|
|
| என் தாகத்துக்குத் தருவாயா? (யோவான் 4 : 8) |
|
(இமயமலைகளின் ரிசிகேசத்திலுள்ள இந்து சாதுக்கள் மத்தியில் வாழ்ந்து, அங்குள்ளோருக்கு சுவிசேஷம் அறிவித்து தனது 88 ஆம் வயதில் கர்த்தருடைய நித்திய பேரின்ப இளைப்பாறுதலுக்குக் கடந்து சென்று விட்ட சுவாமி கந்தையானந்து ஐயா அவர்கள் சுமார் 28 ஆண்டு காலத்திற்கு முன்னர் நமது தேவ எக்காளம் பத்திரிக்கையில் முதன் முறையாக பகிர்ந்து கொண்ட அவர்களுடைய அனுபவ சாட்சி)
1905 ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள கரும்பொன் மேற்கு என்ற இடத்திலுள்ள இந்து சைவ வேளாளர் குடும்பத்தில் எனது பெற்றோருக்குக் கடைசிப் பிள்ளையாக நான் பிறந்தேன். நாங்கள் சகோதர சகோதரிகள் மொத்தம் ஏழு பேர். நான் 14 வயதினனாக இருந்த போதே தேவாரம், திருப்புகழ் போன்ற இந்து மார்க்க பக்திப் பாடல்களை எல்லாம் சரளமாகப் படித்து அவற்றை மனப்பாடம் செய்தேன். இந்து தெய்வ வழிபாட்டில் மிகவும் பக்தியுடையோனாயிருந்தேன். எனது பெற்றோரும் என்னை மிகவும் கண்டிப்பான இந்து தர்ம ஒழுக்க நெறிகளில் வளர்த்து வந்தார்கள்.
|
தேவ மைந்தன் இயேசுவின்
இரத்தக் காட்சியைக் கண்டது |
இந்த எனது இளம் வயதில் ஒரு சமயம் இடி விழுந்து சரிந்து கிடந்த ஒரு பனை மரத்தின் ஓலைகளுக்குள்ளாக இருக்கும் இளங்குருத்துப் பகுதியை நான் தின்றதன் காரணமாக எனக்குச் சற்றும் எதிர்பாராத விதமாகக் கடுமையான வயிற்றுப் போக்கும், வாந்தியும் தொடர்ச்சியாக ஏற்பட்டது. வயிற்றுப் போக்கும் வாந்தியும் நிற்காமலிருந்ததால் ஓரிரு நாட்களில் நான் மிகவும் பெலவீனமடைந்து மரணத்தருவாயிலானேன். எனக்கு அளிக்கப்பட்ட வைத்திய சிகிட்சையொன்றும் பலனளிக்கவில்லை. எனது ஜீவன் பிரியும் இறுதி நேரம் வந்தது. என் நாவு உள்ளே விழுந்து போயிற்று. என்னால் ஒன்றும் பேச முடியாது. இந்த இறுதி நேரம் எனது மூத்த சகோதரி மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் என்னண்டை வந்து நின்று எனக்காகத் துயரப்பட்டார்கள். இந்த சமயம் நான் அவர்களைப் பார்த்தபோது அவர்கள் இரு தோள்களிலும் இரு குட்டிப் பிசாசுகளும், அவர்கள் தலையில் ஒரு குட்டிப் பிசாசுமாக ஆக மொத்தம் மூன்று பிசாசுகள் உட்கார்ந்து கொண்டு எனக்கு நேராக தங்கள் கரங்களை நீட்டிச் சிரித்து பரியாசம் பண்ணிக் கொண்டிருந்தன. "நீ மரிக்கப் போகின்றாய், உன்னை நாங்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்ல வந்திருக்கின்றோம்" என்று அவைகள் பேசி சிரித்து என்னைக் கேலி செய்வதைப் போலத் தெரிந்தது.
"அக்கா, உங்கள் மேல் இருந்து கொண்டு என்னைப் பார்த்து பரியாசம் பண்ணும் அந்தப் பிசாசுகளை எல்லாம் துரத்துங்கள்" என்று நான் எனது வாய்க்குள்ளாகக் கூறி எனது கையை ஓரிரு தடவைகள் அந்தப் பிசாசுகளுக்கு நேராக நீட்டினேன். அக்காவுக்குத்தான் எனது வார்த்தைகள் கேட்கவில்லையே, அவர்கள் என்ன செய்யக்கூடும்? ஏதோ மரண நேரத்தில் தன்னறிவு இழந்து பாசமுள்ள தம்பி ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கின்றான் என்று அவர்கள் எண்ணியிருப்பார்கள்.
இந்த எனது வாழ்வின் கடைசி நேரத்தில், எனக்கு முன்பாகச் சற்று தூரத்தில் ஒரு வேலி இருப்பதைப் போலவும், அந்த வேலிக்கு அப்பால் சரீரமெல்லாம் கோர காயமுற்று இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்த நிலையில் நிற்கும் ஒருவரை நான் கண்டேன். துயரமே உருவெடுத்த நிலையில் நின்று கொண்டிருந்த அவர் என்னைப் பார்த்தவராகவே நின்று கொண்டிருந்தார். கருணை நிறைந்த அந்த அன்புள்ளம் கொண்டோன் தனது திரு வாயைத் திறந்து என்னைப் பார்த்து "எனது தாகத்துக்குத் தருவாயா" என்று கேட்டார்.
நான் அவரைப் பார்த்து "ஐயா, நானே மரணத்துடன் போராடிக் கொண்டு மரணத்தை எதிர் பார்த்தவனாகப் படுத்த படுக்கையில் கிடக்கின்றேனே, உங்களது தாகத்துக்கு நான் எதை எழும்பித் தரக்கூடும்? ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், எனக்கு நல்ல சுகம் கிடைக்கும் பட்சத்தில் உமக்கு நான் கண்டிப்பாகத் தாகத்துக்குத் தருவேன்" என்று அவரிடம் உறுதி கூறினேன்.
"அப்படியா, நீ சுகம் பெற்றால் எனது தாகத்துக்குத் தருவாயா" என்று அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார். "எனக்குச் சுகம் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான், இரத்த ஒழுக்குடன் நிற்கும் உங்களைத் தூக்கிச் சுமந்து சென்றே உங்களது தாகம் தீர்ப்பேன்" என்றேன். உடனே அந்தக் காட்சி மறைந்து விட்டது. மிகவும் தத்ரூபமாக நான் கண்டதான அக்காட்சி என் கண்களை விட்டுக் கொஞ்சமும் விலகிச் செல்லவே இல்லை.
அதற்கப்பால் எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த ஒரு கிறிஸ்தவ குடும்பத்தார் என்னண்டை வந்து எனக்காக ஜெபித்தார்கள். தேவ கிருபையால் அதிலிருந்து நான் படிப்படியாகப் பூரண சுகம் பெற்றுவிட்டேன்.
இவை யாவற்றிற்கும் மத்தியிலும் என்னிடம் தாகத்துக்குத் தா என்று கேட்ட அன்பரை நான் மறக்கவே முடியவில்லை. அவர் யார் என்று தெரியாத போதினும் அவரை நான் உள்ளன்புடன் நேசித்தேன். சமாரியா ஸ்திரீயினிடம் ஒரு பகற் காலம் பன்னிரண்டாம் மணி வேளையில் "தாகத்துக்குத் தா" என்று கேட்ட அந்த என் அருமை மீட்பர் இயேசுவே என்னிடமும் தாகத்துக்குத் தா என்று கேட்டார் என்பதை நான் அறியாத போதினும் அவரது அன்பின் சாயல், அந்த இரத்தக் கோரமான காட்சி என் உள்ளத்தில் நீங்காமல் நிலைத்துவிட்டது.
அந்த எனது இளம் பிராய நாட்களில் எனக்கு ஒரு அருமையான ரோமன் கத்தோலிக்க நண்பன் இருந்தான். அவன் பெயர் ஜார்ஜ் என்பதாகும். ஒரு நாள் அவன் என்னைத் தனது ரோமான் மார்க்கக் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். கோவிலிலுள்ள சொரூபங்களை எல்லாம் நான் பார்த்தேன். ஒவ்வொரு சொரூபமாக நான் பார்த்து வருகையில் அங்கே ஒரு சொரூபமிருந்தது. சரீரமெல்லாம் இரத்தம் வடிந்த கோலத்தில் அது அங்கே நின்று கொண்டிருந்தது. எனது மரண படுக்கையில் வேலிக்கு அப்பால் நின்று கொண்டு தாகத்துக்குத் தா என்று என்னிடம் கேட்ட அந்த சாந்த சொரூபியின் ரூபத்தையே நான் அதனில் கண்டபடியால் "இவர் பெயர் என்ன? இவர் யார்?" என்று எனது நண்பன் ஜார்ஜ்ஜிடம் கேட்டேன். "இவர் பெயர் இயேசு கிறிஸ்து, பாவ மாந்தரின் பாவத்துக்காகச் சிலுவையில் தொங்குகின்றார்" என்று அவன் பதில் சொன்னான். |
| நான் இரட்சிப்பைக் கண்டடைந்தது |
அந்த நாளிலிருந்து இயேசு இரட்சகர் எனது சொந்த மீட்பரானார். அன்றிலிருந்து இயேசு கிறிஸ்துவையே நான் ஆராதிக்கத் தொடங்கினேன். எனது பல்வேறு விதமான இந்து தேவர்கள், இந்து தேவதைகளை அதின் பின்னர் நான் வழிபடவே இல்லை. அன்றிலிருந்து அவைகளை நான் கண்ணேறிட்டும் பார்க்கவில்லை. அதின் காரணமாக என் பெற்றோராலும், சகோதரராலும் தென்னை மரங்களில் கட்டி வைக்கப்பட்டு கடுமையாக அடிக்கப் பட்டேன். பெற்றோருடைய இவ்விதமான இம்சைகளுக்குப் பயந்து கண்டி, அநுராதபுரா ஆகிய இடங்களிலுள்ள பெருங்கானகங்களுக்கு நான் ஓடிச் சென்று அங்கு என் நாட்களை கடத்தியதுண்டு.
அத்துடன் எனது கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எனது பெற்றோர் இந்து மார்க்கத்தார்களுடைய பலசரக்கு கடைகளில் என்னை வேலைக்குக் கொண்டு விட்டனர். கடைகளிலுள்ள இந்து விக்கிரகங்களுக்கு நான் பூஜை செய்யவோ அல்லது அவைகளை நான் வணங்கவோ மறுத்தபடியால் கடைகளிலிருந்து நான் விரட்டப்பட்டேன். பெற்றோர் என்னைக் கடுமையாக அடித்து இம்சித்தார்கள். இதினிமித்தமாக நான் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்து கர்நாடகா மாநிலத்திலுள்ள ஷிமோகா என்ற இடத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ ரயில்வே உத்தியோகஸ்தரின் வீட்டினருடன் சேர்ந்து பல ஆண்டு காலம் அவர்களுடனேயே தங்கி இருந்தேன். எனது கிறிஸ்தவ நற்குண சீலங்களைக் கண்ட அந்த அன்புள்ள குடும்பத்தினர் தங்கள் சொந்த மகளையே எனக்குத் திருமணம் செய்து கொடுக்க முன் வந்தனர். வாழ்க்கையில் திருமணமே செய்யக் கூடாது என்று நான் இருந்தபடியால் அதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று வரை அவ்வாறு திருமணமின்றி கிறிஸ்தவ துறவியாக இருக்க அன்பின் ஆண்டவர் எனக்குக் கிருபை செய்துவிட்டார்.
ஒரு சமயம் மைசூர் தசரா உற்சவத்தின் போது அங்கு விற்கப்பட்ட மத்தேயு எழுதின சுவிசேஷம் ஒன்றை விலை கொடுத்து வாங்கிப் படித்து அதன் மூலமாகவேதான் மெய்யான இரட்சிப்பின் அனுபவத்தை நான் கண்டடைந்தேன். கர்நாடகா மாநிலத்திலுள்ள ஒரு சபையில்தான் நான் திருமுழுக்கும் பெற்றேன். கிறிஸ்து இரட்சகரை முகமுகமாக நான் தரிசித்ததிலிருந்து அவரைக் குறித்து மற்ற மக்களுக்கும் சொல்ல வேண்டுமென்ற மட்டற்ற ஆவல் என்னில் பொங்கி எழுந்தது.
சிறு பிராயத்திலிருந்தே பெருங்கானகங்களும், மலைகளும் எனக்குப் பழக்கமாகிவிட்டதால் பெரிதும் தனிமையையும், ஏகாந்தத்தையும் மாத்திரமே நான் விரும்பினேன். தனித்து ஆண்டவருடைய வேத வசனங்களைத் தியானித்து அவருடன் உறவாடி மகிழ்வதே எனக்கு ஆனந்த பொழுது போக்காயிற்று. பம்பாய்க்கு அருகிலுள்ள அடர்ந்த காட்கோப்பர் மலையில் இவ்விதமாக நான் சில ஆண்டுகள் தனிமையிலிருந்தேன். |
இமயமலைகளின் அடிவாரம் ரிசிகேசத்திலுள்ள
எனது குகை வாழ்க்கையும் எனது சுவிசேஷ பணிகளும் |
எனது வாழ்நாட் காலத்தின் பெரும் பகுதி உத்திரப் பிரதேசத்திலிருக்கும் ரிசிகேசத்திலுள்ள இந்து துறவிகள் மத்தியிலேயே கழிந்தது. அங்குள்ள சொர்க்காச்சிரமம் (சொர்க்கம் + ஆச்சிரமம்) என்ற இந்துத் துறவிகளின் மடத்தில் எனது ஆயுள்காலம் முழுவதும் நான் வாழ எனக்கு ஒரு சிறிய வீட்டை இலவசமாகக் கொடுத்திருந்தார்கள். என்னைப் பார்ப்போர் இந்து துறவிஎன்றுதான் நினைப்பார்கள். காரணம், நான் எப்பொழுதும் காவி வஸ்திரம்தான் தரித்திருப்பேன். நான் முழுக்க முழுக்க வாழ்வதும் மேற்கண்ட இந்து மடத்தில்தான். ஆனால், நான் இந்து சாதுக்களுடன் வாழ்ந்து கொண்டு அவர்களுக்கே ஆண்டவர் இயேசுவின் அன்பை சொல்லி வருகின்றேன். ரிசிகேசத்திலிருந்து 2 மைல்கள் தொலைவிலுள்ள ஒரு பெரிய காட்டினுக்குள்ளிருக்கும் ஒரு பெருங் குகையிலேயே நான் அநேக வருட காலங்கள் தனிமையில் வாழ்ந்தேன். உங்களில் அநேகர் அந்தக் குகையைப் பார்த்தால் கட்டாயம் பயந்து விடுவீர்கள். அது எனக்கு திட்டமாகத் தெரியும். நல்ல வெயில் காயும் மத்தியான நேரத்திலேயே அந்தக் குகை இரவின் இருளைக் கொண்டிருக்கும். குகையின் பாறைக்கு உள்ளே சில திருப்பங்கள் சென்று நடு மையத்தில் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
தனிமையில் எனது பொழுது போக்கு வேத வசன தியானமும், ஆண்டவருடன் ஜெபத்தில் ஐக்கியம் கொண்டு வாழ்வதுமேயாகும். ஒரு சமயம் எனது குகையின் கற்சுவர் மேல் நான் அமர்ந்து எனது வேத புத்தகத்தை வாசித்து தியானித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு கழுதைப் புலி ஆடி அசைந்து எனது குகைக்கு நேராக வந்து கொண்டிருந்தது. நான் உடனே சத்தமிட்டு குரல் எழுப்பி அதனை விரட்டி துரத்தினேன்.
புலிகளும், யானைகளும் மற்றும் கொடிய கானக விலங்குகளும் சர்வ சாதாரணமாக எனது குகையின் பக்கம் வந்துவிடுமாதலால் என் குகைக்கு முன்பு எப்பொழுதும் நெருப்பு மூட்டி மரக்கட்டைகள் சதா புகையை எழுப்பிக் கொண்டிருக்க வகை செய்வேன். எனது குகைக்கு மேலாக ஒரு பெரிய மூங்கிற் சிலுவையை நான் நாட்டியிருந்தேன்.
நான் அடர்ந்த கானகத்திலுள்ள குகை ஒன்றில் தனித்து ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தமையால் நான் ஒரு மேன்மையான உண்மை இந்துத் துறவி என்று எண்ணிக் கொண்டு சில சமயங்களில் இந்து பக்தர்கள் ரிசிகேசத்திலிருந்து 2 மைல்கள் தூரம் நடந்து என்னிடம் இந்து உபதேசம் கேட்க வந்துவிடுவார்கள். அவர்களுக்கு நான் எந்த இந்து உபதேசத்தைப் போதிப்பது?
இப்படிப்பட்ட தவனமுள்ள ஆத்துமாக்களுக்கென்றே நான் சுவிசேஷ துண்டுப் பிரதிகளை எப்பொழுதும் தயார் நிலையில் வாங்கி வைத்திருப்பேன். எனது குகை வாயிலில் வந்து நிற்கும் அம்மக்களைப் பார்த்து "சற்று பொறுத்திருங்கள். கடவுள் உங்களுக்கு என்ன சொல்லுவாரோ பார்க்கலாம்" என்று கூறிக் கொண்டே குகைக்கு உள்ளே சென்று தேவனுக்கு நேராக ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்துவிட்டு கொஞ்சம் சுவிசேஷ கைப்பிரதிகளை எடுத்துக் கொண்டு வந்து அவற்றை அவர்களுக்கு அளித்து "இதுதான் பஹவான் இன்று உங்களுக்குத் தரும் செய்தி. இவற்றைக் கொண்டு போய் கவனமாக வாசித்துப் பயனடையுங்கள்" என்று கூறி அவர்களை அனுப்பிவிடுவேன்.
ரிசிகேசத்தில் நான் பரவலாகத் தேவனது சுவிசேஷ ஊழியத்தை இரகசியமாக செய்திருக்கின்றேன். அநேக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ நற்செய்திப் பிரதிகளையும், சுவிசேஷப் பங்குகளையும் ஞானமாக விநியோகித்திருக்கின்றேன். சில சாதுக்களும், சந்நியாசிகளும், சுவாமிகளும் கிறிஸ்தவப் புத்தகங்களைக் கரங்களில் கொடுத்தால் நிச்சயமாக வாங்கமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியுமாதலால் அவர்கள் அமர்ந்து தியான நிஷ்டை செய்யக்கூடிய கங்கை நதிக் கரைகள் போன்ற இடங்களில் இராக்காலங்களில் அவற்றைக் கொண்டு போய் இரகசியமாக வைத்துவிடுவேன். அவர்கள் நடந்து செல்லும் பாதைகளில் வைப்பேன். இப்படி வைக்கப்படுவதை அவர்கள் உடனே எடுத்துக் கொள்ளுவார்கள். இவ்விதமாக நான் என் ஆண்டவருக்கு என்னிடம் "தாகத்துக்குத் தா" என்று கேட்ட என் அன்பின் இரட்சகருக்குப் பணியாற்றி வந்தேன். இன்றும் செய்து வருகின்றேன். |
எனது குகைக்கு வருகை தந்த
அப்பொல்லியோனாம் தந்திர சாத்தான் |
இவ்விதமாக நான் கர்த்தருக்கு ஊழியம் செய்தால் பிசாசு என்னை சும்மா விட்டு வைப்பானா? ரிசிகேசம் என்ற இடம் பிசாசுகளின் பள்ளத்தாக்கு. அங்கு எண்ணற்ற விக்கிரகங்களும், தேவனுக்குப் பிரியமற்ற எத்தனையோ அஞ்ஞான கிரியைகளும் தினமும் நடக்கின்றன. பிசாசுகளும், குட்டிச் சாத்தான்களும், பெயல்செபூலும் பாளயமிறங்கியிருக்கும் அவ்விடத்தில் இருந்து கொண்டே நான் அவர்களுக்கு எதிராக இராப்பகலாக வேலை செய்தால் சாத்தான் என்னை சும்மா விட்டு வைப்பானா?
ஒரு வேளை நீங்கள் நம்ப மறுப்பீர்கள். ஒரு தடவை ஒரு பெரிய பிசாசு நான் இருந்த அந்தக் குகைக்குள்ளேயே வந்து இயற்கை உருவில் என் முன்பாக வந்து நின்று கொண்டிருந்தது. "மோட்ச பிரயாணம்" புஸ்தகத்தில் அப்பொல்லியோனுக்குரிய பயங்கர ரூபம் அவனுக்கிருந்தது. அவன் தேகம் மீன் சிலாம்புகள் போல் இருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அவனைக் கடிந்து கொண்டு விரட்டியடித்தேன். எனக்குள் எரிந்துகொண்டிருக்கும் பரிசுத்த அக்கினிக்கு முன் நிற்க அவன் எம்மாத்திரம்? |
தன் பிடரியை தேவனுடைய சுவிசேஷத்திற்கு எதிராக
கடினப்படுத்திய ஒரு சாதுவின் பயங்கர முடிவு |
ரிசிகேசத்தில் நான் இந்து சாதுக்கள் மத்தியில் இரகசியமாக சுவிசேஷ வேலை செய்து கொண்டிருப்பதை நான் தங்கியிருக்கும் சொர்க்காச்சிரமத்தில் எப்படியோ கண்டு பிடித்துவிட்டார்கள். அன்றிலிருந்து எனக்கு "லால் பாதிரி" என்ற பட்டப் பெயரைச் சூட்டினார்கள். லால் பாதிரி என்றால் தமிழில் சிகப்பு பாதிரி அதாவது "ஆபத்தான சாமியார்" என்பது பொருளாகும். எனது கிறிஸ்தவ நடவடிக்கைகளின் காரணமாக என்னை எப்படியாவது நான் தங்கியிருந்த ஆச்சிரமத்திலிருந்து துரத்திவிடத் தங்களானமட்டும் பிரயத்தனப்பட்டும் அவர்களால் ஒன்றும் செய்யக் கூடாது போயிற்று. மற்ற இந்து சாதுக்களைப் போன்று பெண்ணாசை, பொன்னாசை, கஞ்சா, அபினி போன்ற லாகிரி வஸ்துக்கள் எதுவுமின்றி நான் பரிசுத்தமாகவும், எளிமையாகவும், மனத்தாழ்மையாகவும் ஜீவித்துக் கொண்டு, எனக்கு கிடைப்பதையும் கூட மற்றவர்களுக்கு அன்புடன் பகிர்ந்து கொடுத்து கிறிஸ்து பெருமானின் அன்பைக் காண்பித்து ஜீவித்து வருகின்றமையால் என்னை எல்லாரும் தற்பொழுது அதிகமாக நேசிக்கின்றார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
சில இந்து சாதுக்களுக்கு கிறிஸ்தவ துண்டுப் பிரதிகளையும், புத்தங்களையும் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். அவர்களின் மனந்திரும்புதலில் அக்கரை கொண்ட நான் அவற்றை தபால் மூலம் யாரோ ஒருவர் அனுப்பியிருப்பதைப் போல அவர்களுக்கு அனுப்பி வைப்பேன். மகாவீர்தாஸ் என்ற ஒரு இந்து சாதுவுக்கும் கர்த்தராகிய இயேசுவைப் பற்றியும், அவர் மூலமாக உள்ள முற்றும் இலவசமான இரட்சிப்பைப் பற்றியும் அநேக முறை நேரில் கூறினேன். ஆனால், அவன் கேட்கவில்லை. எனவே, தபாலில் அவனுக்குப் புத்தகங்களை என் கைப்பட அனுப்பி வைத்தேன். புத்தகங்களைக் கண்ட அவன் "லால் பாதிரியாகிய" நான்தான் அவற்றை அனுப்பியிருப்பேன் என்று சரியாக யூகித்துக் கொண்டு அவைகளைத் தீயில் போட்டு எரித்துவிட்டான்.
நடந்தது என்ன தெரியுமா? சில காலத்திற்குப் பின்னர் அவனுக்கும் மற்றொரு சாதுவுக்கும் இடையில் இருந்த கடுமையான கருத்து வேறுபாட்டின் காரணமாக மற்றவன் இரட்டைக் குழல் துப்பாக்கி ஒன்றை ஒரு போலீஸ்காரரிடமிருந்து வாங்கி வந்து ஒரு நாள் இரவில் மகாவீர்தாஸ் என்ற மேற்கண்ட சாதுவை இரு தடவைகள் துப்பாக்கியால் சுட்ட பின்னர், இரத்த வெள்ளத்தில் கிடந்த அவன் மீண்டும் உயிர் பிழைத்து வந்து தன்னை வஞ்சம் தீர்த்துவிடுவான் என்ற பயத்தில் ஒரு ஈட்டியால் அவன் நெஞ்சில் குத்திக் கொன்று போட்டான். "அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றி சடுதியில் நாசமடைவான்" (நீதி 29 : 1) என்பது எத்தனை உண்மை என்று பாருங்கள். மகாவீர்தாஸ் கொலையுண்ட செய்தியை இந்தியாவின் பத்திரிக்கைகள் மிகவும் பரபரப்புடன் அந்த நாட்களில் வெளியிட்டிருந்தன. |
என் ஆத்தும பகைஞனே உன்னுடையது ஒன்றும்
எனக்குத் தேவையில்லை |
இமயமலை பகுதியிலுள்ள குளு என்ற பிராந்தியத்திற்கு நான் அநேக தடவைகள் சென்றிருக்கின்றேன். மிகவும் ஆபத்துக்கள் நிறைந்த வானளாவிய மலைகளும், பனி மூடிய சிகரங்களும், அடர்ந்த காடுகளும் அங்குண்டு. ஒரு நாள் இரவு அங்கு ஓரிடத்தில் நான் படுத்திருந்தேன். அன்றிரவில் நான் சிறுவனாக இருந்தபோது வணங்கி வழிபட்ட எனது பண்டைய இந்து தெய்வம் ஒன்று தனது கையில் முக்கூருள்ள ஈட்டியை ஏந்திக் கொண்டு தனது சடைகளையும் விரித்துப் போட்டுக் கொண்டு எனக்கு முன்பாக இங்குமங்கும் ஆடிக் கொண்டு "உனக்கு வேண்டியது என்ன? எது வேண்டுமானாலும் அதை நான் உனக்குத் தருகின்றேன்" என்று சொன்னது. "உன்னுடையதொன்றும் எனக்குத் தேவையில்லை. இந்த இடத்திலிருந்து நீ போனாலே போதுமானது" என்று கூறவே அந்த உருவம் அங்கிருந்து மறைந்துவிட்டது.
|
| கரடியிடம் ஊருக்கு செல்லும் வழி கேட்டது |
|
எனது நீண்ட சுவிசேஷ பயணங்களில் அநேக தடவைகள் மரணத்திற்கேதுவான ஆபத்துக்களில் நான் கர்த்தரால் அதிசயமான பிரகாரமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றேன். இமயமலைகளிலுள்ள மணலி என்ற இடத்தில் ஒரு மாலை வேளை நான் ஒரு கானகத்தின் வழியாகத் தனித்து நடந்து வந்து கொண்டிருந்தேன். நான் வந்து கொண்டிருந்த பாதைக்கு மேலாக மேட்டுப் பகுதியில் சோளக்காடு ஒன்றிருந்தது. அங்கே ஒரு கருத்த மனிதன் சோளக் கதிர்களைப் பறித்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பக்கத்து ஊரிலுள்ள கிராமவாசி என்று தவறாக எண்ணிக் கொண்டு கிராமத்திற்குச் செல்லும் வழியை அவனிடம் கேட்டேன். நான் பல தடவைகள் ஹிந்தியில் அவனிடம் திரும்பத் திரும்ப வழி கேட்டும் அவன் அதை சட்டை செய்யாமல் தனது வேலையிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தான். அவனுடைய அமைதி எனக்கு அளவற்ற ஆச்சரியத்தை அளித்தது. மேலே ஏறிப்போய் அவனிடம் நேரில் வழியைக் கேட்க மனமற்று அப்படியே நான் போய்விட்டேன்.
நான் கிராமத்திற்குள் வந்ததும் ஆடுகள் மேய்க்கும் பையன்கள் "சுவாமிஜி, நீங்கள் போயும், போயும் அந்தப் பெருங்கரடியிடத்திலா கிராமத்திற்கு வழி கேட்க வேண்டும்" என்று கூறி சிரித்தார்கள். "நீங்கள் கரடியிடம் வழி கேட்பதை நாங்கள் எதிரே மலையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்" என்று தொடர்ந்து கூறினார்கள். உண்மையில் நான் கரடிக்கு அருகாமையில் வழி கேட்கச் சென்றிருந்தால் அது என்னைப் பீறிக் கொன்று போட்டிருக்கும். கர்த்தருடைய ஆச்சரியமான பாதுகாவலின் கரங்கள் அங்கு என்னைத் தடுத்தாட் கொண்டது.
|
| சிங்கங்களின் வாய்க்கு என்னைத் தப்புவித்த தேவன் |
குஜராத் மாநிலத்திலுள்ள கீர் காடுகள் சிங்கங்களின் சரணாலயம் என்பதை உங்களில் பலர் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஒரு சமயம் அந்த கீர் காடுகளில் ஒரு காட்டாற்றின் ஓரமாக ஒரு மத்தியானம் எனது துணிகளை துவைத்து அங்குள்ள பாறைகளில் அவற்றை உலர வைத்துவிட்டு நானும் குளித்துவிட்டு வெயிலில் அமர்ந்திருந்தேன். திடீரென்று ஏதேச்சையாக சற்று தூரத்திலுள்ள புதரைப் பார்த்தேன். பார்த்ததும் சற்று நேரம் நான் அப்படியே திகைத்துப் போனேன். அங்கே ஒரு பெரிய ஆண் சிங்கம் என்னைப் பார்த்து கொண்டு படுத்திருந்தது. அதற்கு அருகில் இன்னும் இரண்டு பெண் சிங்கங்கள் படுத்திருந்து ஒன்றையொன்று நாவால் நக்கிக் கொண்டிருந்தன. இன்றுதான் நம் வாழ்வின் கடைசி நாள். இந்தக் கொடிய மிருகங்களுக்கு நாம் இரையாவது திண்ணம். தேவனும் அப்படித்தான் தீர்மானித்துவிட்டார் போலும் என்று எண்ணிக் கொண்டு கருங்கல்லைப்போல அமர்ந்திருந்து ஆண்டவரையே தியானித்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் அந்தப் புதரிலிருந்து ஒரு சிங்கக் குட்டி எழும்பி என்னை நோக்கி ஓடி வந்த பின்னர் வேறு திசையாக போக ஆரம்பித்தது. அந்தக் குட்டியைத் தொடர்ந்து அங்கு படுத்திருந்த சிங்கங்கள் எல்லாம் ஒருமித்து எழுந்து போய்விட்டன. ஒரு வேளை அந்த சிங்கக் குட்டி விளையாட்டாக என்னருகில் வந்திருந்தால் சிங்கங்கள் என்னைக் கடித்துக் குதறி இருக்கலாம். அந்தக் காட்டிலுள்ள சிங்கங்கள் பெரும்பாலும் மனிதர்களுக்கு தீங்கிழைப்பதில்லை என்று அங்குள்ள மக்கள் என்னிடம் கூறினார்கள். எனினும், அந்தக் கொடிய மிருகங்களின் கூரிய பற்களுக்கு என்னைக் காத்துக் கொண்ட கர்த்தருக்குத் துதி செலுத்தினேன். |
| கானக காட்டாற்றை தனது தோளில் என்னைத் தூக்கிச் சுமந்து சென்று என்னை அக்கரை கொண்டு சேர்த்த அன்புள்ளம் கொண்டோன் யாரோ! |
இமாச்சல் பிரதேசத்தில் ஒரு நாள் சூறா என்ற இடத்திலிருந்து நான் பிரயாணம் பண்ணி பூந்தர் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து 15 மைல்கள் நடந்து ஷரி என்ற இடத்திற்கு வந்து மணிகரன் என்ற கிராமத்திற்குச் செல்லுவதற்காக கானகத்தின் ஊடாகக் கொட்டும் மழையிலும், சேற்றிலுமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். நான் நடக்க வேண்டிய தூரம் இன்னும் 7 மைல்கள் இருந்தன. இடையில் ஒரு காட்டாறு மிகக் கடுமையான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. தண்ணீரின் இழுப்பு பயங்கர வேகத்திலிருந்தது. நேரம் மாலை 5 மணிதான் இருக்கும். ஆனால் அந்தக் கானகம் இருள் மூடி இரவைப் போல இருந்தது. நடுக்கானகத்திலிருந்த அந்தக் காட்டாற்றைக் கடப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். ஆனால், ஆற்றை எப்படியும் கடந்தாக வேண்டும். திரும்பி ஷரி என்ற இடத்திற்குப் போக முடியாது. ஏனெனில், கொட்டும் மழையில் மிகவும் கஷ்டப்பட்டு ஆழமான சேற்றினூடே நீண்ட தூரம் நான் நடந்து வந்துவிட்டேன். என்ன செய்வதென்று எனக்கு ஒன்றும் தெரியாமல் மனங்குமுறி கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் சென்றதன் பின்னர் காட்டாற்றின் அக்கரையிலிருந்து மூன்று திடகாத்திரமான புருஷர் நீண்ட தடிகளை ஊன்றி ஊன்றி மூவரும் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு காட்டாற்றைக் கடந்து இக்கரை வந்தனர். அழுதுகொண்டிருந்த என்னைக் கண்ட அவர்களில் ஒருவன் தனது தோளின் மேல் என்னைத் தூக்கி வைத்துத் தடியை ஆற்றில் கவனமாக ஊன்றிக் கொண்டே என்னை மறு கரைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தான். ஆ, ஆண்டவர் தமது மக்களின் ஆபத்துக் காலத்தில் எத்தனை அடைக்கலமும், பாதுகாவலும், வழிகாட்டியுமான தேவன். திடீரென்று காட்டாற்றுக் கரையில் தோன்றி என்னை அக்கரைப்படுத்திய அந்த மூவரும் ஒருக்கால் தேவதூதர்களாக இருப்பார்களோ என்பதை முடிவில்லாத நித்தியம் மாத்திரமே நமக்கு வெளிப்படுத்தும்!
|
பூலோக வாழ்வின் அனைத்துத் தேவைகளையும்
அற்புதமாகச் சந்திக்கும் அன்பின் பூமான் |
எனது வாழ்வில் தேவன் நிகழ்த்தியிருக்கும் அற்புத நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு. கர்த்தர் கிருபை கூர்ந்தால், அவருடைய பரிசுத்த வருகை தாமதித்தால் அவற்றைப் பின்னர் நான் உங்களுடன் தேவ எக்காளத்தில் பகிர்ந்து கொள்ளுவேன்.
நான் ஒரு அந்தரங்கமான கிறிஸ்தவ சாதுவாக இருக்கின்றபடியால் எனது வாழ்க்கையில் அநேக போராட்டங்கள் எனக்கு உண்டு. இந்து விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட எந்த ஒரு பதார்த்தங்களையும் நான் புசிக்கமாட்டேன். அதன் காரணமாக மிகவும் எளிமையான, எவ்விதமான போஷாக்குமற்ற ஒரே வகை பருப்பு உணவுதான் எனக்குக் கிடைக்கும். எனினும், கர்த்தரே என் ஜீவனின் பெலனாக இந்நாள் வரை எனக்கு இருந்து வருகின்றார்.
இந்து விக்கிரகங்களை வழிபடும் இந்து யாத்திரீகர்கள் நான் ஒரு வித்தியாசமான சாதுவாக இருப்பதால் பணம் எதுவும் எனக்கு அதிகமாகக் கொடுப்பதில்லை. நானும் அதை ஒருபோதும் விரும்புவதுமில்லை. என்றபோதினும் அன்பின் ஆண்டவர் என் வாழ்வின் தேவைகளை எல்லாம் ஆச்சரியமாக, அற்புதமாக சந்தித்து வருகின்றார். இந்நிமிஷ நேரம் வரை அவர் என்னைக் கைவிடவே இல்லை. ரிசிகேசத்திலுள்ள அநேக இந்து சாதுக்கள் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களைத் தங்களுக்குச் சேர்த்து வைத்திருக்கின்றனர். அதைக் கொண்டு அசுத்தமான பாவ வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களுக்காக தேவனிடம் நான் மன்றாடி ஜெபித்து வருகின்றேன். வழியும், சத்தியமும், ஜீவனுமான இயேசுவை நான் அவர்களின் முன்வைத்தும் வருகின்றேன். இந்த இந்து சாதுக்கள், சந்நியாசிகள், சுவாமிகளுக்காக நீங்களும் தயவாக ஜெபித்துக் கொள்ளுங்கள். மேற்கு தீபெத்தில் நானும் கிறிஸ்துவுக்குள் எனது நேச மகனுமாகிய என்.சாமுவேலும் விதைத்து வந்த தேவ வசனங்கள் ஏற்ற காலத்தில் மிகுந்த பலன் கொடுக்கவும் நீங்கள் அன்புடன் ஜெபிக்க வேண்டும்.
எனது ஊழியத்தின் பாதையில் எனக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யக்கூடிய மிக அன்பான தேவப் பிள்ளை சாமுவேலை எனக்களித்த என் ஆண்டவருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்?
"எனது தாகத்துக்குத் தருவாயா?" என்று திருவாய் மலர்ந்த என் இயேசு தகப்பனை மத்திய ஆகாயத்தில் சந்திப்பதே என் இருதய கதறுதலாகும்.
ஒரு சுவையான நிகழ்ச்சியைக் கூறி எனது தாழ்மையான சாட்சியை முடிக்க விரும்புகின்றேன். ரிசிகேசத்திலுள்ள கானகக் குகையில் தனியனாக ஒரு நாள் இரவு நான் வழக்கம்போல படுத்திருந்தேன். நள்ளிரவு நான் கண் விழித்தபோது எனது கம்பளி போர்வைக்கு மேலாக எனது நெஞ்சின் மீது ஒரு பெரிய மிருகம் படுத்திருப்பது எனக்குத் தெரிய வந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொடிய கானக விலங்கான புலி, கடுவாய் போன்றவையாகவிருந்தால் நாம் இன்று அதற்கு இரையாவோம் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. எனினும், கர்த்தரை நோக்கி மனதில் ஜெபித்துவிட்டு எனது கையை மெதுவாக போர்வையைவிட்டு நகர்த்தி அப்படியே தடவி, தடவி என்னுடைய மிகவும் பிரகாசமான 5 செல் டார்ச் விளக்கை கையில் பற்றி எடுத்து எனது நெஞ்சில் படுத்துக் கிடந்த மிருகத்தை ஒரே மூச்சில் அப்பால் ஒரு பலத்த குரல் எழுப்பிக் கொண்டே தள்ளிவிட்டு டார்ச் விளக்கின் பொத்தானை அழுத்தி ஒளியைப் பாய்ச்சி முன்னால் நோக்கினேன். என்ன ஆச்சரியம்! நான் ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு பெரிய காட்டுப் பூனை தப்பினோம், பிழைத்தோம் என்று பயந்து முன்னால் ஓடிக் கொண்டிருந்தது. எனது உடலின் வெப்பத்திலும், கம்பளிப் போர்வையின் சூட்டிலும் சுகமாக தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறிய காட்டு ஜீவனை நள்ளிரவு நேரம் தூக்கத்தைக் கலைத்து வெளியே துரத்திவிட்டோமே என்ற துயரம் என்னை சிறிது நேரம் வாட்டினது.
இது எனக்கு ஒன்றை நினைப்பூட்டுகின்றது. நமது கிறிஸ்தவ ஜீவியத்திலும் கூடச் சிற்சில சமயங்களில் மலை போன்ற பிரச்சினைகள் நம்மைத் தாக்கலாம். ஆயினும் நாம் அதற்குச் சற்றும் அஞ்சாது கர்த்தருடைய பெலனைச் சார்ந்து ஊக்கமான ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினால் அதனை எதிர்க்கும்போது அது பனிபோல மறைந்து போவதைக் கண்டு நாம் அதிசயிப்போம். பிரச்சினைகள் புலி போல வந்து அந்தக் காட்டுப் பூனையைப் போல ஓட்டம் பிடித்துவிடும். அல்லேலூயா.
எனது இருதயத்தின் ஒரே ஏக்கம் என் அருமை இயேசு கிறிஸ்துவை, வேலிக்கு அப்பால் நின்று கொண்டு "எனது தாகத்துக்குத் தருவாயா?" என்று அன்பொழுக என்னிடம் கேட்ட கல்வாரி மலை நாயகனை மத்திய ஆகாயத்தில் சந்திக்க வேண்டும் என்பதுதான். இதை வாசிக்கும் அன்பான ஆண்டவருடைய பிள்ளையே, கர்த்தருடைய வருகை வெகு சமீபம் என்பதை நீ அறிவாயா? உலகில் தற்பொழுது நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அவர் வருகை நாம் நினைப்பதற்கும் மேலாக சமீபித்துவிட்டது என்பதைச் சுட்டிக் காண்பித்து நிற்கின்றது. கர்த்தர் சீக்கிரம் வரப் போகின்றார். உனது தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையை தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாகப் பாதுகாத்து அவரைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
(சுவாமி கந்தையானந்து) |
சாது கந்தையானந்து ஐயா அவர்களைக் குறித்து
உங்கள் சகோதரனின் ஒரு சில வார்த்தைகள். |
|

1991 ஆம் ஆண்டு நான் சாது ஐயாவோடு இமயமலைகளின் அடிவாரத்தில் ரிசிகேசத்தில் உள்ள அவர்களது சிறிய வீட்டில் தங்கியிருந்தேன். இந்தச் செய்தியில் நீங்கள் அந்த வீட்டைக் காணலாம். அவர்களோடு நான் தங்கியிருந்தபோது அவர்களுடைய கிறிஸ்தவ நடபடிகளை நான் கவனித்தேன். இரவில் நேரத்திலேயே நாங்கள் எங்கள் ஆகாரங்களை முடித்துக் கொண்டு எங்கள் படுக்கைக்குச் சென்றுவிடுவோம். ஐயா அவர்கள் வெகு நேரத்திலேயே படுக்கைக்குச் செல்லுவதை விரும்பினார்கள். அவர்கள் தனது வீட்டின் முன் வராந்தாவில் திண்ணையில் படுத்திருந்தார்கள். நான் உள் வீட்டிற்குள் தரையில் பேப்பர்களைப் போட்டுப் படுத்திருந்தேன்.
நான் சிறிது தூங்கி பின்னர் கண் விழித்துப் பார்த்தால் சாது ஐயா அவர்கள் தனது வேதாகமத்தை வாசித்து தியானித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். எனது தூக்கம் எக்காரணத்தைக் கொண்டும் தடைபடக்கூடாது என்பதற்காக மின்சார விளக்கை பயன்படுத்தாமல் ஒரு சிறிய மண்ணெண்ணெய் விளக்கின் உதவியால் வேதத்தை வாசித்தவர்களாக காணப்பட்டார்கள். சில சமயங்களில் அவர்கள் அப்படியே அமர்ந்த வண்ணமாக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். இரா முழுவதும் ஜெபிப்பதும், வேதம் வாசிப்பதும், தேவ மக்களுக்கு கடிதம் எழுதுவதுமாக இருந்தார்கள். இரவில் அவர்கள் அதிகமாக தூங்குவதே இல்லை. அதிகாலையில் எழுந்து ஸ்டவ்வை பற்றவைத்து காலை காப்பியை ஆயத்தப்படுத்தி அதில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றி என்னை எழுப்பிக் கொடுத்து வந்தார்கள். இரவில் சற்றே கண்ணயர்ந்துவிட்டு மற்ற முழுமையான நேரத்தையும் தேவனோடு ஐக்கியம் கொள்ளுவதில் செலவிட்டார்கள். இராக்கால ஜெப மணி நேரங்களே அவர்களது வாழ்க்கையில் பெரிய ஆசீர்வாதத்தையும், வெற்றியுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வையும் அவர்களுக்கு அளித்தது.
நான் அவர்களோடு தங்கியிருந்த நாட்களில் எந்த ஒரு இடத்திற்கும் அவர்கள் சென்று தேவையின்றி பேசிக் கொண்டிருந்ததை நான் காணவில்லை. காலை, மாலை இரு வேளைகளிலும் சரியான நேரத்திற்கு புறப்பட்டுச் சென்று தனது சொர்க்காச்சிரமம் என்ற இந்து மடத்தில் இலவசமாக வழங்கப்படும் சப்பாத்தி மற்றும் தால் (பருப்பு கூட்டு) போன்றவற்றை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் புசிப்பதற்காக அல்ல ஒரு ஏழை மனிதனுக்குக் கொடுப்பதற்காகத்தான். அவர்களுக்கு அதிக விருப்பமாக இருந்தால் ஒன்றிரண்டு சப்பாத்திகளைச் சாப்பிடுவார்கள். மற்றவை எல்லாம் தனது வீட்டிற்கு அருகில் தனது நிலத்தில் வாழும் மேற்கண்ட காச நோயாளி மனிதனுக்கே கொடுத்துவிடுவார்கள். தன்னைச் சுற்றிலும் எத்தனையோ இந்து சாதுக்கள், சந்நியாசிகள், தனது வயதில் உள்ள முதிர் வயதான இந்து தபசிகள் இருந்தாலும் அவர்களோடு பேசுவதை ஐயா அவர்கள் சற்றும் விரும்பவில்லை. தனது தேவனும், அந்த ஜீவனுள்ள தேவன் அருளிய வேத புத்தகமும் அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
|
சாது ஐயா அவர்கள் கொண்டிருந்த உள்ளம்
நிறைந்த ஆவல் |
ஐயா அவர்கள் அவ்வப்போது என்னிடம் சொன்ன ஒரு வார்த்தை என் நினைவுக்கு ஓடோடி வருகின்றது. தனது மரணம் எந்தவிதத்திலும் ரிசிகேசத்தில் இருக்கக்கூடாது. அப்படியானால் அங்குள்ள இந்து சாதுக்கள் தனது சடலத்தை இந்து சடங்காச்சாரங்களை செய்து இந்துக்களின் முறைப்படி கங்கை நதியில் போட்டுவிடுவார்கள். அந்தவிதமான தேவனுக்குப் பிரியமற்ற கொடிய காரியம் தனது மரணத்திற்குப்பின்னர் தனது வாழ்வில் நிகழ்ந்து விடாமல் இருக்க வேண்டும். அது மாத்திரமல்ல, தனது மரணம் தமிழ் நாட்டில் அதிலும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்டு தேவனைத் துதிக்கும் பாடல்களைப் பாடிக்கொண்டு தேவ மக்கள் தன்னுடைய சரீரத்தை சுமந்து சென்று கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று சாது ஐயா அவர்கள் அதிகம் அதிகமாக விரும்பினார்கள்.
ஐயா அவர்களின் முழுமையான மன விருப்பப்படி தேவன் அவர்களுடைய மரணத்தை ரிசிகேசத்தில் ஏற்படாமல் தடுத்துக் கொண்டார். கர்த்தருக்கே துதி உண்டாகட்டும். ஆனால், அவர்களின் அடுத்த விருப்பம் எவ்வண்ணமாக நிறைவு செய்யப்பட்டதோ நாம் அறியோம். தமது தாசனாம் மோசேயின் ஜீவனற்ற சடலத்தை பொறுப்பெடுத்து அதை பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கில் தமது கரத்தால் அடக்கம் செய்த சர்வ வல்லவர் தமது அன்பின் அடிமையையும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏதாவது ஓரிடத்தில் அடக்கம் செய்திருப்பார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம். |
| நல்ல போராட்டத்தைப் போராடி வெற்றியோடு தன் ஓட்டத்தை ஓடி முடித்த மெய் தேவ பக்தன். |
சுவாமி கந்தையானந்து ஐயா அவர்களைப் பற்றி ஓரளவு விரிவாக நான் பல்லாண்டுகளுக்கு முன்பு அதாவது ஜனுவரி-பெப்ரவரி 1993 ஆம் ஆண்டு நமது தேவ எக்காளத்தில் எழுதியிருந்ததை உங்களில் பலர் வாசித்திருப்பீர்கள். அந்தச் செய்திகள் யாவற்றையும் இங்கு திரும்பவும் எழுத நான் விரும்பவில்லை. எப்படியாவது நமது 40 ஆம் ஆண்டு சிறப்பு மலரில் அவர்களின் சாட்சி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பதற்காக அவர்களின் சாட்சியை சுருக்கமாகத் தந்திருக்கின்றேன்.
தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை அதை அறியாத மக்களுக்கு அறிவிக்கும் பணியில் ஐயா அவர்கள் எடுத்துக் கொண்ட பிரயாசங்கள், கால் நடையாக இமயமலைகளில் நடந்த பல்லாயிரக்கணக்கான மைல்கள், அடைந்த பாடுகள், கண்ணீர்கள் யாவும் தேவனுடைய ஞாபக புஸ்தகத்தில் மாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. தனது பரம எஜமானரை தனது உள்ளத்திலே பொக்கிஷமாக வைத்துக் கொண்ட காரணத்தால் தான் வாழ்ந்த இந்து மடத்தில் பொல்லாத இந்து சாதுக்களால் அவர்கள் அடைந்த நிந்தை அவமானம் கணக்கிலடங்காது.
ஒரு அதிசயமான காரியம், தேவ மனிதர் தனது பரலோக சந்நியாசியைப் போல தானும் ஒரு கிறிஸ்தவ சந்நியாசியாக இறுதி வரை தனது கிறிஸ்தவ வாழ்வை வெற்றியோடு ஓடி முடித்தார்கள். கர்நாடக மாநிலத்தில் தனக்கு அளிக்கப்பட்ட அழகிய பெண்ணை மணந்து குடும்பஸ்தனாக ஒரு மகிழ்ச்சியான சம்சார வாழ்வை நடத்த மனமின்றி தன்னை தன் பாலிய பருவத்திலே ஆட்கொண்ட கர்த்தருக்காக "எனது தாகத்துக்குத் தருவாயா?" என்று தனது மரணப்படுக்கையில் தன்னிடம் கேட்ட தன் அன்பின் சொரூபிக்காக லோகத்தின் அனைத்து சுகபோகங்களையும் அற்பமும் குப்பையுமாக "சீ" என்று அருவருத்துத் தள்ளி ஆண்டவருடைய தாகத்தை தன் பரிசுத்தமான வாழ்க்கையாலும், ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணும் அயராத சேவையாலும் தீர்த்து வைத்த தேவ மனிதனும், கிறிஸ்தவ பரிசுத்த துறவியுமான சாது கந்தையானந்து ஐயாவுக்காக நாம் நம் அன்பின் தேவனுக்கு என்றும் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க கடமைப் பட்டுள்ளோம். எல்லா புகழும் கனமும், மகிமையும், துதியும் நம் இயேசு அப்பா ஒருவருக்கு மாத்திரமே. அல்லேலூயா! |
|
|