இவ்வகண்ட லோகவனத்திலே நான் சஞ்சாரம் செய்த காலத்தில், ஒரு தரம் ஒரு மலையடிவாரத்தில் தங்கினேன். அங்கே ஒரு கெபி இருந்தது. அதினுள் போய் படுத்து நித்திரை செய்தேன். நான் அயர்ந்து நித்திரை செய்கையில் மா மகிமையான ஒரு சொப்பனம் கண்டேன். அந்தச் சொப்பனத்தைச் சொல்லுகிறேன் கேள்.
இதோ ஒரு மனுஷன் கந்தை கட்டிக்கொண்டு தன் வீட்டைப் பாராமல் வேறோர் திசையை நோக்கிக் கொண்டு நின்றான். அவன் கையில் ஒரு புஸ்தகமும், முதுகில் ஒரு பாரச் சுமையும் இருந்தது. நான் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவன் தன் புஸ்தகத்தை திறந்து வாசித்தான். வாசிக்க வாசிக்க மாலை மாலையாய்க் கண்ணீர் சொரிந்தான். அவன் உடம்பும் சிலிர்த்தது. கடைசியாக அவன் தன்னை அடக்கிக் கொள்ள சக்தியற்று உரத்த சத்தமாய்: "ஐயோ, நான் என்ன செய்வேன்?" என்று வாய்விட்டுக் கதறி அழுது புலம்பினான்.
இவ்வளவு வியாகுலத்தோடு அவன் தன் வீட்டு முகமாய்த் திரும்பி நடந்து, தன் கிலேசத்தையும், கண்ணீரையும் வீட்டார் ஒருவரும் அறியாதபடி செய்து கொள்ள வேண்டும் என்று முகத்தை நன்றாய்த் துடைத்து, மனக்கவலை ஒன்றும் இல்லாதவனைப்போல வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்து தன்னால் ஆனமட்டும் தன் மனவேதனையை அவர்கள் கண்டுகொள்ளாதபடி செய்தான். அவன் தன்னை வெகுநேரம் அடக்கிக்கொள்ளக்கூடாமல் போயிற்று. ஏனெனில், அவனுடைய கிலேசம் வரவர அதிகப்பட்டது. அவன் தன் மனைவியையும் மக்களையும் கூப்பிட்டுச் சொல்லுகின்றான்: ஆ, என் நேச மனைவியே! கேள், என் கர்ப்பத்தின் கனிகளே! செவிகொடுங்கள், உங்கள் மகா பிரியமுள்ள சிநேகிதனாகிய நான் இதோ என் முதுகில் இருக்கும் சுமை வரவரப் பளுவாகிறதால் மெத்தவும் அவதிப்படுகின்றேன். அது என்னை நசுக்கிப் போடும்போல் இருக்கிறது. அதுவுமின்றி நாம் வாசம்பண்ணும் இந்தப் பட்டணம் வானத்திலிருந்து வரும் அக்கினியால் தகனிக்கப்படும் என்று திட்டமாய் அறிந்தேன். நாம் தப்பிக் கொள்ளுகிறதற்கு யாதொரு வழிவகையும் இல்லையானால், நானும், என் அருமை மனைவியே நீயும், என் கண்மணிகளே நீங்களும் ஏகமாய் அந்த அக்கினியில் அழிந்துபோவோம். நாம் தப்ப ஒரு வழி இருக்கிறதென்று இன்னும் எனக்குத் தோன்றவில்லை என்று சொன்னான்.
இதைக் கேட்ட அவன் மனைவியும் மக்களும், உற்றாரும், பெற்றாரும் அதிசயப்பட்டார்கள். அவன் சொன்ன மோசங்கள் மெய்யாகவே நடக்கும் என்று நம்பி அஞ்சினதினால் அல்ல, பித்தம் சிரசில் ஏறிப் பிதற்றுகின்றான், பித்தம் முற்றினால் பைத்தியக்காரனாகி விடுவானே என்றெண்ணிக் கலக்கமுற்றார்கள். இப்படி அவன் பிரலாபித்தது பொழுது சாயப்போகிற நேரமாயிருந்தது. அவனுடைய பந்துக்கள் இவனுக்கு நல்ல தூக்கமில்லாமல் மண்டைக் கொதிப்பேறி புத்திமாறி இருக்கிறது. இவன் நித்திரை செய்து எழுந்திருந்தால் சிரசில் ஏறிய பித்தம் விடியுமுன் வடியும், புத்தியும் சீராகும் என்று அவர்கள் எண்ணி அவன் தூங்குகிறதற்கு ஏற்ற பிரயத்தனங்களை விரைவாகச் செய்தார்கள். அன்றிரவிலும் அவன் முந்தின பகலைப் போலவே உபத்திரவப்பட்டான். எல்லாரும் முக்காரம் போட்டு தூங்கினார்கள். இவனோ பெருமூச்சு விட்டு, கண்ணீர் சொரிந்து காலத்தைக் கடத்தினான். விடிந்தவுடனே, அயல் வீட்டுக்காரரும் அறிந்த சிநேகிதரும் வந்து, அண்ணா! நன்றாய்த் தூங்கினீரா? தம்பி, இப்பொழுது சுகம் எப்படி என்று கேட்டார்கள். அவனோ முன்னிலும் கேடு, முன்னிலும் கிலேசம் என்று சொல்லி: தனது மனதின் பயங்கரங்களைக் குறித்து அவர்களோடு பேசும்படி ஆரம்பித்தான். அவர்கள் அதைக் காது கொடுத்து கேளாமல் கடின இருதயமுள்ளவர்களாய் இருந்தார்கள். அவர்களில் சிலர் கூடி, கனிவுள்ள வார்த்தைகள் இவனுக்கு ஆகாது, கடிந்து கடிந்து பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, சிலதரம் அவனைக் கேலிபண்ணுவார்கள், சிலதரம் கடுப்பாய்ப் பேசுவார்கள், சிலதரம் பித்தா! நீ கெட்டாய் என்று கதவைப் பூட்டி ஒண்டியாய்க் கிடவென்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அவன் தன் வீடு மட்டாயிருந்து, தன் ஊராருக்காகப் பரிதபித்து, ஜெபம் செய்து, தன்னுடைய சொந்த நிர்ப்பந்தத்தையும் உணர்ந்து கொண்டிருப்பான். அடிக்கடி அவன், வீடுவிட்டுக் காடு போய், அங்குள்ள வயல் வெளிகளில் ஒண்டியாய் உலாவி: சிலதரம் வாசிப்பான், சிலதரம் ஜெபம்பண்ணுவான், சிலதரம் அழுவான், சிலதரம் புலம்புவான், இப்படிச் சில நாளைக் கழித்தான்.
|