என் அருமைப் பிள்ளையே,
என் பரலோகக் கதவு எப்பொழுதும்
உனக்குத் திறந்தே இருக்கின்றது.

இருளும் குளிருமான அந்த இரவு காலத்தில் என்னை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இரயில் மிக விரைவாகக் காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. இரயிலின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு வெளியே நான் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டுத் தயாராக ஆயத்த நிலையில் நின்று கொண்டிருந்தேன். நான் எதிர் நோக்கியவற்றை உலகம் எனக்குத் தரக் கூடாமற் போனமையால் என் வாழ்க்கை எனக்குக் கசந்து போனமையாலேயே நான் இந்த இறுதி முடிவுக்கு வந்திருந்தேன்.

என் பெற்றோருக்கு நானே கடைசிப் பிள்ளை. எனது மூத்த அண்ணன் ஒரு டாக்டர் ஆனபடியால், குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நான் மருத்துவக் கல்வியையே தெரிந்து கொள்ள வேண்டும் என்று என்னை ஊக்குவித்தனர். அவர்கள் எல்லாரும் ஏகமாக மீண்டும், மீண்டும் இக்காரியத்தை என்னிடம் வற்புறுத்திக் கூறிக்கொண்டிருந்தமையால் இறுதியில் நான் அவர்களுக்கு இணக்கம் தெரிவித்தேன்.

பள்ளி இறுதி வகுப்பின் அரசாங்கத் தேர்வில் நான் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று குறிப்பாக ஐந்து பாடங்களில் சிறப்பு நிலையில் தேர்ச்சியடைந்திருந்தேன். இதினிமித்தம் என் பெற்றோருக்கும், இனத்தவருக்கும், எனக்கும் எப்படியாகிலும் ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமென்ற அசையாத நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. இதற்கிடையில் நான் பி.எஸ்ஸி., பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்திருந்து அதில் சேர்ந்திருந்தேன். பி.எஸ்ஸி பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில்தான் வேலூர் மருத்துவக் கல்லூரிக்கு நான் விண்ணப்பித்திருந்தேன். "நீர் என்னை ஒரு டாக்டராக ஆக்கும் பட்சத்தில் நான் எனது மருத்துவக் கல்வியைத் தம்முடைய நாம மகிமைக்கு மாத்திரமே செலவிடுகின்றேன்" என்று நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

1978 ஆம் ஆண்டு மே மாதம் நான் மருத்துவக் கல்வித் தேர்வுக்கான எழுத்து முறை பரீட்ஷைகளை எழுதியிருந்தேன். உண்மையில் அவை எனக்கு மிகவும் கடினமானவைகளாகவே இருந்தன. எனது சில சிநேகிதிகளும், உறவினர்களும் பரீட்சை வினாக்கள் மிகவும் கடினமானவைகளானபடியால் நீ தேர்ச்சியடைதல் கடினமான காரியம் என்று கூறி என்னை சோர்படையப் பண்ணினார்கள்.

ஆனால் நான் "ஆண்டவரே, நான் ஒரு டாக்டராக வேண்டுமென்பது தேவரீருடைய திருவுளச் சித்தமாக இருக்கும் பட்சத்தில் தயவு செய்து இந்த எழுத்துத் தேர்வில் எனக்கு வெற்றியைத் தந்தருளும்" என்று ஜெபித்துக் கொண்டே இருந்தேன்.

ஜூன் மாதத்தில் எனது பி.எஸ்ஸி பரீட்சை முடிவுகள் வெளி வந்தன. பரீட்சை முடிவு எனக்கு ஏமாற்றத்தையும், மனமடிவையும் அளித்தது. காரணம் யாதெனில், நான் எதிர் பார்த்ததற்கு முற்றும் மாறாக நான் இரண்டாம் வகுப்பிலேயேதான் தேர்ச்சி பெற்றிருந்தேன். நான் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படித்திருந்தபோதினும் நான் எதிர்பார்த்த முதல் வகுப்பை அடையாமற் போனபடியால் "ஆண்டவரே நீர் ஏன் எனக்கு முதல் வகுப்பை தரவில்லை" என்று அவரிடத்தில் முறையிட்டேன்.

அடுத்த நாள் வேலூரிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. அதை நான் பிரித்துப் பார்த்த போது ஆனந்தப் பரவசத்தின் மிகுதியால் துள்ளிக் குதித்தேன்.

"தந்தியின் விபரம் என்ன?" என்று எனது தாயார் என்னிடம் கேட்டார்கள்.

"வேலூரில் நடந்த மருத்துவக் கல்லூரிப் படிப்பிற்கான எழுத்து முறைப் பரீட்சையில் நான் தேர்ச்சிப் பெற்று விட்டபடியால் நேர் முகத் தேர்வுக்காக நான் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றேன்" என்று கூறி சந்தோச மிகுதியால் கூச்சலிட்டேன்.

"கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று அம்மாவும் ஆச்சரியத்துடன் கூறினார்கள்.

ஜூலை மாதம் நான் மூன்று நாட்கள் நேர் முகத் தேர்வுக்காக வேலூர் சென்றிருந்தேன். என்னோடு 120 பேர் அந்த தேர்வில் பங்கு பெற்றனர். ஆனால் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய எண்ணிக்கை 60 பேர்கள் மாத்திரமேதான். அந்த அறுபது பேர்கள் யாராயிருக்கக் கூடும்?

15 ஆம் தேதி சாயங்காலம் முடிவுகள் வெளியாயிற்று. என்னுடன் வேலூருக்குத் துணையாக வந்த எனது சகோதரன் "நீ தெரிந்தெடுக்கப்பட்டு விட்டாயா?" என்று என்னைக் கேட்டான். எனது கண்ணீரை என் பெலன் கொண்ட மட்டும் உள்ளடக்கிக் கொண்டு "இல்லை" என்று பதிலளித்தேன்.

அடுத்த நாள் காலையில் மிகவும் வியாகுலம் நிறைந்த உள்ளத்துடன் வேலூரிலிருந்து நாகபுரிக்கு நான் திரும்பலானேன். நான் மேற்கொண்ட பயணங்களிலெல்லாம் மிகவும் மன வேதனை நிறைந்த பயணமாக அது அமைந்திருந்தது. நான் வீடு வந்து சேர்ந்ததைக் கண்ட உற்றார் உறவினர் அனைவரும் ஆச்சரியத்தால் பிரமித்தார்கள். நான் வெற்றி பெற்று விடுவேன் என்று மிக உறுதியாக எண்ணக் கனவுகள் கண்டு கொண்டிருந்த அவர்களின் மனக்கோட்டைகள் அனைத்தும் நொறுங்கி மண் மேடுகளாயின.

"நடந்தது என்ன?" என்று அவர்கள் என்னிடம் விசாரித்தார்கள். எனக்கோ அவர்களுக்கு பதில் சொல்ல வாயில் வார்த்தைகள் இல்லாதவளாக இருந்தேன்.

"அவள் ஆங்கிலத்தில் திறமை குன்றியவள், ஆகவேதான் அவள் தேர்ந்தெடுக்கப்படாமல் கைவிடப்பட்டுவிட்டாள்" என்று சிலர் கூறினர்.

"மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில் உடல் நலக் குறைவினால் அவள் தள்ளப்பட்டிருக்கலாம்" என்றனர் வேறு சிலர்.

"அவள் துரதிர்ஷ்டசாலி" என்றனர் மற்றும் பலர்.

இந்த வார்த்தைகளை எல்லாம் செவிமடுத்துக் கேட்க, கேட்க என் சஞ்சலம் எனக்குள் அதிகரித்தது. இவைகள் எல்லாம் ஏன் என்னுடைய வாழ்க்கையில் வந்து சம்பவிக்க வேண்டும்? என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. கடந்த காலங்களில் நான் தேவனிடம் ஏறெடுத்த ஜெபங்களை எல்லாம் என் நினைவுக்குக் கொண்டு வந்து பெருமூச்செறிந்தேன். தேவன் என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கவில்லையா? அவர் என்னை முற்றும் மறந்துவிட்டாரா? அவர் எனக்காக கவலைப்படுகிறதில்லையா? என்றெல்லாம் நான் எனது வேதனையில் எண்ணித் துயருற்றேன்.

இவை யாவற்றிற்கும் மத்தியில் நான் என் உள்ளத்தை மற்றொரு நம்பிக்கையால் ஆறுதல் படுத்திக் கொண்டேன். மீராஜ் பட்டணத்திலுள்ள வான்லஸ் ஆஸ்பத்திரிக்கு நான் விண்ணப்பப் பாரம் அனுப்பியிருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் மீராஜ் மருத்துவக் கல்லூரிக்கு வான்லஸ் ஆஸ்பத்திரியின் சிபாரிசின் பேரில் 3 நபர்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம்.

எங்களது மாவட்ட தலைமை குருவானவரிடம் மீராஜ் வான்லஸ் ஆஸ்பத்திரி தலைமை கண்காணிப்பாளருக்குச் சிபாரிசு கடிதத்தை வாங்கிக் கொண்டு எனது பெற்றோருடன் மீராஜ் நகருக்கு நான் புறப்பட்டுச் சென்றேன்.

நாங்கள் கொண்டு சென்ற சிபாரிசு கடிதத்தைப் பிரித்துப் படித்த ஆஸ்பத்திரி தலைமை கண்காணிப்பாளர் என்னைப் பார்த்து "உனக்கு நான் எவ்வித உதவியும் செய்ய இயலாதவனாயிருப்பதற்காக வருந்துகின்றேன். வட இந்திய திருச்சபையில் (Church of North India) உள்ளவர்களுக்குத்தான் முதலிடம் அளிக்கப்படும்" என்று கூறிவிட்டார்.

இந்த வார்த்தைகளைக் கேட்கவும் அந்த மனிதர் மேலும் வட இந்திய திருச்சபை மீதும் என் இதய வேதனையின் காரணமாக எனக்குக் கசப்புணர்வுதான் உண்டானது.

என் மனம் கடுஞ்சஞ்சலத்தால் தாக்குண்டது. எனது பெற்றோருடன் மிகுந்த ஏமாற்றத்தோடு நான் ரயிலில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். என்னோடிருந்த எனது பெற்றோரும் மிகுதியும் ஏமாற்றமடைந்திருந்தனர். என் பெற்றோர்கள் என்னோடு இருந்தபோதினும் என் உள்ளத்தின் குமுறலையும், கொந்தளிப்பையும் அவர்கள் அறிய இயலவில்லை. என் வாழ்க்கையையே இருள் சூழ்வதை உணர்ந்தேன். நூற்றுக்கணக்கான நினைவுகள் என் உள்ளத்தைத் தொட்டுச் சென்றன.

இவ்வுலகிலுள்ள மாந்தர் அனைவரும் என்னை இழிவாக எண்ணுகின்றனர். தேவனும் என்னை நேசிக்காமல் கைவிட்டு விட்டார். இனி நான் செய்யக் கூடியது யாது? எனது வருங்காலம், எனது வேலை வாய்ப்பு பற்றிய நிலை யாது? ஓடிக் கொண்டிருக்கும் ரயில் பெட்டியின் கதவைத் தவிர இவ்வுலகில் அனைத்துக் கதவுகளும் எனக்கு மூடப்பட்டு விட்டன. இரவின் பிந்திய மணி நேரமது. எனது பெற்றோரும் எங்கள் பெட்டியிலிருந்த இதர பயணிகளும் ஆழ்ந்த உறக்க நிலையிலிருந்தனர். நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளுவதென்ற இறுதி தீர்மானம் எடுத்தேன். உடனே நான் எனது இருக்கையிலிருந்து எழும்பி ரயிலின் கதவை நோக்கிச் சென்று திறந்த கதவுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தேன். என்னைச் சுமந்து சென்ற ரயில் நடு இரவின் இருளைப் பிழந்து கொண்டு கடும் வேகத்தில் ஓட்டம் பிடித்துக் கொண்டிருந்தது. ஜீவனத்திற்கும், மரணத்திற்கும் இடையிலான பெரும் போராட்டத்தின் வேளை அது. பக்கவாட்டுக் கம்பிகளை பற்றியிருக்கும் கரங்களைக் கண் இமைக்கும் நேரத்திற்கு விட்டுவிட்டால் நொடிப் பொழுதில் என் சரீரம் உருக்குலைந்து சிதைந்து அத்துடன் எனது நம்பிக்கையற்ற வாழ்வின் காரியம் முற்றுப் பெறும். இருதயத்தின் சொல்லொண்ணா கசப்பின் வேதனையால் கரங்களை நழுவ விடவிருந்த கடைசி வேளையில் ஏதோவொன்று நிகழ்ந்தது. ஆம், வானத்தையும் பூமியையும் படைத்த ஜீவனுள்ள தேவனுடைய அன்பின் குரல் என்னை நோக்கி வந்தது. அந்த அன்பின் கர்த்தரை நான் எனது மாம்ச பிரகாரமான கண்களால் அந்த வேளை காணக்கூடாதவளாயினும் அவர் என் அருகாமையில் இருப்பதை நான் நன்கு உணர்ந்தேன்.

"என் அருமைப் பிள்ளையே" அந்த அன்பின் தேவனின் குரல் இவ்வாறு ஒலிக்கத் தொடங்கியது. "அதைரியங்கொள்ளாதே, உலகத்தின் எல்லாக் கதவுகளும் உனக்கு அடைபட்டுப்போய் விட்டதாக உனக்குத் தோன்றுகின்றது. ஆனால், என்னுடைய பரலோகக் கதவு எப்பொழுதும் உனக்குத் திறந்தே இருக்கின்றது என்பதனை நீ கவனிக்க வேண்டும்" என்று ஆண்டவர் என்னிடம் பேசினார்.

தேவனுடைய அந்த அன்பின் குரல் என் உள்ளத்தைக் கவ்வி வைத்திருந்த இருளின் அந்தகாரத்தையும், அவ நம்பிக்கையையும் என்னிலிருந்து விரட்டியடித்தது. அன்பின் தேவன் உலகம் கொடுக்கக் கூடாத தமது தேவ சமாதானத்தால் அந்த இரவின் பிந்திய வேளை என்னை முழுமையாக நிரப்பினார். எனது தற்கொலை எண்ணம் உடனே என்னை விட்டு மறைந்து விட்டது. எனது வருங்கால வாழ்வை பூரண தேவ சமாதானத்தோடு என்னை ஆட்கொண்ட அன்பின் ஆண்டவரின் கரங்களில் நிச்சயமான நம்பிக்கையோடு ஒப்புக் கொடுத்தவளாக எனது ரயில் பெட்டிக்குள் திரும்பச் சென்று பால் மணம் மாறாத ஒரு குழந்தையைப் போல மிகுந்த தேவ சமாதானத்தோடும், சந்தோசத்தோடும் எனது நேச இரட்சகர் இயேசு அப்பாவின் அரவணைப்பில் அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்தேன். கர்த்தர் ஒருவருக்கே துதி உண்டாவதாக.

(Courtesy :- LIGHT OF LIFE Magazine, Mumbai)


 
 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM