பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்
இதற்குள்ளாக பிரயாணிகள் மயக்க பூமி வந்து சேர்த்ததை நான் என் சொப்பனத்தில் கண்டேன். அதின் ஆகாயத் தன்மை எப்பேர்ப் பட்டவனையும் மயக்கிப்போடும். அந்த வனம் எங்கும் முள்ளும், குருக்கும், புதரும், காடுமாய் இருந்தது. ஆங்காங்கே பிரயாணிகள் தாமதித்து தூங்கும்படி சில சோக மணப்பந்தல்கள் மாத்திரம் இருந்தன. அப்படிப்பட்ட பந்தலுக்கு கீழ் ஒருவன் போய் உட்கார்ந்தால் அல்லது தூங்கினால் அதற்கப்பால் அவன் மறுபடியும் உயிரோடு விழித்து தன் பயணத்தில் நடப்பானோ என்பது லோகப் பிரசித்தமான சந்தேகம்தான்.1 இந்த அபாயமான வன வழியாய் அவர்கள் பயணம் போனார்கள். தைரிய நெஞ்சன் என்பவர் அவர்கள் வழிகாட்டி ஆனபடியால் அவர்களுக்கு முன் காவலாயும், யாதாம் ஓர் பூதமாவது, வல்ல சர்ப்பமாவது, ராட்சதனாவது, திருடனாவது பின்னால் இருந்து வந்து பிரயாணிகளைத் தாக்கினாலும் தாக்குவார்கள் என்று சத்திய வீரதீரன் பின் காவலாயும் நின்றுகொண்டு பிரயாணிகளை வழி நடத்தினார்கள். அந்தப் பூமி மகா மோசம் உள்ளது என்று அவர்கள் அறிந்து இருந்ததால் ஒவ்வொருவரும் உருவின பட்டயத்தோடு வழிநடந்தார்கள்.
அவர்களில் ஒருவரும் மனம் தளர்ந்து போகாதபடி ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொண்டே போனார்கள். ஏழைத்தனம் தைரிய நெஞ்சனின் பக்கத்திலும், ஏக்கம் சத்தியவீரன் பக்கத்திலும் நடந்து போகும்படி வழிகாட்டி உத்தரவு கொடுத்தார்.
அவர்கள் கொஞ்ச தூரம் போகவே, இதோ கனத்த பனி முகிலும், கார்மேகமும் அவர்களை கவிந்து கொண்டன. ஆதலால் அவர்கள் வெகு நேரமாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக் கூடாதபடி போயிற்று. அவரவர் சத்தங்காட்டிக் கொண்டு தாங்கள் தப்பிப் போகவில்லை என்றே ஜாடை காண்பித்து நடந்தார்கள். ஏனெனில் அவர்கள் அப்பொழுது தரிசித்து நடக்கவில்லை. எப்பேர்ப்பட்ட சாமர்த்தியனும் இந்த இடத்தில் தடுமாறிப் போவான் என்று நினைக்க ஆட்சேபனை இல்லை. வீரனைப் பற்றியே இப்படிச் சொல்ல வேண்டியது. ஆனால் காலும் மனமும் தள்ளாடின ஏழைப் பெண் பிள்ளைகளையும், பிள்ளைகளையும் குறித்து என்ன சொல்ல வேண்டியது! என்றாலும், அவர்களுக்கு முன்காவலும் பின்காவலுமாக வந்த தைரிய நெஞ்சனும், சத்திய வீரதீரனும் அவர்களை உற்சாகப் படுத்தினதினாலே அவர்கள் சற்று தூரம் எட்டி நடந்து போனார்கள்.
அந்த வன வழியானது சேறும்,சறுக்கலும் உள்ள பாதையாய் இருந்தது. இளைத்துப்போன பிரயாணிகள் இளைப்பாறிக் கொள்ளும் படியான ஒரு சத்திரமாவது, சாவடியாவது அங்கே இருந்ததில்லை. பிரயாணிகள் உறுமுகிறதையும், பெருமூச்சு விடுகிறதையும், ஏங்கி ஏங்கி வலிப்பதையுமே கேட்கலாம். ஒருவன் சறுக்கி புதரில் விழுகையில் இன்னொருவன் சேற்றில் காலை மாட்டிக் கொள்ளுவான். பிள்ளை களில் சிலருடைய பாதரட்சை சேற்றுக்குள் அகப்பட்டுப் போயிற்று. ஒருவன் அப்பாடா சறுக்கி விழுந்தேன் என்று அலறும்போது இன்னொருவன் ஓகோ எங்கே இருக்கிறீர்கள் என்று பரிதபிப்பான். வேறொருவன் ஐயோ புதருக்குள் அகப்பட்டுக் கொண்டேன், இனி நான் எப்படி வருவேன் என்று புலம்புவான்.
இப்படி அவர்கள் சங்கடப்பட்டு அப்பால் இருந்த ஒரு பூப் பந்தலில் சேர்ந்தார்கள். அது மெத்த அனலாயும், பிரயாணிகளுக்கு வேண்டிய சந்தோசங்களை எல்லாம் கொடுக்கிற ஒரு இடம் போலும் காணப்பட்டது. அந்தப் பந்தல் பச்சை கொடிகளால் மூடப்பட்டு வருவார் போவார் உட்கார்ந்து இளைப்பாறும்படியாக சில ஆசனங்கள் உடையதாய் இருந்தது.
மெத்த அலுத்துப் போனவர்கள் படுத்து இளைப்பாறிக் கொள்ளும்படியாக பஞ்சு மெத்தை போட்ட கட்டில்களும் அங்கே இருந்தன. பிரயாணிகளை சோதனைக்கு உட்படுத்தும்படியாகவே இவை எல்லாம் வைக்கப்பட்டிருந்தது என்று நீ அறிந்து கொள்ள வேண்டியது. ஏனெனில் எந்த பிரயாணியும் இந்த இடத்திற்கு வருகிறதற்குள்ளாக படுகிற சங்கடங்களால் உட்காரவே மனங் கொள்ளுவான். ஆனால் இந்தப் பிரயாணிகளில் ஒருவரும் அந்த இடத்தில் தாமதிக்க வேண்டும் என்பது போல ஜாடை காட்டவே இல்லை. அவர்கள் அனைவரும் தங்கள் வழிகாட்டியின் போதனை களுக்கு செவிகொடுத்து நடக்கிறதை நான் கவனித்தேன். வரப்போகிற ஆபத்துக்களையும், அந்த ஆபத்தண்டை வந்தபோது அதின் தன்மையையும் வெகு திட்டமாய் வற்புறுத்தி வந்ததால் அந்த ஆபத்துள்ள இடங்களுக்கு சமீபமாய் வந்த உடனே ஆவியில் வைராக்கியம் கொண்டு மாமிசத்தை ஜெயிக்கும்படியாக ஒருவர் மனதை ஒருவர் தைரியப்படுத்திக் கொண்டார்கள். இந்தப் பந்தலுக்கு சோம்பர் இளைப்பாறும் சத்திரம் என்று பேர் வழங்கப்பட்டது. சோம்பலுள்ள பிரயாணிகள் யாராவது வந்தால் அவர்களை மோசம் போக்கி இந்த இடத்தில் நிறுத்திவிடும்படியாகவே இது ஏற்படுத்தப் பட்டது.
அப்பால் அவர்கள் தங்கள் வழியே நடந்து எப்படிப்பட்ட சமர்த்தனும் வழிதப்பிப் போகும்படியான ஒரு இடத்தில் 2 வந்து சேர்ந்ததை நான் என் சொப்பனத்தில் கண்டேன். இந்த இடத்தில் அவர்கள் பட்டப் பகலில் மாத்திரம் வந்து இருப்பார்களானால், அவர்கள் வழி காட்டி விபரீத வழி இன்னது என்று அவர்களுக்கு காட்ட ஏதுவிருக்கும். அவர்களோ இருட்டான சமயத்தில் அந்த இடத்திற்கு வந்ததினாலே அவரும் கூட திகைத்து நின்று விட்டார். உச்சிதப் பட்டணத்துக்குப் போகிறதும் அங்கிருந்து வருகிறதுமான பாதை களைத் திட்டமாக உணர்த்தும் ஒரு படப் புஸ்தகம் அவர் மடியில் இருந்தது. அதைப் பார்த்தால் தான் மயக்கம் தெளியும் என்று அவர் தாம் எப்போதும் கூடவே கொண்டு போகிற சக்கிமுக்கி கல்லைத் தட்டி நெருப்புப் பந்தம் கொளுத்திக்கொண்டு அந்த படப் புத்தகத்தை பார்த்தார். அதினாலே அவர்கள் தாங்கள் நின்ற நிலையில் இருந்து சற்று வலதுபுறமாய் வெகு எச்சரிக்கையோடு திரும்ப வேண்டும் என்று அறிந்து கொண்டார். இந்த புஸ்தகத்தை மாத்திரம் அவர் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் எல்லாரும் பக்கத்தில் இருந்த சேற்றுப் பள்ளத்தில் அமிழ்ந்து போவார்கள் என்பதற்கு சந்தேகம் இராது.
ஏனெனில் அவர்களுக்கு எதிரே மகா விஸ்தாரமும் செவ்வை யுமான ஒரு பாதையும் அந்தப் பாதையின் முடிவில் சேறு நிறைந்த கெடு பாதாளமும் இருந்தது. பிரயாணிகளை விழத்தட்டி சேற்றுக்குள் திணித்துவிட வேண்டும் என்றே இந்தப் பாதாளம் ஏற்படுத்தப்பட்டது.
அந்தச் சமயத்தில் நான், வழியைக் காட்ட படம் இல்லாமலும், வழியைப்பற்றித் திகைப்பு உண்டாகையில் ஆலோசித்துக் கொள்ளும் படி ஒரு புஸ்தகம் இல்லாமல் இப்படிப்பட்ட வனத்தில் பிரயாணம் செய்ய யாரால் முடியும்? என்று எண்ணிக் கொண்டேன்.
அவர்கள் எல்லாரும் தைரிய நெஞ்சன் காட்டின திசையாக பின்னும் அந்த மயக்க பூமி வழியாகவே போகையில் வேறொரு பூப்பந்தலைக் கண்டார்கள். இது ராஜ பாதையின் பக்கத்தில்தான் இருந்தது. அந்தப் பந்தலுக்குள் இரண்டு பேர் படுத்திருந்தார்கள். அவர்களுக்கு அசட்டை, வீம்பன் என்று பேர் வழங்கப்பட்டது. இந்த இருவரும் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து களைப்பினால் மேற்கொள்ளப்பட்டு சற்று நேரம் கால் ஆறும்படி இந்த இடத்தில் உட்கார்ந்து அப்படியே தூங்கிவிட்டார்கள். இவர்கள் அவர்களைக் கண்டவுடனே அவர்களுடைய பரிதாப நிலைமையை உணர்ந்து தங்கள் தலையை அசைத்துக் கொண்டார்கள். அப்புறம் நாம் நமது பாட்டிலே நடக்கிறது நலமா, அல்லது இவர்களைப் போய் எழுப்புகிறது நலமா என்று தங்களுக்குள் ஆலோசித்துக் கொண் டார்கள். கடைசியாக, நாம் போய் எழுப்புகிறதுதான் நலம், ஆனால் அப்படி எழுப்பப் போகிறவர்கள் அங்குள்ள சுக பாக்கியங்களை நாடி அரை நிமிஷ நேரமாவது அங்கே உட்காரவே கூடாது என்று தீர்மானித்தார்கள்.
அந்தப்படியே அவர்கள் அந்த பந்தலின் முன் நின்று வழிகாட்டி அவர்களை முன் அறிந்து இருந்தபடியால் அந்த இருவர் பேரையும் சொல்லிக் கூப்பிட்டு எழுப்பப் பார்த்தார்கள். ஆனால் ஒரு சத்தமும் இல்லை. அப்புறம் தைரிய நெஞ்சன் குனிந்து அவர்களைத் தட்டி இழுத்து உருட்டி எழுப்பினார். அவர்களில் ஒருவன் “எனக்கு வரவேண்டிய தொகை வந்த உடனே உன் பாக்கியை செலுத்திப் போடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே திடுக்கென்று கண் விழித்தான். அதைக் கேட்ட வழிகாட்டி தமது தலையை ஆட்டிக் கொண்டார். மற்றவன் “கத்தியை பிடிக்கக் கையுள்ளமட்டும் நான் யுத்தம் செய்துவிடுவேன்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். அதைக் கேட்டு பிள்ளைகளில் ஒருவன் “கொல்” என்று சிரித்தான்.
அப்போது கிறிஸ்தீனாள் வழிகாட்டியைப் பார்த்து, இதின் அந்தரங்கம் என்ன என்று கேட்டாள். அதற்கு அவர்: இவர்கள் தங்கள் தூக்கத்தில் பேசுகிறார்கள். நீ இவர்களை அடித்தாலும் சரி, உதைத்தாலும் சரி, வேறென்ன செய்தாலும் சரி, அவர்கள் இப்படித் தான் உத்தரவு சொல்லுவார்கள். அல்லது அநேக ஆண்டுகளுக்கு முன்னே ஒருவர் சொன்னது போல இவர்கள் நடுக்கடலிலே சயனித்து இருக்கிறவனைப் போலும், பாய்மரத்தட்டிலே படுத்து இருக்கிறவனைப்போலும் இருந்து நான் அதை பின்னும் தொடர்ந்து தேட எப்போது கண் விழிப்பேன் என்கிறவனைப் போலும் இருக்கிறார்கள். (நீதிமொழிகள் 23 : 34, 35) மனிதர் தூங்கும்போது எதையாகிலும் பிதற்று கிறார்கள். புத்தியினாலாவது, விசுவாசத்தினாலாவது ஆளப்பட்ட வார்த்தைகளாய் அது இருக்கிறதில்லை. இவர்கள் பயணம் புறப்பட்டதற்கும், இந்த இடத்தில் வந்து தூங்கினதற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றதோ அதுபோலவே இப்பொழுது அவர்கள் பேசின வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று இணக்கம் இல்லாமல் இருக்கிறது. 3 இதிலேதான் இவர்களுடைய கேடெல்லாம் இருக்கிறது. அசட்டையாய் பிரயாணம் செய்கிறவர்களில் இருபது பேரில் ஒருவனாவது இப்படிப்பட்ட அபாயத்துக்கு தப்பிக்கொள்ளுவது அபூர்வம். இந்த மயக்க பூமியே மோட்ச பிரயாணிகளின் பகைஞனு டைய கடைசி எல்லை. பிரயாணிகளை மோசம் பண்ணும்படியாக பகைஞன் இடம் அறிந்து இந்த பந்தலைப் போட்டு இருக்கிறான். நம்மைக் கெடுக்கும்படியாக வைத்து இருக்கும் கடைசி பந்தலே நம்மை அதிக விழிப்பாக்கும் வழியாய் இருக்கிறது. ஏனெனில் இந்தப் பிரயாணிகள் இளைப்பாய் இருக்கிற காலத்தில் அல்லாமல் வேறே எப்பொழுது உட்காருவார்கள்? பிரயாணத்தின் முடிவில் உண்டாகாத இளைப்பு வேறு எங்கேதான் உண்டாகும் என்று பகைஞன் நினைத்து , இந்த மயக்க பூமி, வாழ்க்கை நாட்டின் ஓரத்திலும் இவர்கள் பயணத்தின் முடிவிலும் வைத்து இருக்கிறான். ஆகையால் ஒவ்வொரு பிரயாணியும் ஜாக்கிரதையும், விழிப்பும் உள்ளவனாய் இருந்து இந்த பிரயாணிகளுக்கு நேரிட்டது போல் தனக்கும் நேரிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது என்றார்.
அப்புறம் பிரயாணிகள் அங்கிருந்து போய்விடும்படி ஆத்திரப் பட்டார்கள். அப்பொழுது இருட்டாய் இருந்தபடியினால் அவர்கள் தங்கள் வழிகாட்டியை பார்த்து:
நீர் உமது சக்கிமுக்கி கல்லை தட்டிப் பந்தம் கொளுத்திக் கொண்டு எங்களை வழி நடத்தினால் நலமாய் இருக்கும் என்று கேட்டுக் கொண்டதின் பேரில் இருவரும் பந்தம் கொளுத்திக் கொண்டு அவர்களுக்கு முன்னே நடந்து வழிகாட்டினார்கள். (2 பேதுரு 1 : 19) என்றாலும் பிள்ளைகள் அந்த வழியில் பட்ட அவஸ்தைகளுக்கும், அழுத கண்ணீருக்கும் ஒரு அளவு இல்லை. அவர்கள் மோட்ச பிரயாணிகளின் நேசரை நோக்கி தங்களுக்கு சற்று தெளிவான பாதையை காண்பிக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். அப்போது ஒரு காற்று வீசினதால் மேக முகில் விலகி சற்று வெளிச்சமாகத் தோன்றிற்று. அவர்கள்இன்னும் மயக்க பூமியை கடந்து போகவில்லை. ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியத்தக்கதான ஒரு தெளிவு உண்டானதே அன்றி வேறொன்றும் இல்லை.
அவர்கள் மயக்க பூமியின் அந்தத்தில் போகிறபோது தங்களுக்கு முன்னே மனவியாகுலம் கொண்ட ஒரு மனிதனுடைய குரல் கேட்கிறாற்போல கவனித்தார்கள். அவர்கள் இன்னும் சற்று முன்னால் போகவே தாங்கள் எண்ணினதின்படியே ஒரு மனுஷன் முழங்கால்களில் நின்று கொண்டு தன் கண்களையும், கரங்களையும் வானத்துக்கு நேராக உயர்த்தி, அந்தரத்தில் இருக்கும் ஒரு ஆளோடு மன்றாடி பேசுகிறது போலவும் அவர்கள் கண்டார்கள். அவன் பேசுகிற வார்த்தைகளை கேட்க வேண்டும் என்று அவர்கள் விரும்பிய போதினும் கேட்கக் கூடாதே போயிற்று. ஆதலால் அவன் சொல்லுகிறதை சொல்லி முடிக்கட்டும் என்று மெதுவாய் நடந்து அவனண்டை போனார்கள். எல்லாம் முடிந்தவுடனே அவன் எழுந்து உச்சித பட்டணத்துக்கு நேராய் விரைந்து ஓடுகிறதை அவர்கள் கண்டார்கள். அதைக் கண்ட தைரிய நெஞ்சன்: ஓய் ஐயா! நில்லும், நில்லும். நீர் உச்சித பட்டணம் போகிறவரானால் நாங்களும் உம்மோடு கூட வருகிறோம் நில்லும் என்று கூப்பிட்டார். அப்படியே அவனும் நின்றான். அவனண்டை போகும் போதே கிழட்டு யதார்த்தன், நான் இவனை அறிவேன் என்றார். அப்படியா? அவன் யார்? என்று சத்திய வீரதீரன் கேட்டார். அதற்கு கிழட்டு யதார்த்தன்: அவன் எங்கள் நாட்டில் உள்ளவன்தான். இவன் பேர் நிலைநிற்போன் எனப்படும். இவன் உத்தம பிரயாணிகளில் ஒருவன் என்பது சத்தியம் என்றார்.
அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சமீபித்து எதிர்முகமாய் நின்றவுடனே, நிலைநிற்போன் கிழட்டு யதார்த்தனை நோக்கி: அப்பனே, யதார்த்தரே! நீரும் இங்கே இருக்கிறீரா? என்றான்.
அதற்கு அவர்: நீ இங்கிருக்கிறது போலவே நானும் இங்கே வந்திருக்கிறேன் அப்பா என்றார். அதைக் கேட்டு அவன் வெட்கமடைந்தவனாக நீர் என்னைக் கண்டு கொண்டீரா? என்றான். ஆம், கண்டு கொண்டேன். உன்னைக் கண்டவுடனே எனக்கு உண்டான ஆனந்தம் கொஞ்சம்அல்ல என்றார். அதற்கு அவன்: என்னைக் கண்டவுடனே நீர் என்ன நினைத்தீர் என்று கேட்டான்? அதற்கு யதார்த்தன், நினைத்ததா! ஒரு உத்தமன் போகிறான், அவனோடுகூட நாமும் நடந்து போகலாம் என்றுதான் நினைத்தேன். வேறே என்ன நினைப்பேன் அப்பா என்றார். அதற்கு அவன்: நீர் என்னைப் பற்றி தவறானது ஒன்றும் நினைக்கவில்லையானால் நான் எவ்வளவு பாக்கியம் பெற்றவனாய் இருக்கிறேன்! ஆனால் உமது நினைவின்படி நான் இல்லையானால் அந்த பழியை நானே சுமக்க வேண்டியது என்றான். அதற்கு கிழட்டு யதார்த்தன் சொல்வார்: நீ சொல்லுகிறது சரிதான் அப்பா! உனக்குள் இருக்கிற அச்சமானது பரதேசிகளின் ஆண்டவருக்கும் உன் ஆத்துமாவுக்கும் யாதொரு விதத்திலும் மனஸ்தாபம் இல்லை என்ற உண்மையை எனக்கு உறுதிப்படுத்துகிறது போல் இருக்கிறது. ஏனெனில், “எப்பொழுதும் பயந்து இருக்கிறவன் பாக்கியவான்” என்று அவரே சொல்லியும் இருக்கிறார் என்றான்.
சத்: அப்புறம் சத்திய வீரதீரன் அவனைப் பார்த்து சகோதரனே! இவ்வளவு நேரமும் நீ முழங்காலில் நின்றாயே, அதின் காரணம் என்ன? ஏதாவது ஒரு விசேஷித்த இரக்கத்தின் நிமித்தம் நீ முழங்கால் படியிடும்படி நேரிட்டதோ? அல்லது வேறு முகாந்தரம் உண்டோ? சற்றுச் சொல்லும் என்று கேட்டார்.
நிலை: அதற்கு அவன் சொல்லுகிறான்: நாம் இப்போது மயக்க பூமியில் இருக்கிறோம் என்பது உமக்குத் தெரியுமே; இதின் வழியாய் நான் நடந்து வரும்போதே இந்தப் பாதை எவ்வளவு மோசமும், ஆபத்துமான பாதையாய் இருக்கிறது. இம்மட்டும் வந்த பிரயாணிகளில் எத்தனையோ பேர் தங்கள் பயணத்தில் நின்று அப்படியே மாண்டு போகிறார்கள் என்பதைக் குறித்து வெகுவாய் தியானித்துக் கொண்டே வந்தேன். இந்த இடத்தில் உண்டாகிற சாவின் தன்மையைக் குறித்தும் நான் மெத்தவும் அங்கலாய்த்தது உண்டு. ஏனெனில் இவ்விடத்தில் உண்டாகிற சாவெல்லாம் பலவந்தம் உள்ளதாய் அல்லது மனநோவு உள்ளதாய் இராமல் தூங்குகிறபோதே அவன் உயிரும் போய்விடுகிறது. இப்படித் தூக்கத்தோடு தூக்கமாய் ஜீவனைப் போக்கி விடுகிறவனும், தன் பிரயாண ஆரம்பத்தில் எவ்வளவு ஆசையோடு அதில் நடக்கிறான்.
இப்படி பயணம் செய்ய வேண்டும் என்கின்ற ஆவலும் தூங்கவேண்டும் என்ற பிரியமும் ஒரே மனதில் ஒத்து இருக்கிறதே என்ற இவை எல்லாவற்றையும் குறித்து நான் தியானம் செய்து கொண்டு வந்தேன்.
யதா: அவன் பேசிக் கொண்டு வரும்போதே கிழட்டு யதார்த்தன் அவனைத் தடுத்து: அந்தப் பந்தலுக்குள் தூங்கின இரண்டு பேரைக் கண்டாயா என்று கேட்டார்.
நிலை: ஆம், ஆம், அசட்டையையும், வீம்பனையும் அங்கே கண்டேன். அவர்கள் உரு அழிந்து போகுமட்டும் அங்கேயே கிடப்பார்கள் என்பதை நான் நன்றாய் அறிவேன். (நீதிமொழிகள் 10 : 7) அவர்கள் காரியத்தை நிறுத்தி என் கதையை சொல்லி முடிக்கிறேன் கேளும். நான் முன்னே சொல்லிய வண்ணம் தியானித்துக் கொண்டு வரும்போது மகா அலங்காரமான உடையும், அழகிய ரூபியுமான ஒரு ஸ்திரீ என் முன்னே வந்து நின்றாள். அவள் சற்று பிராயம் சென்றவள்தான். அவள் என்னிடத்தில் வந்து: என் சரீரத்தையும், என் பணத்தையும் என் பஞ்சு மெத்தையையும் நான் உனக்குத் தருகிறேன் வாங்கிக்கொள் என்றாள். இந்தச் சமயத்தில் எனக்கு களைப்பும் கன தூக்கமும் இருந்தது. மேலும் என்னை ஆந்தைக் குஞ்சைப்போன்ற ஒத்த ஏழை என்று அஞ்சனக்காரன் முதலாய் அறிந்து இருக்கலாம். அவளை நான் இரண்டொரு தரம் விலக்கித் தள்ளினேன். அவளோ அதை யெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் புன்னகை கொண்டு பல்லைக் காட்டினாள். அப்புறம் நான் மெத்த கோபதாபம் கொண்டேன். அதையும் அவள் சட்டை பண்ணவே இல்லை. பின்னும் அவள் என்னண்டை வந்து, நான் சொன்னபடி நீ செய்கிறது உண்டானால் உன்னை மகாராஜனும், பாக்கியவானும் ஆக்கி விடுவேன். ஏனென்றால் நானே சர்வலோக ராணி, எல்லா மனுஷரும் என்னாலே பாக்கியர் ஆகிவிடுகிறார்கள் என்று சொன்னாள். அப்படியானால் உன் நாமதேயம் என்ன என்று அவளிடம் கேட்டேன். அதற்கு அவள்: என் பேர் குமிழி அம்மாள் என்றாள். அவள் பேரே என்னை அவளைவிட்டு தூரத்தில் விலகிப் போகப் பண்ணிற்று. அப்படியிருந்தும் அவள் மறுபடியும் நயவசனிப்போடு என் பின்னாலே வந்தாள். அப்போதுதான் நீங்கள் கண்டபிரகாரம் நான் முழந்தாளில் நின்று கொண்டு கைகளை உயர்த்தி, கண்களை வானத்துக்கு ஏறெடுத்து ஒத்தாசை செய்வோம் என்று வாக்கு அளித்திருக்கிறவரை நோக்கி அபயம் இட்டு பிரார்த்தனை செய்தேன். நீங்கள் வருகிற சத்தம் கேட்டவுடனேதான் அந்த துரைசானி என்னைவிட்டுப் போனாள். உடனே நான் பண்ணின பிரார்த்தனையோடு இந்த பெரிய இரட்சிப்புக்காக அவருக்கு ஸ்தோத்திரமும் செலுத்தினேன்.
ஏனெனில் அவள் எனக்கு நன்மையை உண்டாக்கும்படி வராமல் என் பயணத்தை தடுத்து விடும்படியாகவே வந்தாள் என்று நான் நிச்சயமாய்க் கண்டு கொண்டேன்.
யதா: அவள் வந்த நோக்கம் கெட்டது என்பது வாஸ்தவம்; பொறு, பொறு அவளை நான் அறிவேன்போல் இருக்கிறது. அல்லவென்றால் அவளைப்பற்றி வாசித்து இருப்பேன் என்று நினைக்கின்றேன்.
நிலை: நீர் அவளை அறிந்தும்இருப்பீர், அவளைப் பற்றி வாசித்தும் இருப்பீர்.
யதா: குமிழி அம்மாள் ஒரு நெட்டச்சி, முக லட்சணம் உள்ளவள்தான், முறிந்த மஞ்சள் ஒத்த நிறம் உடையவள்தானே?
நிலை: சரி, சரி; பொட்டில் அடித்தாற்போல் சரியாக சொல்லிவிட்டீர். அந்த ஆசாமிதான்.
யதா: அவள் மெத்த நளினமாய் பேசுகிறாள் அல்லவா? ஒவ்வொரு சங்கதியையும் முடிக்கிறபோது ஒரு புன் சிரிப்பு சிரிப்பாள்அல்லவா?
நிலை: மிகவும் சரியாக சொன்னீர். அவளுடைய நடபடிகள் எல்லாம் நன்றாய் சொல்லிவிட்டீர்.
யதா: அவளுடைய இடுப்பில் ஒரு பெரிய பை தொங்குகிறது அல்லவா? அவள் மனம் எல்லாம் அந்தப் பையிலேதான் இருக்கிறது என்று காட்ட எப்போதும் அவள் தன் கையை அந்தப் பைக்குள் இட்டுக்கொண்டு பணத்தை குலுக்குவாள் அல்லவா?
நிலை: அவள் இப்போது நமது கிட்ட நின்றாலும் நீர் சொன்னதற்கு மேலாக ஒன்றையும் சொல்ல ஏது இருக்கமாட்டாது; அவ்வளவு துல்லிபமாக சொல்லுகிறீர்.
யதா: அப்படியானால் அவள் படத்தை எழுதிய சித்திரக்காரன் மகா நிபுணனாயும் அவளைப் பற்றி எழுதின சரித்திரக்காரன் மகா வல்லவனாயும் இருக்க வேண்டியது.
தைரி: அவள் ஒரு சூனியக்காரி, அவளுடைய சூனியங்களினாலே தான் இந்தப் பூமி இத்தனை மயக்கம் உள்ளதாய் இருக்கிறது. இவள் மடியில் போய் எவன் ஒருவன் தலை சாய்வானோ அவன் கோடரி தொங்கும் பாறைக்கல்லுக்கு இடையில் தலையை சாய்க்கிறதற்குச் சரியாய் இருக்கிறது. அவளுடைய சௌந்தரியத்தின் மேல் கண் போடுகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தேவனுடைய பகைஞராக எண்ணப்படுகிறார்கள்.
இவளே மோட்ச பிரயாணிகளின் பகைஞர் எல்லாரையும் அவரவர் பேர் புகழிலே நிலை நிறுத்திக்கொண்டு வருகிறவளாய் இருக்கிறாள். (யாத்திராகமம் 4 : 4 1 யோவான் 2 : 14, 15) இவளே அநேகம் பிரயாணிகளை மோசப்படுத்தியும் இருக்கிறாள். இவள் மகா வாய்ச்சாலகி, இவளும் இவளுடைய குமாரத்திகளும் ஒரு பிரயாணி தப்பிவிட்டால் இன்னொரு பிரயாணியின் பிறகாலே போய் நளினமாய் பேசி இந்த லோக ஜீவியத்தின் கவர்ச்சிகளை எல்லாம் சொல்லி அதையே தெரிந்து கொள்ளும்படி பிரயத்தனம் செய்கிறதும் உண்டு. குமிழி மெத்த ஆணவம் பிடித்தவள். நாணமும், சுணையும் கெட்ட ஸ்திரீ. எவனைக் கண்டாலும் அவனோடு பேசுவாள். அவள் ஏழைகளான பரதேசிகளை பழித்து பேசி பணக்காரரைப்பற்றி புகழ்வாள். ஒருவன் உபாய தந்திரங்களால் பணம் சம்பாதிக்கும்படி முயற்சி செய்தால் அவனைக் குறித்து வீட்டுக்கு வீடு போய் வெகு மேன்மையாய் பேசுவாள். கூத்தாட்டம் என்றால் அவளுக்கு கொண்டாட்டம்தான். விருந்து என்றால் மிகவும் விருப்பம்தான். நாடகம் என்றால் அவளுக்கு நாட்டம்தான். பதினெட்டு வகை பதார்த்தம் உள்ள பந்தியிலேதான் அவள் எப்போதும் உட்கார்ந்து தின்பாள். அவள் நான் ஒரு தேவதையாக்கும் என்று சில இடங்களில் சொல்லி இருக்கிறதால் அநேகர் அவளை வணங்குகிறார்கள். பலவீனரை பகீரங்கமாய் ஏமாற்றிப் போடும்படியான காலமும் இடமும் அவளுக்கு உண்டு. மற்றவர்களை ஏமாற்றுகிறதில் என்னைவிடச் சமர்த்தர் உண்டோ என்று அவள் சொல்லவும் செய்வாள். தன்னை நேசித்து மதிக்கிறவர்கள் எவர்களோ அவர்களோடும், அவர்கள் பிள்ளைகளின் பிள்ளை களோடும் தான் வாசமாயிருப்பேன் என்றும் அவள் வாக்கு கொடுப்பாள். அவள் சில இடங்களிலும், சில ஆட்களிடத்திலும் தன் பையைத் திறந்து பொன்னை தூளத்தனையாக வாரி இறைப்பாள். மற்றவர்கள் தன்னை நாடித் தேடவும் புகழ்ந்து பேசவும் அவளுக்கு மெத்தப் பிரியம். புருஷாட்களுடைய மடியில் தலை சாய்த்து தூங்கும்படி அவளுக்கு மெத்த ஆசை உண்டு. தனது ரத்னாதிகளையும், வஸ்திர ஆபரணங்களையும் தன் வீட்டு வாழ்வுகளையும் குறித்துப் பெருமையாக பேச அவள் இளைப்பு அடையமாட்டாள். தன்னைப்பற்றி யார் மதிப்பாய் பேசுவார்களோ, அவர்களிடத்தில் மட்டற்ற அன்பு பாராட்டுவாள். தன் ஆலோசனையின்படி மாத்திரம் நடந்தால் கிரீடம் சூட்டுவேன் என்று சிலருக்கும், ராஜ்யம் தருவேன் என்று சிலருக்கும் வாக்கு கொடுப்பாள். இப்படி எல்லாம் சொன்னாலும் இவள் அநேகரை தூக்கு மரத்துக்கும் அதிலும் பதின் மடங்கு பேரை நரக பாதாளத்துக்கும் கொண்டு வந்து இருக்கிறாள் என்றார்.
நிலை: இவ்வளவும் கேட்டவுடனே நிலைநிற்போன் பிரமை கொண்டு, ஆ! நான் அவளை எதிர்க்கும்படி என்னை ஏவின கிருபை எவ்வளவோ மேலானது! இல்லாவிட்டால் அவள் என்னை எங்கே கொண்டுபோய் தள்ளிவிடுவாளோ தெரியவில்லையே என்றான்!
தைரி: எங்கேயா? எங்கே என்று தேவன் ஒருவரே அறிவார். ஆனால் பொதுவாகச் சொன்னால் மனுஷரை அழிக்கும் நரகத்துக்கும், உள்படுத்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளுக்குள்ளும் உன்னை விழத்தட்டிப் போடுவாள் என்பது நிஜம். (1 தீமோத்தேயு 6 : 9) அப்சலோமை தன் தகப்பனுக்கு விரோதமாகவும், யெரோபெயாமை தன் எஜமானுக்கு விரோதமாகவும் எழும்பப்பண்ணினவள் இவள்தான். யூதாசை தன் ஆண்டவரை விற்கும்படியாக ஏவினவளும், மோட்ச மார்க்கத்தில் நடவாதபடி தேமாசை தடுத்தவளும் இவள்தான். இவள் செய்கிற ஆகாமியங்கள் இவை என்று சொல்ல ஒருவராலும் கூடாது. அரசருக்கும் குடிகளுக்கும் அடிபிடியாகவும், தகப்பனும் மக்களும் தடி எடுக்கவும், தன் வீட்டுக்கும் அயல் வீட்டுக்கும் சச்சரவு உண்டாகவும், புருஷனுக்கும் மனைவிக்கும் பிணக்கு உண்டாக்கவும், ஆளுக்கு ஆள் கை கலக்கவும், மாமிசத்துக்கும் ஆவிக்கும் போர் உண்டாகவும் தூண்டி விடுகிறது எல்லாம் இந்த சண்டாளிதான். ஆதலால் நிலை நிற்போ னான நேசனே! உம்முடைய பேர் எப்படியோ அப்படியே இரும். உம்முடைய பேரின்படியே எல்லாவற்றையும் நிறைவேற்றின பிற்பாடு நீர் நின்ற நிலையிலே நில்லும் என்றார்.
இந்த சமாச்சாரங்கள் எல்லாம் பிரயாணிகளுக்கு பாதி சந்தோசத்தையும், பாதி துக்கத்தையும் கொடுத்தது. ஆனாலும் அவர்கள் சற்று நேரத்துப்பின் மனம் தெளிந்து:
மோட்ச பிரயாணிகள்
மோசம் எத்தனை அப்பா – பாவப்
பாதை எத்தனை அப்பா அவர்
பகைவர் தொகை இன்னவென்று
எவர் அறிவார் அப்பா?
படுகுழியில் விழுந்து சிலர்
உருவழிந்தார் அப்பா – சிலர்
பாழானார் அப்பா சேற்றுப்
பள்ளங்களில் சறுக்கிவிழுந்
தாழ்ந்து போனார் அப்பா.
கொப்பரைக்கு அஞ்சும் சிலர்
குதித்தாரே அப்பா தீயில்
மிதித்தாரே அப்பா அவர்
மோசம் எத்தனை? நாசம் எத்தனை?
மோட்சம் சேருமுன்னே!
என்று பாடினார்கள்.
1. உலகப்பிரகாரமான மனுஷருடன் உத்தியோக விஷயமாயும், தோழமை விஷயமாயும் நாம் அதிகமாக நெருங்கி உறவாடுவதால் ஆத்துமத்திற்கு நேரிடும் மோசத்தை இது தெரிவிக்கிறது. லௌகீக விஷயங்களில் காரிய சித்தியும், இந்த ஜீவியத்திற்குரியவைகளில் அனுகூலமும் பெறுவது மனிதரை பக்தி வழியில் தூக்கம் கொள்ளவும், மறுபடியும் விழிக்காமல் போகவும் செய்துபோடும் என்று எண்ணப்படுகிறது. அனுகூலமும், தொந்தரவுகளும் நேரிடும்போது நாம் தைரியமும், விழிப்பும் உள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
2. கெட்டிக்கரனும் கூட வழி தப்பிப் போகத்தக்கதாய் சில சங்கதிகள் அவ்வளவு மலைப்பாக இருக்கும் என்று இதனால் நாம் அறியலாம். அப்படிப்பட்ட தருணங்களில் தேவன் தமது பரிசுத்த வேதாகமத்தில் அருளிச் செய்திருக்கும் வெளிச்சத்தை நாம் விசேஷமாய் கவனிக்கவேண்டும்.
3. கிறிஸ்தவன் என்று பேர் இருக்கும்போதே தேவ பக்தியை இழந்துவிடுவது எவ்வளவு எளிதான காரியம் என்று இதிலே விளங்குகிறது.