தேவப் பிள்ளையே, உங்கள் உள்ளத்தின் பாரமான
ஜெபத்தை ஆவலோடு எதிர் நோக்குகின்றோம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. அன்பின் ஆண்டவர் கிருபை கூர்ந்தால் இந்த ஆண்டிலும் அதாவது செப்டம்பர் மாதக் கடைசி வாக்கில் நமது வாகன தேவ ஊழியத்தை வழக்கம்போல உத்தராஞ்சல் மாநிலத்தில் மேற்கொள்ளவிருக்கின்றோம். அதற்காக நாங்கள் ஏற்கெனவே இந்த வருடத்தின் மார்ச் ஏப்பிரல் மாதங்களில் தேவ பெலத்தால் நீண்ட உபவாச ஜெபங்களை மேற்கொண்டோம். தொடர்ந்து தேவ சமூகத்தில் கர்த்தருடைய அளவற்ற கிருபைகளுக்காகவும், அவருடைய ஆசீர்வாதங்களுக்காகவும் மன்றாடி நிற்கின்றோம்.

உத்தராஞ்சல் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக இருந்த காங்கிரஸ் அரசாட்சி மாறி பாரதீய ஜனதா இப்பொழுது ஆட்சிக்கு வந்துள்ளது. அதின் காரணமாக, அங்குள்ள தேவ ஊழியர்களுக்கும், தேவ ஊழியங்களுக்கும் எதிர்ப்பு ஆரம்பித்துவிட்டது. தேவ ஊழியர்கள் அந்த மாநிலத்திலிருந்து துரத்தப்படுகின்றனர். நீண்ட காலமாக உத்தராஞ்சல் மாநிலத்தின் அடிவாரப் பட்டணம் ஹல்த்வானியிலிருக்கும் நமது தேவ ஊழியர் பாஸ்டர் எம்.சி.ஜேம்ஸ் அவர்களை, அவர்கள் இப்பொழுது குடியிருக்கும் வீட்டை காலிபண்ணிப் போகும்படியாகச் சொல்லியிருக்கின்றார்கள். மாநிலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கும், கிறிஸ்தவ ஊழியங்களுக்கும் எதிரான ஒரு பலத்த எதிர்ப்பு அலை உருவாகிக்கொண்டிருக்கின்றது.

இந்தவித நெருக்கடியான ஒரு கட்டத்தில்தான் நாங்கள் நமது வாகன தேவ ஊழியங்களை தேவபெலத்தோடும், அவரது துணையோடும் இந்த தடவையும் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றோம்.

நாம் மேற்கொள்ளவிருக்கும் நமது வாகன தேவ ஊழியத்தை கர்த்தருக்கு மகிமையாக நிறைவேற்றி முடிக்கவும், சாத்தானுடைய அந்தகாரப் பிடியிலிருக்கும் இருளில் வாழ்கின்ற மக்களின் கரங்களில் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளை ஆத்தும பாரத்தோடு அளிக்கவும், சத்துருவான பிசாசினால் எங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் ஆயுதங்கள் அனைத்தும் அவமாய்ப் போகவும், "இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்" (வெளி 3 : 8) என்ற மகத்தான தேவ வாக்கு நமது வரவிருக்கும் தேவ ஊழியத்தில் பூரணமாக நிறைவேறவும் தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் உங்கள் ஊக்கமான ஜெபங்களின் மூலமாக எங்களைத் தாங்குங்கள். பரிசுத்த தேவ மக்களாகிய உங்களுடைய உருக்கமான ஜெபங்கள் கடந்த கால ஊழியப் பாதைகளில் நடப்பித்த அற்புதங்கள் இந்த தடவையும் கர்த்தருக்கு மகிமையாக நிச்சயமாக நடக்கும் என்று நாங்கள் முழுமையாக விசுவாசிக்கின்றோம். உண்மைதான் "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" (யாக்கோபு 5 : 16) யுத்தம் கர்த்தருடையது. "தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார், அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்து போவார்கள், அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்" (மீகா 2 : 13)

 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM