|
|
உத்தராஞ்சல் மாநிலத்தில் நடைபெற்ற
தேவ ஊழியங்கள் |
தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுகின்ற சர்வ வல்ல தேவனின் பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக.
நம்முடைய தேவ எக்காள பத்திரிக்கை ஊழியம், நம் வடமாநில தேவ ஊழியம் ஆகிய இவ்விரண்டும் நம் அன்பின் ஆண்டவருடைய திருவுளத்திற்கு மிகவும் பிடித்தமான ஊழியங்கள். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. நமது தேவ எக்காள பத்திரிக்கையின் மூலமாக தங்கள் வாழ்வில் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட மக்கள் நீங்கள் அறிந்தபடி ஏராளம் ஏராளமானவர்களாவார்கள். அது சம்பந்தமாக என்னண்டை வருகின்ற கடிதங்கள் கர்த்தருக்குள் என்னைப் பிரமிக்கச் செய்வதாக இருக்கின்றது. சமீப நாட்களில் ஒரு தேவப் பிள்ளையிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவர்களுடைய மாமா அவர்களுடைய ஊரில் மரணப்படுக்கையில் இருப்பதாக கேள்விப்பட்டு ஊருக்குச் சென்றிருக்கின்றார்கள். மாமாவை அவர்கள் மரணக்கட்டிலில் பார்த்தபோது அவர்கள் தன்னை தன் அன்பின் ஆண்டவருடைய ஜீவப்பாதையில் வழிநடத்திய தனது கரங்களுக்குக் கிடைத்த கடைசி தேவ எக்காள பிரதியை அவர்களுடைய கரங்களில் கொடுத்திருக்கின்றார்கள். அந்த தேவ எக்காள பிரதிதான் அதாவது 2006 ஆம் ஆண்டின் இறுதி இதழ் அந்த ஐயா தன் மருமகளிடம் கொடுத்த பிரதியாகும். அவர்கள் வீட்டிற்கு எத்தனையோ கிறிஸ்தவ பத்திரிக்கைகள் வந்தபோதினும் தேவ எக்காள பத்திரிக்கையின் ஞாபகம்தான் அந்த ஐயாவின் மரண நேரத்திலும் இருந்திருக்கின்றது. அந்த இதழை தன் வசம் பத்திரமாக iத்திருந்து தனது கரங்களால் அதை தன் மருமகளிடம் கொடுத்திருக்கின்றார்கள். பின்னர் அந்த ஐயா மிகுந்த தேவ சமாதானத்தோடு மரித்திருக்கின்றார்கள். கர்த்தருக்கே துதி உண்டாவதாக. |
அடுத்து தஞ்சாவூரிலிருந்து ஒரு கடிதம்
இப்படியாக வந்திருந்தது:- |
"என் தாயார் தேவ எக்காளம் இதழ்களை எனக்கு ஆரம்ப நாட்களில் படிக்கக்கொடுக்கும்போது நான் அதைப் பெரிதாக எண்ணாமல் அலட்சியம் செய்திருக்கிறேன். நான் வேத புத்தகத்தைத் தவிர வேறு எந்த கிறிஸ்தவ பத்திரிக்கையையும் படிக்க மனமற்றவளாய் இருந்தேன். பிறருக்கும் அதையே சொல்லுவேன். வேதத்தை தவிர மற்ற பத்திரிக்கைகளை வாசிக்க வேண்டாம் என்றே சொல்லுவேன். அப்போது எங்கள் சபையில் "விஜயலட்சுமி" என்ற ஒரு இந்து சகோதரி கர்த்தரை ஏற்றுக்கொண்டு, இரட்சிக்கப்பட்டு ஆராதனைக்கு வந்தாள். நீங்கள் எப்படி ஆண்டவரை ஏற்றுக்கொண்டீர்கள் என்று நான் அவர்களைக் கேட்டபோது "தேவ எக்காளம்" பத்திரிக்கையை வாசித்ததின் மூலமாக இரட்சிக்கப்பட்டேன் என்று சொன்னார்கள். பின்புதான் உங்கள் தேவ எக்காளம் பத்திரிக்கையின் அருமையை உணர்ந்தேன். இப்பொழுது நாங்கள் குடும்பமாக வேதத்திற்கு அடுத்தாற்போல் உங்கள் பத்திரிக்கையைப் படிக்கின்றோம். கலப்படமில்லாத, ஆழமான சத்தியத்தை இன்றைய நாளில் தரும் ஒரே புத்தகம் அதுதான். எல்லா மகிமையையும் தேவனுக்கே செலுத்துகின்றேன்"
இந்தவிதமாக நமது தேவ எக்காளத்தை அநேகர் இரட்சண்யத்தை கண்டுகொள்ளத்தக்கதாக வழிநடத்தி வரும் நம் அன்பின் ஆண்டவர் நாம் ஆண்டுதோறும் வடமாநிலங்களுக்கு மேற்கொள்ளும் சுவிசேஷ ஊழியங்களையும் அற்புதமாக ஆசீர்வதித்து வழிநடத்தி வருகின்றார். கர்த்தருடைய கிருபையால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தேவனுடைய பிரசுரங்களை கர்த்தரை அறியாத மக்களின் கரங்களில் ஆத்தும பாரத்தோடு கொடுத்து வருகின்றோம். அவற்றைப் பெற்றுக் கொண்ட மக்களின் உள்ளங்களில் தேவன் எவ்விதமாக கிரியை செய்தார், எத்தனை மக்கள் அவருடைய வார்த்தைகள் மூலமாக ஆண்டவருடைய பிள்ளைகளானார்கள் என்பதை எல்லாம் நாம் நம் அன்பின் பரம தகப்பனின் உன்னத வீட்டில் கண்டு அவருக்கு ஓய்வில்லாத ஸ்தோத்திரங்கள் செலுத்துவோம்.
ஒவ்வொரு வருடமும் நமது வடமாநில ஊழியங்களுக்குத் தேவையான ஒரு மாபெரும் தொகையை ஆண்டவர் சந்திக்கும் அற்புதமான வழிகளைக் கண்டு நான் ஆச்சரியத்தால் பிரமித்து நிற்கின்றேன். இந்த உண்மையும், உத்தமமுமான ஊழியங்களுக்குக் கரம் நீட்டி உதவி செய்யும் தேவ பிள்ளைகள் அதை தங்களுக்குக் கிடைத்த ஒரு பாக்கியம் என்று கருதுகின்றார்கள். சமீபத்தில் ஒரு கர்த்தருடைய பிள்ளை நமது வடமாநில தேவ ஊழியத்திற்கு உதவி அனுப்புவதாக என்னிடம் கூறினார்கள். நான் அதை மறுத்து நடைபெறவிருக்கும் உங்கள் மகளின் திருமணத்திற்கு அதிகமான பணத் தேவை உண்டு. பணங்களை அதற்காகப் பயன்படுத்துங்கள், இந்த தடவை கட்டாயம் உதவி அனுப்ப வேண்டாம். ஆண்டவருக்குச்சித்தமானால் அடுத்த ஆண்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் இதுவேதான் "உங்களுடைய உண்மையும், உத்தமமுhன தேவ ஊழியத்தில் எங்கள் பங்கும் கட்டாயம் இருந்தே ஆகவேண்டும். அந்த நல்ல வாய்ப்பை நாங்கள் தவறவிட்டுவிடக்கூடாது" என்று கூறி அவர்களுடைய வார்த்தையின்படியே செய்தார்கள். கர்த்தருக்கே மகிமை.
இப்படியாக தேவ எக்காளம் பத்திரிக்கை ஊழியத்தையும், நமது வடமாநில தேவ ஊழியங்களையும் அன்பின் கருணாகரக் கர்த்தர் கரம் பிடித்து வழிநடத்திச் சென்று கொண்டிருக்கின்றார். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. கர்த்தருக்கு மகிமையாக இந்தக் காரியங்களை உங்கள் உள்ளங்களில் மறவாது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். |
| டிடிகாட் நோக்கிச் சென்றோம் |
கர்த்தருடைய கிருபையால் நாங்கள் எங்கள் இரண்டாம் கட்ட தேவ ஊழியங்களை கோசி என்ற இடத்தில் முடித்துக்கொண்டு எங்கள் இறுதி கட்ட ஊழியத்தை செய்வதற்காக அல்மோரா என்ற இமயமலை பட்டணம் வழியாக 135 கி.மீ. தூரம் பிரயாணம் செய்து பித்தோர்கார் என்ற இடம் வந்து சேர்ந்தோம். எங்கள் வழித்தடத்தில் நாங்கள் சந்தித்த பெட்சால், பாராசின்னா, அர்த்தோலா, ஜோலி என்ற இடங்களில் எங்கள் வாகனங்களை நிறுத்தி ஏராளமான பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டு வந்து சேர்ந்தோம்.
நாங்கள் பித்தோர்கார் பட்டணத்தில் தங்கி அங்கிருந்து 36 கி.மீ. தொலைவிலுள்ள நேப்பாள எல்லைப் பகுதியான ஜூலாகாட் என்ற இடத்திற்குச் சென்றோம். இந்த இடத்திற்கு நாங்கள் முன்பும் வந்து ஊழியம் செய்திருக்கின்றோம். ஆனால், இந்த தடவை நாங்கள் அந்த இடத்தில் கர்த்தருடைய கிருபையால் அநேக புதிய தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். இருப்பினும் "சாந்தி மார்க்கம்" என்ற ஹிந்தி லூக்கா சுவிசேஷங்களை திரும்பவும் இந்த இடத்தில் மறவாது விநியோகித்தோம்.
நேப்பாள எல்கை வரை சென்ற நாங்கள் நேப்பாளத்துக்குள்ளும் சென்று வந்தோம். குளிருக்கு போட்டுக்கொள்ள பனிக்குல்லா, கேன்வாஸ் சப்பாத்து, குடை போன்றவைகளை நம்முடைய தேவ ஊழியர்களில் சிலர் வாங்கினார்கள்.
அங்கு நாங்கள் சென்றுவிட்டு காலி கங்கா என்ற நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள சிறிய பாலத்தின் வழியாக வந்து கொண்டிருந்தபோது நன்றாக மதுபானம் அருந்திய வாலிபன் ஒருவன் எங்களுடன் சேர்ந்து கொண்டான். காலிகங்கா நதி பெரிய மலைப்பாறைகளின் இடுக்குகளின் வழியாக ஓடுகின்றது. அந்த இடத்தில் அந்த நதியின் இரைச்சலும், சீற்றமும் பயங்கரமாக இருக்கின்றது. மதுபானம் நன்றாக அருந்திய வாலிபன் எங்களைப் பார்த்து "உலகில் எந்த ஒரு விஞ்ஞானியும் இந்த இடத்தின் ஆழத்தை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. நீங்கள் சொன்னால் நான் இந்த நதிக்குள் இப்பொழுதே விழ ஆயத்தமாக இருக்கின்றேன்" என்று எங்களிடம் சொன்னான். குடிகாரன் சொல் உலகில் யாருக்குத் தெரியாது! அப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறி தேவனுடைய பிரசுரங்களைப் படிக்கும்படியாக அவனுக்குக் கொடுத்து மனிதனை நாசம்செய்யும் மதுபானம் அருந்த வேண்டாம் என்று அந்த வாலிபனுக்கு அன்பாக ஆலோசனை சொன்னோம்.
வெண் நுரை தள்ளி தண்ணீரை வெளியே சிதறி அடித்த வண்ணம் செல்லும் அந்த நதியை அந்த இடத்தில் நின்று சற்று நேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் எங்களைப் பார்த்து "வாழ்க்கையில் வசதியில்லாத எத்தனையோ ஏழை நேப்பாளி வாலிப பெண்கள் வாழ்க்கையில் விரக்தியடைந்து இறுதியில் இந்த இடத்திற்கு வந்து நதியில் விழுந்து தங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக முடித்துக் கொள்ளுகின்றார்கள்" என்று எங்களிடம் சொன்ன போது நாங்கள் சற்று நேரம் கண்கலங்கி நின்றோம். மனுஷ கொலை பாதகன் தன்னை அண்டினோருக்கு இறுதியில் கொடுக்கும் சன்மானம் தற்கொலையோடு நிற்காமல் நரக பாதாளம் வரை முடிவில்லாத நித்தியமாக அல்லவா நீண்டு செல்லுகின்றேது!
நாங்கள் ஜூலாகாட் என்ற இடத்திற்கு வருவதற்கு முன்பாக நாங்கள் இதுவரை சென்று ஊழியம் செய்திராத மகர்கேனா, பாரல்லி என்ற இரண்டு கிராமங்களுக்குச் சென்று தேவ ஊழியம் செய்தோம்.
பித்தோர்கார் பட்டணத்தில் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களுடைய ஜெப வீட்டில் ஒரு ஞாயிறு ஆராதனையில் நாங்கள் எல்லாரும் கலந்து கொண்டு அன்பின் ஆண்டவரைப் பாடித் துதித்து மகிமைப்படுத்தினோம். அந்த நாளில் கொடுக்கப்பட்ட தேவ செய்திகள் எங்கள் எல்லாருக்கும் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது.
பித்தோர்கார் பட்டணத்திலிருந்து நாங்கள் 60 கி.மீ. தொலைவு பிரயாணம் செய்து டிடிகாட் என்ற இடத்தை நாங்கள் வந்தடைந்து அங்குள்ள அரசாங்க ஓய்வு விடுதியில் தங்கியிருந்தோம். ஏற்கெனவே நாங்கள் இந்தப்பட்டணத்திற்கு வந்து இதே ஒய்வுவிடுதியில் தங்கி ஆண்டவருக்கு இந்த இடத்தில் நல்லதோர் ஊழியம் செய்திருக்கின்றோம். |
| சௌராசியில் நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
டிடிகாட் என்ற இடத்தில் உள்ள அரசினர் ஓய்வு விடுதியில் நாங்கள் தங்கிக்கொண்டு அங்கிருந்து தொலை தூரமான இடங்களில் இருக்கும் இடங்களுக்குச் சென்று அங்கு தேவ ஊழியம் செய்தோம். அந்த இடங்களில் நாங்கள் இதுவரை ஊழியம் செய்யவில்லை. முதல் கட்டமாக டிடிகாட்டிலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள சௌராசி என்ற இடத்திற்கு ஒரு நாள் காலையில் மிகுந்த ஜெபத்தோடு எங்கள் வாகனங்களில் தேவனுடைய பிரசுரங்களை நிறைய ஏற்றிக்கொண்டு நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். எங்கள் வழித்தடத்தில் அஜேரா என்ற இடத்தில் மேட்டின்மேல் ஒரு ஆரம்ப பாடசாலை இருந்தது. 40 பிள்ளைகளும் 4 ஆசிரியர்களும் இருந்த அந்தப் பள்ளியில் அனைவருக்கும் சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தோம். பின்னர் அந்த இடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளி ஒன்றில் கர்த்தருடைய பிரசுரங்களை ஜெபத்துடன் விநியோகித்தோம். அந்தப் பள்ளியில் 90 மாணவ மாணவியரும் 3 ஆசிரியர்களும் இருந்தனர். அதின் பின்னர் நான்குரி என்ற இடத்தில் இருந்த ஒரு ஆரம்ப பாடசாலையில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்தபின்னர் சௌராசியில் உள்ள இண்டர் காலேஜில் இருந்த ஏராளமான மாணவ மாணவியருக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுக்க ஆசைப்பட்டோம். அதற்கு முன்பாக அந்த கல்லூரியின் முதல்வரை அணுகி அவருடைய அனுமதியைப் பெற்றுக் கொள்ள யோசித்தோம். இந்து மனிதரான அவர் அனுமதி கொடுப்பாரா என்று நாங்கள் அதிகமாக சந்தேகப்பட்டோம். எனினும் ஜெபத்தோடு நமது ஊழியர் சிலர் அந்த மனிதரண்டை சென்று நாங்கள் கொண்டு சென்ற சில பிரதிகளை அவருக்குக் காண்பித்து அவருக்குக் கொடுத்த போது அவர் அவைகளைப் படித்துப் பார்த்துவிட்டு அனைத்து மாணவ மாணவியருக்கும் அவைகளைக் கொடுக்க அனுமதி அளித்துவிட்டார். நம் தமிழ் நாட்டில் மேல் நிலைப் பள்ளி என்பதை அங்கு இண்டர் காலேஜ் என்று அழைக்கின்றனர். தலைமை ஆசிரியரை பிரின்சிபால் என்றும் அங்கு படித்துக் கொடுக்கும் ஆசிரியர்களை விரிவிரையாளர்கள் என்றும் சொல்லுகின்றனர்.
அந்த மத்தியான நேரம் அங்கு அப்பொழுதிருந்த குளிருக்காக பிள்ளைகள் எல்லாரும் கல்லூரி மைதானத்தில் நல்ல வெயிலில் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து தங்கள் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் கொண்டு சென்றிருந்த தேவனுடைய பிரசுரங்களை மிகுந்த மகிழ்ச்சியோடும், ஜெபத்தோடும் வழங்கினோம். சத்திய மார்க்கம் என்ற தலைப்பில் யோவான் சுவிசேஷத்தை படங்களுடனும், அநேக பக்கங்கள் விளக்கங்களுடனும் புதிய ஏற்பாட்டைப் போன்று பெரிய அளவில் வேதாகம சங்கம் அச்சிட்டு வெளியிட்டிருந்த பெரிய புத்தகங்களை அநேகமாக அனைத்து மாணவ மாணவியருக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் கொடுத்தோம். எந்த ஒரு முறுமுறுப்பும் இல்லாமல் அனைவரும் சந்தோசமாக நாங்கள் கொடுத்த பிரசுரங்களை வாங்கிக் கொண்டனர். அந்த இண்டர் காலேஜில் மொத்தம் 500 பேர்கள் படிப்பதாகச் சொன்னார்கள். நாங்கள் எங்கள் தேவப் பணியை செய்து முடிக்கவும் அந்த இடத்திலுள்ள ஒரு முக்கியமான இந்து மார்க்கத் தலைவர் நாங்கள் இருக்கும்போதே அந்த கல்லூரியின் பிரின்ஸ்பாலை அணுகி கிறிஸ்தவ பிரசுரங்களை அங்கு கொடுத்திருக்க அனுமதித்திருக்கக் கூடாது என்று அவரிடம் வாதாடினார். ஆனால், அந்த கல்லூரி முதல்வர் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டார். கர்த்தருக்கே மகிமை. அந்த இடத்தில் அன்பின் ஆண்டவர் எங்களுக்கு நல்லதொரு ஊழியம் தந்தார். எங்களிடமிருந்து கர்த்தருடைய வார்த்தைகளைப் பெற்றுக் கொண்ட மக்களுடன் தேவன் தொடர்ந்து தம்முடைய வார்த்தைகளின் மூலமாகப் பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
அங்கிருந்து திரும்பிய நாங்கள் சௌராசி என்ற அந்த இடத்தின் கடைவீதியில் நின்று கொண்டிருந்த ஏராளமான மக்களுக்கும் சுவிசேஷப் பிரதிகளைக் கொடுத்தோம். அந்த சௌராசியை ஒட்டிய இடங்களில் இருந்த தயானாந்த் என்ற என்ற ஒரு பள்ளியிலும் மற்றுமொரு பப்ளிக் ஸ்கூலிலும் தேவ ஊழியம் செய்தோம். கர்த்தருக்கே துதி உண்டாவதாக. |
| நாச்சினியில் நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
டிடிகாட் என்ற இடத்திலிருந்து நாச்சினி என்ற இடம் 38 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. வழக்கம்போல அன்றும் அதிகாலையில் அதிகமான ஜெப ஆயத்தத்தோடு எங்கள் வாகனங்களில் போதுமான தேவனுடைய பிரசுரங்களை எடுத்துக் கொண்டு நாச்சினி புறப்பட்டோம். இந்த நாச்சினி என்ற இடம் முனிசியாரி என்ற மலைச் சிகரத்தில் இருக்கும் இடத்திற்குச் செல்லும் பாதையில் இருக்கின்றது. இந்த வழித்தடம் மிகவும் ஆபத்தான பாதையாகும். அநேக விபத்துக்கள் இந்த ரஸ்தாவில் ஏற்பட்டு பலர் மாண்டு போயிருக்கின்றனர். எனினும் அன்பின் ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளாகிய எங்களை தமது கண்ணின் மணி போல எங்களைக் காத்துக் கொண்டார். நாங்கள் போகின்ற வழித்தடத்தில் இருந்த கோச்சர், பட்டாட் போன்ற இடங்களில் ஊழியம் செய்து கொண்டே நெல்டா என்ற இடத்தை வந்தடைந்தோம். எங்கள் வலது கைப் பக்கத்தில் செங்குத்து மேட்டில் ஒரு பள்ளிக்கூடம் இருப்பதை நாங்கள் கண்டோம். எங்கள் வாகனங்களை அங்கே நிறுத்திவிட்டு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்று அந்தப் பள்ளிப் பிள்ளைகளுக்கு முதலில் படம் காண்பித்து பின்னர் தேவனுடைய சுவிசேஷம் அறிவிக்கும் பாக்கியம் பெற்றோம். பள்ளியில் மொத்தம் 40 பிள்ளைகள், 5 ஆசிரியர்கள் இருந்தனர்.
ஆசிரியர்களும், மாணவர்களும் மிகுந்த மரியாதை, அன்புடன் அமர்ந்து பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் படங்கள் காண்பித்துச் சொன்ன தேவனுடைய வார்த்தைகளை மிகவும் பொறுமையுடன் கவனித்தனர். பின்னர், நாங்கள் கொண்டு சென்ற ஆண்டவருடைய பிரசுரங்களை அவர்கள் எல்லாருக்கும் ஜெபத்துடன் வழங்கினோம். நாங்கள் மேடு ஏறிச் சென்று படம் காட்டி ஊழியம் செய்த நெல்டா என்ற இடத்தின் பள்ளிக்கூடம் மரங்களின் சோலைக்குள் அமைந்திருப்பதையும், 2 ஆசிரியர்கள் பள்ளிக்கு முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

அங்கிருந்து நாங்கள் நாச்சினி என்ற இடம் சென்றோம். ராம்கங்கா என்ற நதியின் குறுக்காக கட்டப்பட்ட இரும்புப் பாலத்தைக் கடந்து நாங்கள் அந்த இடத்துக்குள் செல்லவும் அங்கிருந்த வாகனப் போக்குவரத்து அதிகாரிகள் உடனே எங்களண்டை ஓடி வந்து வாகனம் ஒன்றுக்கு ரூபாய் 25 வீதம் ரூபாய் 50 முதல் வேலையாக வாங்கிக் கொண்டனர். ஊரின் முகப்பிலேயே மேட்டுப் பகுதியில் ஒரு பெரிய பள்ளி இருப்பதையும், அந்தப் பள்ளியின் மாணவ மாணவியர் இடும் கூச்சலும் தெளிவாகக் கேட்டது. நாங்கள் தேவனுடைய பிரசுரங்களை எங்கள் கரங்களில் போதுமான அளவிற்கு எடுத்துச் சென்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்று பள்ளி பிள்ளைகள் யாவருக்கும் ஜெபத்தோடு கொடுத்தோம். "கொஞ்சம் பிள்ளைகள் ராம் கங்கா நதிக்கு பூஜை செய்வதற்காக கீழே நதிப்பக்கம் போயிருக்கின்றார்கள். நீங்கள் அங்கே போய் அவர்களுக்கும் புத்தகங்களைக் கொடுங்கள்" என்று அந்த தலைமை ஆசிரியர் சொன்ன வார்த்தைகள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக இருந்தது. கர்த்தருக்கு துதி உண்டாவதாக. அப்படியே கீழே நதிக்கு நமது தேவ ஊழியர்கள் கஷ்டத்துடன் இறங்கிச் சென்று அவர்களுக்கும் சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தனர். நாங்கள் அந்தப் பள்ளிக்குச் சென்ற நேரம் அந்தப் பள்ளியின் இடைவேளை ஆனதால் பிள்ளைகள் யாவரும் வகுப்புகளுக்கு வெளியே வெயிலில்தான் நின்று கொண்டிருந்தனர்.
அதின் பின்னர் நாங்கள் நாச்சினி ஊருக்குள் சென்று அங்கிருந்த உயர் நிலைப் பள்ளி ஒன்றில் இருந்த 140 பிள்ளைகளுக்கும் 5 ஆசிரியர்களுக்கும், மற்றொரு ஆரம்ப பாடசாலையிலிருந்த 110 பிள்ளைகளுக்கும் 3 ஆசிரியர்களுக்கும் ஆண்டவருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். அதற்கப்பால் அந்த இடத்தின் கடை வீதிகளில் இருந்த அநேகருக்கு தேவனுடைய சுவிசேஷ பிரதிகளை விநியோகித்தோம். அந்த நாளில் நாச்சினி என்ற அந்த இடத்தில் தேவன் எங்களுக்கு நல்லதோர் ஊழியத்தைத் தந்தார். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.

ராம் கங்கா நதிக்கு அப்பால் தெரியும் நாச்சினி என்ற இடத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள். |
| பரம் என்ற இடத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
நாங்கள் தங்கியிருந்த டிடிகாட் என்ற இடத்திற்கும் பரம் என்ற இடத்திற்கும் 50 கி.மீ. தூரம் உள்ளது. ஒரு நாள் காலையில் நாங்கள் எங்கள் வாகனங்களை ஆண்டவருடைய பிரசுரங்களால் நிரப்பிக்கொண்டு மிகுதியான ஜெபத்தோடு புறப்பட்டோம்.
நாங்கள் டிடிகாட் என்ற இடத்தைத் தாண்டி டார்ச்சுலா செல்லும் பிரதான ரஸ்தாவில் வந்து கொண்டிருந்த போது பள்ளிகளில் படிக்கும் ஏராளமான சிறிதும் பெரிதுமான மாணவ மாணவியர்கள் தங்கள் தங்கள் பள்ளிகளுக்கு அந்தக் காலை வேளையில் அலை அலையாக வித்தியாசமான அழகான பள்ளி யூனிபாரங்களில் செல்லுவதை நாங்கள் கவனித்தோம். அவர்கள் எல்லாருக்கும் நாங்கள் எங்கள் வாகனங்களை ஆங்காங்கு நிறுத்தி நிறுத்தி சுவிசேஷப் பிரசுரங்களை கொடுத்துக் கொண்டே சென்றோம். நாங்கள் அப்படிக் கொடுத்துக் கொண்டு வரும் சமயம் ஓரிடத்தில் நமது இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தி ரஸ்தா ஓரமாக இருந்த ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடாமல் அவர்களுக்கும் நமது தேவ ஊழியர்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்தனர். எந்த ஒரு எதிர்ப்புமின்றி அவர்கள் அவைகளை சந்தோசமாகப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவைகளைப் பெற்றுப் படிப்பதை நீங்கள் படத்தில் காணலாம்.

பரம் என்ற இடம் நமது இந்திய நாட்டின் கடை கோடி எல்கையான டார்ச்சுலா செல்லும் வழித்தடத்தில் உள்ள ஒரு இடமாகும். டார்ச்சுலாவுக்கு வெகு முன்னதாகவே ஒரு பாதை அடர்ந்த இருளான கானகத்தின் வழியாக இடது கைப்பக்கமாகச் செல்லுகின்றது. கானகத்தின் அடர்ந்த மரங்களிலிருந்து கானக பூச்சிகள் எழுப்பும் ஒலி நமது காதுகளை செவிடாக்குவது போல இருக்கின்றது. இடை வெளி விட்டு விட்டு அந்தப் பூச்சிகள் ஒலி எழுப்புகின்றன. அந்த காடுகளின் ஊடாக நமது வாகனங்கள் செல்லும்போது அங்குள்ள குளிரின் காரணமாக நமது உடம்பு சில்லென்று ஆகிவிடுகின்றது. ஓரிரு இடங்களில் உயரமான மலையிலிருந்து சிறிய நீர் வீழ்ச்சிகள் விழுந்து கொண்டிருப்பதையும் நாம் காணலாம்.

நாங்கள் அந்தக் கருங்கானகத்தைக் கடந்து சில கி.மீ. தொலைவு வந்ததும் பள்ளத்தாக்கில் ஒரு பள்ளிக்கூடம் இருப்பதைக் கவனித்தோம். மேட்டில் நமது வாகனங்களை நிறுத்திவிட்டு தேவ ஊழியர்கள் கீழே இறக்கத்தில் சென்று அந்தப் பள்ளியில் உள்ள பிள்ளைகளுக்குப் படம் காட்டி இரட்சகரின் அன்பை அறிவித்தார்கள். அதன் பின்னர் யாவருக்கும் சுவிசேஷப் பிரதிகளைக் கொடுத்தார்கள். அன்பின் ஆண்டவர் ஒரு சிறிய ஊழியத்தை அந்த இடத்தில் எங்களுக்குத் தந்தார். கீழே பள்ளத்தில் உள்ள பள்ளிக்கூடத்தையும், நம்முடைய தேவ ஊழியர் ஒருவர் சுவிசேஷ பிரதிகள் அடங்கிய பெட்டியைத் தூக்கிக் கொண்டு பள்ளத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு இறங்கிச் செல்லுவதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

எங்கள் வழித்தடத்தில் பீர்காம், பேரா, பக்ரிகாட் போன்ற ஊர்களில் சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டே கார்ஜியா என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த ஒரு உயர் நிலைப்பள்ளியில் பிள்ளைகளுக்கு ஆண்டவருடைய பிரதிகளைக் கொடுத்துவிட்டு மற்றொரு பிரைமரி பள்ளியில் இருந்த 48 மாணவர்களுக்கும், 2 ஆசிரியர்களுக்கும் பிரசுரங்களைக் கொடுத்தோம். அதின் பின்னர் பல்மரா என்ற ஓர் ஊருக்கு வந்து சேர்ந்தோம். அந்த ஊரின் பெயருக்கு என்ன பொருள் தெரியுமா? என்று தேவ ஊழியர் என் சாமுவேல் அவர்கள் எங்களைப் பார்த்துக் கேட்டார்கள். "பல்" என்றால் பெலன், "மரா" என்றால் மாண்டு போயிற்று அதாவது "பெலன் அற்றுப் போயிற்று" என்பதே இந்தக் கிராமத்தின் பெயர் என்று சொன்னார்கள். அதைச் சொன்னதும் வேதாகமத்தில் நமது சிம்சோன் என்ற பராக்கிரமசாலியின் வாழ்க்கையே ஒரு கணம் எங்கள் நினைவுக்கு வந்தது. தேவனற்ற, இடைவிடாத தேவ சமூக ஐக்கியம் இழந்த ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை எத்தனை ஆபத்தான வாழ்க்கை என்பதை ஒரு முறைதானும் நாங்கள் அந்த இடத்தில் பயத்தோடும், நடுக்கத்தோடும் நினைவுபடுத்திக் கொண்டோம். அந்த பல்மரா கிராமத்தில் இருந்த ஆரம்ப பள்ளியில் 50 மாணாக்கரும் 2 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம்.
கர்ஜியா, சிப்பல்துரா, கான்பரா, கட்டியாபகட் என்ற ஊர்களில் இருந்த பள்ளிகளிலும், கிராமத்தின் கடை வீதிகளிலும் நாங்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்து ஊழியம் செய்தோம். கட்டியாபகட்டில் இருந்த பள்ளியில் படம் காட்டி தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்க கர்த்தர் உதவி செய்தார். அந்தப் பள்ளியில் 72 பிள்ளைகளும் 4 ஆசிரியர்களும் இருந்தனர்.
அங்கிருந்து சில கி.மீ. தூரம் பிரயாணத்திற்குப் பின்னர் நாங்கள் பரம் என்ற ஊரை வந்தடைந்தோம். வலது இடது கைப்பக்கங்களில் கடை வீதிகள் அமைந்துள்ள ஜன நடமாட்டமுள்ள ஒரு பெரிய கிராமம் அது. கிராமத்தின் உச்சி முகட்டில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் இருந்தது. நமது தேவ ஊழியர்கள் மூச்சு வாங்க, வாங்க செங்குத்து ஏற்றம் ஏறி அங்குள்ள 130 பிள்ளைகளுக்கும், 4 ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பி வந்தனர். பின்னர் அந்த ஊரின் கடைவீதிகளில் உள்ள மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினோம்.
|
| ஆதிச்சோராவில் நடைபெற்ற ஊழியங்கள் |
ஒரு நாள் நாங்கள் டிடிகாட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள ஆதிச்சோரா என்ற இடத்திற்குச் சென்றோம். நாங்கள் அங்கு சென்ற பாதை மிகவும் பயங்கரமான பாதையாகும். வாகனத்தின் நான்கு டயர்கள் மட்டும் பூமியை தொட்டு நிற்கும் அளவிற்கு மிகவும் இடுக்கமான வழி அது. வாகனத்தை ஓட்டும் டிரைவர் ஒரு பலமான தும்மல் போட்டு கரங்கள் சற்று தடுமாறினாலோ அல்லது ஒரு சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலோ உடன்தானே வாகனம் அப்படியே கெடு பாதாளம் சென்றுவிடும். அந்த பயங்கர பாதையில் ஆண்டவரின் பாதுகாவலின் கரங்கள் உங்களின் ஜெபங்களின் காரணமாக எங்களை அற்புதமாகப் பாதுகாத்தது.
ஆதிச்சோரா கிராமம் ஒரு கடையாந்திர கிராமமாகும். நாங்கள் அங்கு சென்றதும் அந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவு கால் நடையாக இறங்குமுகமாகச் சென்று அங்கிருந்த ஒரு பள்ளிக்குச் சென்று அங்கிருந்த மாணவ மாணவியர்களுக்கு ஆண்டவருடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். எங்களிடமிருந்து பிரதிகளைப் பெற்ற பிள்ளைகள் தங்கள் கரங்களில் அவைகளை வைத்த வண்ணமாக காலையில் கூடும் தங்கள் அசெம்ப்ளியில் பாடிக்கொண்டு நிற்பதை நீங்கள் பார்க்கலாம். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வருவதற்கு தாமதமானதும் அந்தப் பிள்ளைகளே அசெம்ப்ளியை மிகவும் ஒழுங்கு கிரமத்துடன் தொடங்கி முடித்துவிட்டதை நாங்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் கவனித்தோம்.

ஆதிச்சோராவிலிருந்து நாங்கள் எங்கள் வாகனங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்ட நேரம் ஒரு ஏழை மனிதர் மிகவும் சுகயீனமான தனது வாலிப மகளை டிடிகாட்டிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியாக எங்கள் வாகனங்களண்டை வந்து எங்களை மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டார். அவருடைய விருப்பப்படி அந்த மகளை எங்கள் வாகனத்தில் ஏற்றி வந்து மருத்துவ மனை கொண்டு வந்து சேர்த்தோம். அந்த மனிதர் எங்களை வாயார வாழ்த்தி நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார். அவருடைய கரங்களிலும் தேவனுடைய வார்த்தைகளை கொடுக்க மறக்கவில்லை. |
| தேனாகோட்டில் நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
|
கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் நாங்கள் ஒரு நாள் டிடிகாட்டிலிருந்து 19 கி.மீ தொலைவிலுள்ள தேனாகோட் என்ற இடத்திற்கு தேவனுடைய ஊழியத்தைச் செய்வதற்காகப் புறப்பட்டோம். டிடிகாட்டை நாங்கள் கடந்து சில கி.மீ. தூரம் போன பின்னர் ஒரு அடர்ந்த கானகம் வருகின்றது. இந்தக் கானகத்துக்குள்ளாக நாங்கள் கணிசமான தூரம் பிரயாணம் செய்தோம். கானக விலங்குகள் நிறைந்த அடர்ந்த காடு அது. ஓரிடத்தில் எங்கள் வாகனத்தை ஓட்டி வந்த மனோஜ் என்ற டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு ரஸ்தா ஓரமாக ஓடினார். சற்று நேரத்திற்கெல்லாம் தனது கரங்களில் சீனிக் கிழங்குகளைப் போல கிழங்குகள் நிறைந்த ஒரு குத்துச் செடியை அவர் தனது கரங்களில் பிடுங்கிக் கொண்டு வந்தார்.
"இந்தக் கிழங்குகள் மிகவும் அற்புதமான ஒரு மருந்துப் பொருள். இந்தக் கிழங்குகளை வெட்டி வெயிலில் உலர்த்தி வாயில் போட்டு மென்று அதின் சாரைக் குடித்தால் சிறுநீரக கற்கள் எல்லாம் மறைந்துவிடும்" என்று எங்களிடம் கூறினார். அப்படியே அந்தக் கிழங்குகளை நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதியில் மனோஜ் வெட்டி உலர்த்தி தன்னுடைய ஊருக்கு எடுத்துச் சென்றார்கள். ஆண்டவருடைய படைப்பில் இவ்வண்ணமான அபூர்வ மருத்துவ தாவரங்களும் உள்ளன என்பதை சாது சுந்தர்சிங் அவர்கள் எழுதிய "கைலாச மகரிஷி" என்ற புத்தகத்தில் நாம் வாசிக்கின்றோம் அல்லவா?
எங்கள் வாகனங்கள் கானகத்தில் நீண்ட நேரம் ஓடிய பின்னர் கானக மரங்களுக்கு ஊடாக அடிவாரத்தில் ஒரு கிராமத்தின் வீடுகள் எங்கள் கண்களுக்குத் தென்பட்டது. அந்த வீடுகளும், கிராமமும் பார்ப்பதற்கு ஏதோ பூர்வ காலத்து கிரேக்கர்களின் குடியிருப்பு போல அழகாக எங்களுக்குத் தெரிந்தது.

தேனாகோட்டுக்கு முன்பாக கிரோலி என்ற ஒரு சிறிய ஊர் வந்தது. அங்கும் நாங்கள் ஆண்டவருடைய வார்த்தைகளை மக்களுக்குக் கொடுத்தோம்.
இறுதியாக நாங்கள் அந்த தேனாகோட் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஊரின் முகப்பிலேயே ஒரு உயர்ந்த மலை இருக்கின்றது. அந்த உயர்ந்த மலையில் அந்த ஊரிலுள்ள ஆடுகள் கூட்டம் கூட்டமாக செடி கொடிகளை மேய்வதை நாங்கள் கவனித்தோம். அவற்றை மேய்ப்பவர்களும் அந்த மலை உச்சியில் இருப்பதை நாங்கள் கண்டோம். பிழைப்புக்காக அந்த மலை வாழ் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாக இருக்கின்றது என்பதை நாங்கள் துக்கத்துடன் கவனித்தோம். தேனாகோட் ஊரிலுள்ள கடைவீதியின் ஒரு பக்கத்தில் நின்று நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் தன் வசம் கொண்டு வந்திருந்த படச்சுருளைக் காண்பித்து இரட்சகரின் சுவிசேஷத்தை மக்களுக்குக் கூறினார்கள். அதின் பின்னர் அந்த ஊரிலுள்ள எல்லாருக்கும் தேவனுடைய பிரசுரங்களை நாங்கள் ஜெபத்துடன் விநியோகித்தோம். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எங்களிடமிருந்து பிரசுரங்களை வாங்கி வாசித்தனர். கிரேக்க கிராமம் போன்று காட்சி தரும் தேனாகோட் ஊரையும், படம்காட்டி சுவிசேஷம் அறிவித்த பின்னர் கைப்பிரதிகளை விநியோகிக்கும் காட்சியையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

|
| பாக்கிச்சோராவில் நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
டிடிகாட்டிலிருந்து பாக்கிச்சோரா என்ற இடம் 25 கி.மீ.தொலைவில் இருக்கின்றது. வழக்கம்போல அன்றும் தேவ சமூகத்தில் நாங்கள் முழங்காலூன்றி கர்த்தர் ஊழியங்களை ஆசீர்வதித்துத் தரும்படியாக ஜெபித்துவிட்டு ஊழியத்திற்குத் தேவையான பிரசுரங்களை எடுத்துக் கொண்டு டிடிகாட்டிலிருந்து ஓக்லா என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றோம். நான்கு பிரதான ரஸ்தாக்களின் சந்திப்பில் ஓக்லா அமைந்துள்ளது. பல பேருந்துகள் இந்த இடத்தில் நின்று செல்லுவதால் எப்பொழுதும் ஜனக்கூட்டம் இருப்பதுடன் நிறைய சாப்பாட்டு விடுதிகளும், டீ கடைகளும் இருக்கின்றன. இந்த இடத்தில் நாங்கள் கடந்த நாட்களில் ஊழியம் செய்திருக்கின்றோம். இருப்பினும் அங்குள்ள ஒரு பிரைமரி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 35 பிள்ளைகளுக்கு ஆண்டவருடைய பிரசுரங்களை இந்த தடவைக் கொடுத்துவிட்டு கடந்து சென்றோம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
நாங்கள் ஓக்லாவிலிருந்து நேராகச் பாக்கிச்சோரா என்ற இடத்திற்கு பிரயாணப்பட்டோம். பாக்கிச்சோரா ஊருக்கு முன்பதாக நிறைய கிராமங்கள் இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டு அந்த இடங்களில் ஊழியங்கள் செய்யும் ஆவலில் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் சென்ற வழித்தடத்தில் முதலாவது நாராயண்நகர் வந்தது. அங்கிருந்த மேல்நிலைப்பள்ளியில் நாங்கள் பிள்ளைகளுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்த பின்னர் சிங்காலி என்ற இடத்திற்கு வந்தோம். அங்கிருந்த பிரைமரிப் பள்ளியில் 35 மாணவர்கள் இருந்தனர். அவர்களுக்கு பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு சூனார்கோட் என்ற இடத்திற்கு வந்தோம். அங்கிருந்த பிரைமரி பள்ளியில் 50 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் இருந்தனர். அங்கிருந்த மற்றொரு பள்ளியில் 40 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் இருந்தனர். அந்தஇரண்டு பள்ளிகளிலும் தேவனுடைய சுவிசேஷப் பிரதிகளைக் கொடுத்தோம். இறுதியாக பாக்கிச்சோரா என்ற இடத்திற்கு வந்தோம். அந்த அழகான இடத்தில் ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் ஆரஞ்சு, கொய்யா, மாதுளை போன்ற பழ மரங்கள் இருப்பதை நாங்கள் கவனித்தோம். ஒவ்வொரு வீடாகச் சென்று ஆண்டவருடைய சுவிசேஷப் பிரதிகளை ஜெபத்துடன் கொடுத்தோம். பாக்கிச்சோரா கடை வீதியிலும் தேவனுடைய வார்த்தைகளை விநியோகித்தோம். அந்த பாக்கிச்சோராவில் இருந்த ஒரு பிரைமரி பள்ளியிலும், ஒரு பப்ளிக் ஸ்கூலிலும் இருந்த பிள்ளைகளுக்கு தேவனுடைய பிரசுரங்ளைக் கொடுத்துவிட்டு மனமகிழ்ச்சியோடு எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தோம். டிடிகாட்டைச் சுற்றி வேறு சில இடங்களிலும் நாங்கள் கர்த்தருடைய ஊழியங்களைச் செய்து வந்தோம்.
டிடிகாட்டில் ஒரு ஓய்வு நாளில் நாங்கள் எல்லாரும் பாடல்கள் பாடி ஆண்டவரை ஆராதித்தோம். பாஸ்டர் சகோதரன் எம்.சி.ஜேம்ஸ் அவர்கள் கர்த்தருடைய செய்தியை எங்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்கள். மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. டிடிகாட் உயர்ந்த மலையில் இருப்பதால் குளிர் அதிகமாக இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஓய்வு விடுதியில் அதற்கு ஏற்றபடி நல்ல கம்பளி போர்வைகளை எங்களுக்குத் தந்திருந்தார்கள். நாங்கள் அங்கு தங்கியிருந்த நாட்களின் இறுதிப் பகுதியில் அங்குள்ள மின்சார சாதனம் பழுதாகிவிட்டபடியால் சில நாட்கள் நாங்கள் எவரும் ஸ்நானம் பண்ண இயலவில்லை. அதையும் நாங்கள் கர்த்தருக்குள் மனமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டோம். |
தகைவிலான் குருவிக் கூட்டில்
அடைக்கலான் குருவியின் ஆனந்த வாழ்க்கை |
டிடிகாட்டில் நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதியின் வெளிப்பக்கத்தின் சுவரில் உயர்ந்த ஒரு இடத்தில் ஒரு தகைவிலான் குருவிக் கூட்டை நான் கண்டேன். எங்கிருந்தோ களிமண்ணைக் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக அதை ஒட்ட வைத்து உலகின் எந்த ஒரு கட்டிடக் கலைஞனும் கட்ட முடியாத விதத்தில் அதை அங்கே நேர்த்தியாக அமைத்து வைத்திருந்தது. தகைவிலான் கூட்டின் உட்புறத்தை நீங்கள் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். அதின் குஞ்சுகள் மிகவும் சொகுசாக வாழ கூட்டின் உட்புறத்தை மிருதுவான பஞ்சாலும், பறவைகளின் வெகு மெல்லிய இறக்கை முடியாலும் அது பாங்குற பதித்து வைத்திருக்கும். சொல்லப் போனால் அது ஒரு வெல்வட் கம்பளம் விரித்த அழகான படுக்கையைப் போலிருக்கும். சுவரோடு ஒட்டியிருக்கும் அதின் களிமண் கூட்டை நமது கரங்களால் அத்தனை எளிதாக பெயர்த்து எடுக்க முடியாது. அதை அகற்ற வேண்டுமானால் ஒரு கடப்பாரையைத்தான் பயன்படுத்த வேண்டும். அத்தனை உறுதியாக அது இருக்கும். அந்தச் சிறிய தகைவிலான் குருவிக்கு அத்தனை வலிமையான, அழகான கூட்டைக்கட்டி வாழ அதின் சிருஷ்டிகர் அப்படி ஒரு ஞானத்தைக் கொடுத்திருக்கின்றார்.
ஒரு நாள் நான் அந்தக் கூட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதைக் கஷ்டப்பட்டுக் கட்டிய தகைவிலான் குருவி விரைவில் பறந்து அதின் கூட்டிற்கு வரும் என்று நினைத்து காத்திருந்த எனக்கு அதிசயம் காத்திருந்தது. ஆம், ஒரு அடைக்கலான் குருவி அந்தக் கூட்டிற்குள் மிகவும் சாவதானமாக பறந்து வந்து உட்காருவதை நான் கவனித்தேன். அதைத் தொடர்ந்து அதின் பெண் குருவி வந்தது. அந்த தகைவிலான் குருவிக்கூட்டை அடைக்கலான் குருவிகள் முழுமையாக ஆக்கிரமித்து தங்கள் இருப்பிடமாக மாற்றிக் கொண்டிருந்தன. எந்த ஒரு கஷ்டமுமில்லாமல் மிகவும் பாதுகாப்பானதும் அழகானதுமான கூடு அடைக்கலானுக்கு கிடைத்திருந்தது. அடைக்கலான் குருவிகள் தங்களுடமையாக்கிக் கொண்ட தகைவிலானின் கூட்டை நீங்கள் இந்தச் செய்தியில் பார்ப்பீர்கள். நீங்கள் காண வேண்டும் என்பதற்காக ஒரு புகைப்படம் எடுத்து வந்தேன்.

அந்த நிகழ்ச்சியின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் எனக்கு ஒரு பெரிய பாடமே கற்றுத் தந்தார். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. தகைவிலான் குருவி ஏன் தனது கூட்டை இழந்துவிட்டது? அதின் ஒரே காரணம், அது தனது கூட்டை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் அப்படியே விட்டு வைத்திருந்ததுதான். அந்தக் கூட்டை தகைவிலான் குருவி தொடர்ந்து பயன்படுத்தி வந்திருந்தால் அடைக்கலான் குருவி அதற்குள் நுழைய இடமே கிடையாது. ஆனால், கூடு காலியாகக் கிடந்த காரணத்தால் அடைக்கலான் குருவிகள் அதை சுலபமாக தங்கள் வசமாக்கிக் கொண்டன. நமது ஆத்துமாவின் காரியமும் அதுவேதான். நமக்கும் நம் அன்பின் ஆண்டவருக்கும் எந்த ஒரு தொடர்பும் எந்த ஒரு ஐக்கிய நேசமும் இல்லாதபட்சத்தில் சத்துருவாகிய பிசாசு நமது இருதயத்தை தனக்கென முழுமையாக வெகு இலகுவாக எடுத்து அங்கே தனது சிம்மாசனத்தை நிரந்தரமாகப் போட்டுக் கொள்ளுவான்.
எத்தனையோ கிறிஸ்தவ மக்கள் தங்கள் ஆரம்ப கால வாழ்வை எத்தனை அருமையாகவும், பரிசுத்தம் பக்தியோடும் ஆரம்பித்தார்கள். தங்களுக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவருடைய பாதங்களுக்கு ஓடினார்கள். கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து தியானித்தார்கள். அவரைப் பாடித் துதித்தார்கள். அவரை அதிகமாக நேசித்தார்கள். கர்த்தரோடுள்ள அவர்களுடைய ஐக்கியம் வெகு வலுமையாக இருந்தது. காலப்போக்கில் அவர்களின் பிள்ளைகள் நல்ல உத்தியோகங்களைப் பெற்று மேல் நாடுகளுக்குச் சென்றார்கள். திரண்ட சம்பாத்தியம் வீடு தேடி வந்தது. அதின் முதல் கட்டமாக பெரிய கரும் பெட்டி (தொலைக்காட்சி பெட்டி) வீட்டுக்குள் நுழைந்தது. அத்துடன் அதின் சொந்தக்காரனான மனுஷ கொலை பாதகனும் அழகாக காலடி எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்தான். ஆண்டவருடைய பாதங்களில் செலவிடப்பட்ட பரிசுத்தமான மணி நேரங்களை தொலைக்காட்சி பெட்டி இப்பொழுது அப்படியே விழுங்கி ஏப்பமிட்டுவிட்டது. காலப்போக்கில் அவர்களுக்கும், ஆண்டவருக்கும் இடையிலுள்ள பரிசுத்த உறவுகள் மங்கலாகி, மங்கலாகி இறுதியில் மறைந்தே போனது. தகைவிலான் குருவி கூட்டைவிட்டுப் போனதும், அடைக்கலான் குருவி அதின் வீட்டை தனது உடைமையாக்கிக் கொண்டது போல மேலே நாம் பார்த்த கிறிஸ்தவர்களின் இருதயங்களில் தேவனுடைய பிரசன்னம் மறைந்து போனதைக் கண்ட சாத்தான் தனது இருளின் ஆதிக்கத்தை நன்கு ஸ்தாபித்து அவர்களின் இருதயங்களை தன் சொந்தமாக்கிக் கொண்டான். தேவ ஜனமே, எல்லாக் காவலோடும் உங்கள் இருதயத்தைக் காத்துக் கொள்ளுங்கள் அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும் (நீதி 4 : 23)
|
2006 ஆம் ஆண்டின் தேவ ஊழியத்தை
ஆசீர்வதித்துத் தந்த அன்பின் கர்த்தர் |
2 வாகனங்களை ஒரு மாதம் முழுமைக்கும் வாடகைக்கு அமர்த்தி 10 பேர்கள் கொண்ட குழுவினருக்கு 3 வேளை ஆகாரம், தங்கும் வசதிகள், வாகனங்களுக்கான எரி பொருள், வாகனங்களின் வாடகைகள், தேவ மக்களுக்கு வித்தியாசமான தண்ணீரைக் குடிப்பதால் ஜலதோஷம் வந்து ஆண்டவருடைய பரிசுத்த ஊழியம் எந்த விதத்திலும் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக பிஸ்லேரி பாட்டல் தண்ணீர், இன்னும் எத்தனை எத்தனையோ இதரச் செலவினங்களையும் சந்திப்பது என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. இருப்பினும் சர்வ வல்ல தேவன் நமது ஊழியத் தேவைகள் யாவையும் மனுப்புத்திக்கு எட்டாதவிதத்தில் நிறைபூரணமாகச் சந்தித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கரங்களில் தமது ஜீவனுள்ள வார்த்தைகளை கொடுக்கும் சிலாக்கியத்தை 2006 ஆம் ஆண்டிலும் நமக்குத் தந்தார். தேவனுடைய வார்த்தைகளைப் பெற்றுப்படித்துக் கொண்டிருக்கும் மக்கள் உள்ளங்களில் கர்த்தர் தொடர்ந்து பேசும்படியாக நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
தேவ ஊழியர்களாகிய எங்களை வட மாநில ஊழியங்களுக்கு உங்கள் கஷ்ட சம்பாத்தியத்தின் பணத்தினால் அனுப்பி வைத்த தேவப் பிள்ளைகள் நீங்களே. நீங்கள் உதவி செய்திருக்காத பட்சத்தில் இந்த ஊழியங்கள் இல்லை. அதற்கான பிரதி பலன் பரலோகில் உங்களுக்கு உண்டு. ஏழைப் பரதேசிகளாகிய நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர் மாத்திரமே.
நாங்கள் அதிகமான ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும் கொடுத்த ஆண்டவருடைய பிரசுரங்களைப் பெற்று ஆவலுடன் படிக்கும் சில படங்களை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம். எல்லா துதி, கனம், மகிமை நம்மைத் தமது பரிசுத்த இரத்தத்தால் கொண்ட அன்பின் ஆண்டவர் ஒருவருக்கே உண்டாவதாக. ஆமென்.














|
|
|