அவர்கள் திட்டிவாசல் சேர்ந்தது
பின்பு நான் என் சொப்பனத்தில் கிறிஸ்தீனாளும், தயாளியும், பிள்ளைகளும் திட்டிவாசல் மட்டும் வந்ததைக் கண்டதாக நினைவு கொண்டேன். அவர்கள் வாசலண்டை வந்தவுடனே, எப்படித் தட்டலாம், யாரைக்கூப்பிடலாம் என்ன மறுமொழி சொல்லலாம் என்பதைப் பற்றி தங்களுக்குள்ளே பேசிக் கொண்டு, கடைசியாக, கிறிஸ்தீனாள் எல்லாரிலும் மூத்தவள் ஆனதால் அவளே கதவைத் தட்டவும் எல்லாரையும் உள்ளே ஏற்றுக் கொள்ளும்படி சிபாரிசு செய்யவும் தீர்மானித்துக் கொண்டார்கள். அப்படியே கிறிஸ்தீனாள் கதவைத் தட்டினாள். அவள் இரண்டொரு தடவை அல்ல, தன் அன்புள்ள புருஷன் செய்தது போல அனந்தம் முறை தட்டினாள். தட்டத் தட்ட திறக்கும் ஆள் வருகிறது போல காணப்படாமல் ஒரு நாய் சள், சள் என்று குலைத்துக்கொண்டு தங்கள் மேல் பாயும்படி வருகிறாற்போல் அவர்களுக்குக் காணப்பட்டது. அந்த நாயும் சின்னம் சிறியதாய் இராமல் பயங்கர ரூபமுள்ள பிரமாண்டமான நாயாக இருந்தது. இதினாலே அந்தப் பெண்டுகளும் பிள்ளைகளும் பயந்துபோனார்கள். அந்த நாய் தங்கள் மேல் பாய்ந்து பீறிப்போடும் என்ற அச்சத்தால் அவர்கள் கொஞ்ச நேரம் தட்டாமல் சும்மா இருந்துவிட்டார்கள். 1 அவர்கள் தங்கள் மனதில் மட்டற்ற கலக்கம் கொண்டபடியால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திகைத்துப் போனார்கள். நாயைப் பற்றிய பயத்தால் வாசலைத் தட்டத் துணிவு வரவில்லை. அதோடு ஓயாமல் தட்டினால் வாசல் சேவகன் நம்மேல் மனஸ்தாபப்படுவார் என்ற அச்சத்தால் பின்வாங்கிப் போகவும் மனம் துணியவில்லை. கடைசியாக , என்ன வந்தாலும் வரட்டும், தட்டுவதே சரி என்று தீர்மானித்துக் கொண்டு முன்னிலும் அதிக பலமாக ஓயாமல் தட்டினார்கள். வாசலின் நிலைகள் அசைகிறாற்போல கதவைத் தட்டின சத்தம் கேட்டவுடனே, வாசற் காப்போன் தன் வாய் திறந்து யார் அங்கே? என்று கேட்டார். உடனே நாயின் குலைப்பும் ஓய்ந்தது, கதவும் திறக்கப்பட்டது.
அப்பொழுது கிறிஸ்தீனாள் தலைகுனிந்து வணங்கிக்கொண்டு உங்கள் ஆண்டவன் தமது அரண்மனையில் அலங்கார வாசலை தட்டின அடிமைப் பெண்களின் பேரில் கோபம் கொள்ளாதிருப் பாராக என்று சொன்னாள். அதின் பின் வாசற்காப்போன் அவர்களை நோக்கி: நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்? உங்களுக்குத் தேவையாய் இருக்கிறது என்ன என்று கேட்டார்.
கிறிஸ்தியான் வந்த இடத்திலிருந்தே அடியாரும் புறப்பட்டு வருகிறோம். என் ஆண்டவர் சித்தங்கொண்டு உச்சித பட்டணத்துக்குச் செல்லும் பாதையில் நாங்கள் சேர எங்களைக் கிருபையாய் உள்ளே ஏற்றுக் கொள்ளுகிறதுண்டானால், அவர் போன பயணமே நாங்களும் போகலாம் என்றிருக்கிறோம். இன்னும் என்ஆண்டவனுக்குக் கோபம் வராதிருப்பதாக. அடியாள் இப்பொழுது உன்னத லோத்தில் வசிக்கும் கிறிஸ்தியானுக்கு ஒரு காலத்தில் மனைவியாய் இருந்திருக்கிறேன். என் பேர் கிறிஸ்தீனாள் என்றாள்.
அது கேட்டவுடனே வாசற்காப்போன் அதிசயப்பட்டு சில நாட்களுக்கு முன் மோட்ச பயணத்தை முழுப்பகையாய் பகைத்த நீயும் இப்பொழுது மோட்ச பிரயாணி ஆகிவிட்டாயா என்றார்? அப்பொழுது அவள் தலை குனிந்து மோட்ச பிரயாணி ஆகிவிட்டேன் ஐயா! இதோ நிற்கும் என் கர்ப்பக்கனிகளும் அப்படியே பிரயாணிகள் ஆகிவிட்டார்கள் என்றாள்.
அப்புறம் அவர் அவள் கையைப் பிடித்து உள்ளே சேர்த்துக் கொண்டு, சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்குத் தடை பண்ணாமல் இடங்கொடுங்கள் என்று சொல்லிக் கொண்டே அந்தப் பிள்ளைகளையும் உள்ளே வரச்சொல்லி திட்டிவாசலை அடைத்துக் கொண்டார். அப்புறம் அவர் திட்டிவாசலின் கொத்தளத்தின் மேல் நின்ற எக்காளக்காரனைக் கூப்பிட்டு இந்த க்ஷணமே நீ கிறிஸ்தீனாளின் வருகையை எக்காளத் தொனியோடும் ஆனந்த சத்தத்தோடும் பிரசித்தப்படுத்து என்று கட்டளை கொடுத்தார். அப்படியே அவன் தன் எக்காளத்தை உயர்த்தி உன்னதலோகம் எங்கும் இங்கிதநாதம் முழங்க ஊதினான். 2
இவை எல்லாம் நடக்கும்போது ஏழை தயாளி வெளியேதான் நின்றாள். நாம் தள்ளப்பட்டுப் போனோமோ என்ற கலக்கத்தாலும் பயத்தாலும் அவள் அழுது கொண்டே நின்றாள். கிறிஸ்தீனாள் தன் மக்களுடன் உள்ளே சேர்த்துக் கொண்ட பின்பு வெளியே நின்ற தயாளியையும் ஏற்றுக் கொள்ளும்படியாக மன்றாடத் துவக்கினாள்.
கிறி: அவள் வாசற்காப்போனைப் பார்த்து: என் ஆண்டவனே, என்னைப் போலவே மோட்ச பயணத்துக்கு ஆயத்தப்பட்டு கூட வந்த என் தோழிப்பெண் ஒருத்தி இன்னும் வெளியே தான் நிற்கிறாள். நான் என் கணவனுடைய அரசரின் விருப்பத்தின்படி புறப்பட்டு வருகிறேன். அவளோ நாம் அழைக்கப்படாத விருந்தாளிபோல் இருக்கிறோமே என்று தனக்குள் நினைத்துக் கொண்டு மனம் நொந்தவளாய் நிற்கிறாள் என்றாள்.
இப்பொழுது வெளியே நின்ற தயாளியின் ஆத்திரத்தை இவ்வளவென்று சொல்லக்கூடாது. தாமதம் ஆன ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு ஒரு மணி நேரம் போல் காணப்பட்டது. ஆதலால் உள்ளே இருந்த கிறிஸ்தீனாள் அவளுக்காக பரிந்து பேச வேண்டியதை எல்லாம் பேசி முடிக்கும்படி போதுமான சமயம் கொடாமல் தானே ஓயாமல் தட்டிக்கொண்டிருக்கத் துவக்கினாள். அவள் தட்டின தட்டு கிறிஸ்தீனாளை பிரமிக்கப்பண்ணும்படி அவ்வளவு பலமாய்த் தட்டினாள். அப்பொழுது வாசற்காப்போன் யார் அங்கே என்று கேட்டான்? அதுதான் என் தோழிப்பெண் என்று கிறிஸ்தீனாள் சொன்னாள்.
அவர் கதவைத் திறந்து பார்த்தார், பார்க்கவே தயாளி களைத்துப் போய் முகம் குப்புற விழுந்து கிடக்கிறதை கண்டார்.
வெகு நேரம் தட்டியும் ஏன் என்று கேட்பாரும் இல்லை, ஏற்றுக்கொள்ளுவாரும் இல்லையே நமக்கு இங்கே இடம் கிடையாதுபோல் இருக்கிறது என்று அவள் நினைத்து சோர்ந்து விழுந்து சுரணையற்றுக் கிடந்தாள்.
அபொழுது அவர் அவளைக் கையைப் பிடித்துத் தூக்கி, சிறு பெண்ணே எழுந்திரு என்று நான் உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அதற்கு அவள்: ஐயரே! அடியாள் சோர்ந்து போனேன், என் உயிர் அற்றுப்போயிற்று என்று சொன்னாள். அப்போது அவர்: பெண்ணே கலங்காதே, “என் ஆத்துமா என்னில் தொய்ந்து போகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது ள பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது” (யோனா 2 : 7) என்று ஒரு பக்தன் ஒரு தரம் சொன்னான். ஆதலால் மாதே மயங்காதே! எழுந்து காலூன்றி நின்று நீ வந்த விசேஷம் இன்னதென்று விளம்பு என்று கேட்டார்.
தயாளி: அதற்கு அவள் ஐயனே! அழையாத மணவீட்டில் நுழையும் விருந்தாளிபோல் அடியாள் கிறிஸ்தீனாள் அம்மாளோடு வந்தேன். அவள் அரசரின் கடிதம் பார்த்துப் புறப்பட்டாள். நானோ அவள் பேச்சைக் கேட்டுப் புறப்பட்டேன். அச்சமும் பயமும் என்னை ஆண்டுகொண்டிருக்கிறதால் உள்ளே பிரவேசிக்க பயப்படுகிறேன் என்றாள்.
வாசற்காப்போன்: இவ்விடத்துக்கு வரும்படி அவள் உன்னை விரும்பினாளா?
தயாளி: ஆம் ஐயா! விரும்பினாள், அதினாலேதான் என் ஆண்டவன் பார்க்கிறபடி அடியாள் இவ்விடமட்டும் வந்து நிற்கிறேன். எனக்கு அருளும்படியான கிருபைகளும் பாவமன்னிப்பும் உண்டா னால் அதை அனுபவித்து வாழும்படி இந்த ஏழை அடிமைப் பெண் ஆவலோடு கெஞ்சுகிறேன் என்றாள்.
அப்புறம் அவர் மறுபடியும் அவள் கையைப் பிடித்து தூக்கி மெதுவாக உள்ளே நடத்தி யாருடைய ஏவுதலினாலே நம்மிடத்தில் வந்தாலும் சரி, நமது மேல் விசுவாசம் வைக்கிறவர்கள் எல்லாருக் காகவும் நாம் வேண்டிக் கொள்ளுகிறோம் என்றார். அப்புறம் அவர் கிட்ட நின்றவர்களைக் கூப்பிட்டு தயாளியின் களைப்பு நீங்கும் படியான கந்தவர்க்கம் 3 ஏதாவது கொண்டு வாருங்கள் என்றார். அப்படியே அவர்கள் ஒரு கொத்து மருக்கொழுந்தைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அவள் அதை முகர்ந்து பார்த்துச் சோர்பு தெளிந்து உட்கார்ந்தாள்.
இப்படியாக கிறிஸ்தீனாளும் அவள் பிள்ளைகளும் தயாளியும் மோட்ச பாதையின் துவக்கமாகிய திட்டிவாசலின் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருடைய தயாளமுள்ள சம்பாஷணையில் பங்கு பெற்றார்கள். அவர்கள் பின்னும் அவரை நோக்கி: நாங்கள் எங்கள் அக்கிரமங்களை நினைத்து அகோர துக்கப்படுகிறோம். ஆண்டவர் அடியாருக்கு மன்னிப்பை அருளி அடியார் இனி செய்ய வேண்டியது இன்னதென்று கட்டளையிடப் பிரார்த்திக்கிறோம் என்றார்கள்.
அதற்கு அவர்: நாம் உங்களுக்கு வார்த்தையாலும் செய்கையாலும் 4 மன்னிப்பைத் தந்தோம். பாவ மன்னிப்பைப்பற்றிய நம்முடைய வாக்குத்தத்தங்களைக் கொண்டு வார்த்தையாலும் அந்த மன்னிப்பை நாம் சம்பாதித்த வகையைக் கொண்டு செய்கையாலும் உங்களுக்கு மன்னிப்பைத் தந்தோம். இவைகளில் முந்தினதை நமது திரு உதடு களின் முத்தத்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றது உங்களுக்கு வெளிப் படுத்துகிற பிரகாரம் அறிந்து கொள்ளுங்கள் என்று திருவுளம் பற்றினார். (உன்னதப்பாட்டு 1 : 2 யோவான் 20 : 20)
அதுவும் அல்லாமல் திட்டிவாசலின் தலைவர் அவர்களோடு அனந்தம் காரியங்களைப் பேசி அவர்களை அகமகிழச்செய்தார் என்று நான் என் சொப்பனத்தில் கண்டேன். அப்பால் அவர் அவர்களை வாசலின் மேல் இருந்த கொத்தளத்தில் ஏறிவரச்சொல்லி அவர்கள் இரட்சிக்கப்பட்ட முறையை அவர்களுக்கு காண்பித்து அவர்கள் தங்கள் பிரயாணத்தில் போகப் போக இந்தக்காட்சிகள் காணப்பட்டு அவர்களுக்கு ஆறுதலை அளிக்கும் என்றார்.
அப்பால் அவர் அவர்களை தாழ இருந்த ஒரு மண்டபத்துக்கு கூட்டிக்கொண்டு போய் சில காலம் தங்கி இருங்கள் என்று சொல்லி விடைபெற்றுப் போனார். அந்த மண்டபத்தில் சேர்ந்தபின்பு, கிறிஸ்தீனாளும் தயாளியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு பின்வருகிறபடி சம்பாஷணை செய்தார்கள்:
கிறிஸ்தீனாள்: நாம் இங்கே இருக்கிறதையிட்டு என் மனதில் உண்டாகிற ஆனந்தத்துக்கு ஓர் அளவில்லை.
தயாளி: நீ அப்படிச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் நான் உங்கள் எல்லாரைப் பார்க்கிலும் ஆனந்த கூத்தாட அநேக முகாந்தரங்கள் இருக்கின்றன.
கிறி: நான் திட்டிவாசலை தட்டியும் திறப்பார் ஒருவரும் எதிர்படாததாலும், அந்த பொல்லாத நாயின் குரைச்சலாலும் ஓகோ நமது பிரயாசம் எல்லாம் பிரயோஜனமற்றுப் போயிற்றே என்று ஒரு தரம் நினைத்தேன்.
தயாளி: எனக்கு அதிகக் கலக்கம் உண்டானது எப்போது என்றால் நீங்கள் எல்லாரும் அவருடைய தயவில் பங்குபெற்று உள்ளே போய் நான் வெளியே தனிமையாக விடப்பட்டிருந்தேனே அப்போதுதான். “இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டு இருப்பார்கள், ஒருத்தி ஏற்றுக் கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்” (மத்தேயு 24 : 41) என்ற வாசகம் என்னில் நிறைவேறுகிறதென்று அப்போது நினைத்துக் கொண்டேன். நான் மனம் தாளாமல் ஐயோ அதம் ஆனேன் என்று அலறவும் ஆத்திரப்பட்டேன். கதவைத் தட்டவும் பயம் இருந்தது. ஆனால், வாசல் நிலையின்மேல் எழுதப்பட்டிருந்த வாசகத்தைக் காணவே 5 சற்று தைரியம் உண்டாயிற்று. ஆதலால் கடைசியாக மறுபடியும் தட்டவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு வந்ததெல்லாம் வரட்டும் என்று தட்டினேன். ஜீவன் அல்லது சாவு என்ற தீர்மானம் என் மனதில் பலமாய்க் கிரியை செய்து கொண்டிருந்ததால் அந்த நேரத்தில் நான் எப்படித்தான் தட்டினேனோ அது எனக்கே தெரியவில்லை என்றாள்.
கிறி: நீ எப்படித் தட்டினாய் என்று சொல்லமாட்டாயா? உன் தட்டு அவ்வளவு உருக்கமாயும் மனதைக் கவர்ந்து கொள்ளத்தக்கதாயும் இருந்ததால் நானே அசந்து போய்விட்டேன். அப்படித் தட்டினதை நான் என் ஜீவகாலத்தில் கேட்டிருப்பதே இல்லை என்று நினைத்துக் கொண்டேன். நீ பலவந்தத்தோடு பரலோகராஜ்யத்தை பெற்றுக் கொள்ளும்படி (மத்தேயு 11 : 12) பலவந்தமாய் கதவை உடைக்கிறாயாக்கும் என்று நான் நினைக்கும்படி அவ்வளவு பலமாய்த் தட்டினாய்.
தயாளி: ஐயோ! என்னைப்போலொத்த ஸ்திதியில் இருந்தவள் அப்படிச் செய்யாமல் வேறென்னதான் செய்வாள்? உனக்குத் தெரிந்திருக்கிறபடி நான் வெளியே இருக்கக் கதவும் பூட்டப்பட்டதே. ஒரு துஷ்ட நாயும் சுற்றிச் சுற்றிக் குலைத்ததே. பின்னை நான் என்ன செய்வேன்? என்னைப்போலத் தொய்ந்து போன எந்த மனுஷன் அப்படித் தன் பலத்தோடுகூட தட்டாதிருப்பான்? நீயே சொல்லேன்! ஆனால் அம்மா, நான் துணிந்து தட்டினதற்கு ஆண்டவர் ஏதாவது சொன்னாரோ? அவர் என்மேல் கோபப்படவில்லையா?
கிறி: நீ கதவை மடமடவென்று விடாமல் தட்டினபோது, எஜமான் அதைக் குற்றமாய் எண்ணாமல் புன்னகை கொண்டார். நீ செய்தது அவருக்கு மெத்தப் பிரீதியாய் இருந்தது போலத் தோன்றுகிறது. யாதொரு கோபக்குறியும் அவர் முகத்தில் காணப்படவில்லை. ஆனால், நமது எஜமான் அப்படிப்பட்ட நாயை ஏன்தான் வைத்திருக்கிறாரோ? அது எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது. 6 இந்த நாயைப் பற்றிய சமாச்சாரம் எனக்கு முந்தியே தெரிந்திருக்குமானால் நான் இப்படித் துணிந்து புறப்பட்டிருக்கவே மாட்டேன். எப்படி இருந்தபோதினும் நாம் உள்ளே வந்துவிட்டோம், உள்ளேயே இருக்கிறோம். என் உள்ளம் இப்போது சந்தோசத்தால் பூரிக்கிறது.
தயாளி: உனக்குப் பிரியமானால் எஜமான் திரும்ப நம்மிடத்தில் வரும்போது இப்படிப்பட்ட கடி நாயை அவர் தமது முற்றத்தில் வைத்திருப்பதற்கு காரணம் என்னவென்று கேட்கலாம். அவர் அதை ஒரு குற்றமாய் எண்ணுவார் என்று நான் நினைக்கவில்லை என்றாள்.
பிள்ளைகள் எல்லாரும் அதைக்கேட்டவுடனே ஆம், ஆம், அப்படியே கேள்! அந்த நாயை கொன்று போடும்படி நாம் பிரயத்தனம் செய்ய வேண்டும். இந்த மடத்தைவிட்டு வெளியே போனால் அது கடித்துப் போடும் என்று நாங்கள் பயப்படுகிறோம் என்று சொன்னார்கள்.
கடைசியாக எஜமான் அவர்களைப் பார்க்கும்படி மறுபடியும் இறங்கி மடத்துக்கு வந்தார். அப்போது தயாளி அவர் பாதங்களருகே முகம் குப்புற விழுந்து வணங்கி “இப்பொழுதும் என் ஆண்டவன் தமது அடியாளுடைய உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலிகளை அங்கீகரிப்பாராக” என்று சொன்னாள்.
அப்போது அவர்: உனக்குச் சமாதானம் உண்டாவதாக, எழுந்து நில் என்றார். அவளோ முகங்குப்புற கிடந்து கொண்டு “கர்த்தாவே, உம்மோடே நான் வழக்காடப் போனால் தேவரீர் நீதியுள்ளவராமே, ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்” (எரேமியா 12 : 1) தேவரீர் உமது அரண்மனை முற்றத்தில் இப்படிப்பட்ட கடிநாயை வைத்திருப்பானேன்? அதைக் கண்ணோக்கின மாத்திரத்தில் அடியாரைப் போலொத்த பெண்டு களும் பிள்ளைகளும் வாசலண்டை வராமல் பயந்தோடிப் போக வேண்டியதாய் இருக்கிறதே என்றாள்.
அதற்கு அவர்: அந்த நாயின் சொந்தக்காரன் வேறொருவன் இருக்கிறான். அவன் அதை அயல் மனுஷனுடைய பூமியின் எல்லை யோரத்தில் கட்டி வைக்கிறான். என் பிரயாணிகள் மாத்திரம் அதின் சத்தத்தை கேட்கிறார்கள். அந்த நாய் அதோ தூரத்தில் நீ பார்க்கிற துருகத்தை சேர்ந்தது. நம்முடைய திட்டிவாசல் மதில் மட்டும் அது வருகிறதுண்டு. அது அநேக உத்தம பிரயாணிகளை பயப்படுத்துகிறது. அதின் பயங்கர சத்தத்தைக் கேட்ட உத்தமர் இன்னும் அதிக உத்தமராய் இருக்கிறார்கள். அதின் சொந்தக்காரன் என் மேலும் என் பக்தர் மேலும் உள்ள அன்பினாலே அதை வளர்க்காமல், பிரயாணிகள் என்னண்டை வராமலும் திட்டிவாசலை வந்து தட்டாமலும் பயங் காட்டித் துரத்தும்படியான நோக்கமாகவே அதை வளர்க்கிறான். சில தரம் அது சங்கிலிகளை முறித்துப்போட்டு என் பக்தரில் சிலர் இளைத்துப்போகும் மட்டும் அவர்களுக்கு தொந்தரவு கொடுத்ததும் உண்டு. ஆனால் அதின் நிஷ்டூரங்களை எல்லாம் நான் பொறுமையாய் இப்பொழுது சகித்துக் கொள்ளுகிறேன். ஆகிலும் என் பக்தரை அது மோசப்படுத்தாதபடிக்கு நான் சமயம் அறிந்து உதவிபுரிய எழுந்தருளி அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளுகிறேன். என்றாலும் என்னால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்ட மாதே! இவ்வளவாவது நேரிடும் என்று நீ முன்னே அறியவில்லையா? நீ ஒரு நாய்க்கு அஞ்சலாமா? வீடுவீடாய் போய் பிச்சை கேட்கும் பண்டாரம் பரதேசிகள் ஒரு வீட்டில் நாய் குலைத்தால் அல்லது உறுமினால் அல்லது கடிக்க வந்தால் இந்த வீட்டுப் பிச்சை போனாலும் போகட்டும் என்று பயந்து ஓடிப் போவார்கள்.
ஆனால் ஒரு நாய் அதுவும் வேறொருவன் முற்றத்தில் இருக்கிற ஒரு நாய், அதின் குலைப்பினால் என் பிரயாணிகள் என்னிடத்தில் வரவிடாதபடி விலக்கிப்போடக்கூடுமா? 7 நான் என் தாசரை சிங்கத்தின் வாயில் இருந்து இரட்சித்து நாய்களின் துஷ்டத்தனத்துக்குத் தப்புவிக்கிறேனே என்று சொன்னார்.
தயாளி: உடனே தயாளி: ஆண்டவனே, அடியாளின் அறியாமையை அறிக்கையிடுகிறேன். அடியாள் அந்தரங்கம் அறியாமல் அலப்பிவிட்டேன். என் ஆண்டவன் செய்கிறதெல்லாம் நன்மையாய் இருக்கிறது என்று அறிக்கையிடுகிறேன் என்றாள்.
கிறி: அதின்பின் கிறிஸ்தீனாள் தங்கள் பயணத்துக்கு அடுத்த பல காரியங்களையும் வழிப்பாதையின் விபரங்களையும் குறித்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தாள். அவர் அவர்களைப் போஷித்து அவர்கள் பாதங்களைக் கழுவி முன் பிரயாணப்பட்ட அவள் புருஷனுக்கு செய்தது போல தமது அடிச் சுவடுகளிலே அவர்களை நிறுத்தினார். அப்பால் அவர்கள் தங்கள் வழியே நடந்து போனதாக நான் என் சொப்பனத்தில் கண்டேன். அப்போது அடித்த காற்று அவர்கள் பிரயாணத்துக்கு ஏற்றதாக இருந்தது.
அப்பொழுது கிறிஸ்தீனாள் அகமகிழ்ந்து:
வாழ்க வாழ்க மோட்சலோகம்
போகப் புறப்பட்ட நாளும்
தூண்டிவிட்ட ஆளும் வாழ்க அல்லேலூயா
மோட்சம் போக வெகுநாளாய்
ஆசைப்பட்டேன், ஆனால் இப்போ
ஓடுகிறேன், அங்கே வாழ்வேன் அல்லேலூயா
பிந்தி ஓடும் ஓட்டம் முற்றும்
ஓடாமையிலும் உத்தமம்
அங்கே போவேன், என்றும் வாழ்வேன் அல்லேலூயா
கண்ணீர் களிப்பாயும், அச்சம்
நம்பிக்கையாயும் மாறிற்று,
பின்பலன் முன் விளங்குதே அல்லேலூயா
என்று பாடினாள்.
1. நாம் நமது ஜீவ பாதையை சீர்ப்படுத்த எப்போது முயற்சி பண்ணுகிறோமோ அப்போதெல்லாம் அநேக தடைகளும் ஆயாசங்களும் நமக்கு உண்டாகும். நம்மை வெகுவாய் பயங்காட்ட சாத்தான் தன்னால் ஆனமட்டும் முயற்சிப்பதால் நாம் சில வேளை ஜெபம் செய்யாமல் சும்மா இருந்துவிடுவோம். வாசலுக்குள்ளே தான் நாய் கிடக்கிறது என்று கிறிஸ்தீனாள் எண்ணினவண்ணம் அந்த பயங்கரங்கள் எல்லாம் தேவனிடத்தில் இருந்தே உண்டாவது போல் நமக்குத் தோன்றும். ஆனாலோ யதார்த்தத்தில் அவைகள் திட்டிவாசலுக்குள் பிரவேசிக்க விரும்பும் யாவருக்கும் சத்துருவாகிய பிசாசினிடத்திலிருந்து வருகின்றன.
2. “மனந்திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாக சந்தோசம் உண்டாய் இருக்கிறது” என்று சத்திய வேதம் சாட்சியிடுகிறது.
3. கந்தவர்க்கம்: இது தேவனுக்கு சுகந்தவாசனையாய் இருக்கிற (எபேசியர் 5 : 7) இயேசு கிறிஸ்துவின் நிறைவான பலியைக் குறிக்கிறது. தன் சொந்த அபாத்திரத்தையும் பாவ நிலைமையையும் உணருகிற ஒவ்வொரு பாவியும் இயேசு கிறிஸ்துவினால் உண்டாகி இருக்கும் இரட்சிப்பைக் குறித்து கவனிக்கும்போது ஆறுதலும் பெலனும் கொள்வான். நமது கேடான பாவ நிலைமையை நாம் நன்றாய் உணருகையில் அது நம்மை கலங்கப்பண்ணும். ஆனால் கிறிஸ்துவின் நீதியோ நம்மை திரும்ப உயிர்ப்பிக்கும்.
4. வார்த்தையாலும் செய்கையாலும்: வார்த்தையால் உண்டான மன்னிப்பு என்பது இரட்சிப்பின் விளம்பரத்தையும் வாக்குத்தத்தத்தையும், செய்கையால் உண்டான மன்னிப்பு என்பது நமக்கு பாவ மன்னிப்பைச் சம்பாதிக்க கிறிஸ்து இரட்சகர் நடப்பித்த கிரியைகளையும் அதோடு மனித இருதயத்தில் நடப்பிக்கப்படும் கிறிஸ்துவினுடைய கிரியைகளின் நிறைவேறுதலையும் காண்பிக்கிறவைகளாய் இருக்கின்றன.
5. தேவன் தமது புஸ்தகத்தில் சொல்லுகிற வாக்குத்தத்தங்களும் அழைப்புகளும் எப்பேர்ப்பட்ட பேதையையும் பயங்காளியையும் ஆற்றிப் பலப்படுத்த தகுந்த பெலன் உள்ளவைகளாய் இருக்கின்றன.
6. நமக்குச் சம்பவிப்பவைகளை நாம் முன்கூட்டி அறியாமல் இருக்கிறது எவ்வளவோ பாக்கியமான காரியம். போர்ச்சேவகன் தான் காயப்பட்டு கஸ்தியடைவதை முன்னறிந்தால் யுத்தம் செய்யப் பயப்படுவானே. அப்படிப் போலவே நமக்கும் நாளுக்கு நாள் படிப்படியாக நினையாத வண்ணம் துன்பங்கள் உண்டாகின்றன. அவைகள் உண்டாகும் போதே அவைகளைச் சகிக்க நாம் பெலப்படுத்தப்படுகிறோம்.
7. இரட்சிப்பின் பேரில் தாபந்தமுள்ளவர்கள் பிசாசானவனுடைய இடையூறுகளினால் தடைப்படமாட்டார்கள். அவர்களுடைய ஆசையின் அளவை தேவன் இவ்விதமாக சோதிக்கிறார். வேண்டா வெறுப்பும் கோழைத் தனமும் உள்ளவர்கள் இதில் பின்னடைந்து விடுவார்கள். தைரியவான்கள் சோதனையைச் சகித்து இரட்சிக்கப்படுவார்கள். அற்ப சொற்ப தொல்லை களில் பின் வாங்காதவர்கள் தேவனிடத்தில் ஒத்தாசை பெற்று அவரால் இரட்சிப்பை அடைவார்கள்.