அன்று பிலேயாம் - இன்று ஆசீர்வாத பிரசங்கி



"விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும், வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்கு போதனை செய்த பிலேயாம்" (வெளி 2 : 14)

பிலேயாம் என்ற வார்த்தைக்கு "பட்சித்துப் போடுகிறவன்" அல்லது "பீறிப்போடுகிறவன்" என்று அர்த்தமாகும். யோசேப்பின் சகோதரர் அவர்களின் சகோதரனாகிய யோசேப்பை எகிப்துக்குப் போகிற இஸ்மவேலருக்கு விற்றுவிட்டு அவனுடைய பல வருணமான அங்கியை வெள்ளாட்டுக்கடாவை அடித்து அதின் இரத்தத்தில் தோய்த்து அதை அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபிடம் கொடுத்தபோது அவர் "இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்ட மிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான்" (ஆத் 37 : 33) என்று புலம்பி அழுவதை நாம் காண்கின்றோம். அந்த "பீறுண்டு போனான்" என்ற வார்த்தைதான் பிலேயாம் என்ற வார்த்தையின் பொருளாகும்.

இந்த பிலேயாம் மொசொப்பொத்தோமியாவின் ஊராகிய பெத்தோரிலிருந்த பேயோரின் மகன் (உபா 23 : 4) என்று சொல்லப்படுகின்றது. இந்த புறஜாதிக்காரனான, விக்கிரக ஆராதனைக்காரனான மனிதனை தேவன் தமது பிள்ளையாக தெரிந்து கொண்டது நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த மனிதனோடு ஆண்டவர் நேருக்கு நேராகப் பேசி அநேக காரியங்களை செய்து வந்தார் என்று நாம் திட்டமாக நம்பலாம். இவன் ஒரு தேவ மனிதன் என்று மோவாபியர் மற்றும் மீதியானியர்கள் மத்தியில் ஒரு நல்ல பேரும், புகழும் இருந்ததை நாம் அவனுடைய சரித்திரத்தை எண்ணாகமத்தில் வாசிக்கும்போது அறிகின்றோம். "இதோ இந்தப்பட்டணத்திலே ஒரு தேவனுடைய மனுஷன் இருக்கிறார், அவர் பெரியவர், அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்" (1 சாமு 9 : 6) என்று சாமுவேல் தீர்க்கனைக் குறித்து ஒரு சாதாரண வேலைக்காரனுக்கு கூட தெரிந்திருந்தது போல பிலேயாம் என்பவனைக் குறித்தும் அவனுடைய தேசத்தில் யாவரும் தெரிந்து வைத்திருந்தனர். "நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்" (எண் 22 : 6) என்று மோவாபியரின் ராஜா பாலாக் கூறுவதிலிருந்து பிலேயாம் எத்தனையான ஒரு தேவ மனிதன் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அத்துடன் பாலாக்கின் பிரபுக்கள் பிலேயாமுடைய வீட்டிற்கு வந்து அவனுடன் இராத்தங்கியிருந்தபோது சர்வ வல்ல தேவன் பிலேயாமிடத்தில் வந்து அவனுடைய வீட்டில் இருப்பவர்கள் யார்? என்று கேட்கக் கூடிய அளவிற்கு (எண் 22 : 9) அவன் அத்தனையான ஒரு பரிசுத்தனாக இருந்திருந்தான். "பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்யும் பொருட்டு என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக்கூடாது" (எண் 22 : 18) என்று சொல்லும் வார்த்தை நம்மைப் பிரமிக்கப்பண்ணுவதாக இருக்கின்றது. "என் தேவனாகிய கர்த்தர்" என்று பிலேயாம் கூறும் பரவசமான பதத்தை நீங்கள் கவனித்தீர்களா? அதை எல்லாராலும் உச்சரிக்கவியலாது. ஆண்டவரோடு அவனுக்கு அத்தனையான ஒரு நெருக்கமான அன்பு இருந்தது. "தேவனே நீர் என்னுடைய தேவன்" (சங் 63 : 1) என்ற தாவீது இராஜாவின் வார்த்தையும் "என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்" (உன்ன 2 : 16) என்ற சாலொமோன் ராஜாவின் வார்த்தையும், "என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்" (யோவான் 20 : 13) என்று மரியாள் அம்மையார் தேவ தூதர்களிடம் சொல்லும் வார்த்தையும் தேவனோடு அவர்களுக்கிருந்த அவர்களுடைய மிகுந்த வைராக்கியமான நெருக்கமான அன்பை நமக்கு எடுத்துக் காண்பிப்பதாக இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு உன்னதமான அன்பின் உறவில்தான் பிலேயாமும் ஆரம்ப நாட்களில் கர்த்தரோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த நிலையில் காணப்பட்டான்.

அதைப்போலவே தேவ மக்கள் பலரும் தங்களுடைய ஊழிய நாட்களின் ஆரம்பத்தில் தங்களுடைய ஊழியங்களை மாமாட்சியாக கர்த்தருக்கு மகிமையாக செய்ய ஆரம்பித்தார்கள். எளிமையான ஆடை, எளிமையான உணவு, கால்களில் விலை குறைந்த செருப்பு, மிகுந்த மனத்தாழ்மை எல்லாம் அவர்களில் காணப்பட்டது. எந்த ஒரு பண ஆசையும் இல்லாதவர்களாக அவர்கள் காணப்பட்டார்கள். உலக ஆசாபாசங்களுக்கு அவர்கள் எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை, அதின் மேல் அவர்களுக்கு எந்த ஒரு நாட்டமும், தேட்டமும் இல்லாதிருந்தது. சங்கீதக்காரரைப் போல "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு, பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறு விருப்பமில்லை" (சங் 73 : 25) என்ற ஒரு உன்னதமான பரிசுத்த அனுபவத்தில் இருந்தார்கள். ஆனால், நாட்கள் கடந்து செல்லச் செல்ல தேவ ஜனங்கள் அவர்களுடைய ஊழியங்களுக்கு காணிக்கைகளை அள்ளிக் கொட்டக் கொட்ட சாத்தானாம் பிசாசு அந்த திரண்ட ஐசுவரியத்தின் கவர்ச்சிக்கு அவர்களுடைய பரிசுத்தமான இருதயத்தை மெள்ள, மெள்ள அற்புதமாகத் திருப்பி அவர்களைத் தன்னுடைய கைப்பாவைகளாக்கிக் கொண்டான். அந்தப் பண ஆசைதான் பிலேயாமையும் வீழ்ச்சியடையச் செய்தது.

"உம்மை மிகவும் கனம்பண்ணுவேன், நீர் சொன்னதை எல்லாம் செய்வேன்" (எண் 22 : 17) என்று மோவாப் அரசன் பாலாக் சொல்லுகின்றார் என்று மோவாபின் பிரபுக்கள் பிலோயாமிடம் கூறி தங்கள் கரங்களில் கொண்டு வந்த பொக்கிஷங்களை அவனுக்குக் காண்பித்தவுடன் தானே பிலேயாமுடைய இருதயம் பண ஆசைக்குச் சாய ஆரம்பித்தது. அந்தப் பண ஆசையின் காரணமாக அவன் பாலாக்குடைய ஆலோசனையின்படி இஸ்ரவேல் மக்களைத் திரும்பத் திரும்ப சபிக்க முயற்சித்ததை நாம் பார்க்கின்றோம்.

இவை யாவுக்கும் மேலாக பிலேயாம் தன்னைத் தெரிந்து கொண்ட தன் ஆண்டவருக்கு விரோதமாகச் செய்த ஒரு மகா பெரிய கொடிய பாவம் என்னவெனில் தேவனுடைய ஜனமாகிய இஸ்ரவேலரை மோவாபின் குமாரத்திகளோடு வேசித்தனம் பண்ணும்படியான ஒரு பாவ சோதனையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்து, அதின் மூலம் கர்த்தருடைய கோபத்தை மூட்டிவிட்டு அதின் காரணமாக 24000 மக்கள் (எண் 25 : 9) மடிந்து போகத்தக்கதான ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தான் என்பதுதான். இப்படிப்பட்ட ஒரு தீச்செயலைச் செய்யும்படியாகவும் மோவாபின் குமாரத்திகளை தாராளமாக இஸ்ரவேல் மக்களுடன் பழகி அவர்களை பாவத்துக்கு வழிநடத்தும்படியாகவும் பாலாக் அரசனுக்கு துர் ஆலோசனையும் கொடுத்தான். ஆ, பிலேயாம் எத்தனையான வஞ்சகம் பண்ணி தேவ ஜனத்தில் 24000 பேர் எரிநரகத்துக்குச் சென்று நித்திய நித்திய காலமாக நரக அக்கினியில் இருக்க வகைசெய்துவிட்டான்!

 

கவர்ச்சியைக் காண்பிக்கும் ஆசீர்வாத பிரசங்கிகள்

அன்று பிலேயாம் தேவ ஜனத்துக்கு விரோதமாகச் செய்த துரோகச் செயலை நினைக்கும்போது நமது உள்ளம் குமுறுகின்றது. ஆனால் பிலேயாமைவிட இன்றைய ஆசீர்வாத பிரசங்கிகள் மகா ஆபத்தானவர்கள் என்பதை நாம் மறப்பதற்கில்லை. காரணம், அன்று பிலேயாம் தேவ ஜனங்களுக்கு பெண்ணாசையைக் காண்பித்து வெறும் 24000 பேர்களை மட்டும் மடியப்பண்ணினான். ஆனால், இன்று ஆசீர்வாத பிரசங்கிகள் மண்ணாசை, பொன்னாசை, நிலையில்லா சரீர சுகத்தை கர்த்தருடைய ஜனத்துக்கு காண்பித்து திரள் கூட்டம் மக்களை நரகத்துக்கு நேராக வழிநடத்திச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

கவர்ச்சியைக் காண்பிப்பது சாத்தானுடைய கைகண்ட தந்திரமாகும். நமது ஆதி தாயை தேவனால் விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியை கவர்ச்சியாகக் காண்பித்து அவளை வீழ்த்தினான். சிவப்பான பயிற்றங்கூழைக் காட்டி ஏசாவை வீழ்த்தினான். தாமாரின் அழகைக்காட்டி அம்னோனை அழித்தான். நேர்த்தியான பாபிலோனிய சால்வையையும், வெள்ளி, பொன்னையும் காட்டி ஆகானை கற் குவியலுக்குள் புதையுண்டு மடியப்பண்ணினான், பத்சேபாளின் அழகைக் காட்டி தாவீது இராஜாவை தன் தேவனுக்கு புறமுதுகு காட்டி ஓடப்பண்ணினான். 30 வெள்ளிக்காசைக் காட்டி யூதாஸ் காரியோத்தை நான்றுகொண்டு சாகப்பண்ணினான். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியின் கைகண்ட கலை கவர்ச்சியைக் காண்பித்து ஆத்துமாக்களை அழிப்பதுதான்.

இன்றைய ஆசீர்வாதப் பிரசங்கிகளும் சாத்தானுடைய கவர்ச்சியையே தேவ ஜனங்களுக்கு காண்பிக்கின்றனர். தங்களுடைய கூட்டங்களுக்கு வருவோர் பெற்றுக் கொள்ளுகின்ற சரீர சுகங்களை அவர்கள் தங்கள் பத்திரிக்கைகளில் சாட்சியுடன் கூடிய புகைப்படங்களுடன் பிரமாதமாக வெளியிடுகின்றனர். ஏன் அந்த காரியங்களை அவர்கள் வெளியிட வேண்டும்? அவர்கள் எழுதியுள்ள அந்த சாட்சிகள் கடைசி வரை நோய் நொடியின்றி வாழ முடியுமா? அப்படிச் சாட்சி வெளியிட்டவர்களை சில மாதங்கள் அல்லது மிஞ்சிப்போனால் ஒரு ஆண்டு சென்ற பின்னர் நீங்கள் நேரில் போய்க் கேட்டுப் பாருங்கள். இப்பொழுது அவர்கள் மற்றொரு நோயினால் தாக்குண்டு மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். சரீரம் நோய் நொடிகளுக்கு உரியது. அதிலிருந்து தப்பிச் செல்ல எவராலும் இயலாது. வயது செல்லச் செல்லச் சரீர பெலன் ஒடுங்க ஒடுங்க நோய் நொடிகள் தானாக வந்து தொத்திக் கொள்ளுகின்றன. இந்த உலகத்தில் தோன்றியவர்கள் யாவரும் நோய் பிணிகளினால் தாக்குண்டு மரித்து மறுமைக்குள் கடந்து சென்றிருக்கின்றனர். மாபெரும் எலிசா தீர்க்கன் கூட மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான் (2 இரா 13 : 14) என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. மூன்றாம் வானம் வரை சென்று வந்த பரிசுத்த பவுல் அடிகளார் கூட தனது சரீர நோய் துன்பத்தில் கஷ்டப்பட்டு மூன்று தடவைகள் அது தன்னைவிட்டு நீங்கும்படியாக தன் ஆண்டவரிடம் கெஞ்சினதாகவும் அதிலிருந்து அவருக்கு ஒரு விடுதலை கிடைக்கவில்லை என்றும் நாம் கர்த்தருடைய வேதத்தில் ஆச்சரியத்துடன் காண்கின்றோம் (2 கொரி 12 : 8)

காரியங்கள் இப்படியிருக்க ஆசீர்வாத பிரசங்கிகள் நிலையில்லா சரீர சுகத்திற்கு மிகவும் முக்கியமான ஸ்தானத்தைக் கொடுத்து அந்தக் கானல் நீர் சாட்சிகளை தங்கள் பத்திரிக்கைகளில் ஏன் புகைப்படங்களுடன் வெளியிடுகின்றனர்? எல்லாம் காணிக்கை வரவுக்கான அவர்களின் தந்திர நடபடிகள்.

தங்களுடைய ஊழியங்களுக்கு காணிக்கை கொடுக்கும் மக்கள் பெற்றுக் கொள்ளும் ஆசீர்வாதங்களை அவர்கள் சாட்சியோடும், படங்களோடும் வெளியிடுகின்றனர்? ஏன் எதற்காக அப்படிச் செய்கின்றனர் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? ஆம் அதை வாசிக்கின்ற மற்ற மக்களும் அந்த சாட்சியினால் கவரப்பட்டு தங்களுக்கு காணிக்கை கொடுக்க முன் வரவேண்டும் என்ற தந்திர நோக்கத்தோடு அப்படிச் செய்கின்றார்கள். தங்கள் ஆண்டவர் வானத்தையும், பூமியையும் படைத்த எப்படிப்பட்ட சர்வ வல்ல தேவன் என்பதையும், தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் எத்தனையான சமீபத்திய தேவன் என்பதையும், அவருடைய பரிசுத்த ஊழியத்தைச் செய்ய இப்படிப்பட்ட இழிவான காரியங்களைச் செய்ய எந்த ஒரு அவசியமும் கிடையாது என்ற சத்தியத்தை உணராதபடியினால் இப்படிச் செய்கின்றார்கள்.

 

ஆசீர்வாத பிரசங்கி ஆபத்தான பிரசங்கி

கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தில் கள்ளத் தீர்க்கத்தரிசிகளைக் குறித்தும், கள்ள அப்போஸ்தலரைக் குறித்தும், கள்ளப் போதகர்களைக் குறித்தும், கபடமுள்ள வேலையாட்களைக் குறித்தும், சபையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்களைக் (அப் 20 : 29) குறித்தும் நாம் வாசிக்கின்றோம். நம் நடுவே இருந்து மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், சிலுவையையும், சிலுவைப்பாதையையும், இடுக்கமான மோட்சப் பாதையையும், இந்த உலகத்தில் தேவ ஜனத்திற்குள்ள பாடுகள் உபத்திரவங்களைக்குறித்தும் பிரசங்கிக்காமல் ஆசீர்வாதம், ஆசீர்வாதம், எதற்கெடுத்தாலும் ஆசீர்வாதம், அற்புதம் என்று இம்மை வாழ்வின் நீர்மேல் குமிழியாம் மாயாஜால ஆசீர்வாதங்களைப் பிரசங்கிக்கும் ஆசீர்வாத பிரசங்கிகளே மேலே குறிப்பிட்ட முதல்தரமான கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் கள்ள அப்போஸ்தலர்களும், சபையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்களுமாவார்கள். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது.

இவர்கள்தான் தேவன் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி மீட்டுக்கொண்ட தேவ ஜனத்தை ஒட்டு மொத்தமாக எரி நரகத்துக்கு இழுத்துச் செல்லுபவர்கள். மோவாபிய பெண்களை இஸ்ரவேலருக்கு காண்பித்து அவர்களில் 24000 பேர் விழுந்து போகக் காரணமாயிருந்த பிலேயாமைக் காட்டிலும் இவர்கள் பஞ்சமா பாதகர்கள். பயங்கரமானவர்கள்.

 

ஆசீர்வாத பிரசங்கி பணத்தை மையமாகக் கொண்ட பிரசங்கி

ஆசீர்வாத பிரசங்கிகளின் முக்கியமான குறிக்கோள் தேவ ஜனத்தின் பணத்தை எப்படி கைப்பற்றுவது என்பதைக் குறித்ததாகும். இவர்கள் உங்களைத் தங்கள் கூட்டங்களுக்கு வரும்படியாக அறைகூவி அழைப்பார்கள். அதின் ஒரே காரணம் உங்களை மோட்ச வீட்டிற்கு கொண்டு சேர்ப்பதற்கான வழியைக் காட்டுவதற்கோ அல்லது நீங்கள் மனந்திரும்பி பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்கோ அல்லது நீங்கள் மறுபடியும் பிறந்த பரிசுத்த அனுபவத்துக்குள் கடந்து வருவதற்கோ அல்ல. உங்களிடமிருந்து கவர் காணிக்கைகளையும், பொதுக் காணிக்கையையும் கைப்பற்றத்தான். உங்கள் ஜெப வேண்டுகோளை உங்கள் காணிக்கையுடன் பெற்றுக் கொள்ள அவர்கள் கருத்தாக இருப்பார்கள். மிகுந்த சந்தோசம் கொள்ளுவார்கள்.

காந்த ஊசி எப்பொழுதும் வட திசையை மாத்திரம் காட்டி நிற்பது போல இந்த மக்களின் அனைத்து ஊழியக் காரியங்களும் தசம பாகம், கவர் காணிக்கை, பொது காணிக்கையை நோக்கி நின்று கொண்டிருக்கும். நீங்கள் ஐசுவரியவான்களானால், நீங்கள் மினுக்கான வஸ்திரங்கள் தரித்து உங்கள் கை விரல்களில் பொன் மோதிரங்கள் போட்டிருந்தால் அவர்கள் உங்களோடு நிறைய நேரம் அருமையாகப் பேசி உறவாடி மகிழுவார்கள். உங்களுக்காக 30 நிமிட நேரம் வேண்டுமானாலும் சளைக்காமல், மனதை மயக்கும் வார்த்தைகளினால் உள்ளம் உருகி ஜெபிப்பார்கள். ஆம் உங்கள் கழுத்தில் உங்கள் தங்க தாலிக் கொடியானது ஒரு சுண்டு விரல் அளவுக்கான பருமன் உடையதாக இருக்க வேண்டும். நீங்கள் ஏழையாக இருந்தால், உங்கள் தோற்றம் எளிமையாக இருக்கும்பட்சத்தில், அந்த ஊழியக்காரர்களின் உதவி ஊழியர்கள், மற்றும் மெய்க்காப்பாளர்கள், உங்களை அவர்களுடைய எஜமானரிடமிருந்து துரத்திவிட்டாலும் துரத்தி விடப்படுவீர்கள். ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தக் காரியங்கள் எல்லாம் ஆசீர்வாதப் பிரசங்கிகளின் ஜெப கூடாரங்களில் நடக்கும் உண்மைச் சம்பவங்களாகும்.

உங்களை இந்திய தேசத்திற்காக ஜெபிக்க வரும்படியாக கருத்தோடு அழைப்பார்கள். ஆனால், நீங்கள் மனந்திரும்பி ஆண்டவருடைய மெய்யான இரட்சிப்பின் பாத்திரங்கள்தானா? மறுபிறப்பின் பரிசுத்த அனுபவம் உங்களுக்கு உண்டுமா? நீங்கள் அதற்காக ஜெபிக்கத் தகுதியுள்ளவர்கள்தானா என்ற கேள்வி எல்லாம் உங்களிடம் கேட்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் தேசத்திற்காக ஜெபிக்க அவர்களுடைய கோபுரங்களுக்குச் செல்லும் போது அத்தாட்சி பத்திரமாகிய கவர் காணிக்கை உங்கள் கரங்களில் இருந்தால் உங்களுக்குத் தனிப்பட்ட வரவேற்பு, மரியாதை எல்லாம் உண்டு. அவர்களின் ஆசீர்வாதங்கள், அற்புதங்களை உங்கள் தலையின் மேல் சுமந்து கொண்டு நீங்கள் சந்தோசமாக வீடு வந்து சேரலாம்.

இந்த ஆசீர்வாதப் பிரசங்கிகள் கிறிஸ்தவ வியாபாரிகளை தங்கள் கூடாரங்களுக்கு வந்து திரண்ட ஆசீர்வாதத்தைப் பெற்றுச் செல்ல அறை கூவி அழைப்பார்கள். தங்களண்டை வரும் கிறிஸ்தவ வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை கர்த்தருக்குப் பயந்து போதுமென்ற மனதுடன் கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம் என்று செய்கின்றார்களா? தங்களுடைய வியாபாரத்தில் கள்ளத் தராசு, கள்ளப்படிகள் பயன்படுத்துகின்றார்களா? கொள்ளை லாபம் அடிக்கின்றார்களா? கலப்படப் பொருட்களை தந்திரமாக பயன்படுத்துகின்றார்களா? பொய் நாவினால் பொருளைச் சம்பாதிக்கின்றார்களா? அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய நியாயமான வருமான வரி, தொழில் வரிகளை உண்மையாகச் செலுத்துகின்றார்களா? என்ற எந்தக் கேள்விகளையும் இவர்கள் வியாபாரிகளிடம் கேட்கமாட்டார்கள். அவர்களுக்கு முன்பாக அவர்கள் ஆத்துமாவுக்குப் பயனுள்ள ஒரு எச்சரிப்பின் பிரசங்கத்தை ஆசீர்வாதப் பிரசங்கிகள் ஒருக்காலும் செய்ய மாட்டார்கள். கூட்டத்தில் கலந்து கொள்ளும் கிறிஸ்தவ வியாபாரிகள் எவரும் எந்த ஒரு காணிக்கையும் கொண்டு வரக்கூடாது, கூட்டத்தில் காணிக்கைகள் சேகரிக்கப்படமாட்டாது ஆத்துமாவுக்கு பயனுள்ள எச்சரிப்பின் செய்தியை மட்டுமே கேட்டுச் செல்ல வேண்டும் என்று இந்த ஆசீர்வாதப் பிரசங்கிகள் வியாபாரிகளைக் கேட்பார்கள் என்று நினைக்கின்றீர்களா? ஒருக்காலும் இல்லவே இல்லை. "காகத்தின் அழகையும், அதின் பாடலையும் தந்திர நரி விரும்பிய ஒரே காரணம் அதின் வாயிலுள்ள வடையைப் பறித்துக் கொள்ளுவதற்காகத்தான் இருந்தது" என்று நாம் நமது பாலியப் பருவத்தில் பள்ளியில் படித்த கதை நமது நினைவுக்கு வருகின்றது அல்லவா? எல்லாம் காணிக்கை வரவுகளை எதிர்பார்த்த ஊழியங்கள்.

இந்த ஆசீர்வாதப் பிரசங்கிகள் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் எழுதுகின்ற அரசாங்க தேர்வுகளைக் கூட வியாபாரமாக்கி வைத்திருக்கின்றார்கள். தேர்வுகள் எழுதப் போகும் நாட்களில் கூட்டங்களை பட்டணங்களில் ஆங்காங்கு ஒழுங்குபடுத்தி மாணவ மாணவியரை வரவழைத்து அவர்களுக்காக விசேஷ ஜெபங்கள் ஏறெடுக்கப்போவதாகக் கூறி தங்கள் முந்தைய கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் பெற்ற சிறப்பான சில வெற்றிகளை காண்பித்து அதற்கு விளம்பரங்கள் கொடுத்து, கவர்ச்சியூட்டி, மாணவ மாணவியரை வரவழைத்து அதற்காகவும் காணிக்கைகளை வசூலித்து விடுகின்றனர். எந்த எந்த விதங்களில் மக்களின் பணங்களை தந்திரமாக பறிக்க முடியுமோ அந்த வகைகளில் எல்லாம் ஆசீர்வாதப் பிரசங்கிகள் பணங்களைப் பறித்துவிடுகின்றனர்.

 

ஆசீர்வாதப் பிரசங்கி பெருமைக்கார பிரசங்கி

இந்த ஆசீர்வாதப் பிரசங்கியின் பிரதானமான குணநலன் இவர்களுடைய மட்டுக்கு மிஞ்சிய பெருமையாகும். இவர்களின் பழக்கவழக்கங்களெல்லாம் பணக்காரர்களோடும், வாழ்க்கையில் நல்ல வசதிகளோடு வாழ்பவர்களோடும்தான் இருக்கும். மற்ற ஏழை எளிய மக்களை அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அவர்களண்டை நெருங்கவே அஞ்சி நிற்பார்கள். இவர்கள் செய்கின்ற தானதருமங்கள், சமுதாய சேவைகள் எல்லாம் தங்களுக்கு வரும் கோடானு கோடி ரூபாய் காணிக்கைகளைக் குறித்து மற்றவர்கள் எவரும் கேள்வி கேட்காமல் இருக்க அவர்கள் எடுக்கும் மூளைச் சலவையின் தந்திர நடபடிகளாகும். "பெருமை சரப்பணியைப் போல் அவர்களைச் சுற்றிக் கொள்ளும்" (சங் 72: 6) என்ற தேவ வசனத்தின்படி பெருமை இவர்களை மூடியிருக்கும். இந்த ஆசீர்வாத பிரசங்கிகளின் நடை உடை பாவனைகளை கவனியுங்கள். ஆ, எத்தனை ஆடம்பரமான அலங்கார வஸ்திரங்கள் இவர்களை மூடியிருக்கின்றது! தங்களுடைய ஊழிய கால ஆரம்ப நாட்களில் எத்தனை எளிமையான, கவர்ச்சியற்ற ஆடைகளை இவர்கள் உடுத்தியிருந்தார்கள். எலியா தீர்க்கனை அடையாளங்காண சமாரியாவின் அரசன் அகசியா தனது ஆட்களிடம் "இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனுஷன் எப்படிப்பட்டவன்?" என்று கேட்டபோது அவர்கள் "மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக் கொண்டிருந்தான்" (2 இரா 1 : 7, 8) என்ற வார்த்தையைக் கேட்டவுடன்தானே "அவன் திஸ்பியனாகிய எலியாதான்" என்று அடையாளம் கண்டு கொண்டு விடுகின்றான். எளிமையான ஆடைகள் மூலமாக ஒரு மாபெரும் தீர்க்கன் அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்றான். இன்று தேவ ஜனத்திற்கு ஆசீர்வாதத்தை பொழிகின்ற ஆசீர்வாதப் பிரசங்கிமார் உடுக்கும் வஸ்திரத்தை கவனியுங்கள், அவர்கள் வெளி நாடுகளில் அணியும் அலங்கார வஸ்திரங்களைப் பாருங்கள். இவை எல்லாம் பெருமையிலிருந்து உண்டாகும் வெளிப்பாடுகளாகும்.

அவர்கள் வெளியிடும் பத்திரிக்கைகளை வாங்கி வாசித்துப் பாருங்கள். அவைகள் முழுவதும் அவர்களுடைய படங்களால் நிரம்பி வழியும். பற்பல கோணங்களில் ஆசீர்வாதப் பிரசங்கியார் பகட்டுடன் காணப்படுவார். பெரிய ஜனக்கூட்டங்களுக்கு மேலாக அவர்களுடைய படங்கள் அவர்கள் பிரசங்கிப்பதைப் போலவும், தேவனிடமிருந்து நேரடியாக வந்த அவருடைய பரலோகப் பிரதிநிதிகளைப் போலவும் தங்களைக் காட்டிக் கொள்ளுவார்கள். ஒரு பட்டணத்தில் அவர்கள் பிரசங்கிக்கின்றார்கள் என்றால் அந்தப் பட்டணத்தின் சுவர்களில் எல்லாம் அவர்கள் பிரசங்கங்களின் போது கூடி வந்த திரள் கூட்டத்திற்கு மேலாக அவர்கள் கெம்பீரமாக நின்று கொண்டிருப்பது போன்ற மட்டற்ற பெருமையைப் பிரதிபலித்துக் காட்டும் படங்களை ஒட்டி வைப்பார்கள். பட்டணத்தின் நாற்சந்துக்களில் பெரிய டிஜிட்டல் (னுபைவையட) படுதாக்களில் பெருங்கூட்டங்களில் ஜனங்களுக்கு முன்பாக ஆகாயத்தில் தாங்கள் நின்று பேசுவதைப் போன்ற படங்களைப் போட்டுத் தாங்கள் எத்தனை பெரிய பரிசுத்தவான்கள் என்று தங்களை பிரபல்யப்படுத்திக் காண்பிப்பார்கள். தன்னுடைய பரிசுத்த முகத்தோற்றத்தாலேயே அநேகரை நீதிக்குட்படுத்திய மகாத்துமா சாதுசுந்தர்சிங் அவர்கள் இலங்கை நாட்டிற்குச் சுவிசேஷம் அறிவிக்க ஒரு சமயம் சென்றிருந்த போது ஒரு பட்டணத்தில் "உலகப் பிரசித்திபெற்ற பிரசங்கியார் சாது சுந்தர்சிங் அவர்கள் பிரசங்கிக்கப்போகின்றார்கள்" என்ற ஒரு விளம்பரத்தை சுவர் ஒன்றில் அவர் பார்த்தபோது அவர் பயந்து நடுநடுங்கிப் போனதாகவும், அவருடைய உடம்பிலிருந்து வியர்வை தானாக வடிந்ததாகவும் அவர் தமது புத்தகங்களில் எழுதுகின்றார். எத்தனை மனத்தாழ்மை! உலகப் புகழ்ச்சியை சற்றும் விரும்பாத கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் நஷ்டமும் குப்பையுமாக எண்ணிப் புறக்கணித்த ஆண்டவரோடு மரித்த எத்தனை பிரகாசமான பரிசுத்த வாழ்க்கை!

பரிசுத்த பக்தர்கள் எல்லாரும் அப்படி நடுநடுங்கி ஊழியம் செய்திருக்கும் போது ஆசீர்வாதப் பிரசங்கிகள் ஏன் தங்களை அந்தவிதமாக மக்களுக்குத் தங்களை பெரியவர்களாக காண்பிக்க வேண்டும்? எல்லாம், மக்கள் தங்கள் கூட்டங்களுக்குத் திரளாக வரவேண்டும், மக்கள் தங்கள் தலையின் மேல் வைத்து அவர்களைப் புகழவேண்டும், அதின் மூலம் பெருங்காணிக்கை வரவு கிடைக்கப் பெற்று இந்த உலகத்தில் அனைத்து சுகபோகங்களோடு வாழ வேண்டும் என்பதுதான். "இந்நாள் வரைக்கும் உலகத்தின் குப்பையைப் போலவும், எல்லாரும் துடைத்துப் போடுகிற அழுக்கைப் போலவுமானோம்" (1 கொரி 4 : 13) என்று பரிசுத்த அப்போஸ்தலர்கள் அன்று தங்கள் நிர்ப்பந்தமான நிலையைக் கூறினார்கள். ஆனால், இன்று ஆசீர்வாதப் பிரசங்கிகளின் வாழ்க்கைகள் எல்லா சீரும், செழிப்போடும் முழு உலகத்தானுடைய உலக வாழ்க்கையைக் காட்டிலும் பட்டொளி வீசிப் பறக்கும் ஆடம்பர வாழ்க்கையாக இருந்து கொண்டிருக்கின்றது. நாம் என்னத்தைச் சொல்லுவது? அவர்கள் கிறிஸ்துவைக் கற்றுக்கொண்ட விதம் அப்படி (எபே 4 : 20)

 

தேவ ஜனமே, ஆசீர்வாதப் பிரசங்கிகளுக்கு
பறந்தோடி தப்புங்கள்

சாத்தானாம் பிசாசு ஒரு ஆசீர்வாதப் பிரசங்கியே! அன்று அவன் நமது ஆதித் தாயிடத்தில் விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசிக்கும் நாளில் சாகவே சாவதில்லை என்றும் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல இருப்பீர்கள் என்ற உயர்வான நிலையைக் காண்பித்தே அவர்களை வீழ்த்துவதை நாம் காண்கின்றோம் (ஆதி 3 : 4-5) அன்று அவன் பிரசங்கித்த பொய்யான ஆசீர்வாதத்தையே ஆசீர்வாதப் பிரசங்கிகள் இன்று மக்களுக்குப் பிரசங்கிக்கின்றார்கள். செல்வம், செழிப்பு, 100 ஆண்டு கால நோய் நொடியற்ற சுகவாழ்வு, தொட்டதெல்லாம் பொன்னாகும் மாயா ஜாலம், மாயாபுரி சந்தைச் சரக்குகளின் நீர் மேல் குமிழி வண்ணக் கவர்ச்சிகள் போன்றவற்றை ஆசீர்வாதப் பிரசங்கிகள் தேவன் தம்முடைய இரத்தத்தை சிந்தி மீட்டுக் கொண்ட தேவ ஜனத்திற்கு முன்பாகப் போட்டு பிலேயாம், மோவாபிய ஸ்திரீகளை அன்று இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக வைத்து அழித்தது போல அழிக்கின்றார்கள்.

"இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்" (1 கொரி 2 : 2) என்று அன்று பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் சொன்னார். "நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்" (1 கொரி 1 : 23) என்று அவர் தொடர்ந்து கூறினார்.

இயேசுவை பிரசங்கிக்கின்றோம், மனந்திரும்புதலைப் பிரசங்கிக்கின்றோம், சிலுவையைப் பிரசங்கிக்கின்றோம், பாவத்தைப் பிரசங்கிக்கின்றோம், சாபத்தைப் பிரசங்கிக்கின்றோம், பரிசுத்தத்தைப் பிரசங்கிக்கின்றோம் என்று கூறும் ஆசீர்வாதப் பிரசங்கி அதே மேடையில் சரீர சுகத்தையும், ஆசீர்வாதத்தையும், அற்புதத்தையும் பிரசங்கிக்க வேண்டியது எதற்காக? அந்தக் கவர்ச்சிக் காட்சிகளாலும், சாட்சிகளாலும் தங்கள் பத்திரிக்கைகளை அச்சிட்டு நிரப்புவது எதற்காக? பொல்லாங்கனுக்குள் கிடக்கும் (1 யோ 5 : 19) உலக வாழ்வின் கவர்ச்சிகளான மோவாபிய ஸ்திரீகளை தேவ ஜனத்திற்கு திரை விலக்கிக் காண்பிப்பது எதற்காக?

உண்மைதான், அன்று அன்பின் ஆண்டவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து தேவ மைந்தனை மடக்க முயன்ற (மத் 4 : 8-9) அதே சாத்தானுடைய கிரியைகளை அவனுடைய கைக்கூலிகளான ஆசீர்வாதப் பிரசங்கிகள் இன்று முழு வீச்சில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவ பிள்ளையே, எந்த ஒரு தேவ ஊழியன் சரீர சுகம், செல்வம், செழிப்பு, அற்புதம், அடையாளம், இம்மை வாழ்வின் ஆசீர்வாதங்களை, இந்த அநித்தியமான உலக வாழ்வின் மாயாபுரி சந்தைச் சரக்குகளை பிரசங்கிக்கின்றானோ, அந்தப் போலியான கவர்ச்சியில் மயங்கி திரள் கூட்டம் எங்கு தலை தெறிக்க ஓடுகின்றதோ, எந்த தேவ ஊழியன் மனத்தாழ்மையற்ற பெருமைக் காரனாக இருக்கின்றானோ, எந்த தேவ ஊழியன் தனக்கென்றும், தன்னுடைய சந்ததிக்கென்றும், தனது சொந்த பந்தங்களுக்கென்றும் தந்திரமாக கோடிகளை குவித்து வைத்துக் கொண்டிருக்கின்றானோ, எந்த தேவ ஊழியன் இந்த உலகத்தில் சுகபோகமாக ஆடம்பரமாக வாழ்கின்றானோ, எந்த தேவ ஊழியன் இந்த உலகத்தில் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்கின்றானே (மத் 6 : 24) அவனுடைய கூட்டங்களுக்கு விலகி ஓடி உங்கள் விலையேறப்பெற்ற ஆத்துமாவை நரக பாதாளத்துக்கு விலக்கிக் காத்துக் கொள்ளுங்கள். அந்த ஊழியன் உண்மை ஊழியன் அல்லன். "என் சிறு பிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்ப வேதனைப் படுகிறேன்" (கலா 4 : 19) என்று பரிசுத்த அப்போஸ்தலனுடன் சேர்ந்து அந்த ஊழியனால் ஒருக்காலும் சொல்ல இயலாது. அவன் முழு உலகத்தான். இந்த உலகத்தை முழுமையாக அனுபவிக்கப் பிறந்த அரசிளம் குமாரன்.

இந்தக் கொடிய சந்தர்ப்பத்தில் நீங்கள் செய்ய வேண்டிய காரியம், உங்கள் கரத்திலுள்ள ஆண்டவருடைய பரிசுத்த வேதாகமத்தை உங்கள் முழங்கால்களில் நின்று ஜெபத்தோடு வாசித்து ஆண்டவர் உங்களுக்கு காண்பிக்கும் வேத வெளிச்சத்தின் ஒளியிலே நடவுங்கள். முதற்கட்டமாக நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது பிரலாபித்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தையும் (யோ 3 : 3) இதுவரை நீங்கள் பெற்றுக்கொள்ளாதிருந்தால் உடனே ஆண்டவர் இயேசுவண்டை வந்து அந்த நிச்சயமான அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். மறுபடியும் பிறந்த இந்த பரிசுத்த அனுபவம் உங்கள் அன்பின் இரட்சகரை நீங்கள் எப்பொழுதும் அண்டிக் கொண்டிருக்க (சங் 73 : 28) உங்களுக்கு உதவி செய்வதுடன் அவரை வாஞ்சித்துக் கதறவும் (சங் 42: 1) நல்ல பங்கைத் தெரிந்து கொண்ட மரியாளைப் போல ஆண்டவருடைய பாதங்களை அடிக்கடி நாடி ஓடவும் (லூக் 10 : 42) கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று ஆண்டவரின் குரல் கேட்கவும் (1 சாமு 3 : 10) ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்? என்று ஆண்டவரின் சித்தம் கேட்டறியவும் (அப் 9 : 6) அவருடைய சமூகத்தில் உங்கள் இருதயங்களை உடைத்து ஊற்றவும் (சங் 62 : 8) உங்கள் கண்கள் எப்பொழுதும் இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கிக் கொண்டிருக்கவும் (ஏசாயா 17 : 8) இந்த உலக மாயைகளைப் பாராதபடி உங்கள் கண்களை விலக்கவும் (சங் 119 : 37) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்" (யோ 15 : 4) என்ற நம் அருமை நேச இரட்சகரின் வாக்கின்படி உங்கள் தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கை எப்பொழுதும் ஆண்டவரின் அன்பில் பின்னிப் பிணைந்து ஒட்டின வாழ்க்கையாக இருக்கட்டும். உங்களுக்கும், ஆண்டவருக்கும் இடையிலான உங்கள் உறவு நாளுக்கு நாள் வளரட்டும். நீண்ட மணி நேரங்களை ஆண்டவருடைய பாதங்களில் தினமும் ஜெபத்தில் செலவிடுங்கள். ஆண்டவருடைய ஜீவ வார்த்தைகளை அள்ளிப் பருகி ஆனந்தியுங்கள் (1 பேதுரு 2 : 3) அவருடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்து உங்கள் இருதயங்களில் பொக்கிஷ வைப்பாக வையுங்கள் (சங் 119 : 11) சமயம் கிடைக்கும் போதெல்லாம் அந்த தேவ வசனங்களை தியானித்துக் கொண்டிருங்கள் (சங் 119 : 97)

"பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை" (சங் 73 : 25) என்ற தாவீது ராஜாவின் இருதயக் கதறுதலே உங்கள் கதறுதலாக இருப்பதாக. அந்தக் கதறுதல் உங்களுடைய இருதயத்தில் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுவீர்கள் (கொலோ 3 : 2) அதற்கான கிருபைகளை ஆண்டவர்தாமே உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக. ஆமென்.

 
 

ஒரு பரிசுத்த மனிதன் பரலோக மனிதனாவான். மரணத்திற்குப் பின்னர் பரலோகத்திற்கு அவன் போய்ச் சேரு முன்னர் இந்தப் பூமியிலேயே பரலோகம் அவனுக்குள் இருக்கும். பரிசுத்தவான் என்ற பதத்தின் கிரேக்க வார்த்தை ஹக்கியாஸ் என்பதாகும். அதின் பொருள் என்னவெனில் அவன் பூமியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவன் என்பதே. ஒரு மனிதன் ஒரு நாட்டில் வாழ்ந்தாலும் அவன் மற்றொரு நாட்டிற்குச் சொந்தமாக இருக்க முடியும். ஸ்பெயின் தேசத்தில் வாழ்கின்ற ஒருவன் இங்கிலாந்து தேசத்தின் பூரண சுதந்திர பிரஜையாக இருப்பான். அதுபோல ஒரு பரிசுத்தவான் இந்தப் பூவுலகத்தில் கொஞ்ச காலம் வாழ்கின்றவனாக இருப்பினும் அவன் தேவனுடைய பரம எருசலேமின் நிரந்தர குடிமகனாக இருப்பான். பூவுலகத்தில் அவன் பூத உடல் இருந்தாலும் அவனது ஏக்கமும், தாகமும், வாஞ்சையும் தவனமும் மோட்ச இன்ப நாட்டைப் பற்றியதாகவே இருக்கும். அவன் பூவுலகத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும் பரலோகத்திற்குச் சென்று அந்த மோட்ச இன்ப பாக்கியங்களை அனுபவித்து வந்த பேரானந்த நாளாக இருக்கும். பரிசுத்தவான்கள் "நட்சத்திரங்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். காரணம், அவர்கள் வான மண்டலங்களைக் கடந்து மோட்ச நாட்டிற்குச் சென்று வருவதனால்தான். அதினால்தான் ஞானி சாலொமோன் "விவேகிக்கு ஜீவ வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்" (நீதி 15 : 24) என்று அருமையாக எழுதி வைத்தார்.

(பூர்வ பரிசுத்தவான் தாமஸ் வாட்சன்)


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM