"நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்" (சங் 128 : 5) "இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே" (லூக்கா 17 : 21)
"உனக்கு இரண்டு மோட்சங்கள் இல்லையேல் ஒரு மோட்சமும் இல்லை. பூலோகத்தில் உனக்கு மோட்சம் இல்லாவிடில் பரலோகத்திலும் உனக்கு மோட்சம் கிடையாது" என்று ஆண்ட்ரு போனர் என்ற பரிசுத்த பக்தன் திட்டமாகக் கூறினார்.
எத்தனை உண்மையும், சத்தியமுமான வார்த்தைகள். பூமியில் மனந்திரும்பாமல், தேவனைத் தேடாமல், மனதும் மாம்சமும் விரும்பும் வழியில் காலம் முழுவதும் பாவத்தில் வாழ்ந்துவிட்டு கிறிஸ்தவ மக்கள் தங்களுக்கு எப்படியாவது கடைசியில் மோட்சம் கிடைத்துக் கொள்ளும் என்று பகற் கனவு காண்பதை நாம் பார்க்கின்றோம்.
தனது பாவங்களுக்காக மனங்கசந்து மார்பில் அடித்து அழுது புலம்பி தேவ சமூகத்தில் கண்ணீர்விட்டு கதறி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றுக் கொண்டு கடைசி வரை தனது வாழ்க்கையை தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாக காத்துக் கொண்ட மறுபடியும் பிறந்த ஒரு தேவ பிள்ளை மட்டுமே பரலோகில் பிரவேசிக்க முடியும். அந்த தேவ பிள்ளைக்கு பூலோகத்திலேயே பரலோகம் ஆரம்பமாகிவிடுகின்றது. அந்த தேவ பிள்ளையிடம் நீங்கள் தொலைக்காட்சி (கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை காண்பிக்கும் தொலைக்காட்சியையும் சேர்த்துத்தான்) செய்தித் தாட்கள், உலகத்தின் மற்றெந்த கேளிக்கை நிகழ்ச்சிகளையும் கொடுங்கள். அவைகளை அது ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளாது. "என் சகோதரனே, நீர் எனகுக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்?" (1 இரா 9 : 13) என்று தீருவின் ராஜா ஈராம் சாலொமோனிடம் கூறி அவைகளில் பிரியப்படாதது போல அந்த தேவ பிள்ளை அவைகளை அல்லத்தட்டிவிடும். "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு, பூலோகத்தில் உம்மைத் தவிர வேறு விருப்பம் இல்லை" (சங் 73 : 25) என்ற தேவ வாக்கின்படி அந்த கர்த்தருடைய பிள்ளையின் ஒரே விருப்பம், ஒரே வாஞ்சை, ஒரே ஏக்கம், ஒரே கதறுதல் ஆண்டவர் இயேசு ஒருவர் மட்டுமே. "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங் 42 : 1) என்ற தாவீது ராஜாவின் கதறுதல் அந்த தேவப் பிள்ளையின் கதறுதலாக இருக்கும்.
தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்ட மரியாளைப் போல அந்த ஆத்துமா எப்பொழுதும் தேவனுடைய பாதங்களையே வாஞ்சித்துக் கதறிக் கொண்டிருக்கும். "எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்" (சங் 73 : 28) என்ற சங்கீதக்காரரைப் போல அது எப்பொழுதும் தேவனையே அண்டிக்கொண்டிருக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அது தேவனோடு தனித்து உறவாடி அவரது கல்வாரி அன்பையும், அவரது ஜீவனுள்ள வார்த்தைகளையுமே தியானித்து மகிழ்ந்து கொண்டிருக்கும். நீதிமான் பாடி மகிழுகிறான் என்ற ஆண்டவருடைய வார்த்தையின்படி அது எப்பொழுதும் கர்த்தரைப் பாடி துதித்துக் கொண்டிருக்கும். காரணம், அந்த ஆத்துமாவுக்கு மோட்சம் இந்த உலகத்திலேயே ஆரம்பித்துவிட்டது.
ஏரோது ராஜாவால் சில தினங்களுக்குள்ளாக தனது தலை நிச்சயமாக துண்டிக்கப்படப் போகின்றது என்பதை பேதுரு அப்போஸ்தலன் வெகு திட்டவட்டமாக அறிந்திருந்தும் தனது கால் கரங்களில் கட்டப்பட்ட இரண்டு பாரமான சங்கிலிகளின் வேதனைகளுடன் இரண்டு போர்ச் சேவகர்கள் நடுவில் எத்தனையான ஆனந்த நித்திரை கொண்டிருந்தார் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? (அப் 12 : 6) தேவதூதன் அவரண்டை வந்து அவரது விலாவிலே தட்டி எழுப்பும் அளவிற்கு அவரது தூக்கம் அத்தனை ஆழ்ந்ததாக இருந்தது. அதற்கான ஒரே காரணம், அவரது உள்ளத்தில் மோட்சானந்த தேவ சமாதானம் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டு இருந்ததுதான். "சீஷர்கள் சந்தோசத்தினாலும், பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்" (அப் 13 : 52) என்று நாம் வாசிக்கின்றோம். அந்தப் பரலோக சந்தோசம்தான் பேதுரு அப்போஸ்தலனையும் நிரப்பியிருந்தது. உலகப் பிரகாரமான ஒரு மனிதனானால் அவ்வண்ணமாக ஒருக்காலும் தூங்க இயலாது. அவன் இரவும் பகலும் அழுது கண்ணீர் சிந்தி அவன் இருக்கும் சிறைக்கூடமே அதிரும் வண்ணமாக கொடுந் துயரமாக அலறிக் கொண்டிருப்பான்.
வேதாகமத்துக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவ உலகம் போற்றும் "மோட்ச பிரயாணம்" என்ற அருமையான பிரபந்தத்தை எழுதிய ஜாண் பன்னியன் என்ற தேவ பக்தன் ஆண்டவருக்காக 12 ஆண்டு கால நீண்ட சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. மிகவும் குளிர்ச்சியான, சுகாதார வசதியற்ற அந்த பெட்போர்ட் என்ற சிறைக்கூடத்தில் தனது நீண்ட அந்த சிறை வாசத்தை அவர் மகிழ்ச்சியோடு செலவிட்டு முடித்தார். காரணம், அந்த தேவ மனிதரின் உள்ளத்தில் மோட்சம் இருந்தபடியால் தனது தனிமை வாழ்க்கையையும், மற்ற துன்ப துயரங்களையும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தனது கொடுந் துயரம் காரணமாக எந்த ஒரு கூச்சல், சந்தடி செய்யவில்லை.
"வாட்ச்மன் நீ" என்ற சீன தேச தேவ பக்தன் தன் அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காக 20 ஆண்டு கால நீண்ட கொடும் சிறைவாசத்தை கம்மியூனிஸ்ட்டுகளின் சிறைக்கூடத்தில் செலவிட வேண்டியதானது. அந்த நீண்ட சிறைவாசத்தில் அவர் கடந்து சென்ற பாடுகளையும், வேதனைகளையும், சொல்லொண்ணா துயரங்ளையும் கர்த்தர் ஒருவரே அறிகின்றவராக இருக்கின்றார். அந்தச் சூழ்நிலையிலும் அவர் எந்த ஒரு முறுமுறுப்பில்லாமல் கர்த்தருக்குள் மிகவும் களிகூருதலோடு தனது சிறைவாசத்தை தன்னந்தனியனாக கழித்து அப்படியே மரித்தும் போனார். அதின் ஒரே இரகசியம் மோட்சம் அவரது உள்ளத்தில் இருந்ததுதான்.
தேவனுடைய சுத்த சுவிசேஷ சத்தியத்தை தேவ ஜனத்திற்கு பிரசிங்கித்த ஒரே காரணத்திற்காக கத்தோலிக்க கொடிய ராணி மேரியால் தீக்கிரையாக்கப்பட்ட 15 ஆம் நூற்றாண்டு பரிசுத்த தேவ பக்தன் ஜாண் பிராட்ஃபோர்ட் என்பவர் தான் தீயில் வைத்து தகனிக்கப்படுவதற்கு முந்தின நாள் இரவு அவருடைய உடன் பிறந்த சகோதரன் தனது அண்ணனுடைய ஆறுதலுக்காக சிறைச்சாலைக்கு வந்து அவருடன் நித்திரை செய்ய விருப்பம் தெரிவித்த போது அவர் அதை முற்றுமாக நிராகரித்து தனது தேவ சமாதானம் நிறைந்த இன்பமான நித்திரையை எந்த விதத்திலும் தடைசெய்யக் கூடாது என்று கூறிவிட்டார். எத்தனை ஆச்சரியம் பாருங்கள்! அதின் ஒரே காரணம், அந்த பரிசுத்த பக்தனுடைய இருதயத்தில் அந்த நித்தியானந்த மோட்ச வாழ்வு இருந்ததுதான். ஸ்மித்ஃபீல்ட் என்ற இடத்தில் அவர் கட்டி எரிக்கப்படவிருந்த கம்பத்தை கட்டிப் பிடித்து முத்தமிட்டதுடன், விறகுக்கட்டுகளையும் முத்தமிட்டு சத்துருக்களின் தீக்கு இரையானார்.
இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவப் பிள்ளையே, உனது உள்ளத்தில் அந்த மோட்ச வாழ்வு ஆரம்பித்துவிட்டதா? ஒரு நாளில் எத்தனை மணி நேரம் ஆண்டவரோடு தனிமையில் செலவிடுகின்றாய்? எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் கர்த்தருடைய பாதங்களில் அப்படியே உட்கார்ந்து அவரோடு உறவாடி மகிழ உன்னால் முடியுமா? "எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும், எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள் மேலும், வெளியின் மரைகள் மேலும் உங்களை ஆணையிடுகிறேன்" (உன்னத 2 : 7) என்று உனது இடைவிடாத செடியும் கொடியுமான ஆண்டவர் மேலுள்ள உனது ஐக்கிய உறவைக் குறித்து கர்த்தர் ஆணையிட முடியுமா? அந்த ஆனந்த பரலோக அனுபவம் உனக்கு இல்லாதிருந்தால் உனது ஆண்டவரண்டை வந்து காரியங்களை சீராக்கிக் கொள் (சங் 139 : 23 - 24) ஒருக்காலும் மறந்துவிடாதே, நித்தியவாசியாம் நம் தேவனோடு நித்தியமாக வாழப்போகும் நமது பேரின்ப வாழ்க்கை இந்த உலகத்திலேயே நம் உள்ளத்தில் ஆரம்பித்து நமது மரணத்துக்குப் பின்னர் பரலோகத்துக்கும் தொடருகின்றது. ஒரு மெய்யான தேவப் பிள்ளைக்கு எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமின்றி பூலோகத்திலும், பரலோகத்திலுமாக இரட்டை மோட்சங்கள் உண்டு. அல்லேலூயா. |