கிறிஸ்தீனாளின் மோட்ச பயணம்
இதற்குள்ளாக கிறிஸ்தீனாள் தன் பிள்ளை குட்டிகளோடு பயணம் புறப்பட்டுவிட்டாள். தயாளியும் அவளோடு கூடப்போனாள். அவர்கள் போகப் போக பல காரியங்களையும் குறித்து பேசிக் கொண்டே நடந்தார்கள்.
கிறிஸ்தீனாள் தயாளியை நோக்கி: அம்மணி, நீ உன் வீட்டையும் வாசலையும் விட்டுப்போட்டு என்னை வழி அனுப்பக் கொஞ்ச தூரம் வருகிறது எனக்குப் பெரிய சகாயமாய் இருக்கிறது என்றாள். அதற்கு தயாளி என்னும் கன்னிப் பெண் சொல்லுகிறாள்: அம்மா, உன்னோடு கூட வருகிறதில் பிரயோஜனம் உண்டென்று கண்டால் நான் ஊர்முகமாய் இனிமேல் காலெடுத்து வைக்கவே மாட்டேன் என்று சொன்னாள்.
கிறி: ஆ! என் அழகு மணிமாதே! என்னோடு கூடவே வர மனமானால் அப்படியே தீர்மானம் செய்து கொள். நம்முடைய பயணத்தின் முடிவில் கிடைக்கும் பாக்கியம் இன்னதென்று நான் அறிவேன். என் கணவர் தங்கச் சுரங்கத்தின் பொன் எல்லாம் கொடுத்து இருக்கச் சொன்னாலும் இருக்கமாட்டாத ஒரு இடத்தில் குடியேறி இருக்கிறார். என்னுடைய அழைப்பினாலே 1 நீ வந்தபோதிலும் அங்கே நீ தள்ளிவிடப்படமாட்டாய். என்னையும் என் மக்களையும் வரவழைத்திருக்கிற ராஜாவானவர் இரக்கத்தில் பிரியப்படுகிறவராய் இருக்கிறார். அதுவும் அன்றி உனக்குப் பிரியமானால், நான் உனக்கு ஒரு சம்பளம் ஏற்படுத்தி எனக்கு வேலைக்காரியாக உன்னை வைத்துக்கொள்ளுவேன். என் பொருள் எல்லாம் நம் இருவருக்கும் பொதுவாகவே இருக்கும், நீ என்னோடு கூட வந்தால் மாத்திரம் போதும் என்றாள்.
தயாளி: என்னையும் உள்ளே ஏற்றுக்கொள்ளுவார்கள் என்பதற்கு எனக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? அப்படிப்பட்ட நம்பிக்கையை யாராவது சொன்னால், நான் மன தளர்ச்சிக்கு இடங்கொடாமல் துணைபுரிவோருடைய உதவியினால் என்ன அபாயம் நேரிடுகிறதாய் இருந்தாலும் பின்னடையாமல் நடந்துவரக் கூடுமே என்று தயாளி சொன்னாள்.
கிறி: அதற்குக் கிறிஸ்தினாள், என் கண்ணே தயாளியே! நான் சொல்லுவதைக் கேள், திட்டிவாசல் மட்டும் நீ என்னுடன்கூட வா. அவ்விடத்தில் உன் காரியத்தைப்பற்றி விபரமாய் விசாரித்து அறிந்து கொள்ளலாம். அவ்விடத்தில் உன்னை சேர்ப்பார் இல்லை என்று கண்டால் நீ உன் மனம்போல ஊருக்குத் திரும்பிவிடலாம். உன்னால் எனக்கு உண்டான உதவிகளுக்கும் என் பிள்ளைகளுக்கு நீ செய்து வருகிற சகாயத்துக்கும் தக்க தொகையை அங்கே நான் தந்து உன்னை அனுப்பி விடுகிறேன் என்றாள்.
தயாளி: அப்படியானால் நான் அதுமட்டும் வந்து திரும்புகிறேன். அதற்கு அப்பால் என்ன சம்பவிக்குமோ அதை பின்னாலே பார்த்துக் கொள்ளலாம், கர்த்தர் ஒரு நல்ல பங்கை எனக்குக் கொடுப்பாராக. வானத்து அரசர் தமது கிருபையுள்ள மனதை என்மேல் வைப்பாராக என்று தயாளி சொன்னாள்.
அதைக் கேட்ட கிறிஸ்தீனாள் அகமகிழ்ந்தாள். தனக்கு ஒரு துணையாள் அகப்பட்டது என்பதினால் அல்ல. அந்த ஏழைப் பெண் தன்னைப்போல இரட்சண்யத்தின்மேல் நாட்டம் கொள்ளும்படி செய்த பிரயத்தனம் வாய்த்ததினாலேயே அவள் ஆனந்தங்கொண்டாள். அவர்கள் இருவரும் ஏகமனதாய் வழிநடந்து போனார்கள். போகப் போக தயாளி கண்ணீர் விட்டு அழுதாள். அதைக்கண்ட கிறிஸ்தீனாள் என் உத்தம தோழிப்பெண்ணே! நீ அழுவானேன், கண்ணீர் சொரி வானேன் என்று கேட்டாள்.
அதற்குத் தயாளி சொல்லுகிறாள்: ஐயோ பாவம் நிறைந்த நாசபுரியில் வசிக்கும் என் இனஜனபந்துக்களின் நிர்ப்பந்த நிலைமையை உள்ளபடி உணர்ந்த ஒருவன் அழாமல் இருப்பானா? அவர்களுக்குப் போதிக்க ஒருவரும் இல்லை என்றும் நினைக்கையில் அவர்களைக் குறித்து உண்டாகும் என் வியாகுலம் அதிகம் ஆகிறது என்றாள்.
கிறி: அதற்கு கிறிஸ்தீனாள்: எவர்களுடைய இரட்சிப்புக்காக மனம் பொங்கி ஏங்குமோ அவர்கள் மோட்ச பிரயாணிகள் ஆவார்கள். என் கணவர் பயணப்பட்ட சமயத்தில் அவர் எனக்காக கவலைப் பட்டது போலவே, நீயும் உன் சிநேகிதருக்காக கவலைப்படுகிறாய். என் கணவர் அழுதாலும் நான் அதை சட்டைபண்ணினதில்லை. ஆனால் அவருடைய ஆண்டவரும் நம்முடைய ஆண்டவருமானவர் அந்தக் கண்ணீரை எல்லாம் தமது துருத்தியில் அடைத்து வைத்திருந்தார். அதின் பலனை நானும் நீயும் என் பிள்ளைகளும் இதோ அறிகிறோம். இப்போதும் என் அன்புள்ள தயாளியே! உன் கண்ணீர்த் துளிகள் கவைக்குதவாமல் காய்ந்து போகமாட்டாதென்று நான் நம்புகிறேன். ஏனெனில், “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” என்றும் “அள்ளித் தூவும் விதையை சுமக்கிறவன் அழுது கொண்டு போகிறான், ஆனாலும் தான் அறுத்த அரிகளை சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்” (சங்கீதம் 126 : 5, 6) என்றும் சத்திய சாஸ்திரத்தில் எழுதப்பட்டு இருக்கிற தென்று கிறிஸ்தீனாள் சொன்னாள்.
அதைக் கேட்ட தயாளி மனங்கனிந்து:
(அம்மானை)
முத்திநகர் வாசல்மட்டும் புத்தியுடன் நான் சேர
பத்தி பரிசுத்தருடன் எந்நாளும் நான் வாழ,
சுத்தர் பரிசுத்தர் மலை ஏற அவர் சித்தமானால்
அத்தனே அருள் அருளும், கர்த்தனே வழிகாட்டும்.
என்னதான் என் மனதை மாற்றவகை செய்தாலும்,
ஐயன் கிருபைவிட்டு அகன்று நான் போகாமல்
மன்னர் பரிசுத்த வழிவிட்டலைந்து போகாமல்
உன்னதனார் வந்தென்னை வழிநடத்துவாராக.
நாசபுரி நாடெங்கும் நான் விட்டு வந்தவர்கள்,
மோசம் அறிந்து தங்கள் முழுமனதால் உள்ளத்தால்
கனிந்துருகி உன் பாதம் தேடிக் கதியடைய,
குனிந்து கருணையினால் கூட்டும் ஐயா கும்பிட்டேன்.
என்று விண்ணப்பம் பாடினாள்.
1. மனுஷர்கள் மோட்ச பிரயாணம் செய்ய பவுல் அப்போஸ்தலனைப்போல் விசேஷித்த தேவ எத்தனமாய் அழைக்கப்பட்டாலும் அல்லது தேவ பணிவிடையாட்களின் பிரயாசையால் ஏவப்பட்டாலும் அல்லது வேறு ஏது காரணத்தினாலும் சரி, அவர்கள் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். கிறிஸ்துவண்டை வருகிறவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் அப்படி வரும்படி ஏவின முகாந்தரங்கள் எவைகளானாலும் அவர்களை அங்கீகரித்து ஆசீர்வதிக்கிறார்.