கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி உண்டாவதாக. என்னுடைய பெயர் சுஜாதா என்பதாகும். கர்நாடகா மாநிலத்திலுள்ள பிதர் என்ற இடத்தில் நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். எனது விருப்பத்திற்கு மாறாக ஒரு இந்து வாலிபனுக்கு என்னை எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். நாளடைவில் நான் சென்றடைந்த எனது இந்து கணவனுடைய வீட்டில் அவருடைய தாய் தந்தையரும், உடன் பிறந்தோரும் நான் இந்து தெய்வங்களை வணங்கும்படியாகவும் அதற்கு பூஜை செய்யும்படியாகவும் என்னை மிகவும் வற்புறுத்தினார்கள். ஆனால், நான் ஜீவனுள்ள நமது தேவன் மேலுள்ள எனது விசுவாசத்தை கொஞ்சமும் விடாமல் அவர்களுடைய விருப்பங்களுக்கு இணங்காமல் மிகவும் உறுதியாக நின்றேன். ஒரு வருட காலத்தில் அன்பின் ஆண்டவர் எனக்கு ஒரு பெண் மகவைத் தந்தார். எனது இந்துக் கணவரின் குடும்பத்தின் நெருக்குதலாலும், விக்கிரக வழிபாட்டிற்கு அவர்கள் என்னைப் பலவந்தம் செய்ததாலும் நான் அந்தக் குடும்பத்தையும், கணவனையும் விட்டு விட்டு எனது குழந்தையை எடுத்துக் கொண்டு என்னுடைய தாய் தந்தையரிடம் வந்து சேர்ந்தேன்.
எனது தாய் தந்தையருடன் சில மாதங்கள் என் குழந்தையுடன் இருந்ததற்கு அப்பால் அவர்களை விட்டு விட்டு தனியாக ஒரு வாடகை வீடு எடுத்து குடியிருந்து வந்தேன். தேவன் எனது வாழ்வில் பெரிய பெரிய காரியங்களைச் செய்திருக்கின்றார். அவைகளில் ஒன்றை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
ஒரு தடவை பொருளாதார நிலையில் மிகவும் தாழ்ச்சியாகி ஆகாரம் செய்து சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்தேன். எனது குழந்தை பசியால் அழுது அழுது அதின் குரல் எல்லாம் தளர்ந்து போயிற்று. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நானும் மிகுந்த பசியோடு களைப்படைந்து சோர்ந்த நிலையில் பட்டினியால் துவண்டு போன குழந்தையுடன் படுக்கைக்குச் சென்றேன். ஆண்டவர் சமூகத்தில் என் உள்ளத்தை உடைத்து ஊற்றி ஆண்டவர் எப்படியாவது அடுத்த நாளாவது உணவளித்து போஷிக்க வேண்டும் என்று கண்ணீரோடு ஜெபித்து விட்டு படுத்துக் கொண்டேன். எனினும் அடுத்த நாள் சாப்பாட்டுக்கான காரியங்கள் என்ன ஆகுமோ என்ற மிகுந்த விசாரத்தில் படுத்திருந்தேன். பசி பட்டினி காரணமாக நானும் குழந்தையும் மயக்க நிலையிலேயே படுத்திருந்தோம். பசியின் காரணமாக குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த நாள் அதிகாலை நான் 5 மணிக்கு எழும்பினேன். குழந்தைக்கு புசிக்க ஏதாவது ஆகாரம் கொடுக்க வேண்டுமே என்று நான் அதிகமாக யோசித்தேன். சூரியன் இன்னும் உதயமாகவில்லை. இந்தச் சமயத்தில் நான் தங்கியிருந்த வீட்டிற்கு முன்பாக உள்ள ஒரு குத்துச் செடியில் ஒரு ஆந்தை திடீரென்று பறந்து வந்து உட்கார்ந்தது. அதின் அலகில் சில தாட்கள் இருப்பதை நான் கவனித்தேன். அந்த தாட்களை நான் உற்றுக் கவனித்தபோது அது சாதாரண தாட்கள் அல்லவென்றும் அவைகள் ரூபாய் நோட்டுகள் என்பதையும் நான் கண்டேன். சற்று நேரம் அந்தக் குத்துச் செடியில் உட்கார்ந்திருந்த அந்த ஆந்தை தனது வாயிலிருந்த ரூபாய் நோட்டுகளை அங்கேயே போட்டு விட்டு பறந்து செல்லுவதை நான் கவனித்தேன். அது பறந்து சென்றதும் நான் அந்தச் செடியண்டை சென்று அது விட்டுச் சென்ற தாட்களைப் பார்த்தபோது அங்கே 5 நூறு ரூபாய் நோட்டுகள் கிடப்பதைக் கண்டு மிகுந்த ஆச்சரியத்தில் ஆண்டவருக்கு துதி செலுத்தி அவைகளை எடுத்துக் கொண்டேன். அன்பின் ஆண்டவர் பட்டினியாக இருந்த என் குழந்தையையும், என்னையும் போஷிப்பதற்காக இந்த அதிசய அற்புதத்தைச் செய்தார் என்று அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தேன். அந்த பணத்தைக் கொண்டு பசியால் துவண்டு கிடந்த எனது குழந்தைக்கான ஆகாரத்தை உடனே வாங்கி அதைப் போஷித்தேன். அந்தப் பணம் எங்கள் இருவருடைய போஷணைக்கு பல நாட்கள் போதுமானதாக இருந்தது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக. தமது தீர்க்கன் எலியாவை காகங்களைக் கொண்டும், கைம்பெண்ணைக் கொண்டும் போஷித்த நம் சர்வ வல்ல தேவன் தம்முடைய பிள்ளைகளை ஆந்தையைக் கொண்டு போஷித்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. அவர் ஜெபத்தைக் கேட்கும் ஜீவனுள்ள தேவன். அந்த தேவனை நான் முழுமையாக விசுவாசிக்கின்றேன். அவர் என் இரட்சகர். அவரே என் சகாயர். அவரே என் நேசர்.
(Courtesy:- FAITH TO-DAY magazine, New Delhi ) |