தேவ எக்காள ஊழியத்தில் கர்த்தர் பாராட்டிய
மூன்று ஆச்சரிய அற்புதங்கள்.



தேவ எக்காள பத்திரிக்கையை தமது ஜனத்தின் ஆசீர்வாதத்திற்கு கடந்த 40 ஆண்டு காலம் எழுதி வெளியிட தேவன் என்னை உலகத் தோற்றத்திற்கு முன்பாக தெரிந்து கொண்டது (எபேசியர் 1 : 4) மாட்சியான உண்மையாகும். அதைப் போலவே அந்த எழுத்துப் பணிக்கென்று என்னை ஆயத்தம் செய்தது அதைவிடப் பிரமிக்கத்தக்க அதிசயமாகும்.


ஆங்கில அறிவை எனக்குத் தந்த அற்புதர்

1957 ஆம் ஆண்டு நான் எனது 20 ஆம் வயதில் நீலகிரி மலைகளில் கோத்தகிரி என்ற பட்டணத்திற்கு சுமார் 8 கி.மீ தொலைவிலுள்ள கில்மெல்போர்ட் என்ற ஆங்கிலேயருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் குமஸ்தா வேலைக்குச் சேர்ந்தபோது எனது ஆங்கில அறிவு சுத்த சூன்யமாகும். நான் வேலையில் சேர்ந்த முதல் நாளில் என்னிடம் கேட்கப்பட்ட Export (ஏற்றுமதி) என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று கேட்டபோது நான் தெரியாதவனாக விழித்து நின்றேன். எனது ஆங்கில அறிவின் சூன்யத்தைக் கண்ட தேயிலைத் தோட்ட நிறுவனம் என்னை உடனே வீட்டுக்கு அனுப்பிவிடுவதென்று திட்டமாக நிச்சயித்தது. ஆனால், அங்கு சென்ற நான் 19 ஆண்டுகளும் 8 மாதமும் பணி செய்து வருங்கால நாட்களில் தேவ ஜனத்திற்கு ஊழியம் செய்ய என்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது தேவனுடைய திருவுளச் சித்தமாக இருந்தபடியால் என்னை வீட்டுக்கு அனுப்ப எவராலும் கூடாது போயிற்று. அல்லேலூயா.

நான் எனது 18 ஆம் வயதில் எனது பாவங்களை கண்ணீரோடு தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றுக்கொண்டபோது நான் கர்த்தருக்கு முன்பாக வடித்த கண்ணீருக்கு அடுத்தபடியாக நான் எனது ஆங்கில அறிவுக்காக அத்தனை அதிகமாக அழுது கண்ணீர் சொரிந்தேன். நான் அந்தக் கண்ணீரை இரவில் தான் வடிப்பேன். அந்த எனது கண்ணீரின் ஜெபங்கள் தேவ சமூகத்தில் உடனடியாக அங்கீகரிக்கப்பட்டது. தேவ ஆவியானவரின் ஏவுதலால் நான் ஆங்கில வேதாகமத்தையும், தமிழ் வேதாகமத்தையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு வாசிக்கத் தொடங்கினேன். விசேஷமாக வேதாகம புருஷர்களின் வாழ்க்கை வரலாறுகளை தமிழில் வாசித்துவிட்டு அவைகள் ஆங்கிலத்தில் எப்படியாக எழுதப்பட்டுள்ளது, தமிழ் வார்த்தைகள் எப்படியாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்பதை நான் ஆராய்ந்தேன். இப்படி நான் தமிழ் வேதாகமத்தையும், ஆங்கில வேதாகமத்தையும் ஒப்பிட்டுப் படித்துக்கொண்டு வரும் நாட்கள் ஒன்றில் தற்செயலாக "தி இந்து" என்ற ஆங்கில தினசரியைப் பார்த்தேன். அது எனக்கு ஓரளவு நன்கு புரிவதாக இருந்தது. அந்த நாளிலிருந்து அந்த ஆங்கில தினசரியை ஒழுங்காக நான் வாங்கி வாசித்தேன். காலப்போக்கில் எனது ஆங்கில அறிவு நல்லவிதமாக வளர்ந்தது. ஒரு காலத்தில் Export என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் திகைத்த நான் அதே அலுவலகத்தில் உள்ள என்னோடு வேலைசெய்த மக்கள் சந்தேகமான தங்கள் ஆங்கில மொழி வார்த்தைகளுக்கு இப்பொழுது என்னிடம் விளக்கம் கேட்கும் அளவிற்கு கர்த்தர் என்னை அந்த இடத்தில் உயர்த்தி தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தினார். அல்லேலூயா.

கோத்தகிரியைச் சுற்றிலும் அந்த நாட்களில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் அநேகம் இருந்ததால் அவர்கள் படித்து முடித்த நல்ல ஆங்கில புத்தகங்கள் கோத்தகிரியில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் கூடும் சந்தைக்கு வரும். ஆங்கில அறிவில் பூரண முட்டாளான நான் அந்தப் புத்தகங்களில் பலவற்றை வாங்கினேன். அதில் ஒரு வரியைக் கூட அப்பொழுது வாசிக்கக்கூடாத போதினும் எப்படியாவது ஒரு நாள் வரும், அப்பொழுது நான் அந்தப் புஸ்தகங்கள் எல்லாவற்றையும் கட்டாயம் வாசிப்பேன் என்ற தேவன் மேலுள்ள எனது விசுவாசத்தின் நம்பிக்கை ஆழமாக இருந்தது. அப்படியே அந்தப் புத்தகங்களை எல்லாம் பின் நாட்களில் நான் வாசிக்க கர்த்தர் எனக்கு உதவி செய்தார். எனது ஏராளமான புத்தகங்களோடு 50 ஆண்டுகளுக்கு முன்பாக கோத்தகிரிச் சந்தையில் வாங்கிய புத்தகங்களில் சிலவற்றை இன்றும் பத்திரமாக வைத்திருக்கின்றேன். ஒரு ஆச்சரியமான காரியம், எனது புத்தகசாலையிலுள்ள அனைத்துப் புத்தகங்களும் (ஒரு சிலவற்றைத் தவிர) ஆங்கிலக் கிறிஸ்தவ புத்தகங்கள்தான். அத்துடன் நான் வாங்குவதும் ஆங்கிலக் கிறிஸ்தவப் புத்தகங்கள் மாத்திரமே. எல்லா துதியும் ஆண்டவர் ஒருவருக்கே.

தேவன் அருளிய அந்த ஆங்கில ஞானத்தின் காரணமாக இங்கிலாந்து தேசத்திலிருந்து பதினாராம், பதினேழாம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பியூரிட்டான்கள் (Puritans) என்ற கர்த்தருக்காக நட்சத்திரங்களாக ஜொலித்த, கர்த்தருக்காக இரத்த சாட்சிகளாக தீக்கிரையாக்கப்பட்ட பக்த சிரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை தபாலில் வரவழைத்து அந்த சரித்திரங்களை தேவபெலத்தோடு அழகாக மொழிபெயர்த்து நமது தேவ எக்காளத்தில் வெளியிட்டேன். அந்த அற்புதமான வாழ்க்கை வரலாறுகள் தமிழ் கிறிஸ்தவ மக்கள் நடுவில் ஒரு மாபெரும் எழுப்புதலின் புரட்சியையே கொண்டு வந்தது என்று நாம் திட்டமாக விசுவாசிக்கலாம். கர்த்தர் ஒருவருக்கே மகிமை. அந்த பரிசுத்த பக்த சுரோன்மணிகளின் வாழ்க்கைச் சரித்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதத்தைக் கண்டு வியந்து அந்த வாழ்க்கைச் சரித்திரங்கள் முழுமையையும் அப்படியே ஒரு புத்தகமாக வெளியிட சென்னையிலுள்ள ஒரு தேவ ஊழியர் எனது அனுமதியை நாடினார். ஆண்டவருடைய திருவுளச் சித்தம் எனக்கு திருப்தியாக இல்லாததால் நான் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

 

தமிழ் டைப்ரைட்டர் கிடைத்த அற்புதம்

ஆரம்ப கால நாட்களில் தேவ எக்காளத்தின் செய்திகளை நான் இரண்டு தடவைகள் எழுதுவேன். முதலாவது நான் எழுதவேண்டிய செய்தியை விரைவாக எழுதி முடித்துவிட்டு அதில் அடித்தல், திருத்தல் சேர்ப்பது போன்ற எல்லாக் காரியங்களையும் செய்துவிட்டு அதின் பின்னர் அச்சுக்கோர்ப்புக்கு வசதியாக அழகாக எழுதுவேன். அது ஒரு பெரிய வேலையாகும். அந்த வேலையை நான் சுமார் 22 ஆண்டுகளாக செய்து வந்திருந்தேன். வரவர அந்த வேலை எனக்கு மிகவும் கடினமாக இருந்தபடியால் இனி செய்திகளை 2 தடவைகள் எழுதுவது என்பது முற்றும் கூடாத காரியம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். அத்துடன் கரங்களும் மிகவும் பெலவீனமடைந்தன. இந்தச் சூழ்நிலையில் எப்படியாவது ஒரு தமிழ் டைப்ரைட்டர் வாங்கிவிடவேண்டுமென்று திட்டமாகத் தீர்மானித்து ஊக்கமாக ஜெபிக்க ஆரம்பித்தேன். அது 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கடைசி நாள். நீலகிரி மலைகளின் குளிர் இன்னும் நடுங்கப் பண்ணுவதாகவேதான் இருந்தது. நண்பகல் நேரம். வீட்டிற்குள் இருந்து ஜெபித்தால் குளிராக இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டு வீட்டை ஒட்டி நாங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டுக்குச் சொந்தக் காரரின் தேயிலைத் தோட்டத்திலுள்ள கிணற்றுக்கு அருகில் முழங்காலூன்றி ஜெபித்துக் கொண்டிருந்தேன். அந்த நாளின் ஜெபத்தில் முக்கியமாக இடம் பெற்றிருந்தது தமிழ் தட்டெழுத்து யந்திரம்தான். கிணற்றுக்கு அருகில் ஜெபித்த பின்னர் எழுந்து புறப்பட்டு வந்தேன். பாதை ஓரமாக வீட்டுச் சொந்தக்காரரின் பேரிக்காய் மரங்கள் நின்று கொண்டிருந்தன. திரும்பவும் என் உள்ளத்தில் ஜெபிக்கும்படியாக ஏவப்பட்டு பேரிக்காய் மரம் ஒன்றின் கீழாக அமர்ந்து என் ஜெபத்தைத் தொடர்ந்தேன். இடையில் கண்களை திறந்து மேலே பேரி மரத்தை நோக்கினேன். மரத்திலே இப்பொழுது மென்மையான கொழுந்து இலைகள் துளிர்க்கத் தொடங்கியிருந்தன. அதைப் பார்த்ததும் என் உள்ளத்தில் நான் பரவசம் கொண்டு "அப்பா, இந்த பேரிக்காய் மரம் தன்னுடைய இலைகளை எல்லாம் ஒன்று கூட பாக்கி இல்லாமல் சில மாதங்களுக்கு முன்பாக உதிர்த்துவிட்டு பட்டுப் போன மரம் போல நின்று கொண்டிருந்தது. இப்பொழுது அது மீண்டும் துளிர்க்கின்றது. இன்னும் கொஞ்ச நாட்களில் இந்தப் பசுந்தளிர்கள் பச்சை இலைகளாக மாற்றம் பெறும். அதின் பின்னர் மரத்தில் எங்கும் வெண்பூக்கள் காணப்படும். அதைத் தொடர்ந்து சிறிய காய்கள் தோன்றி பின்னர் மரமே ஒடிந்து விழும் அளவிற்கு பேரிக்காய்களால் மரம் நிறைந்து கிடக்கும். இந்த மாட்சிமையான காரியத்தை எல்லாம் செய்கின்றவராகிய நீர் எத்தனை மகத்துவமான தேவன். இப்படிப்பட்ட சர்வ சக்திமானாகிய உம்மால் அற்பனாகிய எனக்கு உம்முடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்த ஒரு தமிழ் டைப் ரைட்டர் கொடுப்பது அத்தனை கடினமான காரியமா? நீர் எனக்கு எப்படியாவது அதை தந்தேதான் ஆக வேண்டும். நீர் தாமதிக்கும் பட்சத்தில் நான் அதை கடன்பட்டாவது வாங்கிவிடுவேன். இனி என்னால் கை வலிக்க எழுதுவது முற்றும் கடினமான காரியம்" என்று கூறிவிட்டு எனது முழங்கால்களிலிருந்து எழுந்து வீட்டிற்கு வந்தேன். மேற்கண்ட வார்த்தைகளை நான் கர்த்தாவிடம் சொல்லி அதிக பட்சம் 15 நிமிடங்கள் கூட கடந்து சென்றிருக்காது. அந்த நாளுக்குரிய தபால் எனக்குக் கிடைத்தது. கடிதங்களுக்குள்ளாக ஒரு சிறிய கவரில் கடிதம் எதுவும் இல்லாமல் அனுப்புபவரின் முகவரியும் இல்லாமல் ரூபாய் 10000 க்கான டிராப்ட் வைக்கப்பட்டிருந்தது. வெள்ளைத்தாளில் சுற்றப்பட்ட அந்த டிராப்ட் தாளில் "அனுப்புதல், இருக்கிறவராகவே இருக்கிறேன்" (யாத் 3 : 14) என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. கோத்தகிரியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலுள்ள குன்னூர் என்ற இடத்திலுள்ள கனரா வங்கிக்கு அந்த டிராப்ட் எடுக்கப்பட்டிருந்தது. ஆ, எத்தனையான சர்வ வல்ல தேவன் பாருங்கள்! அதைக் கண்ட என்னால் தேவ சமூகத்தில் ஆண்டவருடைய அன்பை நினைத்து அழுவதைத் தவிர வேறொன்றையும் செய்ய இயலவில்லை. உடனே அந்தப் பணத்தைக் கொண்டு புத்தம் புதிய ரெமிங்டன் (Remington) என்ற தரமான, உறுதியான ஒரு தமிழ் டைப்ரைட்டரை நான் கோவையிலிருந்து வாங்கி வந்தேன்.

ஆனால், புதுமையான காரியம், நான் தமிழ் டைப் ரைட்டரை இதுவரை டைப் செய்து பழக்கமில்லாதவன். அதை எப்படி டைப் செய்வது என்றே எனக்கு தெரியாது. எனினும் கர்த்தருடைய அளவற்ற அன்பால் ஒரு வாரத்திற்குள்ளாக அதில் நன்றாக டைப் செய்யக் கற்றுக் கொண்டேன். அதற்கப்பால் மற்றுமொரு புதிய தமிழ் டைப் ரைட்டரை நான் வாங்கி ஒன்றில் ஒழுங்கற்ற விதத்தில் டைப் செய்த பின்னர் அடுத்த டைப்ரைட்டரில் அழகாக அச்சுக்கோர்ப்புக்கு வசதியாக டைப் செய்து தேவ எக்காள செய்திகளை அச்சுக்கு அனுப்பி வந்தேன். இப்படியாக எனது 22 வருட கையழுத்துக்கு அன்பின் தேவன் முற்றுப் புள்ளி வைத்தார். ஆண்டவருடைய அந்த அற்புதமான வழி நடத்துதலை நான் அந்த நாட்களில் நமது தேவ எக்காளத்திலும் எழுதியதை உங்களில் பலர் வாசித்திருப்பீர்கள். அதை வாசித்த நாகர்கோவிலில் வசிக்கும் ஒரு அன்பான மகள் நான் பெற்றுக் கொண்ட அந்த "அனுப்புதல், இருக்கிறவராகவே இருக்கிறேன்" என்ற கவரைப் பார்க்க ஆசை கொண்டு இங்கு கோத்தகிரி வந்த இடத்தில் என்னிடம் வந்து அந்தக் கவரை கேட்டார்கள். நான் அதை அவர்களிடம் காண்பித்தபோது அவர்கள் அடைந்த ஆச்சரியத்திற்கும், சந்தோசத்திற்கும் அளவே இல்லை. அந்தக் கடிதத்தை தன் சபை மக்களிடம் காண்பித்து அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்திவிட்டுப் பத்திரமாக கொண்டு தருகின்றேன் என்று சொல்லி என்னிடமிருந்து வாங்கிச் சென்ற ஒரு இலங்கை பெந்தேகோஸ்தே பாஸ்டர் அப்படியே கொண்டு போய்விட்டார். பல்லாண்டுகள் கடந்துவிட்ட போதினும், இந்நாள் வரை திருப்பித் தரவே இல்லை. தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கும் தம்முடைய மெய் அடியார்களுக்கு தம்முடைய வல்லமையை இன்றும் விளங்கப்பண்ணும்படியாக அவருடைய கண்கள் பூமி எங்கும் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றது. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்குத் துதி உண்டாவதாக.

 

கம்பியூட்டர் வாங்கித் தந்த நம் கருணாகரக் கர்த்தர்.

தேவ எக்காளத்திற்கான செய்திகளை கர்த்தர் அற்புதமாக எனக்கு வாங்கிக் கொடுத்த இரண்டு டைப்ரைட்டர்களின் உதவியால் சுமார் 11 அல்லது 12 ஆண்டு காலமாக டைப் செய்து தயாரித்து அச்சுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். அப்படி டைப் செய்வதும் மிகவும் கடினமான காரியமே. காரணம், கை விரல்களை பலமாக அழுத்தி அச்சுப் பதிக்க வேண்டும். அந்தக் காரியமும் எனக்கு மிகவும் கஷ்டம் என்று என் நிலை அறிந்த கருணைக் கடலாம் நம் அன்பின் ஆண்டவர் விரலால் தொட்ட மாத்திரத்தில் அச்சுப் பதிக்கக்கூடிய அற்புதமான கம்பியூட்டர் ஒன்றை எனது பிள்ளைகள் மூலமாக 2001 ஆம் ஆண்டு எனக்கு வாங்கிக் கொடுத்தார். பிள்ளைகள் எனக்கு ஒரு கம்பியூட்டர் வாங்கித் தருகின்றோம் என்று சொன்ன போது நான் அவர்களோடு அது வேண்டவே வேண்டாமென்று கடுமையாகப் போராடினேன். ஆனால் அவர்கள் என்னை விட்டபாடில்லை. "அப்பா நீங்கள் பயப்படத் தேவையில்லை, நீங்கள் கர்த்தருடைய உதவியோடு கம்பியூட்டரை மிக விரைவில் கற்றுக் கொண்டு அதில் சாதனையே படைத்து விடுவீர்கள்" என்று சொல்லி அதிக விலையில் (2001 ஆம் ஆண்டு கம்பியூட்டர்களின் விலை எல்லாம் மிகவும் அதிகம்) ஒரு கம்பியூட்டர் வாங்கித் தந்தார்கள். பிள்ளைகளின் வார்த்தையின்படியே கர்த்தாவின் அதி அற்புத அன்பினால் நான் கம்பியூட்டரை பயன்படுத்த மிகத் துரிதமாக கற்றுக் கொண்டேன். அதைப் பயன்படுத்த கர்த்தர் எனக்கு எப்படி உதவி செய்தார் என்ற காரியங்களை எல்லாம் நான் நமது தேவ எக்காளத்தின் கடந்த இதழ் ஒன்றில் விரிவாக எழுதியிருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதில் ஒரே ஒரு காரியத்தை மட்டும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். தமிழ் டைப் ரைட்டரில் இருப்பது போல கம்பியூட்டரின் கீ போர்ட் தமிழில் இல்லாததால் ஆங்கில வார்த்தைகளை வைத்தேதான் தமிழில் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆங்கில எழுத்தாகப் பார்த்து பார்த்து டைப் செய்ய வேண்டும். ஆரம்பத்தில், காலை முதல் மாலை வரை அப்படி ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்து பார்த்து டைப் செய்து மாலை சமயத்தில் ஏதோ ஒரு சிறிய தவறில் காலை முதல் மாலை வரை டைப் செய்த அனைத்து செய்திகளும் மறைந்து போயிருக்கும். அதைக்கண்ட எனது கண்கள் கண்ணீரால் நிரம்பும். இழந்து போனதை திரும்பவும் நான் அடுத்த நாள் ஜாக்கிரதையாக டைப் செய்வேன். பயிற்சியாளர்களின் எஜமானராகிய நம் அன்பின் தேவன் அந்தவிதமாக என்னைப் பழக்குவித்தபடியால் கர்த்தருடைய கிருபையால் இன்று நல்ல விரைவாக செய்திகளை கம்பியூட்டரில் தமிழில் டைப் செய்ய முடிகின்றது. கர்த்தருக்கே மகிமை.

கடந்த சுமார் 7 ஆண்டு காலமாக நமது தேவ எக்காளச் செய்திகளை நான் நமது கம்பியூட்டரிலேயே அச்சுப் பதித்து வருகின்றேன். அதின் காரணமாக, எந்த ஒரு சிரமமுமின்றி நிறைய பக்கங்களுடன், கூடுமானவரை பிழைகளின்றி தேவ எக்காளத்தை வெளியிட முடிகின்றது. 2006 ஆம் ஆண்டின் முதல் இதழ் 128 பக்கங்களுடன் வெளி வந்ததை நீங்கள் அறிவீர்கள். கம்பியூட்டர் இருப்பதன் காரணமாக கடந்த கால பரிசுத்த பக்த சிரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை முழு நீள அளவில் முழுமையாக தேவ பிள்ளைகளாகிய உங்களுக்குக் கொடுக்க தேவ கிருபையால் எனக்கு முடிகின்றது.

கம்பியூட்டரின் ஒரு மாபெரும் அதிசயச் செயல் என்னவெனில், நாம் அதில் டைப் செய்யும் செய்திகளை எப்படி வேண்டுமானாலும் நாம் நினைத்தபடி அடித்தல், திருத்தல், சேர்த்தல் எல்லாம் செய்து கொள்ளலாம். கீழுள்ள செய்தியை மேலே கொண்டு செல்லலாம், மேலுள்ளதை கீழே கொண்டு வரலாம். அதில் டைப் செய்யும் எழுத்துக்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சிறிதோ அல்லது பெரிதோ செய்து நாம் பார்க்கலாம். அதின் காரணமாக டைப் செய்யும் செய்திகளின் பிழைகளை நாம் இலகுவாக கண்டு கொள்ள முடிகின்றது. கம்பியூட்டர் வைத்திருக்கும் தேவப் பிள்ளைகளுக்கு இந்தக் காரியங்கள் எல்லாம் நன்கு தெரியும். கம்பியூட்டர் சாதனம் கர்த்தருடைய ஊழியத்திற்குச் செய்யும் மகத்தான சேவையை விவரிக்க வார்த்தைகளில்லை. அந்த அற்புத கண்டுபிடிப்பை மனிதனுக்கு வெளிப்படுத்திக் கொடுத்த தேவனுக்கு நாம் அனந்தங்கோடி ஸ்தோத்திரம் செலுத்தலாம்.

அதிலுள்ள இண்டர்நெட் இணைப்பு மூலமாக மேல் நாடுகளிலுள்ள பூர்வ காலத்து பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள், அவர்களுடைய அனலூட்டும் எழுப்புதல் பிரசங்கங்கள், அவர்கள் எழுதிய புத்தகங்களின் செய்திகள், அவர்களுடைய படங்கள் போன்ற யாவற்றையும் நாம் பெற்றுக் கொள்ள முடிகின்றது. கடந்த தேவ எக்காளத்தின் முகப்பில் காணப்படும் "வில்லியம் கிரிம்ஷா" என்ற தேவ பக்தனின் படமும் இண்டர் நெட் மூலமாகவே நமக்குக் கிடைத்தது. கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. மேல் நாடுகளில் வெளியாகும் நல்ல தரமான ஆவிக்குரிய கிறிஸ்தவ பத்திரிக்கைகளின் செய்திகளைக் கூட நாம் சந்தா செலுத்தாமல் இலவசமாக பார்த்துப் படிக்கலாம். அதிலிருந்து அச்சுப் பதிப்பு எடுத்துக் கொள்ளலாம். நாம் அப்படிச் செய்வதற்காக அந்த தேவ மக்கள் நமக்கு வசதி செய்து கொடுத்திருக்கின்றனர்.

நமக்குக் கம்பியூட்டர் கிடைத்த கடந்த சுமார் 7 ஆண்டு காலங்களில் வெளியான தேவ எக்காளங்கள் சுமந்து வந்த பரிசுத்த பக்தர்களின் முழு நீள வாழ்க்கை வரலாறுகள் பல உண்டு. அதினால் ஆசீர்வாதம் பெற்ற தேவ மக்கள் அநேக ஆயிரங்களாவார்கள். கம்பியூட்டர் நமக்கு கிடைத்திராதபட்சத்தில் தேவ எக்காளம் இதுவரை அச்சிடப்பட்டு வெளி வந்திருக்கும் என்று நான் திட்டமாக நினைக்கவில்லை. எல்லா துதி, கனம், மகிமை நம் அன்பின் ஆண்டவர் ஒருவருக்கே உண்டாவதாக. அல்லேலூயா.

 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM