|
|
| பாவி ஒருவன் எரி நரகத்திற்குச் செல்லுகையில் |
(நம்முடைய ஆண்டவரை வேத பண்டிதர்கள் "எரி நரக பிரசங்கியார்" (Hell Fire Preacher) என்று அழைக்கின்றனர். காரணம், அவர் மோட்சத்தைக் குறித்து 24 தடவைகளும், நரகத்தைக் குறித்து 56 தடவைகளும் பேசியிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இன்றைய ஆசீர்வாத பிரசங்கிகள் எரி நரகம் என்ற வார்த்தையை தங்கள் கூட்டங்களில் உச்சரிக்கவே நடுநடுங்குகின்றனர். காரணம், அதைக் குறித்துப் பேசினால் தங்களுடைய கூட்டங்களுக்கு மக்கள் வரமாட்டார்கள், காணிக்கை வரவு இருக்காது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். கடந்த கால மெய் தேவ பக்தர்கள் யாவரும் நரகத்தைக் குறித்து பிரசங்கித்து தேவ ஜனங்கள் எந்த ஒரு நிலையிலும் அந்த நித்திய எரி நரக அக்கினி கடலுக்குச் சென்று விடாமல் தப்பிக்கொள்ள வேண்டும் என்று துடிதுடித்து நின்றார்கள். அப்படிப்பட்டவர்களில் ஜேம்ஸ் மில்ட்டன் என்ற ஒரு தேவ மனிதர் எழுதிய ஆங்கில தேவச் செய்தியின் தமிழாக்கத்தை உங்களுடைய ஆசீர்வாதத்திற்காக கீழே தந்திருக்கின்றேன்.)
"............ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப் பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும், இந்த அக்கினி ஜூவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான் (லூக்கா 16 : 22 - 24)
"அப்பொழுது, இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்" (மத்தேயு 25 : 41)
"இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்" (மத் 7 : 13 - 14)
"ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் " (மத்தேயு 8 : 12)
"உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு, நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்தில் போவதைப் பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்" (மாற்கு 9 : 43 - 44)
நரகத்தைக் குறித்து எழுதப்படும் செய்திகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியாக இந்த நாட்களில் கருதப்படுதுவதே இல்லையாயினும் உண்மையில் அந்தச் செய்தி மகா முக்கியமானதும் மிகுந்த சிரேஷ்டமானதொரு செய்தியுமாகும். அன்பின் ஆண்டவர் இயேசு இரட்சகர் இந்தப் பயங்கரமான இடத்தைக் குறித்து மிகவும் அடிக்கடி பிரசிங்கித்து வந்ததன் ஒரே காரணம், எந்த ஒரு நிலையிலும் நீ அங்கு சென்று விடாமல் உன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இன்று அநேகர் "எரி நரகம்" குறித்து பிரசிங்கிப்பதை குரூரமானது என்றும் அது தேவையற்றது என்றும் கருதுகின்றார்கள். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நரகத்தைக் குறித்துப் பிரசிங்கித்து நஷ்டப்பட்ட ஆத்துமாக்கள் இந்த அகோர பயங்கரமான இடத்திற்கு வந்துவிடக்கூடாது என்று அவர்களை கடு வன்மையாக எச்சரித்தார்.
நண்பனே, இந்தச் செய்தியை நீ வாசிக்க ஆரம்பித்தது முதல் அநேகர் மரித்து என்றும் நித்தியமாக இருக்க நரகத்திற்குச் சென்று விட்டனர். அத்துடன் நீ இந்தச் செய்தியை வாசித்து முடிக்கும் வேளையில் எண்ணற்ற மாந்தர் அந்த நரகத்தைச் சென்றடைந்திருப்பார்கள். அவர்கள் எல்லாரும் தங்களுக்கு இந்தப் பூவுலகில் திரும்பவும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படுவதை வாஞ்சித்து கதறினார்கள் என்பதை நான் உனக்கு உறுதியிட்டுக் கூற முடியும். அப்படி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்குமானால் அவர்கள் இந்த செய்தியை வாசித்து ஆண்டவரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு நித்திய ஜீவனுக்கு சுதந்திரவாளியாகியிருப்பார்கள். ஆனால் அந்தோ, காலம் அவர்களுக்குக் கடந்துவிட்டது. இனி அவர்கள் முடிவில்லாத நித்தியமாக நரக அக்கினியில் இருந்தே ஆக வேண்டும். நண்பனே, இப்பொழுது உம்மைப் பற்றிய காரியம் என்ன?
கர்த்தராகிய இயேசு இரட்சகரின் அடியார்களாகிய நாங்கள் நரக அக்கினியின் அதி பயங்கர வேதனைகளைக் குறித்து மக்களை உள்ளமுருகி எச்சரிக்க வேண்டியது எங்கள் மேல் விழுந்த கடமையாகும். எனவே, பூமியில் நீ இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தப் பொன்னான சந்தர்ப்பத்திலும், தேவனுடைய அழைப்பு உனக்கு முன்பாக அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேளையிலும் நீ அதை அல்லத்தட்டாமல் எச்சரிப்பைக் கவனிக்கும்படியாக நாங்கள் உன்னை வேண்டுகின்றோம். |
| எரி நரக கோளம் அமைந்திருக்கும் இடம் |
பூமியின் வயிற்றுப் பகுதியில் குடைந்தெடுக்கப்பட்டதொரு இடமாக எரி நரகம் அமைந்துள்ளது. பூமியை மூடியுள்ள 20 மைல்கள் மேல் ஓட்டுக்கு உள்ளாக அக்கினியும்,கந்தகமும் கலந்து எரியும் நதிகளும், ஏரிகளும் எரிமலைக் குழம்பாக ஓடிக்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கர்த்தருடைய வேதம் அந்த இடத்தை "அக்கினிக்கடல்" (வெளி 20 : 15) என்று அழைக்கின்றது. நண்பனே, இந்த நிமிடத்தில் தானே உனது சாவாமையுள்ள ஆத்துமா, எரி நரகத்தின் அக்கினி கடலிலிருந்து வெறும் 20 மைல்களுக்கும் உட்பட்ட தூரத்திலேயே இருக்கின்றது என்பதை நீ மறப்பதற்கில்லை!
நரகம் எங்கேயோ தொலை தூரத்தில் உள்ள இடம் என்று நீ நினைத்துக் கொள்ள வேண்டாம். அது உனது பாதங்களுக்கு கீழாகவே அமைந்துள்ளது. கர்த்தருடைய தாசனாகிய மோசேக்கு எதிராக எழும்பிய கலகக்காரர்கள் அவர்கள் நின்ற இடத்திலேயே பூமி அப்படியே பிழந்து அந்த இடத்துக்குள் அவர்களைக் கொண்டு சென்றதாக எண்ணாகமம் 16 ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கின்றோம். "அது தாழ்ந்த நரகம் மட்டும் எரியும்" என்று உபாகமம் 32 ஆம் அதிகாரம் 22 ஆம் வசனத்தில் மோசே எழுதுகின்றார். அவர்கள் பாதாளபரியந்தம் (தாழ்ந்த நரக பரியந்தம்) தோண்டிப் பதுங்கிக் கொண்டாலும் (ஆமோஸ் 9 : 2) என்று தீர்க்கன் எழுதுகின்றார். எனவே எரி நரகம் நிச்சயமான ஒரு இடம். அது உனது பாதங்களுக்கு கீழாகவே கோடானு கோடி நஷ்டப்பட்ட மாந்தரை இப்பொழுது நித்தியமாக எரித்து வதைத்துக் கொண்டு இருக்கின்றது. அதை நீ திட்டமாக நினைவில் வைத்துக் கொள். |
| எரி நரகத்தின் தாங்கொண்ணா கொடிய வேதனைகள் |
நீ எரி நரகத்திற்குச் செல்லும் பட்சத்தில் அங்கே நீ வெந்து துடிதுடிக்க வேண்டும். ஆம், நரகம் அதற்காகவேதான் தேவனால் ஆயத்தப்படுத்தப் பட்டதொரு இடமாகும். லூக்கா 16 ஆம் அதிகாரத்தில் ஐசுவரியவான் அக்கினி ஜூவாலையில் வேதனைப்பட்டது போல நீயும் வேதனைப்பட்டாக வேண்டும். மரணத்தில் கண்களை மூடும் பாவியை அவனது ஆத்துமாவின் சொந்தக்காரனாகிய சாத்தான் நித்திய எரிநரகத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டு போய்ச் சேர்க்கின்றான்.
"இவ்விதமான காரியங்கள் மனித ஆத்துமாவுக்குச் சம்பவிக்க தேவன் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டார்" என்று நீ ஒரு வேளை சொல்லலாம். ஆனால், அப்படியல்ல, தேவன் நிச்சயமாகவே அதை அனுமதிப்பார். ஜனங்கள் எக்காலமும் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதை தேவன் அனுமதிக்கவே செய்வார். ஜெர்மனி தேசத்தின் கொடிய சர்வாதிகாரி ஹிட்லரை 6000000 (அறுபது இலட்சம்) அப்பாவி யூத ஜனங்களை ரசாயான உலைக்களங்களில் உயிரோடே வைத்து எரித்துச் சாம்பலாக்க தேவன் அவனுக்கு அனுமதி அளித்தார். அப்படித்தானே அவனுக்கு அனுமதி அளித்தார்? 2 வயதுக்குட்பட்ட பச்சிளங்குழந்தைகளைக் கொலை செய்வதற்கு தேவன் ஏரோதுவுக்கு அனுமதி அளிக்கவில்லையா? (மத்தேயு 2) ? பாவமறியா சிசுக்களை கொல்லுவதற்கு அனுமதி அளித்த தேவன், கிறிஸ்து இரட்சகரை ஏற்றுக்கொள்ள மறுத்து அவரைப் புறக்கணிக்கும் பாவியை நரக அக்கினியில் போட ஏன் அனுமதிக்கக் கூடாது? எந்த ஒரு பாவமும் அறியாத தனது ஒரேபேரான குமாரனாம் இயேசு இரட்சகரை பாவிகளால் துன்புறுத்தப்படுவதற்கும் இறுதியில் கொலை செய்யப்படுவதற்கும் ஒப்புவித்த தேவன், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவரை அண்டிக்கொள்ள மறுக்கும் ஒரு பாவியை நரக அக்கினியிலிருந்து அவர் ஏன் காப்பாற்ற வேண்டும்? நண்பரே கவனியும், நீ உனது பாவங்களுக்காக மனங்கசந்து அழுது பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், மறுபடியும் பிறந்த அனுபவத்தையும் பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் தேவன் உன்னை நரக பாதாளத்தின் நித்திய அக்கினியில் என்றும் வெந்து கொண்டிருக்க அனுமதிக்கவே செய்வார்.
நரக பாதாளத்தின் வேதனை அகோர பயங்கரமாகும். நரகத்தில் மாமிச சரீரம் அனுபவிக்கும் எரிபந்தமான வேதனை மாத்திரமல்ல, மனது அனுபவிக்கும் வேதனை அதைவிடக் கொடியதாகும். நரகத்தில் நீ உனது பூவுலக வாழ்க்கையை சதா நினைத்துக் கொண்டே இருப்பாய். நீ உனது குடும்பத்தையும், உனது நண்பர்களையும் நினைப்பாய். நீ உனது கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளை நினைத்துக் கொண்டிருப்பாய். நரகத்தில் கிடந்த ஐசுவரியவான் தனது குடும்பத்தை நினைத்தது போல நீயும் நினைப்பாய் (லூக்கா 16) நீ மனந்திரும்பி இரட்சிக்கப்படுவதற்கு உனக்குக் கிடைத்த பொன்னான சந்தர்ப்பங்களை நீ உதறித்தள்ளிய காலங்களை நினைவுகூறுவாய். நீ வாசித்த இந்த தேவச் செய்தியை நீ யோசித்துப் பார்ப்பாய். நீ இதை வாசிக்கும் சமயத்தில் உன்னில் ஏற்பட்ட நினைவுகளையும், யோசனைகளையும் சிந்தித்துப் பார்ப்பாய். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீ உனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் அவரைப் புறக்கணித்துத் தள்ளிய சந்தர்ப்பத்தை நரகத்தில் சதா காலமும் ஏக்கத்தின் பெருமூச்சோடு நினைத்து துடிதுடித்துக் கொண்டிருப்பாய். பாவிகள் எல்லாரும் நரகத்திற்குச் சென்று என்றுமுள்ள சதா காலங்களிலும் வேதனை அனுபவித்துக் கொண்டேயிருப்பார்கள். |
| நரக பாதாளத்தில் நீ கேட்கும் ஒலிகள் |
பூவுலகத்தில் உன் காதுகள் கேட்கும் பல ஓசைகளை நீ நரகத்தில் கேட்கமாட்டாய். குறிப்பாக, இயற்கையின் இன்பமான ஒலிகள் அனைத்தையும் நிர்ப்பந்தமாக நீ நரகத்தில் இழந்து விடுவாய். மரங்களின் உச்சியைத் தொட்டுச் செல்லும் இதமான காற்றின் ஒலியை நீ நரகத்தில் கேட்கமாட்டாய். பொங்கிச் செல்லும் நீரோடைகளின் சலசலக்கும் ஒலி, பாடும் பறவைகளின் மதுர கீதம், வசந்த காலத்தில் பெய்யும் மழையின் இரைச்சல் எல்லாம் நரகத்தில் கேட்கப்படமாட்டாது.
குழந்தைகளின் சிரிப்பொலி, அவர்களுடைய விளையாட்டின் போது அவர்கள் எழுப்பும் மன மகிழ்வின் சத்தங்களை எல்லாம் நரகத்தில் நீ கேட்கமாட்டாய். நரகத்தில் அன்பு இல்லாததால் "நான் உன்னை நேசிக்கின்றேன்" என்று உன்னைப் பார்த்து அங்கு எவரும் சொல்ல மாட்டார்கள்.
24 மணி நேரமும் தேவனுடைய இரக்கத்திற்காகக் கதறிக் கொண்டிருக்கும் மக்களின் துயரப் புலம்பல்களையும், கதறுதல்களையும், ஏக்கங்களையும்தான் நீ நரகத்தில் கேட்பாய். நரகத்தில் அமைதியும் சமாதானமும் கிடையாது. நரக அக்கினி வெடித்து எரிகின்ற சப்தமும், கொந்தளித்துக் குமுறும் எரி மலை குழம்பான அக்கினியும் கந்தகமும் சேர்ந்தெரியும் சப்தமேயன்றி வேறொரு சப்தத்தை நீ நரகத்தில் கேட்கமாட்டாய். நரகத்தின் அந்த சப்தங்களிலிருந்து நீ ஒருக்காலும் தப்பிச் செல்லமாட்டாய். |
| நரகத்தில் நீ காண்கின்ற காட்சி |
பூவுலகத்தில் தேவனுடைய அழகிய சிருஷ்டிப்புகளை நீ காணலாம். கண்கவரும் சூரிய அஸ்தமனங்களையும், அடுக்கடுக்கான சிங்கார மலைத் தொடர்களையும், பனி மூடிய வெண் பனிச் சிகரங்களையும், வண்ண வண்ண மலர்களையும் நீ காணலாம். ஆனால், அவை யாதொன்றையும் நீ செல்லும் நரகத்தில் காண முடியாது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நரகத்தை "புறம்பான இருள்" என்று வர்ணித்தார். காரிருளில் சுழன்று எரிகின்ற அக்கினி ஜூவாலைகளில் நீ இருப்பதை எண்ணிப் பார். உனக்கு அன்பான யாரோ ஒருவரின் முகம் அந்த அக்கினி வெளிச்சத்தில் உன் கண்களுக்குத் தெரிவதை நீ கற்பனை பண்ணிப் பார். நரகத்தில் சிரிக்கும் முகங்களை நீ காண முடியாது. அங்கிருப்போர் அனைவரின் முகங்களிலும் துயர வேதனை, கண்ணீர், சஞ்சலம்தான் இருக்கும். பூவுலகத்தில் நீ இருந்த நாட்களில் உன் கண்களால் கண்ட அழகிய முகங்களையும், அவர்களின் ஆனந்த சிரிப்பையும் நரகத்தில் நீ எக்காலத்தும் இனி காண முடியாது. உன்னுடைய பிள்ளைகளை நீ நரகத்தில் காணமாட்டாய். உன்னுடைய குடும்பத்தை இனி உன்னால் நரகத்தில் பார்க்க இயலாது. சிநேகிதனே, நரகத்தில் அழுகையையும், கூக்குரலையும், பற்கடிப்பையும் மாத்திரமே நீ சதா காலமும் கேட்டுக் கொண்டிருப்பாய். |
| நரகத்தில் உன்னோடு வாசம் செய்வோர் |
நரகத்தில் உன்னோடிருப்பது யார் என்பதைக் குறித்து நீ எப்பொழுதாவது சிந்தித்திருக்கின்றாயா? நரகம் சர்வலோகத்தின் சிறைக்கூடமாகும். குடிவெறியர்கள், திருடர், கொள்ளையர், கொலைகாரர், மாய்மாலக்காரர், விபச்சாரிகள், விபச்சாரக்காரர், சோதோமியர்கள், சூனியக்காரர், பிறருக்குக் கேடு விளைவிப்போர் போன்றவர்களின் நித்திய வீடுதான் நரகமாகும். நீ நரகத்திற்குச் செல்லும் போது உனக்கும், உன் கூட்டாளிகளுக்கென்றும் விசேஷமான முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு போன்ற அந்தஸ்து வாரியான இடங்கள் நரகத்தில் கிடையாது. நரகம் என்ற சர்வ லோக சிறைக் கூடத்தினுள் தேவனுடைய சத்துருக்களுடன் கூட நீயும் சதாகாலமுமாகத் தள்ளப்பட்டு சிறைச்சாலையின் கதவு மூடப்பட்டு சாவி எடுத்துக்கொள்ளப்படும்.
நரகத்தில் நீ உன்னை கீழ்த்தரமான ஒருவனாகக் காண்பதே உனக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு காரியமாகும். தேவ தூதரிலும் சற்று சிறியவனாக மனிதனைப் படைத்ததாக தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் நரகம் ஆயத்தம் பண்ணப்பட்டதோர் இடம் என்று ஆண்டவராகிய இயேசு கூறினார் (மத்தேயு 25 : 41) நண்பனே, பிசாசும் அவனுடைய தூதர்களும் நரகத்தில் உன்னை ஆளுகை செய்வார்கள். அந்த பொல்லாத அசுத்த ஆவிகளுக்கு நீ கீழ்த்தரமாக இருப்பாய். உனது புது வீடாகிய நித்திய நரகம் பிசாசுகளாலும், தள்ளப்பட்ட துதர்களாலும், துரைத்தனங்களாலும், அதிகாரங்களாலும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளினாலும் யாவுக்கும் மேலாக சாத்தானாலும் சூழப்பட்டு உனது இடம் நரகப்பட்டியலின் கடைசியிலும் உனது பங்கு நரக பாதாளத்தின் அடிமட்டத்திலும் இருப்பதை நீ காண்பாய். நீ நரகத்திற்குச் செல்லும் போது சந்தேகத்திற்கு இடமன்றி உனது இடம் நீ விரும்பத்தகாத ஒரு இடத்தில் இருப்பதை நீ காண்பாய். அங்குதான் நீ முடிவில்லாத நித்தியமாக அழுந்திக்கொண்டிருக்க வேண்டும். |
கண் மூடித் திறப்பதற்குள்
உன்னைச் சந்திக்கும் சடுதியான நரகம் |
லூக்கா 16 : 22 - 23 ஆம் வசனங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பட்டுடுத்தி பகட்டாக வாழ்ந்த ஐசுவரியவானான மனிதன் சடுதியாக மரித்து உடனடியாக நரகத்தில் கண் விழித்தாகக் கூறுகின்றார். அவன் ஒரு பாவியாதலால் நேராக நரகத்திற்கே சென்றான்.
கர்த்தராகிய இயேசு இரட்சகரை தங்களுக்கு வசதிப்படும் ஒரு நாளில் சாவதானமாக தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளலாம் என்ற மிகவும் தவறான எண்ணத்தில் வாழ்ந்த மக்களால் நரகம் நிரம்பி வழிகின்றது. "நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமை பாராட்டாதே, ஒரு நாள் பிறப்பிப்பதை அறியாயே" (நீதி 27 : 1) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. லூக்கா 12 ஆம் அதிகாரத்தில் அந்த ஐசுவரியமுள்ள முட்டாள்தனமான மனிதன் தனது வருங்காலத்துக்கு பெரிய திட்டங்களை எல்லாம் தனக்கென்று வைத்திருந்தான். ஆனால், தேவன் அவனைப் பார்த்து "மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்?" என்றார்.
நரகம் சடுதியாக உன் மேல் வரும். ராஜாவாகிய பெல்ஷாத்சார் கர்த்தருடைய ஆலயத்தின் பாத்திரங்களில் மதுவை வார்த்து அவனும், அவனது பிரபுக்களும், அவனது மனைவிகளும், வைப்பாட்டிகளும் குடித்து வெறித்து கும்மாளம் போட்டுக்கொண்டிருந்த இராக்காலத்திலேயே அவன் கொலை செய்யப்பட்டு, அடுத்த நாள் சூரிய உதயத்தைக் காண்பதற்கு முன்பாக அவன் எரி நரகத்தில் பிரவேசித்தான். ஆடுகளை மேய்க்கும் ஒரு பையன் தனது கரத்திலிருந்த கவணினால் சுழற்றி வீசிய கூழாங்கல் ஒன்று மாபெரும் பெலசாலியானவனும், ராட்சத உருவம் கொண்டவனுமான கோலியாத்தை அடித்து வீழ்த்தி என்றென்றுமாக நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதை அவன் ஒருக்காலும் கனவிலும் கூட எண்ணிப் பார்த்திருக்கமாட்டான். ஆனால் அதுவே நடந்தது. பூமியில் அடியற்ற பனை மரம் போல சாய்ந்து விழுந்த அவனது பெரிய சரீரம் முழுவதும் குளிர்ச்சியடைவதற்கு முன்பாகவே அவனது ஆத்துமா எரி நரகத்தின் அக்கினிக் கடலில் வேதனையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. நரகம் கிட்டத்தட்ட எப்பொழுதும் தனது கைதிகளை ஆச்சசரியப்படும் அத்தனை சடுதியாகவே பிடித்துக் கொள்ளுகின்றது. வாசிப்போனே, நீ தேவனால் எச்சரிக்கப்படுகின்றாய், நரகம் சடுதியாகப் பிடித்துக் கொள்ளும் அடுத்த கைதி நீயாக ஏன் இருக்கக் கூடாது! |
நரகத்தில் என்ன அவமானம் இருக்கின்றது? என்று நீ என்னைக் கேட்கலாம். நல்லது நண்பரே, நீ நரகத்திற்குச் செல்லுகையில் மறக்க முடியாத ஒரு உண்மை உன்னைப் பற்றிக் கொள்ளும். எந்த ஒரு நிலையிலும் நரகத்திற்கு நீ வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் அந்த கொடிய உண்மையாகும். நீ அதை யோசித்துப் பார். உனது முடிவில்லாத நித்தியத்தை நரக அக்கினியில் செலவிட உனது சொந்த இருதயக்கடினம் வழி வகுத்துக் கொடுத்தது. ஆ, எத்தனை துயரமான காரியம்! நரக அக்கினியில் 10 லட்சம் ஆண்டுகள் கொடிய வேதனை அனுபவித்த பின்னர் "நான் பூவுலகத்திற்கு திரும்பி வந்து மனந்திரும்பி ஆண்டவராகிய இயேசுவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் வாழ்கின்ற பரலோகத்துக்குச் செல்லக்கூடிய ஒரு பொன்னான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கும்பட்சத்தில்" ஆ, எத்தனை மதியீனமான மூடன் நான். இனி, நான் அப்படி மனந்திரும்ப வாய்ப்பே இல்லை. எனது நித்தியத்தின் தலை விதி முத்திரையிடப்பட்டுவிட்டது. ஆ, நான் சற்று ஞானமுள்ளவனாயிருந்து எனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை பாதாளத்தின் வல்லடிக்கு எத்தனை சுலபமாக விலக்கிக் காத்திருக்கலாமே! ஐயகோ, நான் என்ன செய்வேன்? ஆம், உனது அந்த வார்த்தைகள்தான் நரகத்தின் அவமானமாகும். நீ போக வேண்டிய அவசியமில்லாத ஒரு அதி பயங்கர இடத்திற்கு உனது விழிப்பின்மை, உனது மன மேட்டிமை, உனது இருதயக்கடினம் காரணமாக நீயே வந்து சேர்ந்துவிட்டாய்.
பாவிகளை தேவன் நரகத்திற்கு அனுப்புவதைக் குறித்து மக்கள் அவரை குற்றப்படுத்துகின்றார்கள். கவனி, நீ அங்கு போகும்படியாக தேவன் உன்னைச் சொல்லவில்லை. நீ நரகத்திற்குச் செல்லும்படியாக நீயே அந்த தீர்மானத்தை உன் மட்டாக துணிகரமாக எடுத்துக் கொண்டாய். 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தேவன் தமது சொந்தக் குமாரனையே உனது பாவங்களுக்கான நிவாரணமாக பலியாக மரணமடையச் செய்து உன்னை நரகத்தின் அக்கினியிலிருந்து மீட்டுக் கொள்ளும் தீர்மானத்தை எடுத்துக்கொண்டார். நீ நரகத்திற்குப் போகிறாய் என்றால் அது தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக நீ எடுக்கின்ற உனது சொந்த முடிவாகும். ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று தேவன் விரும்புகின்றார் (2 பேதுரு 3 : 9) உனது பாவங்களிலிருந்து இப்பொழுதே நீ மனந்திரும்பி ஆண்டவர் இயேசுவை அண்டிக் கொள்ளுவாயா? உனது இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளுவாயா? ஞாபகத்தில் வைத்துக் கொள், அது நீ எடுக்கக் கூடிய உனது சொந்த தீர்மானமாகும். |
| நரக அக்கினியிலிருந்து நித்திய மீட்பு |
"வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்" (ஏசாயா 1 : 18) என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லுகின்றது. எல்லா மனிதரும் பாவிகள், அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து சுத்தாங்கம் அடைய வேண்டியது அவசியமாக இருக்கின்றது. "எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்" (ரோமர் 3 : 23) நம்முடைய பாவங்களிலிருந்து நாம் சுத்தாங்கம் அடைவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே. "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினார்" (வெளி 1 : 5) "குமாரனாகிய அவருக்குள் அவருடைய இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது" (கொலோ 1 : 14)
"கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2 : 8, 9) என்று அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் கூறுகின்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் பாவ மன்னிப்புக்கென்று அவர் செய்து முடித்த இரட்சிப்பின் கிரியை மாத்திரமே நம்மைப் பாதுகாப்பாக பரலோகம் கொண்டு போய்ச் சேர்க்கும் ஒரே வழியாகும். "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்" (ரோமர் 10 : 13) "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (ரோமர் 10 : 9) ஆண்டவராகிய இயேசுவண்டை இப்பொழுதே நீ ஏன் திரும்பக்கூடாது? நீ இன்னும் பூவுலகத்திலேயே இருக்கும் பேரதிசயமான பாக்கியம் பெற்றிருப்பதால் ஆண்டவர் உன்னை இரட்சிக்கும்படியாக அவருடைய வாக்குத்தத்தங்கள் மேல் நம்பிக்கை வைத்து அவரை உறுதியாக பற்றிக்கொள். நாளை நமதல்ல. நாளைய தினம் மிகவும் பிந்திப்போன தோர் நாளாக முடிவில்லாத நரக அக்கினியில் நீ கண் விழிக்கும் கொடியதொரு நாளாக முடிந்துவிடலாம். |
|
|