தேவப்பிள்ளையே, உங்கள் உருக்கமான
ஜெபங்களால் எங்களைத் தாங்குங்கள்

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள நம் கருணாகரக் கர்த்தர் கிருபைகூர்ந்தால், இந்த தேவ எக்காள இதழ் உங்கள் கரங்களுக்குக் கிடைத்த சில தினங்களில் நாங்கள் கர்த்தருடைய பரிசுத்த ஊழியத்தின் பாதையில் உத்தராஞ்சல் மாநிலத்திற்குக் கடந்து செல்லுவோம். கடந்த ஆண்டுகளைப்போல இந்த ஆண்டிலும் 2 வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி நாங்கள் மொத்தம் 9 பேர்கள் (வாகனங்களின் 2 டிரைவர்களையும் சேர்த்து) ஒரு குழுவாக தேவனுடைய பரிசுத்த ஊழியத்தைச் செய்யவிருக்கின்றோம்.

கர்த்தருக்கு சித்தமானால் நாங்கள் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இமயமலைகளின் அடிவாரப்பட்டணம் ஹல்த்வானியில் பாஸ்டர் எம்.சி.ஜேம்ஸ் அவர்களின் ஜெப அறையில் கூடி நமது ஊழியங்களுக்காக விசேஷித்து ஜெபித்து எங்கள் வாகன தேவ ஊழியத்தை ஆரம்பிக்கவிருக்கின்றோம். செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி மாலைக்குள்ளாக நமது ஊழியத்தில் பங்கு கொள்ளும் 7 பேர்கள் ஹல்த்வானிக்கு வந்து சேருகின்றார்கள். சகோதரன் நார்ட்டன் அவர்களும் நானும் 30 ஆம் தேதி காலை கர்த்தருக்குச் சித்தமானால் அவர்களோடு சேர்ந்து கொள்ளுவோம். அடுத்து வரும் 1 அல்லது 2 நாட்களுக்கு நாங்கள் யாவரும் ஒன்றாக அமர்ந்து விநியோகிக்கப்பட வேண்டிய தேவனுடைய பிரசுரங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு அந்த வேலை பூரணமாக முற்றுப் பெற்றதும் உடனே எங்கள் பிரயாணத்தை தொடங்குவோம்.

எந்தெந்த இடங்களில் எந்தெந்த தேதிகளில் ஊழியம் நடைபெறும் என்ற ஒரு திட்டமான கால அட்டவணையை உங்களுக்குத் தர நான் அதிகமாக விரும்புகின்றேன். காரணம், நீங்கள் அந்தந்த நாட்களில் கட்டாயம் மிகுந்த பாரத்தோடு ஜெபிப்பீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், நாங்கள் திட்டமிடும் வண்ணம் ஊழியங்கள் சரியாக அந்த இடங்களில் நடந்தேறுமா என்பதை நாம் சரியாக உறுதியிட்டுக் கூற முடியாது. அதின் காரணமாக, நாம் விரும்பும் இடங்களில் சரியாக ஊழியங்களை நிறைவேற்றிக் கொண்டு அடுத்த இடம் செல்ல இயலுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. நீங்கள் நன்கு அறிந்தபடி இந்த நாட்களில் யாவரின் கரங்களிலும் செல் போன் வசதிகள் இருப்பதால் நம்முடைய ஊழிய நடமாட்டமான காரியங்களையும், ஊழியத்தில் என்ன என்ன கைப்பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன என்பதையும், நம்முடைய வாகனங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போய்ச் சேருவதற்கு முன்னரே அந்த இடத்திற்கு தகவல் கொடுத்துவிடுகின்றனர். இவை யாவையும் நாம் அனுசரித்து தீமையோடு எதிர்த்து நிற்காமல் கர்த்தருக்குள் மிகுந்த ஞானத்தோடு ஊழியம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது. எனவே, ஊழியம் செய்யும் இடங்கள், தேதிகள் குறித்து நான் உங்களுக்கு திட்டமான விபரம் தர இயலாதவனாக இருக்கின்றேன்.

உங்கள் உருக்கமான ஜெபங்களை செப்டம்பர் மாதம் கடைசி நாளிலிருந்தே ஆரம்பித்துவிடுங்கள். கடந்த ஆண்டைப் போல நம் அன்பின் ஆண்டவர் இந்த ஆண்டிலும் நமக்கு நல்ல வகை வகையான சுவிசேஷ கிறிஸ்தவ இலக்கியங்களைத் தந்திருக்கின்றார். அவை யாவும் பாதுகாப்பாக ஹல்த்வானி பட்டணம் போய்ச் சேர்ந்துவிட்டது. கர்த்தருக்கு துதி உண்டாவதாக. இந்த ஆண்டிலும் நமது உள்ளத்தின் அங்கலாய்ப்பான ஜெபம் கேட்டு கர்த்தர் நல்ல ஊழியங்களைத் தருவார் என்று நாம் நிச்சயமாக விசுவாசிப்போம். ஊழியம் கர்த்தருடையது. ஆத்துமாக்கள் அவரது விலையேறப்பெற்ற இரத்தக் கிரயத்தால் கொள்ளப்பட்டவர்கள்.

நாங்கள் வாடகைக்கு அமர்த்திச் செல்லும் இரண்டு வாகனங்களுக்கு சத்துருக்களால் எந்த ஒரு சேதமும் ஏற்படாதிருக்கவும், அவைகள் எங்கள் ஊழிய நாட்கள் அனைத்திலும் எந்த ஒரு பழுதின்றி ஓடவும், அதினிமித்தம் தேவ ஊழியங்கள் தடைப்படாதிருக்கவும் நீங்கள் ஜெபிப்பதுடன் 2 வாகனங்களில் ஏராளமான தேவனுடைய பிரசுரங்கள் ஏற்றிக் கொண்டு செல்லப்படுவதால் வாகனங்களை சோதனையிடும் ரஸ்தா மார்க்கத்திலுள்ள சுங்கச் சாவடிகளில் உள்ள அரசு அதிகாரிகள் விற்பனைக்கான புத்தகங்கள் என்று தேவையில்லாமல் எங்களிடம் அதற்காக பணம் வசூலியாதிருக்கவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் எந்த எந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும், எந்த எந்த இடங்களில் ஆண்டவருடைய ஊழியத்தைச் செய்ய வேண்டும், எங்கே எங்கே தேவனுடைய சுவிசேஷ சத்தியத்தை வாஞ்சையோடும், தவனத்தோடும் ஏற்றுக் கொள்ளும் ஆத்துமாக்கள் உள்ளனர் என்பதை கர்த்தர் எங்களுக்குக் காண்பித்து அந்த இடங்களுக்கு அவர் எங்களை சரியாக அழைத்துச் செல்ல தயவாக ஜெபித்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு எதிராக சாத்தான் மேற்கொள்ளும் அவனது அக்கினியாஸ்திரங்கள் அனைத்தும் வாய்க்காதே போக உங்கள் ஜெபம் தேவை.

சுவிசேஷகர்களாகிய நாங்கள் "ஜனங்களுக்காக பரிதபிக்கிறேன்" (மத் 15 : 32) என்று அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக பரிதபித்த நம் அன்பரைப் போலவும், மிகுந்த கண்ணீராடு கர்த்தரைச் சேவித்தேன் என்ற பரிசுத்த பவுல் அப்போஸ்தலனைப் போலவும் மெய்யான ஆத்தும பாரத்தோடும், நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமா முடிவில்லாத நித்திய அக்கினியில் அனுபவிக்கும் கொடும் துயரங்களை மனதில் கொண்டு, மிகுந்த மனதுருக்கத்தோடும், அதிகமான ஜெபத்தோடும் எங்களுடைய ஊழியங்களை நிறைவேற்றவும் அன்பாக ஜெபித்து வாருங்கள்.

நாங்கள் இராத்தங்கும் இளைப்பாறும் விடுதிகளில் கர்த்தருடைய கிருபையின் பிரசன்னம் எங்களைச் சூழ்ந்து கொள்ளவும், அந்த இடங்களில் நாங்கள் உலகப் பிரகாரமான எந்த வீண் வார்த்தைகளையும் பேசாமல், தேவனுடைய வசனங்களை வாசித்து தியானிப்பவர்களாகவும், அதிகமான நேரத்தை ஜெபத்தில் செலவிட்டு, அந்த நாளில் விநியோகிக்கப்பட்ட மற்றும் வரப்போகும் அடுத்த நாள் கொடுக்கப்படவிருக்கும் கர்த்தருடைய பிரசுரங்களை பெற்றுக்கொள்ளப் போகின்ற ஆத்துமாக்களில் ஆண்டவர் கிரியை செய்யும்படியாக நாங்கள் பாரத்தோடு ஜெபித்து ஆயத்தப்பட அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். எங்கள் உடல் நலத்திற்கு குறிப்பாக எங்கள் வயிற்றுக்கு பங்கம் விளைவியாத நல்ல ஆகாரங்கள் உணவு விடுதிகளில் பரிமாறப்படவும், நாங்கள் புசிக்கும் ஆகாரம், நாங்கள் பருகும் தண்ணீரைக் கர்த்தர் எங்களுக்கு ஆசீர்வதித்துத் தரவும், அன்பின் ஆண்டவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் ஊழிய நாட்கள் முழுமையிலும் நல்ல தேக சுகத்தைத் தரவும், நாங்கள் ஆங்காங்கு இராத் தங்கும் இடங்களில் கர்த்தர் எங்களுக்கு இராக்காலங்களில் நல்ல சமாதானமான இளைப்பாறுதலைத் தரவும் தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

தங்களுடைய அன்பான மனைவி, பிள்ளைகளை தூரமான இடங்களில் விட்டு வந்திருக்கும் தேவ ஊழியர்கள், வாகனங்களை ஓட்டும் டிரைவர்களின் குடும்பங்களைச் சுற்றிலும் கர்த்தர் தமது பிள்ளைகளை வேலி அடைத்துக் காத்துக் கொள்ளவும், எந்த ஒரு நோய் பிணிகள் மற்றும் சத்துருவால் எந்த ஒரு தீங்குகளும் அவர்களை அணுகாதிருக்கவும், கர்த்தர் தமது செட்டைகளின் மறைவில் அவர்களைக் காத்துக் கொள்ளவும், கர்த்தருடைய தாசர்கள் தங்களுடைய குடும்பத்தை குறித்த மனபாரம் நீங்கி மிகுந்த தேவசமாதானத்தோடு கர்த்தருடைய ஊழியங்களை நிறைவேற்றும் காரியங்களில் மாத்திரம் கண்ணும் கருத்துமாக ஈடுபாடு கொள்ளவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் கொண்டு செல்லுகின்ற அன்பான தேவ பிள்ளைகளின் தியாக அன்பின் காணிக்கைகளின் பணங்கள் எந்த ஒரு நிலையிலும் அநாவசியமாக செலவிடப்படாதிருக்கவும், நாங்கள் அவற்றை மிகுந்த ஞானத்தோடும், ஜெபத்தோடும் செலவிடவும் "நான் உங்களைப் பணப்பையும், சாமான் பையும் இல்லாமல் அனுப்பினபோது ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா?" (லூக்கா 22 : 35) என்று கேட்ட அன்பின் கருணைக்கடல் எங்கள் பானையின் மாவும், கலயத்தின் எண்ணெயும் எங்கள் எல்லாத் தேவைகளையும் கடைசி வரை நிறைவாகப் பூர்த்தி செய்யவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

அநேக ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள, மற்றும் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ள சுவிசேஷப் பங்குகளும், தேவனுடைய பிரசுரங்களும் கர்த்தரால் முன் குறிக்கப்பட்ட சரியான கரங்களுக்குப் போய் கிடைக்கவும், அவைகள் முப்பது, அறுபது, நூறுமான பலனை ஏற்ற காலங்களில் பிறப்பிக்கவும், எந்த தேவனுடைய பிரசுரங்களும் வீண்போகாதிருக்கவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். எங்கள் ஊழிய நாட்கள் முழுமையிலும் கர்த்தர் எங்களுக்கு நிறைவான தேவ சமாதானத்தைக் கொடுத்து, எங்களுக்கு எதிராக சாத்தான் கொண்டு வரக்கூடிய சோர்பு, அவிசுவாசம், மனுஷ பயம் யாவையும் அகற்றி எங்களைத் தமது தேவ அன்புக்குள் காத்துக் கொள்ளவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

அன்பின் ஆண்டவர் இந்த ஜெபக்குறிப்புகளைத் தவிர வேறு எந்தக் காரியங்களுக்காவது எங்களுக்காக ஜெபிக்க உங்களைத் தூண்டுவாரானால் அந்தக் காரியங்களுக்காகவும் தயவாக உள்ளத்தின் பாரத்தோடு ஜெபித்து வாருங்கள். இந்த அருமையான தேவ ஊழியங்களுக்காக மிகுந்த தியாக அன்போடு கொடுத்தவர்கள், தேவனுடைய பிரசுரங்களை பிழையின்றி மிகவும் குறைந்த செலவில் அழகாக அச்சிட்டு அனுப்பியவர்கள், களமிறங்கி தேவனுடைய பிரசுரங்களை நிந்தை, பரியாசம், மிரட்டல்கள், எதிர்ப்புகள் நடுவில் கர்த்தருக்காக தைரியமாகக் கொடுக்கும் தேவ ஊழியர்கள், இந்த தேவ ஊழியங்களின் ஆசீர்வாதங்களுக்காக இராப் பகலாக உள்ளத்தின் பாரத்தோடு ஜெபிக்கும் கர்த்தருடைய பிள்ளைகள் அனைவருக்கும் தேவ சமூகத்தில் மெய்யாகவே பலனுண்டு என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தம்முடைய இரத்தக்கிரயத்தால் நம்மைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட நம் அருமை இரட்சகர் இயேசுவுக்காக நாம் எல்லாரும் ஒன்றாகக் கை கோர்த்து இந்த மகத்துவமான தேவ ஊழியத்தை நிறைவேற்றுவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM