தேவ எக்காள ஊழியங்களை கடந்த சுமார் 40 ஆண்டு காலம் உங்கள் உருக்கமான ஜெபங்களாலும், உதாரத்துவமான காணிக்கைகளினாலும் தாங்கி ஆதரித்து வந்த தேவப்பிள்ளைகளாகிய உங்களை பரலோகத்தின் தேவன் தாமே தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி நிறைபூரணமாக ஆசீர்வதிப்பாராக. மாதந்தோறும் இந்த எளிய தேவ ஊழியத்தை உங்கள் தியாக அன்பின் காணிக்கைகளினால் ஆதரிப்போர் உங்களில் உண்டு. ஆண்டுக்கொருமுறை காணிக்கை அனுப்பி ஊழியத்தை தாங்குவோரும், அவ்வப்போது கர்த்தர் தங்கள் உள்ளத்தில் ஏவுகிறதின்படி ஊழியத்திற்கு உதவிகள் அனுப்புவோரும் உங்களில் உண்டு. ஆண்டு தோறும் தங்கள் சந்தாக்களை ஒழுங்காக செலுத்தி தேவ எக்காளத்தைப் பெற்றுப் படிப்போரும் உங்களில் அநேகர் இருக்கின்றனர். கடந்த கால ஆண்டுகளில் இந்த ஊழியத்திற்கு உதவி செய்து எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாக தொடர்ந்து உதவி செய்ய இயலாமற் போன தேவ மக்களும் உங்களில் உண்டு. உங்கள் அனைவருக்கும் நான் கர்த்தரில் பெரிதும் நன்றி கடன்பட்டுள்ளேன். அதற்கான பிரதி பலன் நாம் விரைவில் சென்றடையப் போகும் மோட்சத்தில் உங்களுக்கு உண்டு.
உங்களுடைய தியாக அன்பால் நாங்கள் இத்தனை ஆண்டுகளும் போஷிக்கப்பட்டு உடுத்துவிக்கப்பட்டு வந்திருக்கின்றோம். உங்களுடைய அளவிடற்கரிய அன்பால் எனது இரு ஆண் மக்களும் படித்துப் பட்டம் பெற்று ஆசிரியர்களானார்கள். அந்த அன்பை அவர்கள் நன்றி நிறைந்த உள்ளத்துடன் நினைவுகூர்ந்தவர்களாக இந்நாட்களில் தேவ கிருபையால் நமது தேவ எக்காள ஊழியங்களுக்கு அவர்கள் இந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் 3200 மாதந்தோறும் கொடுத்து ஆதரித்து வருகின்றார்கள். தங்கள் பணிகளில் எதிர்பாராதவிதமாக கூடுதலான வருமானம் கிடைக்கும்போது அதிலும் நமக்கு ஒரு காணிக்கை கொடுத்து உதவுகின்றார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. பிள்ளைகள் இருவரும் ஆண்டவருடைய மெய்யான இரட்சிப்பின் பாத்திரங்களானதால் அவர்களுடைய லீவு நாட்களில் அன்பின் ஆண்டவருக்கு ஊழியமும் செய்து வருகின்றனர். நான் தனியனாக இப்பொழுது தங்கியிருக்கும் வீட்டின் வாடகை, மின்சாரம், தொலைபேசிக்கட்டணம் போன்ற செலவினங்கள் யாவையும் தேவப் பிள்ளைகளாகிய நீங்களே கொடுத்து என்னை ஆதரிக்கின்றீர்கள். என்னுடைய உடை, உணவு, பிரயாணங்கள் அனைத்தையும் நீங்களே சந்தித்து வருகின்றீர்கள். என் உள்ளம் உங்களைக் குறித்து தேவ அன்பின் நன்றியால் நிரம்புகின்றது. கர்த்தர் உங்களை உங்களுடைய விசுவாச ஓட்டத்தில் நீங்கள் வலது இடது புறம் சாயாமல் உங்களைப் பத்திரமாக ஜீவகரை கொண்டு போய்ச் சேர்க்க மன்றாடி வருகின்றேன். அந்த ஒன்றே ஒன்றுதான் தேவ மக்களாகிய உங்களுக்கு நான் செய்யக்கூடிய பதில் அன்பாகும்.
நான் தனியனாகவே எல்லா வேலைகளையும் (எனக்கு வேண்டிய ஆகாரத்தை சமைக்கும் காரியத்திலிருந்து) நானே செய்ய வேண்டியதாக விருப்பதால் நீங்கள் அனுப்பும் காணிக்கைகளுக்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்து உடனுக்குடன் ஒழுங்காகக் கடிதம் எழுத இயலாதவனாக இருந்த போதினும் தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் அதை எல்லாம் கொஞ்சம் கூட மனதில் கொள்ளாமல் கர்த்தருக்கான உங்கள் பங்கை ஒழுங்காக செலுத்தி இந்த உண்மையும், உத்தமமுமான தேவ ஊழியத்தை உங்கள் காணிக்கைகளினால் ஆதரித்து வருகின்றீர்கள். நானும் உங்கள் அன்பை அதிகமாக நினைவு கூர்ந்தவனாக எனது ஆகாரம் எனக்கு முன்பாக இருக்கும் போதும், ஆடைகளை உடுத்தும்போதும், பிரயாணங்களிலும், நீலகிரி மலைகளின் குளிருக்காக சூடான கம்பளி போர்வையை மூடி எனது இராக்கால இளைப்பாறுதலுக்கு கடைசியாக தேவ சமாதானத்துடன் கடந்து செல்லும் நாளின் கடைசிப் பகுதியிலும் தேவ மக்களாகிய உங்களை நன்றி நிறைந்த உள்ளத்தோடு நினைவுகூர்ந்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க உள்ளத்தில் மன்றாடுகின்றேன். எனது தனி ஜெபம் மற்றும் உபவாச ஜெப நாட்களில் உங்களை தேவ சமூகத்தில் நினைக்க மறப்பதில்லை.
ஆண்டவருடைய பரிசுத்த பிள்ளைகளாகிய நீங்கள் என்னை உங்கள் குடும்பத்தின் ஒரு முக்கியமான அங்கத்தினனாக கர்த்தருக்குள் முழுமையாக எண்ணி என்னை அருமையாக நேசிக்கின்றீர்கள். இந்த நாட்களில் விசேஷமாக எனது சரீர நலனில் நீங்கள் அதிகமாக அக்கரை காட்டுகின்றீர்கள். எனது நீண்ட ஆயுட்காலத்துக்காக தேவ சமூகத்தில் மன்றாடி வருகின்றீர்கள். நான் நீண்ட நாட்கள் உலகில் சுகத்தோடிருந்து தேவ எக்காளத்தில் தேவனுடைய சுத்த சத்தியத்தை உங்களுக்கு எழுதி உங்களை நீதியின் பாதையில் வழி நடத்த நீங்கள் மனதார விரும்புகின்றீர்கள். உண்மைதான், உங்களுடைய உருக்கமான ஜெபங்களே இந்நாள் வரை என்னை அதிசயமாகப் பாதுகாத்து வந்திருக்கின்றது என்பதை நானும் திட்டமாகக் கர்த்தரில் விசுவாசிக்கின்றேன்.
உங்களுடைய உற்சாகமூட்டும் கடிதங்களின் வரிகளினால் நான் பெரிதும் பெலனடைந்து தேவ ஊழியத்தை இன்னும் வைராக்கியத்தோடு செய்யத் தூண்டப்படுகின்றேன். கஷ்டங்கள், கண்ணீர்கள் மத்தியில் நீங்கள் அல்லும் பகலும் பாடுபட்டு, நல்ல வஸ்திரங்கள் உடுக்காமல், சுவையான ஆகாரங்கள் புசியாமல், உங்களை ஒடுக்கி, தகன பீடத்தில் உங்களை தகனித்து நீங்கள் அனுப்புகின்ற உங்கள் காணிக்கைகள் முழுமையாக கர்த்தருடைய நாம மகிமைக்காகவும், அழிந்து போகும் ஆத்துமாக்களின் ஈடேற்றத்துக்காகவும் ஜெபத்தோடு செலவிடப்படுகின்றது என்பதை நீங்கள் மறவாது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். "தேவரீர் உமது அடியானை அறிவீர்" (1 நாளா 17 : 18) என்று தாவீது ராஜா தன்னைக் கவனித்த தன் கர்த்தருக்கு அன்று சொன்னது போல உங்கள் சகோதரனாகிய நானும் என்னைத் தமது ராஜரீக ஊழியத்திற்காகக் குரல் கொடுத்து அழைத்த தேவனுக்கு ஆனந்த களிகூருதலோடு அந்த வார்த்தையையே இன்றும் மிகுந்த ஆரவாரத்துடன் சொல்லும் சிலாக்கியம் பெற்றிருக்கின்றேன். கர்த்தருக்கே மகிமை. |