தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்
“காண்டா மிருகத்துக்கு ஒத்த பெலன் அவர்களுக்கு உண்டு” (எண் 23 : 22) என்ற கர்த்தருடைய வசனத்தின்படி பன்னியனுடைய பெலன் அபரிதமாக இருந்தது. கர்த்தருடைய நாம மகிமைக்காக அவர் 66 புத்தகங்களை எழுதினார். அவற்றில் சில அநேக நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்டதாகும். அவர் எழுதிய “மோட்ச பிரயாணம்” என்ற புத்தகம் உலகம் உள்ளவரை அவரது ஆண்டவரது புகழையும், மகிமையையும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும். அவர் தமது எழுத்து வேலைகளுடன் பல இடங்களுக்கும் ஓடி ஓடி சென்று பிரசங்கிப்பதிலும், போதிப்பதிலும், மக்களுக்கு தேவ ஆலோசனைகள் கூறுவதிலும், ஒரு குருவானவர் என்ற ஸ்தானத்தில் தனது சபை மக்களை சந்திப்பதிலும் தனது காலத்தை செலவிட்டார். தனது சிறைவாசமான 12 ஆண்டுகள் முடிந்த பின்னர் பன்னியன் அடிக்கடி லண்டன் பட்டணம் போய் வந்தார். அங்கு அவருக்கு அநேக கர்த்தருடைய பிள்ளைகள் நண்பர்களாகக் கிடைத்திருந்தனர். லண்டன் மா நகரத்து தலைவரான லார்ட் மேயர் ஷார்ட்டர் அவர்களே பன்னியனுடைய உற்ற நண்பரும், அவருடைய பிரசங்கங்களை அதிக ஆவலோடு கவனிக்கும் அன்பராகவும் இருந்தார். லண்டனிலுள்ள பல தேவாலயங்களும் அவரை பிரசங்கிக்க அழைத்தன. ஓய்வு நாட்களில் லண்டனிலுள்ள தேவாலயங்களில் அவர் பிரசங்கித்தால் 3000 பேர்கள் மிக எளிதாக கூடிவிடுவார்கள். தேவாலயங்களில் இடம் போதாத காரணத்தால் அவரது செய்திகளை கேட்க இயலாமல் வீட்டுக்கு துக்கத்துடன் திரும்பிச் செல்லுவோரும் ஏராளம் உண்டு. பன்னியன் பிரசங்கிக்கப் போகின்றார் என்று ஒரு நாளுக்கு முன்னர் அறிவிப்பு கொடுத்தால் தேவாலயம் நிரம்பி வழியும் அளவுக்கு மக்கள் கூடிவிடுவார்கள். கடுங்குளிரான பனி நாட்களிலும் கூட இருள் சூழ்ந்த அதிகாலை நேரம் ஓய்வு நாள் இல்லாத இடை நாளில் கூட 17 ஆம் நூற்றாண்டான அந்த ஜனப்பெருக்கம் இல்லாத காலத்தில் 1200 பேர் வரை கூடிவிடுவார்கள். அவரது பிரசங்கங்களால் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட மக்களின் தொகை மிகப் பெரிய ஒன்றாகும். கர்த்தருடைய கல்வாரி அன்பை நினைத்து கண்ணீர் விட்டு கதறும் தேவ பக்தன் அவர். கர்த்தருடைய இராப்போஜன பந்தியில் அவர் பங்கு பெறும் போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட தனக்களிக்கப்படும் அப்பத்தையும், திராட்ச ரசத்தையும் புசித்துப் பானம் பண்ணுவார்.
“மோட்ச பிரயாணம்” என்ற அவரது புத்தகம் அவரது வாழ்நாட் காலத்திலேயே 1,00,000 (ஒரு இலட்சம்) பிரதிகள் விற்பனையானது. 100 மொழிகளுக்கு மேல் அந்த நூலை மொழி மாற்றம் செய்துள்ளனர். பன்னியனுடைய மரணத்துக்குப் பின்னர் அந்தப் பக்தி நூல் எத்தனை லட்சங்கள் அச்சிடப்பட்டு எத்தனை எத்தனை மொழிகளில் விற்பனையாயின என்பது எவராலும் கணக்கிட இயலாத காரியமாகும். கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்துக்கு அடுத்த ஸ்தானத்தில் அந்த பரிசுத்த புத்தகம் வைத்துப் போற்றப்படுகின்றது. ஜாண் பன்னியன் மாத்திரம் நினைத்திருந்தால் அவருடைய புத்தகங்களின் விற்பனை மூலமாக கிடைக்கக்கூடிய பதிப்புரிமை (Royalty) மூலமாக கிடைக்கக்கூடிய பணத்தின் மூலமாக ஆடம்பரமான வீடுகளையும், நிலபுலங்களையும், பெருஞ்செல்வத்தையும் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், அவர் தனது மரணபரியந்தம் ஒரு ஏழை மனிதனாகவே இருந்து இந்த உலகத்தைவிட்டுக் கடந்து சென்றார். தனது பிரசங்கங்களுக்காக அதிகமான பணம் கொடுக்க முன்வரும் பெரிய கூட்டங்களில் அவர் பேசவே மாட்டார். பணத்தை அவர் விரும்பவே இல்லை. அவர் மரிக்கும்போது அவர் விட்டுச் சென்ற செல்வம் வெறும் 42 பவுண்டுகள் 19 ஷில்லிங் மட்டுமேதான்! பன்னியன் தனது முதல் மனைவி இறந்ததும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இரு மனைவிகளுக்குமாக சேர்த்து 3 ஆண்கள் 3 பெண்கள் இருந்தனர். ஆனால் இன்று அவரது வம்சாவழியில் அவரது கடைசி மகள் சாராள் குடும்பத்தினரே எஞ்சி உள்ளனர்.