|
|
| வாழ்க்கை சுமக்க முடியாத ஓர் பாரச்சுமைதானா? |
சிலர் வாழ்க்கையை ஓர் சுமக்க முடியாத பாரச் சுமையாகக் கருதுவதினால் உலகில் உயிர் வாழவும் மனமுடைந்து துக்கிக்கின்றனர். வாழ்க்கை எக்காரணத்தைக் கொண்டும் சுமக்க முடியாத பழுவான பாரச் சுமை அல்லவென்று என் சொந்த வாழ்வின் அனுபவத்தில் நான் கண்டிருப்பதால் மேல் குறிப்பிட்ட மக்களின் கருத்திற்கு நான் ஒருக்காலும் அனுதாபம் தெரிவிக்க மாட்டேன்.
நமது பழுவான பாரச் சுமையை தேவன் மேல் உருட்டித் தள்ளிவிட்டு, அவரோடு நாம் ஜீவித்து, அவர் நமக்காக எந்தப் பாதையை ஆயத்தம் பண்ணியுள்ளாரோ அந்தப் பாதையில் நடந்து, அவருடன் சம்பாஷித்து அவரிலேயே நாம் பூரண நம்பிக்கை வைப்போமாகில் நமக்கு நேரிட்ட எல்லாச் சோதனைகளும் நிச்சயமாகவே நமது நித்திய நன்மைக்கேதுவாக நடந்திருக்கின்றது என்பதை நாம் நமது வாழ்வின் இறுதியில் கண்டு தேவனுடைய தயவுள்ள கரத்தின் செயல்களுக்காக நாம் நன்றியோடே அவரை ஸ்தோத்திரிப்போம்.
வியாதி நம்மை மேற்கொள்ளுகிறதென்றால், அதுவும் நமது ஆசீர்வாதத்திற்கும், நன்மைக்குமேதான். வாழ்வின் இறுதியில் நன்மை அளிக்கவே தேவன் தமது பிள்ளைகளுக்கு அவற்றை அனுப்புகிறாரேயன்றி வேறெந்த காரணமும் கிடையாது. நாம் செய்ய வேண்டியது என்ன? நமக்கு வேதனையளிக்கும் வியாதியை ஆண்டவருக்குச் சொல்லுவோம். திரும்பத் திரும்ப அவரிடம் சொல்லி அவருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருப்போம். மட்டுமல்ல, நாம் அவருக்கு அடங்கி ஒடுங்கி இருக்கத்தக்கதான கிருபைகளையும் அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுவோம்.
(ஜியார்ஜ் முல்லர்) |
ஒரு நாள் வயல் வெளிகளில் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது எனது சபையின் மக்கள் ஒவ்வொருவரும் விரைவில் ஒன்று மோட்சத்தில் இருக்க வேண்டும் அல்லது நரகத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அசாதாரணமான வல்லமையுடன் என்னில் எழுந்து நின்றது. ஆ, எனது நாவு எல்லாரும் என் குரலைக் கேட்கத்தக்கதாக இடிமுழக்கம்போல இருக்க வேண்டும் என்று அப்பொழுது நான் விரும்பினேன். அல்லது என் சரீரம் இரும்பைப்போல இருக்க வேண்டுமென்றும் அப்படியானால் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து "உங்கள் ஜீவன் தப்ப ஓடி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்ல வசதியாக இருக்கும் என்று எனக்குள்ளே எண்ணினேன். ஆ, என் சபையின் பாவ மாந்தரே, உங்கள் மேல் வரவிருக்கும் தேவ கோபாக்கினையை என் வாசற்படிகளில் அல்லவா அப்படியே வைத்து விடுவீர்கள் என்றல்லவா நான் பெரிதும் அஞ்சுகின்றேன், என்பதைக் குறித்து நீங்கள் கொஞ்சமாவது நினைத்துப் பார்க்கின்றீர்களா?
(மர்ரே மச்செயின்) |
ஆ, என் நண்பர்களே! நீங்கள் சாவுக்கேதுவானவர்கள் என்பதை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளுவதே மேலான பரிசுத்த நிலைக்கு உங்களை வழிநடத்திச் செல்லும். தன்னுடைய மரணத்தை தினமும் உற்று நோக்குகிறவன் தன்னுடைய பரிசுத்தத்தை தினமும் உற்று நோக்குகின்றான். தன்னுடைய கல்லறையை அடிக்கடி காண்கின்றவன் தன்னுடைய பரலோகத்தை அடிக்கடி காண்கின்றான்.
(தாமஸ் புரூக்ஸ்) |
கடந்த எனது மிஷனரி விடுமுறையின்போது ஒரு நாள் காலை மின்னிஸோட்டா நகரத்திலுள்ள கோடை வாசஸ்தலத்தின் ஏரிக்கரையில் நான் என்னுடைய காரில் உட்கார்ந்துகொண்டிருந்தேன். உலகத்தை தேவனது மாட்சியான சுவிசேஷத்தால் நிரப்புவதைக் குறித்த எண்ணங்கள் அப்பொழுது என் உள்ளத்தில் எழுந்து கொண்டேயிருந்தன. நான் காரில் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திற்குச் சில அடிகள் தூரத்தில் ஒரு பெரிய உலோகப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதின் மேல் "குப்பை மட்டுமே" என்ற எழுத்துக்கள் துலாம்பரமாக எழுதப்பட்டிருந்தன. அந்தப் பெட்டி குப்பை கூழங்கள் போடப்படுவதெற்கென்று குறிக்கப்பட்டு அங்கே வைக்கப் பட்டிருந்தது. ஆனால் "குப்பை மட்டுமே" என்ற வார்த்தைகளை மாத்திரம் நான் தியானிக்கத் தொடங்கியபோது அது ஒரு விஸ்தாரமான தார்ப்பரியத்தை எனக்குக் கற்பிப்பதாகவிருந்தது. உலகத்திற்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் பணியுடன் தொடர்பில்லாத எல்லாவற்றின் மீதும் மேற்கண்ட "குப்பை மட்டுமே" என்ற வார்த்தைகள் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தை நான் கண்டேன்.
கிறிஸ்தவனே, அந்தப் பதத்தொடரை இந்த மணி வேளையிலிருந்து உன்னுடன் எடுத்துச் செல். "குப்பை மட்டுமே" என்ற பதத்தை உன்னுடைய மிக அன்பான உடமைகள் அனைத்தின் மீதும் எழுதிவிடு. அந்த வார்த்தையை உனது வீட்டின் மீதும், உனது காரின் மீதும், உனது விலையுயர்ந்த வஸ்திரங்களின் மீதும், உனது காசோலை புத்தகத்தின் மீதும் (CHEQUE BOOK) உனது இன்சூரன்ஸ் பாலிசி மீதும் எழுதிவிடு. அந்த அர்த்த புஷ்டியுள்ள அற்புத பதத் தொடரை உனது இருதயத்தினைக் கவர்ந்த இன்ப மங்கையின் மீதும், உன் கணவன் மீதும், உன் மனைவியின் மீதும், நீ பாசமாக நேசிக்கின்ற உனது பிள்ளைகள் மீதும் அழுத்தி அழகுறத் தெளிவாக எழுதிவிடு. இந்தக் காரியங்களை எல்லாம் மாந்தர் தங்களுக்கென மிக அன்புடன் பற்றிக் கொண்டுள்ள போதினும் அவைகள் உலக சுவிசேஷப் பணிக்கென்று கிறிஸ்து இரட்சகரின் பாதார விந்தங்களில் ஒப்புக் கொடாமல் இருக்கின்றமையால் அவைகள் அவர்களுக்கு ஒன்றுக்கும் உதவாத "குப்பை மட்டுமே" தான்.
இந்த அருமையான பரலோக சத்தியத்தை நாம் துணிவுடன் சிந்தித்துத் தியானித்து ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படிவோம். நமக்குரியவைகள் யாவற்றையும் அவர் பணிக்கென அர்ப்பணிப்போமாக. |
தேவன் உன் வாழ்வில் நேரானதும், ஏற்றத்தாழ்வில்லாததும், எல்லாம் ஒரே சீரானதுமான வழிகளை உண்டாக்குவதில்லை. உன்னால் ஆராய்ந்து பார்க்க முடியாத ஆச்சரியமான வழிகளை அவர் உன் ஜீவியத்தில் உருவாக்குகின்றார். அந்த வழிகளை அவர் எங்கு வேண்டுமானாலும் உண்டாக்குவார். தான் எங்கு குதித்தாலும் தனக்கான வழியை அங்கெல்லாம் உருவாக்கிக் கொண்டே செல்லும் சிலந்திப் பூச்சியை உண்டாக்கிய தேவன் உன்னுடைய பாதையை வெறுமையிலும், ஏமாற்றத்திலும், தாங்கொண்ணா துயரத்திலும், தடுமாற்றத்திலும், சோர்பிலும், லோக மாந்தர் யாவரும் கைவிட்ட தனிமையிலும் ஏற்படுத்தக் கூடாதவராகவிருக்கின்றார் என்று எண்ணுவாயோ? "உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது, உமது காலடிகள் தெரியப்படாமற் போயிற்று"
(சங் 77 : 19) |
"பொன் விளையும் பூமியில் வேறு எதுவும் விளையாது" என்று புவியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம், உலக நேசம் வளரும் ஒரு உள்ளத்தில் நன்மையான வேறு எதுவுமே விளைவதற்கு இடமே கிடையாது. இந்த உலகத்தின் நேசமோ இல்லை இந்த உலகத்தின் ஆதாயங்களோ இல்லை இந்த உலகத்தின் கவலைகளோ இல்லை இந்த உலகத்தின் ஆசை இன்பங்களோ நிரம்பியிருக்கும் ஒரு இருதயம் தேவனுடைய எந்த ஒரு ஆலோசனையையும் அவருடைய எந்த ஒரு புத்திமதியையும் ஏற்றுக்கொள்ள முற்றும் செயலிழந்து போய் விடுகின்றது. அது தேவனையும் அவருடைய பரிசுத்தத்தையும் ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிடும் இருதயம். அநேகம் பிசாசுகளால் சூழப்பட்டதோர் இருதயம் அது. அப்படிப்பட்ட இருதயம் பரிசுத்தம் என்ற மதுரமான தேன் கூட்டுத் துணிக்கையை அருவருப்பாக எண்ணி வெறுத்துத் தள்ளுவதில் ஆச்சரியம் கொள்ளுவதற்கு ஒன்றுமே இல்லை. அந்தவித உலக நேசத்தால் ஊறிப்போன இருதயம் பரிசுத்தத்தை பகடி பண்ணி அந்த மேன்மையான பரிசுத்தத்தை மாபெரும் மதிகேடு என்று உதாசீனம் பண்ணுவதைக் காண்பது அத்தனை பெரிய ஆச்சரியமான காரியம் ஒன்றுமில்லை. அந்த பொல்லாத இருதயம் அதைத்தான் செய்யும்.
(தாமஸ் புரூக்ஸ்) |
|
|