வாசலண்டை சேரவே அதன் மேலே "ஜீவ விருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்கள் ஆகிறதற்கும் வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும், அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்" (வெளி 22 : 14) என்கிற வாசகம் பொன் எழுத்தில் எழுதப்பட்டிருக்கக் கண்டார்கள்.
பின்பு நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால், அந்த ஒளிமயரூபிகள் பிரயாணிகள் இருவரையும் நோக்கி: நீங்கள் வாசல் ஓரமாய் வந்து உள்ளே இருக்கிறவர்களைக் கூப்பிடுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் கூப்பிட்டார்கள். உடனே ஏனோக்கு, மோசே, எலியா முதலானவர்கள் மேலேயிருந்து எட்டிப் பார்த்தார்கள். அப்பொழுது அவர்களுக்கு, இந்தப் பிரயாணிகள், இந்த நகரத்தின் எஜமான் மேலுள்ள அன்பால் ஏவப்பட்டு நாசபுரியில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. அதோடு பிரயாணிகள் இருவரும் தங்கள் யாத்திரையின் ஆரம்பத்தில் அவரவர் பெற்றுக் கொண்ட நற்சாட்சி பத்திரங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். அந்தப் பத்திரங்கள் ராஜ சமூகத்தில் கொண்டு போகப்பட்டன. அரசன் அதை வாசித்துப் பார்த்து: அந்த மனிதர் எங்கே? என்று கேட்டார். அதோ வாசலுக்கு வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. உடனே அவர்: "சத்தியத்தைக் கைக்கொண்டு வருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.
அப்பொழுது நான் என் சொப்பனத்தில் அவர்கள் இருவரும் வாசலுக்குள் பிரவேசித்ததைக் கண்டேன். இதோ அவர்கள் பிரவேசிக்கும்போதே மறுரூபமடைந்து, பொன்மயமான அங்கியால் உடுத்தப்பட்டார்கள். சுரமண்டலங்களைப் பிடித்தவர்களும் கிரீடம் தரித்தவர்களுமான எண்ணிறந்த பேர் அவர்களைச் சந்திக்க வந்து, அவர்கள் தங்களோடு கூடி ஸ்துதிக்கும்படி சுரமண்டலங்களைக் கொடுத்து, அவர்களைக் கனப்படுத்தும்படியாக கிரீடமும் சூட்டினார்கள். அந்நிஷமே பரமண்டலத்து மணிகள் எல்லாம் தங்கள் நாதங்களை மறுபடியும் அடித்து முழங்கவும், "உங்கள் எஜமானுடைய சந்தோசத்துக்குள் பிரவேசியுங்கள்" (மத் 25 : 23) என்கிற சத்தம் தொனிக்கவும் என் சொப்பனத்திலே கேட்டேன். மேலும் அந்தப் பிரயாணிகள் இருவரும் "சிங்காசனத்தில் வீற்றிருப்பவருக்கும், ஆட்டுக் குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக" (வெளி 5 : 13, 14) என்று சொல்லி உரத்த சத்தமாய் பாடுகிறதையும் நான் கேட்டேன்.
அவர்கள் பிரவேசிக்கும்படியாக வாசல்கள் திறக்கப்பட்ட சமயத்தில் அவர்களுக்குப் பின்னாலே எட்டிப்பார்த்தேன். இதோ அந்த நகரம் ஜோதிமயமாய் விளங்கிற்று. அதன் வீதிகள் முதலாய்ப் பொன் தளம் போடப்பட்டதாய் இருந்தன. அதன் வழியாய்ச் சிரசில் கிரீடம் அணிந்தவர்களாயும், சங்கீதம் பாடும்படியாகக் கையில் குருத்தோலை களையும், பொன் சுரமண்டலங்களையும் பிடித்தவர்களாயும் அங்கும் இங்கும் உலாவித் திரிகிற ஆயிரமாயிரம் பேரையும் நான் கண்டேன்.
சிறகுள்ள பேர்கள் பலரையும் நான் அங்கே கண்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர் முகமாய் நின்று ஓய்வில்லாமல், தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று சொல்லிப் பாடினார்கள். இதன் பின் அந்த வாசல் அடைக்கப்பட்டது. அம்மகத்துவங்களைக் கண்டு, நானும் அங்கே போயிருந்தேன் இல்லையே என்று அதிக ஆவல் கொண்டேன். (மோட்ச பிரயாணம்)
இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவப் பிள்ளையே, உனது பாவங்களுக்காக தேவ சமூகத்தில் நீ மெய் மனஸ்தாபத்துடன் கண்ணீர் சிந்தி அழுது, நீ அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், இருளான அந்தரத்திலும், வெளியரங்கமாகவும் செய்த சிறிதும் பெரிதுமான அனைத்து பாவங்களே பாவமே அறியாத அன்பின் பரிசுத்த கர்த்தரை மூன்று ஆணிகளில் சிலுவையில் தொங்க வைத்து அவரைப் பாதகன் போல துடிதுடித்து சாக வைத்தது என்பதை எண்ணிப் புலம்பி உனது பாவங்களை மன்னிக்கும்படியாக ஆண்டவரிடம் கெஞ்சி மன்றாடி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், உலகம் தரக்கூடாததும், சொல்ல முடியாததும், மகிமையால் நிறைந்ததுமான இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொள். உன் பாவங்களால் துயரத்துக்குள்ளான மக்களுடன் ஒப்புரவாகி நீ செலுத்த வேண்டிய கடன்கள் யாவையும் உடனே செலுத்து.
உனது இரட்சிப்பின் காரியத்தில் நீ மனதில் வைக்க வேண்டிய மூன்று காரியங்கள் உண்டு. முதலாவது நீ பாவி என்று முழு மனதுடன் ஒத்துக் கொள்ள வேண்டும். "நாம் எல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்" (ஏசாயா 53 : 6) "தேவனைத்தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க கர்த்தர் பரலோகிலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். எல்லாரும் வழி விலகி ஏகமாய்க் கெட்டுப் போனார்கள், நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை" (சங் 14 : 2, 3) "இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்" (சங் 51 : 5) "எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்" (ரோ 3 : 23)
இரண்டாவது உனது நற்கிரியைகளின் மூலமாக நீ உன்னை இரட்சித்து பரலோகம் செல்ல முடியாது. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம், எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது" (ஏசாயா 64 : 6) "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு, ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2 : 8 , 9)
மூன்றாவதாக, உன்னுடைய பாவ அக்கிரமத்தின் அகோரம் எத்தனை கடூரமாக இருந்தாலும் தேவன் அவை யாவற்றையும் உனக்கு கிருபையாக மன்னித்து உன்னைப் பரலோகம் கொண்டு சேர்ப்பார்.
"உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்" (ஏசாயா 1 : 18) "அவர், நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்" (மீகா 7 : 19) "தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர், என் பாவங்களை எல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்" (ஏசாயா 37: 17) "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்" (சங் 103 : 12)
ராட்சத தேவ மனிதர் மார்ட்டின் லூத்தரின் பாவங்கள் அடங்கிய பெரிய பட்டியலுடன் சாத்தானாம் பிசாசு அவர் முன்பாக ஒரு நாள் வந்து நின்று "இதோ பார், நீ செய்த பாவ அக்கிரமங்கள், இந்தப் பாவங்களுடன் நீ ஒருக்காலும் பரலோகத்தில் பிரவேசிக்க இயலாது" என்று கூறினானாம். மார்ட்டின் லூத்தர் தனது பாவப்பட்டியலை வாங்கி வாசித்துப் பார்த்துவிட்டு பாவப்பட்டியலின் கடைசியில் "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவான் 1: 7) என்று எழுதி அவனுடைய கரத்தில் கொடுத்தாராம். அதைக் கண்ட சாத்தான் அந்த இடத்திலிருந்து உடனே ஓடி மறைந்துவிட்டானாம்.
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1 : 9) எல்லா அநியாயத்தையும் என்கின்ற வார்த்தையை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும்.
நம்முடைய கடந்தகால பாவ அக்கிரமங்களை தேவ சமூகத்தில் நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு நாம் அறிக்கையிட வேண்டும். ஏனோதானோவென்று அல்ல, கண்ணீரோடும், புலம்பல்களோடும், மெய்யாகவே தேவன் என் பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் அகோர கஸ்தி அடைந்து எனது பாவங்களுக்காக மாண்டார் என்ற மனஸ்தாபத்தின் உணர்வோடு தேவ சமூகத்தில் கதற வேண்டும். "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், தேவனே நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்" (சங் 51 : 17) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுவதுடன் "அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை, அவர்கள் பயப்படுவதுமில்லை" (எரேமியா 44 : 10) என்று கர்த்தர் பேசுகின்றார்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்களுடைய பாவங்களை தேவ சமூகத்தில் கண்ணீரோடு அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே உங்கள் வேத வசன தியானமும், உங்கள் தனி ஜெப வாழ்க்கையும் எத்தகைய ஆனந்தமான ஒன்று என்பதை நீங்கள் கண்டு கொள்ள முடியும். "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாக இருக்கிறான், பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரி 5 : 17) என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லுகின்றது. உங்களுடைய இரட்சிப்பின் நிச்சயத்துக்குப் பின்னரே உங்களுக்கும் உங்கள் ஆண்டவருக்கும் இடையிலான உங்கள் உறவு பரலோக மணவாளன், மணவாட்டிக்கு இடையிலான உறவாக மலர்வதை நீங்கள் ஆச்சரியத்துடன் காண்பீர்கள். "என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்" (உன் 2 : 16) என்ற அந்த ஆழ்ந்த செடியும், கொடியுமான ஐக்கியம் அப்பொழுதுதான் விடிவெள்ளி நட்சத்திரமாக உதயமாவதை நீங்கள் அனுபவித்து ஆனந்திப்பீர்கள். ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் அந்த மணவாளனுடைய பாதங்களில் நீங்கள் தனிமையில் அமர்ந்து அவருடைய குரலைக் கேட்க ஆசை கொள்ளுவீர்கள். "எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்" (சங் 73 : 28) என்ற தாவீது ராஜாவின் வார்த்தையின்படி நீங்கள் எப்பொழுதும் தேவனையே அண்டிக் கொண்டிருப்பீர்கள். "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை" (சங் 73 : 25) என்ற தாவீது அரசரின் வார்த்தையின்படி இந்தப் பாழுலகில் உங்களுடைய ஒரே விருப்பம் தேவன் மாத்திரமாகவே இருப்பார். "உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்" (சங் 119 : 97) என்ற தேவ வாக்கின்படி உங்கள் இரட்சிப்பின் நிச்சயத்துக்குப் பின்னரே கர்த்தருடைய வார்த்தைகள் நாள் முழுவதுமான உங்கள் தியானமாகிவிடும். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை கர்த்தர் ஒருவரையே பிரியப்படுத்தத் துடிதுடிக்கும் ஒரு வாழ்வாக விளங்குவதை நீங்கள் பரவசத்துடன் காண்பீர்கள்.
அதுமட்டுமல்ல, என்றைக்கு நீங்கள் அந்த இரட்சிப்பின் நிச்சயத்தையும், மறுபடியும் பிறந்த மனமகிழ்வின் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளுவீர்களோ அன்றிலிருந்து நீங்கள் வாழும் இந்த உலகம் துளிதானும் சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு நிலையற்ற சத்திரம் என்றும், இந்த உலகத்தில் நீங்கள் வாழும் வாழ்க்கை ஒரு அற்ப கால பரதேசியின் வாழ்க்கை (சங் 119 : 19, 1 பேதுரு 1 : 17) என்றும் கண்டு கொண்டு தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக பயத்தோடும், நடுக்கத்தோடும் இலக்கை நோக்கித் தொடருவீர்கள்.
இதைக் கருத்தோடு வாசிப்போனே, நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கின்றீர்களா? உங்கள் கடந்த கால பாவங்களுக்காக மனங்கசந்து அழுது தேவனிடம் பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றுக் கொண்டீர்களா? மறந்து விடாதீர்கள், நீங்கள் உங்கள் மரணத்தை தைரியமாகச் சந்திப்பதற்கும், பரலோகில் பிரவேசிப்பதற்கும் மறுபடியும் பிறந்த பரிசுத்த அனுபவமாகிய உங்கள் நற்சாட்சி பத்திரம் அவசியம் தேவை.
என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோசமாய்க் கொண்டாடுவேன்
இன்ப நாள், இன்ப நாள்
என் பாவம் தீர்ந்து போன நாள்!
பேரன்பர் என்னை இரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்ப நாள், இன்ப நாள்
என் பாவம் தீர்ந்து போன நாள்! |