பயங்கரங்களின் ராஜாவும், ராஜாதி ராஜாவும்



(26 ஆண்டு காலங்களுக்கு முன்பாக அமெரிக்கா தேசத்திலிருந்து என்னண்டை வந்த The Sword of the Lord என்ற ஆங்கில கிறிஸ்தவ பத்திரிக்கை மிகவும் பழைமையாகி என்னுடைய புத்தகங்களுடன் இருந்தது. அதை நான் சமீபத்தில் பார்த்து இனி அது நமக்கு தேவைப்படாது என்ற நிச்சயமான எண்ணத்தில் குப்பை கூடையில் போடுவதற்காகப் போடும் கடைசி வேளையில் பரிசுத்த ஆவியானவர் அதை ஒரு முறை பார்க்கும்படியாக என் உள்ளத்தில் அதிகமாக உணர்த்தவே நான் அதை வாசித்தபோது "பயங்கரங்களின் ராஜாவும், ராஜாதி ராஜாவும்" என்ற தலைப்பில் மரணத்தைக் குறித்து எழுதப்பட்ட ஒரு அருமையான தேவச் செய்தியை நான் கவனித்தேன். அது உங்களுக்கு மிகவும் பிரயோஜன மாயிருக்கும் என்ற ஆவலில் ஆவியானவரின் ஒத்தாசையோடு மொழிபெயர்த்து தந்திருக்கின்றேன். நீங்கள் நிச்சயமாக இந்தச் செய்தியை வாசித்தே ஆக வேண்டும் என்று தேவன் விரும்புவதால் தயவாக ஜெபத்தோடு வாசித்து உங்கள் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வுக்கு ஆசீர்வாதமாக்கிக் கொள்ளுங்கள்.)

ஒரு துஷ்ட மனிதன் ஒரு சமயம் ஒரு தேவாலயத்திற்குச் சென்றிருந்தான். அந்த நாளில் அந்த தேவாலயத்தின் குருவானவர் ஆதியாகமம் 5 ஆம் அதிகாரத்தை வாசிப்பதை அவன் கவனித்தான். அந்த அதிகாரத்தில் "அவன் மரித்தான்" "அவன் மரித்தான்" "அவன் மரித்தான்" என்ற வார்த்தை திரும்பத் திரும்ப வருவதை அவன் ஆழ்ந்து சிந்திக்கலானான். அந்த அதிகாரத்தில் அவர்கள் எத்தனை நூறாண்டு காலம் வாழ்ந்திருந்தாலும் கடைசியாக அவர்கள் ஒவ்வொருவரும் மரித்திருப்பதைக் குறித்து அவன் வாசிக்கக் கேட்ட போது மரணத்தையும், நித்தியத்தையும் குறித்த எண்ணத்தால் தனது இருதயத்தில் மிகவும் ஆழமாகக் குத்தப்பட்டான். அத்துடன் தேவனுடைய மகத்தான இரக்கக் கிருபையால் அந்த மனிதன் ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவனாக மாற்றம் அடைந்தான்.

எனது பாலிய பருவ நண்பனான ஒருவன் வெகு தொலை தூரத்திலுள்ள இந்திய தேசத்தில் எங்கோ ஒரு கூடார சுவிசேஷக் கூட்டத்தில் ஸ்காட்லாந்து தேச சுவிசேஷகரான ஜேம்ஸ் லைல் என்பவர் "ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே" (எபிரேயர் 10 : 31) என்ற கருப் பொருளில் பேசிய வார்த்தைகளால் தொடப்பட்டு ஆண்டவருடைய அடியானான். அந்த நண்பன் பின் நாட்களில் "மரணம், நியாயத் தீர்ப்பு என்ற வார்த்தைகள் என்னை நடுநடுங்கப் பண்ணிற்று" என்று என்னிடம் சொன்னான். அவன் அந்த சுவிசேஷக்கூட்டத்தில் முன் எழுந்து சென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான்.

"மோட்ச பிரயாணம்" என்ற பரிசுத்த புத்தகத்தின் ஆக்கியோன் ஜாண் பன்னியன் என்பவர் ஆண்டவருடைய இரட்சிப்புக்குள் வருவதற்கு முன்பாக ஒரு சமயம் மரணத்தைக் குறித்து மிகவும் அஞ்சி நடுநடுங்கினார். தேவாலயம் சென்றிருந்த அவர் அந்த ஆலயத்தின் மணிகளில் ஒன்று அறுந்து தன் தலையின் மேல் விழுந்து தன்னை நசுக்கிக் கொன்றுவிடுமோ என்று அஞ்சி தேவாலயத்தின் பிரதான உத்திரத்தின் கீழ் போய் நின்றார். அங்கு நின்ற அவர் ஒருக்கால் அந்த உத்திரம் பெயர்ந்து விழுந்து தான் மடிந்து விடுவோமோ என்று பயந்து தேவாலயத்தின் கோபுரத்திற்கு அருகிலுள்ள வாசலில் போய் நின்றார். அந்தக் கோபுரமே ஒரு வேளை தன் மேல் சாய்ந்து தன் தலையின் மேல் விழுந்து தன்னைக் கொன்று விடும் என்று பயந்து அங்கிருந்து கடைசியாக வெளியே ஓடிப்போனார்.

நான் உங்களுக்குச் சொன்ன இந்த மனிதர்கள் எல்லாரின் சாட்சிகள் அனைத்தும் மரணத்தைக் குறித்து பயமடைந்த மக்களின் சாட்சிகள் ஆகும். அவர்கள் எல்லாரும் தங்கள் மரணத்தைக் குறித்தும், தங்கள் மரணத்துக்குப் பின்னால் தங்களைத் தொடரும் காரியங்களைக் குறித்தும் சிந்தித்தபோது திகில் அடைந்தார்கள். அவர்கள் தங்கள் மரணம் என்ற "பயங்கர ராஜாவை" சந்திப்பதற்கு பயந்தார்கள்.

நான் உங்களுக்கு முன்பாக வைப்பதற்காகத் தெரிந்து கொண்ட வேதாகம பகுதி யோபின் புஸ்தகம் 18 ஆம் அதிகாரம் 14 ஆம் வசனத்திலுள்ள "அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்" என்பதாகும். அந்த 18 ஆம் அதிகாரம் முழுமையும் ஒரு துயரத்தின் மேல் மற்றொரு துயரம் மனுஷனுக்கு நேரிடுவதையும் இறுதியாக அது அவனை மரணம் என்ற பயங்கர ராஜாவினிடத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதையும் நாம் காணலாம். நான் எனது இந்தத் தேவச் செய்தியில் மரணத்தைக் குறித்த சில உண்மைகளை நான் உங்களுக்கு முன்பாக வைக்க ஆசைப்படுகின்றேன். அதுமட்டுமல்ல, மரணம் ஏன் பயங்கரங்களுக்கெல்லாம் ராஜா என்பதையும், அந்த பயங்கர ராஜாவை ஜெயித்த ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் உங்களுக்குக் கூற ஆசைப்படுகின்றேன்.


மரணத்தைக் குறித்த உண்மைகள்

மரணம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். உங்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. உங்களிடத்திற்கு அது வந்தே தீரும். உங்களால் அதை விலக்கி வைக்க முடியாது. அந்த உண்மை உங்களுக்கும் நன்றாகத் தெரியும். கடந்த கால சரித்திரம், உங்கள் தனிப்பட்ட வாழ்வின் அனுபவம், உங்கள் கிரகிக்கும் புத்திக்கூர்மை அதை உங்களுக்கு நிச்சயப்படுத்தும். நீங்கள் காண்கின்ற ஒவ்வொரு கல்லறைத் தோட்டமும் அதை உங்களுக்குச் சொல்லும். இங்கிலாந்து தேச கிராமப்புற தேவாலயத்தின் வளாகத்தில் உட்கார்ந்திருக்கும் தாமஸ் கிரே என்பர் கீழ்க்கண்டவாறு அதை உங்களுக்குச் சொல்லுவார்:-

The boast of heraldry, the pomp of power
And all that beauty, all that wealth e'ver gave,
Await alike the INEVITABLE hour :-
The paths of glory lead but to the grave.

உங்கள் அனைத்துக் காலடித் தடங்களும் உங்களை மரணத்துக்கு நேராக வழிநடத்துகின்றது. நீங்கள் விடும் ஒவ்வொரு மூச்சும் அதற்கு சமீபமாக உங்களை கொண்டு செல்லுகின்றது.

Art is long, and Time is fleeting,
And our hearts, though stout and brave,
Still, like muffed drums, are beating,
Funeral marches to the grave.
- Longfellow

உண்மையில் நீங்கள் இப்பொழுது மரித்துக் கொண்டிருக்கின்றீர்கள். "சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும்" (ரோமர் 8 : 10)

தேவனுடைய மா உண்மையான ஜீவ வார்த்தையானது மரணம் உங்களுக்கு நிச்சயமாக உள்ளது என்று கூறுகின்றது. ".இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று" (ரோமர் 5 : 12) "ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல" (1 கொரி 15 : 22)

வில்லியம் கல்லான் பிரையண்ட் என்பவர் மரித்தோரைப் பார்த்து "நாசியில் சுவாசமுள்ள அனைவரும் உங்களுடைய ஸ்தானத்தை விரைவில் சுதந்தரிப்பார்கள்" என்று கூறுகின்றார். மனந்திரும்பாத மனிதனே, மனந்திரும்பாத பெண்ணே உங்களுக்குள்ளதான மரணம் தவிர்க்க முடியாத ஒன்றாகும்."நாம் மரிப்பது நிச்சயம்" (2 சாமுவேல் 14 : 14) "நாம் எல்லாரும் சாக வேண்டிய நிச்சயத்தில் இருக்கின்றோம். திரும்பவும் காரியங்களை சீராக்கிக் கொள்ள இயலாத நிலையில் நாம் அனைவரும் நமது சாவாமையை எப்பொழுதோ இழந்துவிட்டோம்" என்று மத்தேயு ஹென்றி என்ற மாபெரும் வேத விற்பன்னர் கூறுகின்றார்.

மரணம் ஒரு நியமனம். "அன்றியும் ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" (எபி 9 : 27) அந்த நியமனத்தை தேவன் ஏற்படுத்தியிருக்கின்றார். அதிலிருந்து நீ நழுவிச் செல்ல முடியாது. தேவனாகிய கர்த்தர் ஆதாமைப் பார்த்து "நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்" (ஆதி 3 : 19) என்றார். மனுஷரைக் குறித்து ஞானி சொல்லும்போது "எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது" (பிரசங்கி 3 : 20)

மாபெரும் மன்னன் செர்க்கஸ் தனது 2300000 எண்ணிக்கை கொண்ட தனது படை வீரர்களைப் பார்த்து அழுதானாம். காரணம், அடுத்த 100 ஆண்டுகளில் அவனுடைய ராணுவத்தில் உள்ள அந்த மனிதர் யாவரும் ஒருவர் கூட மீதமில்லாமல் அனைத்து இளம் வீரர்களும் மண்ணோடு மண்ணாகி புழுதியாகிவிடுவார்கள்" என்று கூறினான்.

மானிடரின் வாழ்க்கைப் போராட்டத்தில் மரணமே இறுதியில் வெற்றிபெறும். "ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின் மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை, மரண நாளின் மேலும் அவனுக்கு அதிகாரமில்லை, அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை" (பிரசங்கி 8 : 8) "மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்?" (சங் 89 : 48) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது.

ஆங்கில அகராதியின் தந்தை என்று போற்றப்படும் மாபெரும் மனிதர் சாமுவேல் ஜாண்சன் என்பவர் தன்னுடைய 75 ஆம் வயதின் கடைசிப் பகுதியில் "நான் உயிர் வாழக் கடினமாகப் போராடுகின்றேன். நான் தேகப்பயிற்சி செய்து மாசில்லாத சுத்தமான காற்றை சுவாசிக்கின்றேன். இவையாவும் இருந்தும் மரணத்தோடு சேர்ந்து ஓடி பந்தயத்தை யாரால் ஜெயிக்க முடியும்?" என்று கூறினார்.

நீ மரிப்பதிலிருந்து ஒருவராலும் உன்னைத் தடுத்து நிறுத்த இயலாது. நான் உனக்குத் திரும்பவும் சொல்லுகின்றேன். "ஆவியை அடக்கி வைத்துக்கொள்ள ஆவியின்மேல் எந்த ஒரு மனிதனுக்கும் இந்த உலகத்தில் அதிகாரமில்லை, மரண நாளிலும் அவனுக்கு அதிகாரம் கிடையாது". இந்த உலகத்தின் எந்த ஒரு மருத்துவன், எந்த ஒரு தத்துவ ஞானி, எந்த ஒரு மனிதனாலும் உனது உடலிலிருந்து கடந்து செல்லும் ஆவியைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்க முடியாது. அந்தக் காரியத்தை திரண்ட ஐசுவரியத்தாலும் செய்ய இயலாது. "கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது, நீதியோ (ஐசுவரியம் அல்ல) மரணத்துக்குத் தப்புவிக்கும்" (நீதி 11 : 4)

முதலாம் எலிசபெத் ராணி தனது மரண நாளில் கதறி அழுதார்கள். காரணம், தனது மரணத்தைச் சந்திக்க ஆயத்தமாகிக் கொள்ள ஒரு அங்குல நேரத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை கொடுக்க அவர்கள் முன் வந்தும் அது சித்தி பெறாமல் அவர்கள் அந்த இடத்திலேயே அப்பொழுதே மரணம் அடைந்தார்கள். நீனஸ் என்ற அசீரிய தேசத்தின் மாமன்னன் சமுத்திரம் அளவான தனது செல்வத்தை தனது உயிர் பிச்சைக்காக கொடுக்க விரும்பியும் நடக்கவில்லை. "நான் நரகத்திற்குச் செல்லுகின்றேன், அங்கு எனது தங்கத்தைக் கொண்டு செல்லவில்லை, எனது குதிரைகளைக் கொண்டு செல்லவில்லை, எனது வெள்ளி இரதங்களைக் கொண்டு செல்லவில்லை, இப்பொழுது எனது உடலை மூடிய நீண்ட ஆடையையும், கொஞ்சம் புழுதி மண்ணையும் மட்டுமே எடுத்துச் செல்லுகின்றேன்" என்று அந்த அரசனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சரித்திராசிரியன் ஒருவன் எழுதியிருக்கின்றான்.

மரணத்தைக் குறித்த ஒரு பயங்கரமானதும், ஆச்சரியமுமான வேதாகம சத்தியம் யாதெனில் அது உங்களை நீங்கள் எதிர்பார்க்கும் நேரத்திற்கும் முன்பே உங்களைச் சந்திப்பதற்காக உங்களுக்கு முன்பாக வந்து நிற்கும் என்பதுதான். நம்முடைய ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே அந்த வேதாகம சத்தியத்திற்கு உரிமையாளராகவும், சொந்தக்காரருமாகவிருக்கின்றார். தனது வாழ் நாட் காலத்தில் நேரத்திலேயே தனது தொழில்களிலிருந்து ஓய்வு பெற்று தனக்கு முன்பாக உள்ள நீண்ட ஆண்டு காலங்களில் புசித்துக், குடித்து, இன்பம் கொண்டாடி, உல்லாசம் அனுபவிக்கத் தீர்மானித்த மிகவும் செல்வந்தனும், ஐசுவரியவானுமான ஒரு மனிதனைக் குறித்து அவரே சொல்லியிருக்கின்றார். ஆனால், அந்த மனிதன் தன் திட்டங்களை நிறைவேற்றக் கூடாதவனானான். அவன் திட்டம் தீட்டிய அந்த நாளின் இராக்காலத்திலேயே அவன் மரித்தான். தேவன் அவனை "மூடன்" என்று அழைத்தார் (லூக்கா 12 : 16 - 20)

நீ நினைப்பதற்கும் வெகு முன்பதாகவே மரணமாகிய "பயங்கர ராஜாவை" நீ சந்திப்பதில்லை என்று நீ முரட்டுத்தனமாக நம்பிக்கை கொண்டிருப்பாயானால் "நீ ஒரு மூடன்" என்பதை உனது மனதில் வைத்துக் கொள். தான் தன் மனம்போல வாழ தனக்கு முன்பதாக பல்லாண்டு காலம் உள்ளது என்று கூறிய ஒரு இள வயதான மனிதன் அந்த வார்த்தைகளை அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாக அந்த இடத்திலேயே சடுதியாக விழுந்து மாண்டான் என்று நான் வாசித்த ஒரு சம்பவம் மிகவும் துலாம்பரமாக எனது நினைவுக்கு இப்பொழுது வருகின்றது.

"இன்னும் 10 நொடிகளே வாழ முடியும்" என்ற மிகவும் பிரபல்யமான விளம்பர வாசகத்தை எழுதி தனது இன்சூரன்ஸ் வியாபாரத்தை மக்கள் கவரும்படிச் செய்து தனது வர்த்தகத்தைக் கொடி கட்டிப் பறக்கச் செய்த ரேமண்ட் ஈஸ்ட்மேன் என்ற 29 வயது வாலிபன் ஒரு கார் விபத்தில் திடீரென நசுங்கி மாண்டு போனான் என்பது உங்களுக்குத் தெரியுமா? மரணம் அவன் நினைத்ததற்கும் முன்பாக வந்து அவனைச் சந்தித்துவிட்டது.

மரணம் "திரும்பி வர முடியாத துறைமுகமாகும்". அந்த துறைமுறைகம் வழியாக நீ பிரயாணப்பட்டுச் செல்லலாம், ஆனால் அந்த துறைமுகத்தின் வழியாக திரும்பி வரமுடியாது. நீ மரிப்பாயானால், திரும்பவும் உயிர் பிழைப்புக்கு வழியில்லாமல் "திரும்பச் சேர்க்கக் கூடாதபடிக்கு தரையிலே சுவறுகிற தண்ணீரைப் போல இருக்கிறோம்" என்று பரிசுத்த வேதாகமம் மரணத்தைக் குறித்துப் பேசுகின்றது. நீ வியாதிப் படுக்கையில் வீழ்ந்து சுகமாகி பழைய சுக நிலைக்குத் திரும்பலாம். கடற்கரை துறைமுகங்களின் வழியாக நீ கப்பல் ஏறி பல நாடுகளுக்கும், பல நிலப்பகுதிகளுக்கும் சென்றுவிட்டு நீ மீண்டும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பலாம். ஆனால், நீ மரணத்துக்குள் பிரவேசித்துவிட்டால் நீ ஒருக்காலும் திரும்ப முடியாத ஒரு இடத்துக்குள் பிரவேசித்துவிட்டாய் என்பதை நெஞ்சில் நிறுத்திக் கொள்.

"மேகம் பறந்து போகிறது போல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான். இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது" (யோபு 7 : 9, 10) தனது மகன் மரித்துப் போனான் என்பதை அறிந்து கொண்ட தாவீது இராஜா "இனி நான் அதைத் திரும்பி வரப்பண்ணக் கூடுமோ? நான் அதினிடத்திற்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை" (2 சாமு 12 : 23) என்று சொல்லுவதை நாம் வேதப் புத்தகத்தில் வாசிக்கின்றோம். ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கும் "ஹாம்லெத்" என்ற நாடகத்தின் பிரதான பாத்திரமான ஹாம்லெத்துக்கும் அது தெரியும். அந்த நாடகத்தில் அவன் "கண்டுபிடிக்க முடியாத அந்த நாட்டிற்குச் சென்ற எந்த ஒரு பிரயாணியும் திரும்பவே இல்லை" என்று கூறியிருக்கின்றான்.

ஒரு நரி ஒரு சமயம் ஒரு குகைக்கு அருகில் வந்து சேர்ந்தது. அந்த குகைக்குள் நிறைய நரிகள் சென்றிருப்பதை அந்தக் குகைக்கு முன்னாலுள்ள மணற்பரப்பில் நரிகளின் காலடித்தடங்கள் அதற்கு தெரிவிப்பதாக இருந்தது. அந்த நரியும் கூட அந்தக் குகைக்குள் செல்லுவதற்கு தயாராக இருந்த வேளை அந்த நரியின் தந்திரக் கண்கள் குகைக்குச் சென்ற நரிகளில் எதுவும் வெளியே திரும்பி வராதிருந்ததைக் கண்டு தானும் உள்ளே போனால் குகையிலிருந்து வெளியேற இயலாது என்று அச்சம் கொண்டு ஓட்டம் பிடித்தது. இந்த உலகில் தோன்றிய நாம் எல்லாரும் மரணம் என்ற ஒரு மாபெரும் குகைக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருக்கின்றோம். அந்த குகைக்குச் சென்றுள்ள எண்ணிக்கைக்கடங்கா மனுமக்களின் காலடித்தடங்களை நாம் காண்கின்றோம். அனைத்துக் காலடித் தடங்களும் உள்ளே சென்றிருக்கின்றதே தவிரஎந்த ஒரு காலடித் தடமும் வெளியே வந்ததற்கான அறிகுறியே இல்லை.

மரணத்தை பரிசுத்த வேதாகமம் "பயங்கர ராஜா" (யோபு 18 : 14) என்று அழைக்கின்றது. ஜெர்மன் தேசத்தை சேர்ந்த பரிசுத்தவானும் வேத பண்டிதருமான ஃபிரான்ஸ் டெலிட்ஷ் என்பவர் ஆதியாகமம் 5 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "அவன் மரித்தான்" "அவன் மரித்தான்" "அவன் மரித்தான்" என்ற பயங்கரமான வார்த்தையானது மனித குலத்தினர் அனைவருக்கும் சரிசமமாகப் பொருந்தும் ஒரு வார்த்தையாகும் என்று குறிப்பிட்டார். அமலேக்கின் ராஜாவாகிய ஆகாக் ஆரம்பத்தில் "பயங்கர ராஜாவை" சந்திக்கப் பயப்பட்டதாகப் பார்க்கின்றோம். அதின் பின்னரே "மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம்" (1 சாமு 15 : 32) என்று அவன் கூறுகின்றான்.

மரணம் மகா கசப்பான ஒரு மாத்திரையாகும். அதை நீ சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அந்த மாத்திரை சர்க்கரைச் சுவையால் வெளியே பூசப்பட்டிருந்தாலும் அந்த சர்க்கரைச் சுவை துரிதமாகவே மறைந்து மரணம் என்ற மாத்திரை அதின் முழுமையான கசப்போடு உனக்கு காட்சியளிக்கும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உனது உள்ளத்தில் இல்லாத நிலையில் மரணத்தை நீ சந்திப்பது என்பது உலகிலும், வரப்போகிற முடிவில்லாத நித்தியத்திலும் கொடிய காரியமாகும்.

ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட ஆங்கில ஆகராதியின் தந்தையான சாமுவேல் ஜாண்சன் என்பவர் ஒரு விசுவாசியாக இருந்தபோதினும் தனது கடைசி நாட்களில் சுயநினைவற்ற நிலையில் யோபு 18 ஆம் அதிகாரம் 14 ஆம் வசனத்தைக் குறித்து தைரியமானதோர் விளக்கம் அவரால் கொடுக்க முடியாது போயிற்று. அந்த நாட்களில் அவர் எழுதிய கடிதம் ஒன்று பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கடிதத்தில் அவர் "எனது இராக்காலங்கள் முற்றும் நித்திரையின்றிக் கழிகின்றன. நான் மிகவும் களைப்போடும், சோர்போடும் காணப்படுகின்றேன். நான் மரிப்பதற்கு மிகவும் நடுநடுங்குகின்றேன். மரணத்தைக் குறித்து ஒரு மகா பெரிய திகில் என்னை ஆட்கொண்டுள்ளது" என்று எழுதியிருக்கின்றார்.

மோட்ச பிரயாணம் புஸ்தகம் இரண்டாம் பாகத்தை வாசித்து முடித்த ஒருவர் அதின் கடைசிப் பக்கத்தில் கீழ்க்கண்டவாறான ஒரு குறிப்பை எழுதியிருக்கின்றார்:- "தேவனுடைய கிருபையின் அரவணைப்பு இல்லாமல் பாவத்தின் சம்பளமான கொடிய மரணமாகிய பயங்கர ராஜாவை சந்திப்பது என்பது ஒரு மாபெரும் தண்டனையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கும் உலக மக்களுக்கும், இந்த உலகத்தில் கர்த்தரை அண்டிக்கொள்ளாமல் மனதும், மாம்சமும் விரும்பும் வழிகளில் வாழ்ந்து முடித்தவர்களுக்கும் மரணம் கசப்பானதும், கொடிய வேதனை நிறைந்த ஒன்றேயல்லாமல் பிறிதொன்றில்லை.

 

 

மரணம் ஏன் "பயங்கரங்களின் ராஜா"

உனது மரணத்தின் போது உனது ஆவி தேவனிடத்தில் செல்லுகின்றது. "இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகும்......" (பிரசங்கி 12 : 7) நீ தேவனைப் புறக்கணித்த பாவியாக இந்த உலகத்தில் உன் வாழ்வை நீ முடித்திருப்பாயானால் உனது காரியம் மகா பயங்கரமாகும். "ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே" (எபி 10 : 31) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே அந்த பயங்கரமான உண்மைக்கு அதிபதியாவார். தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளாத நிலையில் ஆவிகளின் உலகமான பாதாள லோகத்திற்குச் சென்ற ஒரு மனிதனின் கதையை நாம் எல்லாரும் வாசிக்கும்படியாக அவர் சொல்லி வைத்திருக்கின்றார். நாம் எல்லாரும் பார்க்கும்படியாக அந்த இடத்தின் திரைச் சீலையை அப்பால் விலக்கி நமக்குக் காண்பிக்கின்றார். அந்த இடத்தைக் குறித்து அவர் பேசிய அந்த வார்த்தைகளை இந்த உலகமும், இந்த உலகத்திலுள்ள திரள் திரளான நவநாகரீக பிரசங்கிமார்களும் முற்றுமாக அங்கீகரிக்க மாட்டவே மாட்டார்கள். அந்த இடத்தை ஆண்டவர் "நரகம்" அதாவது "அக்கினி ஜூவாலையின் வேதனை" என்று அழைத்தார். அதுமட்டுமல்ல அந்த உண்மையும், சத்தியமுமான காரியத்தை 4 தடவைகள் அந்த அதிகாரத்தில் குறிப்பிட்டிருக்கின்றார் (லூக்கா 16 : 23, 24, 25, 28) அந்த அக்கினி ஜூவாலையின் வேதனையிலிருந்து நீ தப்பியோட விரும்புவாய்!

இப்படி அந்த அக்கினி ஜூவாலையின் வேதனையில் தேவனுடைய கரங்களில் விழுந்த ஒருவன் தப்பியோட நினைத்தாலும் அவனால் கூடாது போம் என்று வேதாகமம் கூறுகின்றது "அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான், அவனைத் தப்பவிடாதிருப்பார்" (யோபு 27 : 22) பண்டைய காலத்துப் பரிசுத்தவானும் மாபெரும் வேத விற்பனனுமான மத்தேயு ஹென்றி என்பவர் நரகத்தின் கொடிய துயரங்களைக் குறித்து கீழ்க்கண்டவாறு கூறினார்:-

ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்ட பாவியான மனிதன் தேவனால் தனக்கு வந்த ஆக்கினைத் தீர்ப்பைப் பார்த்ததும் அலறித் துடித்து அவருடைய கரத்திலிருந்து தப்பியோட அவன் வகை பார்ப்பான். ஆனால் அந்தோ! நரகத்தின் பிரதான கதவுகள் எல்லாம் பூட்டப்பட்டுவிட்டன. அங்கிருந்து தப்பிக்கொள்ள முடியாதவாறு மாபெரும் பிழப்பு ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அவர்கள் மலைகளையும், குன்றுகளையும் பார்த்து தங்களை மூடிக்கொள்ளுங்கள் என்று கூக்குரலிடும் குரல்கள் அனைத்தும் வீணாயிற்று. ஆவலோடு கட்டியணைக்கக் காத்திருக்கும் அருமை இரட்சகரின் விரிக்கப்பட்டிருக்கும் தேவ கிருபையின் கரங்களுக்கு நேராக ஓடி அவருடைய மார்பில் அடைக்கலம் பெற சற்றும் மனமற்றிருக்கும் பாவிக்கு தேவனுடைய கோபாக்கினையின் கரங்களுக்குத் தப்பிச் செல்ல வழியே இல்லை. அந்தக் கிருபையின் தேவ கரங்கள் இப்பொழுது அவர்களை அழிக்கவே நீட்டப்பட்டிருக்கின்றது"

மனந்திரும்பாத ஆத்துமாவே, உன் ஆவி உன் தேவனைச் சந்திக்கும் படியான பிரயாணத்துக்கு இப்பொழுதே ஆயத்தமாகு.

ஒரு அரசன் தனது அரச சபையில் ஒரு கோமாளியை வைத்திருந்தான். அந்தக் கோமாளி அந்த அரசனுக்கு அநேக ஆண்டு காலம் உண்மையாக சேவை புரிந்திருந்தான். ஒரு நாள் அந்த அரசன் தனது கோமாளியைக் கூப்பிட்டு அவனுடைய சேவை இனி தனக்குத் தேவையில்லை என்று சொல்லி அவனை தனது அரச சபையிலிருந்து அனுப்பி வைத்தான். அந்த கோமாளி அரசனைவிட்டுப் பிரியும்போது அந்த அரசன் ஒரு சிறிய கோலை அவனிடம் கொடுத்து "இந்தக் கோலை நீ உன் வசம் பத்திரமாக வைத்திருந்து உன்னைவிட பெரிய முட்டாளை நீ சந்திக்கும் போது நீ அதை அவனிடம் கொடுக்க வேண்டும்" என்று கூறி அனுப்பி வைத்தான்.

அநேக ஆண்டுகள் கடந்து சென்றன. தனது பழைய எஜமானனான தன்னுடைய அரசன் மரணத்துக்கேதுவான சுகயீனத்தில் மரணக்கட்டிலில் படுத்திருப்பதான தகவல் அந்தக் கோமாளிக்குக்கிடைத்தது. அவன் விரைந்து அரண்மனைக்குச் சென்று அரசன் படுத்திருந்த அறைக்குச் சென்றான். தனது அரச சபையின் பழைய கோமாளியைப் பார்த்ததும் அந்த அரசன் தான் ஒரு நெடு நீண்ட பிரயாணம் விரைவில் மேற்கொள்ளப் போவதாகவும், அதிலிருந்து தான் ஒருக்காலும் திரும்பி வரப்போவதில்லை" என்றும் கூறினான். அதைக் கேட்ட அந்தக் கோமாளி அரசன் மேற்கொள்ளவிருக்கும் நீண்ட பிரயாணத்துக்கான ஆயத்தங்களை நன்கு செய்து கொண்டாரா என்று கேட்டான். அதற்குப் பதிலாக அந்த அரசன் "அந்த நீண்ட பிரயாணத்துக்கு ஒரு சின்ன ஆயத்தம் கூடத் தான் செய்யவில்லை" என்று பதில் அளித்தார். அதைக் கேட்டதும் அந்தக் கோமாளி "அப்படியானால், இந்த முழு உலகத்திலும் உம்மைவிட ஒரு பெரிய மூட மனிதன் எவரும் இருக்கவே முடியாது. நீர் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த உமது கோலை நீரே பெற்றுக் கொள்ளும். என்னைக்காட்டிலும் நீரே பெரிய மூடன்" என்று கூறிக் கொடுத்துவிட்டான்.

மரணம் பயங்கரங்களின் ராஜா. காரணம், மரணத்திற்குப் பின்னால் தேவனின் நித்திய நியாயத் தீர்ப்பு உண்டு. "அன்றியும் ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" (எபிரேயர் 9 : 27) மரணத்துக்குப் பின்னால் நடுநடுங்கக் கூடிய காரியம் ஒன்று உள்ளது. அந்த பயம்தான் ஹாம்லெத் என்ற ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரத்தை ஒரு கோழையாக்கினது. அவன் தனது வாழ்க்கையை இந்த உலகத்தில் முடித்துக் கொள்ள அஞ்சி நடுநடுங்கினான். வரப்போகும் தேவனின் நியாயத் தீர்ப்பைக் குறித்த பயம் ரோம கவர்னரான பேலிக்ஸை பயமடையப் பண்ணிற்று. அப்போஸ்தலானாகிய பரிசுத்த பவுல் "நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்துப் பேசுகையில் பேலிக்ஸ் பயமடைந்தான்" (அப் 24 : 25) என்று தேவனுடைய வார்த்தை சொல்லுகின்றது. பேலிக்ஸ் என்ற பெயருக்கான அர்த்தமே "மகிழ்ச்சி" அல்லது "ஆனந்தம்" என்பதாகும். ஒரு கணப்பொழுது மகிழ்ச்சியாயிருந்த பேலிக்ஸ் வரப்போகும் நியாயத்தீர்ப்பை நினைத்தபோது திகில் அடைந்தான்.

"நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தருடைய பிள்ளைகள் தைரியமாக இருப்பார்கள் என்றும், மனந்திரும்பாத பாவிகள் வேதனையடைவார்கள்" (1 யோவான் 4 : 17, 18) என்றும் கர்த்தருடைய வசனம் சொல்லுகின்றது.

மரணம் பயங்கரங்களின் ராஜா. காரணம், உனது மரணத்தின்போது உனது ஆவியானது அது வாசம் செய்ய ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவிகளைப் பார்த்து "நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது. நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்" (யோவான் 8 : 21, 24) என்றும் "நானே சத்தியம்" (யோவான் 14 : 6) என்றும் உரைத்த கர்த்தர் சொன்னார்.

இப்பொழுது நம் அருமை இரட்சகர் பரலோகில் இருக்கின்றார். நீ உண்மை என்று விசுவாசித்தாலும், விசுவாசிக்காவிட்டாலும் உன்னுடைய பாவங்களோடு நீ அவரண்டை ஒருக்காலும் செல்ல முடியாது. பாவிகளைக் குறித்து ரிச்சர்ட் பாக்ஸ்டர் என்ற பூர்வகாலத்துப் பரிசுத்தவான் "அவர்கள் நரகத்துக்கே செல்லுவார்கள். இருப்பினும், அவர்கள் அங்கு செல்லப்போகின்றோம் என்பதை ஒருக்காலும் நம்பவேமாட்டார்கள்" என்று கூறினார். ரிச்சர்ட் பாக்ஸ்டர் மேலும் "நீ நரகத்துக்குப் போவதால் ஆண்டவரையல்ல, உன்னைத்தான் குற்றப்படுத்திக்கொள்ள வேண்டும். அசுத்தமும், அகோரமுமாக அத்தனை கோர உருவத்தில் பாவம் நம்மில் வாசம் செய்கின்றது. அதற்கான கொடிய தண்டனையும், மா பயங்கரமான நரகமும் நமக்கு முன்பாக நிழலாடிக்கொண்டிருந்த போதினும் பாவத்தை நாம் அத்தனை எளிதான கேள்வியாக எடுத்துக் கொள்ளுகின்றோம். குற்றத்தில் இருப்பது தேவனா அல்லது மனிதனா?

உனது சரீர மரணத்தின் போது உனது ஆவியானது மற்றவர்களால் எடுத்துச் செல்லப்படும் என்பதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார். ஆயத்தமில்லாதஅந்த ஐசுவரியவானான மனிதனைப்பார்த்து தேவன் "மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும்" (லூக்கா 12 : 20) என்பதிலிருந்து அதை நாம் திட்டமாகப் புரிந்து கொள்ளுகின்றோம்.

மோட்ச பிரயாணம் என்ற அருமையான பிரபந்தத்தை எழுதிய ஜாண் பன்னியன் என்ற பரிசுத்தவான் தாம் எழுதிய மற்றொரு புத்தகமான "நரகத்திலிருந்து எழும்பும் வியாகுல பெரு மூச்சுகள்" என்ற புத்தகத்தில் "இந்த இராத்திரியில், அவைகள், ஆம், பிசாசுகள் உன்னிலிருந்து உனது ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும். துன்மார்க்கரான ஆண்களும், பெண்களும் மரிக்கும்போது அவர்களின் மரணம் மா பயங்கரமாகும். அதாவது அவர்களைக் கொண்டு செல்ல சாத்தானுடைய தூதர்கள் அவர்களின் மரணக்கட்டிலுக்கே வருவார்கள். இது உண்மையும் சத்தியமுமானது என்பதை கடந்த காலங்களிலும் இப்பொழுதும் பாவிகளின் மரணக்கட்டில்களில் நடந்த உண்மையான சரித்திரங்கள் நிரூபிப்பதாக இருக்கின்றது. "மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும்" (லூக்கா 12 : 20) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளைக் குறித்து ஆதாம் கிளார்க் என்ற தேவ மனிதர் "ஆ, எத்தனை அகோர பயங்கரமான வார்த்தைகள் அவை" என்று சொன்னார்.

மரணம் "பயங்கரங்களின் ராஜா" ஏனெனில், இந்த உலக வாழ்வின் காரியங்களைக் குறித்த கணக்கை உன் தேவனுக்கு நீ கொடுக்க வேண்டும். "ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான்" (ரோமர் 14 : 12) "உயிரோடிருப்பவர்களுக்கும், மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்" (1 பேதுரு 4 : 5) "ஒவ்வொரு கிரியையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும், தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்" (பிரசங்கி 12 : 14) "ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்" (2 கொரி 5 : 10) அந்த சத்தியத்தின் மாட்சிமையான உண்மையை அறிந்த அப்போஸ்தலனாகிய பவுல் "ஆகையால் கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து,மனுஷருக்குப் புத்தி சொல்லுகிறோம்" என்ற வார்த்தையையும் சேர்த்து எழுதினார் (2 கொரி 5 : 11)

உன்னுடைய சரீரம் மரணம் அடையும்போது ஒரு பயங்கரமான அதிர்ச்சியுடன் நீ விழுத்தெழும்புவாய். காலம் கடந்து போன மிகவும் பிந்திய நிலையில் உனது கண்கள் திறக்கப்படும். மனந்திரும்பாத, ஜென்ம சுபாவம் கொண்ட மனிதனைக் குறித்து பூர்வ காலத்து அந்த பரிசுத்த பக்த சிரோன்மணி ரிச்சர்ட் பாக்ஸ்டர் என்பவர் இப்படியாகக் கூறினார் "மரணம் அவர்களின் கண்களைத் திறக்கும் போது சுவருக்கு அடுத்த பக்கத்தில் இருப்பது என்னவென்று அவர்கள் கண்டுகொள்ளுவார்கள். ஆம், அடுத்த உலகத்தில் இருப்பது யாது என்று அவர்கள் அறிந்து கொள்ளுவார்கள்"

அடுத்த ஒரு பூர்வ காலத்துப் பரிசுத்த பக்தன் ஜாண் பன்னியன் என்ற அந்தப் பிரசங்கியார் இப்படியாச் சொன்னார் "துன்மார்க்கர் தங்கள் பாவங்களில் மிகவும் பாதுகாப்பாக நித்திரை செய்து நரகத்தில் நன்கு கண் விழித்துக் கொள்ளுவார்கள். முன்பு பாவத்தில் அவர்கள் அயர்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். ஆனால், நரகம் அவர்களை கண்விழிக்கச் செய்து அவர்கள் கண்களை மேலே ஏறிட்டுப் பார்க்கச் செய்தது" அந்த நரகத்தின் கொடிய காட்சி ஜாண் பன்னியன் என்ற அந்த பக்தனின் ஆத்துமாவை இந்தவிதமாக கதறச் செய்தது "ஓ, என் சிநேகிதரே! தேவ மைந்தன் மேல் ஒரு சிறிய விருப்பம்கூட இல்லாமல் இந்த உலகத்தை விட்டு நீங்கள் கடந்து செல்லுவது என்பது எத்தனை பரிதாபகரமான காரியம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அது உங்களை உங்கள் மார்பிலே அடித்து கதறச் செய்து "மாந்தரே, நண்பரே, இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பண்ணும். ஓ நண்பரே, வெளிச்சத்தில் இருக்கும் இந்த நாட்களிலேயே இருளின் நாட்களான மரணத்தையும், நரகத்தையும், நியாயத்தீர்ப்பையும் நீங்கள் நினைவுகூராதபட்சத்தில் இனி வரப்போகும் இருளின் நாட்களில் மரணத்தையும், நரகத்தையும், நியாயத்தீர்ப்பையும், உங்களுக்கு அறிவிக்கப்பட்ட இரட்சிப்பின் சுவிசேஷத்தையும், அதை அல்லத்தட்டினதினால் நீங்களே உங்களுக்கு வருவித்துக் கொண்ட நித்திய அழிவையும், தேவ கோபாக்கினையையும் உணரும் காலம் வரும்"

அப்படித்தான் ஜாண் பன்னியன் என்ற அந்த தேவ பக்தன் தம்முடைய காலத்திலிருந்த பாவிகளை எச்சரித்தார். அவர் எச்சரித்த விதத்தில் பாவிகளை அத்தனை கடுமையாக எச்சரிக்கக்கூடியவர்கள் மிகவும் சொற்பமானவர்கள் மட்டுமேதான்.

பாவிக்கு மரணமானது "பயங்கரங்களின் ராஜா" வாகும். காரணம், சரீர மரணத்துக்குப் பின்னர் பாவிக்கு இரண்டாம் மரணம் உள்ளது. நஷ்டமடைந்த ஆத்துமா இரண்டாம் மரணத்தைச் சந்திக்க வேண்டும். தேவனற்ற தனிமையைச் சந்திக்க வேண்டும். மோட்சத்தையும், பரிசுத்தவான்களின் சங்கத்தையும், மீட்கப்பட்டவர்களுக்காக தேவனால் ஆயத்தம்பண்ணப்பட்டுள்ள அனைத்து சந்தோச பாக்கியங்களையும், பேரின்பங்களையும் அது இழக்க வேண்டும். "ஆத்துமாவையும், சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்" (மத் 10 : 28) என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உன்னை எச்சரிக்கின்றார். உனது பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதியிராத பட்சத்தில் உனது சரீர மரணத்திற்குப் பின்னர் நீ நரகத்துக்குச் செல்ல வேண்டும். ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாக காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் (வெளி 20 : 15) என்று தேவனுடைய நிச்சயமான வார்த்தை கூறுகின்றது. "இது இரண்டாம் மரணம்" (வெளி 20 : 14) அந்த அக்கினி கடலிலே தள்ளப்படப்போகும் மனிதர்களிலே நீயும் ஒருவனாவாயோ?

There is a death pang
Outlasts this fleeting breath.
Oh, what eternal horrors hang,
Around one's second death.

 

இராஜாதி இராஜா

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீ உனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவாயானால் "பயங்கரங்களின் ராஜா" வாகிய சாத்தானுக்கு நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை. இயேசு கிறிஸ்து ஏன் "ராஜாதி ராஜா" என்பதைக் குறித்து நான் உனக்குச் சொல்ல விரும்புகின்றேன். நம்முடைய இரட்சகர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்று நம்முடைய நித்திய ஆறுதலுக்காக வெளிப்படுத்தின விசேஷத்தில் இரண்டு தடவைகள் எழுதப்பட்டிருக்கின்றது. "ஆட்டுக் குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்" (வெளி 17 : 14) "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப் பட்டிருந்தது" (வெளி 19 : 16)

மரண பயத்திலிருந்தும், மரணத்திற்குப் பின்னாலுள்ள பயங்கரங்களிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காக அன்பின் ஆண்டவர் மானிடனாகி தனது சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். "ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவரானார், மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்துக்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்" (எபி 2 : 14 - 15)

இங்கிலாந்து தேசத்தின் மாபெரும் சுவிசேஷகரும், பாடலாசிரியருமான வில்லியம் காப்பர் என்பவர் "மரணத்தின் கூர் மழுக்கப்பட்டு அதின் ஆயுதவர்க்கங்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் உறையிடப்பட்டுவிட்டபடியால் மரணத்தை நான் காண்கையில் நடுநடுங்கப்போவதில்லை" என்று கூறினார். மற்றொரு பரிசுத்தவான் கூறுகையில் "கர்த்தராகிய இயேசு இரட்சகர் மரணத்தின் சாம்ராஜ்யத்துக்குள்ளேயே ஊடுருவிச் சென்று அவனது சொந்த மண்ணிலேயே அவனோடு போர் புரிந்து அவனுடைய கிரீடத்தை அவனது சிரசினின்று அடித்து நொறுக்கி, அவனது செங்கோலை முறித்தெறிந்து "மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? நானே உன்னை நாசமாக்கியவன்" என்று கூறுகின்றார். ஆம், அந்தக் காரியத்தை இரட்சகர் உனக்காகவே செய்தார். ஆத்துமாவே, மரணத்தைக் கண்டு நீ இனி பயப்படக்கூடாது என்ற காரணத்திற்காக கர்த்தர் அதை உனக்காகவே செய்தார். "பயமானது வேதனையுள்ளது" (1 யோவான் 4 : 18) அந்த மரண பயத்தினின்று உன்னை மீட்பதற்காக இந்த உலகத்தில் வந்து உனக்காக அவர் மரித்தார். அவருடைய மாட்சிமையான நாமம் துதிக்கப்படுவதாக.

அருமை இரட்சகர் மரணத்தையும், அதின் பயங்கரங்களையும் தமது உயிர்த்தெழுந்த வல்லமையின் மூலமாக ஜெயித்துக் கொண்டார். மரணத்தின் இருண்ட சாம்ராஜ்யத்திலிருந்து அவர் ஜெயமெடுத்து வெளி வந்தார். மரணத்தின்மேல் அவர் பெற்ற ஜெயமானது உன்னுடைய சொந்த வெற்றியாகும். அதின் காரணமாக நீ "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (1 கொரி 15 : 57) என்று கூறலாம். இரட்சகரின் உயிர்த்தெழுதலானது மரணத்தையும் அதினுடைய பயங்கரங்கள் அனைத்தையும் விசுவாசிக்காக உரிந்து கொண்டுவிட்டது. தம்முடைய தாசனாம் யோவானுக்கு மரணத்தின் கூர் முறித்த ராஜாதி ராஜாவின் வார்த்தையைக் கேளுங்கள் "பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன், மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவரா யிருக்கிறேன்" (வெளி 1 : 17, 18) லண்டன் பட்டணத்தில் வாழ்ந்த பரிசுத்த பக்தன் பண்டிதர் எஃப்.பி.மையர் என்பவர் மரணத்திற்கேதுவான தனது சுகயீனம் ஒன்றுக்குப் பின்னர் இப்படியாகச் சொன்னார் "சமீபத்தில் நான் எனது சுகயீனத்தின் காரணமாக மரணத்தின் வாசல்கள் வரை சென்று வந்தேன். எனினும், ஒரு பரிசுத்த தேவ பிள்ளை அஞ்சக்கூடிய அளவிற்கு மரணம் ஒன்றுமில்லை. அந்த தேவப் பிள்ளைக்கு மரணம் ஒரு கட்டுக்கதையே (Myth) அல்லாமல் பிறிதொன்றுமில்லை" என்றார். ராஜாதி ராஜா மேற்கண்ட பரிசுத்தவானோடு இருந்த காரணத்தால் மரணம் அவருக்கு எந்த ஒரு பயத்தையும் கொடுக்க முடியாமற் போனதுடன், அவரது பார்வைக்கு அது ஒரு உண்மையற்ற புராணக்கதையாகவே ஆகிவிட்டது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய அடியார்களைப் பார்த்து "என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன், சரீரத்தைக் கொலை செய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்" (லூக்கா 12 : 4) என்று சொன்னார்.

தேவனுடைய சுவிசேஷத்தை மிகுந்த வாஞ்சையுடன் பிரசிங்கித்த காரணத்திற்காக ஸ்பெயின் தேசத்தில் ஒரு சுவிசேஷகர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியவராக இருந்தார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தில் கம்மியூனிஸ்ட் கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த கம்மியூனிஸ்ட் கைதிகள் மிகவும் வெறுப்பும் கோபமுமடைந்து தங்களைச் சிறை வைத்தவர்களை சாபமிட்டு அவர்களிருந்த சிறைக்கூட சுவர்களிலே அசுத்தமும், அருவருப்புமான வார்த்தைகளை எழுதினார்கள். அங்கே சிறை வைக்கப்பட்டிருந்த நமது தேவ மனிதர் "சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம், ஆத்துமாவையும், சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று எழுதிவிட்டு அதற்குக் கீழாக "தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என்று எழுதினார். அவர் எழுதிய வார்த்தைகள் அந்த சிறைக்கூட அறையிலிருந்தோரின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தது. அந்த தேவ மனிதர் தன்னோடிருந்தவர்களில் ஒருவரை இரட்சகர் இயேசுவண்டை வழிநடத்திய ஆனந்த மகிழ்ச்சியைப் பெற்றார். எப்படியெனில், அவர் ஆண்டவருக்குள் வழிநடத்திய மனிதர் ஒரு பள்ளி ஆசிரியராவார். ஒரு நாள் அந்த மனந்திரும்பிய ஆசிரியர் நமது தேவ ஊழியரைப் பார்த்து "நான் இன்றைய தினம் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்படப் போகின்றேன். எனது பெயர் சுட்டுக் கொல்லப்படப் போகும் பெயர் பட்டியலில் உள்ளது. நீங்கள் சுவரில் எழுதின வார்த்தைகளைக் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். அவைகள் என்னை மிகுந்த மகிழ்ச்சியோடு என் மரணத்தைச் சந்திக்க வகைசெய்திருக்கின்றது. ஒருக்கால் நீங்கள் அந்த வரிகளை எழுதியிராதபட்சத்தில் நான் மிகுந்த அலறலோடும், அங்கலாய்ப்போடும், கொடும் வியாகுலத்தோடும் எனது மரணத்தைச் சந்திக்க வேண்டியதாக இருந்திருக்கும். ஆனால், இப்பொழுது நான் என் ஆண்டவரை மகிழ்ச்சியோடு சந்தித்து என்றும் அவரோடிருக்கப் போகின்றேன்" என்று சொன்னார். அவர் சொன்னபடியே மிகுந்த மகிழ்ச்சியோடு எந்த ஒரு பயமுமில்லாமல் அந்த நாளில் தனது மரணத்தை அவர் சந்தித்தார்.

ஒரு கப்பலானது தனது நங்கூரத்தைத் தளர்த்திக் கொண்டு பாய்விரித்து அடுத்த துறைமுகத்தை நாடிச் செல்ல அனுகூலமாக அமைக்கப்பட்டிருக்கும் கடலிலுள்ள ஒரு கப்பல் மேடையைப் போலக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரணத்தை தம்முடைய பரிசுத்த அடியாருக்கும், இரட்சிக்கப்பட்ட பாவிக்கும் ஒரு அழகான மேடையாக அமைத்துக் கொடுத்திருக்கின்றார். அந்த மகா பெரிய அப்போஸ்தலனான பரிசுத்த பவுல் அடிகளார் மரணத்தைக் குறித்துப் பேசுகையில் நங்கூரத்தைப் பெயர்த்துக் கொண்டு பாய்விரித்துச் செல்லுவதையே குறிப்பிட்டார். "நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்தது" (2 தீமோ 4 : 6) என்ற அவருடைய வார்த்தைகள் அப்பட்டமாக அந்தக் காரியத்தையேதான் வெளிப்படுத்துவதாக உள்ளது. அவருடைய வார்த்தையின் பொருள் "நங்கூரத்தைப் பெயர்த்தல்" "கப்பலை மேடையோடு கட்டியிருக்கும் கயிறுகளை தளர்த்துதல்" "அடுத்த துறைமுகம் செல்லக் கப்பலுக்கு வழி கோலுவது" என்பதாகும். அப்போஸ்தலனுக்கு அவர் நாடிச் செல்லும் துறைமுகம் மோட்சமாகும். அவருக்கு மட்டுமல்ல, இரட்சிக்கப்பட்ட எந்த ஒரு பாவிக்கும் அந்த ஆத்துமா பயணிக்கும் துறைமுகம் மோட்சமேதான். "தேகத்தைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவுடனே கூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்" (பிலி 1 : 23) என்ற வசனத்தில் அப்போஸ்தலன் தனது நங்கூரங்களைத் தளர்த்திக் கொண்டு தன்னுடைய இரட்சகர் இயேசுவினிடத்திற்கும், மோட்சத்திற்கும் பிரயாணப்பட தனக்குள்ள மட்டற்ற ஆவலை வெளிப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம். இந்தப் பிரசங்கத்தை வாசிக்கும் நண்பரே, ராஜாதி ராஜாவாகிய கிறிஸ்து இரட்சகர் தம்மில் விசுவாசம் வைத்துள்ள மக்களுக்காக தம்முடைய சிலுவை மரணத்தின் மூலமாக நிறைவேற்றி முடித்துள்ள இரட்சண்யத்தை என்னவென்று சொல்லுவது!

மீட்கப்பட்ட பாவிக்கு மரணம் என்பது ஒரு யாத்திரையாகும். பாவ அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து அந்த எபிரேயர்கள் எப்படி பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்திற்கு யாத்திரை போனார்களே அதே யாத்திரைதான் ஒரு மெய்க்கிறிஸ்தவனின் மரணமாகும். அப்போஸ்தலனாகிய பேதுரு அந்த உண்மையை உங்களுக்கு அறிவித்து மரணத்துக்கு அவர் அந்தப் பெயரைத்தான் கொடுக்கின்றார். மரணமாகிய பயங்கரங்களின் ராஜாவை அவர் சந்திக்க நெருங்குகையில் தான் ராஜாதி ராஜாவாம் இரட்சகர் இயேசுவில் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கின்றார். "நான் என் கூடாரத்தை விட்டுப் போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்திருக்கிறேன்" என்றார் அவர்.

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்திலுள்ள ஜாண் பிராங்ளின் என்ற தேவ பக்தியுள்ள ஆராய்ச்சியாளரும் அவரது சக தோழர்களும் தொலை தூரமான துருவப் பிராந்தியத்தில் செத்து மடிந்து போனார்கள். அவர்களைத் தேடிச்சென்ற ஒரு ஆராய்ச்சிக் குழு அவர்களைக் குறித்த சில நினைவுப் பொருட்களைக் கொண்டு வந்தது. அவைகளில் ஜாண் பிராங்ளின் என்பவர் வைத்திருந்த ஒரு அருமையான புத்தகத்தின் உட்பகுதியின் முதல் தாளாகும். அந்த புத்தகம் என் வசமும் உள்ளது. அந்த தாளில் ஒரு சம்பாஷணை இடம் பெற்றுள்ளது. அது இதுவேதான்:-

"நீங்கள் மரணத்தைச் சந்திக்க பயப்படுகின்றீர்களா?"

"இல்லையே"

"மரணத்தின் பின்னர் சம்பவிக்கக் கூடிய நிச்சயமற்ற காரியங்களைக் குறித்த எண்ணம் உங்களுக்கு பயத்தை உண்டுபண்ணவில்லையா?"

"நீ பயப்படாதே" என்று தேவன் என்னிடம் சொல்லியிருக்கின்றார். அதினால் நான் எதற்கும் பயப்படமாட்டேன்.

ஜாண் பிராங்ளின் என்ற அந்த ஆராய்ச்சியாளர் மரணமாகிய "பயங்கர ராஜாவை" தைரியமாக சந்தித்தார், காரணம் அவர் ஆண்டவராகிய இயேசுவை தனது சொந்த இரட்சகராக தனது வாழ்வில் ஏற்றுக் கொண்டிருந்தார். அவரிடமிருந்த அந்தப் புத்தகத்தின் முதல் தாள் மற்றும் அவரது சில பொருட்களும் இப்பொழுது கிரீன்விச் என்ற பட்டணத்திலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.

கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பாக சீனா தேசத்தில் ஜாண் ஸ்டாம் மற்றும் பெற்றி சாம் என்ற இரண்டு இளம் மிஷனரிகள் இரத்தசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். சாத்தானுடைய கையாட்களால் அவர்கள் துப்பாக்கியால் சுட்டோ அல்லது வாளால் வெட்டியோ அல்லது பிச்சுவா கத்தியால் குத்தியோ கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர். எந்த விதமாக அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அதில் ஜாண் ஸ்டாம் என்பவர் தனக்கு வரும் மரணம் எந்தவிதத்தில் வந்தாலும் தான் அஞ்சப்போவதில்லை என்று தனது வீட்டினருக்கு கடிதம் எழுதி அதில் ஒரு பாடலையும் இணைத்திருந்தார். அந்தப் பாடலில் அவரது உள்ளத்தின் உணர்வுகள் அப்படியே பிரதிபலிப்பதாக இருந்தது. மனந்திரும்பாத ஆத்துமாவே, கர்த்தரை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு மனிதன் "பயங்கர ராஜாவை" சந்திக்க அஞ்சவேமாட்டான். காரணம் அவன் "ராஜாதி ராஜாவை" தனது உள்ளத்தில் வைத்திருக்கின்றான். ஜாண் ஸ்டாம் எழுதி அனுப்பிய பாடலை கவனி:-

பயப்படவேண்டும், எதைக்கண்டு பயம்?
இரட்சா பெருமானின் பொன் முகம் நோக்க பயமா?
பாடு நோவிலிருந்து பூரண கிருபையைக் காண பயமா?
கல்வாரி மேட்டிலிருந்து மகிமை பிரகாசிக்கின்றது,
அதைக் காணவா பயம்?
பயப்பட வேண்டும், எதைக் கண்டு பயம்?
ஒரு ஒளி வீச்சு, ஒரு இடி முழக்கம், ஒரு பிளக்கப்பட்ட விலா?
மாமகிமை நிரம்பிய பரலோகக் காட்சி,
பயப்பட வேண்டும் அந்த விண்ணின் வாழ்வை காணவா பயம் வேண்டும்?

நம் அருமை இரட்சகர், இரட்சிக்கப்பட்ட விசுவாசிக்காக சரீரத்தில் நேரிடும் மரணத்தின் பெயரையே மாற்றிவிட்டார். ஆண்டவரும், புதிய ஏற்பாட்டில் அவரது எழுத்தர்களும் மரணத்தை "தூக்கம்" என்றே அழைக்கின்றனர். மரணம் என்ற அந்த இரகசியத்தை தேவனற்ற அஞ்ஞானிகள் ஒன்றுமில்லாத சூன்யமாகப் பார்க்கும்போது இரட்கர் இயேசு அதை ஒரு தொடர்ச்சியான பேரின்ப வாழ்வாகவும், நித்திய இளைப்பாறுதலாகவும் காண்கின்றார். மரணம் என்ற நம்பிக்கையற்ற முடிவானவார்த்தையை உயிர்த்தெழுதல் என்ற மாட்சிமையான விடிவெள்ளி நட்சத்திரம் அதினுடைய அடிமரத்தின் ஆழமான வேர்ப்பகுதிக்குள் பிரவேசித்து மரணத்தை கிருபை நிறைந்ததாகவும், ஆனந்த நம்பிக்கைiயாகவும் மாற்றிவிட்டது. அஞ்ஞானிகளின் புதை குழிகளில் அவர்கள் அதற்கு இட்ட பெயரின்படி அங்கே நம்பிக்கையோ, இளைப்பாறுதலோ கிடையாது. அஞ்ஞானிகளுக்கு அவர்களின் புதை குழி என்பது ஒரு இடுகாடு அல்லது ஒரு ஞாபகச் சின்னம் அல்லது விரும்பத்தகாத ஒரு மறைவான இடம் அல்லது ஏதோ ஒன்று போனதற்காக அதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நினைவிடம் அல்லது ஒரு கூட்டம் புறாக்கள் தனித்தனியே மண்சட்டிகளில் வாழ்கின்ற புறாக்கூடாக இருக்கின்றது. ஆனால் மனந்திரும்பிய விசுவாசிக்கு மரணம் என்பது ஒரு நித்திரை, அது ஒரு நித்திய இளைப்பாறுதல், அது ஒரு அஸ்தமனமில்லாத புதிய எருசலேமின் ஆனந்த வாழ்வு.

வாசிக்கும் ஆத்துமாவே, ஆண்டவராகிய இயேசு இரட்சகரை நீ உனது சொந்த தகப்பனாக வும் ராஜாதி ராஜாவாகவும் ஏற்று அவருடைய பிள்ளையாக நீ இருக்கும் பட்சத்தில் மாம்ச மரணமாகிய "பயங்கரங்களின் ராஜாவை" நீ சந்திப்பதற்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. பூர்வ நாட்களில் தமது தாசன் யோபுவுக்கு கிருபையுள்ளவராக இருந்தது போல உனக்கும் கிருபையுள்ளவராக இருந்து "அவர் அவனுக்கு இரங்கி, அவன் படு குழியில் இறங்காதபடிக்கு நீர் அவனை இரட்சியும், மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்" (யோபு 33 : 24) என்ற கர்த்தருடைய வார்த்தை சொல்லுவது போல அந்த மீட்கும் பொருள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே.

நான் எனது தேவச் செய்தியை நான் உங்களுக்கு முன்பாக வைத்த எனது இரண்டு பிரசங்க தலையங்க குறிப்புகளை அதாவது "பயங்கர ராஜா" (யோபு 18 : 14) "ராஜாதி ராஜா" (வெளி 19 : 16) என்பவைகளை உங்களுக்கு பூரணமாக விளக்கிக் காண்பிக்கும் ஒரு உண்மைச் சம்பவத்துடன் முடிக்க விரும்புகின்றேன். அந்தச் சம்பவத்தை அமெரிக்க தேசத்தின் மாபெரும் சுவிசஷகர் டி.எல். மூடி என்பவர் அநேக ஆண்டுகாலத்திற்கு முன்னர் லண்டன் பட்டணத்தில் நடந்த தனது சுவிசேஷக்கூட்டம் ஒன்றில் கூறினார். அந்தச் சம்பவம் இதுவேதான்:-

பிரெஞ்சு தேசத்தில் ஒரு கனவான் இருந்தார். அவர் இராக்காலங்களில் தூங்க இயலாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். மனிதனின் வியாதிகளின் மூலக்கூறுகளை கண்டறிந்து அதினைக் கூறும் ஃபோப்ஸ் வின்ஸ்லோ என்ற பிரபலமான மருத்துவ வல்லுனர் லண்டன் பட்டணத்தில் இருப்பதைக் கேள்விப்பட்டு அவரிடத்தில் வைத்திய சிகிட்சை பெறுவதற்காக பிரான்ஸ் தேசத்தின் சக்கரவர்த்தி 3 ஆம் நெப்போலியனிடத்தில் அறிமுக கடிதங்களை வாங்கிக் கொண்டு வந்து அவற்றை மருத்துவர் ஃபோப்ஸ் வின்ஸ்லோ என்பவரிடத்தில் கொடுத்தார். அந்தக் கடிதங்களை வாங்கி வாசித்துவிட்டு அந்த புகழ்பெற்ற மருத்துவர் தன்னண்டை வந்த அந்த மனிதரிடம் "உங்களுக்குள்ள நோய் என்ன ?" என்று கேட்டார்.

அதற்கு அந்த பிரெஞ்சு கனவான் "என்னால் இராக்காலங்களில் தூங்கவே முடிவதில்லை. கடந்த 2 வருட காலமாக நான் எனது கண்களுக்கு ஒரு துளிதானும் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இதற்கு ஒரு பரிகாரம் நான் கண்டுபிடிக்காதபட்சத்தில் நான் ஒரு பைத்தியக்காரனாகிவிடுவேன் என்றார்.

அதைக்கேட்ட அந்த மருத்துவர் அந்த மனிதரை தனியே அழைத்துச் சென்று அவரிடம் சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

"உங்களால் ஏன் தூங்க முடிவதில்லை?"

"அதை நான் உங்களிடம் சொல்ல முடியாத நிலையிலிருக்கின்றேன்" என்று அந்த மனிதர் கூறினார்.

"நீங்கள் உங்கள் செல்வத்தை இழந்துவிட்டீர்களா?" என்று டாக்டர் கேட்டார்.

"இல்லை"

"உங்களுடைய ஆப்த நண்பர்கள் உங்களைக் கைவிட்டுவிட்டனரா?"

"இல்லை"

"உங்களுடைய மதிப்பையும், பேர் புகழையும் இழந்துவிட்டீர்களா?"

"இல்லை"

"அப்படியானால் ஏன் உங்களால் தூங்க முடிவதில்லை?" என்றார் அந்த மருத்துவ நிபுணன்.

அந்த கனவான் எதையும் சொல்ல முடியால் அமைதியாக இருந்தார். ஃபோப்ஸ் வின்ஸ்லோ அவரிடத்தில் நீங்கள் எனக்கு உங்கள் காரியத்தை சொல்லாமல் அமைதியாக இருந்தால் நான் உங்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்ய இயலாது என்று கூறிவிட்டார்.

அதற்கப்பால் அந்த பிரெஞ்சு கனவான் இறுதியாக அந்த மருத்துவ வல்லுனரிடம் "நித்தியம், அதை நான் எங்கே செலவிடுவேன்?" என்ற கேள்வி இரவுக்கு இரவும், இரா முழுவதும் என் காதுகளில் தொனித்த வண்ணமாக இருக்கின்றது. அதுவே என்னைத் தூங்கவொட்டாமல் கலங்கப்பண்ணிக் கொண்டிருக்கின்றது . என்னால் தூங்க முடிவதில்லை என்று விடை பகர்ந்தார்.

அதைக்கேட்ட மருத்துவர் வின்ஸ்லோ "நீங்கள் தவறான மருத்துவரிடம் உங்கள் நோய்க்காக வந்துவிட்டீர்கள். நான் உங்களுக்கு எதுவுமே செய்ய இயலாது" என்று கூறினார். அதைக் கேட்ட அந்த கனவான் "என்ன, நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியாதா?" என்று கேட்டார்.

"முடியாதுதான், இருப்பினும் உங்களுக்கு உதவி செய்யக்கூடிய ஒரு வைத்தியரை நான் உங்களுக்கு காண்பிக்க முடியும்" என்று சொல்லிவிட்டு தனது வேதாகமத்தை எடுத்து வந்து "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்" (ஏசாயா 53 : 5, 6) என்ற தேவ வார்த்தைகளை அவருக்கு வாசித்து காண்பித்தார். இப்பொழுது டாக்டர் வின்ஸ்லோ அந்த மனிதரின் ஆத்துமாவின் வைத்தியரானார்.

ஆரம்பத்தில் அந்த தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டதும் அந்த பிரஞ்சு கனவான் ஆண்டவர் இயேசுவையும், வேதாகமத்தையும் பரிகாசம் பண்ணினார். ஆனால் மருத்துவர் ஃபோப்ஸ் வின்ஸ்லோ தனது நிலையில் உறுதியாக இருந்து இரட்சகர் இயேசு ஒருவரே அவரது அத்தியந்த தேவை என்பதை அந்த மனிதருக்கு உணர்த்திக் காண்பித்து ஆண்டவரைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வைத்து மிகுந்த தேவ சமாதானத்தோடு அவரை அனுப்பி வைத்தார். அதற்கப்பால் அந்த கனவான் மரணமாகிய "பயங்கரங்களின் ராஜா" வுக்குப் பயப்படாமல் "ராஜாதி ராஜா" இயேசு கிறிஸ்து ஒருவருக்கே பயப்படலானார். இப்பொழுது அவர் ஒவ்வொரு இரவும் மிகுந்த தேவ சமாதானத்தோடு ஒரு குழந்தையைப்போல தூங்கலானார். "அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்" (2 தீமோ 1 : 10)

(Dr.ARTHUR PETRIE)


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM