|
|
ஆ வாலிபனே, வாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே, அதை விற்றுப்போடாதே, மற்ற உலகப் பொருட்களுக்காக அதை பண்டமாற்று செய்து விடாதே. முட்டாள்தனமாக அதினுடன் விளையாடி அதை நாசப்படுத்தி விடாதே. உனது ஆத்துமா விலை மதிப்பிட முடியாத முத்தாகும். அதற்கு ஈடாக 1000 உலகங்களைக் கொடுக்க முடியாது. உனது ஆத்துமா பாதுகாப்பாயிருந்தால் எல்லாம் பாதுகாப்பாயிருக்கும். அது மட்டும் நஷ்டப்படுமேயானால் அனைத்தையும் நீ இழந்துவிடுவாய். இயேசு இரட்சகரை நீ இழந்துவிடுவாய். மகிமை பொருந்திய தேவ தூதர்களையும், பரிசுத்தவான்களின் சங்கத்தையும் நீ இழந்துவிடுவாய். ஏன்? தேவன் தம்மில் அன்புகூருவர்களுக்காக ஆயத்தம் செய்து வைத்துள்ள மோட்சானந்த பாக்கியத்தையே நீ இழந்துவிடுவாய். கிரான்டென்சிஸ் என்ற தேவ பக்தன் அழிந்துபோகும் ஆத்துமாக்களைக் குறித்து பெரிதும் புலம்பிய ஒரு பரிசுத்த வாட்டியைக் குறித்து இப்படிப் பேசுவார்:- அந்த அம்மையார் "ஆண்டவரே, எனது சரீரத்தையும், எனது ஆத்துமாவையும் கொண்டு நஷ்டப்பட்ட ஆத்துமாக்கள் நரக பதாளத்திற்குச் செல்லும் துவாரத்தை மூடிப்போடும்" என்று அழுவார்களாம்.
(பரிசுத்தவான் தாமஸ் புரூக்ஸ்) |
ஒரு நாள் மாலை நேரம் நான் என் கண்களால் கண்ட ஒரு காட்சி. எலி ஒன்று தரையிலே பொந்தெடுத்து அதின் மணலை வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட பூனை ஒன்று அந்த மண்ணை மோந்து பார்த்து அந்த மண்ணின் மேல் அங்கும் இங்கும் சந்தோசத்தால் கழுதை குப்பை மேட்டில் புரளுவது போல உருண்டு புரண்டது. ஒவ்வொரு தடவை எலி பொந்திலிருந்து பதிய மணலை வெளியே தள்ளும்போதும் பூனை அந்த மண்ணை மோந்து பார்ப்பதும் அதின் மேல் புரளுவதாகவும் இருந்தது. வெகு நேரம் அந்த மண்ணில் புரண்ட அந்தப் பூனை இறுதியாக எலியைப் பிடிக்க இயலாமல் வெறுமையாகவே திரும்பியது. இந்த மாய லோகத்தை ஆதாயம் செய்ய நினைப்பவனுக்கும், இந்தப் பாழுலகத்தை தலையில் வாரிக் கட்டிக் கொண்டு போகிறவனைப் போல இராப்பகலாக கண்ணுறக்கமின்றி விழுந்து விழுந்து பாடுபட்டு உழைப்பவனுக்கும் கடைசியில் கிடைப்பதெல்லாம் அவன் நித்தியமாக பூமியிலே படுத்துக்கொள்ளும் அவனது புதை குழியின் ஆறு அடி நீளமுள்ள மண் வாசனைதான். உலகத்தைக் கட்டிப் பிடித்து நிற்போனே, உலகம் உனக்கு முடிவில் அளிப்பதெல்லாம் அது ஒன்றேதான்! உன் பாவங்களிலிருந்து உடனே மனந்திரும்பு. உனக்காக இரத்தஞ்சிந்தி உன்னை மீட்டுக் கொண்ட உன் அருமை நேசரை அண்டிக் கொள் (சங் 73 : 28) அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் (சங் 2 : 12)
|
சிநேகிதனே, நீ மனந்திரும்பாமல் மரித்த பின்னர், உனது உலக வாழ்க்கையின் சம்பவங்கள் அனைத்தும் ஒரு படம் போல் உன் மறுமை வாழ்க்கையிலே தோற்றமளிக்கும். அதுவே நரகத்தின் வேதனைகளை உனக்கு இன்னும் அதிகரிக்கச் செய்யும். நீ செய்துள்ள இரகசிய பாவங்கள், உன்னால் இடருக்குள்ளாக்கப்பட்ட ஏழை மக்கள், உன்னால் வஞ்சிக்கப்பட்ட உள்ளங்கள், நீ உன் பணத்தையும், சுகத்தையும், வாழ்க்கையையும் விரயமாக்கியது யாவும் உன் எண்ணத் திரையில் நிழல் படமாக விழுந்து கொண்டேயிருக்கும். மேலும் உனக்கு சுவிசேஷம் கூறப்பட்ட சந்தர்ப்பங்களும், நீ இரட்சிப்பை சுதந்தரித்துக் கொள்ள உனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளும் உன் கண் முன்னே தோற்றமளிக்கும். தேவ ஊழியர்கள் உன்னோடு எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் நீ உன் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டே உன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றாயே இவைகள் எல்லாம் உன் எண்ணத்தில் தோன்றும். எத்தனை தாங்க முடியாத கொடிய வேதனையான அனுபவம் அது! உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது மனந்திரும்புவாயா?
(ஆஸ்வால்ட் ஜே.ஸ்மித்) |
எனக்கு முன்பாக உள்ளதான எனது மரணத்தைக் கண்ணீரோடு நான் நினைவுகூருகின்றேன். எனது மரணத்தையும், எனது மறுமை வாழ்வின் முடிவற்ற நித்திய யுகா யுகங்களையும் நான் அடிக்கடிச் சிந்திக்கக்கூடாதபடி சத்துருவாகிய பிசாசு வெகு தந்திரமாக என் மனக் கண்களை இருட்டடிப்புச் செய்து கொண்டேயிருக்கின்றான். அவனுக்கு நான் எதிர்த்து நிற்பேனாக.
("உன்னுடைய அனைத்துச் செயல்களிலும், சிந்தனைகளிலும் இன்று நான் மரிக்கப் போகின்றேன் என்ற கண்ணோட்டத்தில் காரியங்களைச் செய். உன்னுடைய நண்பர்களையும், உனது உடமைகளையும் நம்பி உன்னுடைய விலையேறப்பெற்ற ஆத்தும இரட்சிப்பின் காரியத்தை பின்னுக்கென்று ஒருக்காலும் ஒத்திப் போட்டு விடாதே. நீ நினைக்கின்றபடியல்ல, உன் நண்பர்களும், உனக்கு அருமையானவர்களும் உன்னை வெகு சீக்கிரத்திலேயே மறந்து விடுவார்கள். யாராவது ஒருவர் மரிப்பதை நீ காண்பாயானால் நீயும் கூட அதே ரஸ்தாவில்தான் வெகு சீக்கிரம் பயணப்பட்டுச் செல்ல வேண்டும் என்பதை மறந்துவிடாதே. காலையில் நீ எழுந்ததும், மாலையில் நான் உயிர் வாழப் போவதில்லை என்ற எண்ணமும், மாலை நேரத்துக்குள் பிரவேசிக்கையில் அடுத்து வரும் விடிபகல் வேளையை நான் காணமாட்டேன் என்ற நினைவும் உன்னைப் பலமாக ஆட்கொள்ள வேண்டும். மரிக்க எப்பொழுதும் ஆயத்தமாயிரு. ஆயத்தமற்ற நிலையில் நீ இருக்கையில் மரணம் தனது குளிர்ந்த கரத்தை நீட்டி உன்னைப் பிடித்துக் கொள்ளாதபடி நீ உன்னை மகா விழிப்புடன் காத்துக் கொண்டு எப்பொழுதும் மரணத்தை மகிழ்ச்சியோடு சந்திக்க ஆயத்தமாயிரு.")
(பரிசுத்தவான்.தாமஸ் கெம்பிஸ்) |
No matter how little you have, Jesus can use it. Dwight L.Moody has described by a secular encyclopedia as a man who ‘‘depopulated hell by two million souls’’. One day the Lord touched Moody in New England, a man who couldn't even speak proper English and asked ‘‘what is that in your hand?’’ ‘‘Just Shoes Lord’’ said Moody. He was a shoe salesman. God asked the same question of William Carey, the pioneer Baptist missionary to India. ‘‘Just shoes Lord’’ answered Carey. He was a cobbler. ‘‘Give them to me’’ commanded the Lord, and Carey did so. Whether you make shoes or michrochips, God can use you.
George Verwer |
ஒரு பரிசுத்த மனிதன் பரலோக மனிதனாவான். மரணத்திற்குப் பின்னர் பரலோகத்திற்கு அவன் போய்ச் சேரு முன்னர் இந்தப் பூமியிலேயே பரலோகம் அவனுக்குள் இருக்கும். பரிசுத்தவான் என்ற பதத்தின் கிரேக்க வார்த்தை ஹக்கியாஸ் என்பதாகும். அதின் பொருள் என்னவெனில் அவன் பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப் பட்டவன் என்பதே. ஒரு மனிதன் ஒரு நாட்டில் வாழ்ந்தாலும் அவன் மற்றொரு நாட்டிற்குச் சொந்தமாக இருக்க முடியும். ஸ்பெயின் தேசத்தில் வாழ்கின்ற ஒருவன் இங்கிலாந்து தேசத்தின் பூரண சுதந்திர பிரஜையாக இருப்பான். அதுபோல ஒரு பரிசுத்தவான் இந்தப் பூவுலகத்தில் கொஞ்ச காலம் வாழ்கின்றவனாக இருப்பினும் அவன் தேவனுடைய பரம எருசலேமின் நிரந்தர குடிமகனாக இருப்பான். பூவுலகத்தில் அவன் பூத உடல் இருந்தாலும் அவனது ஏக்கமும், தாகமும், வாஞ்சையும், தவனமும் மோட்ச இன்ப நாட்டைப் பற்றியதாகவே இருக்கும். அவன் பூவுலகத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும் பரலோகத்திற்குச் சென்று அந்த மோட்ச இன்ப பாக்கியங்களை அனுபவித்து வந்த பேரானந்த நாளாக இருக்கும். பரிசுத்தவான்கள் "நட்சத்திரங்கள்" என்று அழைக்கப் படுகின்றனர். காரணம், அவர்கள் வானமண்டலங்களைக் கடந்து மோட்ச நாட்டிற்குச் சென்று வருவதனால்தான். அதினால்தான் ஞானி சாலொமோன் "விவேகிக்கு ஜீவ வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்" (நீதி 15 : 24) என்று அருமையாக எழுதி வைத்தார்.
|
|
|