ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை
ஜாண் பன்னியனின் 60 ஆண்டு கால பூலோக வாழ்க்கையில் முழுமையான 12 (பன்னிரண்டு)ஆண்டு காலத்தை அவர் தனது கர்த்தருக்காக சிறைக்கூடத்திலேயே செலவிட வேண்டியதாக இருந்தது. அப்படி 12 ஆண்டு கால சிறைவாசத்தை அனுபவிக்க அவர் எத்தனையானதொரு கொலை பாதகச் செயல் செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இல்லவே இல்லை, தேவனுடைய இரட்சிப்பின் மாட்சிமையான சுவிசேஷ சத்தியத்தை அந்த நாட்களில் இங்கிலாந்து தேச புராட்டஸ்டண்ட் சபையின் தேவாலயங்களில் பிரசங்கிக்க தடை செய்யப்பட்டிருந்தபடியால் தெருக்களிலும், சந்தை வெளிகளிலும், புல்மைதானங்களிலும், பண்ணை வீடுகளின் தானிய சேமிப்பு கிடங்குகளிலும், மக்கள் கூட்டம் எங்கெங்கெல்லாம் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் சென்று மக்களுக்கு பிரசங்கித்தபடியாலும், இங்கிலாந்து தேச திருச்சபையினர் தங்கள் தேவாலயங்களில் பயன்படுத்தும் “பொதுவான ஜெப புத்தகத்தை” (Common Prayer Book) அவர் ஏற்றுக் கொள்ளாததாலும், அதை பயன்படுத்த மறுத்ததாலும் அந்த நீண்ட கால சிறை வாழ்க்கை அவருக்கு கிடைத்தது.
17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தின் சிறைக் கூடங்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அவர் அடையுண்டு கிடந்த பெட்போர்ட் சிறைக்கூடத்தில் குளிர் காய எந்த ஒரு கணப்பு அடுப்புகளும் இல்லாதிருந்தது. சிறைக் கைதிகள் தரையில் போடப்பட்டிருந்த வைக்கோற் புல்லின் மேல் படுத்திருந்தனர். கழிப்பிட வசதிகளைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அவர் அந்த இருளான சிறைக்கூடத்தில் பட்ட பாடுகளையும், துயரங்களையும் அதிகமாகப் பொருட்படுத்தாமல் தனது வீட்டில் இருந்த மனைவி மற்றும் பிள்ளைகளைப் பற்றித்தான் குறிப்பாக தனது கண் பார்வையை இழந்து குருடாக இருந்த சின்ன மகள் மேரியை எண்ணிக் கலங்கினார். அவர் அடையுண்டு கிடந்த சிறைக்காவலனுக்கு பணம் கொடுப்பதன் மூலமாக சில சிறிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்த விசயத்தில் பெட்போர்ட்டிலுள்ள ஜாண் பன்னியனை அதிகமாக நேசித்த அவரது தேவ பக்தியுள்ள நண்பர்களும், கர்த்தருடைய பிள்ளைகளும் சிறைக் காவலர்களுக்கு உதவி செய்து வந்தனர். அதின் காரணமாக அவர் தனது சிறைக்கூட அறையை விட்டுவிட்டு அவ்வப்போது தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பெட்போர்ட்டை சுற்றியுள்ள இடங்களுக்குச் சென்று வந்தார். ஒரு தடவை தேவ தயவால் அவர் லண்டன் பட்டணம் வரை கூட போய் வந்தார். ஆனால் இவை எல்லாவற்றிலும் தேவனுடைய பாதுகாவலின் கரம் அவருடன் கூட இருந்தது என்பதை நாம் மறப்பதற்கில்லை.
ஒரு நாள் இரவில் அவர் தனது மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக சிறைக்கூட காவலரால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீடு சென்ற ஜாண் பன்னியன் குடும்பத்தினருடன் ஓரிரு மணி நேரங்கள் இருந்த பின்னர் கர்த்தருடைய ஆவியானவர் அவரை உடனடியாக சிறைக்கூடத்திற்கு திரும்பிச் செல்ல ஏவினார். ஆவியானவரின் தூண்டுதலை உணர்ந்த அவர் மிகவும் விரைவாக தனது சிறைக்கூட அறைக்கே திரும்பி வந்துவிட்டார். அவர் வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள்ளாக அவரது எதிரிகளான இங்கிலாந்து தேச மன்னரின் ஆட்கள் பட்டணத்தின் உயர்ந்த காவல் துறை அதிகாரிகளுடன் சிறைக்கூடத்திற்கு வந்துவிட்டனர். ஜாண் பன்னியன் சிறையில் இருக்கின்றாரா என்பதை கேட்டறிந்த அவர்கள் தாங்களாகவே நேரில் சென்று அங்கு அவர் இருப்பதைக் கண்டு திருப்தியுடன் சென்றனர். அந்த இரவு முழுவதுமே ஜாண் பன்னியனை அவருடைய வீட்டில் இருந்துவிட்டு அடுத்த நாள் காலையில்தான் வருவதற்கு சிறைக்காவலர் கேட்டிருந்தார். ஆனால், தேவ நடத்துதல் அவரை உடனே திரும்பி வரச் செய்ததால் பெரிய தண்டனையிலிருந்து அவர் தப்பிக் கொள்ள முடிந்தது. தனக்கு விரோதமாக இங்கிலாந்து தேச மன்னரே இருப்பதை உணர்ந்த பன்னியன் எப்படியாவது ஒரு நாள் தனக்கு நிச்சயமாகத் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்பதை எதிர்நோக்கியிருந்தார். ஆனால், தேவன் அவரை தூக்குத் தண்டனையிலிருந்து காத்துக்கொண்டார். சிறைக்கூடத்தில் இருக்கும் போது அவர் தனது கரிய நிழல் உருவத்தை சுவரில் பார்க்கும் போதெல்லாம் தன்னை துரிதமாகச் சந்திக்கப் போகும் மரணமே அது என்று எண்ணிக் கொண்டிருந்ததாக எழுதியிருக்கின்றார். சிறைக் கூடத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் நிலையில் தன்னைக் காண வந்திருக்கும் தனது மனைவியையும், அருமைக் கண்மணி பிள்ளைகளையும் சந்திக்கும் கண்ணீரின் காட்சியை படத்தில் நீங்கள் காண்கின்றீர்கள். தனது பிள்ளைகளில் ஒன்றை அவர் கட்டி அணைத்துப் பிடித்து முத்தமிடுவதையும் நாம் ஆறாத் துயரத்துடன் காண்கின்றோம்.
பெட்போர்ட் சிறைக்கூடத்திலிருந்த ஜாண் பன்னியனுக்கு கர்த்தருடைய பரிசுத்த வேதாகமமும், ஜாண் ஃபாக்ஸ் என்ற பரிசுத்த பக்தன் எழுதிய “இரத்த சாட்சிகளின் வரலாறு” (Fox’s Book of Martyrs) என்ற புத்தகமும், மார்ட்டின் லூத்தர் எழுதிய வேத வியாக்கியான புத்தகமும் மிகவும் பயனுள்ளவைகளாக இருந்தன. தனது சிறைவாச காலத்தின் பெரும் பகுதியை அவைகளை வாசிப்பதிலேயே அவர் செலவிட்டார். கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை அவர் எத்தனை தடவைகள் முழுமையாக வாசித்திருப்பார் என்பதைப் பற்றிய தகவல்கள் நமக்கு இல்லாத போதினும் அந்த தேவ மனிதர் அதை பல நூறு தடவைகள் வாசித்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்தபடியாக கிறிஸ்தவ உலகம் போற்றும் “மோட்ச பிரயாணம்” என்ற பரிசுத்த பிரபந்தத்தை இந்த பெட்போர்ட் சிறைக்கூடத்தில் இருந்தபோதுதான் ஜாண் பன்னியன் எழுதினார். வேதாகமத்தைப் போன்றே மோட்ச பிரயாணமும் உலகத்தின் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதின் ஒரே காரணம், மோட்ச பிரயாணம் புத்தகம் முழுமையும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. மோட்ச பிரயாண புத்தகத்தை வாசிப்போர் பரிசுத்த வேதாகமத்தின் நறுமணம் அதின் ஒவ்வொரு பக்கங்களிலும் வாசனை வீசி பரிமளித்துக் கொண்டிருப்பதை கண்டு கொள்ளலாம். ஜாண் பன்னியன் உயிரோடிருந்த காலத்திலேயே அது பல தடவைகள் அச்சுப் பதிக்கப்பட்டதுடன் அநேக ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது.
ராட்சத தேவ மனிதரும், பிரசங்க வேந்தருமான சார்லஸ் ஸ்பர்ஜன் என்பவர் மோட்ச பிரயாண புத்தகத்தை 100 தடவைகள் முழுமையாக வாசித்து கர்த்தருக்குள் ஆனந்தித்திருக்கின்றார் என்றால் நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! அந்த பக்த சிரோன்மணி அதைக்குறித்துக் கூறும்போது நீங்கள் “மோட்ச பிரயாணம்” புத்தகத்தில் எந்த இடத்தில் ஊசியால் குத்தினாலும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை என்ற BIBILINE அதிலிருந்து சுரந்து வருவதை நீங்கள் காணலாம் என்று கூறினார். பூமாலைகள் பின்னும் பூக்கடைக்காரர் வாசமிகும் வண்ண வண்ண மலர்களால் தனது மாலையை உருவாக்குவதுபோல ஜாண் பன்னியன் தமது மோட்ச பிரயாண நூலை முழுமையாக தேவனுடைய வசனங்களால் கோர்வைப்படுத்தியிருப்பதை அதை வாசிக்கும் எவரும் எளிதில் கண்டு கொள்ளலாம்.
ஜாண் பன்னியன் சிறைக்கூடத்தில் இருந்த நாட்களில் வேறு அநேகம் புத்தகங்களையும் எழுதினார். அதில் “திருப்போர்” (HOLY WAR) என்ற புத்தகமும் சிறப்பான ஒன்றாகும். பெட்போர்ட் சிறைக்கூடத்தில் இருந்த நாட்களில் அவர் தனது மனைவி, பிள்ளைகளை காப்பாற்ற சப்பாத்துக்களைக் கட்டும் நல்ல அழகான வண்ண வண்ண ஜரிகை நாடாக்களை நிறைய எண்ணிகையில் தயாரித்து அவைகளை தனது கண்ணற்ற கபோதி மகளான மேரியைத் தன்னருகில் நிறுத்திக்கொண்டு தான் அடையுண்டு கிடந்த சிறைக்கூடத்தின் பிரதான நுழைவு வாயிலில் நின்று கொண்டு தெருவில் போகின்ற மக்களுக்கு விற்பனை செய்து அதின் மூலமாகக் கிடைத்த பணத்தைக்கொண்டு தன் மனைவி பிள்ளைகளைக் காப்பாற்றினார். தனது குருடான மகள் மேரி இறந்தபின்னர் அவர் மட்டும் தனியாக நின்று சப்பாத்து நாடாக்களை விற்பனை செய்தார். பெட்போர்ட் நதியையும், ஜாண் பன்னியன் சிறை வைக்கப்பட்டிருந்த நதியின் பாலத்துக்கு அருகிலுள்ள பெட்போர்ட் சிறைக்கூடத்தையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
தான் சிறையிலிருந்த நாட்களில் தன்னோடு சிறையில் இருந்த கைதிகளுக்கும் தேவனுடைய சுவிசேஷத்தை அவர் எந்த ஒரு அரசாங்க தடையும் இல்லாமல் தாராளமாகப் பிரசங்கித்தார். இறுதியாக அவர் 1676 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையுண்டு கிடந்த சிறைக்கூடம் 1801 ஆம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்தச் சிறைக்கூடத்தின் மூன்று அடுக்குகள் கொண்ட ஓக் மரத்திலான பிரமாண்டமான கதவு இந்நாள் வரை லண்டன் பட்டணத்திலுள்ள அருங்காட்சியகத்தில் ஞாபகச்சின்னமாக வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.