தேவ எக்காளம் - தேவனுடைய பத்திரிக்கை

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. தேவ எக்காளம் தேவனுடைய பத்திரிக்கை என்று குறிப்பிட்டு எனக்கு கடிதம் எழுதும் தேவ பிள்ளைகள் உண்டு. உண்மைதான், தேவ எக்காளம் தேவனுடைய பத்திரிக்கைதான். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. தேவ எக்காளம், ஜீவனுள்ள பரிசுத்த தேவனை மாத்திரம் உயர்த்திக் காண்பிக்கும் பத்திரிக்கை. முழுமையாக அவருடைய பரிசுத்த நாமத்தை மட்டும் மகிமைப்படுத்தும் ஒரு பத்திரிக்கை. மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், சிலுவையையும், சிலுவைப் பாதையையும் தேவ ஜனத்துக்கு பிரசங்கிக்கும் பத்திரிக்கை. ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய கடந்த கால பாவ அக்கிரமங்களுக்காக தன் மார்பில் அடித்துப் புலம்பி நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு தேவ சமூகத்தில் தன்னுடைய பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்று யோவான் 3 : 3 ன்படி மறுபடியும் பிறந்த திட்டமான புது சிருஷ்டிப்பின் (2 கொரி 5 : 17) பரலோக அனுபவத்துக்குள் வந்தே ஆக வேண்டும் என்பதை எந்த ஒரு சாக்குப்போக்குக்கும் இடமின்றி திட்டமும் தெளிவுமாக அடித்துக்கூறும் பத்திரிக்கை. பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை (எபிரேயர் 12 : 14) என்பதை அடிக்கோடிட்டுக் காண்பிக்கும் பத்திரிக்கை. ஒரு மெய்க் கிறிஸ்தவன் இந்த உலக வாழ்வில் பாடுகளையும், துன்பங்களையும், துயரங்களையும், கண்ணீர்களையும், உபத்திரவங்களையும் அனுபவித்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு கண்ணீர் நிறைந்த கண்களோடு தன் பரம பிதாவின் நித்திய விண் வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும் (உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு (யோவான் 16 : 33) நாம் அநேக உபத்திரவங்களின் வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் (அப் 14 : 22) என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறும் பத்திரிக்கை. இந்த உலக வாழ்வில் நோய் நொடிகளின்றி, சீரும் சிறப்புமாக, செல்வ செழிப்பில் மிதந்து வாழ்ந்து திரேகமதின் இன்ப சுகத்தைக் கருத்தோடு பேணிப் பாதுகாக்கும் கிறிஸ்தவ வாழ்வுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்திக் காண்பிக்கும் பத்திரிக்கை. தேவன் தம்முடைய சுய ரத்தத்தால் சம்பாதித்த தேவ ஜனத்திற்கு முன்பாக நிலையில்லா சரீர சுகத்தையும், வியாதி துன்பமற்ற 100 ஆண்டு கால சுகபோக வாழ்வையும், ஆஸ்தி ஐசுவரியம், பங்களாக்கள், தோட்டங்கள், விலையுயர்ந்த கார்கள், ஆடம்பர வாழ்வுகள், மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமையாகிய உலக மாயாபுரிச் சந்தை சரக்குகளைக் காண்பித்து, உலக வாழ்வுக்குப் பின்னர் தேவ ஜனம் தேவனால் ஆயத்தம் பண்ணப்பட்டுள்ள நித்திய இளைப்பாறுதலுக்குள் (எபி 4 : 9) பிரவேசிக்கக் கூடாமல், பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப் பட்டிருக்கிற நித்திய அக்கினிக்கு (மத்தேயு 25 : 41) பெருங்கூட்டம் மக்களை ஒட்டு மொத்தமாக வழிநடத்திக்கொண்டிருக்கும் ஆசீர்வாதப் பிரசங்கிகளை கடும் வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கும் பத்திரிக்கை.

மனதை மயக்கும் பேச்சிலும், பிரசங்கத்திலும், எழுத்திலும் அல்ல ஒரு தேவ ஊழியன் தனது பரிசுத்தமான, பிரகாசமான வாழ்க்கையால் மட்டுமே தனது பரிசுத்த கர்த்தரை இருளில் வாழும் மாந்தருக்கு எடுத்துக் காண்பிக்க வேண்டும் என்பதை அடித்துக்கூறும் பத்திரிக்கை. ஜெபம், உபவாசம், சரீர ஒடுக்கமின்றி மெய் பக்தி வாழ்க்கை ஒருக்காலும் கிட்டாது என்பதை ஆணித்தரமாகக் கூறும் பத்திரிக்கை. பெருமை, ஆவிக்குரிய அகந்தை, தான் பெரிய தேவ ஊழியன் என்ற மேட்டிமைக்கு எதிராக போராடும் பத்திரிக்கை. பூமிக்குரியவைகளை அல்ல, தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்காக ஆயத்தம்பண்ணின மேலானவைகளை (1 கொரி 2 : 9) நோக்கும்படியாக தேவ ஜனத்தின் கண்களுக்கு கலிக்கம்போடும் பத்திரிக்கை. இந்த உலக வாழ்வின் அனைத்துக் காரியங்களும் முதல்தரமான மாயை என்பதையும், வேஷமாகவே மனுஷன் திரிந்து விருதாவாகவே சஞ்சலப்பட்டு, ஆஸ்தியை சேர்த்து, யார் அதை வாரிக் கொள்ளுவான் என்று அறியாமல் செத்து மடிவதை (சங் 39 : 6) தோலுரித்துக் காண்பிக்கும் பத்திரிக்கை. இன்னும் எழுதிக்கொண்டே செல்லலாம். இந்தவிதமான அனைத்து சத்தியங்களையும் தேவ எக்காளம் சுமந்து வருவதால் அது தேவனுடைய பத்திரிக்கையேதான். அதில் ஒரு துளிதானும் சந்தேகமே கிடையாது. அல்லேலூயா.

தேவ எக்காளம் பத்திரிக்கைச் செய்திகளை வாசித்து மனந்திரும்பி இரட்சிப்பின் பாத்திரங்களான மக்கள் அநேகருண்டு. தேவ எக்காளம் பத்திரிக்கையை வாசித்து அதின் மிஷனரிச் செய்திகளால் தொடப்பட்டு தங்கள் வாழ்வை கர்த்தருக்கு ஒப்புவித்து மிஷனரிகளாக வட இந்திய மாநிலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற தேவ மக்கள் உண்டு. மகிமை நம் ஆண்டவருக்கே. அதின் செய்திகளால் தொடப்பட்டு தொலைக்காட்சி, செய்தித்தாட்களை வீசி எறிந்த கர்த்தருடைய பிள்ளைகள் பலர் உண்டு. ஜெபம், உபவாசமில்லாமல் வறண்ட பாலைவன கிறிஸ்தவ வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அநேக கிறிஸ்தவ மக்கள் தேவ எக்காள செய்திகளை வாசித்து ஒழுங்கான ஜெப உபவாச வாழ்க்கையை மேற்கொண்டு இப்பொழுது கர்த்தரில் களிகூரும் ஆசீர்வாதமான தேவ மக்களாக காணப்படுகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டிணம் என்ற ஊரில் பார்வதி என்ற ஒரு கிறிஸ்தவ சகோதரி தேவ எக்காள பத்திரிக்கையை வாசித்ததின் காரணமாக தனது நிச்சயமான தற்கொலை முயற்சியிலிருந்து கர்த்தர் காத்துக் கொண்டதை பல்லாண்டு காலத்திற்கு முன்பாக எனக்கு எழுதியிருந்தார்கள். அன்பின் ஆண்டவருக்கு நாம் துதி செலுத்துவோம்.

தேவ எக்காளத்தின் அருமையான தேவச் செய்திகளை, கடந்த கால பக்த சிரோன்மணிகளின் அற்புதமான வாழ்க்கை வரலாறுகளை, பறவைகள், பாம்புகள், காட்டு விலங்கினங்கள் போன்றவைகளிலிருந்து நான் எழுதும் எடுத்துக்காட்டுகளை தங்கள் பிரசங்கங்களில் குறிப்பிடும் குருவானவர்கள், பாஸ்டர்கள், தன்னார்வ தேவ ஊழியர்கள் ஏராளமுண்டு. அந்தச் செய்திகளால் மக்கள் தொடப்படுவதாகவும் எழுதுகின்றனர். வீடுகளில் நடக்கும் ஜெபக்கூட்டங்களில், ஓய்வுநாள் பள்ளிகளில் தேவ எக்காளத்தின் செய்திகள் பரவலாக பயன்படுத்தப்படுவதை நினைத்து கர்த்தரைத் துதிக்கின்றேன். தேவ எக்காளத்தின் ஆவிக்குரிய செய்திகளையும், அதில் காணப்படும் பரிசுத்த பக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தங்கள் கிறிஸ்தவ பத்திரிக்கைகளில் தேவ எக்காளத்தின் பெயர் குறிப்பிடாமல் தாங்களே எழுதுவது போல வெளியிடும் தேவ மக்கள் உண்டு. எந்தவிதத்திலும் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுகின்றது. கர்த்தர் அந்த மக்களை ஆசீர்வதிப்பாராக.

மெய்யான தேவ பிள்ளைகள் தேவ எக்காளத்தை மிகவும் வாஞ்சையோடு நேசித்து வாசிக்கின்றனர். தேவ எக்காளம் எப்பொழுது வரும் என்று ஆவலோடு காத்திருந்து அது வந்தவுடன் அது 100 க்கும் அதிகமான பக்கங்களாக இருந்தாலும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு, சமயம் கிடைக்கும் போது திரும்பவும் அதை நிதானமாக படிக்கும் வாஞ்சையுள்ள ஆத்துமாக்கள் பலருண்டு. தேவ எக்காளம் வந்ததும் தங்களுக்குள் போட்டிப்போட்டுக்கொண்டு குடும்பத்தின் ஒவ்வொரு நபரும் வாசிக்கின்றனர். வாசித்து முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வரும் மற்ற கிறிஸ்தவர்கள் தாங்கள் வாசிப்பதற்காக அதை எடுத்துச் சென்றுவிடாதபடி அதைப் பத்திரப்படுத்திக் கொள்ளுகின்றனர். காரணம், அதை எடுத்துப் போகின்றவர்கள் கட்டாயம் திரும்பவும் கொண்டு தரமாட்டார்கள் என்பதை அவர்கள் நன்கு கண்டு வைத்திருக்கின்றனர். அதை யார் யார் வாசிப்பார்களோ அந்த மக்களுக்கெல்லாம் அது தேனிட்ட பரலோக மன்னாவாக இருக்கும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அநேக கிறிஸ்தவ வீடுகளில் தேவ எக்காளத்தின் பிரதிகளை புத்தக ரூபமாக பைண்ட் செய்து அதை திரும்ப திரும்ப வாசிக்கின்றனர். சில தேவ மக்கள் அப்படிப் பைண்ட் செய்த புத்தகங்களை தங்களுடைய பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்து வரும்போது படித்துப் பயன்பெறும்படியாக விலையுயர்ந்த பொன் ஆபரணங்களைப்போல பொக்கிஷமாக வைத்துக் கொள்ளுகின்றனர். சில தேவ பிள்ளைகள் அப்படி பைண்ட் செய்த புத்தகங்களை ஊரிலுள்ள மற்ற கிறிஸ்தவ மக்களும் வாசித்துப் பயன் அடைவதற்காக சுற்றுக்கு விடுகின்றனர். ஒருவர் வாசித்து முடித்ததும் அடுத்தவர் வாசிப்புக்காக அது போகின்றது. அப்படியே அது ஊர் முழுவதும் சுற்றி வருகின்றது. ஒரு விருத்தாப்பிய பரிசுத்தவாட்டியான தாயார் சமீபத்தில் "நான் செல்லும் கிறிஸ்தவ வீடுகளில் எல்லாம் தேவ எக்காளம் மிகவும் பத்திரமாக பேணிப்பாதுகாக்கப்பட்டு வருவதை நான் ஆச்சரியத்துடன் காண்கின்றேன்" என்று என்னிடம் சொன்னார்கள். "தேவ எக்காளத்தை கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்து வாசித்து பயன் அடைகின்றேன்" என்று எழுதுகின்றவர்களும், "கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம், மோட்ச பிரயாணம், அடுத்தபடியாக தேவ எக்காளத்தை மூன்றாம் இடத்தில் வைத்து நேசித்து பயன் அடைகின்றேன்" என்று எழுதும் தேவ மக்கள் உண்டு. கர்த்தருக்கே மகிமை.

தேவ எக்காளத்தை தங்கள் கண்களில் கண்ணீர் வடிய வடிய அழுதுகோண்டே வாசித்ததாக எனக்கு வந்த கடிதங்கள் ஏராளம். "தேவ எக்காளத்தை என் கரங்களில் எடுக்கும் ஒவ்வொரு சமயமும் நான் நடு நடுங்குகின்றேன். காரணம், அது எனது நிலையில்லா உலக வாழ்வின் காரியங்களையும், நான் ஆண்டவரை சந்திக்க உடனே ஆயத்தப்பட வேண்டும் என்பதையும் எச்சரிப்புடன் நினைப்பூட்டுகின்றது" என்று ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ வாலிப மகள் ஒரு தடவை என்னிடம் சொன்னாள்.

தேவ எக்காளம் இப்படி அநேகருக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்து வருவதின் ஒரே காரணம், அது முழங்கால்களில் அதிகமான ஜெபத்தோடும், அவ்வப்போது உபவாசத்தோடும், மிகுந்த ஆத்தும பாரத்தோடும் தயாரிக்கப்படும் பத்திரிக்கையாகும். அதை எழுதும் ஏழை மோட்ச பிரயாணியாகிய நானே அதை அடிக்கடி எடுத்து வாசித்து பரிசுத்த ஆவியானவர் என்னை தமது கரத்தின் கருவியாக எத்தனை அருமையாக எடுத்துப் பயன்படுத்தியிருக்கின்றார் என்று நினைத்து ஆச்சரியத்துடன் உள்ளம் கசிவேன். எல்லா துதி, கனம், மகிமை நம்மைத் தமது இரத்தக் கிரயத்தால் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட நம் அன்பின் ஆண்டவர் ஒருவருக்கே உண்டாவதாக. ஆமென்.

 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM