கடந்த கால தேவ எக்காள இதழ்களை நீங்கள் எடுத்து வாசித்துப் பார்த்தால் நான் பறவைகளை அதிகமாக நேசிப்பதையும், எங்கள் வீட்டிற்கு வரும் பல பறவைகளுக்கும் ஆகாரம் கொடுத்து ஆதரிப்பதையும் நீங்கள் வாசித்திருப்பீர்கள். பறவைகளின் மேலுள்ள அந்த எனது அன்பு நாளுக்கு நாள் வளர்ந்து செல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டால் இன்னும் ஆச்சரியமடைவீர்கள்.
இந்த நாட்களில் எங்கள் வீட்டிற்கு 14 வகையான பறவைகள் வழக்கமாக வருகின்றன. 2 விதமான அடைக்கலான் குருவிகள், 3 விதமான ராபின் பறவைகள், 2 விதமான புல்புல் பறவைகள், பூணியல்கள், மைனாக்கள், புறாக்கள், குயில் போன்ற ஒரு பறவையினம், காடைக் குருவிகள், காட்டுச் சேவல் ஒன்று, காகக் கூட்டம், 2 அணில்கள் இவைகளில் அடங்கும். அடைக்கலான் குருவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். காட்டுப் புறாக்கள் மொத்தம் 30 ஒரு நாள் தானியமணிகளை உண்டு கொண்டிருப்பதை நான் கவனித்தேன். பறவைகள் எண்ணிக்கை யாவையும் ஒன்று சேர்த்தால் மொத்தம் சுமார் 100 க்கும் அதிகமாக இருக்கும். பெற்ற பிள்ளைகளைப் போன்று எங்கள் வீட்டுச் சிறிய தோட்டத்தின் மரங்களிலும், புதர்களிலும் அவைகள் பாடிக்கொண்டும், பறந்து குரல் எழுப்பிக்கொண்டுமிருக்கும். அதிகாலை முதல் சூரியன் அஸ்தமிக்கும் மாலை நேரம் வரை தோட்டத்தில் அவைகளின் குரல்கள் தொனித்த வண்ணமாக இருக்கும்.
இந்த நாட்களில் நான் அவைகள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் வசதியாக தோட்டத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட மண்சட்டிகளையும், அகலமான ஒரு பாத்திரத்தையும் வைத்திருக்கின்றேன். அதில் தண்ணீர் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ளுவேன். மத்தியானம் ஆகிவிட்டால் சாரை சாரையாக பறவைகள் வந்து தண்ணீர் குடிப்பதும், குளிப்பதும், தங்கள் செட்டைகளை வெயிலில் உலர்த்துவதும் பார்ப்பதற்கு சந்தோசமான காட்சியாக இருக்கும். மேற்குறிப்பிட்ட பறவைகள், அணில்கள் அடிக்கடி வந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதை தொடர்ச்சியாக நாம் காணலாம்.
தண்ணீருள்ள மண்சட்டிகளண்டை பறவைகள் தொடர்ச்சியாக வந்து தண்ணீர் குடிப்பதையும், குளிப்பதையும் பெரிய பாம்பு ஒன்று எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றது. அது எங்கிருந்து பார்த்ததோ நாம் அறியோம். ஆனால், பறவைகளை கஷ்டப்படாமல் தனது தந்திரத்தால் பிடிக்க அது திட்டமிட்டது. ஒரு நாள் நண்பகல் நான் வெளிக்கதவை திறந்து கொண்டு தோட்டத்திற்குள் போனபோது ஒரு பெரிய பாம்பு ஒன்று பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் மண் சட்டிகளண்டை சாவதானமக படுத்திருந்து என்னைக் கண்டதும் மெதுவாக நகர்ந்து செல்லுவதை மிகுந்த ஆச்சரியத்துடன் கவனித்தேன். இதற்கு முன்பாக அது மண் சட்டிகளண்டையில் அமைதியாக படுத்திருந்து எத்தனை குருவிகளை பிடித்து விழுங்கினதோ நமக்குத் தெரியாது. ஆனால், எந்த ஒருகஷ்டமுமில்லாமல் மறைந்து படுத்திருந்தே இலகுவாக தனது இரையப் பிடித்து ஏப்பமிட மிகுந்த வசதியான இடம் தண்ணீர் நிரப்பப்பட்ட மண் சட்டிப் பாத்திரங்கள் இருக்கும் இடம் மட்டுமே என்பதை தந்திரப் பாம்பு நன்கு கண்டு வைத்திருந்தது.
தண்ணீர் குடிக்க, குளிப்பதற்காக மண் சட்டிகளண்டையில் வரும் பறவைகளைப் பிடிக்க அதினண்டையில் படுத்திருந்த பாம்பைக் குறித்து நான் அதிகமாக யோசித்துப் பார்த்தேன். அது எனக்கு ஒன்றை அதிகமாக நினைப்பூட்டி நின்றது. இன்று கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை நோக்கி அடிக்கடி பறந்து சென்று அதில் நீராடி அதில் தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த தொலைக்காட்சி பெட்டியின் பூரண கட்டுப்பாடும், மனுஷ கொலை பாதகனாம் தந்திர சாத்தானுடைய கரத்தில் இருக்கின்றது என்பது அவர்களுக்குத் தெரியாது. கிறிஸ்தவ நிகழ்ச்சிகளைக் காண்பித்தே அவர்களது விலையேறப் பெற்ற நேரத்தை அப்படியே எடுத்து விழுங்கிவிடுகின்றான். இந்த உலகத்தில் நமது மணி நேரங்களும், காலங்களும் எத்தனை விலையேறப்பெற்றது என்பதை உணர்ந்து கொள்ளவிடாமல் கிறிஸ்தவ மக்களின் மனக்கண்களை சாத்தான் குருடாக்கிவிட்டான் (2 கொரி 4 : 4)
ஒரு காலத்தில் தங்கள் அருமை இரட்சகருக்காக காடு மேடு அலைந்து திரிந்து எத்தனை ஆத்தும பாரத்தோடு பாடுபட்டு ஊழியம் செய்த பரிசுத்த குருவானவர்கள் பணி ஓய்வுபெற்ற நாட்களில் தொலைக்காட்சி பெட்டியிலேயே தஞ்சம் புகுந்துவிட்டார்கள். தங்கள் வசதிக்கேற்ப கேபிள் டி.வி. இணைப்புகளை வாங்கி வைத்துக் கொண்டு பற்பல மொழிகளில் வரும் சினிமாக்கள், நாடகங்கள், கிரிக்கெட் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள், இயற்கை காட்சிகளைக் காண்பிக்கும் டிஸ்கவரி, நேசனல் ஜியாகிராஃபி போன்ற நிகழ்ச்சிகளை காலை முதல் இரவு நித்திரைக்குச் செல்லும் நேரம் வரை பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். ஓய்வுபெற்ற குருவானவர்கள் மாத்திரமல்ல, குருத்துவ பணியில் இருக்கும் ஆயர்களில் பலரும் தொலைக்காட்சிக்கே அடிமைப்பட்டு அதைத் தெண்டனிட்டுப் பணிந்து கொண்டிருக்கின்றனர். ஓய்வு நாளில் சபை மக்களுக்கு ஆயத்தமில்லாமல் ஒரு பிரசங்கத்தை கடமைக்காக செய்துவிட்டு வாரத்தின் மற்ற நாட்களின் பெரும்பாலான நேரத்தை தொலைக்காட்சியை பார்ப்பதிலேயே அவர்கள் செலவிட்டு வருகின்றனர். உலகப் பிரகாரமான பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற கிறிஸ்தவ மக்களின் பெருந்திரளான மக்களுக்கும் மனுஷ கொலை பாதகன் அவர்களின் கரங்களில் நல்ல அழகான வர்ண தொலைக்காட்சி பெட்டியைக் கொடுத்து அதை இரவும் பகலும் பார்த்துக் கொண்டே நரக பாதாளம் போய்ச் சேர வசதி செய்து கொடுத்திருக்கின்றான்.
கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் என்ற ஆட்டுக் குட்டியின் பச்சைத் தோலின் மறைவில் பட்சிக்கிற ஓநாயாம் சாத்தான் மறைந்து நின்று கொண்டு கிறிஸ்தவ மக்களின் விலையேறப்பெற்ற ஆத்துமாக்கள் ஒன்றைக்கூட தவறவிட்டுவிடாமல் அனைவரையும் எரிநரகத்துக்கு தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கின்றான்.
தேவ ஜனமே, உங்கள் விலையேறப் பெற்ற காலங்கள் கர்த்தர் உங்களுக்கு கிருபையாக தந்த பொற் காலங்களாகும். நீங்கள் உங்கள் மூச்சை இழுத்து வெளியே விடுகின்றீர்கள், வெளி சுவாசத்தை உள்ளே இழுக்கின்றீர்கள் என்றால் அது முற்றும் தேவ கிருபையே. உங்கள் ஜீவ சுவாசம் கர்த்தருடைய கரங்களில் இருக்கின்றது. தானியேல் தீர்க்கன் பெல்ஷாத்சார் ராஜாவை நோக்கி சொல்லும் வார்த்தையை கவனியுங்கள் "தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவர்" (தானியேல் 5 : 23) ஆம், நமது ஒவ்வொரு சுவாசமும் ஆண்டவருடைய கரத்தில் இருக்கின்றது. நமது கூட்டு சுவாசங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாட்களும், மாதங்களும், காலங்களுமாகின்றன. அதைத்தான் தாவீது இராஜா என் காலங்கள் உமது கரத்தில் இருக்கிறது (சங் 31 : 15) என்று சொன்னார். அவர் தந்த காலங்கள் அவருடைய பாதங்களில் மட்டுமே செலவிடப்படவேண்டும், அவருக்காக செலவிடப்படவேண்டும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை விட்டுவிட்டு பூவுலகத்தில் ஆண்டவருடைய பாதங்களுக்குச் செல்லவும், அவரோடு அளவளாவி ஆனந்திக்கவும் மனமில்லாமல் நீ இருக்கும்போது மரணத்தின் மூலமாக ஆண்டவருடைய நித்திய இளைப்பாறுதலில் பிரவேசிக்கும் போது நீ எப்படி அவருடைய பாதங்களுக்குச் செல்ல முடியும்? அவருடன் எப்படி உன்னால் ஆனந்தம் கொண்டு அகமகிழ்வுடன் இருக்க முடியும்? மனித வாழ்வின் பிரதான நோக்கமே "ஆண்டவரை மகிமைப்படுத்துவதும், அவரை அனுபவித்து ஆனந்திப்பதுமே" என்று பூர்வ காலத்து பரிசுத்த பக்தர்கள் சொல்லியிருக்கின்றனர். அப்படியிருக்க, இந்த உலகத்திலே ஆண்டவருடைய பாதங்களில் உட்காரவும், அவருடைய சமூகத்தை வாஞ்சிக்கவும் மனமற்றிருக்கும் நீ திடீரென்று பரலோகத்தில் அவரை எப்படி காண விரும்புவாய்? அவருடன் வாழ உனக்கு எப்படி ஆசையும், ஆவலும் வரும்? ஒருக்காலும் உன்னால் கூடாது. பூவுலகத்தில் உனக்கு மனமகிழ்ச்சியைத் தந்த தொலைக்காட்சி பெட்டியை நோக்கித்தான் நீ ஓட வேண்டும். அதைப் பார்த்து அனுபவிக்க அது இருக்குமிடமான நரகத்துக்கு சாத்தான் உன்னைக் கரம் பற்றி அழைத்துக் கொண்டு செல்லுவான்! உங்கள் சகோதரனாகிய நான் எதோ கட்டுக்கைதகளை இங்கே எழுதுகின்றேன் என்று நினைத்துவிடவேண்டாம். தேவனுடைய சத்தியத்தையே எழுதுகின்றேன். இதுவேதான் ஓர் நாள் நடக்கவும் செய்யும். மிகுந்த கொடிய வேதனையோடு அந்த கசப்பான உண்மையை நீங்கள் கண்டு கொள்ளு முன்னர் தேவனிடத்துக்கு மனந்திரும்புங்கள். தொலைக்காட்சியாம் வலுசர்ப்பத்தின் வாய்க்கு உங்களைப் பாதுகாத்துக் கொண்டு பறந்தோடித் தப்புங்கள். தொலைக்காட்சியைப் பார்க்கும்படியாக உங்களை நியாயப்படுத்துகின்ற எந்த ஒரு தேவ ஊழியனையும், பரலோகத்திலிருந்து ஒரு தேவ தூதனே உங்களிடம் இறங்கி வந்து கிறிஸ்தவ தொலைக்காட்சிகளை பார்க்கும்படியாக உங்களை அழைத்தாலும் அதற்கு நேராக உங்கள் முகங்களை திருப்பிவிடாதேயுங்கள். தொலைக் காட்சி தேவனுடைய பரிசுத்த சமூகத்திலிருந்து உங்களைத் துண்டித்துப்போடும் கருக்கான பட்டயம்.
இந்தச் செய்தியை நான் உங்களுக்கு டைப் செய்து கொண்டிருக்கும் வேளையை ஒட்டி எனக்கு வந்த ஒரு தேவப் பிள்ளையின் கடிதத்தில் "எங்கள் வீட்டில் இப்போது கேபிள் டி.வி. ஐ துண்டித்துவிட்டோம். வேதப் புரட்டர்களின் போதனைகள் என்னை குழப்பத்துக்குள்ளாக்கிவிடுகிறது. எனவே தேவனுடைய வேத புத்தகத்தை மாத்திரம் வாசித்து ஜெபித்து வருகிறேன்" இந்த பரிசுத்த தேவப் பிள்ளை தன் வாழ்வில் எடுத்த ஆசீர்வாதமான முடிவுக்கு நீங்களும் கட்டாயம் விரைந்து வாருங்கள். சாமுவேல் தீர்க்கன் ஆகாகை கில்காலில் துண்டித்துப் போட்டது போல உங்கள் ஆத்துமாவை நரகத்துக்கு கொண்டு செல்லும் அந்த தொலைக்காட்சி இணைப்பை என்றுமாக துண்டித்து நல்ல பங்கை தெரிந்து கொண்ட மரியாளைப் போல (லூக்கா 10 : 42) ஆண்டவருடைய பாதங்களுக்கு ஓடுங்கள். அவரை வாஞ்சித்துக் கதறுங்கள் (சங் 42 : 1) அவரை அண்டிக் கொள்ளுங்கள் (சங் 73 : 28) மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய் (லூக்கா 15 : 31) என்று அந்த அன்புத்தந்தை சொன்னது போல அன்பின் ஆண்டவர் உங்களைக் குறித்து "என் பிள்ளை எப்போதும் என்னோடிருக்கின்றான்" என்று சொல்லத்தக்கதாத நடந்து கொள்ளுங்கள்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டவருடைய பரிசுத்த பாதங்களே மோட்சமாகும். இந்த உலகத்தில் அவருடைய பாதங்களில் ஆரம்பமாகும் மோட்சமே பரலோகத்துக்கும் தொடர்ந்து செல்லும். இந்த உலகத்தில் அந்த மோட்சானந்தம் ஆண்டவருடைய பாதங்களில் உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றால் அல்லது இன்னும் மோட்சம் உங்கள் இருதயத்தில் ஆரம்பிக்கவில்லை என்றால் உங்கள் இருதய தற்பரிசோதனை செய்து அதற்கான காரியங்களை ஆண்டவரோடு சரி செய்து கொள்ளுங்கள். "தேவனே என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும், என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்" (சங் 139 : 23 - 24) என்று கதறுங்கள். அதற்கான கிருபைகளை கர்த்தர் தாமே உங்களுக்குத் தந்தருள்வாராக. ஆமென். |