பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது
பின்னும் அந்த விருத்தாப்பிய கூரியபுத்தி சொல்லுவார்: கிறிஸ்தீனாள் நம்பிக்கையிழவண்டை வந்தவுடனே, ஆகா! இவ் விடத்தில் என் கணவர் தட்டுக்கெட்டு தடுமாறி விழுந்து சேற்றுக்குள் அகப்பட்டு, திக்குமுக்கடைந்து சங்கடப்பட்டாரே என்று சொல்லிக் கொண்டு கொஞ்ச நேரம் அங்கே நின்றாள். அதுவும் அன்றி பிரயாணிகளுக்கு சகாயமாக இந்தப் பாதையை செப்பனிடும்படி அரசர் ஆக்கியாபித்த போதிலும் அது முன்னிலும் அதிக கேவலமாகவே 1 இருக்கிறதென்றும் உணர்ந்து கொண்டாள்.
இந்தச் சமயத்தில் நான் கூரியபுத்தியை நோக்கி: ஐயாவே! இந்த உளையைப்பற்றி சொல்லப்படுகிற சமாசாரம் நிஜந்தானோ என்று கேட்டேன். அதற்கு அவர்: அது நிஜமே நிஜம், இந்த உளையை செப்பனிடும்படியாக ஏற்படுத்தப்பட்டு ராஜாவின் காரியக்காரராய் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு திரிகிற பல ஊழியர்கள் கற்களைக் கொண்டு வந்து கொட்டுகிறதற்குப் பதிலாக அழுக்கு களையும் குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி, செப்பனிடு கிறதற்குப் பதிலாக சேறாக்கிவிட்டுப் போகிறார்கள் என்று சொன்னார். இதினாலேதான் கிறிஸ்தீனாளும் அவள் பிள்ளைகளும் இந்த உளையண்டை வந்தவுடன் நின்று கொண்டார்கள். ஆனால் தயாளி, நடந்து கடந்து போவோம் வாருங்கள். வீரத்துவத்தை விடாதிருப் போமாக என்று சொன்னாள். உடனே அவர்கள் எல்லாரும் துணிந்து படிகளை கூர்மையாய்க் கவனித்து கால் வைத்து நடந்துபோக ஆரம்பித்தார்கள்.
எவ்வளவு கவனத்தோடு அவர்கள் காலெடுத்து வைத்துப் போன போதிலும், கிறிஸ்தீனாள் சேற்றில் அமுங்கிப் போகப் பார்த்தாள். இப்படி இரண்டொருதரம் மாத்திரம் அல்ல அநேகந்தரம் சம்ப வித்தது. அவர்கள் எல்லாரும் உளையைக் கடந்தவுடனே “விசுவாசித் தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்” (லூக்கா 1 : 45) என்ற வாசகம் அவர்கள் காதுகளில் தொனிக்கிறது போல் அவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.
அப்பால் அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி நடந்து திட்டி வாசலை நோக்கிப் போனார்கள். அப்போது தயாளி கிறிஸ்தீனாளைப் பார்த்து: அம்மா! திட்டிவாசலுக்குள் ஏற்றுக் கொள்ளப்படுவதைப் பற்றி உனக்கு இருக்கிற நம்பிக்கை அவ்வளவும் எனக்கு இருக்குமானால் நம்பிக்கையிழவின் நொதியிலும் அலங்கோலமான நொதியும் என் மனதை அதைரியப்படுத்த மாட்டாது என்றாள்.
அதற்கு கிறிஸ்தீனாள்: அம்மணி! உன் நோவை நீ அறிவாய், என் நோவை நான் அறிவேன். ஆனால் என் உத்தம சிநேகிதியே, நாம் நமது பயணத்தின் முடிவைக் காணுமுன், போதும் போதும் என்று ஓலமிடத்தக்கதான பலத்த ஆபத்துக்கள் எல்லாம் நமக்கு நேரிடும். அதுவுமன்றி நம்மைப் போல இந்த மேலான பாக்கியங்களை நாடிப் போகும் பிரயாணிகளின் மேல் பொறாமைப்படுகிற எதிரிகள் நம்மைப் பகைக்கிறதோடு வழிப் பாதைகளின் பயங்கரங்களையும், கண்ணிகளையும், துன்பங்களையும், உபத்திரவங்களையும் வைத்து நம்மை மோசப்படுத்தமாட்டார்கள் என்று யார்தான் சொல்லுவார்கள் என்று சொன்னாள்.
இதின் பின்பு கூரியபுத்தியானவர், அந்தக் கிறிஸ்தீனாளுடைய மற்ற சமாச்சாரங்களைக் குறித்து நீயே சொப்பனம் கண்டுகொள் என்று சொல்லிப் போட்டு போய்விட்டார்.
1. முன்னிலும் அதிக கேவலம். பன்னியன் என்பவர் இந்தப் புஸ்தகத்தின் முதற் பங்கை எழுதினபின் தேவபக்தி முன்னைவிட குறைந்து போனதைக் கண்டார் என்று தோன்றுகிறது. ராஜாவாகிய தேவன் பிரயாணிகளுக்கு ஒத்தாசைபண்ண முன்போலவே ஆவலுள்ளவராய் இருந்தபோதினும் ஒரு முன்னேற்றமும் உண்டாகக் காணவில்லை என்கிறார். சுவிசேஷ பிரசங்கிகளாகிய வேலையாட்கள் தங்கள் ஊழியத்தை செம்மையாய்ச் செய்யவில்லை. அவர்கள் சுத்த சுவிசேஷத்தை அல்ல, மனுஷ ஞானம் முதலானவைகளையே போதித்தார்கள் என்று காணப்படுகிறது.