கிறிஸ்தியான் உண்மையோடு கூடுதல்
கிறிஸ்தியான் ராஷதர் கெபியைத் தாண்டி சற்று தூரம் போகவே அவனுக்கு முன்பாக ஒரு மேடு இருந்தது. பிரயாணிகள் அதன் மேல் ஏறிக்கொண்டு, போக வேண்டிய பாதையைப் பார்த்துக் கொள்ள நோக்கமாகவே அது உயர்த்தப்பட்டிருந்தது. கிறிஸ்தியான் அதின் மேல் ஏறிப் பார்த்த போது, உண்மை 1 தனக்கு முன்னே கூப்பிடு தூரத்தில் போகிறதைக் கண்டான். உடனே அவனுக்கு உண்டான அக மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவன் திரும்பிப் பார்க்கும்படியாக ஓ, ஓ, ஓய் நில்லும், நானும் கூட வருகிறேன் என்று சத்தமிட்டுக் கூப்பிட்டான். உடனே உண்மை திரும்பிப் பார்த்தான். கிறிஸ்தியான்: நான் கிட்ட வருமட்டும் நில்லும், நில்லும் என்று சொன்னான். உண்மையோ இல்லை, இல்லை பிராணன் தப்ப ஓடுகிறேன், பழிகாரன் பின்னாலே தொடருகிறான் என்று சொல்லி விட்டு, விரைவாய் நடந்து போனான்.
அதைக் கேட்ட உடனே கிறிஸ்தியான் மெய் மறந்து அவனுடன் கூடிக்கொள்ள வேண்டும் என்று ஓட்டமாய் ஓடி உண்மையையும் முந்திவிட்டான். இப்படி முந்தினவன் பிந்தி, பிந்தினவன் முந்தினான்: முந்தினாலும் எச்சரிக்கையோடு நடவாமல், பிந்தியிருந்த தான் முந்திவிட்டதையிட்டு வீண் மகிமையினால் புன்னகை கொண்டு, கல் தட்டி தொப்பென்று கீழே விழுந்து, உண்மை வந்து அவனைத் தூக்கிவிடுமட்டும் எழுந்திருக்க இயலாமற் கிடந்தான். 2
அப்புறம் அவ்விருவரும் நெருங்கிய நேசத்தோடு கூடி நடந்து தங்கள் பிரயாணத்தில் சம்பவித்த பல விஷயங்களைக் குறித்து ஒருவரோடொருவர் சம்பாஷித்துக் கொண்டு போகிறதை நான் என் சொப்பனத்தில் கண்டேன். அவர்கள் பண்ணிக் கொண்ட சம்பாஷணையாவது:
கிறி: நான் வெகுவாய் மதித்து வந்த என் உத்தம தோழனாகிய உண்மையே! உம்மோடு கூடிக்கொண்டதற்காகவும், நாம் இருவரும் ஏகமனதோடு வழிநடந்து போகக் கிருபை செய்ததற்காகவும் நான் மெத்தவே சந்தோசப்படுகிறேன்.
உண்மை: என் தோழனே, நம்முடைய ஊரில் இருந்தே உன்னுடன் கூடிப் புறப்படும்படி நினைத்திருந்தேன்; ஆனால் நீ சற்று முந்திவிட்டாய், அதினாலே இவ்வளவு தூரம் ஒண்டியாய் பயணம் பண்ண வேண்டியதாயிற்று.
கிறி: நான் மோட்ச பிரயாணம் பண்ணப் புறப்பட்டதற்குப் பின் எவ்வளவு காலம் நீர் நாசபுரியில் இருந்தீர்?
உண்மை: அந்த ஊர் புளிக்குமட்டும் இருந்தேன். நீர் என்றைக்குப் புறப்பட்டீரோ அன்றுமுதல் நம்முடைய பட்டணம் அக்கினியால் தகனிக்கப்பட்டு சீக்கிரத்துக்குள் சாம்பலாய் போகும் என்பதைப் பற்றிய செய்தி அதிகமாய்ப் பேசிக் கொள்ளப்பட்டது.
கிறி: அப்படியா? உம்முடைய அயல் வீட்டுக்காரர் எல்லாரும் இப்படிப் பேசிக் கொண்டார்களா?
உண்மை: சில நாட்களாக எவன் வாயெடுத்தாலும் இந்தச் செய்தியைக் குறித்தே பேசுவான்.
கிறி: என்ன? அப்படி இருந்தும் உம்மைத் தவிர வேறொருவரும் அந்த அழிவிலிருந்து தப்பிக் கொள்ளும்படி புறப்பட்டு வரவில்லையா?
உண்மை: நான் சொன்னபடி நாசபுரியின் அழிவைப்பற்றி பெரும் பேச்சு உண்டான போதிலும், அவர்கள் அதை நம்பவில்லை போல் இருக்கிறது.
நீர் புறப்பட்ட சமாச்சாரத்தைக் குறித்துப் பேச்சுண்டானால் அநேகர் உம்மைப் பரிகாசமாயும், இழிவாயும் பேசுகிறதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன். உம்முடைய பிரயாணத்தை நாசமாய் போகும் பயணம் என்று சொல்லுகிறது உண்டு. ஆனால் நானோ நமது பட்டணம் வானத்திலிருந்து இறங்கும் அக்கினியாலும், கந்தகத்தாலும் தகனிக்கப்படும் என்கின்ற செய்தியை நம்பினதினாலும் நம்புகிறத னாலும் தப்பி ஓடிப்போனால் நலமாயிற்றே என்று புறப்பட்டுப் பயணஞ்செய்கிறேன்.
கிறி: இணங்குநெஞ்சன் இருக்கிறானே, அவன் சமாச்சாரம் ஏதாவது கேள்விப்பட்டீரா?
உண்மை: ஆம் கிறிஸ்தியான், கேள்விப்பட்டேன்; நம்பிக்கையிழவு உளை மட்டும் உன்னோடு கூட வந்தானாம்; அதிலே விழுந்தான் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் இவன் உளையில் விழுந்ததாக தன்னைக் காட்டிக் கொள்ளாதபடி பிரயாசப்படுகிறான். அவன் எப்படி மூடினாலும் என்ன? உளையில் விழுந்து சேறும் சகதியும் ஆனான் என்று நான் நிச்சயமாய் நம்புகின்றேன்.
கிறி: அவனுடைய அயல் வீட்டுக்காரர் எல்லாரும் என்ன சொன்னார்கள்?
உண்மை: அதை என்ன சொல்ல! அவன் திரும்பி தன் வீட்டு வாசலுக்குள் புகுந்ததுதான் தோஷம்; ஊரெல்லாங்கூடி அவனைப் பழித்து, சிலர் பரியாசம் பண்ணினார்கள், சிலர் திட்டினார்கள், அவனைக் கேட்ட கேள்விகளுக்கு ஒரு கணக்கில்லை. அவனை ஒருவரும் வேலையில் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். அவன் புறப்படுவதற்கு முன்னிருந்ததிலும் இப்போது அவன் பேர் எழு பங்கு நாற்றமாய் இருக்கிறது.
கிறி: நாசபுரியாருக்கு அவன் புறப்பட்ட பயணம் பிரியம் இல்லையே; பின்னை திரும்பி வந்து விட்டவனை பகைப்பானேன்?
உண்மை: அதுவா! அவன் கெட்டான், தலைப்பா மாற்றி, எடுத்த காரியத்தை நிறைவேற்ற சக்தியில்லாத தெம்மாண்டி என்று சொல்லுகிறார்கள். அவன் சத்திய வழியை விட்டுப் பின்வாங்கின தினாலே, தேவன் அவன் சத்துருக்களை ஏவிவிட்டு அவனை நிந்திக்கவும், ஈசல் இடுவதற்கு இடமாகவும், பழமொழியாகவும் பண்ணிவிட்டார் என்று என் மனதில் தோன்றுகின்றது. (எரேமியா 29 : 18, 19)
கிறி: நீர் புறப்படுமுன் அவனைக் கண்டு பேசவில்லையோ?
உண்மை: எங்கே கண்டு பேசுகிறது? ஒரு தரம் தெருவிலே கண்டேன், அவனுக்கே வெட்கமாய் இருந்ததாக்கும்; என்னைப் பார்த்த உடனே பக்கத்துச் சந்து வழியாய் போய்விட்டான்; அதினாலே நான் அவனுடன் பேச ஏது இருந்தது இல்லை.
கிறி: என் பயணத்தின் துவக்கத்தில் அவனைக் குறித்து கொஞ்சம் நம்பிக்கை இருந்தது; இனி அவன் நாசபுரியின் அழிவோடு நாசமா கிறவன்தான் என்று இப்போது பயப்படுகிறேன். “நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது” (2 பேதுரு 2 : 22) என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படி அவனுக்கு சம்பவித்தது.
உண்மை: நானும் அப்படியே எண்ணி அவனைக் குறித்துப் பயப்பட்டதுண்டு; ஆனாலும் வரப்போகிறதற்கு யார் தடை போடக் கூடும்?
கிறி: அண்ணா உண்மை! அவன் காரியத்தை அம்மட்டில் நிறுத்திவிட்டு, நம்முடைய சொந்தக் காரியங்களைக் குறித்துப் பேசிக் கொள்ளுவோமாக. நீர் வந்த வழியில் நேரிட்ட கஷ்ட நஷ்டங்களைப் பற்றிச் சொல்லும்; எப்படியும் உமக்கு சில கஷ்டங்கள் சம்பவித் திருக்கும். கஷ்டமே இல்லையானால் அதைப் போலொத்த அதிசயமே இல்லை என்று சொல்ல வேண்டியது.
உண்மை: நம்பிக்கையிழவு இருக்கிறதே, அதில் நீ விழுந்து அவதிப்பட்டாற்போல் இருக்கிறது. நான் அதை அபாயமின்றி கடந்து யாதொரு மோசமின்றித் திட்டிவாசல் வந்து சேர்ந்தேன். ஒரே ஒரு அபாயம் மாத்திரம் நேரிட இருந்தது. மோகினிதான் 3 என்னை மோசம்பண்ணப் பார்த்தாள்.
கிறி: அவளுடைய கண்ணிக்கு மாத்திரம் நீர் தப்பிக் கொண்டீ ரானால் அதைப்போல சந்தோசம் வேறொன்றும் இல்லை. யோசேப்பைப் பிடிக்கும்படி முதல்தரமான கண்ணியை அவள் வைத்தாள்; அவனும் உம்மைப்போலவே தப்பிக் கொண்டான். லேசிலே தப்பினானோ? அவன் பிராணனே போகிறதுபோல் இருந்ததல்லவா? (ஆதியாகமம் 39 : 11 – 13) உம்மை எப்படி மோசம் பண்ணப்பார்த்தாள்?
உண்மை: அவளைக் குறித்து உமக்குக் கொஞ்சம் தெரிந் திருக்கலாம், என்றாலும் அவளுடைய வாய் அலங்காரத்தை முற்றிலும் அறியமாட்டீர்; அவள் என் மடியின் மேல் கைபோட்டு, என்னுடன் கூட வா, என்னென்ன இன்பங்கள் உண்டோ அதை எல்லாம் உனக்கு தருகிறேன் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
கிறி: நல்ல மனச்சாட்சியின் மன ரம்மியத்தை தருகிறேன் என்று அவள் உமக்கு வாக்களிக்கவில்லை அல்லவா?
உண்மை: சிற்றின்பத்துக்கும், மாமிச இச்சைகளுக்கும், திருப்தி உண்டாக்கும் பொருட்கள் என்னவோ அவை அனைத்தையும் தான் தருவதாக வாக்களித்தாள் என்று நான் சொல்லுகிறதை நீர் நன்றாய் அறிந்திருக்கிறீர்.
கிறி: அவள் கண்ணிக்கு நீர் தப்பினதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்; கர்த்தருடைய கோபத்துக்கு ஏதுவானவர்கள் அதிலே விழுவார்கள். (நீதிமொழிகள் 22 : 14)
உண்மை: நான் அவளுடைய கண்ணிக்கு முழுவதும் தப்பிக் கொண்டேனோ தெரியவில்லை.
கிறி: அவளுடைய ஆசை பதங்களுக்கெல்லாம் நீர் இணங்க வில்லை என்றே நம்புகிறேன்.
உண்மை: நான் என்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளும்படியான அவ்வளவு தூரம் இடம் கொடுக்கவில்லை. “அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப் போகும்” (நீதிமொழிகள் 5 : 5) என்று சொல்லப்பட்ட பழைய சுலோகம் ஒன்று என் நினைவில் இருந்தது. அதினாலே, நான் அவளுடைய மையிட்ட கண்விழிகளால் மயங்கிவிடாதபடிக்கு என் கண்களை மூடிக் கொண்டேன். (யோபு 31 : 1) அப்பொழுது அவள் மனங் கொண்டபடி என்னைத் திட்டினாள், நானோ என்மட்டில் வந்து விட்டேன்.
கிறி: நீர் வரும்போது வேறு யாராவது உமது வழியை மறிக்க வில்லையா?
உண்மை: கஷ்டகிரியின் அடிவாரத்தில் நான் வரும்போது பஞ்சு கிழவன் ஒருவன் எனக்கு எதிர்ப்பட்டு, நீ யார் என்றும், எங்கே போகிறாய் என்றும் கேட்டான். அதற்கு
நான்: நான் ஒரு பரதேசி ஐயா! மோட்ச பட்டணத்துக்கு போகிறேன் என்று சொன்னேன். அப்புறம் கிழவன் சொல்லுகிறான்: அப்பா, உன்னைப்பார்த்தால் மரியாதை உள்ள பிள்ளையாண்டானாய்க் காணப்படுகிறது; என்னோடு கூட வாசம்பண்ணி, நான் இடும் வேலைகளைச் செய்து, சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள உனக்குப் பிரியம் இருக்குமா? என்று கேட்டான். அப்புறம் நான் அவன் பேரையும், ஊரையும் கேட்டேன்.
என் பேர் முதலாம் ஆதாம் 4 என் ஊரின் பேர் பித்தலாட்டம் என்றும் சொன்னான். அதின் பின்பு நீர் கொடுக்கும் வேலை என்ன? கூலி என்ன? என்று கேட்டேன். பல இன்ப பயிற்சியே என் வேலை, என் சொத்துகளுக்கெல்லாம் சுதந்திரவாளியாகிறதே கூலி என்று சொன்னான். அப்புறம் நான் உமது வீடு வாசல் எப்படி? வேலைக்கரர் காரியம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவன்: என் வீடு பூலோக இன்பங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. நான் வளர்த்த பிள்ளைகள்தான் என் வேலைக்காரர் என்று சொன்னான். எத்தனை பிள்ளைகள் உண்டென்று கேட்டேன். கருவேலம் கன்று போல மூன்று பெண்கள் மாத்திரம் இருக்கிறது; அவர்களுக்கு மாம்ச இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை என்று பேர். உனக்கு மனம் இருந்தால் நீ அவர்களை கலியாணம் பண்ணிக் கொண்டு எனக்கு மருமகன் ஆகிவிடலாம் என்று சொன்னான். எத்தனை வருஷம் உமது வீட்டில் உம்மோடுகூட இருக்க வேண்டும் என்று கேட்டேன். நான் என் கட்டையைக் கிடத்துமட்டும் கூட இருந்தால் போதும்என்று சொன்னான்.
கிறி: நல்லது, கடைசியாகக் கிழவனும் நீரும் என்ன தீர்மானத்துக்கு வந்தீர்கள்?
உண்மை: தீர்மானமா? அவன் பேசுகிறதெல்லாம் நியாயம் போல் இருந்ததால், அவனோடு போகிறது நலம் என்று துவக்கத்தில் சற்று மனமாய் இருந்தேன். அப்புறம் பேச்சோடு பேச்சாய் அவனுடைய நெற்றியைப் பார்த்தேன். அதில், “பழைய மனுஷனையும், அவ னுடைய கிரியைகளையும் களைந்து போடுங்கள்” என்று எழுதியிருந்தது.
கிறி: அப்புறம், அப்புறம், அப்புறம் என்ன?
உண்மை: இவன் என்னதான் சொல்லட்டும், எப்படித்தான் பசப்பட்டும், வீட்டுக்குப் போனவுடனே அடிமையைப் போலத்தான் நடத்துவான் என்று நன்றாய் அறிந்து, மனதில் குபீர், குபீர் என்று கோபம் பற்றி எரிந்தது. அதின் பின்பு நான் போதும், போதும் அதிகம் பேச வேண்டாம், உன் வாசற்படியண்டை கால் முதலாய் மிதிக்க மாட்டேன் என்று ஒரே தீர்மானமாய் சொல்லிவிட்டேன். அப்புறம் அவன் என்னைக் கண்டபடி திட்டி நல்லது போ, போ, உன் ஆத்துமா ஈடேறாதபடிக்கு தகுந்த ஆள் ஒருவனைப் பின்னாலே அனுப்புகிறேன் பார் என்றுசொன்னான். நீ கெட்டாய், போ என்று திரும்பி வந்தேன், திரும்பவே என் மாம்சத்தைக் கெட்டியாய்ப் பிடித்து இறுக்கினான்.5 என் பாதி உடலை இழுத்துக்கொண்டான் என்றே நினைத்தேன். அப்போது “நிர்ப்பந்தமான மனுஷன் நான்” என்று புலம்பிக் கொண்டே கஷ்டகிரியில் ஏறினேன். பாதி மலை ஏறின பின்பு பின்னிட்டுப் பார்த்தேன். பார்க்கவே, ஒரு மனுஷன் வாயு வேகமாய் என்னைத் தொடரும்படி ஓடி வருகிறதைக் கண்டேன். நான் எவ்வளவு விரைவாய் ஏறினாலும் அவன் என்னைக் கஷ்டகிரி நந்தவனத்தில் கிட்டிச் சேர்ந்தான்.
கிறி: நானும் அந்த இடத்தில்தான் இளைப்பாறும்படி சற்று நேரம் உட்கார்ந்து அப்படியே தூங்கிவிட்டு, மடியில் இருந்த சுருளையும் இழந்தேன்.
உண்மை: தம்பி, தம்பி வேறு பேச்சைக் கொண்டு வராமல் நடந்த சமாச்சாரத்தை முழுவதும் கேளும். அவன் என்னண்டை வந்தவுடனே உன் மண்டையை உடைக்கிறேன் பார் அடா! என்று சொல்லிக் கொண்டே ஒரு குத்து போட்டான். அப்பாடா என்று நானும் விழுந்து செத்தவனைப்போலக் கிடந்தேன். சற்று நேரம் பொறுத்து எனக்குத் தன்னறிவு வந்தது; அப்போது நான் இப்படி ஏன் என்னை குத்தி விழத் தள்ளினாய் என்று கேட்டேன். அதற்கு அவன்: முதல் ஆதாமோடு உனக்கிருக்கும் அந்தரங்க ஐக்கியத்தையிட்டுத்தான் அடித்தேன் என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் நெஞ்சில் ஒரு குத்துப் போட்டு, அப்படியே மல்லாக்கக் கிடத்திவிட்டான். அதினாலே அவன் காலின்கீழ் முன்போல செத்தவனைப்போலக் கிடந்தேன். நான்: “ஐயா அடியாதேயும், அப்பா கொல்லாதேயும், இரங்கும், இரங்கும் என்று கெஞ்சினேன். நான் கெஞ்சக் கெஞ்ச அவன் கோபம் மிஞ்சி, இதுதான் இரக்கம் என்று மறுபடியும் ஒரு குத்துப்போட்டான். அந்தச்சமயத்தில் ஒரு புண்ணியவான் வந்து பொறு, பொறு என்று தடுக்காவிட்டால் கஷ்டகிரி நந்தவனத்தில் மண்ணுக்குள்ளே இதற்குள் மட்கிப் போயிருப்பேன்; என்னைப் புதைத்த இடமும் புல் முளைத்துப் போயிருக்கும்.
கிறி: அப்படிப் பொறுக்கச் சொல்லி தடுத்தது யார்?
உண்மை: அவர் இன்னார் என்று துவக்கத்தில் நான் கண்டு கொள்ளவில்லை; அவர் பொறுக்கச் சொல்லித் தடுத்து விட்டு தமது வழியே கடந்து போகையில் இவர் யாராய் இருக்கலாம் என்று கவனித்துப் பார்க்கும்போது, அவருடைய கைகளிலும், கால்களிலும் துவாரங்கள் தெரியப்பட்டன. அதனாலே அவர் நமது ஆண்டவர் என்றே தீர்மானித்துக் கொண்டேன், அதன்பின்பு நான் மலை ஏறிப்போனேன்.
கிறி: உன்னைப் பின் தொடர்ந்து பிடித்தது மோசே முனிவர் 6 அவர் ஒருவருக்கும் இரங்கமாட்டார்; தமது பிரமாணங்களை மீறினவர்களுக்கு எப்படி தயாளம் காட்டுகிறது என்றும் தெரியவே தெரியாது.
உண்மை: அவருடைய குணபாவங்களை எல்லாம் நான் நன்றாய் அறிவேன். இது அவர் என்னை இப்படி மடக்கின முதலாம் தடவை என்று நீ எண்ணாதே; நான் நாசபுரியில் என் வீடு மட்டாய் இருந்து, சாங்கோபாங்கமாய் பஞ்சு மெத்தையில் படுத்து நாட்களை கழித்த காலத்தில் அவர் என்னிடத்தில் வந்து, இங்கே குடியிருந்தால் உன் தலைமேல் விழும்படியாக இந்த வீட்டைத் தீ வைத்து கொளுத்தி விடுவேன் பார் என்று சொல்லி, என்னை பயமுறுத்தி துரத்தினவரும் அவர்தான்.
கிறி: அப்படியானால் மோசே முனிவர் உம்மைச் சந்தித்த இடத்துக்கு அடுத்தாற்போல் மலையின் மேல் இருக்கும் அந்த வீட்டை நீர் காணவில்லையா?
உண்மை: ஆம், அந்த வீட்டையும் கண்டேன். அதின் வாசலின் முன் படுத்திருந்த சிங்கங்களையும் முந்தியே கண்டு கொண்டேன். அந்தச் சிங்கங்கள் தூங்கிக்கொண்டிருந்தன; ஏனெனில் நான் அவ்விடத்தில் வரும்போது உச்சி வேளையாய் இருக்கலாம், இன்னும் அதிகப்பொழுது இருக்கிறதே, வெகு தூரம் போய்விடலாமே என்று தான் நான் வாசல் சேவகனையும் கடந்து மலை மேல் வந்து விட்டேன்.
கிறி: அது நிஜம்தான். வாசல் சேவகன் உம்மைக் கண்டதாகவும் சொன்னான்; ஆனால் நீர் அந்த வீட்டுக்கு வந்துவிட்டுப் போனீர் இல்லையே என்று நினைத்தேன். அவ்விடத்து காட்சிகளைத்தான் என்ன சொல்ல! அவ்விடத்தில் உள்ளவர்கள் காட்டுகிற காட்சிகளை நீர் கண்டது மெய்யானால் சாகும் மட்டும் மறந்து போவீரோ? மறக்கமாட்டீர். அது இருக்கட்டும். தாழ்மையின் பள்ளத்தாக்கில் நீர் ஒருவரையும் சந்திக்கவில்லையா? சந்தித்தது உண்டானால் தயவு செய்து சொல்லும்.
உண்மை: ஆம் நிரம்மியம் 7 என்று ஒருவன் என்னைச் சந்தித்தது உண்டு. அவன் என்னைத் தன்னுடன் திரும்பி வந்துவிடும்படி பிரயத் தனம் பண்ணினான். இந்தப் பள்ளம் முழுவதும் மேன்மையுள்ள தல்ல, அந்த வழி போனால் அகங்காரன், கர்விதன், ஏமாப்பன், இடும்பன் முதலிய என் சிநேகிதர் எல்லாருக்கும் மனத்தாங்கல் ஆகும். பள்ளத்தின் வழியே போனால் என்னைப் போல மூடன் இல்லை என்று அவர்கள் எண்ணுவார்கள் என்றும் பல நியாயங்கள் சொன்னான்.
கிறி: நல்லது, அதற்கு நீர் சொன்ன மறுமொழி என்ன?
உண்மை: நான் சொன்ன உத்தரவு இதுதான்; அகங்காரன், கர்விதன், ஏமாப்பன், இடும்பன் முதலியவர்கள் எல்லாரும் என்னைத் தங்கள் பந்துவழி என்று சம்பந்தங்கூறுவது சரிதான்; ஏனெனில் அவர்கள் என் இனத்தை ஒட்டினவர்கள்தான். என்றாலும், நான் பரதேசியான காலமுதல் அவர்கள் என்னை வெறுத்துவிட்டார்கள். நானும் அவர்களைத் தள்ளிவிட்டேன். இப்பொழுது இருக்கிற காரியத்தைப் பார்த்தால் அவர்கள் ஒரு காலத்திலும், என் இனத்தை ஒட்டினவர்களாய் இருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டியது என்று சொன்னேன். இந்தப் பள்ளத்தாக்கைப்பற்றியோ நீ தப்பான எண்ணங்கொண்டிருக்கின்றாய். ஏனெனில், “மேன்மைக்கு முன்னா னது தாழ்மை; அழிவுக்கு முன்னானது அகங்காரம்”, ஆதலால் உன் மனதில் நமது ஆசை இச்சைகளுக்கு ஏற்ற வழி ஒன்று தோன்றின மார்க்கமாய் அல்ல, ஞானிகள் எல்லாராலும் நல் வழி என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிற பாதையின் வழியாய் போய் மேன்மையை சம்பாதிக்கிறது எனக்கு நலமாய்த் தோன்றுகிறது என்று சொன்னேன்.
கிறி: இந்தப் பள்ளத்தாக்கில் வேறெருவரையும் நீ சந்திக்க வில்லையா?
உண்மை: ஆம், வெட்கம் 8 என்கிறவனைச் சந்தித்தேன். என் பிரயாணத்தில் குறுக்கிட்ட ஆட்கள் எல்லாரிலும் இவனுக்கு மாத்திரம் இந்தப் பேர் தகாது; மற்றவர்கள் எல்லாரையும் இரண்டொரு நியாயங்களில் கீழ்ப்படுத்தி விடலாம், இவனோ வெகு முரட்டு முகமுள்ளவன்; இவனை மடக்க எவராலும் முடியாது.
கிறி: அவன் உம்மிடத்தில் என்ன சொன்னான்?
உண்மை: அவன் என்ன? தேவ பக்தி என்னப்பட்டதையே அடியோடு மறுதலிக்கிறான். பக்தி, பக்தி என்று அதைக் கணிசமாக எண்ணி நாடுவதைப் போல கேவலமும், பரிதாபமும், நீசத்தனமு மானதும் ஒன்றும் இல்லையாம். இளகிய மனச்சாட்சி புருஷ லட்சணம் இல்லை என்று சொல்லுகிறான். ஒரு மனுஷன் அந்தந்தக் காலத்து அறிவாளிகளின் மனதுக்கு தோன்றுகிறபடி பல விஷயங் களையும் ஒப்புக் கொண்டு தன் மனம் கொண்டபடி துணிந்து செய்யாமல், நாள்தோறும், நாழிகைதோறும் தன் வார்த்தைகளையும், செய்கைகளையும் விலங்கு போட்டாற்போல் அவைகளின்மேல் கவனமாயிருந்து, ஓயாமல் அஞ்சி நடந்துவருகிறதைக் காண்கிறவர் களும் கேட்கிறவர்களும் சிரிப்பார்களாம். அதுவுமின்றி அவனுடைய அபிப்பிராயத்தைக் கனவான்களிலும், தனவான்களிலும், ஞானி களிலும் சிலர் மாத்திரம் உன்னைப்போல் அசட்டையாய் எண்ணின துண்டு என்றும் சொன்னான். அந்த கனவான்களும் தனவான்களுமான பெரியோருங்கூட பைத்தியக்காரராகி, ஒருவரும் அறியாத நன்மைக்காக கனம், தனம் யாவற்றையும் வேண்டும் என்று வெறுத்து விடுகிறார்களாம். (1 கொரி 1 : 26, 3 : 18, பிலிப்பியர் 3 : 7-9, யோவான் 7 : 18) எவர்கள் பரதேசிகள் ஆனார்களோ அவர்களெல் லாரும் அந்தந்தக் காலத்து நீசரும், பேதைகளும், இழிகுலத்தோரு மேயன்றி சாஸ்திரிகளும், அறிவாளிகளும், மேன் மக்களும் இல்லை என்றும் ஆட்சேபித்தான். உலகசாஸ்திரங்கள் ஒன்றும் அவர்களுக்குத் தெரியாதபடியினாலேதான் தேவ பக்தி, தேவ பக்தி என்று தலையோடு அடித்துக்கொள்ளுகிறார்கள் என்றும் சொன்னான். இவன் பின்னே நான் சொல்லும் விஷயங்களைப் பற்றி அதிகமாய் வற்புறுத்தி அநேக நேரம் ஆட்சேபித்துப் பேசினான். எப்படியெனில், ஒரு பிரசங்கத்தைக் கேட்கையில் துக்கமும், விhயகுல மனமுமாய் இருப்பது மகா வெட்கமாம். தேவாலயத்தை விட்டுப் பெருமூச்சோடும் மன உணர்வோடும் புறப்படுவதைப் போல நாணங்கெட்ட வேலை வேறொன்றுமில்லையாம். அற்ப சொற்ப குற்றங்களுக்காக ஒருவன் மற்றவனிடத்தில் மன்னிப்புக் கேட்கிறதையும், திருடின பொருளைத் திரும்பக் கொடுத்து விடுகிறதையும் போல் சுணையற்ற தன்மை வேறொன்றில்லையாம். அதுவுமன்றி அவன் பல துன்மார்க்கங்களைச் சிறந்த பேர்களால் வரிசையாய்ச் சொல்லிக்கொண்டு, இப்படிப்பட்ட சில செய்கைகள் பெரியோரிடத்தில் காணப்படுகிறதினால் ஒருவன் அவர்களை விட்டுத் தன்னைப் பிரித்துக் கொள்ளுகிறதும், தனவானும், தரித்திரனும், ஞானியும், மூடனும் ஒரே மார்க்கத்தை அநுசரிக்கிறதை யிட்டு சம அந்தஸ்து உண்டு என்கிறதுமான விஷயங்கள் பெரியோர் எண்ணத்தில் தேவ பக்தியை விரோதப்படுத்துமல்லவா? இவையெல் லாம் மெத்த வெட்கக் கேடில்லையா? என்று இப்படி எல்லாம் சொன்னான்.
கிறி: இப்படியெல்லாம் பேசின அவனுக்கு நீர் சொன்னது என்ன?
உண்மை: சொன்னதா? என்னத்தைச் சொல்ல என்றுகூட முதலாவது தெரியாமல் போயிற்று. அவ்விதமாய் என் மனதை அலைக்கழித்து விட்டான். என் இரத்தம் சிரசில் ஏறி முகம் எல்லாம் சிவந்து போயிற்று. என் மனதை மடிந்துபோகும்படிச் செய்தான் என்றே சொல்ல வேண்டும். கடைசியாக, மனுஷருக்குள்ளே மேன்மை யாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருக்கிறது, என்கின்ற சத்தியத்தை யோசிக்கும்படி ஆரம்பித்தேன். அப்புறம் நான் (லூக்கா 16 : 15) மனுஷர் இப்படி இருக்கின்றார்கள் என்று இந்த வெட்கம் என்பவன் சொல்லுகிறானேயன்றி, தேவன் எப்படிப்பட்டவர், அவருடைய வசனம் எப்படிப்பட்டது என்பதைக்குறித்து ஒன்றையும் சொல்லுகிறான் இல்லையே என்று உணர்ந்து கொண்டேன். பிற்பாடு என் மனதில் நாம் நடுத்தீர்வை நாளில் உலகத்தாருடைய தீர்மானங் களின்படியும் சொற்சாதுரிய எண்ணங்களின்படியும் நியாயந் தீர்க்கப்பட்டு ஜீவனை அல்லது சாவை நித்தியதீர்ப்பாகப் பெற்றுக் கொள்ளாமல், உன்னதமானவருடைய ஞானத்துக்கு ஏற்றபடி பிறக்கும் தீர்ப்பின்படி அல்லவா அடங்கிப்போக வேண்டியது என்ற எண்ணம் ஓடினது. ஆதலால் உலகம் முழுவதும் அல்ல அல்ல என்று சொன்னபோதினும், தேவன் சரி என்றால் அதுவே சரியான தீர்மானம் என்று என் மனதில் எழும்பிற்று. ஆண்டவர் தேவ பக்தியை விசேஷித்துக் கொள்ளுகிறார் என்றும், அவர் நல் மனச்சாட்சியை முக்கியப்படுத்துகிறார் என்றும், பரலோக ராஜ்யத்துக்காகத் தங்களைப் பைத்தியக்காரர் ஆக்கிக் கொள்ளுகிறவர்களே மற்றவர்களைப் பார்க்கிலும் ஞானிகள் என்றும், தேவனை நேசித்து வருகிற ஒரு ஏழைக் கிறிஸ்தவன் அவரைப் பகைத்துவருகிற ஒரு ஐசுவரிய வானைவிட பெரியவன் என்றும் நன்றாய் உணர்ந்து கொண்டு, அவனை நோக்கி, வெட்கம் என்பவனே! விலகி ஓடு, நீ என் இரட்சிப்பின் பகைஞனாய் இருக்கிறாய், என் ஆண்டவராகிய ராஜாவுக்கு விரோதமாக உன்னை நான் ஏற்றுக் கொள்ளலாமா? அப்படி உன்னை ஏற்றுக்கொண்டதுண்டானால் அவர் வெளிப்படும்பொழுது அவருடைய திருமுகத்தை நான் எப்படிப் பார்க்க கூடும்? அவருடைய வழிகளையும், அவருடைய ஊழியக்காரரையும் குறித்து இப்போ நான் வெட்கப்பட்டால், அவரால் ஆசீர்வாதத்தைப் பெறுவது எப்படி? என்று அவனுடன் மெத்தக் கண்டிப்பாய்ப் பேசினேன். என்னதான் சொன்னால் என்ன? அவனைப் போலொத்த துணிகரமான சர்வ சண்டாளனை நான் கண்டதில்லை. அவனைத் தொலைத்துவிட எவ்வளவாய் முயன்றாலும் அவன் பிரிகிறானா? என் நிழலைப்போல அவனும் தொடர்ந்து வந்து, தேவபக்தியாய் இருப்பதினால் உண்டாகும் அவமானங்கள், நஷ்டங்கள் முதலியவைகளைக் குறித்து ஓயாமலும் அதையும் இதையும் காதுக்குள் ஓதிக்கொண்டிருப்பான். கடைசியாக நான் அவனைப் பார்த்து: இந்தக் காரியத்தைக் குறித்து உன் மண்டையை உடைத்துக் கொள்ளுகிறதினாலே யாதொரு லாபமும் இல்லை ஏனெனில் நீ எவைகளைக் கனவீனம் என்று நினைக்கின் றாயோ அவைகளையே நான் கனம் என்று அறிந்து கொள்ளுகிறேன் என்று சொல்லி அவனை உதப்பினேன். அதோடு அவன் கண் மண்டை பிதுங்கிற்று என்றுசொல்லாம்; அவன் அப்புறம் என்னைவிட்டுத் தொலைந்தான். அவனைத் தொலைத்த உடனே நான்:
ஆனந்தக் களிப்பு
பக்தரை பலதொல்லை சுற்றும்-அவை எல்லாம்
மாமிச சம்பந்த மார்க்கமேயாக்கும்,
அலைமேலே அலைபோல என்றும்-ஓயாமல்
தொடருமே, பிடிக்குமே, தள்ளுமே முற்றும் – பக்தரை
மோட்ச பிரயாணிகளே நின்று-அவைகள்
மோசமோ, நாசமோ, ஷேமமோ என்று
விழிப்போடு கவனித்துக்கொண்டு-புருஷராய்
நடவுங்கள், நடவுங்கள் கிரீடமே உண்டு – பக்தரை
என்று ஆனந்தக் களிப்பு பாடிக்கொண்டு என் வழியே நடந்து வந்தேன் என்றான்.
கிறி: என் பிரியமுள்ள சிநேகிதனே! நீ பரம சண்டாளனாகிய வெட்கம் என்கிறவனை இவ்வளவு பலமாய் தாக்கி துரத்திவிட்டதற்காக நான் மிகவும் சந்தோசப்படுகிறேன். நீர் சொல்லுகிறபடி அவன் பேர் அவனுக்குத் தக்கதுதான். நாம் நடுத் தெருவில் நின்றாலும் நம்மை அவன் பின் தொடர்ந்து நாணங்கெடுக்கும்படி அஞ்சுகிறதில்லை, அதாவது நன்மையானதிலெல்லாம் நமக்கு வெட்கம் உண்டாகும்படி செய்கிறான்; அவனுக்கு சண்டித்தனமான குணம் இல்லாவிட்டால் இதைப்போல ஒருக்காலும் செய்யத் துணியமாட்டான். ஆனால் நாம் அவனை இன்னும் எதிர்த்து மடக்குவோமாக. இப்படி எல்லாம் அவன் கேட்கிறதினாலே தன்னை அதிக பைத்தியக்காரன் என்று ருசுப்படுத்துகிறானே அல்லாமல் மற்றொன்றும் இல்லை. “ஞான வான்கள் கனத்தை சுதந்தரிப்பார்கள், மதியீனரோ கனவீனத்தை அடைவார்கள்” (நீதிமொழிகள் 3 : 35) என்று ராஜனாகிய சாலொமோன் சொல்லுகிறார் என்றான்.
உண்மை: சத்தியத்திற்காக நித்தமும் ஜாக்கிரதையோடு போராடும் படி கற்பித்திருக்கிற ஆண்டவரை நோக்கி, வெட்கம் என்பவனை எதிர்த்துப் போராடும் பலத்தை அவர் நமக்கு அருளும்படி மன்றாட வேண்டியது.
கிறி: நீர் சொல்லுகிறது சரிதான், அந்தப் பள்ளத்தாக்கிலே வேறொருவரையும் நீர் சந்திக்கவில்லையா?
உண்மை: வேறொருவரையும் நான் சந்திக்கவில்லை, ஏனெனில் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும், அதின் பின் இருந்த மரணப் பள்ளத்தாக்கு முழுவதையும் நான் தாண்டி வரும் மட்டும் சூரியன் பிரகாசமாய் இருந்தது.
கிறி: அப்படியானால் உமக்கு ஷேமம்தான், எனக்கோ அங்கே விபரீதமான அநேக பொல்லாப்புகள் நேரிட்டன. நான் அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கி நடந்த உடனே அப்பொல்லியோன் என்கிற பூதத்துக்கும் எனக்கும் வெகுநேரமாய் ஒரு கடும் போர் நடந்தது. அவன் என்னைக் கொன்று போட்டான் என்றே நான் எண்ணினதுண்டு. அவன் என்னை கீழே விழத் தள்ளி என்மேல் ஏறிக்கொண்டு நசுக்கினபோது இன்று நான் செத்தேன் என்று தீர்மானமாய் நினைத்துக் கொண்டேன். அவன் என்னைக் கீழே தள்ளினபோது விழுந்த விசையில் என் கையில் இருந்த பட்டயம் தவறித் தூரத்தில் விழுந்துவிட்டது. அதைக் கண்ட அப்பொல்லியோன்: இனி ஏது நீ தப்புவது என்று முதலாய்ச் சொன்னான். ஆனால் நான் உடனே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டருளி, என் இடுக்கண்களி லெல்லாம் இருந்து என்னை இரட்சித்தார். அப்புறம் நான் மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியாய் நடந்து வந்தேன். அதின் பாதிதூரம் வரும் மட்டும் சுற்றிலும் இருட்டாய் இருந்தது.
அவ்விடத்திலேயே கொலை செய்யப்படுவேன் என்று திரும்பத் திரும்ப நினைத்தது உண்டு. கடைசியாக கிழக்கு வெளுத்துச் சூரியன் உதித்தது. அதுமுதல் மீதியான வழியை அதிக வருத்தமின்றி நடந்து கடந்துவிட்டேன்.
1. உண்மை: இது ஒரு கிறிஸ்தவனுடன் அறிமுகமாகிற பலத்த விசுவாசி ஒருவனைக் குறிக்கிறது.
2. கிறிஸ்தவர்களில் சிலர் வீண்புகழ்ச்சியை நாடி, தங்கள் நற்கிரியைகள் மற்றவர்களுடையதிலும் மிஞ்சிப்போக வேண்டும் என்று பிரயாசப்படும்போது, அவர்கள் தங்களைத் தாழ்த்தும்படி ஒரு விழுதல் உண்டாகிறது. பேதுரு தன்னை உயர்த்தின பின்பு இப்படிப்பட்ட ஒரு விழுதல் அவனுக்கு நேரிட்டது. (மத்தேயு 26 : 33)
3. மோகினி: இது காமவிகாரத்துக்கடுத்த சோதனையைக் குறிக்கிறது.
4. முதலாம் ஆதாம்: இது மாம்ச இச்சைக்கும், பொருளாசைக்கும், பெருமைக்கும் நம்மை ஏவுகிற பாவ சுபாவத்தைக் குறிக்கிறது.
5. மாம்சத்தை இறுக்கினது: இது மெய்க்கிறிஸ்தவர்களுடைய சன்மார்க்க கடமைகளுக்கும் பாவ ஆசைகளுக்கும் இடையில் உண்டாகிற போராட்டத்தைக் குறிக்கிறது.
6. மோசே: இது பாவ இச்சைகள் அனைத்தையும் ஆக்கினைக்குட்படுத்துகிற தேவனுடைய நியாயப் பிரமாணத்தைக் குறிக்கிறது.
7. நிரம்மியம். உண்மை உலகப்பிரகாரமான சிநேகிதரை இழந்து போனதையிட்டு துக்கப்படுகிறதான சோதனையில் விழுந்தானாம்.
8. வெட்கம் உண்மை மார்க்கத்தின் நிமித்தம் வெட்கப்பட்டுப் போனதால், மற்றவர்களுடைய தப்பிதங்களை அவர்களுக்கு எடுத்துக் காட்டி புத்தி சொல்ல வேண்டியது அவன் கடமையாய் இருந்தாலும் அப்படிச் செய்யாமல் இருக்கிற சோதனைக்குட்பட்டானாம்.