கவுதாரி பறவைகளை வேட்டையாடும் நரிக் குறவன் அவைகள் வசிக்கின்ற இடங்களில் பூமியில் தனது சுறுக்கு கண்ணிகளை வைத்து அவைகளை மண்ணால் நன்கு மூடி மறைத்து, மண்ணின் மேல் அவைகள் விரும்பி உண்கின்ற தானியங்களை நன்றாகத் தூவிவிடுவான். தானியங்களை ஆசை ஆவலாக கொத்தி உண்கின்ற அந்தப் பறவைகள் பின்னர் தங்கள் கால்களால் பூமியைக் கிளறி தானியங்களை உண்ண முயற்சிக்கையில் நரிக் குறவனின் மறைவான கண்ணியில் அவைகளின் கால்கள் நன்கு சிக்கிக் கொள்ளுகின்றன. அவைகளை அவன் இலகுவாகப் பிடித்துக் கொள்ளுகின்றான்.
நரிகளை வேட்டையாடும் அந்த நரிக் குறவன் ஆட்டுக் கொழுப்பால் நன்கு மூடப்பட்ட பயங்கரமான கல்வெடிகளை நரிகளுள்ள கானகப் பகுதியில் போட்டு தனது தந்திரமான நரித்தோல் உடையாலும் நரிக் குரலாலும் அவைகளை தன்னண்டை வரவழைத்து அந்த கல்வெடிகளை அந்த நரிகளை கடிக்க வைத்துக் கொன்று தனக்கு உணவாக்கிக் கொள்ளுகின்றான்.
மீன் பிடிப்போர் தூண்டில் முள்ளைப் புழுவால் நன்கு மறைத்து மீனைப் பிடிக்கின்றனர். மணமான தேங்காய்த் துண்டு அல்லது மணமான கருவாட்டுத் தலையை எலிப்பத்தயத்தில் வைத்து மக்கள் எலிகளைப் பிடிக்கின்றனர்.
பராக்கிரமசாலியான சிம்சோனைப் பிடிக்க அவனது சத்துருக்களான பெலிஸ்தர் தெலீலாள் என்ற வேசியை பொறியாகப் பயன்படுத்தி அவனைப் பிடித்துக் கொள்ளுவதை நாம் பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கின்றோம்.
அதைப் போன்று தேவ ஜனத்தின் விலையேறப்பெற்ற ஆத்துமாவை தனக்கென்று தந்திரமாகப் பிடித்து அவர்களை அவியாத நித்திய அக்கினிச் சூழைக்கு கொண்டு செல்ல மனுஷ கொலைபாதகனான தந்திர சாத்தான் உலக மாயைகளை பொறியாகப் பயன்படுத்துகின்றான். உலகத்தின் ஆஸ்தி ஐசுவரியம், வீடு வாசல்கள், நகை நட்டுகள், பட்டுகள் பீதாம்பரங்கள், பட்டம் பதவிகள், லோகத்தின் மேன்மைகள், உலகப் புகழ்ச்சிகள், மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை போன்றவற்றை மாந்தருக்கு காண்பித்து அந்த மாயாபுரி சந்தைச் சரக்குகளின் மேல் மயக்கம் கொள்ள வைத்து அவர்கள் கர்த்தரை மறந்து அவைகளை முழுமையாக ருசித்துப் புசித்து அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே மரணம் என்ற தனது சங்கார தூதனை அனுப்பி அவர்களின் உயிரை வாங்கி அவர்களை நரக பாதாளத்துக்கே அனுப்பி வைத்து விடுகின்றான்.
உலக மக்களைக் கவனித்துப் பாருங்கள், சாத்தானுடைய மேற்கண்ட மாயாபுரிச் சந்தைச் சரக்குகளின்மேல் எத்தனை பைத்தியம் கொண்டவர்களாக, பித்துப் பிடித்தவர்களாக அலைவதை நாம் காணலாம். பணத்தைச் சம்பாதிப்பவன் எத்தனை கோடி தனக்கு இருப்பினும் தனக்குள்ளதில் திருப்தியின்றி இன்னும் கோடிகளை குவிக்க துடி துடித்து வெறிபிடித்து நிற்கின்றான். தொழிற்செய்யும் வியாபாரிகளை (கிறிஸ்தவ வியாபாரிகளையும் சேர்த்துத்தான்) கவனியுங்கள். அவர்களுடைய வாயின் வார்த்தைகளைக் கவனித்துக் கேளுங்கள். தனது தொழிலில் தன்னையே மறந்து பந்தயத்தில் ஓட ஆயத்தமாக முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருக்கும் பந்தயக் குதிரைகளைப் போல தங்கள் தொழிலில் மூழ்கி, மயக்க நிலையிலிருப்பதை நாம் பரிதாபத்துடன் காணக்கூடும். தங்கள் ஆகாரங்களை நேரத்திற்கு நேரம் புசியாமல், குடும்பத்தின் பிள்ளைகளோடு போதிய நேரம் செலவிட்டு மகிழ முடியாமல், போதிய இளைப்பாறுதலில்லாமல் அவர்கள் அலசடிப்படுவதை நாம் துயரத்தோடு பார்க்கலாம். அப்படியே உலகப்பிரகாரமான அனைத்து அலுவல்களில் இருப்போர் யாவரும் அதே யந்திரமயமான நிலையில் தான் போராடிக் கொண்டு இருக்கின்றனர். எல்லாம் தந்திர சாத்தானின் கைவண்ண வேலைதான்!
தேவ ஜனமே, உலகத்தில் நாம் காண்கின்ற யாவும், நமக்கென்று நாம் சொந்தம் கொண்டாடும் அனைத்தும், நாம் அனுபவித்துக் கொண்டிருப்பவைகள் எல்லாம் ஷணப் பொழுதில் தங்களுக்கு செட்டைகளை உண்டுபண்ணிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து மறையும் காரியங்களாகும். அதுமட்டுமல்ல, அவைகள் நாம் நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளவிடாதபடி நம்முடைய மனக்கண்களை குருடாக்கி கடைசிவரை நம்மை இருளிலே தடவித்திரியப்பண்ணி இறுதியில் என்றைக்குமுள்ள காரிருளுக்குள் நம்மை தலை கீழாகத் தள்ளிவிடும் தந்திர சாத்தானின் முதல்தரமான பொறிகளாகும்.
நாம் உலகத்தில் இருப்பதால் உலகக் காரியங்களோடு நாம் வாழ வேண்டியது கட்டாயமான அவசியமாகவிருப்பினும் அவைகள் மேலேயே நாம் நமது முழுப்பற்றையும், பாசத்தையும் வைத்து நமது நித்திய பேரின்ப வாழ்வை எந்த ஒரு நிலையிலும் கை நழுவ விட்டுவிடக்கூடாது. "பூமியிலே நான் பரதேசி" (சங் 119 : 19) என்ற திட்டமான உணர்வும் "நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது" (பிலி 3 : 20) என்ற பரலோக நாட்டமும் நம்மை முழுமையாக ஆட்கொண்டு நம்முடைய நெருக்கமான உலக அலுவல்களின் மத்தியில் நேரம் கண்டு பிடித்து கர்த்தரோடு இடைபடவும், நித்திய ஜீவன் வரை நிலை நிற்கிற போஜனத்துக்காக கிரியை நடப்பிக்கவும் (யோவான் 6 : 27) மிகுந்த ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். "சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது, தேவ பக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது" (1 தீமோ 4 : 8) என்ற தேவ வார்த்தையை நம் கண்களை விட்டு ஒருக்காலும் விலக்கிவிடக்கூடாது.
தேவ ஜனமே, உங்கள் மனதில் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உலகத்தின் அனைத்து மாயாபுரி கண் காட்சிகளும், காரியங்களும் சாத்தான் நம்மை நரகத்துக்கு கொண்டு செல்ல நம் ஆதித்தாய் தந்தையரை தனது தந்திரத்தால் வீழ்த்திய அதே ஏதேன் தோட்டத்தில் வடிவமைத்துள்ள ஆட்டுக் கொழுப்பால் நன்கு மூடப்பட்ட அதிபயங்கரமான கல்வெடிகளேதான்.
"நீங்கள் கிறிஸ்துவுடனே கூட எழுந்ததுண்டானால் கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள், பூமியிலுள்ளவைகளையல்ல மேலானவை களையே நாடுங்கள்" (கொலோசேயர் 3 : 1 - 2) |