பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்
பிரயாணிகள் அப்புறம் அல்லும் பகலும் அருணோதயமாய் விளங்கும் வாழ்க்கை நாட்டுக்கு வந்து சேரும்மட்டும் நான் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவர்கள் மிகவும் இளைப்பாக இருந்தபடியால் சற்று கால் ஆறி எழுந்திருப்போம் என்று அங்கே உட்கார்ந்தார்கள். இந்த நாடு மோட்ச பிரயாணிகளின் சருவ மானிய சொத்தாக இருந்தபடியாலும், இங்குள்ள நற்கனித் தோப்பு களும், திராட்சப் பந்தல்களும் உச்சிதப்பட்டணத்தின் உன்னத ராஜனுடையது ஆனபடியாலும், இவர்கள் தங்கள் மனங்கொண்ட மட்டும் தங்கள் இஷ்டம் போல அவைகளை பறித்து உண்ண சுயாதீனம் பெற்று இருந்தார்கள். அவர்கள் இளைப்பு எல்லாம் மாறிப்போக வெகு நேரம் செல்லவில்லை.1 ஏனெனில் உச்சித பட்டணத்தின் மணிகளின் ஓசையும், இன்பகீத எக்காளங்களின் ஒலியும் அங்கே ஓயாமல் தொனித்துக் கொண்டிருந்தன.
ஆதலால் அவர்கள் தூங்கி எழுந்திருக்க முதலாய் ஏது இல்லாதிருந் தாலும் கனதூக்கம் தூங்கி எழுந்தவர்கள் போல் அவ்வளவு களைப்பற்று உற்சாகமாய் இருந்தார்கள். மேலும் உச்சிதபட்டணத்தின் தெரு வழி நடப்போர் அனைவரும் பேசிக்கொண்டு போகும் வார்த்தைகளும் இவர்கள் காதில் கேட்டது. இன்று அநேகம் பிரயாணிகள் பட்டணம் போய்ச் சேர்ந்தார்கள் என்று ஒருவன் சொல்லுவான். வேறொருவன் அநேகர் இன்று நதியைக் கடந்து அலங்கார வாசலின் வழியாய் நகரத்துக்குள் வந்தார்கள் என்பான்.
இன்னும் சிலர்: இன்று அநேக ஒளிமயரூபிகள் பட்டணத்துக்குள் வந்தார்கள் என்பார்கள். ஆகவே அனந்தம் பிரயாணிகள் இப்போது தங்கள் பாதையில் இருப்பது போல அவர்களுக்கு தெரிந்தது. அவர்களுடைய துக்கங்கள், சஞ்சலங்கள் எல்லாவற்றையும் மாற்றி ஆறுதல்படுத்தும்படி இவர்கள் முந்தியே வந்துவிட்டார்கள் என்று பட்டணவாசிகள் இவர்களைப் பார்த்து சொன்னார்கள். இப்படிப் பட்ட சமாச்சாரங்கள் எல்லாம் அவர்கள் காதுகளில் விழவே அவர்கள் ஆனந்த பரவசம் பூண்டு அங்கும் இங்கும் திரிந்து அலைந்து சந்தோசம் கொண்டாடினார்கள். இந்தப் பிரயாணிகள் வாழ்க்கை நாட்டில் இருக்கையில் உச்சித பட்டணத்தைப் பற்றிக் கேட்ட செய்திகளும் கண்ட காட்சிகளும் இவ்வளவு என்று எவராலும் சொல்லிவிட முடியாது. இந்த நாட்டில் இருந்த காலத்தில் அவர்கள் தங்கள் சரீரத்தின் புலன்களுக்கும், ஆத்துமாவின் அந்த கரணங்களுக்கும் தீமையை உண்டாக்கத்தக்கதாக எதையாவது கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை, உணர்ந்ததும் இல்லை, முகர்ந்ததும் இல்லை, ருசித்ததுமில்லை, இனிமேல் அவர்கள் கடந்து போக வேண்டிய ஆற்றின் தண்ணீரை அள்ளிக் குடித்துப் பார்த்தபோது மாத்திரம் அது அவர்களுடைய நுனி நாவுக்கு கசப்பும், உள் நாக்குக்கு இனிப்புமாய் இருக்கிறது என்று கண்டார்கள்.
மேலும் இந்த இடத்தில் அதிபூர்வ மோட்ச பிரயாணிகளின் நாமங்களும், அவர்கள் நடப்பித்த அதி சிரேஷ்ட வீர தீர செயல்களும் அடங்கிய ஒரு பெரிய நாளாகமமும் இருந்தது. இவ்விடத்தில் அந்த ஆறு சிலர் கடந்து போகும் போது ஏற்றமாயும், மற்றும் சிலருக்கு வற்றமாயும் இருக்கிற காரணம் என்ன என்பதைக் குறித்தும் பல பேச்சுக்கள் நடந்தன. ஏனெனில் இந்த ஆறு சிலருக்கு வற்றிப் போகிறதும் சிலருக்கு கரை புரண்டு ஓடுகிறதும் உண்டு.
பட்டணத்தின் பாலியர் பலர் இந்த இடங்களில் அலைந்து திரிந்து அந்த தேச நந்தவனங்களில் உள்ள நற்கந்த புஷ்பங்களை கொய்து வந்து பிரியத்தோடு பிரயாணிகளுக்கு வெகுமானம் பண்ணுவார்கள். இங்கே கற்பூரம், நளது, மருவு, மருக்கொழுந்து, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செம்பகம் முதலிய நற்கந்த புஷ்பாதிகளும், சந்தனம், ஜவ்வாது, தூபவர்க்கம், வெள்ளைப்போளம், இலவங்கம் முதலிய வாசனை திரவியங்களும் விளையும். இவைகளின் நற்கந்த வாசனை பிரயாணிகளின் பள்ளியறைகளை பரிமளிக்கும். மேலும் இங்கே இருக்கும்போதே ஆற்றைத் தாண்டி வரும்படி எப்போது கட்டளை வருமோ, அப்பொழுதே புறப்படும்படியாக பிரயாணிகளின் சரீரங்கள் மேற்சொல்லிய வாசனை சரக்குகளின் தைலாபிஷேகம் பெற்றிருக்கும்.
1. பின் வரும் சங்கதியானது மெய் விசுவாசிகளின் மத்தியில் குடியிருப்பது பாக்கியமானது என்று தெரிவிக்கிறது. அப்பேர்பபட்ட இடங்களில் ஜெயத்துடன் மரிக்கிறவர்களின் திருஷ்டாந்தம் அடிக்கடி காணப்படுகிறது. இந்த காட்சிளும் சம்பவங்களும் முன்னாலே கலங்கி துக்கித்தவர்களின் இருதயங்களிலிருந்து சங்கடம், சந்தேகம் முதலியவைகளை நீக்கி சந்தோசத்தையும், மனரம்மியத்தையும் பிறப்பிக்கின்றன.