மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்
ஜாண் பன்னியன் மரணத்தின் பிடியிலிருந்து பல தடவை களிலும் கர்த்தரால் அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றார். ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத அந்த நாட்களில் அவருக்கு மரணம் சம்பவித்திருந்தால் நிச்சயமாக அவர் நரகத்துக்குத்தான் சென்றிருக்க வேண்டும். எனினும் தேவனுடைய அநாதி கிருபை அவரைப் பாதுகாத்தது. ஒரு சமயம் மலைகளுக்கு இடையேயுள்ள குறுகலான கடற்கழியில் விழுந்து நிச்சயமான மரணத்தின் பிடியிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார். பெட்போர்ட் நகரத்திலுள்ள நதியில் படகிலிருந்து ஒரு தடவை தவறி விழுந்தும் நீரில் மூழ்கிவிடாமல் கர்த்தரால் அற்புதமாக காக்கப்பட்டார். ஒரு தடவை அவர் தனது நண்பனுடன் வயல் வெளியில் நின்று கொண்டிருக்கையில் ரஸ்தாவில் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பைக் கண்டார். கையில் நல்ல வலுவான கம்பு இருந்ததால் விரைந்து ஓடிச்சென்று அதை முதுகில் பலமாக அடித்து அதை ஓட இயலாமல் செய்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை. தனது கம்பால் அதின் வாயைத்திறந்து அதின் விஷப்பல்லை தனது மதியீனத்தால் பிடுங்கி எடுக்க முயற்சித்தார். தனது முழுமையான முட்டாள்தனத்தால் தனது சாவை ஒரு நொடிப்பொழுதில் தனக்கு வரவழைத்துக் கொள்ள இருந்த இடத்தில் அவரை அதிகமாக நேசித்த அவருடைய அன்பின் தேவனுடைய கரம் அவரை அதிசயமாகப் பாதுகாத்துக்கொண்டது.
பன்னியன் தனது வாழ் நாள் முழுவதும் தன் ஆண்டவருக்கு நன்றி ஸ்தோத்திரம் ஏறெடுத்துக்கொண்டே இருக்கத்தக்கதான ஒரு அசாதாரண சம்பவம் அவரது வாழ்வில் நிகழ்ந்தது. அப்பொழுது அவர் ராணுவத்தில் இருந்தார். ஒரு இடத்தை அவரது படைப் பிரிவு முற்றுகையிட வேண்டுமென்பது மேலிடத்து கட்டளை. அவர் அதற்கு ஆயத்தமாகி போக தயாராகிக் கொண்டிருந்தபோது அவருடைய ஸ்தானத்தில் அவரது கூட்டாளி ஒருவன் அவருடைய சம்மதத்துடன் சென்று முற்றுகையிட்ட இடத்தில் காவலாளியாக நின்று கொண்டிருந்தான். அப்படி நின்று கொண்டிருந்த அவனது தலையை எதிரியின் நாட்டுத் துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு ஒன்று துளைத்துச் சென்றுவிட்டது. அந்த இடத்திலேயே அவன் துடிதுடித்து மாண்டான். தான் துடிதுடித்துச் சாக வேண்டிய இடத்தில் தனது நண்பன் மடிந்ததை அவர் மிகுந்த கண்ணீரோடு நினைவுகூர்ந்தார். இவைகள் எல்லாம் நடைபெற்றபோதினும் பன்னியன் மனந்திரும்பாமல் இன்னும் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்து கொண்டும், தேவனுடைய கிருபைக்கும், இரக்கத்துக்கும், அன்புக்கும் எதிராக கலகம் பண்ணிக் கொண்டும் தனது இரட்சிப்பின் காரியத்தைக் குறித்து மிகவும் அசட்டை செய்து கொண்டும் தனது காலத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார்.