ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்
ஜாண்பன்னியன், ஒரு வேதாகம ஆசிரியரும், பிரசங்கியாரு மாவார். ஆனால், அது அவருக்கே தெரியாது. அவர் எந்த ஒரு வேதாகம கல்லூரிக்கும் சென்று திருமறை பயின்றவர் அல்ல. அவர் தேவ வல்லமையால் நிறைந்திருப்பதை அவருடைய தேவச் செய்திகளைக் கேட்ட மக்கள் அவரில் கண்டு அவருக்குத் தெரிவித்தனர். அவர் தனது முயற்சிகளில் கிட்டத்தட்ட நம்பிக்கையிழந்து போகும் கடைசி கட்டம் வரை செல்ல வேண்டியதானது. எரிகின்ற தீச்சூழையின் அக்கினி ஏழு மடங்கு ஜூவாலித்து எரியவும், அதின் ஊடாக தேவன் அவரை கடந்து செல்லவும் பண்ணினார். அந்த அக்கினியின் ஊடாக தேவ குமாரனை அவர் கண்டுகொள்ளும் வரை அவரை அழைத்துச் சென்றார். இறுதியில் அவர் கண்களிலிருந்து செதில்கள் விழுந்தன. ஜாண் பன்னியன் தனது ஆண்டவர் இயேசுவைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவரை அறிந்து அவருடன் ஐக்கியம் கொண்டிருந்த பெட்ஃபோர்டிலுள்ள கிறிஸ்தவ தேவ மக்கள் ஜாண் பன்னியன் மனந்திரும்பிய சாதாரண ஒரு விசுவாசி அல்ல என்றும் வெறுமனே தண்ணீரில் மூழ்கிமட்டும் அவர் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டவரல்ல என்றும் பெந்தேகோஸ்தே நாளின் அக்கினி அபிஷேகம் அவரில் அமர்ந்தருப்பதையும் அவர்கள் திட்டமாகக் கண்டு கொண்டார்கள்.
தனது பாதங்களண்டை பக்தி வினயத்தோடு அமர்ந்து தேவனுடைய வார்த்தைகளைக்கேட்க மிகவும் வாஞ்சை கொண்ட மக்களுக்கே மிகவும் மனத்தாழ்மையுடன் ஜாண் பன்னியன் கர்த்தருடைய வார்த்தைகளை விளக்கிக் கூறுவார். அதைச் செய்ய விரும்பும் மக்கள் ஜாண் பன்னியனை முதலாவது மிகவும் வேண்டி விரும்பி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். பெருங்கூட்டங்களில் தேவனுடைய செய்தியைக் கொடுப்பதைவிட சொற்பமாகக் கூடி வரும் சிறு சிறு கூட்டங்களில் பேசவே அவர் அதிகமாக விரும்புவார். எனினும், இரண்டு பெரிய தேவாராதனைக் கூட்டங்களில் அவர் ஒழுங்காக பேசி வந்தார். அவருடைய பிரசங்கங்களைக் கேட்ட மக்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு நன்றி கூறி அவரைத் துதித்து மகிமைப் படுத்தினார்கள்.
எந்த ஒரு தீர்க்கத்தரிசிக்கும் அவனது சொந்த ஊரில் கனம் இல்லை என்பதை அறிந்திருந்த காரணத்தினாலோ என்னவோ ஜாண் பன்னியன் தனது சொந்த இடங்களான எல்ஸ்டவ் மற்றும் பெட்ஃபோர்ட் இடங்களில் அதிகமாகப் பிரசங்கித்ததாகத் தெரியவில்லை. ஆனால், சுற்றியுள்ள பல இடங்களிலும் அவர் பிரசங்கித்து திரளான மக்களை கர்த்தரண்டை வழிநடத்தினார். அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட தேவனுடைய வார்த்தைகளைக் கேட்ட மக்கள் அந்த நாட்களில் சமீபத்திலும், தூரத்திலுமாக இருந்து வந்து நூற்றுக்கணக்கில் திரண்டனர். “மனுமக்களின் பாவங்களுக்கு எதிராகவும், அந்தப் பாவங்களின் காரணமாக அவர்கள் சந்திக்கப் போகும் பயங்கரமான நித்திய நியாயத்தீர்ப்பினை நினைத்தவனாகவும் நான் இரண்டு வருடங்கள் அழுதுகொண்டே சுற்றித்திரிந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்” என்று ஜாண் பன்னியன் ஒரு தடவை கூறினார்.
“நான் பிரசங்கிக்கும்போது என் இருதயம் அடிக்கடி “தேவனே, உம்முடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் உம்முடைய ஜனங்கள் ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளுவார்களாக” என்று தனக்குள்ளாக கூக்குரலிடும்” என்று அவர் சொல்லியிருக் கின்றார்.
தேவன் அவருடைய ஊழியத்தை ஆசீர்வதித்து தம்முடைய தாசனை தேவனுடைய வசனங்களைக் குறித்த ஆழமான அனுபவங்களுக்குள் வழிநடத்திச் சென்றார். பரிசுத்த ஆவியானவர் தனக்கு எதைப்போதித்தாரோ அதையே அவர் தேவனுடைய ஜனங்களுக்குப் பிரசங்கித்தார். மக்களுக்கு தேவனுடைய செய்தியைப் பிரசங்கிக்கும்போது மெய்யாகவே ஒரு தேவ தூதன் தன்னருகில் நின்று கொண்டு தன்னைப் பெலப்படுத்தி, தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதை தான் நன்றாக உணர்ந்து கொள்ள முடிவதாக அவர் ஆச்சரியத்துடன் சொல்லுவார். தனது பிரசங்கங்களில் தான் பேசிய சத்தியங்களை குறித்து தான் நம்புவதாகவோ அல்லது விசுவாசிப்பதாகவோ அல்லது இப்படித்தான் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டுச் சொல்லாமல் தான் கொடுத்த சத்தியம் மெய்யான தேவ சத்தியமே என்று உறுதியிட்டுப் பேசுவார்.
மக்களுக்கு தான் பிரசங்கிக்கப்போகும் பிரசங்கங்களை அவர் முன்கூட்டியே எழுதி ஆயத்தம் செய்து அதை மிகவும் கவனமாக வாசித்துக்கொள்ளுவார். எந்த ஒரு நிலையிலும் ஆயத்தமில்லாமல் அவர் பிரசங்கபீடம் ஏறமாட்டார். பிரசங்கித்திற்கான குறிப்புகள் அவர் கைவசம் இருக்கும். தனது பிரசங்கங்களில் அரசியல் சம்பந்தமான எந்த ஒரு விஷயத்தையும் அவர் குறிப்பிடுவதில்லை. “தனது பிரசங்கங்களின் குறிப்புகளை எல்லாம் யாராவது விரும்பிக்கேட்கும் பட்சத்தில் அவைகளைக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அவைகள் எல்லாம் ஆத்துமாக்களின்இரட்சிப்பையே மையமாக கொண்டிருப்பதை அவர்கள் காண முடியும்” என்று அவர் ஒரு தடவை சவால் விட்டுப் பேசினார்.
பன்னியன், தான் மக்களுக்கு பிரசங்கிக்கும் தேவச்செய்திகளை பிரசங்கம் செய்து முடிந்ததும் பத்திரமாக எழுதி வைத்துக்கொள்ளும் சிறந்த பழக்கத்தை தன் வசம் வைத்திருந்தார். அதின் காரணமாக அவருடைய எழுத்துக்கள் புத்தகங்களாக அச்சிடப்பட்டு நமக்குக் கிடைத்திருக்கின்றன. “நஷ்டப்பட்ட பாவியின் துயரப் புலம்பல்கள்” என்ற நரகத்திலிருந்து ஐசுவரியவான் எழுப்பிய வியாகுலங்களை ஐசுவரியவான்-லாசரு சரித்திரத்திலிருந்து (லூக்கா 16 ஆம் அதிகாரம்) அதை வாசிக்கும் எவரும் நடுநடுங்கும் விதத்தில் பிரமிக்கத்தக்கவிதமாக எழுதியிருக்கின்றார். அப்படி அவர் தனது பிரசங்கங்க குறிப்புகளைக் கொண்டு எழுதிய புத்தகங்கள் அநேகமாகும். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
ஜாண் பன்னியன் விரும்பியிருப்பாரானால் இங்கிலாந்து தேசத்திலேயே ஒரு புகழ்பெற்ற பிரசங்கியாராக ஆகியிருக்கலாம். அவரை வந்து பேசும்படியாக இங்கிலாந்தின் பெரிய பெரிய பட்டணங்களிலிருந்த தேவாலயங்கள் எல்லாம் அவருக்கு அழைப்புகள் அனுப்பின. ஆனால் தேவ மனிதர் அவைகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டத்திற்கு வந்து பேசுவதற்கு முன்னால் அதற்கான பணத்தை திட்டமாகப் பேசிச்செல்லும் பிரசங்கியார்களைப்போல இல்லாமல் அப்படிப்பட்ட கூட்டங்களில் சென்று பேசுவதானால் தனக்கு அதிகமான பணம் கிடைக்கும் என்றும் அதினால் தனது தற்போதைய எளிய நிலை மாறி ஐசுவரியவானாக உயர்ந்துவிடும் என்றும் அதின் மூலம் தான் பெற்ற தேவனுடைய அளவற்ற கிருபையின் ஐசுவரியத்தை இழக்க நேரிடும் என்று அஞ்சி அப்படிப்பட்ட பெருங்கூட்ட அழைப்புகளை எல்லாம் அவர் திட்டமாக மறுத்து உதறித் தள்ளினார்.
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் அந்த நாட்களில் துணை வேந்தராக (Vice-Chancellor) இருந்த மா மேதையும், ஒப்பற்ற ஞானவானும், சிறந்த தேவ பக்தனுமான ஜாண் ஓவன் என்பவரிடம் அந்நாட்களில் இங்கிலாந்து தேசத்தை அரசாண்டு கொண்டிருந்த 2 ஆம் சார்லஸ் மன்னர் ஒரு சமயம் “ஜாண் பன்னியனுடைய பிரசங்கங்களைக் கேட்க நீங்கள் அடிக்கடி ஏன் செல்லுகின்றீர்கள்? ” என்று கேட்டபோது “பெட்போர்ட் தகரக்காரர் (Tinker) ஜாண் பன்னியனைப்போன்று கிறிஸ்து இரட்சகரைப் பிரசங்கிக்கும் திறமையை அவர் என்னிடம் பண்டமாற்று செய்து கொள்ள முடியுமானால் எனக்குள்ள அனைத்து கல்வி ஞானங்களையும், தாலந்துகளையும் நான் அவருக்கு மிகவும் சந்தோசத்துடன் கையளிக்க ஆவலாக இருக்கின்றேன்” என்று மன்னர் வியப்பில் ஆழ்ந்து போகும் வண்ணம் சொன்னார்.