default-logo
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
(ஆமோஸ் 4:12)
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு

ஜாண் பன்னியன் (1628 – 1688)


ஜாண் பன்னியன் (1628 – 1688)


“பன்றியானது எவ்வளவுக்கு எவ்வளவு கொழுப்பாய் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது சேற்றை நாடுகிறது. எருது எவ்வளவுக்குக் கொழுத்திருக்கிறதோ அவ்வளவுக்கு அது கும்மாளம் போட்டுக்கொண்டு கொலைக் களம் போகிறது. சிற்றின்ப பிரியன் எவ்வளவுக்கு சுக ஜீவியாக இருக்கின்றானோ அவ்வளவுக்கு அவன் தீமையின் மேல் நாட்டம் கொள்ளுகின்றான். பட்டு கட்டி பகட்டாய்த் திரிய வேண்டும் என்று பெண்கள் பெரும்பாலும் ஆசைப்படுகின்றார்கள். தேவனுடைய பார்வைக்கு மதிப்பைக் கொடுக்கும் இலட்சணா அலங்காரமே பெண் அலங்காரம். ஒரு வருஷம் முழுவதிலும் ஓய்வில்லாமல் விழித்திருப்பதிலும் ஒரு இரவு கண் விழித்திருப்பது லேசான காரியம். அப்படியே மோட்ச பாக்கியம் பெறும்படி முடிவுபரியந்தம் பக்தியை விடாதிருப்பதிலும் ஆரம்பத்தில் கொஞ்ச காலம் பக்தியாய் இருப்பது இலகுவான காரியம். எந்த மாலுமியும் கடலில் கடும் புயல் அடிக்கையில் அற்ப பிரயோஜனமுள்ள பொருட்களை மனதார கடலில் எறிகிறது உண்டு. ஆனால் முதல்தரமான விலையேறப்பெற்ற பொருட்களை முதலில் எவன்தான் கடலில் எறிவான்? தேவனுக்குப் பயப்படுகிறவனே அல்லாமல் வேறொருவனும் அப்படிச் செய்யான். ஒரு சிறிய பொத்தல் (துவாரம்) பெருங்கப்பலையும் ஆழ்த்திப்போடும். ஒரு சிறிய பாவம் பாவியை நிர்மூலமாக்கிவிடும். சிநேகிதனை மறக்கிறவன் நன்றி கேடன். ஆனால் தன் இரட்சகரை மறக்கிறவனோ தன்னை நாசமாக்குகிறான். பாவத்திலே ஜீவித்துக்கொண்டு பரலோக பாக்கியம் பெற்றுக்கொள்ளுவேன் என்று எதிர்பார்க்கிறவன் முட்பூண்டுகளை விதைத்து நவதானியங்களை கழஞ்சியத்தில் சேர்ப்பேன் என்று நினைக்கிறவனுக்கு ஒப்பாய் இருக்கிறான். ஒருவன் மோட்ச பாக்கிய வாழ்வை பெறவேண்டுமானால் அவன் தன் மரண நாளை சதா தன் நினைவில் கொண்டு அதை ஒரு ஊன்று கோலைப்போல பயன்படுத்தி வரவேண்டும்” (மோட்ச பிரயாண புத்தகத்தில் ஜாண் பன்னியன் எழுதிய வரிகள்)

பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் “மோட்ச பிரயாணம்” என்ற உலகப்புகழ்பெற்ற கிறிஸ்தவ நூலை எழுதிய ஜாண் பன்னியன் என்ற பரிசுத்த தேவ பக்தன் இங்கிலாந்து தேசத்திலுள்ள பெட்ஃபோர்ட் நகருக்கு ஒரு மைல் தொலைவிலுள்ள எல்ஸ்டவ் என்ற கிராமத்தில் 1628 ஆம் ஆண்டு பிறந்தார். ஒரு காலத்தில் அவரது முந்தைய தலைமுறையினர் நிலச்சுவான்தார்களாக வாழ்ந்தபோதிலும் ஜாண் பன்னியனுடைய நாட்களில் அந்தச் செழுமையும், செல்வாக்கும் பறந்துபோய்விட்டது. ஏழையிலும் ஏழையாக வாழவேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார்.

ஜாண் பன்னியன், தகர டப்பாக்கள், கெட்டில்கள் போன்றவற்றை செய்யும் தகர வேலைக்காரன் தொழிலையே செய்து வந்தார். அவரது தந்தையும் கூட வெண்கல பாத்திரங்களை உருவாக்கும் ஒரு தொழிலாளிதான். ஜாண் பன்னியன் தனது எல்ஸ்டவ் ஊரில் மிகவும் அற்பமான கல்வியை கற்றுவிட்டு தான் கற்ற அந்த சிறிய படிப்பையும் கூட மறந்துவிட்டு நின்றுவிட்டார். மற்ற ஏழைகளின் குழந்தைகளைப்போன்றே ஏழையான எனது கல்வியும் அமைந்தது என்று பன்னியன் கூறுவதுண்டு. எல்ஸ்டவ் கிராமத்திலிருந்த ஜாண் பன்னியனுடைய வீட்டை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

பன்னியன் தன் இளமைக் காலத்தில் தன்னுடன் தனது இளமை நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு தனது கிராமத்தில் காட்டு மிராண்டித்தனமாக வாழ்ந்தார். அவரைப்போல பொய் புரளி பேசவும், சபிக்கவும், கொடுந்தூஷணம் சொல்லவும், ஆண்டவரை நிந்தனை செய்யவும் அவருக்கு இணையாக எவரும் இருக்க இயலாது. கண்ணிகள் வைத்து பட்சி பறவைகள் போன்றவற்றை வேட்டையாடுவது, மற்றவர்களின் பழத்தோட்டங்களை கொள்ளையிடுவது போன்றவற்றிலும் அவரது கரம் முதன்மையாக சேர்ந்திருந்தது. தங்கள் ஊர் தீயவர் கூட்டத்தின் கலகத் தலைவன் தலைமைப்பொறுப்பு தன் வசம்தான் இருந்ததாக அவரே சொல்லுவார். எல்ஸ்டவ் ஊரில் அனைவராலும் இழிவாகக் கருதப்பட்ட கற்பு நெறி தவறிய பெண்கள் கூட ஜாண் பன்னியனை காரி உமிழ்ந்து அருவெறுத்து பேசும் எல்லைக்கு அவரது நடத்தை சென்றது. தனது தீய கூட்டாளிகளுடன் சேர்ந்து நடனம் ஆடுவது அவருக்கு மிகவும் விருப்பமாகும். ஜாண் பன்னியன் படிக்கும் புத்தகங்கள் எப்பொழுதும் காதல் புத்தகங்களாகவேதான் இருக்கும். ஆனால், கர்த்தருடைய கிருபையால், அவர் ஒருக்காலும் விபச்சாரம், வேசித்தன பாவங்களில் விழவில்லை. சலங்கை மணிகளை கால் கரங்களில் கட்டிக்கொண்டு விளையாடுவது போன்ற விளையாட்டுகளை அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவார். கர்த்தருடைய பரிசுத்த ஓய்வுநாட்களில் “டிப்-காட்” என்ற ஒரு விளையாட்டை அவர் ஆர்வமாக விளையாடுவதுண்டு. “டிப்-காட்” என்பது நம் தமிழ் நாட்டில் சிறுவர்கள் விளையாடும் “கிட்டிப்புள்” என்ற “குச்சி-கம்பு” விளையாட்டாகும். இரு பக்கமும் கூர்மையாக சீவப்பட்ட ஒரு சிறிய குச்சியை தரையில் வைத்து கடினமான ஒரு சிறிய கட்டையால் தரையில் கிடக்கும் குச்சியின் ஒரு ஓரத்தை அடித்து எழுப்பி அடுத்த அடியால் அதனை தூரமாக செல்லப்பண்ணுவார்கள். அது மிகவும் சுவையான விளையாட்டாகும். அந்தக் கூர்மையான குச்சி அடிபட்டு எழுந்து செல்லும். அந்தக் குச்சியை பிடித்துவிட்டால் அதை அடித்த நபர் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அந்த விளையாட்டின் காரணமாக தங்கள் கண் பார்வையை இழந்து குருடரான சிறுவர்கள் பலர் உண்டு.

மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்

ஜாண் பன்னியன் மரணத்தின் பிடியிலிருந்து பல தடவைகளிலும் கர்த்தரால் அற்புதமாகப் பாதுகாக்கப் பட்டிருக்கின்றார். ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத அந்த நாட்களில் அவருக்கு மரணம் சம்பவித்திருந்தால் நிச்சயமாக அவர் நரகத்துக்குத்தான் சென்றிருக்க வேண்டும். எனினும் தேவனுடைய அநாதி கிருபை அவரைப் பாதுகாத்தது. ஒரு சமயம் மலைகளுக்கு இடையேயுள்ள குறுகலான கடற்கழியில் விழுந்து நிச்சயமான மரணத்தின் பிடியிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார். பெட்போர்ட் நகரத்திலுள்ள நதியில் படகிலிருந்து ஒரு தடவை தவறி விழுந்தும் நீரில் மூழ்கிவிடாமல் கர்த்தரால் அற்புதமாக காக்கப்பட்டார். ஒரு தடவை அவர் தனது நண்பனுடன் வயல் வெளியில் நின்று கொண்டிருக்கையில் ரஸ்தாவில் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பைக் கண்டார். கையில் நல்ல வலுவான கம்பு இருந்ததால் விரைந்து ஓடிச்சென்று அதை முதுகில் பலமாக அடித்து அதை ஓட இயலாமல் செய்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை. தனது கம்பால் அதின் வாயைத்திறந்து அதின் விஷப்பல்லை தனது மதியீனத்தால் பிடுங்கி எடுக்க முயற்சித்தார். தனது முழுமையான முட்டாள்தனத்தால் தனது சாவை ஒரு நொடிப்பொழுதில் தனக்கு வரவழைத்துக் கொள்ள இருந்த இடத்தில் அவரை அதிகமாக நேசித்த அவருடைய அன்பின் தேவனுடைய கரம் அவரை அதிசயமாகப் பாதுகாத்துக்கொண்டது.

பன்னியன் தனது வாழ் நாள் முழுவதும் தன் ஆண்டவருக்கு நன்றி ஸ்தோத்திரம் ஏறெடுத்துக்கொண்டே இருக்கத்தக்கதான ஒரு அசாதாரண சம்பவம் அவரது வாழ்வில் நிகழ்ந்தது. அப்பொழுது அவர் ராணுவத்தில் இருந்தார். ஒரு இடத்தை அவரது படைப் பிரிவு முற்றுகையிட வேண்டுமென்பது மேலிடத்து கட்டளை. அவர் அதற்கு ஆயத்தமாகி போக தயாராகிக் கொண்டிருந்தபோது அவருடைய ஸ்தானத்தில் அவரது கூட்டாளி ஒருவன் அவருடைய சம்மதத்துடன் சென்று முற்றுகையிட்ட இடத்தில் காவலாளியாக நின்று கொண்டிருந்தான். அப்படி நின்று கொண்டிருந்த அவனது தலையை எதிரியின் நாட்டுத் துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு ஒன்று துளைத்துச் சென்றுவிட்டது. அந்த இடத்திலேயே அவன் துடிதுடித்து மாண்டான். தான் துடிதுடித்துச் சாக வேண்டிய இடத்தில் தனது நண்பன் மடிந்ததை அவர் மிகுந்த கண்ணீரோடு நினைவுகூர்ந்தார். இவைகள் எல்லாம் நடைபெற்றபோதினும் பன்னியன் மனந்திரும்பாமல் இன்னும் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்து கொண்டும், தேவனுடைய கிருபைக்கும், இரக்கத்துக்கும், அன்புக்கும் எதிராக கலகம் பண்ணிக் கொண்டும் தனது இரட்சிப்பின் காரியத்தைக் குறித்து மிகவும் அசட்டை செய்து கொண்டும் தனது காலத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார்.

தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்

ஜாண் பன்னியன் சிறு வயதிலிருந்தே பயங்கரமான கனவுகளைக் கண்டு வந்தார். ஆண்டவருடைய இரண்டாம் வருகை வருவதைப் போலவும், ஆயத்தமானோர் அவரால் மத்திய ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதையும், பாவத்தில் ஜீவிக்கும் அவர் தேவனால் கைவிடப்படுவதையும் கண்டு படுக்கையில் அலறுவார். அவரது பாவச் செயல்கள் அதிகரிக்க, அதிகரிக்க அவர் காண்கின்ற சொப்பனங்களும் அவரை கதி கலங்கப்பண்ணுவதாக இருந்தன. சாத்தானாம் பிசாசு அவரை சங்கிலிகளால் கட்டி நரக பாதாளத்தில் தள்ள அவனது கரங்களில் கொண்டு வந்த இரும்பு சங்கிலிகளின் சலசலக்கும் ஓசையைக் கேட்டு ஒரு சொப்பனத்தில் அவர் வேர்த்து வியர்த்து நடுநடுங்கி திகைத்து எழும்பினார். தனது மற்றொரு சொப்பனத்தில் அடித்தளமே காணப்படாததான நரக தீச்சூளை தனக்கு முன்பாக திறந்திருப்பதைப் பார்த்து ஓலமிட்டுப் புலம்பினார்.

தான் மனந்திரும்ப வழி வகுத்துக்கொடுத்த ஒரு சம்பவத்தை ஜாண் பன்னியனே தமது சொந்த வார்த்தைகளால் நமக்கு விளக்குகின்றார்:- “கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டியதன் அவசியத்தை அன்று குருவானவர் ஆலயத்தில் அத்தனை கண்டிப்பாகப் பேசினார். அந்த நாளில் வேலை செய்வதோ, விளையாடுவதோ மற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் பொழுதைப் போக்குவதோ கண்டிப்பாகக் கூடாது என்று திட்டமும் தெளிவுமாக அவர் பேசினார். “அவரது தேவச்செய்தி என் உள்ளத்தைத் தொட்டது. எனது பாவக்குற்றங்களை உணர்ந்து இனிமேல் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு வீட்டுக்கு வந்த நான் நன்றாக சாப்பிட்டுவிட்டு உணர்வற்ற மிருகம் போல “டிப்-காட்” விளையாட்டு விளையாட தெருவுக்குச் சென்று தீவிரமாக எனது ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். எனக்கு முன்னால் தரையில் கீழே கிடந்த இருபுறமும் கூர்மையான குச்சியை எனது கரத்திலிருந்த கடினமான சிறிய கட்டை கம்பால் ஒரு தடவை அடித்து, மேலே எழும்பிய அந்தக் குச்சியை அடுத்த அடியால் வெகு தொலைவுக்கு செலுத்த முயன்றபோது “உன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு மோட்சம் செல்லுவாயா? அல்லது பாவங்களைச் செய்து நரக பாதாளம் செல்லப்போகின்றாயா?” என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் கூர்மையான அம்பைப்போல எனது இருதயத்தை ஊடுருவிச் சென்றது. என்னோடு பேசிய ஆண்டவரின் பரலோக வார்த்தையால் நான் தாக்குண்டு இனி பாவத்தில் நீடித்தால் அழிவே நமது பங்காகிவிடும் என்ற பயத்தால் நான் இரட்சிப்பைத் தேட ஆரம்பித்தேன்” என்கின்றார் ஜாண் பன்னியன்.

ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது

ஜாண் பன்னியன் ஒரு தேவ பக்தியுள்ள ஏழை மனிதரின் மகளை திருமணம் செய்தார். அந்தப் பெண்மணி தன்னுடன் சீதனமாகக் கொண்டு வந்த பொருட்கள் ஒரு சாப்பிடும் தட்டும் ஒரு கரண்டியுமாகும். அத்துடன் அந்தப் பக்தியான பெண் இரண்டு அருமையான கிறிஸ்தவ ஆவிக்குரிய புத்தகங்களையும் கொண்டு வந்திருந்தார்கள். “பக்தி வாழ்வை அப்பியாசித்தல்” “மனிதனை பரலோகத்துக்கு அழைத்துச் செல்லும் பாதை” என்ற அந்த இரண்டு புத்தகங்களும் பாவத்தில் ஜீவித்த பன்னியனை பக்தி வாழ்வுக்கு அடி எடுத்து வைக்க பெரிதும் கை கொடுத்து உதவின. எனினும், இந்தப் புத்தகங்கள் மாத்திரம்தான் அவரை இரட்சிப்புக்குள் வழிநடத்தினது என்று நாம் சொல்ல இயலாது.

பரிசுத்த குருவானவர் ஜாண் ஹிஃபோர்ட்

ஜாண் பன்னியனை ஆண்டவருடைய இரட்சிப்பின் நிச்சயத்துக்குள்ளும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்துக்குள்ளும் வழிநடத்தியவர் பெட்ஃபோர்ட் நகரத்துப் பரிசுத்த குருவானவர் ஜாண் ஹிஃபோர்ட் என்பவராவார். ஜாண் ஹிஃபோர்ட் தனது வாழ்க்கையை ஒரு போர் வீரனாக ஆரம்பித்தார். வாழ்வில் அவர் துஷ்டனும், துன்மார்க்கனும், சூதாட்டக்காரனும், ஊறிப்போன குடிகாரனுமாக இருந்தார். ஊதாரித்தனமாக வாழ்ந்த அவருடைய வாயிலிருந்து கடல் மடை திறந்தது போல ஆணையிடுதல்கள் அவலட்சணமான தூஷண வார்த்தைகளோடு புறப்பட்டு வரும் என்று அவரை அறிந்தவரான ராபர்ட் சவுதே என்பவர் கூறுகின்றார். ஜாண் ஹிஃபோர்ட் தான் வாழ்ந்த பெட்ஃபோர்ட் பட்டணத்திலுள்ள பியூரிட்டான்கள் (Puritans) என்று அழைக்கப்பட்ட பிராட்டஸ்டண்ட் பரிசுத்த பக்தர்களை இம்சிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர்களின் தலைவனான அன்றோணி ஹாரிங்டன் என்பவரை கொலை செய்ய அவர் வெகுவாக முயற்சித்தார்.. தெய்வாதீனமாக அந்த பக்தன் கர்த்தரால் காக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் உள் நாட்டுப் போர் நடந்த சமயம் ஜாண் ஹிஃபோர்ட் அரசருடைய படையில் சேர்ந்திருந்தார். மன்னருக்கெதிரான படையின் தளபதி ஒருவன் ஜாணை எதிர்பாராதவிதமாக கைது செய்து அவருடன் சேர்ந்த சிலரையும் அடுத்த நாள் தூக்கிலிட்டு கொல்ல பாதுகாப்பான ஒரு இடத்தில் கொண்டு வைத்திருந்தான். அதைக் கேள்விப்பட்ட ஜாண் ஹிஃபோர்டின் உடன் பிறந்த சகோதரி தனது உயிரையும் துச்சமாக மதித்து அவர் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நள்ளிரவு நேரம் சென்றார். தனது சகோதரனை பாதுகாத்துக் கொண்டிருந்த காவலர்கள் நன்கு மதுபானம் குடித்து மயங்கிக்கிடந்த அந்த நேரத்தில் அவரை ஓசைப்படாமல் அழைத்து வந்துவிட்டார். அடுத்து வந்த மூன்று நாட்கள் ஜாண் ஹிஃபோர்ட் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஆழமான ஒரு நாற்ற சாக்கடைத் தண்ணீருக்குள் மூழ்கி இருக்க வேண்டியதானது. ஆண்டவரின் பாதுகாவலின் கரங்கள் நிச்சயமாக அவரோடு இருந்தபடியால் தான் சந்திக்க வேண்டிய முழு நிச்சயமான மரண தண்டனையிலிருந்து ஆச்சரியம் அற்புதமாக தப்பிக் கொண்டார்.

அதின் பின்னர் ஜாண் ஹிஃபோர்ட் என்பவர் ராபர்ட் போல்ற்றன் என்ற பரிசுத்தவான் எழுதிய ஒரு பக்தியுள்ள புத்தகத்தை வாசித்து ஆழமான மனந்திரும்புதலுக்குள் கடந்து வந்தார். அதின் பின்னர் அநேகரை நீதிக்குட்படுத்தும் பரிசுத்த குருவானவராக பெட்ஃபோர்ட் பட்டணத்து தேவாலயத்தில் பணி புரிந்தார். இரட்சிப்பைக் கண்டடையும் விஷயத்தில் நிலை தடுமாறிக் கொண்டிருந்த ஜாண் பன்னியனை சில தேவ பிள்ளைகள் தங்கள் குருவானவராகிய ஜாண் ஹிஃபோர்ட்டிடம் அழைத்து வந்து இரட்சிப்பின் வழியையும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தையும் கண்டு கொள்ள வகை செய்தனர்.

கர்த்தருடைய இரட்சிப்பைக் கண்டடைந்த ஜாண் பன்னியனை தேவன் தமது வல்லமையான பாத்திரமாக ஆரம்பம் முதலே பயன்படுத்த தொடங்கினார். “ஜாண் பன்னியன் நல்ல உயரமான மனிதர். அவரது தலை முடி சுருள் சுருளாக செந்நிறமாகவும், அவரது கண்கள் பளிச்சிட்டு மின்னுவதாகவும் இருக்கும். அவரது நெற்றி உயரமானதாகவும், அவரது முகப்பார்வை உறுதியானதும், கோபம் கொண்டோனைப்போல காணப்படுவதாயினும் அவர் பேசத் தொடங்கிவிட்டால் அவரில் அன்பும், தாழ்மையும், எளிமையும் பாய்ந்தோட ஆரம்பித்துவிடும். பிரசங்க பீடத்தில் நின்று பன்னியன் பிரசங்கிக்கும்போது அவரது தேவச்செய்தியும், பாவனைகளும் மிகுந்த பக்தி வினயமாக இருக்கும். “தேவனுக்குப் பயப்படாமல் தங்கள் பாவங்களில் வாழ்வோருக்கு அவரது தேவச் செய்தி பயங்கரமான மின்னல் தாக்குதல் போல அத்தனை எச்சரிக்கையாக இருக்கும்” என்று அவரது நண்பர்களில் ஒருவர் கூறினார்.

ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்

ஜாண் பன்னியன், ஒரு வேதாகம ஆசிரியரும், பிரசங்கியாருமாவார். ஆனால், அது அவருக்கே தெரியாது. அவர் எந்த ஒரு வேதாகம கல்லூரிக்கும் சென்று திருமறை பயின்றவர் அல்ல. அவர் தேவ வல்லமையால் நிறைந்திருப்பதை அவருடைய தேவச்செய்திகளைக் கேட்ட மக்கள் அவரில் கண்டு அவருக்குத் தெரிவித்தனர். அவர் தனது முயற்சிகளில் கிட்டத்தட்ட நம்பிக்கையிழந்து போகும் கடைசி கட்டம் வரை செல்ல வேண்டியதானது. எரிகின்ற தீச்சூழையின் அக்கினி ஏழு மடங்கு ஜூவாலித்து எரியவும், அதின் ஊடாக தேவன் அவரை கடந்து செல்லவும் பண்ணினார். அந்த அக்கினியின் ஊடாக தேவ குமாரனை அவர் கண்டுகொள்ளும் வரை அவரை அழைத்துச் சென்றார். இறுதியில் அவர் கண்களிலிருந்து செதில்கள் விழுந்தன. ஜாண் பன்னியன் தனது ஆண்டவர் இயேசுவைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.

அவரை அறிந்து அவருடன் ஐக்கியம் கொண்டிருந்த பெட்ஃபோர்டிலுள்ள கிறிஸ்தவ தேவ மக்கள் ஜாண் பன்னியன் மனந்திரும்பிய சாதாரண ஒரு விசுவாசி அல்ல என்றும் வெறுமனே தண்ணீரில் மூழ்கிமட்டும் அவர் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டவரல்ல என்றும் பெந்தேகோஸ்தே நாளின் அக்கினி அபிஷேகம் அவரில் அமர்ந்தருப்பதையும் அவர்கள் திட்டமாகக் கண்டு கொண்டார்கள்.

தனது பாதங்களண்டை பக்தி வினயத்தோடு அமர்ந்து தேவனுடைய வார்த்தைகளைக்கேட்க மிகவும் வாஞ்சை கொண்ட மக்களுக்கே மிகவும் மனத்தாழ்மையுடன் ஜாண் பன்னியன் கர்த்தருடைய வார்த்தைகளை விளக்கிக் கூறுவார். அதைச் செய்ய விரும்பும் மக்கள் ஜாண் பன்னியனை முதலாவது மிகவும் வேண்டி விரும்பி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். பெருங்கூட்டங்களில் தேவனுடைய செய்தியைக் கொடுப்பதைவிட சொற்பமாகக் கூடி வரும் சிறு சிறு கூட்டங்களில் பேசவே அவர் அதிகமாக விரும்புவார். எனினும், இரண்டு பெரிய தேவாராதனைக் கூட்டங்களில் அவர் ஒழுங்காக பேசி வந்தார். அவருடைய பிரசங்கங்களைக் கேட்ட மக்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு நன்றி கூறி அவரைத் துதித்து மகிமைப் படுத்தினார்கள்.

எந்த ஒரு தீர்க்கத்தரிசிக்கும் அவனது சொந்த ஊரில் கனம் இல்லை என்பதை அறிந்திருந்த காரணத்தினாலோ என்னவோ ஜாண் பன்னியன் தனது சொந்த இடங்களான எல்ஸ்டவ் மற்றும் பெட்ஃபோர்ட் இடங்களில் அதிகமாகப் பிரசங்கித்ததாகத் தெரியவில்லை. ஆனால், சுற்றியுள்ள பல இடங்களிலும் அவர் பிரசங்கித்து திரளான மக்களை கர்த்தரண்டை வழிநடத்தினார். அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட தேவனுடைய வார்த்தைகளைக் கேட்ட மக்கள் அந்த நாட்களில் சமீபத்திலும், தூரத்திலுமாக இருந்து வந்து நூற்றுக்கணக்கில் திரண்டனர். “மனுமக்களின் பாவங்களுக்கு எதிராகவும், அந்தப் பாவங்களின் காரணமாக அவர்கள் சந்திக்கப்போகும் பயங்கரமான நித்திய நியாயத்தீர்ப்பினை நினைத்தவனாகவும் நான் இரண்டு வருடங்கள் அழுதுகொண்டே சுற்றித்திரிந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்” என்று ஜாண் பன்னியன் ஒரு தடவை கூறினார்.

“நான் பிரசங்கிக்கும்போது என் இருதயம் அடிக்கடி “தேவனே, உம்முடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் உம்முடைய ஜனங்கள் ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளுவார்களாக” என்று தனக்குள்ளாக கூக்குரலிடும்” என்று அவர் சொல்லியிருக்கின்றார்.

தேவன் அவருடைய ஊழியத்தை ஆசீர்வதித்து தம்முடைய தாசனை தேவனுடைய வசனங்களைக் குறித்த ஆழமான அனுபவங்களுக்குள் வழிநடத்திச் சென்றார். பரிசுத்த ஆவியானவர் தனக்கு எதைப்போதித்தாரோ அதையே அவர் தேவனுடைய ஜனங்களுக்குப் பிரசங்கித்தார். மக்களுக்கு தேவனுடைய செய்தியைப் பிரசங்கிக்கும்போது மெய்யாகவே ஒரு தேவ தூதன் தன்னருகில் நின்று கொண்டு தன்னைப் பெலப்படுத்தி, தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதை தான் நன்றாக உணர்ந்து கொள்ள முடிவதாக அவர் ஆச்சரியத்துடன் சொல்லுவார். தனது பிரசங்கங்களில் தான் பேசிய சத்தியங்களை குறித்து தான் நம்புவதாகவோ அல்லது விசுவாசிப்பதாகவோ அல்லது இப்படித்தான் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டுச் சொல்லாமல் தான் கொடுத்த சத்தியம் மெய்யான தேவ சத்தியமே என்று உறுதியிட்டுப் பேசுவார்.

மக்களுக்கு தான் பிரசங்கிக்கப்போகும் பிரசங்கங்களை அவர் முன்கூட்டியே எழுதி ஆயத்தம் செய்து அதை மிகவும் கவனமாக வாசித்துக்கொள்ளுவார். எந்த ஒரு நிலையிலும் ஆயத்தமில்லாமல் அவர் பிரசங்கபீடம் ஏறமாட்டார். பிரசங்கித்திற்கான குறிப்புகள் அவர் கைவசம் இருக்கும். தனது பிரசங்கங்களில் அரசியல் சம்பந்தமான எந்த ஒரு விஷயத்தையும் அவர் குறிப்பிடுவதில்லை. “தனது பிரசங்கங்களின் குறிப்புகளை எல்லாம் யாராவது விரும்பிக்கேட்கும் பட்சத்தில் அவைகளைக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அவைகள் எல்லாம் ஆத்துமாக்களின் இரட்சிப்பையே மையமாக கொண்டிருப்பதை அவர்கள் காண முடியும்” என்று அவர் ஒரு தடவை சவால் விட்டுப் பேசினார்.

பன்னியன், தான் மக்களுக்கு பிரசங்கிக்கும் தேவச்செய்திகளை பிரசங்கம் செய்து முடிந்ததும் பத்திரமாக எழுதி வைத்துக்கொள்ளும் சிறந்த பழக்கத்தை தன் வசம் வைத்திருந்தார். அதின் காரணமாக அவருடைய எழுத்துக்கள் புத்தகங்களாக அச்சிடப்பட்டு நமக்குக் கிடைத்திருக்கின்றன. “நஷ்டப்பட்ட பாவியின் துயரப் புலம்பல்கள்” என்ற நரகத்திலிருந்து ஐசுவரியவான் எழுப்பிய வியாகுலங்களை ஐசுவரியவான்-லாசரு சரித்திரத்திலிருந்து (லூக்கா 16 ஆம் அதிகாரம்) அதை வாசிக்கும் எவரும் நடுநடுங்கும் விதத்தில் பிரமிக்கத்தக்கவிதமாக எழுதியிருக்கின்றார். அப்படி அவர் தனது பிரசங்கங்க குறிப்புகளைக் கொண்டு எழுதிய புத்தகங்கள் அநேகமாகும். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

ஜாண் பன்னியன் விரும்பியிருப்பாரானால் இங்கிலாந்து தேசத்திலேயே ஒரு புகழ்பெற்ற பிரசங்கியாராக ஆகியிருக்கலாம். அவரை வந்து பேசும்படியாக இங்கிலாந்தின் பெரிய பெரிய பட்டணங்களிலிருந்த தேவாலயங்கள் எல்லாம் அவருக்கு அழைப்புகள் அனுப்பின. ஆனால் தேவ மனிதர் அவைகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டத்திற்கு வந்து பேசுவதற்கு முன்னால் அதற்கான பணத்தை திட்டமாகப் பேசிச்செல்லும் பிரசங்கியார்களைப்போல இல்லாமல் அப்படிப்பட்ட கூட்டங்களில் சென்று பேசுவதானால் தனக்கு அதிகமான பணம் கிடைக்கும் என்றும் அதினால் தனது தற்போதைய எளிய நிலை மாறி ஐசுவரியவானாக உயர்ந்துவிடும் என்றும் அதின் மூலம் தான் பெற்ற தேவனுடைய அளவற்ற கிருபையின் ஐசுவரியத்தை இழக்க நேரிடும் என்று அஞ்சி அப்படிப்பட்ட பெருங்கூட்ட அழைப்புகளை எல்லாம் அவர் திட்டமாக மறுத்து உதறித் தள்ளினார்.

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் அந்த நாட்களில் துணை வேந்தராக (Vice-Chancellor) இருந்த மா மேதையும், ஒப்பற்ற ஞானவானும், சிறந்த தேவ பக்தனுமான ஜாண் ஓவன் என்பவரிடம் அந்நாட்களில் இங்கிலாந்து தேசத்தை அரசாண்டு கொண்டிருந்த 2 ஆம் சார்லஸ் மன்னர் ஒரு சமயம் “ஜாண் பன்னியனுடைய பிரசங்கங்களைக் கேட்க நீங்கள் அடிக்கடி ஏன் செல்லுகின்றீர்கள்? ” என்று கேட்டபோது “பெட்போர்ட் தகரக்காரர் (Tinker) ஜாண் பன்னியனைப்போன்று கிறிஸ்து இரட்சகரைப் பிரசங்கிக்கும் திறமையை அவர் என்னிடம் பண்டமாற்று செய்து கொள்ள முடியுமானால் எனக்குள்ள அனைத்து கல்வி ஞானங்களையும், தாலந்துகளையும் நான் அவருக்கு மிகவும் சந்தோசத்துடன் கையளிக்க ஆவலாக இருக்கின்றேன்” என்று மன்னர் வியப்பில் ஆழ்ந்து போகும் வண்ணம் சொன்னார்.

ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை

ஜாண் பன்னியனின் 60 ஆண்டு கால பூலோக வாழ்க்கையில் முழுமையான 12 (பன்னிரண்டு)ஆண்டு காலத்தை அவர் தனது கர்த்தருக்காக சிறைக்கூடத்திலேயே செலவிட வேண்டியதாக இருந்தது. அப்படி 12 ஆண்டு கால சிறைவாசத்தை அனுபவிக்க அவர் எத்தனையானதொரு கொலை பாதகச் செயல் செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இல்லவே இல்லை, தேவனுடைய இரட்சிப்பின் மாட்சிமையான சுவிசேஷ சத்தியத்தை அந்த நாட்களில் இங்கிலாந்து தேச புராட்டஸ்டண்ட் சபையின் தேவாலயங்களில் பிரசங்கிக்க தடை செய்யப்பட்டிருந்தபடியால் தெருக்களிலும், சந்தை வெளிகளிலும், புல்மைதானங்களிலும், பண்ணை வீடுகளின் தானிய சேமிப்பு கிடங்குகளிலும், மக்கள் கூட்டம் எங்கெங்கெல்லாம் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் சென்று மக்களுக்கு பிரசங்கித்தபடியாலும், இங்கிலாந்து தேச திருச்சபையினர் தங்கள் தேவாலயங்களில் பயன்படுத்தும் “பொதுவான ஜெப புத்தகத்தை” (Common Prayer Book) அவர் ஏற்றுக் கொள்ளாததாலும், அதை பயன்படுத்த மறுத்ததாலும் அந்த நீண்ட கால சிறை வாழ்க்கை அவருக்கு கிடைத்தது.

17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தின் சிறைக் கூடங்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அவர் அடையுண்டு கிடந்த பெட்போர்ட் சிறைக்கூடத்தில் குளிர் காய எந்த ஒரு கணப்பு அடுப்புகளும் இல்லாதிருந்தது. சிறைக் கைதிகள் தரையில் போடப்பட்டிருந்த வைக்கோற் புல்லின் மேல் படுத்திருந்தனர். கழிப்பிட வசதிகளைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அவர் அந்த இருளான சிறைக்கூடத்தில் பட்ட பாடுகளையும், துயரங்களையும் அதிகமாகப் பொருட்படுத்தாமல் தனது வீட்டில் இருந்த மனைவி மற்றும் பிள்ளைகளைப் பற்றித்தான் குறிப்பாக தனது கண் பார்வையை இழந்து குருடாக இருந்த சின்ன மகள் மேரியை எண்ணிக் கலங்கினார். அவர் அடையுண்டு கிடந்த சிறைக்காவலனுக்கு பணம் கொடுப்பதன் மூலமாக சில சிறிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்த விசயத்தில் பெட்போர்ட்டிலுள்ள ஜாண் பன்னியனை அதிகமாக நேசித்த அவரது தேவ பக்தியுள்ள நண்பர்களும், கர்த்தருடைய பிள்ளைகளும் சிறைக் காவலர்களுக்கு உதவி செய்து வந்தனர். அதின் காரணமாக அவர் தனது சிறைக்கூட அறையை விட்டுவிட்டு அவ்வப்போது தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பெட்போர்ட்டை சுற்றியுள்ள இடங்களுக்குச் சென்று வந்தார். ஒரு தடவை தேவ தயவால் அவர் லண்டன் பட்டணம் வரை கூட போய் வந்தார். ஆனால் இவை எல்லாவற்றிலும் தேவனுடைய பாதுகாவலின் கரம் அவருடன் கூட இருந்தது என்பதை நாம் மறப்பதற்கில்லை.

ஒரு நாள் இரவில் அவர் தனது மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக சிறைக்கூட காவலரால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீடு சென்ற ஜாண் பன்னியன் குடும்பத்தினருடன் ஓரிரு மணி நேரங்கள் இருந்த பின்னர் கர்த்தருடைய ஆவியானவர் அவரை உடனடியாக சிறைக்கூடத்திற்கு திரும்பிச் செல்ல ஏவினார். ஆவியானவரின் தூண்டுதலை உணர்ந்த அவர் மிகவும் விரைவாக தனது சிறைக்கூட அறைக்கே திரும்பி வந்துவிட்டார். அவர் வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள்ளாக அவரது எதிரிகளான இங்கிலாந்து தேச மன்னரின் ஆட்கள் பட்டணத்தின் உயர்ந்த காவல் துறை அதிகாரிகளுடன் சிறைக்கூடத்திற்கு வந்துவிட்டனர். ஜாண் பன்னியன் சிறையில் இருக்கின்றாரா என்பதை கேட்டறிந்த அவர்கள் தாங்களாகவே நேரில் சென்று அங்கு அவர் இருப்பதைக் கண்டு திருப்தியுடன் சென்றனர். அந்த இரவு முழுவதுமே ஜாண் பன்னியனை அவருடைய வீட்டில் இருந்துவிட்டு அடுத்த நாள் காலையில்தான் வருவதற்கு சிறைக்காவலர் கேட்டிருந்தார். ஆனால், தேவ நடத்துதல் அவரை உடனே திரும்பி வரச் செய்ததால் பெரிய தண்டனையிலிருந்து அவர் தப்பிக் கொள்ள முடிந்தது.

தனக்கு விரோதமாக இங்கிலாந்து தேச மன்னரே இருப்பதை உணர்ந்த பன்னியன் எப்படியாவது ஒரு நாள் தனக்கு நிச்சயமாகத் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்பதை எதிர்நோக்கியிருந்தார். ஆனால், தேவன் அவரை தூக்குத் தண்டனையிலிருந்து காத்துக்கொண்டார். சிறைக்கூடத்தில் இருக்கும்போது அவர் தனது கரிய நிழல் உருவத்தை சுவரில் பார்க்கும்போதெல்லாம் தன்னை துரிதமாகச் சந்திக்கப் போகும் மரணமே அது என்று எண்ணிக் கொண்டிருந்ததாக எழுதியிருக்கின்றார். சிறைக்கூடத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் நிலையில் தன்னைக் காண வந்திருக்கும் தனது மனைவியையும், அருமைக் கண்மணி பிள்ளைகளையும் சந்திக்கும் கண்ணீரின் காட்சியை படத்தில் நீங்கள் காண்கின்றீர்கள். தனது பிள்ளைகளில் ஒன்றை அவர் கட்டி அணைத்துப் பிடித்து முத்தமிடுவதையும் நாம் ஆறாத் துயரத்துடன் காண்கின்றோம்.

பெட்போர்ட் சிறைக்கூடத்திலிருந்த ஜாண் பன்னியனுக்கு கர்த்தருடைய பரிசுத்த வேதாகமமும், ஜாண் ஃபாக்ஸ் என்ற பரிசுத்த பக்தன் எழுதிய “இரத்த சாட்சிகளின் வரலாறு” (Fox’s Book of Martyrs) என்ற புத்தகமும், மார்ட்டின் லூத்தர் எழுதிய வேத வியாக்கியான புத்தகமும் மிகவும் பயனுள்ளவைகளாக இருந்தன. தனது சிறைவாச காலத்தின் பெரும் பகுதியை அவைகளை வாசிப்பதிலேயே அவர் செலவிட்டார். கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை அவர் எத்தனை தடவைகள் முழுமையாக வாசித்திருப்பார் என்பதைப் பற்றிய தகவல்கள் நமக்கு இல்லாத போதினும் அந்த தேவ மனிதர் அதை பல நூறு தடவைகள் வாசித்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்தபடியாக கிறிஸ்தவ உலகம் போற்றும் “மோட்ச பிரயாணம்” என்ற பரிசுத்த பிரபந்தத்தை இந்த பெட்போர்ட் சிறைக்கூடத்தில் இருந்தபோதுதான் ஜாண் பன்னியன் எழுதினார். வேதாகமத்தைப் போன்றே மோட்ச பிரயாணமும் உலகத்தின் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதின் ஒரே காரணம், மோட்ச பிரயாணம் புத்தகம் முழுமையும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. மோட்ச பிரயாண புத்தகத்தை வாசிப்போர் பரிசுத்த வேதாகமத்தின் நறுமணம் அதின் ஒவ்வொரு பக்கங்களிலும் வாசனை வீசி பரிமளித்துக் கொண்டிருப்பதை கண்டு கொள்ளலாம். ஜாண் பன்னியன் உயிரோடிருந்த காலத்திலேயே அது பல தடவைகள் அச்சுப் பதிக்கப்பட்டதுடன் அநேக ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது.

ராட்சத தேவ மனிதரும், பிரசங்க வேந்தருமான சார்லஸ் ஸ்பர்ஜன் என்பவர் மோட்ச பிரயாண புத்தகத்தை 100 தடவைகள் முழுமையாக வாசித்து கர்த்தருக்குள் ஆனந்தித்திருக்கின்றார் என்றால் நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! அந்த பக்த சிரோன்மணி அதைக்குறித்துக் கூறும்போது நீங்கள் “மோட்ச பிரயாணம்” புத்தகத்தில் எந்த இடத்தில் ஊசியால் குத்தினாலும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை என்ற BIBILINE அதிலிருந்து சுரந்து வருவதை நீங்கள் காணலாம் என்று கூறினார். பூமாலைகள் பின்னும் பூக்கடைக்காரர் வாசமிகும் வண்ண வண்ண மலர்களால் தனது மாலையை உருவாக்குவதுபோல ஜாண் பன்னியன் தமது மோட்ச பிரயாண நூலை முழுமையாக தேவனுடைய வசனங்களால் கோர்வைப்படுத்தியிருப்பதை அதை வாசிக்கும் எவரும் எளிதில் கண்டு கொள்ளலாம்.

ஜாண் பன்னியன் சிறைக்கூடத்தில் இருந்த நாட்களில் வேறு அநேகம் புத்தகங்களையும் எழுதினார். அதில் “திருப்போர்” (HOLY WAR) என்ற புத்தகமும் சிறப்பான ஒன்றாகும். பெட்போர்ட் சிறைக்கூடத்தில் இருந்த நாட்களில் அவர் தனது மனைவி, பிள்ளைகளை காப்பாற்ற சப்பாத்துக்களைக் கட்டும் நல்ல அழகான வண்ண வண்ண ஜரிகை நாடாக்களை நிறைய எண்ணிகையில் தயாரித்து அவைகளை தனது கண்ணற்ற கபோதி மகளான மேரியைத் தன்னருகில் நிறுத்திக்கொண்டு தான் அடையுண்டு கிடந்த சிறைக்கூடத்தின் பிரதான நுழைவு வாயிலில் நின்று கொண்டு தெருவில் போகின்ற மக்களுக்கு விற்பனை செய்து அதின் மூலமாகக் கிடைத்த பணத்தைக்கொண்டு தன் மனைவி பிள்ளைகளைக் காப்பாற்றினார். தனது குருடான மகள் மேரி இறந்தபின்னர் அவர் மட்டும் தனியாக நின்று சப்பாத்து நாடாக்களை விற்பனை செய்தார். பெட்போர்ட் நதியையும், ஜாண் பன்னியன் சிறை வைக்கப்பட்டிருந்த நதியின் பாலத்துக்கு அருகிலுள்ள பெட்போர்ட் சிறைக்கூடத்தையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

தான் சிறையிலிருந்த நாட்களில் தன்னோடு சிறையில் இருந்த கைதிகளுக்கும் தேவனுடைய சுவிசேஷத்தை அவர் எந்த ஒரு அரசாங்க தடையும் இல்லாமல் தாராளமாகப் பிரசங்கித்தார். இறுதியாக அவர் 1676 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையுண்டு கிடந்த சிறைக்கூடம் 1801 ஆம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்தச் சிறைக்கூடத்தின் மூன்று அடுக்குகள் கொண்ட ஓக் மரத்திலான பிரமாண்டமான கதவு இந்நாள் வரை லண்டன் பட்டணத்திலுள்ள அருங்காட்சியகத்தில் ஞாபகச்சின்னமாக வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்

“காண்டா மிருகத்துக்கு ஒத்த பெலன் அவர்களுக்கு உண்டு” (எண் 23 : 22) என்ற கர்த்தருடைய வசனத்தின்படி பன்னியனுடைய பெலன் அபரிதமாக இருந்தது. கர்த்தருடைய நாம மகிமைக்காக அவர் 66 புத்தகங்களை எழுதினார். அவற்றில் சில அநேக நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்டதாகும். அவர் எழுதிய “மோட்ச பிரயாணம்” என்ற புத்தகம் உலகம் உள்ளவரை அவரது ஆண்டவரது புகழையும், மகிமையையும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும். அவர் தமது எழுத்து வேலைகளுடன் பல இடங்களுக்கும் ஓடி ஓடி சென்று பிரசங்கிப்பதிலும், போதிப்பதிலும், மக்களுக்கு தேவ ஆலோசனைகள் கூறுவதிலும், ஒரு குருவானவர் என்ற ஸ்தானத்தில் தனது சபை மக்களை சந்திப்பதிலும் தனது காலத்தை செலவிட்டார். தனது சிறைவாசமான 12 ஆண்டுகள் முடிந்த பின்னர் பன்னியன் அடிக்கடி லண்டன் பட்டணம் போய் வந்தார். அங்கு அவருக்கு அநேக கர்த்தருடைய பிள்ளைகள் நண்பர்களாகக் கிடைத்திருந்தனர். லண்டன் மா நகரத்து தலைவரான லார்ட் மேயர் ஷார்ட்டர் அவர்களே பன்னியனுடைய உற்ற நண்பரும், அவருடைய பிரசங்கங்களை அதிக ஆவலோடு கவனிக்கும் அன்பராகவும் இருந்தார். லண்டனிலுள்ள பல தேவாலயங்களும் அவரை பிரசங்கிக்க அழைத்தன. ஓய்வு நாட்களில் லண்டனிலுள்ள தேவாலயங்களில் அவர் பிரசங்கித்தால் 3000 பேர்கள் மிக எளிதாக கூடிவிடுவார்கள். தேவாலயங்களில் இடம் போதாத காரணத்தால் அவரது செய்திகளை கேட்க இயலாமல் வீட்டுக்கு துக்கத்துடன் திரும்பிச் செல்லுவோரும் ஏராளம் உண்டு. பன்னியன் பிரசங்கிக்கப் போகின்றார் என்று ஒரு நாளுக்கு முன்னர் அறிவிப்பு கொடுத்தால் தேவாலயம் நிரம்பி வழியும் அளவுக்கு மக்கள் கூடிவிடுவார்கள். கடுங்குளிரான பனி நாட்களிலும் கூட இருள் சூழ்ந்த அதிகாலை நேரம் ஓய்வு நாள் இல்லாத இடை நாளில் கூட 17 ஆம் நூற்றாண்டான அந்த ஜனப்பெருக்கம் இல்லாத காலத்தில் 1200 பேர் வரை கூடிவிடுவார்கள். அவரது பிரசங்கங்களால் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட மக்களின் தொகை மிகப் பெரிய ஒன்றாகும். கர்த்தருடைய கல்வாரி அன்பை நினைத்து கண்ணீர் விட்டு கதறும் தேவ பக்தன் அவர். கர்த்தருடைய இராப்போஜன பந்தியில் அவர் பங்கு பெறும் போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட தனக்களிக்கப்படும் அப்பத்தையும், திராட்ச ரசத்தையும் புசித்துப் பானம் பண்ணுவார்.

“மோட்ச பிரயாணம்” என்ற அவரது புத்தகம் அவரது வாழ்நாட் காலத்திலேயே 1,00,000 (ஒரு இலட்சம்) பிரதிகள் விற்பனையானது. 100 மொழிகளுக்கு மேல் அந்த நூலை மொழி மாற்றம் செய்துள்ளனர். பன்னியனுடைய மரணத்துக்குப் பின்னர் அந்தப் பக்தி நூல் எத்தனை லட்சங்கள் அச்சிடப்பட்டு எத்தனை எத்தனை மொழிகளில் விற்பனையாயின என்பது எவராலும் கணக்கிட இயலாத காரியமாகும். கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்துக்கு அடுத்த ஸ்தானத்தில் அந்த பரிசுத்த புத்தகம் வைத்துப் போற்றப்படுகின்றது. ஜாண் பன்னியன் மாத்திரம் நினைத்திருந்தால் அவருடைய புத்தகங்களின் விற்பனை மூலமாக கிடைக்கக்கூடிய பதிப்புரிமை (Royalty) மூலமாக கிடைக்கக்கூடிய பணத்தின் மூலமாக ஆடம்பரமான வீடுகளையும், நிலபுலங்களையும், பெருஞ்செல்வத்தையும் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், அவர் தனது மரணபரியந்தம் ஒரு ஏழை மனிதனாகவே இருந்து இந்த உலகத்தைவிட்டுக் கடந்து சென்றார். தனது பிரசங்கங்களுக்காக அதிகமான பணம் கொடுக்க முன்வரும் பெரிய கூட்டங்களில் அவர் பேசவே மாட்டார். பணத்தை அவர் விரும்பவே இல்லை. அவர் மரிக்கும்போது அவர் விட்டுச் சென்ற செல்வம் வெறும் 42 பவுண்டுகள் 19 ஷில்லிங் மட்டுமேதான்! பன்னியன் தனது முதல் மனைவி இறந்ததும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இரு மனைவிகளுக்குமாக சேர்த்து 3 ஆண்கள் 3 பெண்கள் இருந்தனர். ஆனால் இன்று அவரது வம்சாவழியில் அவரது கடைசி மகள் சாராள் குடும்பத்தினரே எஞ்சி உள்ளனர்.

“என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”

1688 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை வேளையானது நல்ல அமைதியாக விடிந்து வந்த வேளையில் இடி முழக்கத்துடன் கூடிய திடீரென்று கொட்டிய பலத்த மழை ஒன்று அந்த அமைதியைக் குலைத்துவிட்ட போதினும் அது சீக்கிரமாகக் கடந்து மறைந்து சென்றுவிட்டது.

வெப்பம் காரணமாக கடந்து சென்ற இரவு மிதமிஞ்சிய புழுக்கமாக இருந்தபடியால் படுக்கையிலிருந்த ஜாண் பன்னியன் மூச்சுவிடுவதற்காகத் தவித்துக்கொண்டிருந்தார். அவர் படுத்திருந்த அறையின் கதவும், ஜன்னல்களும் முழுமையாக திறந்து வைக்கப்பட்டன. அவர் மிகவும் சோர்போடு இருந்தபடியால் அவரது கரங்கள் பெலனிழந்து தானாக அவ்வப்போது அவரது கட்டுப்பாட்டை மீறி படுக்கைத் துணிகளில் விழுந்து கொண்டிருந்தன. அவருடைய படுக்கைக்கு அருகில் பலசரக்கு வியாபாரி ஜாண் ஸ்ட்ரவிக், தேவ ஊழியர் ஜியார்ஜ் கோக்கின், சீப்புகள் செய்யும் சகோதரன் சார்லஸ்டோ ஆகிய மூவரும் இரவு முழுவதும் நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

ஜாண் பன்னியன் படுத்திருந்த ஜாண் ஸ்ட்ரவிக் என்பவரின் வீட்டின் அறையில் மரண தூதனின் பிரசன்னம் நிச்சயமாக உணரப்பட்டபோதினும் பரலோக மகிமையின் காட்சி அந்த அறையில் கூடியிருந்த சிறிய குழுவின் மேல் செட்டைகளை விரித்து அமர்ந்திருந்தது. அவர்களுடைய இருதயங்கள் எல்லாம் பரிசுத்த சந்தோசத்தால் முழுமையாக நிரம்பியிருந்தது. அதின் காரணமாக அந்த பரிசுத்த தேவ மக்கள் மரணத்தின் கூரை உணராமல் மரணத்தை தமது மரணத்தால் ஜெயித்து வெற்றி கொண்ட கிறிஸ்து இரட்சகரின் நிறைவான பிரசன்னத்தை கண்டு கொள்ள முடிந்தது.

ஜாண் பன்னியன் “போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார்” என்ற பரம அழைப்பின் குரலுக்காக மிகவும் பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தார். ஆயினும் அந்த வேளை இன்னும் வரவில்லை. அவர் தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த தனது சிநேகிதன் ஜியார்ஜ் கோக்கின் என்பவரைப் பார்த்து தான் கடைசியாக எழுதின “தேவனுக்கு உகந்த ஜீவ பலி” என்ற புத்தகத்திற்கு தலையங்கம் எழுதிவிடும்படியாக கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். நித்திய அக்கினியாம் நரகத்தை நோக்கி நாசத்தின் வழியில் சென்று கொண்டிருக்கும் அழியும் ஆத்துமாக்களைக் குறித்த எண்ணம் அந்த இறுதி நேரத்திலும் அவரது கண்களை கண்ணீரால் நிரப்புவதாக இருந்தது. அதைக் குறித்து அவர் தனது பரிசுத்த நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்த வேளையில் அவர் அருகில் நின்ற அவரது நண்பன் சார்லஸ் டோ அவரது படுக்கையருகில் அவரண்டை வந்து அவரது முகத்துக்கு நேராகக் குனிந்து அவரது கரத்தைத் தூக்கி எடுத்து அன்பொழுக அதைத் தட்டிக் கொடுத்து ஏங்கி ஏங்கி அழுதவராக “சகோதரன் பன்னியன், சகோதரன் பன்னியன், நீங்கள் கடைசியாக எழுதிய உங்கள் புத்தகத்தை ஆவலோடு வாசித்தேன். “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய உங்கள் புத்தகத்தை நான் வேதாகமத்துக்கு அடுத்தபடியாக வாசித்து மகிழ்ந்தேன். அதுதான் உங்கள் புத்தகங்கள் யாவற்றிலும் முதன்மையானது என்றும் எண்ணினேன். ஆனால் உண்மையில் உங்கள் புத்தகங்கள் அனைத்தும் அருமையானவைகள். அவைகளிலிருந்து பெருமளவிற்கு நான் தேவ சமாதானத்தையும், ஆறுதலையும் பெற்று ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றேன்” என்று கூறினார்.

தனது முடிவை மிகவும் துரிதமாக நெருங்கிக் கொண்டிருக்கும் ஜாண் பன்னியனுக்கு சார்லஸ் டோ அவர்களின் சற்று நீளமான வார்த்தைகள் சோர்பை அளிப்பதாகவே இருந்திருக்கும். இந்த வேளையில் ஜாண் ஸ்ட்ரவிக் அவர்கள் ஜாண் பன்னியனின் ஒரு கரத்தையும், ஜியார்ஜ் கோக்கின் பன்னியனின் அடுத்த கரத்தையும் அன்பொழுகப் பற்றிப் பிடித்தவர்களாக அவரது படுக்கைக்கு அருகில் முழங்காலில் நின்றனர். அடுத்து சில நிமிடங்களுக்குள்ளாக தங்களுடைய அருமை சகோதரனுக்கு தவிர்க்க முடியாதது நடக்கப் போவதை அவர்கள் எதிர்பார்த்தவர்களாக காணப்பட்டனர்.

சீதோஷ்ண நிலை வர வர தெளிவாகத் தொடங்கியது. இப்பொழுது அது திரும்பவும் நேர்த்தியாகக் காணப்பட்டது. பிரகாசமான சூரிய ஒளிக்கதிர்கள் மரித்துக் கொண்டிருந்த தேவ மனிதரின் அறைக்குள் வெள்ளம் போல பாய்ந்து கொண்டிருந்தது. அந்த சூரிய ஒளி ஜாண் பன்னியனின் முகத்திலும் சூடாகப்பட்டுக்கொண்டிருந்தது. அந்தக் காலை வேளை சூரிய ஒளிக்கதிர்கள் அல்ல, தான் விரைந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் உச்சிதப்பட்டணத்திலிருந்து வரக்கூடிய மகிமையின் பேரொளிக் கிரணங்களையும் அங்கு வாசம் செய்யும் ஒளி மயரூபிகளின் சாயல்களையும், தங்கள் கின்னரங்களைக் கரங்களில் ஏந்தி மா இன்பமாக , இசைக்கின்ற கீதவாத்தியக்காரர்களின் மங்கள கீதங்களையும், அவர்கள் பாடும் பாட்டோசையால் பரலோகமே எதிர் ஒலி கொடுப்பதையும் அவர் கவனித்தார். பரலோகத்தின் ஜொலித்திலங்கும் பெரிய தங்க கதவுகள் அவர் உள்ளே வருவதற்காக திறப்பதையும், உச்சிதப்பட்டணத்தின் திரள் சேனையான பாடகர் குழு “சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று ஆரவாரித்துப் பாடித் துதிப்பதையும், அந்த பரிசுத்தர்களின் கூட்டத்தில் தானும் ஒருவனாகச் சேர்ந்து கொண்டு தன் நேச இரட்சகரை பாடிப்போற்ற வேண்டும் என்ற ஆவல் அவரைப் பலமாக ஏவுவதையும் அவர் உணர்ந்தார்.

இந்த வேளை ஜாண் பன்னியன் தனது இன்பமான குறுகிய நேர நல்ல தூக்கத்திலிருந்து கண் விழித்துக் கொண்டார். தன்னைச் சுற்றி நின்ற தனது பரிசுத்த நண்பர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே நன்றாகப் பார்த்தார். அவர்கள் அவருடைய படுக்கையைச் சுற்றிலும் அவருக்கு மிகவும் சமீபமாக முழங்காலூன்றியிருந்தனர். தாங்கள் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் அவரைப் பார்த்துக் கேட்டனர். “சகோதரர்களே” என்ற மிகவும் கனிந்த குரலில் “எனக்கு ஒன்றும் தேவையில்லை. கிறிஸ்து இரட்சகரோடு நான் சேர்ந்து கொள்ளுவதே எனக்குப் பேரானந்த பாக்கியம்” என்றார் பன்னியன்.

தனது கரங்களை அன்பொழுகப் பற்றிப் பிடித்திருந்த தனது நண்பர்களின் கரங்களை இப்பொழுது மெதுவாகத் தளர்த்திக் கொண்டார். துறைமுகத்திலுள்ள கப்பல் பூமியோடு தன்னை கட்டி வைத்திருந்த தனது கடைசி நங்கூரத்தை தளர்த்திக்கொள்ளும் வண்ணமாக அவர் தன்னைப்பற்றியிருந்த பூமியின் கடைசிப் பிணைப்பையும் விலக்கிக் கொண்டார். தான் தலை வைத்துப் படுத்திருந்த தலையணையிலிருந்து தனது தலையை சற்று உயர்த்திய பொழுது அவரது நரைத்த தலை முடி சுருள்கள் அவரது தலையைச் சுற்றிலும் அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அவரது பிரகாசமான நீல நிறக்கண்கள் சூரிய ஒளியில் பட்டுப் பிரகாசிப்பதாக இருந்தது. அவரது கன்னங்கள் வழக்கமான செந்நிற வண்ணத்துடன் காணப்படுவதாக இருந்தது. தனது பந்தயத்தில் ஜெயத்தை சுதந்தரித்துக் கொண்ட வெற்றி வீரன் வீர முழக்கமிடுபவனைப் போன்று ஜாண் பன்னியன் தனது கரங்கள் இரண்டையும் வானத்திற்கு நேராக உயர்த்தி சற்று சப்தமான குரலில் “என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்” என்று ஆரவாரித்தார்.

ஆம், பரிசுத்த பக்த சிரோன்மணி ஜாண் பன்னியனின் ஆத்துமா இவ்வண்ணமாக ஜெய கெம்பீர தொனியுடன் தனது ஆண்டவருடைய சமூகத்துக்குப் பாடி பறந்து சென்றது. ஜாண் பன்னியன் மரிக்கும்போது அவரது வயது 60 மாத்திரமேதான் ஆகும். அவர் மரணம் அடைந்த லண்டன் பட்டணத்திற்கு அருகிலிருந்த பன்ஹில் ஃபீல்ட்ஸ் என்ற இடத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறையை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

அரசர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான (Westminister Abbey) “வெஸ்ட் மினிஸ்டர் அபி” உள்ள லண்டனில் ஜாண் பன்னியனுக்கு ஒரு ஞாபகார்த்த பலகணி நிறுவப்பட்டுள்ளது. அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததும், மோட்ச பிரயாணம் என்ற பரிசுத்த நூலை எழுதியதுமான பெட்போர்ட் நகரத்தில் பன்னியனுடைய உருவச் சிலை எழுப்பப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகத்தில் அவரது பொருட்கள் பலவும் வைக்கப்பட்டுள்ளன. பன்னியன் தனது மோட்ச பிரயாண புத்தகத்தில் வியாக்கியானி முனிவர் வீட்டில் மோட்ச பிரயாணி கிறிஸ்தியான் கண்டதான ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த காட்சியில் வரும் மனித உருவத்தை பெட்போர்டில் செதுக்கி வைத்துள்ளனர். அந்த மனிதன் பரலோகத்தை அண்ணாந்து பார்த்த வண்ணமாக இருப்பதையும், உலகத்தையும், அதின் மேன்மைகளையும் அற்பமும் குப்பையுமாக எண்ணி தன் கால்களுக்கு கீழாக அவைகளை மிதித்துத் தள்ளிப் புறக்கணித்திருப்பதையும், மனந்திரும்பி தேவனை அண்டிக்கொள்ள பூலோக மாந்தரிடம் அந்த உருவம் உள்ளம் கனிந்து பரிந்து மன்றாடுவதைப் போன்ற பாவனையில் அந்தச் சிலையை செதுக்கியிருக்கின்றனர்.


ஜாண் பன்னியன் தனது மரணத்துக்கு 12 நாட்களுக்கு முன்னர் “ஓயிட் சாப்பல்” என்ற இடத்தில் தன் வாழ்வில் கடைசியாக செய்த பிரசங்கம்.


“அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள்” (யோவான் 1 : 13)

மேலே குறிப்பிட்ட தேவனுடைய வசனமானது அதற்கு முன்னாலுள்ள வசனங்களுடன் தொடர்புடையது. ஆகையால் அந்த வசனங்களையும் நீங்கள் கவனிக்க விரும்புகின்றேன். “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1 : 11, 12) “அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள்” நமக்கு முன்னாலுள்ள இந்த வசனங்களிலே இரண்டு காரியங்கள் உண்டு.

முதலாவது, ஆண்டவர் தமக்குச் சொந்தமானதிலே வந்து தமது சொந்தமானவர்களுக்கு தம்மைக் கையளித்த போது அவரை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துத் தள்ளினார்கள்.

இரண்டாவது, அப்படித் தம்மை ஏற்றுக்கொள்ளாதவர்களை தம்மைவிட்டு அப்பால் கடந்து போகச் செய்துவிட்டு தம்மை ஏற்றுக்கொண்ட மக்கள் அவருடைய சொந்த மக்களாகும்படிக்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். இவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள். அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மாம்சத்தினாலும், இரத்தத்தினாலும் பிறந்தவர்கள். அவரை ஏற்றுக்கொண்டவர்கள் தேவனை தங்களுக்குத் தகப்பனாகக் கொண்டவர்கள். அத்துடன் கிறிஸ்து இரட்சகரைக் குறித்து தணிக்க முடியாத பரலோக வாஞ்சை கொண்டவர்கள்.

“இரத்தம்” என்று கர்த்தர் குறிப்பிட்டக்காரியத்தை நான் உங்களுக்கு விளக்க விரும்புகின்றேன். கர்த்தரை விசுவாசிக்கின்றவர்கள் அவருடைய சுதந்திரத்துக்குப் பங்காளிகளாக கர்த்தரால் பிறந்தவர்கள் ஆவார்கள். கிறிஸ்தவ குடும்பங்களில் வம்சாவாளிகளாக பிறப்பதே இரத்தத்தினால் பிறப்பதாகும். ஓ, நான் ஒரு பக்தியுள்ள மனுஷன் அல்லது ஸ்திரீயின் மகன் என்று வெறும் உரிமை பாராட்டலை இந்த இரத்தமானது குறிக்கும். மாம்சபிரகாரமாக நாம் உரிமை பாராட்டும் காரியங்களை தேவன் வெறுத்து உதறித் தள்ளுகின்றார். யூத ஜனங்கள் தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்று எக்களிப்பு கொண்டார்கள். அப்பொழுது ஆண்டவர் அவர்களைப் பார்த்து “ஆபிரகாம் எங்கள் தகப்பன் என்று வீண் எண்ணம் கொண்டு இறுமாப்பாக இருக்க வேண்டாம். பரலோக ராஜ்யத்துக்குள் நீங்கள் பிரவேசிக்க வேண்டுமானால் நீங்கள் தேவனால் பிறந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

“மாம்ச சித்தம்” என்பது ஒரு மனிதன் தன் முழு பெலத்தோடு தனது மாம்ச பிரகாரமான காரியங்களையும், மாம்ச இச்சைகளையும் தன்னளவில் நிறைவேற்றிக்கொண்டும், கட்டுப்பாடற்ற நிலையில் வாழ்ந்து கொண்டும் இருக்கும் அதே நேரத்தில் அவ்வப்போது ஜெபிப்பதும், பக்திக்கடுத்த புத்தகங்களை வாசிப்பதும், மரிக்கும்போது பரலோகத்துக்கு கட்டாயம் சென்றுவிடவேண்டும் என்றும் ஆசைகொள்ளும் ஒரு நிலையைக் குறிப்பதாகும். இப்படிப்பட்ட மக்கள் தாங்கள் எத்தனை பாவியாக இருந்தாலும் தாங்கள் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யத்துக்கு பங்காளிகளாகிவிட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்ளுவார்கள்.

இவர்களுடைய எண்ணங்கள் ஒருக்காலும் சித்திபெறுவது இல்லை. ஏனெனில் “விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்” (ரோமர் 9 : 16) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. ஒரு மனிதன் தான் இரட்சிப்பைக் கண்டடைய வேண்டும் என்ற ஆவல் அவனில் இருப்பினும் தேவனுடைய கிருபை அவனுக்கு இல்லாதபட்சத்தில் அவன் இரட்சிப்பைப் பெறவே இயலாது. தேவனுடைய கிருபை இல்லாத ஒரு மனிதன் தான் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற சித்தம் கொண்டிருந்தாலும் தேவனுடைய சித்தம் அதுவாக இராதபடியால் அவனால் அதை அடையக்கூடாது. நாம் மனம் திரும்பி இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுவது நமது சித்தத்தின்படி நடக்கும் ஒரு காரியமாக இருக்குமானால் உங்கள் எல்லாரையும் நான் பரலோகத்திற்கு முதற்காரியமாக அனுப்பி வைத்து விடுவேன். எத்தனையோ கிறிஸ்தவ மக்கள் தங்களுடைய பிள்ளைகளுடைய இரட்சிப்புக்காக அழுகின்றார்கள், அங்கலாய்க்கின்றார்கள், கதறுகின்றார்கள். ஆனால் அவர்களுடைய விருப்பம் நிறைவேறுவதில்லை. காரணம், தேவனுடைய சித்தம் மாத்திரமே இதில் ஆளுகை செய்கின்றது. அவரது சித்தம் ஒன்றே சட்டமாகவும் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனுடைய குடும்பத்தில் பிறப்பவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறப்பவர்கள் அல்லர்.

கர்த்தராகிய இயேசுவை தங்கள் உள்ளங்களில் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் முழுமையாக அவரில் விசுவாசம் வைக்கின்றனர். இவர்களே தேவனுடைய குடும்பத்தில் பிறந்திருக்கின்றனர். அவர்கள் தேவனுடைய குடும்பத்தில் பிறப்பார்கள் என்று சொல்லாமல் பிறந்தவர்கள் என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. அவர்கள் தேவனுக்கும், தேவனுடைய உன்னதமான காரியங்களுக்கும் என்று தேவனால் பிறந்தவர்கள். “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான்” (யோவான் 3 : 3) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. தேவனால் ஒருவன் பிறந்தாலன்றி அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணவியலாது. தேவனுடைய ராஜ்யம் குறித்த காரியத்தை அவன் சுவிசேஷ பகுதியில் வாசிக்கலாம். ஆனால் அவன் தேவனால் பிறக்கும்போதுதான் அந்த ராஜ்யத்தின் மகத்துவத்தை தனது சொந்த வாழ்வின் அனுபவத்தில் கண்டானந்திக்கின்றான். இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது அவன் அதை சுதந்தரிக்காமல் கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமாக அந்த புதிய பிறப்பின் மாட்சிகளை கண்டானந்திக்கின்றான்.

ஒன்று அல்லது இரண்டு உதாரணங்களின் மூலமாக நான் அதை உங்களுக்கு ரூபகாரப்படுத்த ஆசைப்படுகின்றேன். ஒரு குழந்தை இந்த உலகத்தில் வந்து பிறப்பதற்கு முன்னர் தனது தாயின் இருண்ட கர்ப்பப் பையில் இருக்கின்றது. அதைப்போலவே ஒரு தேவனுடைய பிள்ளையும் மறுபடியும் பிறப்பதற்கு முன்பாகப் பாவப்படு குழியின் இருண்ட ஒளிப்பிடங்களில் வாழ்கின்றது. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து அந்த ஆத்துமாவுக்கு எதுவுமே தெரியாது. எனவேதான், அந்தப் பிறப்பை ஒரு புதிய பிறப்பு என்று அழைக்கின்றனர். அந்த ஆத்துமா, தான் உலகத்தில் இருந்தபோது உலகத்தை எத்தனையாக நேசித்தது என்பதையும், அது மறுபடியும் பிறந்ததின் பின்னர் ஆவிக்குரிய கோணத்தில் தேவனுக்கடுத்த காரியங்களை எவ்வண்ணமாக வாஞ்சிக்கின்றது என்பதையும் நாம் பார்க்கின்றோம்.

இருள் சூழ்ந்த தாயின் கர்ப்பப் பையிலிருந்து வெளிப்படும் குழந்தையின் பிறப்புக்கு மறுபடியும் கர்த்தருக்குள் பிறக்கும் பிறப்பானது மேலே ஒப்பிடப்பட்டது போல பாவக் குழியாகிய கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பும் ஒரு காரியத்துக்கும் நாம் அதினை ஒப்பிடலாம். “தூங்குகிற நீ விழித்து மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னை பிரகாசிப்பிப்பார்” (எபே 5 : 14) என்று தேவ வசனம் சொல்லுகின்றது. “மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர்” (வெளி 1 : 5) என்று நாம் நம் ஆண்டவரைக் குறித்து வாசிக்கின்றோம். நீ மறுபடியும் பிறந்து பூமிக்குரியவைகளை யல்லாமல் மேலானவைகளை நாடுபவனாக இருப்பாயானால் மரித்தோரிலிருந்து முதற் பிறந்த கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் உனது மறபடியும் பிறந்த புதிய பிறப்புக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. மறுபடியும் பிறந்தவர்கள் சாத்தானுடைய இருளின் அந்தகார ஏகாதிபத்திய உலகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டவர்களாவார்கள். காப்பாற்றப்பட்டது மாத்திரமல்ல, தேவனுடைய நேச குமாரனாம் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் ஒரு புதிய பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்காக உருவாக்கப்பட்டவர்கள். தாயின் உதவியால் தாயின் இருண்ட கர்ப்பத்திலிருந்து காப்பாற்றப்பட்டதுபோல மறுபடியும் பிறந்தவனும் பாவப்படுகுழியாம் உளையான சேற்றிலும், கல்லறையிலுமிருந்து இரட்சகர் இயேசுவால் வெளியே தூக்கி எடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கின்றான். மறுபடியும் பிறந்த ஒரு ஆத்துமாவுக்கு ஏற்படக்கூடிய பரிசுத்த மாற்றங்களை நான் உங்களுக்கு விவரித்துக்கூற விரும்புகின்றேன்.

முதலாவதாக:- ஒரு குழந்தை இந்த உலகத்துக்குள் பிரவேசித்ததும் அழ ஆரம்பித்து விடுகின்றது. குழந்தையானது தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதும் எந்த ஒரு சத்தமும் அது கொடுக்கவில்லையானால் அதாவது வீறிட்டு அழவில்லை என்றால் அது செத்துவிட்டதாகக் கருதுகின்றனர். மறுபடியும் தேவனால் பிறந்தவர்களே, கிறிஸ்தவர்களே, நீங்கள் கதறுகிறவர்களாக இல்லாதபட்சத்தில் உங்களில் எந்த ஒரு ஜீவனுமே கிடையாது. நீங்கள் தேவனால் பிறந்தவர்களானால் நீங்கள் ஒரு கதறுகிற கூட்டத்தினர். பாவத்தின் படு பாதாளத்திலிருந்து நீங்கள் தேவனால் தூக்கி எடுக்கப்பட்ட உடனேயே “ஆண்டவரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கூறி கதறுவதைத் தவிர உங்களால் வேறு என்னத்தைச் செய்ய முடியும்? சிறைச்சாலைக்காரனை தேவன் தொட்ட அந்த ஷணத்தில்தானே “ஆண்டவமாரே, இரட்சிக்கப் படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கதறி அழுகின்றான். ஒருக்காலும் ஜெபிக்காத, ஜெபமற்ற எத்தனை கிறிஸ்தவர்கள் லண்டன் பட்டணத்தைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றனர்! அவர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் ஆகாரங்களுக்கு முன்பாக ஜெபிப்பதில்லை. தாங்கள் தங்கள் இளைப்பாறுதலுக்குச் செல்லும் இரவு நேரம் ஜெபித்துவிட்டு படுக்கைக்குச் செல்லுவதில்லை. காலையில் தங்கள் படுக்கையிலிருந்து எழும்பும்போது தங்களை இரா முழுவதும் கண்ணின்மணி போல பாதுகாத்த தங்கள் அன்பின் தேவனுக்கு நன்றி ஜெபம் ஏறெடுப்பதில்லை. அவர்களுக்கும், ஜெபத்துக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால், தேவனால் பிறந்த உன்னால் அவர்களைப்போல அப்படி நடந்து கொள்ள இயலாது. நீ உயிர் வாழ்வதே ஜெப ஆவியில்தான். எப்பொழுதும் ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக கதறிக்கொண்டிருப்பதே உன் காரியமாகும்.

இரண்டாவதாக:- புதிதாக பிறந்த ஒரு குழந்தை பொதுவாக அழுகிறது மாத்திரமல்ல, அது தனது தாயின் மார்பகத்தை வாஞ்சிக்கின்றது. தாயின் மார்பகம் இல்லாமல் அது உயிர் வாழ இயலாது. அதை மனதில் கொண்டுதான் அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுரு தேவனால் புதிதாக பிறந்த குழந்தையும் தான் வளரும்படி களங்கமில்லாத ஞானப்பாலை வாஞ்சித்துக் கதறுவதாக எழுதுகின்றார். நீயும் தேவனால் பிறந்திருந்தால் தேவனுடைய மார்பகத்தை வாஞ்சித்துக் கதறுவதன் மூலம் உனது பரிசுத்த பிறப்பை உலகத்துக்குக்கூறுவாய். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் என்ற ஞானப்பாலைப் பருக நீ ஆசை ஆவலாக இருக்கின்றாயா? ஆண்டவரைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளு முன்னர் ஒருவன் உலகத்தானாக வாழ்கின்றான். ஆனால் அவன் தேவனுடைய பிள்ளையாகும் போது அவனது வாழ்வு தலை கீழ் மாற்றம் அடைகின்றது. நீ மறுபடியும் பிறந்த அனுபவத்துக்குள் வந்திருந்தால், களங்கமில்லாத ஞானப்பாலாகிய தேவனுடைய வசனத்தைத் தவிர வேறு எதுவாலும் உனது ஆத்துமாவை திருப்தி செய்ய இயலாது. ஒரு உலகத்தானுக்கு ஒரு வேசியின் வீடு திருப்தி அளிக்கும். அது அவனுக்கு மிகவும் இன்பம் சுரப்பதாக தெரியும். ஆனால், மறுபடியும் பிறந்த ஒரு ஆத்துமாவுக்கு தேவனுடைய வசனமாகிய பால் இல்லாமல் உலகில் உயிர் வாழ இயலாது. ஒரு ஸ்திரீயின் மார்பகம் ஒரு குதிரைக்கு எதற்குத் தேவை? ஆனால், அதே மார்பகம் ஒரு குழந்தைக்கு எப்படிப்பட்டது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்! அந்த மார்பகம் ஒன்றே அந்தக் குழந்தைக்கு இரவும் பகலும் ஆறுதல் அளிக்கும். அதின் உயிர் வாழ்வு இராப்பகலாக அதினிடமிருந்துதான் சுரந்து வந்து கொண்டே இருக்கும். அந்த மார்பகத்தை அந்தக் குழந்தையிடமிருந்து எடுத்துவிட்டால் அது அதோகதியாகிவிடும். பரலோக காரியங்கள் ஒரு உலகத்தானுக்கு பைத்தியமாகவும், அற்பமாகவும், குப்பையுமாகவும் காணப்படும். அதே வேளையில் ஒரு மறுபடியும் பிறந்த ஆண்டவருடைய பிள்ளைக்கு அந்த பரலோக பாக்கிய எண்ணம் மட்டும்தான் அதற்கு ஆறுதலும், ஆனந்தமும், களிகூருதலுமாகவும் இருக்கும்.

மூன்றாவதாக:- புதிதாக பிறந்த ஒரு குழந்தை தனது தாயின் கர்ப்பத்தில் எவ்வண்ணமாக உஷ்ணமான நிலையில் இருந்ததோ அதே வண்ணமாக அது பிறந்த பின்னரும் நல்ல வெதுவெதுப்பாக மூடி வைத்துப் பாதுகாக்கப்படாத பட்சத்தில் அந்த சிசு மரித்துப்போகும். அதை நன்கு சுற்றி மூடத் துணிகள் வேண்டும். கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக புதிதாகப் பிறந்தவர்களுக்கு தேவன் தமது வாக்குத்தத்தங்களாகிய வஸ்திரங்களால் அவர்களை நன்கு மூடுகின்றார். அந்த வாக்குத்தத்தங்களே அவர்களை ஜீவனோடு பாதுகாக்கின்றது. உலகப் பிரகாரமான மக்கள் தங்களுக்குத் தேவையான உஷ்ணத்தை உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்து பெற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், தேவனால் பிறந்த மக்களுக்கு அப்படிச் செய்ய இயலாது. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மட்டுமேதான் அவர்களை உயிரோடு காக்கின்றது. “உன்னை இரத்தமற ஸ்நானம் பண்ணுவித்து உனக்கு எண்ணெய் பூசி சித்திரத் தையலாடையை உனக்கு உடுத்தினேன்” (எசேக்கியேல் 16 : 9, 10 ) என்று தேவ வார்த்தை கூறுகின்றது. ஒரு தாய் தனது குழந்தையோடு இருக்கும்போது அந்தக் குழந்தைக்கு என்ன, என்ன அருமையான காரியங்களை எல்லாம் செய்கின்றாள். தன் குழந்தையைப் பார்க்கின்ற யாவரும் அதை மெச்சிக் கொள்ளும்படியாக அதை அவள் ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கின்றாள். அந்தக் காரியத்தையேதான் தேவனும் தமது பிள்ளைகளுக்கு செய்வதை நாம் பார்க்கின்றோம். “உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்” (எசே 16 : 11, 12) அதின் 13 ஆம் வசனத்தில் “ராஜ்யத்தை சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் நீ பெற்றாய்” என்றதோர் பொன்னான வாக்குத்தத்தமும் உண்டு. கிறிஸ்து இரட்சகரின் நீதியும், பரிசுத்த ஆவியின் திரண்ட கிருபைகள் மாத்திரமே நித்திய மோட்ச ராஜ்யத்தை நாம்சுதந்தரிக்க நமக்கு வகை செய்து கொடுத்தது.

நான்காவதாக:- ஒரு குழந்தை அதின் தாயின் மடியில் இருக்கும்போது அந்த தாயானவள் அந்தக் குழந்தையைக் குறித்து மகா ஆனந்தம் கொள்ளுகின்றாள். தாயின் மடியானது அந்தக் குழந்தைக்கு எத்தனையோ பாதுகாப்பும், ஆறுதலுமாக இருக்கின்றது. தேவனும் அதைப்போலவே தமது அன்பு குழந்தைகளுக்கும் செய்கின்றார். அவர்களைத் தமது முழங்கால்களில் வைத்து தாலாட்டுகின்றார். “ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி நீங்கள் சூப்பிக் குடித்து மனமகிழ்ச்சியாவீர்கள்” (ஏசாயா 66 : 11 ) “ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல நான் உங்களைத் தேற்றுவேன்” (ஏசாயா 66 : 13) என்று தேவன் கூறுகின்றார். தேவனால் பிறந்தவர்களுக்கேயன்றி இந்தக் காரியங்கள் எல்லாம் உலக மண்ணின் மாந்தருக்குத் தெரியாது.

ஐந்தாவதாக:- பொதுவாக ஒரு குடும்பத்தில் தகப்பனுக்கும் மகனுக்கும் நெருங்கிய முகச்சாயல் இருப்பதை நாம் பார்க்கின்றோம். மகன் தனது தகப்பனுடைய முகரூபத்தை தாங்கி நிற்கின்றான். அதைப்போலவே, மறுபடியும் பிறந்த தேவ மக்கள் தங்கள் ஆண்டவர் இயேசுவின் சாயலைத் தரித்துக்கொண்டிருக்கின்றார்கள். “என் சிறு பிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்ப வேதனைப்படுகின்றேன்” (கலா 4 : 19 ) தங்களை நேசிக்கும் பிள்ளைகளை பெற்றோர் அதிகமாக நேசிப்பதை நாம் பார்க்கின்றோம். அவ்விதமாகவே, தம்மை நேசிப்போரை தேவனும் அன்புகூர்ந்து நேசிக்கின்றார். அதின் காரணமாக அவர்கள் கர்த்தருடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகின்றனர். தேவனால் பிறவாத மக்கள் அவரது சாயலைக் கொண்டிராததால் அவர்கள் சோதோமியர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். பிசாசின் பிள்ளைகளை தேவன் அவர்களது முகச்சாயல் மூலம் வர்ணிக்கின்றார். பிசாசின் மக்கள் தங்கள் தந்தையாம் பிசாசின் கிரியைகளையே செய்வார்கள். அநீதியான எல்லா செயல்களும் சாத்தானுடைய கிரியைகளாகும். நீ பூமிக்குரியவனானால் உனது சாயல் பூமிக்குரிய சாயலாக இருக்கும். நீ பரலோகத்திற்குரியவனானால் உனது சாயல் பரலோகத்துக்குரிய சாயலாக இருக்கும்.

ஆறாவதாக:- ஒரு மனிதனுக்கு ஒரு குமாரன் இருப்பானானால் அவன் அவனை தன்னைப்போலவே வளர்க்கப் பிரயாசப்படுகின்றான். அந்த குமாரன் தனது தகப்பனுடைய வீட்டு ஒழுங்குகளை கற்றுக்கொள்ளுகின்றான். தேவனால் பிறந்தவர்களும் அப்படித்தான் தங்கள் ஆண்டவருடைய பரிசுத்த ஒழுங்குகளையும், அவருடைய கட்டளைகளின் வழியையும் படித்துக்கொள்ளுகின்றனர். இந்த உலகத்தில் இருக்கும் காலம் வரை தங்கள் ஆண்டவராம் தேவனுடைய வீட்டிலே எவ்விதமான பரிசுத்த நிலைகளில் வாழ வேண்டுமென்பதை அவர்கள் தெள்ளந் தெளிவாக அறிந்து கொள்ளுகின்றனர். அங்கு அவர்கள் அப்பா பிதாவே என்று தங்கள் பரம தகப்பனைக் கூப்பிடவும் கற்றுக்கொள்ளுகின்றனர்.

ஏழாவதாக:- பிள்ளைகள் தங்களுடைய தேவைகளுக்கு தங்கள் தகப்பனைச் சார்ந்து கொள்ளுவது இயல்பான காரியமாகும். தங்களுக்கு ஒரு ஜோடி பாதரட்சைகள் தேவையானால் அவனிடம் போய்ச் சொல்லுகின்றனர். புசிக்க ரொட்டி வேண்டுமானால் தகப்பனிடம் தெரிவிக்கின்றனர். தேவனுடைய பிள்ளைகளும் அப்படித்தான் இருக்க வேண்டும். உனக்கு ஆவிக்குரிய ரொட்டி தேவையா? உன் ஆண்டவரிடம் அதைக்கூறு. தேவ கிருபையின் பெலன் உனக்குத் தேவையா? உன் கர்த்தரிடம் அதைச் சொல்லு. சாத்தானுடைய பாவச் சோதனைகளை மேற்கொள்ள உனக்கு உன்னதத்தின் பெலன் வேண்டுமாயின் அதை உன் பரம தகப்பனிடம் தெரிவி. சத்துருவாம் பிசாசானவன் உன்னை பாவத்தில் வீழ்த்தும்படியாக சோதிக்கின்றானா? உன் வீட்டுக்கு ஓடோடிச் சென்று உன் முழங்கால்களை முடக்கி உன் பரலோக தந்தையிடம் நடந்தவற்றை கூறு. தங்களுக்கு யாராயினும் தவறுசெய்தால் அதை தங்கள் தகப்பனிடம் குழந்தைகள் சொல்லுவது இயல்பான காரியமாகும். அவ்வாறுதானே தேவனால் பிறந்த மக்களும் பிசாசின் சோதனைகளை சந்திக்க நேரிடும்போது அதை தங்கள் தேவனுக்குச் சொல்லுகின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உன்னிடம் சற்று கண்டிப்புடன் கேட்கும் ஒரு காரியம் யாதெனில், நீ தேவனால் பிறந்தவனா? இல்லையா? என்பதுதான். தேவனால் பிறந்த மனிதனுக்கும், உலகத்து மனிதனுக்கும் முன்பாக நான் வைக்கும் காரியங்களை நீ கவனமாக ஆராய்ந்து பார். பாவத்தின் படு குழியிலிருந்து நீ கிறிஸ்துவானவரால் கை தூக்கி எடுக்கப்பட்டவனா? “என் பிதாவே” என்று ஆண்டவரை நோக்கி நீ சத்தமிட கற்றுக்கொண்டாயா? “நீ என்னை நோக்கி என் பிதாவே என்று அழைப்பாய்” (எரேமியா 3 : 19) என்ற கர்த்தருடைய வசனத்தின்படி தேவ மக்கள் யாவரும் தங்கள் கர்த்தரை “என் பிதாவே” என்று உரிமை பாராட்டி சொந்தம் கொண்டாடிக் கூப்பிடுகிறவர்களே. தேவனுடைய களங்கமில்லா ஞானப்பாலாம் வேத வசனங்களால் உனது வயிற்றை நிரப்பாவிட்டாலும் நீ அவைகளைக் குறித்து அக்கறை கொள்ளாதவனா? அவைகளில் உனக்கு வாஞ்சையில்லையா? தேவனோடு நீ சமாதானமாக இராதபட்சத்திலும் உன்னளவில் திருப்தி அடைந்துவிடக்கூடியவனா? இந்தக் காரியங்களைக் குறித்து தீவிரமாக நீ ஆராய்ந்து இவைகளைப்பற்றி நீ உன் இருதயத்திடம் கேள்வி எழுப்ப நான் உன்னை கெஞ்சிக் கேட்கின்றேன். மேலே நான் குறிப்பிட்ட அடையாளங்கள் உன்னில் காணப்படவில்லை என்றால் தேவனுடைய பரம ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க நீ குறைவுள்ளவன் என்பதை நீ நிச்சயம் செய்து கொள்ளலாம். அந்தக் காரியங்களைக் குறித்து உனக்கு எந்த ஒரு விருப்பமோ, நாட்டமோ இருக்காது. இப்படிப்பட்டவர்கள் “ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்க வேண்டும்” என்பார்கள். அவர் அந்த மக்களுக்குப் பிரதியுத்தரமாக “உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்பார். தேவனுடைய பிள்ளையாக இல்லாதபட்சத்தில் பரலோகத்தின் சுதந்திரவாளியாக நீ இருக்க இயலாது.

நம்முடைய குழந்தைகளாக இல்லாதபோதினும் நாம் சில சமயங்களில் மற்ற குழந்தைகளுக்கு நம்மிடமுள்ள ஏதாவது ஒன்றைக் கொடுப்போம். ஆனால், அவர்களுக்கு நமது நிலபுலங்களை ஒருக்காலும் கொடுக்கமாட்டோம். நீங்கள் பிள்ளைகளைப்போல வாழ்ந்தால்தான் பிள்ளைகளுக்குரிய சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு அரச குமாரன் தெருவிலுள்ள ஒரு பிச்சைக்கார மனிதனோடு விளையாடிக் கொண்டிருப்பதை நாம் காண இயலுமா? அதை நாம் நினைத்தே பார்க்க வேண்டியதில்லை. நீ ராஜ குமாரனானால் ராஜ குமாரனாக வாழ்ந்து காட்டு. நீ கிறிஸ்துவோடு கூட எழுந்ததுண்டானால் மேலானவைகளைத் தேடு. பூமியிலுள்ளவைகளை அல்ல, மேலானவைகளை நாடு. தேவனுடைய பிள்ளைகளாக நீங்கள் கூடி வரும்போது உங்களுடைய பிதா உங்களுக்கு வாக்குப்பண்ணியவைகளை குறித்து களிகூர்ந்து பேசுங்கள். நீங்கள் அனைவரும் தேவனுடைய திருவுள சித்தத்தை மாத்திரம் நேசிக்க வேண்டும். நீங்கள் தேவனுடைய பிள்ளைகளானால் ஒருவரோடு ஒருவர் அன்புகூர்ந்து கூடி வாழுங்கள். உலகம் உங்களோடு சண்டையிட்டால் அது மிகவும் அற்பமான காரியமாகும். ஆனால், நீங்கள் ஒருவரிலொருவர் சண்டையிடுபவர்களாக இருந்தால் அது மிகவும் விசனத்துக்குரிய காரியமாகும். உங்கள் நடுவில் சண்டையிருப்பின் அது நீங்கள் தேவனால் பிறந்த மறுபிறப்பின் காரியத்தைக் குறித்து சந்தேகத்துக்குரிய கேள்வியை எழுப்ப வகை செய்யும். அப்படிப்பட்ட செய்கை தேவனுடைய வசனத்துக்குப் பொருந்தாத ஒரு செயலாகும். தேவனுடைய சாயலை தனது முகத்தில் தாங்கிய ஒரு தேவ பிள்ளையை நீ காண்பாயானால் அந்த சகோதரனை முழுமையான தேவ அன்போடு நேசி, அதிகமாக நேசி. இந்த மனிதனும் நானும் ஒன்றாக எங்கள் பரலோகத் தந்தையின் வீட்டில் ஒரு நாள் ஒன்றாகக் கூடுவோம் என்று உனக்குள்ளாக நீ சொல்லிக் கொள். ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்யுங்கள். உன் சகோதரரில் ஒருவன் உனக்கு தீங்கு செய்தால் அதை அவனுக்கு அன்பாக மன்னித்து இன்னும் அதிகமாக அவனை நேசிக்கத்தக்க நல்ல அன்பின் இருதயத்தை கர்த்தர் உனக்குத் தரும்படியாக ஜெபம் செய்.

கடைசியாக நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருந்தால் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். பரிசுத்தமுள்ள தேவன் உங்கள் தேவன் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொண்டு தேவனுடைய பிள்ளைகளைப்போல வாழ்ந்து அவருடைய வருகையின் நாளிலே சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.


ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி


ஜெபம் பண்ண ஆரம்பிப்பதற்கு முன்பாக உனது ஆத்துமாவிடம் இவ்விதமாக கேள்விகள் எழுப்ப வேண்டும். “ஓ என்ஆத்துமாவே, நீ என்ன நோக்கத்தோடு இந்த இடத்துக்கு வந்தாய்? ஜெபத்திலே உன் ஆண்டவரோடு உறவாட வந்தாயா? உன் ஆண்டவர் உனது ஜெபத்தைக் கேட்க பிரசன்னராகி இறங்கி வந்திருக்கின்றாரா? அவர் உனது ஜெபத்தைக் கேட்பாரா? அவர் உனக்கு இரங்கி உதவி செய்வாரா? நீ ஜெபத்திற்காக வந்த காரியம் உனது ஆத்துமத்தின் நித்திய நன்மைக்கான காரியத்துக்காகவா? உனது ஜெபத்தில் எந்தெந்த வார்த்தைகளைக் கூறி உனது ஆண்டவரை உன்மேல் மனதுருகப்பண்ணப் போகின்றாய்?”

ஜெபத்திற்கான உனது ஆயத்தங்கள் முழுமையடையவும், பூரணப்படவும் வேண்டுமானால் நீ உன்னை தூசியாகவும், சாம்பலுமாகவும் எண்ணிக் கொள். கர்த்தராகிய நமது ஆண்டவர் மகாபெரியவரும், வானங்களைத் திரையைப் போல விரித்து, ஒளியை வஸ்திரமாக தரித்து, மேகங்களைத் தமது இரதமாக்கி காற்றினுடைய செட்டைகளின் மேல் செல்லும் மகத்துவமும், மாட்சியும் பொருந்திய மகா பெரிய தேவன் என்பதை நீ கண்டு கொள்ளல் வேண்டும். பரிசுத்தமுள்ள கர்த்தருக்கு முன்பாக நீ ஒரு நீசப்பாவி என்பதை உணரவேண்டும். சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவனுடைய சமூகத்தில் நீ ஊர்ந்து செல்லுகின்ற ஒரு அவலட்சணமான புழு மாத்திரமே என்பதை நீ ஞாபகத்தில் வைத்துக்கொள்ளல் மிகவும் அவசியமாகும்.

உனது ஜெபங்களில் எல்லாம் கர்த்தர் உனக்கு உனது வாழ்வில் பாராட்டின தயவுகள், இரக்கங்கள், எல்லையற்ற தாயடைவான அன்புகள், பாதுகாவல்களுக்காக அவருக்கு நன்றி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க ஒருக்காலும் மறந்துவிடக்கூடாது.

நீ ஜெபிக்கும்போது உனது இருதயமானது தேவனுக்கு ஏறெடுக்க நன்றிப் பெருக்கோடு கூடிய புகழ்ச்சி வார்த்தைகள் இல்லாதிருந்தாலும் அதைப்பற்றிப் பரவாயில்லை. ஆனால் நீ தேவனுக்கு ஏறெடுக்கும் மன்றாட்டு வார்த்கைளில் உனது முழுமையான இருதயக் கவனம் இல்லாமல் போய்விட அனுமதித்துவிடாதே.

ஜெபம் ஒரு மனிதனை பாவம் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தும் அல்லது பாவமானது ஒரு மனிதனை ஜெபிக்கக்கூடாதவாறு நயங்காட்டி ஜெபத்தை தடை செய்யும்.

ஒரு மனிதனுக்குள்ள தேவனைத்தேட வேண்டும் என்ற ஜெப வாஞ்சையின் ஆவியானது அநேக ஆயிரம் பொன் வெள்ளியைக் காட்டிலும் அளவிட இயலாத மாபெரும் பொக்கிஷமாகும்.

லோக மாந்தரே, அடிக்கடி ஜெபம்பண்ணுங்கள். ஏனெனில், அது ஒன்றே நமது ஆத்துமாவை வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளின் தாக்குதலின்று நம்மைப் பாதுகாக்கும் கேடயமாகும். ஜெபமானது நாம் தேவனுக்கு செலுத்தும் ஜீவபலியாகவும், சாத்தானை அடித்து விரட்டி ஓட்டும் கண் எரிச்சலின் தீப்புகையாகவும் உள்ளது என்பதை நாம் ஒருக்காலும் மறந்துவிடக்கூடாது.


பரலோக பேரின்பங்கள் குறித்து ஜாண் பன்னியன் கூறியவை


இந்த ஜீவனில் எந்த ஒரு நன்மையுமே இல்லை. இந்த உலகத்தில் நாம் இன்பம் என்று சுவைத்து அனுபவிப்பது எல்லாம் துன்பம் சேர்ந்தவையாகும். தீங்கில்லா உலக இன்பமே கிடையாது. உலக மேன்மைகளும், பெயர், புகழ், பட்டம், பதவி, செல்வம் அனைத்தும் நிலையாமை உள்ளவைகளும், குழப்பங்களையும், வேதனைகளையும் உண்டுபண்ணக்கூடியவைகளுமாகும். உலகின் ஐசுவரியம் தனக்கு இறக்கைகளை உண்டுபண்ணிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து போய்விடும். உலகம் அளிக்கும் சரீர இன்பங்கள் மானிட தேகத்துக்கு நோய் நொடிகளைக் கொண்டு வரக்கூடியவைகள்.

ஆனால், மோட்ச இன்ப நாட்டில் நாம் காணக்கூடிய ஆசீர்வாதங்கள் அனைத்தும் மாசற்றதும், பூரண பொலிவும், சம்பூரணமும் உடையவைகளாகும். அந்த பரலோக இன்பங்களில் கலந்திருக்கும் பொருட்கள் அவைகளை மென்மேலும் இனிமைதான் ஆக்குமே தவிர அவைகளை சற்றுகூட கசப்பாக்க இயலாது.

ஆ, மனுஷருடைய இருதயத்தால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க இயலாத அந்த பரலோக பேரின்பங்களை யாரால் ஆராய இயலும்! “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1 கொரி 2 : 9) அவைகளை தங்கள் மட்டாக ருசித்து அனுபவித்தவர்களுக்கேயல்லாமல் வேறு ஒருவருக்கும் மோட்சத்தின் முன் ருசி தெரியாது. தேவனே, இந்த மாய உலகத்தின் மோசம்போக்கும் வஞ்சக கானல் நீர் இன்பங்களுக்கு நாங்கள் பெரும் மதிப்பு கொடுத்து வாடாததும், மாசற்றதும், என்றும் அதின் பூரண அழகிலே நிலைத்து நிற்கக்கூடிய நித்தியானந்த மோட்ச பாக்கியங்களை நாங்கள் கை நழுவ விடாதபடி எங்களைக் கிருபையாகக் காத்துக்கொள்ளும்.

ஆட்டுக்குட்டியின் மணவாட்டியாகிய பரிசுத்த திருச்சபை தனது மணவாளனாம் கிறிஸ்துவோடு நித்திய நித்திய காலமாக மோட்சலோகில் வாழ்வதற்காக வரும்போது பரலோகம் எப்படியாக ஆனந்தித்து ஆரவார முழக்கமிட்டு களிகூரும்!

இயேசு இரட்சகர் ஒருவரே நாடுகளின் வாஞ்சையும், தேவதூதர்களின் களிகூருதலும், பரம பிதாவின் மனமகிழ்ச்சியா யிருக்கும்போது அவரை தனது ஆத்தும நேசராக என்றென்றைக்குமுள்ள சதா காலங்களுக்கும் தனது இருதயத்தில் பெற்றுக்கொண்ட மாந்தனின் மனமகிழ்வுக்கு எல்லை எங்கே! சாத்தானாம் பிசாசு, அந்திக்கிறிஸ்து, காயீனின் சந்ததி போன்றவையால் வரக்கூடிய எல்லா பயங்களுக்கும் என்றுமாக நீங்கிய அனைத்து தேவனுடைய பிள்ளைகளும் பரலோகத்தில் ஒன்று சேரும் காலம் எத்தனை குதூகலமான ஆனந்த நாள்!

நீதிமான்கள் துன்மார்க்கரைப் பார்த்து “பூமியில் உங்கள் இன்பங்களால் நீங்கள் அடைந்த லாபம் என்ன?” என்றும் “உங்களுடைய எல்லா மேன்மைகளாலும் நீங்கள் பெற்ற ஆறுதல் யாது?” என்றும் “பூலோகத்தில் நீங்கள் மேற்கொண்ட உங்கள் பிரயாசங்கள் யாவற்றாலும் உங்களுக்கு கிடைத்த பலன் என்ன?” என்றும் கேட்கும் காலம் வராமல் போய்விடும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

வாசிக்கும் ஆத்துமாவே, இவைகளைஎல்லாம் உனது சொந்தக் கண்களால் நீ காண வேண்டுமானால் உனது பாவங்களுக்காக உனது மார்பில் அடித்து மனந்திரும்பி, உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் இன்றே உன் உள்ளத்தில் பெற்று தேவ பெலத்தால் அனுதினமும் நீ பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும்.

பரிசுத்த பக்த சிரோன்மணிகள்

  • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
  • தலையங்கச் செய்தி
  • ராபர்ட் மொஃபட் (1795 – 1883)
  • ஜாண் பன்னியன் (1628 – 1688)
  • கார்டன் ஹால் (1784 – 1826)
  • ஆண்ட்ரு போனர் (1810 – 1892)
  • சார்லஸ் ஹட்டன் ஸ்பர்ஜன் (1834 – 1892)
  • ஸ்காட்லாந்து தேச பரிசுத்தவான் ராபர்ட் மர்ரே மச்செயின் (1813 – 1843)
  • வில்லியம் கிரிம்ஷா (1708 – 1763)
  • தனித்தாள் தேவ ஊழியர் (Colporteur) “அங்கிள் ஜாண் வாசர்” (1813 – 1878)

ராபர்ட் மொஃபட் (1795 – 1883)

ஜாண் பன்னியன் (1628 – 1688)

கார்டன் ஹால் (1784 – 1826)

ஆண்ட்ரு போனர் (1810 – 1892)

சார்லஸ் ஹட்டன் ஸ்பர்ஜன் (1834 – 1892)

ராபர்ட் மர்ரே மச்செயின் (1813 – 1843)

வில்லியம் கிரிம்ஷா (1708 – 1763)

“அங்கிள் ஜாண் வாசர்” (1813 – 1878)

  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு




Copyright © www.devaekkalam.com. All Rights Reserved.