தேவன் நமக்குத் தந்துள்ள
உண்மையுள்ள அச்சகத்தார்



தேவ எக்காளத்தை பார்த்ததும் அது சிறப்பாகவும், வெகு அழகாகவும் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்து அது எங்கே அச்சிடப்படுகின்றது? எந்த அச்சுக்கூடத்தினர் அதை அச்சிடுகின்றனர்? என்று பலரும் என்னைக் கேட்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்நாட்டில் வெளியாகும் அநேக கிறிஸ்தவ பத்திரிக்கைகளைக் காட்டிலும் நம்முடைய "தேவ எக்காளம்" அழகான முகப்பு அட்டையுடன் விலையுயர்ந்த காகிதத்தில், சிறப்பாக அச்சிடப்பட்டு வெளியாகின்றது. ஆரம்ப கால ஆண்டுகளில் கொஞ்ச பக்கங்களுடன் "தேவ எக்காளம்" மற்ற அச்சுக்கூடங்களில் அச்சிடப்பட்டது. பக்கங்கள் கொஞ்சம் கூடுதலாகிவிட்டால் அந்தப்பக்கங்களை அந்த அச்சகத்தார் உடனே நீக்கிவிடுவார்கள். அப்படி பக்கங்கள் நீக்கப்பட்டு என் கரங்களை வந்தடைந்த தேவ எக்காளத்தை ஆண்டவருடைய பாதங்களில் வைத்து அதை அவருக்கு காண்பித்து அங்கலாய்த்த நாட்கள் உண்டு. ஆனால், இந்த நாட்களில் நான் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் என் மனங்குளிர கம்பியூட்டரில் டைப் செய்து அச்சிட்டு வெளியிட அன்பின் தேவன் கிருபை செய்திருக்கின்றார். அந்த அன்பின் கர்த்தருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்தமுடியும்?

கோத்தகிரியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலுள்ள குன்னூர் என்ற பட்டணத்தில் உள்ள குன்னூர் பிரிண்டிங் பிரஸ் என்ற அச்சகத்தார் நமது தேவ எக்காள பத்திரிக்கையை கடந்த 14 ஆண்டு காலமாக அச்சிட்டுத் தருகின்றார்கள்.

இந்த அச்சகத்தின் காலஞ்சென்ற நிறுவனர் திரு. மாரிமுத்து ஐயா அவர்கள் எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். பண ஆசையற்ற, யாவரையும் மிகவும் அன்புடன் நேசிக்கின்ற, எளிமையான இந்து பக்தன் ஆவார்கள். குன்னூருக்கு அருகிலுள்ள வெல்லிங்டன் ராணுவ பள்ளிக்கு அருகில் Dhody & Sons என்ற பெயரில் அச்சுக்கூடம் அமைத்து அச்சுத் தொழிலில்அந்த நாட்களில் கொடிகட்டிப் பறந்த ஒரு நிறுவனத்தில் அச்சுக்கலையை சிறப்பாக கற்று தனது சொந்த அச்சகத்தை பின்னர் அவர்கள் குன்னூரில் ஆரம்பித்தார்கள்.

அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் இளைய குமாரன் திரு.ஆறுமுகம் அவர்கள் தனது தந்தையின் தொழிலை எடுத்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் முயற்சியால் இன்று நீலகிரி மலைகளில் அவர்களது அச்சுக்கூடம் முதன்மை ஸ்தானத்தில் விளங்குகின்றது. அவர்களும் தனது தகப்பனாரிடமிருந்து அச்சுத் தொழிலை நன்றாக கற்றுக்கொண்டதுடன் அவர்களைப் போல அன்புள்ளம் கொண்டவர்கள். கிறிஸ்தவ மக்கள் பலரிடம் காணப்படாத மிகுந்த உண்மை அவர்களிடம் உண்டு.

இங்கே நமது குன்னூர் அச்சுக்கூடத்தில் நாம் வாங்கிக் கொடுக்கும் நமது பேப்பரை தனி அலமாரியில் வைத்து அதில் ஒரு துண்டு காகிதத்தைக் கூட அவர்கள் தங்கள் தேவைக்கு எடுக்கமாட்டார்கள். நான் அங்கு போகின்ற சமயம் என்னைக் கூப்பிட்டு "வந்து பாருங்கள், உங்கள் பேப்பர் எங்களிடம் இவ்வளவு கையிருப்பு உள்ளது, நீங்கள் இன்னும் இத்தனை பதிப்புகளுக்கு காகிதம் வாங்க அவசியமில்லை" என்று என்னிடம் சொல்லுவார்கள். நமக்கு எந்தெந்த விதத்தில் பணத்தை மிச்சம்பண்ணிக் கொடுக்க முடியுமோ அந்தவிதத்தில் அவர்கள் கரிசனையாக இருப்பார்கள்.


நீண்ட பொறுமையுள்ள சகோதரன்

கடந்த ஆண்டுகளில் நான் நமது தேவ எக்காளத்தில் இந்து மதத்தின் சில தப்பரையான காரியங்களின் பேரில் சற்று கடினமாக எழுதியதை உங்களில் பலர் வாசித்திருப்பீர்கள். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற இடத்தில் ஒரு இந்து மனிதர் கடையில் சாமான் வாங்கும்போது தனக்கு சாமான் சுற்றப்பட்ட தேவ எக்காளத்தின் தாள் ஒன்றில் எழுதப்பட்ட அந்த இந்து மத விசயங்களை வாசித்து கொந்தளிப்படைந்து என்னைக் கொல்லப் போவதாகவும், அதை அச்சிட்ட அச்சகத்தை தீ வைத்துக் கொளுத்தப் போவதாகவும் எனக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். இத்தனையிருந்தும், இந்து மார்க்கத்தில் மிகவும் பக்தியுள்ள நமது அச்சக உரிமையாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் அவைகளை எழுதின என்னை கோபம் கொண்டு ஒரு வார்த்தை பேசியதில்லை. "இனி நான் உங்கள் பத்திரிக்கையை அச்சிடமுடியாது" என்று சொல்லவில்லை. அதற்கு மாறாக, ஒரு நாள் என்னிடம் அந்தப் பத்திரிக்கையை காண்பித்து "இப்படி எல்லாம் நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள், நான் உங்களை தடைசெய்யவில்லை. அதினால் உங்களுக்கு நன்மை இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். நன்மை இருந்தால் தொடர்ந்து எழுதுங்கள்" என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும் என்னிடம் அன்பாகச் சொல்லி விட்டு அமைதியாகவிட்டார்கள். அன்றிலிருந்து அப்படி எழுதுவதை முற்றுமாக நான் விட்டுவிட்டேன். அப்படி ஏதாவது குறிப்பிட்டாலும் இந்து மக்களின் மனம் எந்தவிதத்திலும் புண்படாதவிதத்தில் மிகுந்த கவனத்தோடு எழுதுவேன்.

 

நமது தேவ எக்காளத்தை அதிகமாக நேசிப்பவர்கள்

நான் ஒரு தடவை தேவ எக்காளத்தில் "தேவ எக்காளம் எல்லா கிறிஸ்தவ மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்காது" என்ற தலைப்பில் ஒரு சிறிய செய்தி எழுதினேன். அதை அவர்கள் வாசித்துவிட்டு "நீங்கள் ஏன் அப்படி எழுதினீர்கள்? நான் அதை வாசிக்கின்றேன், அது எனக்கு பிரயோஜனமாக இருக்கின்றது" என்று என்னிடம் சொன்னார்கள்.

தேவ எக்காளத்தை தயாரிக்கும் விசயத்தில் முகப்பு அட்டையில் எந்த எந்த கலர்களை பயன்படுத்தலாம், எப்படி அதை அழகாக வெளிக்கு கொண்டு வரலாம் என்று ஒரு குழுவாக (Team work) நின்று நமது அச்சகத்தார் செயல்படுகின்றார்கள். இங்கு அடிக்கடி மின் தடங்கல்கள் வருவதால் நம்மிடமுள்ள கம்பியூட்டரை தடையின்றி இயக்கவும், தேவ எக்காளத்தை ஏற்ற சமயத்தில் அச்சிடவும் ஒரு மின் உற்பத்தி யந்திரத்தை வாங்கிக்கொடுக்க நமது திரு.ஆறுமுகம் சகோதரனை அணுகினேன். அவ்வளவுதான், கோவையில் ஒரு பிரபலமான ஆளைப் பிடித்து அவர் மூலமாக Honda கம்பெனியின் கோவை நிறுவன உரிமையாளரை அணுகி மற்றவர்களுக்கு விற்கும் விலையைவிட நமக்கு இன்னும் குறைந்த விலையில் மிகவும் பயனுள்ள ஒரு ஜெனரேட்டரை அவர்கள் நமக்கு வாங்கித் தந்து ஒரு திறமையுள்ள Electrician ஐ கையுடன் அழைத்து வந்து ஒரு நாள் பகற்காலம் முழுவதும் இங்கு கோத்தகிரியில் என்னோடிருந்து அதை அமைத்துக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். மத்தியானம் அவர்களுக்கு சற்று ஓய்வு தேவைப்பட்ட போது கட்டிலில் படுக்காமல் கீழே தரையில் பாயை விரித்து தலையணை இல்லாமல் படுத்திருந்தார்கள். நல்ல வசதியான அவர்கள் அப்படித் தாழ்மையாக நடந்து கொண்ட செயல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

நம்முடைய தேவ எக்காளத்தை அச்சிடுவதற்காக அவர்கள் நம்மிடம் அதிகமான அச்சுக்கூலி வாங்குவதில்லை. "நீங்கள் தேவ எக்காளத்தை பணம் சம்பாதிக்கும் வியாபார நோக்கத்துடன் எழுதுவதில்லை, கர்த்தருக்காக எழுதுகின்றீர்கள். அது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, நான் உங்களிடம் ஒருக்காலும் அதிகமாக பணம் வாங்கமாட்டேன்" என்று கூறுவார்கள். நானும் தேவ கிருபையால் இந்த 14 ஆண்டு காலத்தில் அவர்களுக்கு ஒரு பைசா கூட கடன்படாதவனாக நடந்து கொண்டேன். கர்த்தருக்கே துதி உண்டாவதாக. அச்சுக்கூலியை முன் கூட்டி ஆயத்தம் செய்து வைத்துக் கொண்ட பின்னர்தான் தேவ எக்காளத்தை ஆயத்தம் செய்யத் தொடங்குவேன். பத்திரிக்கை கிடைத்த உடன் தானே அதற்கான அச்சுக்கூலி கொடுக்கப்பட்டுவிடும். எல்லாம் தேவகிருபையே.

நம்முடைய தேவ எக்காள ஊழியத்தை நேசிக்கும், நமக்கு தேவ எக்காளத்தைச் சிறப்பாக அச்சிட்டுத் தரும் நமது குன்னூர் பிரிண்டிங் பிரஸ் அச்சக உரிமையாளர் திரு.ஆறுமுகம் அவர்களையும், அங்கு பணிபுரியும் அனைத்து அன்பு மக்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து வழிநடத்த நாம் ஜெபிப்போமாக. நமது அச்சகத்தின் உரிமையாளர் மற்றும் அங்கு பணி செய்யும் பிள்ளைகளின் படத்தையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM