(அவிசுவாசம், ஒரு கிறிஸ்தவனை மிகவும் சுலபமாக எரி நரகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லமையுடையதாயிருக்கிறது என்றும், அந்த கொடிய அவிசுவாசம் நமது கிறிஸ்தவ வாழ்வில் கிரியை செய்ய எந்த ஒரு நிலையிலும் நாம் இடம் அளித்துவிடக்கூடாது என்றும் "மோட்ச பிரயாணம்" என்ற பரிசுத்த வேதாகமத்துக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்து தேவ மக்களால் போற்றப்படும் மாசிறந்த பிரபந்தத்தை எழுதிய இங்கிலாந்து தேச தேவ பக்தன் ஜாண் பன்னியன் என்பவர் எழுதியிருக்கின்றார். அவிசுவாசத்துக்கு அந்த தேவ பக்தன் கொடுக்கும் பொருத்தமான பெயர் "வெள்ளைப் பிசாசு" என்பதாகும். அந்த வெள்ளைப் பிசாசைக் குறித்து அவர் எழுதிய ஆங்கிலச் செய்தி ஒன்றை உங்களுடைய ஆசீர்வாதத்திற்காக மொழிபெயர்த்துத் தருகின்றேன். மிகுந்த ஜெபத்தோடும், பொறுமையோடும் வாசித்து உங்கள் ஆவிக்குரிய வாழ்வுக்கு பிரயோஜனமாக்கிக் கொள்ளுங்கள். கர்த்தர் இந்தச் செய்தியை உங்களுக்கு ஆசீர்வதித்துத் தருவாராக)
நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள இயேசு கிறிஸ்துவண்டை வரும் ஞான போதனையை அவிசுவாசமானது "பாவம்" என்று நமக்கு தெரிவிக்கின்றது. எத்தனை துரோகம் பார்த்தீர்களா? தவறான அந்தக் கொடிய போதகம் தான் பாவி இயேசுவண்டை வருவதற்கு ஒரே ஒரு இடறலாகவும், மிகப் பிரதானமான தடையாகவும் இருக்கின்றது. தேவனுடைய வார்த்தையானது "என்னிடத்தில் வாருங்கள்" என்று அழைக்கவில்லையா? "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" என்று அது சொல்லுகிறதில்லையா? அப்படியிருக்க, எந்த ஒரு பாவம் பாவிகளை இயேசு இரட்சகரண்டை வரவிடாமல் தடுத்து நிறுத்துகின்றது? ஆம், அந்தப் பாவம்தான் அவிசுவாசம் என்பதாகும். விசுவாசத்தால் நாம் இயேசுவண்டை வருகின்றோம். ஆனால், அவிசுவாசமானது நாம் அவரண்டை வராதபடி நம்மை தடுத்து நிறுத்தி விடுகின்றது. அதின் காரணமாக அந்த ஆத்துமா தேவனைவிட்டு விலகிச் சென்று விடுகின்றது. அதைச் செய்வதற்கு அனுகூலமாக முதலாவது தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையை அந்த ஆத்துமாவிலிருந்து அப்புறப்படுத்திவிடுகின்றது. இந்தக் காரியத்தை நயவஞ்சகமாகச் செய்வதால் மிகவும் சுலபமாக அது செய்துவிடுகின்றது.
இந்தப் பாவத்தை வெள்ளைப் பிசாசு என்று நாம் அழைக்கலாம். ஏனெனில், அது அடிக்கடி நமது விலையேறப்பெற்ற ஆத்துமத்தில் வெளிப்படையாக ஒரு ஒளியின் தூதனைப் போலவும், பரலோகத்தின் பயபக்தியான ஆலோசகனைப் போலவும் பாசாங்கு செய்து நடித்து நமது ஆத்துமாவுக்கு நீசத்தனமான தீங்குகளை விளைவித்து விடுகின்றது. இந்தக் காரியங்களை என் மனதில் கொண்டு உங்களுக்கு சில தேவ ஆலோசனைகளைச் சொல்ல ஆசைப்படுகின்றேன்.
1. மற்ற எல்லாப் பாவங்களைக் காட்டிலும் அவிசுவாசம் என்ற இந்தப் பாவமானது தனது தாக்குதல்களின் போது தனது காரியத்தை பாவம் அறியாத நிரபராதியைப் போல நியாயப்படுத்திக் காண்பிக்கும். தற்போதுள்ள மிகுதியான பாவ உணர்வு, தகுதியில்லாத நிலைமை, ஆயத்தமற்ற தன்மை, குறைவான மனத்தாழ்மை, கடினமான இருதயம் யாவையும் காண்பித்து பாசாங்கு செய்து ஆத்துமாவானது கிறிஸ்து பெருமானை கிட்டிச் சேரவிடாமல் வெகு தொலைவிலேயே வைத்துக் கொள்ளும்.
2. இந்த அவிசுவாசம் என்ற பாவமானது மனச்சாட்சியுடன் மிகவும் சம்பந்தப்பட்ட ஒரு காரியமாகும். இயேசுவண்டை வரும் பாவியின் மனச்சாட்சியைப் பார்த்து உன்னிடத்தில் எந்த ஒரு நன்மையுமே இல்லை, நீ மிகவும் பேதமை உள்ளவன், கடின இருதயமுள்ள பாவி, குருடன், இயேசுவால் ஒரே ஒரு தடவை கூட உன்னைக் கவனிப்பதற்கு தகுதியற்றவன். இந்தச் சூழ்நிலையில் இயேசுவண்டை வருவதற்கு உனக்கு என்ன நியாயம் உண்டு என்று அவிசுவாசம் அந்த ஆத்துமாவைக் கேட்கும்.
3. மற்ற எல்லாப் பாவங்களைக் காட்டிலும் இந்தப் பாவமானது நித்திய ஜீவனை சுதந்தரிக்க இயேசுவண்டை வரும் ஆத்துமாவின் காதுகளில் தொடர்ச்சியாக ஆண்டவருடைய உண்மையைக் குறித்து சந்தேகங்களை எழுப்பிக் கொண்டே இருக்கும். கிறிஸ்துவானவர் பாவியை ஏற்றுக் கொள்ளவும், அவனை அங்கீகரிக்கவும் மனதுடையவராக இருப்பாரா என்ற சந்தேகக் கணையை அது தொடுக்கும். அவிசுவாசத்தைப்போன்று மற்றெந்த பாவமும் இந்தக் காரியத்தை அத்தனை தந்திரமாகச் செய்ய இயலாது.
4. தேவ ஆவியானவர் நம்முடைய இருதயத்தை ஸ்திரப்படுத்தவும், விசுவாசத்தில் வேரூன்றி நிற்கவும், நம்மை ஆறுதல்படுத்தவும் கொண்டு வரக்கூடிய எல்லா வாக்குத்தத்தங்களுக்கும் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து அதை தடை செய்ய எந்த நேரமும் ஆயத்த நிலையிலிருக்கும் கொடிய வஞ்சகன் இந்த அவிசுவாசம்தான். அவிசுவாசத்தின் நய வஞ்சகத்தை அறியாத ஏழை ஆத்துமா சற்று கவலையீனமாக இருக்கும் வேளையில் ஒரு சிறிய நிர்ப்பந்தம், அல்லது மறுப்பு, அல்லது மதிநுட்பமான ஒரு தந்திரத்தின் மூலமாக அந்த வாக்குத்தத்தால் எந்த விதத்திலும் அந்த ஆத்துமா நன்மையடையாமல் போக வகை செய்து விடும்.
5. மற்ற எல்லா பாவங்களைக் காட்டிலும் இந்தப் பாவமானது சரீர உணர்வுகளை மிகவும் சார்ந்த ஒன்றாகும். இரட்சகரண்டை வரும் பாவியானவன் தன்னில் கிரியை செய்கின்ற பாவத்தின் தன்மையையும், அனைத்துப் பாவங்களையும் அவைகளின் நிர்ப்பந்தங்களையும் தனது மாம்ச சரீரத்தில் உணருகின்றான். அத்துடன் அதற்கான நியாயத் தீர்ப்பையும், தேவ கோபாக்கினையையும் அடிக்கடி சிந்திக்கின்ற அவன் அப்படியே நிலை தடுமாறி நின்று யோசிக்கின்றான். அந்தச் சமயத்தில் அவிசுவாசம் அவனைப் பார்த்து உன்னில் கிரியை செய்கின்ற பாவ அசுசிகளின் காரணமாக உனக்கு கிருபையே கிடையாது என்பது உனக்குத் தெரியும். உண்மையில் தேவன் உன்னை நேசிக்கவில்லை. காரணம், அவருடைய கோபம் உன்னில் நிலைத்திருக்கின்றது. இந்த அடிப்படையில் நீ இயேசு கிறிஸ்துவண்டை வந்து எப்படி அவரது முகத்தை பார்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பும்.
6. இந்த அவிசுவாசம் என்ற பாவமானது மற்ற பாவங்களைக் காட்டிலும் நமது ஞானத்தைப் பொறுத்த ஒன்றுமாகும். அந்த சரீர ஞானமானது தனது விவேகத்தின் காரணமாக ஒரு கணம் நின்று தனது ஆத்துமாவைப் பார்த்து "ஆத்துமாவே, ஆத்திர அவசரப்பட்டு கிறிஸ்துவண்டை எடுத்த எடுப்பில் ஓடிவிடாதே, கொஞ்சம் பொறுத்திரு, கொஞ்சம் உன் நிலையில் தரித்து நில், ஆலோசனையின்றி களம் இறங்கிவிடாதே என்று அதை தடுத்தி நிறுத்தி வைக்கின்றது. இந்த ஆபத்தான ஞானம் அவிசுவாசத்தின் உடன் கூட்டாளியாகும்.
7. அவிசுவாசம் என்ற இந்தப் பாவமானது மற்ற அனைத்துப் பாவங்களைக் காட்டிலும் நமது ஜெப வாழ்க்கையை பெலவீனமடையச் செய்து நமது விசுவாசத்தை நிலை குலையச் செய்து, நமது அன்பையும், நமது சுறுசுறுப்பையும், ஆனந்த நம்பிக்கையையும், நமது பரலோக எதிர்பார்ப்புகளையும் ஆட்டம் காணச் செய்து விடுகின்றது. மொத்தத்தில் அது நமது இருதயத்தை தேவனிடமிருந்து அப்பால் எடுத்துப் போடுகின்றது.
8. இறுதியாக, இந்தப் பாவமானது இப்பொழுதும் கூட நமது இருதயத்தில் அநேக இனிமையான மாய்மாலங்களைச் செய்து நமது ஆத்துமாவுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கும் பரலோகத்திலிருந்து இறங்கி வந்த ஒரு பாதுகாப்பாளனைப்போல நமது ஆத்துமாவை மிகுந்த விழிப்போடும், நன்கு போதிக்கப்பட்ட நிலையிலும், யுத்தத்துக்கு ஆயத்தமான நிலையிலும் இருக்கும்படியாக ஆலோசனை கொடுக்கும் அதே வேளையில் நமது ஆத்துமாவைப் பார்த்து "தேவன் உன்னை நேசிக்கின்றார் என்பதைக் குறித்து நிச்சயமுடையவனாயிரு. ஆனால், அதைக் குறித்த எந்த ஒரு தேவனுடைய வாக்குத்தத்தத்தையும் நம்பிவிடாதே. தேவனே உனது இருதயத்தில் வலுக்கட்டாயமாக கிரியை செய்து அந்தக் காரியத்தை உறுதிப்படுத்தும் வரை உனது இரட்சிப்பை உன்னளவில் உறுதிப்படுத்திக் கொள்ளாதே. தேவனுடைய சாட்சியின் கிரியை உன் உள்ளத்தில் அடிக்கடி நடந்து கொண்டிருந்தாலும் உன் இரட்சிப்பின் காரியத்தில் நீ எப்பொழுதும் சந்தேகத்துடனேயே இரு. விசுவாசத்தில் ஜீவிக்காதே, உன் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளின் தூண்டுதல்களின் அடிப்படையில் வாழ்வை கொண்டு செல். காரியங்களை பார்க்க முடியாமலும், உணர முடியாமலும் இருக்கும் வேளைகளில் பயப்படு, அவ நம்பிக்கை கொள். அதற்கப்பால் சந்தேகப்படு, எல்லாவற்றைக் குறித்தும் கேள்விகள் கேட்டுக்கொண்டிரு. அவிசுவாசத்தைக் குறித்த சாத்தானின் ஆலோசனை இதுவாகும். எந்த ஒரு மாசுமறுவற்ற விதமாக சாத்தானால் வடித்தெடுக்கப்பட்ட இந்தக் காரணங்களை எந்த ஒரு ஞானவானான கிறிஸ்தவனாலும் கூட உதறித் தள்ளிவிட முடியாது.
இந்த கொடிய அவிசுவாசத்தை எதிர்க்கும் விசுவாசத்தைக் குறித்த ஒரு உள்ளடக்கமான குறுகிய வர்ணனையை நான் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விளக்குகின்றேன்.
விசுவாசம், தேவனுடைய வார்த்தையை அப்படியே நம்பும். ஆனால், அவிசுவாசமானது அதின் நம்பகத்தன்மையைக் குறித்து கேள்வி கேட்கும். தேவனுடைய வார்த்தை உண்மையாக இருப்பதால் விசுவாசம் அதை நம்பும். அது உண்மையாக இருப்பதால், அவிசுவாசம் அதைக் குறித்து சந்தேகப்படும் (1 தீமோ 4 : 3) (யோவான் 8 : 45) தடைசெய்யக்கூடிய மற்றெல்லாவற்றைக் காட்டிலும் தனக்கு உதவி செய்யக்கூடிய ஏராளமானவைகள் தேவனுடைய வாக்குத்தத்தத்தில் இருப்பதை விசுவாசம் காண்கின்றது. மாறாக அவிசுவாசமானது, தேவனுடைய வாக்குத்தத்தம் அப்படியிருந்தாலும் அது எப்படி நடக்கும் என்று கேள்வி எழுப்புகின்றது (ரோமர் 4 : 19-21, 2 இரா 7 : 2 , யோவான் 3 : 11, 12) கடிந்துகொள்ளுதல்களை ஆண்டவரது உதடுகள் உச்சரித்தாலும் இரட்சகரின் இருதயத்தில் உள்ள அன்பை விசுவாசமானது காண்கின்றது. ஆனால், அவிசுவாசமானது அவருடைய இருதயத்தில் உள்ள கோபாக்கினையை கற்பனை செய்யச் செய்கின்றது (மத் 15 : 22-29, 25 : 24)
கர்த்தர் நமக்குக் கொடுப்பதற்கு தாமதிக்கும் வேளையில் விசுவாசமானது, ஆண்டவருடைய வேளைக்காக காத்திருக்கும்படிக்கு நமது ஆத்துமாவுக்கு உதவி செய்கின்றது. ஆனால், அந்த காத்திருக்கும் வேளைக்கு எதிராக அவிசுவாசமானது போர்க் கொடி உயர்த்தி அனைத்துக் காரியங்களையும் வீசி எறிந்துவிடுகின்றது (சங் 25 : 5 ஏசாயா 8 : 17, 2 இரா 6 : 33) விசுவாசமானது பயங்களின் நடுவில் ஆறுதலை அளிக்கும். ஆனால் அவிசுவாசமானது ஆறுதல்களின் மத்தியில் பயத்தை தோன்றப்பண்ணும் (2 நாளா 20 : 20-21, மத் 8 : 26, லூக் 24 : 25) விசுவாசமானது தேவனுடைய பிரம்பிலிருந்து மதுரத்தை உறிஞ்சி எடுக்கும் ஆனால் அவிசுவாசமானது தேவனுடைய மகா இரக்கங்களிலிருந்து எந்த ஒரு ஆறுதலையும் கண்டு கொள்ளாது (சங் 23 எண்ணாகமம் 12) விசுவாசமானது வாழ்வின் கடினமான பாரங்களை இலகுவாக்கிக் கொள்ளும். ஆனால் அவிசுவாசமானது இலகுவான காரியங்களை கூட நாம் தாங்கிக் கொள்ள இயலாத பார சுமைகளாக்கிவிடும் (மல் 1 : 12, 13) விசுவாசமானது நாம் வீழ்ந்து கிடக்கும் போது நமக்கு உதவி செய்யும். ஆனால் அவிசுவாசமானது நாம் உயர்வில் இருக்கும் போது நம்மை கீழே வீசி எறிந்துவிடும் (மீகா 7 : 8-10, எபி 4 : 11) நாம் ஆண்டவரைவிட்டு வெகு தூரமாக இருக்கும்போது விசுவாசமானது நம்மை அவரண்டை கிட்டிச் சேர்க்கும். அதே சமயம் அவிசுவாசமானது நாம் ஏற்கெனவே ஆண்டவரண்டை நெருங்கியிருக்கும்போது நம்மை அவரைவிட்டு வெகு அப்பால் விலக்கி வைத்து விடும் (எபி 10 : 22, 3 : 12-13)
விசுவாசம் எங்கே ஆளுகை செய்யுமோ அங்கே அது நாம் தேவனுடைய சிநேகிதர்கள் என்று பிரகடனம் செய்யும். ஆனால், அவிசுவாசம் எங்கே அரசாட்சி செய்யுமோ அங்கே அது நாம் ஆண்டவருடைய சத்துருக்கள் என்று முழக்கமிடும் (எபி 3 : 18, வெளி 21 : 8) விசுவாசம் ஒரு மனிதனை தேவனுடைய கிருபைக்குள் வைத்திருக்கும். ஆனால், அவிசுவாசமானது அவருடைய கோபாக்கினையின் பிடியில் அவனை அடக்கி வைத்திருக்கும் (ரோமர் 3 : 24-26, எபேசியர் 2 : 8, யோவான் 3 : 36, 1 யோவான் 5 : 10, எபிரேயர் 3 : 17, மாற்கு 16 : 16, யோவான் 8 : 24) விசுவாசமானது நமது இருதயத்தை சுத்திகரிக்கின்றது. ஆனால், அவிசுவாசமானது நமது இருதயத்தை கறைப்பட்டதாகவும், களங்கமுடையதாகவும் வைக்கின்றது (அப் 15 : 9, தீத்து 1 : 15-16) விசுவாசத்தால் கிறிஸ்துவின் நீதி நமக்கு ஈவாகக் கிடைக்கின்றது. ஆனால், அவிசுவாசமானது நம்மை நியாயப் பிரமாணத்திற்குக் கீழாக நாம் மடிந்து போகும்படியாக நம்மை அடைத்துப் போடுகின்றது (ரோமர் 4 : 23-24, 11 : 32 கலா 3 : 23)
விசுவாசமானது நம்முடைய கிரியைகளை கிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு அங்கீகாரமுடையதாகச் செய்கின்றது. ஆனால், அவிசுவாசத்தினால் உண்டாகிறதெல்லாம் பாவமாக இருக்கின்றது. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருக்கிறது கூடாத காரியம் (எபிரேயர் 11 : 6, ரோமர் 14 : 23, எபி 11 : 4) விசுவாசம் நமது ஆத்துமாவுக்கு சமாதானத்தையும், ஆறுதலையும் தருகின்றது. ஆனால் அவிசுவாசமானது கலக்கத்தையும், அமைதியின்மையையும், கொந்தளிக்கும் கடலைப்போல அலைகளுக்கு மேல் அலைகளாக குழப்பங்களையும் உண்டாக்குகின்றது (ரோமர் 5 : 1, யாக் 1 : 6)
விசுவாசமானது அழகையும், சௌந்தரியத்தையும் கிறிஸ்து இரட்சகரில் நம்மைக் காணச் செய்கின்றது. ஆனால், அவிசுவாசமானது அவரில் எந்த அழகு, உருவம், விரும்பத்தக்க ரூபத்தையும் நமக்குக் காண்பிப்பதில்லை (1 பேதுரு 2, ஏசாயா 53 : 1-3) விசுவாசம் நமக்கு நியாயப் பிரமாணம், பாவம், மரணம், பிசாசு மற்ற எல்லா தீமைகளிலிருந்தும் ஜெயத்தைக் கொடுக்கின்றது. ஆனால், அவிசுவாசமானது இவைகள் யாவுக்கும் நம்மை ஒப்புவிக்கின்றது (1 யோவான் 5 : 4, லூக்கா 12 : 46)
விசுவாசமானது, உலகத்தில் காணப்படுகிறவைகளை விட காணப்படாதவைகளின் மேல் நமக்கு பரம நாட்டத்தை உண்டாக்குகின்றது. ஆனால் அவிசுவாசமானது இனிவரும் பரலோகக் காரியங்களைப் புறக்கணித்து, இந்த உலகத்திலுள்ள அநித்தியமான வாழ்வினுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றது (2 கொரி 4 : 18 , எபி 11 : 24-27, 1 கொரி 15 : 32)
விசுவாசமானது தேவனுடைய வழிகளை உத்தமமும், செம்மையானதுமாக ஆச்சரியத்துடன் அங்கீகரிக்கின்றது. ஆனால் அவிசுவாசமானது தேவனுடைய வழிகளை சுமக்க முடியாத பாரமானவைகளாகவும், கடினமானதாகவும் செய்கின்றது (கலா 4 : 6, 2 கொரி 12 : 10, 11, யோவான் 6 : 60, சங் 2 : 3)
விசுவாசத்தினாலே ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை சுதந்தரித்தார்கள். அதே சமயம் அவிசுவாசத்தினாலே ஆரோனோ அல்லது மோசேயோ அல்லது மீரியாமோ அதற்குள் பிரவேசிக்க இயலவில்லை (எபி 11 : 9, 3 : 19) விசுவாசத்தினாலே இஸ்ரவேல் ஜனங்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து சென்றபோதினும் அவர்களில் அநேகர் அவிசுவாசத்தினாலே வனந்திரத்திலே அழிந்தார்கள் (எபி 11 : 29, யூதா 5) அவிசுவாசமான பன்னிரண்டு கோத்திரங்கள் செய்ய முடியாததை கிதியோன் தன்னுடைய விசுவாசத்தால் தனது 300 பேர்களோடும் கொஞ்சம் வெறும் பானைகளோடும் செய்து முடித்து வெற்றி சிறந்தான் (நியா 7 : 16-22, எண் 14 : 11, 14) விசுவாசத்தால் பேதுரு கடலிலே நடந்தார், அதே சமயத்தில் தனது அவிசுவாசத்தின் காரணமாக அவர் கடலில் மூழ்க தொடங்கினார் (மத்தேயு 14 : 22-33)
விசுவாசம், அவிசுவாசம் தொடர்பாக நான் இன்னும் அநேக சம்பவங்களை குறிப்பிட முடியும். சுருக்கமாக இத்துடன் முடிக்கின்றேன். தங்களுக்கு ஒரு ஆத்துமா உண்டென்றும், அதை எந்தவிதத்திலும் காத்துக் கொள்ள வேண்டுமென்றும் விரும்பும் உங்களை நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுவதென்னவென்றால் எந்த ஒரு நிலையிலும் நீங்கள் அவிசுவாசத்துக்கு இடம் கொடுத்து தேவனுடைய நித்திய இளைப்பாறுதலில் பிரவேசியாமல் தேவ கோபாக்கினையின் பாத்திரங்களாக்கிக் கொள்ளாதீர்கள்.
(ஜாண் பன்னியன்) |