சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற பரிசுத்தவான் பரமானந்தம் ஐயர் அவர்கள் தனது புத்தகங்கள் ஒன்றில் "உலகத்து பெயர் கிறிஸ்தவ மக்களுக்கு நான் ஒன்றுமில்லை. எனது தேவச் செய்திகளும், எனது ஆவிக்குரிய புத்தகங்களும் அவர்களுக்கு அற்பமானவைகள். ஆனால் தேவனுடைய பரிசுத்த மக்களுக்கு நான் அருமையானவன். தாவீது இராஜா இன்று உலகத்தில் உயிரோடிருந்திருப்பாரானால் தனது அரண்மனைக்கு என்னை வரவழைத்து தனக்கு அருகாமையில் என்னை எப்பொழுதும் உட்கார வைத்துக் கொள்ளுவார்" என்று அத்தனை பரவசமாக எழுதியிருக் கின்றார்கள். எத்தனை உண்மையான வரிகள் அவைகள்!
மேற்கண்ட தேவ மனிதர் சொன்னது போல இந்த உலக மாய இன்ப சுகங்களை நாடித் தேடி ஓடும் மறுபடியும் பிறவாத தேவனற்ற பெயர் கிறிஸ்தவ மக்களுக்கு தேவ எக்காளம் பத்திரிக்கையால் எந்த ஒரு பயனும், நன்மையும் கிடையாது. அப்படியே மறுபடியும் பிறந்தும், பெருமைக்கும், லூசிபரின் ஆணவத்துக்கும் (ஏசாயா 14 : 12 - 25) அவனது நான் என்ற மனமேட்டிமைக்கும் தங்களை ஒப்புக்கொடுத்து நிற்கும் மனத்தாழ்மையற்ற கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவ ஊழியர்களுக்கும் தேவ எக்காளத்தால் எந்த ஒரு ஆத்தும நன்மையும் கிட்டாது.
அருமை இரட்சகரை தங்களது ஆத்தும நேசராக ஏற்று மறுபடியும் பிறந்த மனத்தாழ்மையுள்ள பரிசுத்த பிள்ளைகளுக்கு தேவ எக்காளம் பரலோக மன்னாவாகும். அவர்கள் அதை ஒரு தடவை அல்ல, மூன்று தடவைகள் கூட திரும்பத் திரும்ப வாசிக்கின்றனர். கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்துக்கு அடுத்தபடியாக அதை அவர்கள் அத்தனை அருமையாக விரும்பி வாசிப்பதாக தங்களது ஆர்வ மேலீட்டின் காரணமாக கடிதம் எழுதுகின்றனர். தேவ எக்காளத்தை வாசிக்க உட்கார்ந்தால் வெகு சீக்கிரமாகவே அதின் கடைசி பக்கம் வந்து விடுகின்றது என்று விசனத்தோடு குறிப்பிடுகின்றார்கள். தங்களுடைய வருங்கால சந்ததிகள் அதை வாசித்து தேவ ஆசீர்வாதம் பெற அவைகளை புத்தகங்களாக பைண்ட் செய்து பத்திரப்படுத்தி வைக்கும் மக்களும் நிறையப் பேர் உள்ளனர். எல்லா துதி ஸ்தோத்திரங்களுக்கும், மகிமைக்கும் பாத்திரமானவர் நம் ஆண்டவர் இயேசு ஒருவரே.
"தேவ எக்காளத்தை வாசிக்க வேண்டாம் என்று சொன்ன ஒரு பாஸ்டருடைய வார்த்தையை நம்பி சில ஆண்டு காலம் நான் அதை எனது கையால் கூட தொடாமல் இருந்தேன். ஆனால், ஒரு நாள் அது எப்படித்தான் இருக்கின்றது என்ற எண்ணத்தோடு அதை வாசிக்க ஆரம்பித்து அதை முற்றுமாக வாசித்து முடித்தேன். அதை வாசித்து முடித்ததும் "இந்த அருமையான ஆவிக்குரிய பத்திரிக்கையை நாம் அந்த பொறாமைக்கார கபடஸ்தனான தேவ ஊழியனின் வார்த்தையை நம்பியல்லவா இத்தனை நீண்ட ஆண்டுகளும் வாசிக்காமல் இருந்துவிட்டோம் என்று கூறி நான் எனது மார்பிலே அடித்து தேவனிடம் மன்னிப்பு கேட்டேன்" என்று ஒரு தேவப் பிள்ளை ஒரு தடவை எனக்கு கடிதம் போட்டிருந்தார்கள்.
உண்மையோ உண்மைதான். ஆண்டவர் இயேசுவை உண்மையாய் நேசிக்கின்றவர்களுக்கும், மெய்யாகவே யோவான் 3 : 3 ன்படி மறுபடியும் பிறந்தவர்களுக்கும், இந்த உலகத்தில் தேவனுக்கு முன்பாக துப்புரவான பரிசுத்த ஜீவியம் செய்ய வாஞ்சித்து கதறுகின்றவர்களுக்கும் (லேவியராகமம் 20 : 26) தேவனுடைய பரலோக நித்திய இளைப்பாறுதலுக்குள் (எபிரேயர் 4 : 9) பிரவேசிக்க இராப்பகலாக கண்ணீரோடு ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பரிசுத்த பக்தர்களுக்கும் எளிமையான தேவ எக்காளப் பத்திரிக்கை ருசித்து புசிக்கும் தேனிட்ட பணியாரமாம் பரலோக மன்னாவேதான். ஆனால், மற்ற பெயர் கிறிஸ்தவ உலக மக்களுக்கும், தங்கள் பொன்னான காலத்தை டி.வி. பெட்டிக்கு முன்பாக இராப் பகலாக சாஷ்டாங்கமாக விழுந்து பார்த்துக் கொண்டிருப்போருக்கும், தேவ ஊழியத்தை தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கான இம்மை வாழ்வின் ஆதாயத் தொழிலாக தங்கள் கரங்களில் எடுத்திருக்கும் ஜீவனுள்ள தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறியாத பெருமைக்கார தேவ ஊழியர்களுக்கும் தேவ எக்காளம் ஒரு செப்புக்காசுக்கும் உதவாத குப்பைப் பத்திரிக்கைத்தான். அதை அவர்கள் ஒருக்காலும் வாசிக்க விரும்பார்கள். அது அவர்களுக்கு பயனளிக்கவும் மாட்டாது. |