உத்திராஞ்சல் மாநிலத்தில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள்



"கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித் தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுது கொண்டு போகிறான், ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்" (சங் 126 : 5, 6)

கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமத்திற்குத் துதி, கனம், மகிமை உண்டாவதாக. தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை புற மதஸ்தினருக்கு நாம் அறிவிக்கும் நமது பிரயாசங்களைக் கர்த்தர் ஆசீர்வதிக்கிறவராகவும், நமது இருதயத்தின் பரிசுத்த ஆவல்களை நிறைவுசெய்கின்ற அன்பின் கன்மலையுமாகவுமிருக்கின்றார். ஆனால், அதற்காக நாம் பாரத்தோடு தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் விதைத்த ஜீவ விதைகள்முப்பது, அறுபது, நூறுமான பலனைக் கொடுக்கும். இதுகாறும் நாம் நமது வாகன தேவ ஊழியங்களின் மூலமாக பல்லாயிரக்கணக்கான இமயமலை வாழ் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும் கொடுத்து வந்திருக்கின்றோம். அந்த வார்த்தைகள் ஒன்றும் வீண்போகாது என்று தேவனுடைய வார்த்தை திட்டமும், தெளிவுமாகக் கூறுகின்றது. "மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படி செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" (ஏசாயா 57 : 10, 11)

சமீப மாதங்கள் ஒன்றில் எனக்கு தேவ ஊழியத்திற்காக வந்த காணிக்கை மணி ஆர்டர்களில் இமாச்சல் பிரதேசத்திலிருந்து எனக்கு முன்பின் தெரியாத ஓம் பிரகாஷ் சௌத்திரி என்ற இந்து மனிதர் காங்டா மாவட்டத்திலிருந்து ரூபாய் 225 அனுப்பியிருந்ததை நான் மிகவும் ஆச்சரியத்துடன் கவனித்தேன். மணி ஆர்டர் பாரத்தின் அடிக்கட்டையில் "நீங்கள் அனுப்பிய ஆங்கில வேதாகமத்துக்காக உங்களுக்கு ஒரு மூட்டை (Bundle of love) அன்பு" என்று எழுதியிருந்தார். 2005 ஆம் ஆண்டில் நாங்கள் எங்கள் இமாச்சல் பிரதேச வாகன தேவ ஊழியத்தின்போது நாங்கள் தர்மசாலை என்ற பட்டணத்தில் தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தோம். தர்மசாலையில் இந்திய இராணுவ பாசறையும் உள்ளது. எங்கள் வாகனங்கள் இரண்டும் அந்த இராணுவ பாசறைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தன. தேவனுடைய பிரசுரங்களை நமது தேவ ஊழியர்கள் அங்கிருந்த இராணுவத்தினருக்கும் கொடுத்தனர். அவற்றை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பெற்று வாசித்தனர். அதின் பின்னர் நமது தேவ ஊழியர்கள் தேவனுடைய பிரசுரங்களை தர்மசாலையின் மற்ற பகுதிகளில் கொடுத்துக்கொண்டிருந்த வேளையில் நான் நமது வாகனங்களைப் பார்த்துக் கொண்டு ஒரு வாகனத்தில் உட்கார்ந்திருந்தேன். அந்தச் சமயத்தில் ஒரு படித்த மனிதர் என்னண்டை வந்து தனக்கு ஒரு ஆங்கில வேதாகமம் வேண்டுமென்று என்னிடம் கேட்டார். அவருக்கு கொடுக்க எங்கள் வசம் ஆங்கில வேதாகமம் இல்லை என்றும், ஊர் சென்ற பின்னர் ஒரு வேதாகமம் நிச்சயமாக அனுப்புவதாகவும் சொன்னேன். அந்த மனிதரிடமிருந்து அவருடைய முகவரியைப் பெற்று வந்து நான் சொன்ன என் வார்த்தையின்படி இங்கு வந்த பின்னர் அவர்களுக்கு ஒரு அழகிய கையடக்கமான ஆங்கில வேதாகமம் ஒன்று வாங்கி அனுப்பினேன். அதைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அந்தப் பணத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள். நான் அந்தப் பணத்தை அவர்களுக்கே திரும்ப அனுப்பி வேதாகமத்தை நான் அவர்களுக்கு முற்றும் எனது அன்பளிப்பாகவே அனுப்பியிருந்தேன் என்றும் அதை அவர்கள் நன்கு வாசித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுதினதுடன் மிகவும் பயனுள்ளதும், விலை மதிப்புள்ளதுமான வேறு சில ஹிந்தி மொழி கிறிஸ்தவ புத்தகங்களை வாங்கி இங்கிருந்து பதிவுத் தபாலில் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அன்பின் ஆண்டவர் அவர்களுடன் தமது வார்த்தைகளின் மூலமாகப் பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

சமீப நாட்களில் மற்றொரு காரியம், மதுரை ஒட்டன்சத்திரத்திலிருந்து தேவமனிதர் டாக்டர் செல்வின் ஐயா அவர்கள் நாங்கள் வடக்கே இமயமலைப் பகுதிகளில் ஊழியம் செய்த இடத்திலிருந்து தனக்கு வந்த சில கடிதங்களின் நகல்களை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதில் குறிப்பிட்ட ஒரு பெண் அன்பின் ஆண்டவரைக் குறித்து அதிகமாக அறிவதற்காக பலதடவைகளும் ஒட்டன்சத்திரத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அந்தப் பெண்ணுக்கு அனுப்ப கிறிஸ்தவ பிரசுரங்கள் தங்கள் வசம் இல்லாததால் எங்களை அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொள்ளவும் தேவையான பிரசுரங்களை அவர்களுக்கு அனுப்பி உதவும்படியாகவும் கேட்டிருந்தார்கள். நான் உடனே உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள நமது தேவ ஊழியர்களுடன் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணைச் சந்திக்கும்படியாக கேட்டுக்கொண்டேன். அதின்படி நமது தேவ ஊழியர் பாஸ்டர் ஜேம்ஸ் அவர்கள் ஹீரா நேகி என்ற அந்தப் பெண்ணைச் சந்திக்க 240 கி.மீ தொலைவு பிரயாணம் செய்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு சுவிசேஷம் அறிவித்துவிட்டு வந்திருக்கின்றார்கள். மிகவும் பயனுள்ள கிறிஸ்தவ பிரசுரங்கள் இங்கிருந்தும் பதிவுத் தபாலில் ஹீரா நேகிக்கு அனுப்பப்பட்டிருப்பதுடன் மேற்கண்ட நமது பாஸ்டர் சகோதரன் அவர்களும் தன் வசம் கர்த்தருடைய பிரசுரங்களை எடுத்துச் சென்று கொடுத்திருக்கின்றார்கள். கர்த்தருக்கே மகிமை.

இதில் ஒரு ஆச்சரியமான காரியம் என்னவெனில், ஹீரா நேகி என்ற அந்தப் பெண் நாங்கள் கொடுத்த கிறிஸ்தவப் பிரசுரங்களை வாங்கும் வாய்ப்பைப் பெறாதவர்கள். எங்களிடமிருந்து பிரசுரங்களை வாங்கி வைத்திருந்த மற்றொரு நபரிடமிருந்து அவைகளைப் பெற்றுப் படித்து அதினால் தொடப்பட்டதன் காரணமாக டாக்டர் செல்வின் ஐயாவுடன் தொடர்பு கொண்டிருக்கின்றாள்.

எங்களிடமிருந்து தேவனுடைய பிரசுரங்களைப் பெற்று அதின் மூலமாகத் தொடப்பட்ட மற்றொரு ஆத்துமா சுந்தர்சன் சன்யால் என்ற வாலிபனாவான். அவனும் ஒட்டன்சத்திரத்திற்கு ஆண்டவர் இயேசுவைக் குறித்து அதிகமாக அறிந்து கொள்ள கடிதம் எழுதியிருக்கின்றான். பாகேஷ்வர் ஜில்லாவிலுள்ள தேவ்லியாத் என்ற கிராமத்தைச் சேர்ந்த அவனைச் சந்திக்க நம்முடைய தேவ ஊழியர் பாஸ்டர் என்.சாமுவேல் அவர்கள் பித்தோர்கார் என்ற இடத்திலிருந்து நீண்ட தூரம் தனது ஸ்கூட்டரில் பிரயாணம் செய்து பேரிநாக் என்ற இடம் வரை வந்து அந்த இடத்தில் தனது வாகனத்தை விட்டுவிட்டு குறுகலான பாதை வழியாக கால்நடையாக சுமார் 20 கி.மீ. தூரம் நடந்து தேவ்லியாத் கிராமத்தில் மேற்கண்ட சுந்தர் சன் சன்யால் என்ற வாலிபனைச் சந்தித்து அவனுக்கு ஆண்டவர் இயேசுவைக் குறித்து விபரமாகக் கூறியிருக்கின்றார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் பலரும் அந்த வாலிபனின் வீட்டில் வந்து கூடிவிட்டார்களாம். அந்த இடத்தில் அந்த மக்கள் எல்லாருக்கும் கர்த்தருடைய சுவிசேஷத்தைக் கூறிவிட்டு சகோதரன் மிகுந்த மகிழ்ச்சியோடு கடந்து வந்திருக்கின்றார்கள். மேற்கண்ட தவனமுள்ள ஆத்துமாக்கள் யாவரோடும் அன்பின் ஆண்டவர் தொடர்ந்து பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

நாம் வடக்கே செய்து வருகின்ற தேவஊழியங்கள், மக்களுக்கு நாம் விநியோகிக்கும் திரள் திரளான தேவனுடைய வார்த்தைகள் யாவும் ஏற்ற காலத்தில் கர்த்தருக்கு மகிமையான அறுவடையைப் பிறப்பிக்கும் என்று நாம் நிச்சயமாக விசுவாசிக்கலாம். நாம் செய்ய வேண்டிய காரியம் எல்லாம் வடக்கே செய்யப்பட்ட ஊழியங்களுக்காக தொடர்ந்து தேவ சமூகத்தில் மன்றாடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

 

கோசி என்ற இடம் வந்து சேர்ந்தோம்

கேர்னாவில் நாங்கள் எங்கள் ஊழியங்களைக் கர்த்தருக்கு மகிமையாக முடித்துக் கொண்டு அங்கிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள உயரமான அல்மோடா பட்டணம் வந்து சேர்ந்தோம். அந்தப்பட்டணத்திலுள்ள தொழு நோயாளிகளுக்கான கிறிஸ்தவ மருத்துவமனையில் நாங்கள் ஏற்கெனவே கொண்டு வைத்திருந்த தேவனுடைய பிரசுரங்களை எங்கள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அவைகளை அங்கு வைக்க எங்களுக்கு அன்பாக இடம் அளித்த அங்குள்ள தேவப் பிள்ளைகளுக்கு எங்கள் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம். அல்மோடாவிலுள்ள கிறிஸ்தவ மருத்துவமனையில் நமது தேவ ஊழியர்கள் கிறிஸ்தவ பிரசுரங்களை வாகனங்களில் ஏற்றுவதை நீங்கள் காணலாம். அங்கிருந்து அல்மோடா பட்டணத்தின் அடுத்த மலைச் சாரலின் அடிவாரத்திலுள்ள கோசி என்ற இடத்திற்கு நாங்கள் கடந்து சென்றோம். சிறிதும் பெரிதுமான கடைவீதிகளையும், ஊர்களையும் நாங்கள் தாண்டி எங்கள் 15 கி.மீ. பயணத்திற்குப் பின்னர் கோசி என்ற ஒரு அழகிய ஊருக்கு வந்து சேர்ந்தோம். கேர்னாவில் நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதிக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்த அதே கோசி நதி இங்கும் ஓடுவதை நாங்கள் ஆச்சரியத்துடன் கண்டோம். அந்த நதியின் பெயரையே ஊர் பெயராகவும் வைத்துவிட்டார்கள். அந்த நதியை ஒட்டியே கோசியிலும் அரசாங்க ஓய்வு விடுதி கட்டப்பட்டுள்ளது. இரவும் பகலும் நதியின் இரைச்சல் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. கோசி என்ற ஊர் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. க்கும் அதிகமான தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு தடவை நாங்கள் எங்கள் ஆகாரத்திற்காக அந்த இடத்திற்கு நடந்து சென்று வந்தோம். கோசி பெரிய ஊராக இல்லாவிட்டாலும் அரசாங்கம் அந்த இடத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஒரு ஓய்வு விடுதியைக் கட்டியுள்ளது. ஓய்வு விடுதியின் மேல் மாடியில் அமர்ந்து கோசி நதியைப் பார்க்க வசதியாக தோணி போன்ற இருக்கையை அமைத்து வைத்திருக்கின்றார்கள். பகற்காலத்தில் நாங்கள் எங்கள் தேவ ஊழியங்களை முடித்து மாலைப் பொழுதில் விடுதி திரும்பியதும் மேல் மாடியிலுள்ள அந்த இருக்கையில் சற்று நேரம் அமர்ந்து ஆண்டவருடைய அழகிய படைப்பின் மாட்சிகளையும், தொலைவிலுள்ள அழகிய கிராமங்களையும், மலைக்காட்சிகளையும், நதிக்கு மேல் பறந்து மீன்களைப் பிடித்துச் செல்லும் அழகிய மீன்கொத்திப் பறவைகளையும் கண்டு கர்த்தருக்குள் ஆனந்தித்தோம். நாங்கள் கண்ட அந்த அழகுக்காட்சிகளை நீங்களும் காண வேண்டுமென்பதற்காக சில புகைப்படங்களை எடுத்து வந்தோம். நாங்கள் தங்கியிருந்த கோசியிலுள்ள அந்த ஓய்வு விடுதியையும், நதிக்கு மேலாகக்கட்டப்பட்ட பாலத்தையும் நீங்கள் காண்பீர்கள்.

அடுத்து வந்த 10 நாட்களுக்கு கோசியிலுள்ள அரசாங்க ஓய்வு விடுதியே நாங்கள் தங்கும் எங்கள் வீடாயிற்று. அந்த இடம் நாங்கள் எல்லாரும் வசதிiயாக தங்கிக்கொள்ள அத்தனை பெரிய விசாலமானதாக இல்லை. நாங்கள் அனைவரும் ஒரே பொது அறையில்தான் (Dormitory) தங்கியிருந்தோம். ஒரு மகிழ்ச்சியான காரியம், நாங்கள் அங்கு தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் காலையில் நல்ல வெந்நீரில் குளித்துக்கொள்ள வசதியாக குளியலறையில் மின்சார சாதனம் இருந்தது. விடுதியின் மானேஜர் மிகவும் அன்புள்ளம் கொண்டவர். அவர் அரசாங்க ஓய்வு விடுதியின் சமையல் அறையை எங்கள் கரங்களில் தந்து விட்டார். அதின் காரணமாக 2 நாட்கள் நாங்கள் எங்கள் ஆகாரத்தை அங்கேயே சமைத்து சாப்பிட்டோம். அந்த ஆகாரத்தில் மானேஜருக்கும் நாங்கள் திருப்தியாக உணவளித்தோம். அத்துடன் அதிகாலை காப்பியை நாங்கள் அங்கேயே தயாரித்துக் கொள்ள முடிந்தது. எங்கள் மூத்த சகோதரனும், கர்த்தருடைய வைராக்கியமான ஊழிய வாஞ்சை கொண்ட சகோதரன் நார்ட்டன் அவர்கள் அதிகாலையிலேயே மேல் மாடியிலுள்ள சமையலறைக்கு ஏறிச் சென்று காப்பி தயாரித்து எங்கள் எல்லாருக்கும் எங்கள் படுக்கையிலேயே கொண்டு வந்து கொடுத்தார்கள். அதில் மானேஜருக்கும் காப்பி கொடுக்க அவர்கள் தவறவில்லை. அந்த அதிகாலை சூடான காப்பி எங்களுக்கு மிகவும் தெம்பூட்டுவதாக இருந்தது. கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

கோசியில் உள்ள கடை சிறிய கடை வீதியில் எங்களுக்கு நல்ல சுத்தமான ஆகாரங்கள் கிடைக்கவில்லை. ஓரிரு நாட்கள் நாங்கள் எங்கள் ஆகாரங்களில் நன்கு ஏமாற்றம் அடைந்த பின்னர் ஒரு வயதான தாத்தாவின் கடையைக் கண்டு பிடித்தோம். மற்ற எல்லா ஹோட்டல்களைக் காட்டிலும் அவரது சாப்பாட்டுக் கடை எங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தது. பின்னர் கடைசி வரை அவருடைய கடையிலேயே நாங்கள் எங்கள் ஆகாரங்களை சாப்பிட்டோம். கடைசி நாளில் அவருக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுக்கத் தவறவும் இல்லை.

 

ஜோலி கிராமத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

நாங்கள் கோசியில் 10 நாட்கள் தங்கி அந்த இடத்தைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களிலும் அங்கிருந்த சிறிதும் பெரிதுமான ஏராளமான பள்ளிகளிலும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். ஒரு நாள் நாங்கள் கோசியிலிருந்து ஜெபத்தோடு எங்கள் வாகனங்களில் தேவனுடைய பிரசுரங்களை எடுத்துக் கொண்டு காலையிலேயே பயணப்பட்டோம். அப்படி காலையில் நாங்கள் புறப்படுவதால் அந்த நேரத்தில் பள்ளிகளுக்குச் செல்லும் ஏராளமான பள்ளிப் பிள்ளைகளுக்கு தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்க ஏற்ற தருணமாகிவிடுகின்றது. அப்படி நாங்கள் அந்த நாளில் எங்கள் வாகனங்களில் போய்க் கொண்டிருந்தபோது 2 அல்லது 3 பள்ளி மாணவர்கள் எங்களுக்கு எதிராக ஒரு காட்டுப் பகுதியில் துரிதமாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தி அவர்கள் எங்கே படிக்கின்றனர் என்று கேட்டபோது சில கி.மீ. தொலைவிலுள்ள ஜோலி என்ற இடத்திலுள்ளஒரு மேல் நிலைப் பள்ளியில் படிப்பதாகவும், அந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவியர் படிப்பதாகவும் எங்களிடம் சொன்னார்கள். நாங்கள் அவர்களை எங்கள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அவர்கள் சொன்ன ஜோலி என்ற கிராமத்திற்குச் சென்றோம். பள்ளி ஆரம்பிப்பதற்கு நன்கு முன்னதாகவே நாங்கள் அந்த ஊருக்குச் சென்றுவிட்டோம். அந்த ஊரிலிருந்த மேல் நிலைப் பள்ளி மிகவும் செங்குத்தான உயரத்திலிருந்தது. அந்தப் பள்ளிக்கு வரக்கூடிய மாணவ மாணவியர் பல வழிகள் மூலமாக அந்தப் பள்ளியை சென்றடைய முடியும் என்பதை அறிந்த தேவ ஊழியர்களாகிய நாங்களும் எங்கள் இரு வாகனங்களின் டிரைவர்களான மனோஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரும் எங்கள் கரங்களில் நிறைய தேவனுடைய பிரசுரங்களை சுமந்தவர்களாக அந்தந்த வழித்தடத்தில் பிள்ளைகளின் வரவை ஆவலாக எதிர் நோக்கிக் காத்திருந்தோம். சரியான நேரத்திற்கு மாணவ மாணவியர் அலை அலையாக பள்ளியை நோக்கி வரத் தொடங்கினர். கிராமத்தின் அடிவாரத்தில் பள்ளிக்கு ஏறிச் செல்லுகின்ற பிரதான பாதையில்தான் ஏராளமான பிள்ளைகள் வந்ததால் நமது தேவ ஊழியர்களில் முக்கியமானவர்கள் அங்கு நின்று கொண்டு தேவனுடைய பிரசுரங்களை பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுத்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரசுரங்களை வாங்கிக் கொண்டு தனித்தும், கூட்டமாகவும் செல்லும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் நீங்கள் காணலாம். ஜோலி என்ற அந்த கிராமத்தின் படத்தையும் கிராமத்தின் உச்சியில் மேல் நிலைப்பள்ளி அமைந்திருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். ஜோலி கிராமத்திலுள்ள ஒரு ஆரம்ப பாடசாலையிலும் நாங்கள் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். சுமார் 400 மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு ஆண்டவருடைய வார்த்தைகள் கொடுக்கப் பட்டிருந்தன. அங்குள்ள கிராமவாசிகளுக்கும் ஆண்டவருடைய கைப்பிரதிகளைக் கொடுத்தோம்.

இந்தக் கிராமத்தில் நாங்கள் செய்த ஊழியத்தின் பயனாக இங்கிருந்து ஒரு தவனமுள்ள ஆத்துமா அஜய் கங்கா சாகர் என்பவர் ஒட்டன் சத்திரத்திலுள்ள டாக்டர் செல்வின் ஐயா அவர்களோடு தொடர்பு கொண்டிருக்கின்றார். அந்த மனிதருக்கு இங்கிருந்து மிகவும் பயன் உள்ள கிறிஸ்தவ பிரசுரங்கள் பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டிருக்கின்றது. அவரை நமது ஊழியர்கள் நேரில் சந்திக்கவும் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்காக நாம் ஜெபிப்போம்.

ஜோலி என்ற அந்த கிராமத்தில் நாங்கள் எங்கள் ஊழியங்களை முடித்துக் கொண்டு எங்கள் வழித்தடத்திலிருந்த கொய்ராலி என்ற இடத்திலிருந்த ஆரம்ப பாடசாலையிலும், உயர்நிலைப் பள்ளியிலும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். மொத்தம் 125 மாணவ மாணவியர் கைப்பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். அங்கிருந்து சுக்கியாத், மாஜ்காலி, தேர்காம் போன்ற இடங்களில் ஊழியம் செய்துவிட்டு கட்பூடியா என்ற ஊரின் செங்குத்து மேட்டில் சோலை மரங்களுக்குள்ளாக இருந்த உயர்நிலை பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியில் உள்ள 177 மாணவ மாணவியருக்கும் 15 ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அதை முடித்துக் கொண்டு கட்பூடியா சிறிய கடை வீதியிலுள்ள மக்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். அன்பின் ஆண்டவர் அந்த நாளில் எங்களுக்கு நல்ல அருமையானதோர் ஊழியத்தைத் தந்தார்.

 

ஹவால்பாக் என்ற இடத்தில் நடைபெற்ற
தேவ ஊழியங்கள்

நாங்கள் தங்கியிருந்த கோசி அரசாங்க ஓய்வு விடுதிக்கு 2 அல்லது அதற்கும் சற்று கூடுதலான கி.மீ. தொலைவில் மலை உச்சியில் உத்தராஞ்சல் அரசாங்கத்துக்குச் சொந்தமான பெரிய விவசாய மற்றும் விதைப் பண்ணைகள், கோழிப் பண்ணை போன்றவை இருக்கின்றன. அந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது. அதை ஒட்டினாற்போலவே அந்த வளாகத்தில் ஒரு பெரிய மேல் நிலைப் பள்ளியும், ஒரு உயர் நிலைப் பள்ளியும், இதர ஒன்றிரண்டு ஆரம்ப பாடசாலைகளும் இருக்கின்றது. ஒரு நாள் காலை நாங்கள் அந்த இடத்திற்கு ஜெபத்துடன் சென்று பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு வரும் சமயத்தில் அந்தந்த இடங்களில் நின்றுகொண்டு ஏராளமான தேவனுடைய பிரசுரங்களை நாங்கள் அவர்களுக்கு விநியோகித்தோம். யாரும் எந்த ஒரு எதிர்ப்பும், மறுப்புமில்லாமல் நாங்கள் கொடுத்த பிரதிகளை சந்தோசத்தோடு வாங்கிச் சென்றனர். நாங்கள் அந்த இடத்தில் ஊழியம் முடித்துவிட்டு திரும்பவும் கீழே நாங்கள் வந்த இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்படி வரும் வழித்தடத்தில் தேவப் பகைஞர்கள் நாங்கள் கொடுத்திருந்த அருமையான தேவனுடைய பிரசுரங்களில் பலவற்றை சுக்கு நுறாக கிழித்து புல் தரையில் வீசி எறிந்திருப்பதை நாங்கள் துயரத்தோடு கவனித்தோம். அன்று சாதுசுந்தர்சிங் தனக்குக் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாட்டை பல துண்டங்களாக கிழித்து வீசிய அவரைக் கொண்டு தம்முடைய பரிசுத்த நாமத்தை உலகம் எங்கும் உயர்த்திய சர்வ வல்லவர் அந்த இடத்தில் கர்த்தருடைய பிரசுரங்களை கிழித்துப் போட்ட மக்களையே ஒரு நாளில் சந்திப்பார் என்ற விசுவாசத்தின் நம்பிக்கையோடு அந்த இடத்திலிருந்து கடந்து வந்தோம்.

 

பத்தோடியா கிராமத்தில் நடைபெற்ற
தேவ ஊழியங்கள்

நாங்கள் மேலே குறிப்பிட்ட ஹவால்பாக் என்ற இடத்தில் ஊழியம்செய்துவிட்டு அங்கிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலுள்ள பத்தோடியா என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டோம். எங்கள் வழித்தடத்தில் தேவ்ஸ்தல் என்ற கிராமத்தில் இருந்த ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டவருடைய பிரதிகளைக் கொடுத்தோம். அங்கிருந்த மற்றொரு மாடர்ன் பிரைமரி என்ற சிறுவர்களுக்கான பள்ளியிலும் படம் காட்டி தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்தோம். அங்கிருந்து சௌரா, சிவோலா, கீத்தோலா, பத்லி பகட், என்ற கிராமங்களில் எல்லாம் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்துக் கொண்டே வந்து பாக்டோலா என்ற இடத்தை வந்தடைந்தோம். அந்த இடத்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்று இருந்தது. கர்த்தருடைய கிருபையால் அந்தப் பள்ளியிலும் ஆண்டவருடைய பிரசுரங்களைக் கொடுக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. சுமார் 500 மாணவ மாணவியருக்கு பிரதிகளைக் கொடுத்தோம். அங்கிருந்து பத்தோடியா கிராமம் சென்று அங்கும் ஊழியம் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தோம்.

 

சித்லாகேத் என்ற இடத்தில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள்

ஒரு நாள் காலை வழக்கம்போல அதிகமான ஜெபத்தோடு நாங்கள் கோசியிலிருந்து 25 கி.மீ.தொலைவிலுள்ள சித்லாகேத் என்ற இடத்திற்கு பயணப்பட்டோம். அந்த இடத்தில் ஒரு மேல் நிலைப் பள்ளி இருக்கின்றது என்பதை நாங்கள் திட்டமாகக் கேள்விப்பட்டு பள்ளிக்கூடம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த இடத்தை சென்றடைந்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் எங்கள் வாகனங்களை சற்று வேகமாக ஓட்டி வந்து முன்கூட்டியே வந்து சேர்ந்துவிட்டோம். பள்ளிக்கு வரும் பிள்ளைகளை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அன்றைக்கு பள்ளி விடுமுறை என்று அறிந்து சித்லாகேத் கிராமத்தில் உள்ள கிராம மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்துவிட்டு திரும்பி வரும் வழித்தடத்தில் தாமாக் என்ற ஒரு கிராமத்தில் சுவிசேஷப் பிரதிகளை கொடுத்து ஊழியஞ் செய்துவிட்டு அங்கிருந்த ஒரு சிறிய பொதுவான பள்ளிக்கூடத்திலும் கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்தோம். அந்தப் பள்ளியில் 4 ஆசிரியர்களும் 20 மாணவர்களும் இருந்தனர். பின்னர் செல்லா ரோட்லா, நௌலா, கௌட், தாரி காம், சௌபாக், லட்டுலால் காம், விமோலா போன்ற கிராமங்களிலும் எங்கள் வாகனங்களை நிறுத்தி நிறுத்தி கர்த்தருடைய ஊழியத்தைச் செய்து முடித்துத் திரும்பினோம். கோசியில் நடைபெற்ற ஊழியங்கள் இன்னும் நிறைய உண்டு. அவைகள் ஒவ்வொன்றையும் நினைவுபடுத்தி இங்கு எழுதக்கூடாதவனாக இருக்கின்றேன். அங்கு நாங்கள் கர்த்தருக்காக ஆத்தும பாரத்தோடு செய்த ஊழியங்களும், சந்தித்த ஆத்துமாக்களைப் பற்றிய விபரங்கள் கர்த்தருடைய ஞாபகபுத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. சந்திப்பின் நாளில் நாம் அதின் பலனை பரலோகில் காண்போம். கர்த்தருக்கே மகிமை.

 

வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு காட்சி

இந்த தடவை நாங்கள் எங்கள் வாகன ஊழியத்தின் போது தல் என்ற ஒரு சிறிய பட்டணத்தின் எல்லைப் புறத்தில் அமைந்திருந்த ஒரு கிராமத்தில் எங்கள் வாகனங்களை நிறுத்தினோம். காரணம், மிகவும் பள்ளத்தாக்கான இடத்தில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் எங்கள் கண்களுக்குத் தென்பட்டது. எப்படியாவது கர்த்தருடைய வார்த்தைகளை அந்தப் பள்ளியில் கொடுத்துவிடவேண்டும் என்ற பேராவலில் நமது தேவ ஊழியர்களில் நால்வர் பள்ளத்தில் துரிதமாக இறங்கிச் சென்றார்கள். எங்கள் வாகனங்கள் ரஸ்தாவின் ஓரத்தில் மேட்டின் மேல் நிறுத்தப்பட்டிருந்தன. நான் ரஸ்தாவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மேட்டில் மறைவான ஒரு இடத்தில் ஒரு விருத்தாப்பிய தாயார் சாவதானமாக அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்ததை நான் கவனித்தேன். நான் அவர்களை நன்றாகப் பார்த்தபோது ஒரு புல் அறுக்கக்கூடிய கூர்மையான அரிவாளால் தனது தலை முடியை அவர்கள் வெட்டிக் கொண்டிருப்பதை துக்கத்துடன் பார்த்தேன். தனது நீண்ட தலை முடி இருப்பது தனக்கு ஒரு வேளை கஷ்டமாக இருக்கின்ற காரணத்தால் பார்பர் ஷாப் சென்று தனது தலை முடியை கத்தரிக்க காசு வசதி இல்லாத காரணத்தால் தானே அதை தனது அரிவாளால் வெட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற எண்ணத்தில் அருகில் இருந்த ஒரு வீட்டிற்கு விரைந்து சென்று அங்கிருந்த ஒரு வாலிப தம்பியிடத்தில் அந்தப் பாட்டியம்மாவின் காரியத்தை எடுத்துக்கூறி அவர்களை பார்பர் ஷாப்புக்குப் போய் தனது முடியை வெட்டிக்கொள்ளும்படியாகவும் அதற்கான செலவை நான் அவனிடம் கொடுப்பதாகவும் சொன்னேன். அதைக் கேட்ட அவன் அந்த அம்மையார் தனது சுய நிலையில் இல்லை என்றும், தனது மனநிலை பாதிப்பின் காரணமாக தானே தனது முடியை வெட்டிக்கொண்டிருப்பதாகவும் சொன்னான்.

அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட நான் அதிர்ச்சியடைந்தேன். அந்த தாயாரின் செயலை நான் எனது ஜெப தியான நேரங்களில் எண்ணிப் பார்த்தபோது வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் (எபேசியர் 6 : 12) எஜமானனும் அதிபதியுமாகிய சாத்தானுடைய ஆதிக்கத்தின் காரணமாகவே அவர்கள் தனது முடியை வெட்டி வீச வீடு விட்டு காடு வந்திருந்தார்கள்.

அன்று மரியாள் தனது கண்ணீரால் ஆண்டவரின் பொற்பாதங்களை நனைத்து தனது தலை நிறைந்த திரண்ட தலை மயிரினால் அவருடைய பரிசுத்த பாதங்களை துடைத்து ஆனந்தித்தார்களே! அந்த ஆனந்தபாக்கியத்தை மேற்கண்ட ஏழைத்தாயார் பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதற்காக தந்திர சாத்தான் அவர்களை வீட்டிலிருந்து காட்டுக்குத் துரத்தி அவர்களது தலை மயிரை வெட்டி வீசச் செய்தான். ஆம், லேகியோனை அவனது வீட்டிலிருந்து கல்லறைத் தோட்டத்துக்குத் துரத்தி அங்குள்ள கல்லுகளினால் தன்னைக் குத்திக் காயப்படுத்தி அவனுடைய இரத்தத்தை பூமியில் தாராளமாக வடியவிட்டுக் கொண்டிருந்த அதே மனுஷ கொலைபாதகன்தான் அம்மையாரின் காரியத்தையும் பொறுப்பெடுத்து திறமையாகச் செய்து கொண்டிருந்தான்.

மறைவான ஒரு பெரிய கானக மரத்தண்டை தனியாக அமர்ந்து தனது ஒரு கரத்தால் தலை மயிரை நன்கு பிடித்துக் கொண்டு அடுத்த கரத்திலிருந்து அரிவாளால் அதை அறுத்துக்கொண்டிருக்கும் அந்த தாயாரின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் துக்கத்துடன் காண்பதுடன், அந்தக் காரியம் நடந்து கொண்டிருந்த வேளையில் நமது தேவ ஊழியர்கள் பள்ளத்திலிருந்த உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து வரும் சந்தோச காட்சிகளையும் காணலாம்.

நாங்கள் எங்கள் ஊழியத்தின் போது கொடுத்த தேவனுடைய பிரசுரங்களை பல திறப்பட்ட மக்கள் ஆசை ஆவலாக வாங்கி வாசிக்கும் படங்களையும் நீங்கள் இந்த ஊழியச் செய்தியில் காண்பீர்கள்.

 

 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM