உன் கண்ணீரைக் கண்டேன் (ஏசாயா 38 : 5)

வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவனின் பரிசுத்த சமூகத்தில் நாம் சிந்துகின்ற கண்ணீர்கள் ஒருக்காலும் வீண் போவதில்லை. "என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது" (சங் 56 : 8) என்று நாம் ஆண்டவருக்கு முன்பாக விடும் நமது கண்ணீர்களுக்கு கணக்கு இருப்பதாக தாவீது இராஜா சொல்லுகின்றார். உண்மைதான், நாம் கர்த்தருக்கு முன்பாக சிந்துகின்ற, விசேஷமாக நாம் அவருடைய பரிசுத்த நாம மகிமைக்கென்று விடும் கண்ணீகளுக்கு நிச்சயமான பதில்கள் உண்டு. பாவியாகிய நான் எனது வாழ்க்கையில் மூன்று சந்தர்ப்பங்களில் அதிகமாக அழுதது எனது நினைவில் உள்ளது.

முதலாவது, நான் எனது 18 ஆம் வயதில் எனது பாவ அக்கிரமங்களை கர்த்தர் எனக்கு மன்னித்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் தரும்படியாக எனது பாவங்கள் எழுதப்பட்ட பட்டியல்களுடன் எங்கள் ஊர் வயல்வெளிகளிலும், எங்கள் வீட்டிலும் நான் அழுது கண்ணீர் சிந்திய நாட்கள் அவை. ஒவ்வொரு பாவத்தையும் தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு 51 ஆம் சங்கீதத்தையும் வாசித்து வாசித்து அழுது கண்ணீர் சிந்திய நாட்கள் அவை. அந்த நாட்களில் நான் அழுத எனது அழுகையும், நான் விட்ட கண்ணீரும் தேவ சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டு எனது பாவங்களை ஆண்டவர் மன்னித்து "உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன், என்னிடத்தில் திரும்பு, உன்னை நான் மீட்டுக் கொண்டேன்" (ஏசாயா 44 : 22) என்று என்னுடன் பேசி உலகம் தரக்கூடாத இரட்சிப்பின் சந்தோசத்தையும், மறுபடியும் பிறந்த மகிமையால் நிறைந்த சந்தோசத்தையும் எனக்குத் தந்தார். அன்று பெற்ற எனது இரட்சிப்பின் நிச்சயமும், அவர் தந்த தேவ சமாதானமும், அன்பின் ஆண்டவரோடுள்ள எனது பரிசுத்த ஐக்கிய உறவும் அதிகமதிகமாக பிரகாசிக்கிற சூரியப் பிரகாசம் போல இன்றும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, "நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும், நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி" (தீத்து 2 : 13) என்னை ஏவி எழுப்புகின்றதாக இருக்கின்றபடியால் நான் என் தேவனுக்குள் அவர் கிருபையால் களிகூரும் நிலையில் இருக்கின்றேன்.

இரண்டாவதாக, நான் அதிகமாக தேவ சமூகத்தில் அழுது கண்ணீர் சிந்தியது எனது ஆங்கில அறிவிற்காக ஆகும். அதைக் குறித்து நான் விபரமாக இந்த இதழின் மற்றொரு பக்கத்தில் "தேவ எக்காள ஊழியத்தில் கர்த்தர் பாராட்டிய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்" என்ற தலைப்பிலான செய்தியை நீங்கள் கட்டாயம் வாசித்துப் பாருங்கள். நான் எனது ஆங்கில அறிவுக்காக அழுது கண்ணீர் சிந்திய வீட்டின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

மூன்றாவதாக, நான் தேவ சமூகத்தில் அழுத ஒரு காரியம் மிகவும் முக்கியமான தொன்றாகும். அந்தச் சம்பவம் பரிசுத்த மகாத்துமா சாதுசுந்தர்சிங் அவர்கள் வாழ்ந்த சுபத்து என்ற இடத்திலுள்ள கானக பங்களாவாகும். சுபத்து என்ற அந்த இடம் இமாச்சல் பிரதேசத்திலுள்ள சிம்லா மலைகளிலிருந்து தரம்பூர் செல்லும் ரஸ்தாவில் உள்ளது. சாதுசுந்தர்சிங் தமது ஐசுவரியவானான தந்தை தனக்களித்த பணத்தில் சுபத்துவில் அந்தக் கானகப் பங்களாவை வாங்கியிருந்தார். நான் அந்தப் பங்களாவைப் பார்க்க வேண்டும் என்ற மட்டற்ற ஆவலில் முந்தின நாள் இரவிலே சுபத்து சென்று எனக்கு கொஞ்சமும் முன்பின் தெரியாத ஒரு அன்பான கிறிஸ்தவக் குடும்பத்தினருடன் தங்கியிருந்தேன். அவர்கள் என்னை அன்புடன் ஏற்றுக்கொண்டு நன்றாக உபசரித்தார்கள். அடுத்த நாள் காலையில் மஞ்சு மூட்டத்துடன் மழையும் தூறிக் கொண்டிருந்தது. அந்த மழைத் தூறலில் சுந்தருடைய பங்களாவை காண்பதற்காக நான் தனியனாகப் புறப்பட்டேன். சுபத்து ஊரைவிட்டு அப்பால் ஒரு கல்லறை தோட்டத்தைக் கடந்து சென்ற நான் அடர்ந்த காட்டிற்குள்ளாக அந்த பங்களாவைக் கண்டேன். தனிமையையும், ஏகாந்தத்தையும் வாஞ்சித்துக் கதறும் சுந்தர்சிங்கிற்கு அந்த பங்களாஆண்டவரோடு தனித்து உறவாடி மகிழ்வதற்கு எத்தனை ஏற்ற இடமாக இருந்திருக்கும் என்பதை நன்கு யூகிக்க முடிந்தது. படத்தில் அந்த கானக பங்களாவை நீங்கள் காணலாம். 34 தூண்களினால் மேற்கூரை தாங்கப்பட்ட அந்தப் பங்களாவின் சுற்றுப்புற வராந்தைவைச் சுற்றி நான் நடந்தது எனக்கு ஆனந்த பரவசமாக இருந்தது. ஆம், பரிசுத்த சுந்தரும் அந்த வராந்தாவைச் சுற்றி தன் அன்பின் ஆண்டவரைத் தியானித்தவராக எத்தனையோ தடவைகள் நடந்திருப்பார் என்று நான் எனக்குள்ளாக யூகித்து மகிழ்ந்தேன். நான் போன வேளையில் அந்த பங்களாவின் அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. கண்ணாடி ஜன்னல்கள் வழியாக வீட்டினுள் உற்று நோக்கினேன். அநேக சிற்றறைகளைக் கொண்ட அந்த பங்களா சுந்தரின் ஜெப தியானத்திற்கு எத்தனை ஏற்றதாக இருந்திருக்குமென நாம் எளிதில் கண்டு கொள்ளலாம். ஏதாவது ஒரு அறையின் கதவு திறந்துவிடாதா என்று நான் ஒவ்வொரு அறையையும் தட்டிக்கொண்டு வந்த வேளையில் நான் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு அறையின் கதவு மட்டும் திறந்து கொண்டது.

நான் அந்த அறையினுள் பிரவேசித்து எனது முகம் குப்புற தரையில் விழுந்து கண்ணீர் சிந்தி அந்த பங்களாவில் வாழ்ந்த பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங்கைப் போல என்னையும் தம்முடைய நாமத்திற்கு மகிமையாக எடுத்துப் பயன்படுத்த வேண்டு மென்று தேவ சமூகத்தில் கெஞ்சி மன்றாடிவிட்டுக் கடந்து வந்தேன். எனது கண்களிலிருந்து வடிந்த கண்ணீர் தரையில் வடிந்து கிடந்தது. அவ்வளவாக நான் நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு அந்த இடத்தில் அழுதிருந்தேன். அது எனது பெலத்தினால் அல்ல, தேவகிருபையால் அப்படி நடந்தது. அங்கு ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் மன்றாட்டு உடன்தானே தேவனுடைய பரிசுத்த சந்ததியில் போய் எட்டிற்று. கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

அந்த சம்பவத்திலிருந்து தேவன் என்னை நேப்பாளம், சிக்கிம், பூட்டான், மேற்கு தீபெத், ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கு, வட இந்திய மாநிலங்கள் போன்றவற்றிற்கு என்னைக் கொண்டு சென்று தம்முடைய நாம மகிமைக்காகப் பயன்படுத்தினார். இந்நாள் வரைக்கும் வடக்கே 2 வாகனங்களுடன் நாங்கள் சென்று ஒரு குழுவாக ஒவ்வொரு ஆண்டும் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக அநேக ஆயிரங்களின் கரங்களில் தேவனுடைய நித்தியானந்த மகிமையின் சுவிசேஷத்தை கொடுத்தும் பிரசங்கித்தும் வருகின்றோமென்றால் அதின் ஒரே காரணம் அநேக ஆண்டு காலங்களுக்கு முன்பாக சாதுசுந்தர்சிங் அவர்களின் பங்களாவில் நான் என்னைத் தாழ்த்தி மன்றாடிய ஏழைப் பரதேசியாகிய எனது கண்ணீரின் ஜெபமும், தேவாதி தேவனின் சுத்தக் கிருபையுமேயன்றி பிறிதொன்றுமில்லை.

நான் எனது கண்ணீரைக் கொட்டிய பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்கள் வாழ்ந்த சிம்லா மலைகளிலுள்ள சுபத்து பங்களாவை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். இந்தக் கானக பங்களாவிலிருந்துதான் சுந்தர் தமது புத்தகங்கள் பலவற்றையும் எழுதினார். அநேக ஆயிரம் மணி நேரங்களை தனது பரம எஜமானரின் பாதங்களில் ஜெப தியான நிஷ்டையில் அப்படியே தன்னை மறந்து செலவிட்ட தேவ மனிதரின் பெத்தேல் இந்த சுபத்து பங்களாதான். கர்த்தருக்கே மகிமை.

தேவ ஜனமே, கண்ணீரை அத்தனை அற்பமாக எண்ணிவிடாதீர்கள். நீங்கள் உங்கள் ஆத்துமாவுக்காகவும், மனந்திரும்பாத உங்கள் பிள்ளைகளுக்காகவும், கணவர், மனைவிக்காகவும், உற்றார் உறவினருக்காகவும், தேவனுடைய ஊழியங்களுக்காகவும் ஏறெடுக்கும் உங்கள் கண்ணீரின் ஜெபங்கள் ஒருக்காலும் வீண்போகாது. பாவியாகிய எனது கண்ணீரைக் கண்டு எனக்குப் பதில் அளித்த பரிசுத்த தேவன் உங்களுடைய கண்ணீருக்கும் நிச்சயமாகப் பதில் அளித்து உங்கள் இருதயத்தின் வாஞ்சைகளை எல்லாம் தமது பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக நிறைவேற்றுவார். அல்லேலூயா.

 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM