தேவ எக்காளத்தின் 40 ஆம் ஆண்டு ஸ்தோத்திர மலரை வெளியிட வேண்டுமென்ற ஒரு பரிசுத்த ஆவலை தேவன் என் உள்ளத்தில் தந்தார். அதை எந்த விதத்தில் எழுதுவது, செய்திகளை எப்படி கோர்வைப்படுத்துவது என்பதை எல்லாம் தேவ சமூகத்தில் முழங்கால்களில் நின்று கேட்டுக் கேட்டுக் கம்பியூட்டரில் நான் டைப் செய்யத் தொடங்கினேன். ஸ்தோத்திர மலருக்கான முகப்பு அட்டையில் எந்தப் படத்தை கொண்டு வருவது என்று பல நாட்களாக நான் யோசித்து ஜெபித்து வந்தேன். ஒரு நாள் தற்செயலாக நான் எனது புத்தகசாலையின் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டு வரும் வேளையில் பல்லாண்டு காலத்திற்கு முன்பாக நான் வாங்கிய அழகான ஆங்கில மோட்ச பிரயாண புத்தகத்தைக் கண்டேன். அதின் உள்பக்க முகப்பு அட்டையில் மோட்ச பிரயாணி கிறிஸ்தியானுக்கு, சுவிசேஷகர் இடுக்கமான வாசலாகிய திட்டி வாசலைக் காண்பித்து அதின் வழியாக மோட்ச பிரயாண யாத்திரையை ஆரம்பிக்கும்படியாக கேட்டுக் கொள்ளும் காட்சி இடம்பெற்றிருந்தது. அந்தப் படத்தையே ஸ்தோத்திர மலரின் முகப்பு அட்டையில் போடும்படியாக ஆவியானவர் என் உள்ளத்தில் பேசினார். அவருடைய ஆலோசனைக்கு அப்படியே கீழ்ப்படிந்து அதை வெளியிட்டேன். தேவ எக்ககாளம் ஸ்தோத்திர மலரை அந்த முகப்புப் படமும் அதை ஒட்டிய செய்தியும் எத்தனையாக பரிமளிக்கச் செய்தது என்பதை என்னண்டை வந்த அநேக கடிதங்கள் மெய்ப்பிப்பதாக இருக்கின்றது. எப்படி அந்தப் படத்தை நீங்கள் தெரிவு செய்தீர்கள் என்று ஆச்சரியத்துடன் தேவ மக்கள் என்னிடம் கேட்கின்றார்கள். கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.
ஸ்தோத்திர மலரின் 162 பக்கங்களையும் நான் எப்படி டைப் செய்து முடித்தேன் என்பதை கர்த்தர் ஒருவரே அறிகின்றவராக இருக்கின்றார். ஆரம்பத்தில் அதை நாம் எப்படி டைப் செய்ய முடியும் என்று நான் வெகுவாக மலைத்து நின்றேன். ஆனால், "என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" (2 கொரி 12 : 9) என்ற வசனத்தின்படி தேவன் என்னைப் பெலப்படுத்தினார். அவருடைய கிருபை என்னைத் தாங்கினபடியால் என்னை அறியாமலே அத்தனை பக்கங்களையும் கஷ்டமின்றி கம்பியூட்டரில் டைப் செய்து முடித்தேன்.
மொத்தம் 164 பக்கங்களுடன் ஸ்தோத்திர மலராக அழகாக அச்சிட்டு வெளியிட ஒரு பெரிய தொகை வேண்டும் அல்லவா? அந்த தேவையையும் நம் அன்பின் தேவனே அற்புதமாக பூர்த்தி செய்தார். அவருக்கு நாம் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்? தேவ எக்காளத்தின் ஸ்தோத்திர மலரை மிகவும் சிறப்பாக அச்சிட்டு வெளிக் கொண்டு வரவேண்டும் என்ற ஆவலில் நமது அச்சகத்தின் உரிமையாளர் திரு ஆறுமுகம் அவர்கள்எடுத்த முயற்சிகள் அநேகமாகும். அன்பின் ஆண்டவர் அவர்களையும், அச்சகத்தின் ஊழியர்களையும் ஆசீர்வதிப்பாராக.
இறுதியாக, கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் தேவ எக்காளத்தின் 40 ஆம் ஆண்டு ஸ்தோத்திர மலர் 164 பக்கங்களில் ஜூன் மாதக் கடைசி வாரத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தங்கள் கண்களில் கண்ணீர் வடிய வடிய அழுத வண்ணமாகவே அதை வாசித்ததாக எனக்கு வந்த கடிதங்கள் அநேகம். கர்த்தர் ஒருவருக்கே துதி உண்டாவதாக. "தமிழை வாசிக்கத் தெரியாத எனது கணவருக்கு ஸ்தோத்திர மலரை நான் வாசித்துக் காண்பித்தேன். அதை வாசிக்க, வாசிக்க எனது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அவ்வப்போது நான் என் கணவரைப் பார்த்தபோது அவரும் தனது கண்களில் வடிந்த கண்ணீரை துடைப்பதை நான் கண்டேன்" என்று ஒரு பரிசுத்த தேவப் பிள்ளை வட மாநிலம் ஒன்றிலிருந்து தொலை பேசியில் என்னிடம் கூறினார்கள். ஸ்தோத்திர மலரை வாசித்ததின் பின்னர் தன்னுடைய தேவ ஊழியத்தின் பாதையையே மாற்றிக் கொண்டதாக ஒரு தேவ ஊழியர் கடிதம் எழுதியிருந்தார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. "ஒரு தேவ ஊழியன் தன்னை அழைத்த கர்த்தருக்கு எப்படியாக ஊழியம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் உங்கள் உண்மை ஊழியத்தின் மூலமாக ரூபகாரப்படுத்தி அதை முன்மாதிரியாக வைத்துவிட்டீர்கள்" என்று ஒரு சகோதரி எழுதியிருந்தார்கள். "கிறிஸ்தவ பக்தி நூல்களின் வரிசையில் நமது தேவ எக்காளமும் இடம் பிடித்துக் கொண்டுவிட்டது" என்று ஒரு விருத்தாப்பிய ஐயா எழுதியிருந்தார்கள். "தேவ எக்காளம் 40 ஆம் ஆண்டு ஸ்தோத்திர மலரை விலையேறப்பெற்ற பொன், வைரம், முத்துக்களைப் போல நம் வீட்டில் அரிய பொக்கிஷமாக பாதுகாத்து வைக்க வேண்டும்" என்று ஒரு தேவப் பிள்ளை என்னிடம் சொன்னார்கள். எடுத்த எடுப்பில் தேவ எக்காளம் முழுமையையும் ஒரு வரி கூட விடாமல் பரவசத்துடன் வாசித்து முடித்து அனந்த ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதாக வந்த கடிதங்கள் அநேகம் உண்டு. 80 வயதைத்தாண்டிய ஒரு பரிசுத்த தாயார் நமது தேவ எக்காளத்தின் ஸ்தோத்திர மலரை 3 தடவைகள் வாசித்து முடித்ததாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஆச்சரியத்தால் பிரமிப்படைந்தேன். என்னண்டை வந்த ஏராளமான கடிதங்களில் ஒரே ஒரு கடிதத்தை மட்டும் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாகவும் உங்களுடைய ஆசீர்வாதத்திற்காகவும் இங்கு குறிப்பிட ஆசைப்படுகின்றேன்.
"தேவ எக்காளத்தின் 40 ஆம் ஆண்டு ஸ்தோத்திர மலருக்காக கர்த்தருக்கு கோடி, கோடி நன்றி செலுத்துகின்றேன். ஒரு எழுத்துவிடாமல் முழுவதுமாக பரிசுத்த ஆவியில் நிரம்பிப் படித்தேன். உங்களுடைய தெய்வ பக்தி, நேர்மை, உத்தமம், கர்த்தருடைய ஊழியத்திலுள்ள வைராக்கியம், பரிசுத்தம் நிறைந்த எளிய வாழ்க்கை, கர்த்தர்பால் கொண்ட தீராத நேசம் இவை யாவையும் கண்டு வியந்து கர்த்தருக்கு நன்றி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தேன்.
கர்த்தருடைய ஊழியத்தையே தன் சொந்த வாழ்க்கைக்குப் பணம் சேர்க்கும் தொழிலாகக் கொண்டுள்ள தேவ ஊழியர்கள் மத்தியில் மிக எளிய, பரிசுத்த, ஊத்தம ஊழியனாக நீங்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாகவும், ஆறுதலாகவும் உள்ளது" (டாக்டர்.சரோஜா நடராஜன், வள்ளலார் நகர்)
தேவ எக்காளம் ஸ்தோத்திர மலர் தேவ எக்காளத்தின் சந்தாதாரர்கள் யாவருக்கும் அதிக பணச் செலவு செய்து கூரியர் தபால் மூலமாகவே ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அனுப்பப்பட்டது. ஒழுங்காக சந்தா செலுத்தாதவர்களுக்கும் கூட அது அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவின் தொலை தூர மாநிலங்களில் உள்ள சந்தாதாரர்களில் சிலருக்கு மட்டும் சாதாரண தபால் மூலமாக அது அனுப்பப்பட்டது.
இந்த 40 ஆம் ஆண்டு தேவ எக்காள ஸ்தோத்திரமலர் மூலமாக அதை வாசிக்கும் மக்கள் உள்ளங்களில் கர்த்தர் பேசவும், கர்த்தருக்கு ஊழியம் செய்வோர் இழிவான ஆதாயத்துக்காக தேவனுடைய உன்னதமான ஊழியத்தை பண்டமாற்று செய்யாமல் மெய்யான ஆத்தும பாரத்தோடும், தங்களைஅழைத்த அன்பின் ஆண்டவரை தங்களுடைய உண்மை ஊழியத்தின் மூலமாக கனப்படுத்தி மகிமைப்படுத்தவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். |