத்தை ஏவி விட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. அந்த வாலிபன் ஆணும் பெண்ணும் இல்லாத "அலி" என்ற பிரிவைச் சேர்ந்தவனாக இருந்தான். அவனுடைய குரல் முற்றுமாக ஒரு இளம் பெண்ணின் குரலைப் போன்று அத்தனை மென்மையாக இருப்பதை நாங்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் கவனித்தோம். இரவின் பிந்திய மணி நேரங்களில் அந்த அரசாங்க ஓய்வு இல்லத்திற்குப் போன் பேசும் அரசு அதிகாரிகள் மனோஜ் அவர்களின் குரலைக் கேட்டதும் பயந்து ஐயோ இந்த மணி நேரத்தில் ஒரு வாலிபப் பெண்ணுடன் நாம் பேசுகின்றோமே என்று பயந்து போனை வைத்து விடுவார்களாம். அத்துடன் அந்த அதிகாரிகள் "நாங்கள் உங்களை ஒரு ஆணைத்தான் வேலைக்கு எடுக்கச் சொன்னோம், ஆனால் நீங்கள் ஏன் ஒரு வாலிபப் பெண்ணை வேலைக்கு அமர்த்தினீர்கள்" என்று கோபத்துடன் கேட்பார்களாம். மானேஜர் அனைத்து விபரங்களையும் சொன்ன பின்னர் அவர்கள் மனோஜ் மேல் பரிதாபம் கொண்டு அப்படியே அமர்ந்து விடுவார்களாம்.

அந்த மனோஜ் என்ற தம்பி எங்களுக்கு மிகுந்த அன்பு செய்தான். அவனுக்கு நாங்கள் ஆண்டவர் இயேசுவின் அன்பை விபரமாகக் கூறி உலகின் மெய்யான கடவுள் ஆண்டவராகிய இயேசு ஒருவர் மாத்திரமே என்பதையும், அவர் மூலமாக உள்ள இரட்சிப்பையும், அவரை சொந்த இரட்சகராக உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளுவதால் உண்டாகும் உலகம் தரக்கூடாத பேரின்ப சமாதானத்தையும், மரணத்துக்குப் பின்னாலுள்ள நித்திய ஜீவனையும் அவனுக்கு விவரித்துச் சொன்னோம். அவனுக்கு நாங்கள் எங்கள் ஊழியத்தினிமித்தம் கொண்டு சென்ற சுவிசேஷப் பிரதிகள் அனைத்திலும் வகைக்கு ஒவ்வொன்றாக ஒவ்வொரு பிரதியை ஜெபத்துடன் கொடுத்தோம். அவன் அவைகளை கருத்தோடு படித்து மகிழ்ந்தான். அவன் அதில் தீவிர வாஞ்சை காண்பித்த காரணத்தால் எப்படியாவது நாங்கள் அந்த இடத்திலிருந்து செல்லுவதற்கு முன்னர் அவனுக்கு ஒரு இந்தி மொழி வேதாகமத்தை கொடுத்து விடவேண்டும் என்ற வாஞ்சையில் பாஸ்டர் சகோதரன் எம்.சி.ஜேம்ஸ் அவர்கள் ஹல்த்வானி பட்டணம் சென்ற வேளையில் அவர்கள் மூலமாக 2 வேதாகமங்களை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி அதில் ஒன்றை மனோஜ் அவர்களுக்கு ஜெபத்துடன் கொடுத்து இன்னும் கூடுதலாக அவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்து அவர்களை ஆண்டவருடைய கரங்களில் ஒப்புவித்து கடைசி வரை கர்த்தர் அந்த பெலவீன பாண்டத்தை காத்துக் கொள்ள ஜெபித்தோம். நாங்கள் அந்த இடத்திலிருந்து புறப்பட்டபோது மனேஜ் உடைய உள்ளம் உடைந்து நொறுங்கிவிடுவதைப் போன்ற துக்கம் அவன் முகத்தில் இருப்பதை நாங்கள் கவனித்தோம். மனோஜ்க்கு ஆறுதல் கூறி வந்தோம். மனோஜ் தனது கரத்தில் ஆண்டவருடைய வேத புத்தகத்தை வைத்திருக்கும் வண்ணமாக எடுத்த புகைப்படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

 

சுசில் குமாருக்கு சுவிசேஷம் அறிவித்தோம்

அன்பின் ஆண்டவர் எங்களை பேஜ்நாத்திலுள்ள அரசாங்க ஓய்வு இல்லத்திற்கு அழைத்துச் சென்றதில் அவருடைய மேன்மையான நோக்கம் ஒன்று இருந்தது என்பதை நாங்கள் அங்கு சென்ற பின்னர்தான் கண்டு கொள்ள முடிந்தது. முதலாவது மனோஜ் என்ற வாலிபனுக்கு சுவிசேஷம் அறிவித்து அவனை ஆண்டவருடைய அன்புக்கு நேராக வழிநடத்த முடிந்தது. அடுத்தபடியாக சுசில் குமார் என்ற மனிதரை சந்தித்து ஆண்டவரை அவருக்கும் பகிர்ந்து கொண்டதுதான். சுசில் குமாரும் நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு இல்லத்தில் பணிபுரிபவர்தான். இந்தியாவிலுள்ள கான்பூர் பட்டணத்தில் அவருடைய தகப்பனார் ஒரு காலத்தில் கிறிஸ்தவராக இருந்திருக்கின்றார். என்ன காரணமோ நமக்குத் தெரியவில்லை அவருடைய காலத்திற்குப் பின்னர் பிள்ளைகள் யாவரும் இந்துக்களாக மாறிவிட்டனர். அப்படியே அவருடைய மகனாகிய சுசில் குமாரும் இந்துவாக மாறிவிட்டார். ஜீவனுள்ள மெய் தேவனை விட்டு விட்டு எதினால் இந்துவுக்கு மாறிவிட்டீர்கள் என்ற எங்களுடைய கேள்விக்கு அவரால் பதில் கொடுக்க முடியவில்லை. ஆண்டவராகிய இயேசு இரட்சகரை தங்கள் சொந்த தெய்வமாக கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது என்றும், அவரைப் போன்ற ஒரு அன்புள்ள தெய்வம் இவ்வுலகில் வேறு எவரும் கிடையாது என்றும் ஆணித்தரமாகக் கூறினோம். மார்க்கம் மாறினது தவறு என்றும் இனி ஆண்டவர் இயேசுவை உண்மையோடு வழிபடுவதாகவும் எங்களிடம் உறுதி கூறினார். அவருடைய விருப்பப்படி அவருக்கும் ஒரு புதிய ஹிந்தி மொழி வேதாகமம் அன்பளிப்பாகக் கொடுத்து அதை ஒழுங்காக ஜெபத்தோடு வாசித்து வரும்படியாகக் கூறினோம். தனது வாக்கின்படி அவர் நடக்க அவருக்காக நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். கரத்தில் நாங்கள் கொடுத்த வேதாகமத்துடன் இருக்கும் சுசில் குமாரையும் நீங்கள் காணலாம்.

 

மாக்டிஸ்டேட் என்ற இடத்தில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள்

பேஜ்நாத் என்ற இடத்தில் நாங்கள் இருந்து கொண்டு அதைச் சுற்றியுள்ள அநேக இடங்களுக்குச் சென்று ஆண்டவருடைய ஊழியங்களை மேற்கொண்டோம். காலையிலே நாங்கள் கண்விழித்து எங்கள் ஜெப தியான நேரங்களை முடித்து நாங்கள் எல்லாருமே குளித்து தயாராகிவிடுவோம். அதற்குள்ளாக நமது ஊழிய சகோதரர்கள் பள்ளத்தில் கீழே இறங்கிச் சென்று தாங்களும் டீ குடித்து விட்டு எங்களுக்கும் சூடான தேநீர் பானம் வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள். பின்னர் நாங்கள் எல்லாரும் ஒன்று கூடி தேவ சமூகத்தில் எங்களையும், வாகனங்களையும் ஒப்புக்கொடுத்து ஜெபித்த பின்னர் எங்கள் வாகனங்களில் சுவிசேஷப் பிரதிகளை ஏற்றிக் கொண்டு பிரயாணப்படுவோம். நாங்கள் புறப்படும் சமயம் கீழே உள்ள சிறிய ஹோட்டலில் எங்கள் வழக்கமான காலை ஆகாரமாகிய பூரியை சாப்பிட்டுவிட்டு கிளம்புவோம். காரணம், வழியில் எந்த இடத்தில் என்ன ஆகாரம் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது. அத்துடன் சில இடங்களில் ஆகாரம் சாப்பிட இயலாமலும் போய்விடும்.

ஒரு நாள் காலையிலேயே நாங்கள் மாக்டிஸ்டேட் என்ற இடத்திற்குப் புறப்பட்டோம். இடத்தின் பெயர் ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டு பட்டணம் போல் இருக்கின்றது அல்லவா? உண்மையில் அதுதான் அந்த ஊரின் பெயர். அந்த இடத்தில் ஒரு பெரிய மேல் நிலைப் பள்ளி இருக்கின்றது என்றும் அதில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயலுகின்றார்கள் என்றும் கேள்விப்பட்டு நாங்கள் அங்கு புறப்பட்டோம். எங்கள் வழித்தடத்தில் டங்கோலி என்ற ஊர் வந்தது. அந்த ஊருக்குச் செல்லும் பாதையில் ஒரு செக்போஸ்ட் ஒன்றில் காவலர்கள் இருந்தனர். அவர்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில் நமது வாகனங்கள் ஒன்றின் டிரைவர் நரேஷ் என்பவர் கொஞ்சம் சுவிசேஷப்பிரதிகளை எடுத்துக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்தார். அங்குள்ள காவல் துறை அதிகாரி அதை ஆவலாகப் படிப்பதையும், நரேஷ் அங்கு நின்று கொண்டிருப்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

நாங்கள் டங்கோலி என்ற ஊரின் கடை வீதியில் தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டு எங்கள் வழித்தடத்தில் எங்களுக்கு எதிர்ப்பட்ட தாண்டாலி, தல்லி கோர், மல்லிகோர் என்ற ஊர்களில் ஊழியம் செய்து கொண்டே கலாய் கண்டார் என்ற இடத்திற்கு வந்தோம். அந்த இடத்திலிருந்த மேல் நிலைப்பள்ளியில் அப்பொழுது இருந்த 150 மாணவ மாணவியருக்கும் அந்த ஊரிலிருந்த ஒரு ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 60 பிள்ளைகளுக்கும் சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்து விட்டு கண்டார் என்ற ஊரிலும் ஊழியம் செய்துவிட்டு மாக்டிஸ்டேட் என்ற இடத்திற்கு வந்தோம். முதலாவது, நமது மூத்த சகோதரர்கள் தங்கள் கரங்களில் பள்ளிப் பிள்ளைகளுக்கு கொடுக்கப் போகும் ஆண்டவருடைய பிரசுரங்களின் மாதிரிகளை எடுத்துக் கொண்டு ஒரு குட்டி ஜெபத்தை ஏறெடுத்துவிட்டு மேல்நிலைப்பள்ளி பிரின்ஸ்பால் அவர்களிடம் அவைகளைக் காட்டி அவைகளை பிள்ளைகளுக்குக் கொடுக்க அனுமதி கேட்க புறப்பட்டார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு சென்ற சகோதரர்கள் மேலிருந்து மகிழ்ச்சி குரல் கொடுத்து சுவிசேஷ பிரசுரங்கள் அடங்கிய பெட்டிகளை மேலே கொண்டு வரும்படியாக சைகை காட்டவே ரஸ்தாவில் நின்று கொண்டிருந்த மற்ற தேவ பிள்ளைகளும் நமது வாகனங்களின் டிரைவர்களும் பெட்டிகளை சுமந்து கொண்டு மேலே புறப்பட்டனர். அந்த நேரம் வெயிலின் அகோரம் கடுமையாக இருந்தது. அந்தக் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியோடு கடந்து சென்றனர். வாகனங்கள் இரண்டையும் தனியாக விட்டுச் செல்லுவதால் அவைகளைப் பார்த்துக்கொள்ளும்படியாக பாவியாகிய என்னைப் பின் வைத்துச் சென்றனர். நான் மறைவான நிழற்செடிகளின் கீழே நின்று கொண்டு வாகனங்களையும் பார்த்துக் கொண்டு அதே சமயம் மேலே சென்றிருக்கும் தேவ மக்கள் தங்கள் ஊழியங்களைக் கர்த்தருக்கு மகிமையாக முடித்துத் திரும்ப பரத்தை நோக்கி ஜெபித்தவனாக நின்று கொண்டிருந்தேன்.

மாக்டிஸ்டேட் என்ற அந்த இடத்திலுள்ள மேல் நிலைப்பள்ளியில் 500 மாணவ மாணவியர்களும் 13 ஆசிரியர்களும் இருந்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் சுவிசேஷ பிரசுரங்கள் வழங்கப்பட்டன என்றும், மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த மேல் நிலைப் பள்ளியின் பிரின்சிபால் தங்களுக்கு அனுமதி வழங்கினார் என்றும், இரட்சகர் இயேசுவைக் குறித்து இன்னும் அதிகமாக தாங்கள் அறிந்து கொள்ள வாஞ்சிப்பதாகக் கூறியதாகவும் சொன்ன வார்த்தைகள் எனக்கு ஆனந்த களிகூருதலாக இருந்தது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. மாக்டிஸ்டேட் என்ற ஊருக்கு கீழாக எங்கள் இரண்டு வாகனங்கள் நின்று கொண்டிருப்பதையும், நம்முடைய ஊழியர்கள் தேவனுடைய பிரசுரங்கள் அடங்கிய பெட்டிகளை சுமந்து கொண்டு செல்லுவதையும் நீங்கள் காணலாம். அந்த ஊரிலுள்ள மக்களுக்கும், அங்குள்ள மேல் நிலைப் பள்ளியிலுள்ள மாணவ மாணவியர்களுக்கும் விநியோகித்த கர்த்தருடைய வார்த்தைகள் தொடர்ந்து கிரியை நடப்பிக்க நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

 

மஜ்காலியில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் வாகனங்களில் தேவனுடைய பிரசுரங்களை எடுத்துக் கொண்டு மிகுதியான ஜெபத்தோடு மஜ்காலி என்ற இடத்திலுள்ள ஒரு மேல் நிலைப் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றோம். எங்கள் வழித்தடத்தில் கோவிந்த்பூர் மற்றும் நன்குட்டா என்ற கிராமங்களைக் கண்டோம். அந்த கிராமங்களிலும் ஆண்டவருடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். நீண்ட தொலை தூரத்தில் இருந்த மஜ்காலி என்ற இடத்திற்கு நாங்கள் எங்கள் வழித்தடத்தில் காணப்பட்ட பற்பலவிதமான காடுகளைக் கடந்து இறுதியில் கேதுரு மரங்கள் நிரம்பிய ஒரு கானகப் பகுதிக்கு வந்தோம். எங்கே கேதுரு மரங்கள் இருக்குமோ அந்த இடத்தின் உயரம் மிகவும் அதிகம் என்றும் அங்கு குளிர் நிரம்பியிருக்கும் என்பதை நாம் இலகுவில் யூகித்துக் கொள்ளலாம். அடிவாரத்திலிருந்து எங்கள் இரண்டு வண்டிகளும் மலைப் பாதை வளைவுகளில் சுற்றிச் சுற்றி ஏறி ஒரு மேடான பகுதிக்கு வந்து சேர்ந்தன. அந்த இடத்தின் பெயர் கோரிச் சின்னா என்பதாகும். அந்த இடத்தில் இருந்து பார்த்தால் சமவெளிப் பிரதேசங்கள் எல்லாம் எங்களுக்கு நன்கு தெரிந்தன. நானா திசைகளிலிருந்து வேகமான காற்றும் அந்த இடத்தில் பலமாக வீசிக்கொண்டிருந்தது. அந்த கோரிச்சின்னா என்ற இடத்திலும் நாங்கள் ஆண்டவருடைய பிரசுரங்களை விநியோகித்தோம். அங்கிருந்த ஒரு டீ கடையில் நாங்கள் எல்லாரும் டீ குடித்துவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்த பின்னர் நாங்கள் பயணப்பட்டோம். அந்த இடத்தின் அழகை தேவ ஊழியர் பக்கேலால் அவர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதையும், அந்த இடத்தில் எங்கள் வாகனங்கள் நின்று கொண்டிருப்பதையும் நீங்கள் காணலாம்.

அந்த இடத்திலிருந்து நாங்கள்இன்னும் பிரயாணப்பட்டு கேதுரு மரக்காடுகளின் வழியாக ஒரு சிறிய கடை வீதியை வந்தடைந்தோம். அந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அந்த இடத்தின் பெயர்தான் மஜ்காலி என்பதாகும். அந்த கடைவீதியில் அப்பொழுது நின்று கொண்டிருந்த யாவருக்கும், வியாபாரம் செய்து கொண்டிருந்தோருக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு அதிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவிலுள்ள மஜ்காலி ஊரின் மேல் நிலைப் பள்ளிக்கு நாங்கள் எல்லாரும் எங்கள் வாகனங்களை கடைவீதியில் விட்டுவிட்டு எங்கள் தோள் பைகளில் கூடுதலான அளவிற்கு பிரசுரங்களை எடுத்துக் கொண்டு கால் நடையாகப் புறப்பட்டுச் சென்றோம். எங்கள் பாதையில் எங்களுக்கு எதிராக வந்து கொண்டிருந்த மக்களுக்கு பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டே முன் சென்றோம். நாங்கள் சென்று கொண்டிருந்த எங்கள் பாதையின் வலது கைப் பக்கத்தில் ஒரு மரம் முழுவதுமாக பூக்களால் மலர்ந்து குலுங்கிக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தோம். இமயமலைகளில் இப்படிப்பட்ட பூ மரங்களை நாம் நிரம்பவே காண முடியும். மஜ்காலியில் உள்ள மேல் நிலை பள்ளி உயர்ந்த செங்குத்து மேட்டிலேயே இருந்தது. பள்ளியின் உள்ளே மாணவர்கள் பிரவேசிப்பதற்கு மற்ற இடங்களில் உள்ள பள்ளிகளைப் போன்று கூடுதலான வழிகள் இல்லாதிருந்தது. நமது தேவ ஊழியர்கள் சிலர் பள்ளிக்கு வரும் அந்த ஒரே வழியில் நின்று கொண்டு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். யாராவது தப்பித் தவறி அதை வாங்காமல் உள்ளே வந்தால் அவர்களுக்குக் கொடுப்பதற்காக பாஸ்டர் சகோதரன் எம்.சி.ஜேம்ஸ் அவர்கள் தனது கரத்தில் ஆண்டவருடைய பிரதிகளுடன் மேல் நிலைப் பள்ளியின் நுழை வாயிலில் நின்று கொண்டிருந்தார்கள். கர்த்தருடைய கிருபையால் அன்று அங்கு கல்வி பயிலுகின்ற 400 மாணவ மாணவியருக்கும் 12 ஆசிரியப் பெரு மக்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களை நாங்கள் ஜெபத்துடன் கொடுத்திருந்தோம். ஆசிரியர்களில் சிலர் ஆண்டவர் இயேசுவைக் குறித்த கிறிஸ்தவ சி.டிகள் எங்கள் வசம் உள்ளதா என்றும் அவைகள் தங்களுக்குத் தேவை என்றும் கூறவே ஒரு நாள் அதற்காக நாங்கள் எங்கள் வாகனத்தை எடுத்து வந்து நமது பாஸ்டர் சகோதரன் ஜேம்ஸ் அவர்கள் வசமிருந்த "இயேசு" இரட்சகரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சி.டி.களை அவர்களிடமிருந்து பெற்று அந்த வாஞ்சையுள்ள மக்களுக்குப் பள்ளிக்கு உள்ளேயே சென்று நாங்கள் ஜெபத்துடன் அதே சமயம் இலவசமாகக் கொடுத்தோம். அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

நம்முடைய ஊர்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள் அப்படியே பள்ளிக்குள் முண்டியடித்து நுழைந்துவிடுவார்கள். ஆனால் மேலே கண்ட மஜ்காலி மேல் நிலைப் பள்ளியில் எல்லா மாணவ மாணவிகளும் பள்ளியின் பிரதான நுழை வாயினுள் நுழைவதற்கு முன்னர் சற்று நின்று தாங்கள் வழிபடும் தங்கள் கல்வித் தேவதையை பணிவாகத் தாழ்ந்து குனிந்து தங்கள் கரங்களால் தொட்டுக் கும்பிட்டுச் செல்லுவதை நாங்கள் ஆச்சரியத்துடன் கவனித்தோம். அந்தக் காட்சியை நீங்களும் காண வேண்டுமென்பதற்காக எடுத்து வந்த புகைப்படங்கள் இரண்டை நீங்கள் காணலாம். தன்னுடைய கரங்களில் ஆண்டவருடைய பிரசுரங்களுடன் பள்ளி மாணவ மாணவியரை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் பாஸ்டர் சகோதரன் ஜேம்ஸ் அவர்களையும், அவர்களிடமிருந்து சுவிசேஷப் பிரசுரங்களைப் பெற்றுப் படித்துக் கொண்டு பள்ளிக்குள் செல்லும் மாணவ மாணவியரையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

 

வசூலா கிராமத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் காலை ஜெப தியானத்திற்குப் பின்னர் எங்கள் வாகனங்களில் போதுமான அளவிற்கு கர்த்தருடைய பிரசுரங்களை ஏற்றிக் கொண்டு சுமார் 30 அல்லது 40 கி.மீ தொலைவிலுள்ள வசூலா என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றோம். வசூலாவில் ஒரு பெரிய மேல் நிலைப் பள்ளிக்கூடம் இருப்பதாகவும், அங்கு நிறைய மாணவர்கள் படிப்பதையும் நாங்கள் கேட்டறிந்திருந்தோம். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் முன்னர் பிள்ளைகள் வரும் வழித்தடங்களிலேயே நின்று கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுக்க விரும்பினோம். காரணம், எல்லாப் பள்ளிக்கூடங்களிலும், குறிப்பாக அரசாங்க மேல் நிலைப் பள்ளிகளில் நாங்கள் கிறிஸ்தவ பிரதிகளைக் கொடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த தொந்தரவுகளை எல்லாம் எடுத்துக் கொள்ளாமல் நேரடியாகவே மாணவர்களைச் சந்தித்துவிடுவது என்ற எண்ணத்தில் நாங்கள் மேல் நிலை பள்ளி ஆரம்பிக்கும் முன்னரே பிள்ளைகள் வருகின்ற வழிப்பாதைகளில் நின்று ஜெபத்தோடு அவைகளை கொடுத்துவிடுகின்றோம். அப்படியே நாங்கள் வசூலா என்ற இடத்திற்கு காலையிலேயே புறப்பட்டுவிட்டோம். எங்கள் பாதையில் வந்த சோப்புலா என்ற இடத்தில் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்துவிட்டு நேராக வசூலாவுக்கு விரைந்தோம். பள்ளிக்கு இன்னும் பிள்ளைகள் வரவில்லை. அந்தப் பள்ளிக்கு குறுக்குப் பாதை ஒன்றின் வழியாக வரக்கூடிய இடத்தை கேட்டறிந்து அங்கே நமது சகோதரன் பக்கேலால் அவர்களை முன்கூட்டியே நிறுத்தி வைத்தோம். அவர்கள் தனது தோள் பை நிறைய கர்த்தருடைய பிரசுரங்களை தனது தோளில் சுமந்தவர்களாக கையிலும் நிறைய ஏந்தியவர்களாக அங்கே நின்று கொண்டிருந்தார்கள். பள்ளி ஆரம்பிக்கும் வேளை வந்தபோது மாணவ மாணவியர்கள் சாரை சாரையாக வசூலாவின் கடை வீதியிலிருந்து பள்ளி நோக்கி வரத் தொடங்கினார்கள். எங்களில் பலரும் அவர்களுக்கு பிரசுரங்களைக் கொடுப்பதில் முனைந்து நின்றோம். அவர்களை சமாளிப்பதே எங்களுக்கு மிகவும் கடினமாகத் தெரிந்தது. மாணவ மாணவியர்களோடு ஆசிரியர்களும் சேர்ந்து வந்தனர். அவர்களுக்கும் எங்கள் வசமிருந்த சத்தியமார்க்கம் போன்ற சிறப்பான பதிப்புகளைக் கொடுத்தோம். பள்ளி தொடங்குவதற்கு சற்று முன் வரை நாங்கள் ஒரு பெரிய எண்ணிக்கையிலான பிரசுரங்களைக் கர்த்தருடைய கிருபையால் கொடுத்து முடித்துவிட்டோம்.

அந்தப் பள்ளியில் மொத்தம் 900 பிள்ளைகள் படிப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் நாங்கள் கொடுத்த ஆண்டவருடைய வார்த்தைகளில் ஒன்றைக் கூட கிழித்துப் போடாமல் அந்த மாணவ மாணவியர் ஆசை ஆவலாக அவைகளை வாங்கிச் சென்றனர். நாங்கள் எங்களுடைய வாகனங்களை வசூலா மேல் நிலைப் பள்ளிக்கு முன்பாக நிறுத்தி வைத்து மாணவர்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும், எப்படி எப்படி மாணவர்களைச் சந்திக்க வேண்டுமென்று எங்கள் தேவ ஊழியர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதையும், எங்களிடமிருந்து சுவிசேஷ பிரசுரங்களைப் பெற்றுச் சென்ற மாணவ மாணவியர்கள் பள்ளியின் வளாகத்தில் அன்று காலையில் அசெம்பிளியில் ஒன்று கூடி நிற்பதையும் படங்களில் நீங்கள் பார்க்கலாம்.

வசூலா மேல் நிலைப் பள்ளி ஊழியம் முடிந்ததும் வசூலா கடைத்தெருவில் இருந்த ஆரம்ப பாடசாலையிலும் நாங்கள் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அந்தப் பள்ளியில் மொத்தம் 96 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் இருந்தனர். வசூலா கடைவீதியில் காணப்பட்ட அநேக மக்களுக்கும் நாங்கள் சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தோம். நாங்கள் எங்கள் ஊழியங்களை முடித்துத் திரும்பும் போது எங்கள் வழித்தடத்தில் மேட்டில் ஒரு உயர் நிலைப் பள்ளி இருப்பதை அறிந்து அங்கு சென்றும் அங்கு கல்வி பயின்று கொண்டிருந்த 130 மாணவ மாணவியர்களுக்கு தேவனுடைய பிரதிகளை வகுப்பு வகுப்பாகச் சென்று வழங்கினோம். மேட்டின்மேல் காணப்படும் அந்த உயர் நிலைப்பள்ளியையும் நமது தேவ ஊழியர்கள் கஷ்டப்பட்டு ஆண்டவருடைய வார்த்தைகளைக் கொடுப்பதற்காக மேடு ஏறிச் சென்று கொண்டிருப்பதையும், ரஸ்தாவில் நிறுத்தப்பட்டிருந்த எங்கள் வாகனங்களண்டை சகோதரன் பக்கேலால் அவர்கள் நின்று கொண்டிருப்பதையும் நீங்கள் காணலாம். அந்த நாளில் கர்த்தருடைய கிருபையால் அன்பின் ஆண்டவர் எங்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு ஊழியத்தைத் தந்தார். எங்களுடைய கரங்களிலிருந்து அந்த நாளில் தேவனுடைய பிரசுரங்களைப் பெற்றுக் கொண்ட மக்களுடைய உள்ளங்களில் கர்த்தர் தொடர்ந்து கிரியைச் செய்ய தேவப் பிள்ளைகளாகிய நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாள் ஊழியத்தை தொடங்கு முன்னர் அந்த நாளில் எந்த திசை வழியாகச் செல்ல வேண்டும்? அந்த திசையில் உள்ள கிராமங்கள் மற்றும் அங்குள்ள பள்ளிகள் போன்ற காரியங்களையும், ரஸ்தாவானது போக்கு வரத்துக்கு உகந்ததுதானா? வழியில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்ளக் கூடிய பெட்ரோல் பம்புகள் உள்ளனவா? என்பது போன்ற காரியங்களை எல்லாம் நாங்கள் திட்டமாகக் கேட்டறிந்து கொள்ளுவதுடன் அதற்கு அனுகூலமாக துல்லிபமாக ரஸ்தா மார்க்கங்களைக் காண்பிக்கும் படங்களையும் நாங்கள் எங்கள் மட்டாகப் பார்த்து நிச்சயித்துக் கொள்ளுவோம். இவை யாவற்றிற்கும் மேலாக நாங்கள் கர்த்தருடைய வழிநடத்துதல், அவருடைய தேவ ஆலோசனைக்காக மிகுதியும் காத்திருந்து ஜெபித்துப் புறப்படுவோம். அந்த நாளில் ஊழியம் முடித்து திரும்பியதும் விiத்த தேவனுடைய வார்த்தைகள் அவைகளைப் பெற்றுக் கொண்ட மக்களுடைய உள்ளங்களில் கிரியை செய்யும்படியாக நாங்கள் தொடர்ந்து ஜெபிப்போம்.

 

பில்கோட் கிராமத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

அப்படியே ஒரு நாள் நாங்கள் மிகுதியான ஜெபத்தோடு பில்கோட் என்ற கிராமத்திற்குச் சென்றோம். எங்கள் வழித்தடத்தில் சடியா காங்லி, சடியா ஸ்டேட், டில்கோட், பெல்காட், மெட்டி, மோகன்பாடி என்ற கிராமங்களில் சுவிசேஷ ஊழியம் செய்து முடித்து கம்பனன்ட் என்ற கிராமத்திலுள்ள உயர் நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அந்தப் பள்ளியில் 450 மாணவ மாணவியர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கிராமத்திலுள்ள ஆரம்ப பள்ளியில் 60 பிள்ளைகள் படித்தனர். அவர்களுக்கும் சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தோம். அங்கிருந்து குலாம் என்ற கிராமத்திலுள்ள நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 86 மாணவர்களுக்கும் 3 ஆசிரியர்களுக்கும் பிரதிகளை விநியோகித்தோம். அந்த ஊரிலிருந்த ஆரம்ப பாடசாலையில் 86 பேர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் இருவருக்கும் தேவனுடைய வார்த்தைகளை ஜெபத்துடன் வழங்கினோம். அங்கிருந்து மண்டாலா மற்றும் ஹரிங்கரி கிராமங்களிலுள்ள பள்ளிகளில் கல்வி பயின்ற மொத்தம் 111 மாணவர்கள் 6 ஆசிரியர்களுக்கு ஆண்டவருடைய பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு பில்கோட் என்ற அழகான கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த கிராமம் சமவெளிப் பிரதேசத்திலிருந்தது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இலையுதிர் காலத்திற்குப் பின்னர் மொட்டையாக நின்ற மரங்களில் வெண் பூக்கள் மலர்ந்து வருவதை நான் ஆச்சரியத்துடன் கவனித்து சர்வ வல்லவரின் எல்லையற்ற ஞானத்தையும், அவருடைய அன்பையும் நினைத்து உள்ளம் கசிந்தேன். அந்த பில்கோட் கிராமத்தின் கடை வீதியிலும் நாங்கள் தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்ததுடன் அந்த ஊரின் மையப் பகுதியில் மேட்டில் அமைந்திருந்த ஆரம்ப பாடசாலையிலும் அங்கு படித்துக் கொண்டிருந்த 106 மாணவ மாணவியர்களுக்கும் 3 ஆசிரியர்களுக்கும் பிரதிகளை வழங்கினோம். பில்கோட் ஊருக்கு அப்பால் தனித்திருந்த உயர் நிலைப் பள்ளிக்குச் சென்று அங்கு கல்வி பயின்ற 100 மாணவர்களுக்கும் 5 ஆசிரியர்களுக்கும் சுவிசேஷ பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினோம். ஊரை விட்டுத் தனித்திருக்கும் அந்தப் பள்ளியின் படத்தையும், அழகான பில்கோட் கிராமத்தையும், பூக்கள் மலர்ந்து நிற்கும் இலையுதிர்ந்த பழ மரங்களையும், நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

நாங்கள் சுமார் 10 நாட்கள் பேஜ்நாத் என்ற இடத்திலிருந்து அதைச் சுற்றிலுமுள்ள அநேக கிராமங்களுக்குச் சென்று கர்த்தருடைய கிருபையால் ஆயிரக்கணக்கான கர்த்தருடைய பிரசுரங்களை மக்களுக்கும் பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கும் ஜெபத்தோடு வழங்கினோம். நாங்கள் சென்று சுவிசேஷம் அறிவித்த கிராமங்கள், பள்ளிகள் போன்றவற்றை நாங்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் நோட்டுப் புத்தகத்தில் கிரமமாக எழுதிக் கொண்டோம். அவை அனைத்தையும் அங்கு செய்யப்பட்ட ஊழியங்களையும் ஞாபகத்துக்கு கொண்டு வந்து திரும்பவும் இங்கு எழுதி உங்களுக்கு தெரிவிப்பது என்பது முற்றும் கூடாத காரியமாகும். தேவப் பிள்ளைகளாகிய உங்களுக்கு அவைகளை எல்லாம் சுருக்கி இரத்தினச் சுருக்கமாக சில வரிகளாக எழுதியிருக்கின்றேன்.

செய்யப்பட்ட ஊழியங்கள் பலவும் மறைவாக உள்ளன. நம்முடைய பிரயாசங்கள் யாவற்றின் பலனையும் நாம் முடிவில்லாத நித்தியத்தில் பரலோகில் ஓர் நாள் காண்போம். எங்களுடைய பிரயாணங்களில் எங்கள் வாகனங்களை ஆங்காங்கு நிறுத்தி தேவனுடைய பிரசுரங்களை நாங்கள் மக்களுக்கு விநியோகிப்பதையும், தனிப்பட்ட ஆத்துமாக்களுக்கு சுவிசேஷம் கூறுவதையும், பள்ளிக் குழந்தைகளுக்கு சுவிசேஷம் கொடுக்கும் காட்சிகளையும், எங்களுடைய கரங்களிலிருந்து தேவனுடைய பிரசுரங்களை பலதரப்பட்ட மக்கள் பெற்று ஆசை ஆவலோடு படிக்கும் காட்சிகளையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

இந்த எளிய தேவ ஊழியத்திற்காக நீங்கள் தியாக அன்போடு அளித்த காணிக்கைகள் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமைக்காக எவ்வண்ணமாக செலவிடப்பட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், அதற்காக ஆத்தும பாரத்தோடு ஜெபிக்க வேண்டும் என்ற ஒரே தேவ அன்பின் நோக்கத்தோடு ஊழியம் சம்பந்தப்பட்ட சில படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பேஜ்நாத் என்ற இடத்தை மையமாகக் கொண்டு நாங்கள் செய்த ஊழியங்களுக்காக, எங்களுடைய கரங்களிலிருந்து ஆண்டவருடைய பிரசுரங்களைப் பெற்றுக் கொண்ட ஏராளமான பொது மக்கள், பல நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்களுக்காகவும், தனிப்பட்ட விதத்தில் நாங்கள் சந்தித்து சுவிசேஷம் அறிவித்த மக்களுக்காகவும் தொடர்ந்து அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். அதற்கான பிரதி பலனை அன்பின் ஆண்டவர்தாமே இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்குத் தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

 


 
 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM