கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி உண்டாவதாக. தேவ எக்காளம் பத்திரிக்கையை ஆரம்பித்த துவக்க ஆண்டுகளில் தேவ எக்காளத்திற்கான மொழி பெயர்ப்பு வேலைகளை மதுரையைச் சேர்ந்த கர்த்தருடைய பரிசுத்த பிள்ளையும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான D.மனுவேல் B.A., L.T., ஐயா அவர்கள் நமக்குச் செய்து தந்தார்கள். எந்த ஒரு ஆங்கிலப் பகுதியையும் மொழி பெயர்ப்புக்கு அனுப்பினால், கால தாமதமின்றி உடனே மொழி பெயர்ப்பை சிறப்பாகச் செய்து முடித்து எனக்கு அனுப்பி விடுவார்கள். சிறந்த மொழிபெயர்ப்பாளர், தலை சிறந்த தமிழ் அறிஞர், நாவலர். "திருமூலர் திருமந்திரத்தில் கிறிஸ்தவ போதனைகள்" என்ற தலைப்பில் ஐயா அவர்கள் அந்த நாட்களில் நமது தேவ எக்காளத்தில் எழுதின ஆராய்ச்சிப் பகுதி அநேகருக்கு, விசேஷமாக அதை வாசித்த இந்து நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவிருந்தது .என்பதை யாரும் மறுக்க முடியாது. அத்துடன் "தேவனின் குடும்பம்" "வாலிபத்தின் அபாயங்கள்" "கிறிஸ்துவினிமித்தம் சித்திரவதைகள்" போன்ற அவர்களின் மொழிபெயர்ப்பு வேலைகள் தேவ எக்காள சந்தாதாரர்களின் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்க்கைக்கு மிகவும் ஆசீர்வாதமாகவிருந்தது. இந்த 40 ஆம் ஆண்டின் சிறப்பு மலரில் ஐயா அவர்களை நாம் தேவ அன்புடன் நினைவுகூர வேண்டியது அவசியமும் கர்த்தருக்கு மகிமையாகவுமிருக்கும்.
அந்த ஆரம்ப ஆண்டுகள் ஒன்றில் நான் ஐயா அவர்களைக் காண்பதற்காக முதன் முதலாக மதுரையிலுள்ள அவர்கள் வீட்டிற்கு ஒரு மாலை நேரம் சென்றிருந்தேன். அந்த இராக்காலத்தையும் நான் அவர்களுடைய வீட்டில்தான் செலவிட்டேன். என்னைக் கண்ட அவர்கள், முதலில் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. "உங்களை நான் தேவ எக்காளம் ஆசிரியராக நிச்சயமாக ஏற்றுக் கொள்ளவேமாட்டேன். காரணம், தேவ எக்காளம் ஆசிரியர் மிகவும் வயது முதிர்ந்தவர், வாலிபனான நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள்" என்று பிடிவாதமாக சாதித்து நின்றார்கள். எனினும், பரதேசியாகிய நானே தேவ எக்காளத்தை எழுதி வெளியிடுபவன் என்பதை சீக்கிரத்தில் அவர்களுக்கு நிரூபித்தேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. அவர்கள் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
தேவ எக்காளத்தின் எழுத்து நடையை வாசிப்போர் யாராயினும் அதை எழுதுபவர் ஒரு வயது முதிர்ந்த விருத்தாப்பியன் என்றே நான் வாலிபனாக இருந்த ஆரம்ப காலத்திலிருந்தே திட்டமாக நினைத்து வந்தனர். பரதேசியாகிய என்னைத் தமது ஜனத்தை தமது நித்திய ஜீவ பாதையில் வழிநடத்தும் தமது பரிசுத்த பாத்திரமாக தெரிந்து கொண்ட அன்பின் ஆண்டவர் தேவ எக்காளத்தை அந்தவிதமான பரிசுத்த முதிர்ச்சியோடு நான் எழுதத்தக்கதான ஒரு அற்புத கிருபையை ஆரம்பத்திலிருந்தே எனக்குக் கொடுத்திருந்தார். தேவ எக்காளத்தின் பரிசுத்தமான எழுத்து நடையை வாசித்து பிரமிப்படைந்த கல்விமான்களும், ஞானவான்களும் ஏராளம் ஏராளமான பேர்களாவார்கள். ஆனால், ஏழைப் பாவியின் படிப்பு அடிமட்டக் கல்வியான வெறும் 10 ஆம் வகுப்பு மாத்திரமே என்பது அநேகருக்குத் தெரியாது. அத்துடன், நான் எந்த ஒரு இறையியல் கல்லூரி சென்று படித்தவனும் அல்ல. பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்கள் எந்த ஒரு பரிசுத்த கர்த்தரின் பாதங்களில் தன்னுடைய இறையிற் கல்வியை பயின்றாரோ அதே பரிசுத்த இரட்சகரின் பாதங்களிலேயே நானும் எனது எளிய வேதாகம கல்வியைக் கற்றேன். இன்றும் கற்று வருகின்றேன். எல்லா துதி, கனம், மகிமை நாம் இரவும் பகலும் ஆராதிக்கின்ற நம் பரிசுத்த கர்த்தர் ஒருவருக்கு மாத்திரமே. தனி மனிதன் பெருமை பாராட்ட அவனுக்கு என்ன இருக்கின்றது! தேவனுடைய வார்த்தை இதை மட்டும் சொல்லி வைக்கின்றது "உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிற படியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்" (சங் 119 : 100)
மனுவேல் ஐயா அவர்கள் நமது தேவ எக்காளத்தில் 40 ஆண்டு காலத்திற்கு முன்பு பகிர்ந்து கொண்ட அவர்களின் அனுபவ சாட்சி ஒன்றை அவர்களுடைய படத்துடன் கர்த்தருடைய மகிமைக்காக கீழே தருகின்றேன்:- |