2002 ஆம் ஆண்டு நாங்கள் எங்களது 15 நாட்கள் இமயமலை கிராமங்களின் வாகன தேவ ஊழியத்தை முடித்துக் கொண்டு சகோதரன் நார்ட்டன் அவர்களும் நானும் இமயமலைகளிலுள்ள உத்தர்காசி, ரிசிகேஷம் போன்ற இடங்களில் எங்களுடைய ஊழியங்களை தொடர்ந்து நடத்திவிட்டு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிக்கானீர் என்ற பட்டணத்தில் எங்கள் ஊழியத்தை மேற்கொள்ளுவதற்காக ஹரித்துவாரம் என்ற இந்து மக்களின் புண்ணிய ஸ்தலத்திலுள்ள ரயில் நிலையத்தில் ரயிலுக்காக நாங்கள் காத்திருந்தோம்.
அது ஒரு மாலை நேரம். ஹரித்துவாரம் ரயில் நிலையம் என்றதும் அந்த இடத்திலுள்ள பெரிய குரங்குகளின் நினைவுதான் எங்களுக்கு வருகின்றது. அந்த ஹரித்துவாரத்திலுள்ள கங்கை நதியில் தங்கள் பாவம் போக்க நீராடுவதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து வருகின்ற இந்து மக்கள் அந்தக் குரங்குகளை தங்கள் கடவுளரின் ஆப்த நண்பர்கள் என்று கருதுவதால் அவைகளுக்கு தின் பண்டங்கள் கொடுத்து அவைகளை வணங்குகின்றனர். அதின் காரணமாக அந்த ஹரித்துவாரம் ரயில் நிலையத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. குரங்குகள் அந்த இடத்தில் ஏராளமாக இருப்பதால் ரயில் நிலையத்துக்கு வந்து ரயிலைப் பிடிக்க வரும் மக்களுக்கு அந்தக் குரங்குகளால் மிகுந்த தொல்லைகளும் உண்டு. அவைகள் என்னதான் தொல்லைகள் கொடுத்தாலும் அந்த மக்கள் அவைகளை எல்லாம் கண்டு கொள்ளுவதே இல்லை. அந்தக் குரங்குகளில் ஒன்று தனது குட்டியுடன் அழகாக அமர்ந்திருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

நாங்கள் அந்த குறிப்பிட்ட நாளின் மாலை வேளையில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியமான காட்சியைக் கண்டோம். ஒரு குரங்கு தனது செத்துப் போன குட்டிக் குரங்கின் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டே அந்தப் பெரிய ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தது. அந்தக் குரங்கு எங்கெங்கு சென்றாலும் தனது செத்துப் போன குட்டிக் குரங்கின் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டே போனது. ரயில் தண்டவாளங்களை அது கடக்கும் போது தனது செத்த குட்டியை தனது தோளின் மேல் தூக்கிக் கொண்டு சென்றது.
அந்த வேளை அந்த ரயில் நிலையத்தில் கூடி இருந்த எல்லா மக்களும் அந்த சோக காட்சியை மிகுந்த பரவசத்தோடும், வேதனையோடும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அந்த குரங்கு ஓரிரு நாட்களாக அந்தப் பிளாட்பாரத்தில் தனது குட்டியுடன் சுற்றித் திரிந்திருக்கும் என்று நாம் யூகிக்கலாம். ஆனால், இன்னும் சில நாட்கள் சென்ற பின்னர் அந்தக் குரங்கினால் தனது செத்தக் குட்டியை தன்னுடன் கொண்டு செல்ல இயலாது என்பதை அது யோசித்துப் பார்த்திராது. தனது குட்டியை வாலைப் பிடித்து இழுத்துச் சென்ற அந்தக் குரங்கு சில நாட்களுக்குப் பின்னர் அதினுடைய வால் தனியாக வருவதை கவனித்திருக்கும். பின்னர், அதினுடைய காலைப் பிடித்து இழுத்துச் சென்றிருக்கும். இன்னும் சில நாட்களில் நாற்றமெடுத்த அந்தக் குட்டி குரங்கின் காலும் தனியாக வருவதை தாய்க் குரங்கு பார்த்திருக்கும். இப்படி ஒவ்வொரு அவயமாக அதின் உடலிலிருந்து உறுப்புகள் தனித்தனியே வந்திருக்கும்.
இந்த சம்பவத்தைக் குறித்து நான் தேவ சமூகத்தில் அதிகமாகத் தியானித்தேன். மேற்கண்ட ஹரித்துவாரம் பட்டணத்தின் குரங்கு செய்த காரியத்தையே இந்த உலகத்தின் மாயைகளை நாடித்தேடி ஓடும் ஒவ்வொருவரும் கடைசியில் கண்டு கொள்ளுவார்கள் என்பதை நான் சிந்தித்தேன். அந்தக் குரங்கு தனது குட்டியை உயிரோடு இருக்கின்றது என்று தனது புத்தியின்மையால் நினைத்துக் கொண்டது. அப்படியே இந்த உலகத்தின் மாயைகள் அனைத்தும் உயிரற்ற கானல் நீர் காட்சிகளேயல்லாமல் பிறிதொன்றுமில்லை என்பதை எண்ணிப் பார்க்காமல் மண்ணின் மாந்தர் இந்த உலகத்தின் மாயைகளை உயிரோடிருக்கும் நிஜமானவைகள் என்று எண்ணி அதின் பின்னே தலை தெறிக்க ஓடுகின்றனர். அந்த அறிவற்ற குரங்கு செய்தது போல அந்த மாயைகளை தங்கள் தோள்களின் மேல் எடுத்துப் போட்டுக் கொண்டுச் செல்லுகின்றனர்.
நாம் நமக்குச் சொந்தமானவைகள் என்று கருதும் நமது ஆஸ்தி, ஐசுவரியம், பட்டம், பதவி, வீண்ஜம்பங்கள், புகழ் இறுமாப்புகள், வீடு வாசல்கள், நிலபுலங்கள், உற்றார் உறவினர், பெண்டு பிள்ளைகள், பந்து லோகம் அனைத்தும் முதல் தரமான ஜீவனற்ற மாயைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் அந்த மாயைகளின் பின்னாக ஓடுவோர் எவராயினும் இறுதியில் அந்தக் குரங்கின் கரத்தில் தனது செத்த குரங்கு குட்டியின் வாலும், காலும் இதர உடலுறுப்புகளும் தனித்தனியே வந்தது போன்ற பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
பிள்ளைகளைப் பெற்று அவர்களைப் பாசமாக வளர்த்து வருகின்றனர். பிள்ளைகளும் தங்கள் பெற்றோர்களை அருமை bருமையாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை அன்பாக நேசிக்கின்றனர், கனப்படுத்துகின்றனர், கீழ்ப்படிந்து நடக்கின்றனர். ஆனால், பிள்ளைகள் பெரியவர்களாகி திருமணமான பின்னர் தங்கள் மனைவிமார்களுடன் சேர்ந்து அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு தங்களைப் பெற்று வளர்த்தவர்களை மதியாமல் அவர்களை உதாசீனப்படுத்தி, பின்னர் அவர்களைக் கடைசி வரை கண்டு கொள்ளாமலேயே போய்விடுகின்றனர். எத்தனை எத்தனையோ குடும்பங்களில் இன்றும் அந்தக் காரியம் நடைபெற்று வருகின்றது. ஒரு காலத்தில் எனது ஆண் மக்களுக்கு நிகர் யார் என்று சமுதாயத்தில் வீறாப்பும், பெருமையும் பேசிய அதே பெற்றோர் இப்பொழுது தங்களுக்கு ஆண் பிள்ளைகள் உண்டு என்பதைக் கூட வாய் திறந்து சொல்ல வெட்கப்பட்டு ஒடுங்கிப்போய் வாயில் வார்த்தைகளின்றி நிலை தடுமாறி நிற்கின்றனர். அநேக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆதரவு தங்களுக்கு இனி கிடையாது என்பதை அறிந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் தங்களுக்கு வரும் மாதாந்திர பென்ஷன் பணங்களைக் கொடுத்து முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கு அடைக்கலம் புகுந்து விடுகின்றனர்.
பெரிய பெரிய வீடுவாசல்களைக் கட்டுகின்றனர். 4 படுக்கை அறைகள், 3 குளியல் அறைகள், மாலை வேளையில் கணவனும் மனைவியுமாக சௌகரியமாக அமர்ந்து காற்று வாங்க வசதியாக மாடி வீட்டின் மேலறையில் பால்கனி, ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட விசாலமான சாப்பாட்டு அறை, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை வரவேற்க விசாலமான வரவேற்பறை என்று எதை எதை எல்லாமோ நாட்கணக்காக உட்கார்ந்து திட்டம் போட்டுக் கட்டி கடைசியில் அந்த மாளிகையில் ஒரு சில ஆண்டுகள் கூட குடும்பமாக கூடி வாழ முடியாமல் மரணம் தனது குளிர்ந்த கரத்தை நீட்டி வீட்டின் தலைவனையோ அல்லது தலைவியையோ தட்டிப் பறித்து அந்த மக்கள் போட்ட திட்டங்கள், கற்பனைக் கோட்டைகள் யாவையும் சுக்கு நூறாக தகர்த்தெறிந்து விடுகின்றது. பெரிய மாளிகையில் மகிழ்ச்சியோடு ஆனந்த தம்பதியினராக வாழ வேண்டிய அவர்கள் தனிமைக்குத் தள்ளப்பட்டு தனித்த ஒரே ஒரு அடைக்கலான் குருவியாக ஒரு சிறிய அறைக்குள் மட்டும் வாழும் கொடுந் துயர நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர். எல்லாம் உலக மாயைகளின் களிநடனக் காட்சி. வெளியிலிருந்து பார்ப்பவர்கள் ஆ, எத்தனை பெரிய மாட மாளிகை என்று ஆச்சரியப்பட்டு தங்கள் விரலை வாய்மேல் வைத்துச் செல்லும் அதே நேரத்தில் அந்த வீட்டினுள் நடந்திருக்கும் மாயையின் காரியம் அவர்களுக்குத் தெரியாது.
நெல்லை மாவட்டத்தின் தென் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கு நீங்கள் செல்லுவீர்களானால் பல அறைகளைக் கொண்ட அழகிய பெரிய பெரிய மாடி வீடுகள் குடியிருப்பார் யாருமில்லாமல் பாழடைந்து கிடப்பதை நீங்கள் காணலாம். ஒரு காலத்தில் எத்தனையோ திட்டம் போட்டு அந்த வீடு வாசல்களைக் கட்டி அதிலே நீண்ட நெடுங்காலம் ஆனந்த மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற திட்டமான நம்பிக்கையுடன் அந்த வீடுகளில் குடியேறிய மக்களை காலப் போக்கில் நினையாத மரணங்களும், இதர மாயையின் காரியங்களும் சின்னா பின்னமாக சிதறடித்துப் போட்டது. உலகத்தின் எல்லாக் காரியங்களும் இவ்விதமாகவே ஓர் நாளில் திடீரென்று சோகமான ஒரு முடிவுக்கு வரும்.
வீட்டின் தலைவர் மரணத்தின் விழிம்பில் இருக்கிறார். அந்த இறுதி வேளையில் தனக்கு அன்பான குடும்பத்தின் அங்கத்தினன் ஒருவனை தன்னண்டை அழைத்து அவரது காதிற்குள்ளாக "தான் மரித்துப் போன பின்னர் தனது சரீரத்தின் மேல் விழுந்து தனது மனைவி அழாதபடி கவனமாகப் பார்த்துக் கொள்ளவும், அவளுடைய கரம் தனது உடம்பின் மேல் எந்த ஒரு நிலையிலும் பட்டுவிடாதபடி ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ளும்படியாகவும்" மிகுந்த வைராக்கியத்துடன் கூறிவிட்டு கண்களை மூடி மரணம் அடைகின்றார். ஒரு காலத்தில் கணவன் மனைவியாக எத்தனையான நேச பாசத்துடன் அத்தனை அன்புடன் வாழ்ந்த தம்பதியினர் அவர்கள். ஒருவரையொருவர் ஜீவனைவிட அதிகமாக நேசித்த மக்கள் அவர்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் ஜென்ம பகையாளிகளாக மாறிவிட்டனர். மாயையின் தந்திர ஜாலங்களில் இதுவும் ஒன்றாகும்.
எங்கள் பாஸ்டர் வாலிபனாக இருந்தபோது எங்கள் பாஸ்டர் அம்மாவை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார். பாஸ்டர் அம்மாவுக்கு அந்த நாட்களில் தனது காதல் கடிதங்களில் வேதாகமத்திலுள்ள உன்னதப் பாட்டுகளின் புத்தகத்திலிருந்துதான் தனது வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து என் பிரியமே, என் ரூபவதியே, என் மணவாளியே, என் உத்தமியே, என் மானே என்று எழுதினார். ஆனால், அந்த பாஸ்டர் அம்மாவை இப்பொழுது எங்கள் பாஸ்டர் ஒரு தெரு நாயைப் போல அடித்துக் கொல்லுகின்றார் என்று அந்த சபையின் விசுவாசி ஒருவர் ஒரு சமயம் என்னிடம் கூறினார். எல்லாம் மாயை என்ற வானவில்லின் வர்ண ஜாலக் காட்சிகள்.
அண்ணன் தம்பியைக் கொல்லுகின்றான், தம்பி அண்ணனை ஆள் வைத்துக் கொலை செய்கின்றான். அக்காள் கூலிக்கு கொலையாளிகளை அமர்த்தி தம்பிக்காரனை விரட்டி, விரட்டி வெட்டிக் கொல்லுகின்றாள். ஒரு தாய் மக்கள், ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் இவர்கள். ஏன் இப்படிச் செய்கின்றார்கள்? எல்லாம், ஆஸ்தி ஐசுவரியம் என்ற மாயாபுரியின் சந்தை சரக்குகளான மாயைகளுக்காக நமது கண்களுக்கு முன்பாக கிறிஸ்தவ குடும்பங்களில் நடக்கும் படுகொலைகள்.
பொல்லாங்கனுக்குள் கிடக்கும் இந்த உலகத்தின் காரியங்கள் எல்லாம் முதல் தரமான மாயைகளாகும். பெற்றோரின் அன்பு மாறிவிடுகின்றது. தான் பெற்ற ஒரு பிள்ளையை நேசிக்கும் அவள் தான் பெற்ற மற்றொரு குழந்தையை வெறுத்துப் பகைக்கின்றாள். அன்புத் தாயாம் ரெபெக்காள் அந்தக் காரியத்தை செய்வதை தேவனுடைய வேத புத்தகம் நமக்குக் கோடிட்டுக் காண்பிக்கின்றது. பெற்ற பிள்ளைகள் தங்கள் அன்புப் பெற்றோரை மறந்து விடுகின்றனர். கணவன் மனைவியின் நீண்ட கால நேச அன்பின் உறவில் திடீரென சரிசெய்ய முடியாத ஆழமான பிளப்பு ஏற்பட்டுவிடுகின்றது. அண்ணன் தம்பி, அக்காள் தங்கை, பாச உறவில் களங்கம் உண்டாகி அவர்கள் ஜென்ம பகைஞராக மாறிவிடுகின்றனர். தங்கள் ஜீவனையே நமக்காக கொடுப்பது போல நம்முடன் நட்பு கொண்டு நமது பட்சமாக நின்ற நமது நண்பர்களும், சிநேகிதர்களும் அறியாக் காரணங்களுக்காக நம்முடனான தங்கள் நீண்ட கால அரும் பெரும் உறவை என்றுமாகத் துண்டித்துக் கொண்டு தனித்து ஒதுங்கிவிடுகின்றனர்.
ஆனால், நமது ஆனந்த மகிழ்ச்சிக்குரிய காரியம் என்னவெனில், தமது ஜீவனை நமக்காகக் கொடுத்த நம் அன்பின் ஆண்டவருடைய பரலோக அன்பு ஒன்றே என்றும் மாறாததாகும். பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப் போல அந்த தேவ அன்பு ஒன்றே எந்த ஒரு சூழ்நிலையிலும் மாறாமல் அப்படியே நம்மைச் சூழ்ந்திருக்கும். நமது வாழ்வில் எந்த ஒரு புயற்காற்று வீசினாலும், எந்த ஒரு கொடுஞ் சூறாவழிக்காற்று சீறி வீசினாலும் அந்த தேவ அன்பு துளிதானும் மாற்றமடையாமல் பத்தரை மாற்றுத் தங்கமாக ஒளி வீசிப் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தாய் தனது பாலகனை மறப்பாள், ஆனால் நான் உன்னை ஒருக்காலும் மறக்கமாட்டேன் என்று அந்த அன்பின் சொரூபி வாக்களித்துள்ளார் (ஏசாயா 49 : 15) அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன், ஆதலால் காருண்யத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன் (எரேமியா 31 : 3) என்றும் பரலோக அன்பின் கயிறுகளால் அவர் நம்மைக் கட்டி இழுப்பதாகவும் கூறுகின்றார் (ஓசியா 11 : 4) ஆ, எத்தனை ஆறுதல்! ஆ, எத்தனை ஆனந்தம்! வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவன் நம்மை நேசிக்கின்றார், நமக்காகப் பரிதாபம் கொள்ளுகின்றார் (ஓசியா 11 : 8) நம்மோடு கூட இருக்கின்றார் (மத் 28 : 20)
அந்த நம் பரலோகத் தாயாம் நம் அன்புத் தேவன் தான் நம்மைப் பார்த்து, என் அன்பு மக்களே, கானல் நீராம் உலக மாயைகளை நம்பி என்னைவிட்டு வீணராகப் போவதற்கு என்னிடத்தில் நீங்கள் என்ன அநியாயத்தை கண்டீர்கள்? என்று கேட்கின்றார். தேவ ஜனமே, இந்த மாயாபுரி உலக வாழ்வில் நமது முழுமையான அன்பும், பற்றும் பாசமும் நமது அன்பின் ஆண்டவர் இயேசுவின் பேரிலேயே இருக்கட்டும். பெற்றோர் பிள்ளைகள், கணவன் மனைவி, உற்றார் உறவினர், உடன் பிறந்தோர் அனைவரின் மேலும் நாம் நமது அன்பையும், பாசத்தையும் செலுத்தும் அதே வேளையில் அந்த அன்புகளெல்லாம் நாளடைவில் மங்கி மறைந்து நமது இகலோகின் கடைசி மோட்ச யாத்திரையில் நாம் முற்றும் தனிமையாகவே நமது இரட்சகரைச் சந்திக்கச் செல்லுவோம் என்ற நிச்சயமான எண்ணத்தோடு நம் இரட்சரை மாத்திரம் நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பெலத்தோடும் நேசித்து அன்புகூருவோம். அதற்கான தேவ கிருபைகளை அன்பின் தேவன் தாமே நமக்குத் தந்தருள்வாராக. ஆமென். |