அந்தரங்கன் அவளைச் சந்தித்தது
மறுநாள் உதய காலத்தில் அவள் விழித்தெழும்பி ஜெப தியானங்கள் செய்த பின்பு தன் மக்களுடன் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் யாரோ வந்து கதவைப் பலமாய்த் தட்டினார். தட்டின சத்தம் கேட்டவுடனே அவள் “நீர் கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவரானால் உள்ளே வாரும்” என்று சொன்னாள். அதற்கு அவர் “ஆமென்” என்று சொல்லிக் கொண்டு கதவைத்திறந்து உள்ளே சென்று “இந்த வீட்டுக்குச் சமாதானம்” என்று சொல்லி வாழ்த்தினார். இந்த வாழ்த்து முடிந்தபின்பு அவர், கிறிஸ்தீனாளே! நான் வந்த விசேஷம் இன்ன தென்று அறிவாயா? என்று கேட்டார். அதைக் கேட்டவுடன் அவள் முகம் சிவந்து குலை கலங்கிப் போயிற்று. இவர் எங்கிருந்து வந்தாரோ? ஏது காரியமாய் வந்தாரோ? என்று அறியும்படி அவளுக்கு இருந்த ஆசையால் உள்ளம் கொதித்தது. அவர் சொல்லுகிறார்: எனக்கு அந்தரங்கன்1 என்று பேர். அந்தரவாசிகளோடே நான் வாசஞ் செய்கிறேன். நீயும் அங்கே வர ஆசைப்படுகிறாய் என்ற செய்தி அந்த அந்தரங்க லோகத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. முன்னே நீ உன் கணவனுடைய வார்த்தைகளுக்கு உன்இருதயத்தை கடினப்படுத்தி, இந்தப் பாலகரை அவர்கள் அறிவீனத்தோடே வளர்த்து விட்டு, இப்படியாக உன் கணவனுக்கு செய்த அநியாயங்களை எல்லாம் இப்போது உணர்ந்து கொள்ளுகிறாய் என்றும் எங்கள் தேசத்தில் பேச்சு நடக்கிறது. ஆ, கிறிஸ்தீனாளே! கிருபை பொருந்தினவர் என்னை அனுப்பி, தாம் மன்னிப்பை அருளும் தேவனாய் இருக்கிறார் என்றும் பாவமன்னிப்பின் தொகையைப் பெருக்கும்படி அவர் பிரியப்படுகிறார் என்றும் உனக்கு அறிவிக்கும்படி சொன்னார். நீ அவருடைய திருமுக தரிசனம் பெறவும் அவரோடு விருந்துண்ணவும் உன்னை அழைக்கிறார் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டியதாம். அவர் தமது வீட்டின் ஆசீர்வாதங்களாலும் உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரங்களாலும் உன்னை போஷிப்பாராம்.
“உன் கணவனாய் இருந்த கிறிஸ்தியான் எண்ணிறந்த தனது தோழரோடு அங்கே இருக்கிறான்; பார்ப்போர் எல்லாருக்கும் ஜீவனை அளிக்கும் திருமுகத்தைஅவர்கள் ஓயாமல் நோக்கிக்கொண்டு மனமகிழுகிறார்கள். உன்னுடைய பிதாவின் தங்க அரண்மனையின் தளவரிசையில் உன் காலடிகளின் சத்தம் கேட்கிறபொழுது அவர்கள் எல்லாரும் ஆனந்தம் கொள்ளுவார்கள்” என்று சொன்னார்.
இவைகளைக் கேட்டவுடனே கிறிஸ்தீனாள் மனங்கலங்கி தரைமட்டும் தலை குனிந்தாள். பின்பு அவர் கிறிஸ்தீனாளே! உன் புருஷனுடைய அரசரிடத்தில் இருந்து உனக்கு ஒரு கடிதமும்2 இதோ இருக்கிறது என்று சொல்லி கடிதத்தை நீட்டினார். அவள் அதை வாங்கித் திறக்கவே அதினுள் இருந்து பரிமள தைலத்தின் வாசனை வீசிற்று. (உன்னத 1 : 3) அதின் அட்சரங்கள் எல்லாம் பொன்னால் எழுதப் பட்டிருந்தன. அக்கடிதத்தின் பொருள் என்னவென்றால், கிறிஸ்தியான் எப்படி நடந்து கொண்டானோ அப்படியே கிறிஸ்தினாளும் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அரசருடைய விருப்பம். ராஜ நகரத்துக்குள் சேர்ந்து ராஜ தரிசனை பெற்று நித்தியானந்தம் அடைய அந்த வழி அல்லாமல் வேறு வழி இல்லை என்பதுபோல கண்டிருந்தது. காகிதத்தைப் படித்துப் பார்க்கவே கிறிஸ்தீனாள் பரவசப்பட்டாள். அவள் உடனே அலறி, ஓய் புண்ணிய புருஷா! உங்கள் அரசரின் அடிபணிந்து வணங்கும்படி இந்த ஏழையையும் என் பிள்ளைகளையும் உம்மோடு கூடத் தூக்கிக்கொண்டு போய் விடமாட்டீரா? என்று சொல்லி அழுதாள்.
அதற்கு அந்தரங்கன்: கிறிஸ்தீனாளே கேள், தித்திப்புக்கு முன் கசப்பு இருக்கிறது. உனக்கு முந்தினவன் செய்ததுபோலவே நீயும் அநேக உபத்திரவங்களின் வழியாகவே அந்த உன்னத லோகத்தில் சேரவேண்டியதாய் இருக்கிறது. ஆதலால் உன் புருஷனாகிய கிறிஸ்தியான் செய்தபடியே நீயும் செய்யும்படி உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்: வனத்துக்கு அப்பால் இருக்கிற திட்டிவாசலுக்குப் போ. அதுவே நீ பிரயாணப்படும் பாதையின் ஆரம்பமாய் இருக்கிறது. உன் பிரயாணம் எல்லாம் க்ஷேமமாய் நிறைவேறும் படியாகவே நான் விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை நீ மடியில் வைத்துக் கொண்டு அடிக்கடி நீயும் வாசித்து, உன் பிள்ளைகளுக்கும் படித்துக்கொடு. நீங்கள் இதை மனப்பாடமாய் கற்றுக்கொள்ளும் மட்டும் இது உனது மடியில் இருப்பது அவசியம். ஏனெனில் இது நீ பரதேசியாய் தங்கும் வீட்டிலே பாடவேண்டிய கீதங்களில் ஒன்றாய் இருக்கிறது. (சங்கீதம் 1, 19, 54) இதை நீ அப்பால் இருக்கிற வாசலில் காட்ட வேண்டும் என்று சொன்னாராம்.
1. அந்தரங்கன்: இது பரிசுத்த ஆவியானவர் இருதயத்திற்குள் இரகசியமாய் நடப்பிக்கிற வேலையை விளக்குகிறது. இந்த இரகசியமான கிரியையினாலே இருதயமானது தன் வேலைகளைச் செய்ய அதிகம் அதிகமாய் ஆயத்தப்படுகிறது. வேத வாக்கியங்களும் அதற்கு ஒத்தாசை செய்கின்றது.
2. கடிதம்: ஆத்துமாக்களைக் கூப்பிடும்படி வேதத்தில் எழுதப்பட்டு இருக்கிற பரம அழைப்பு, மனிதரை அழைத்து தைரியப்படுத்துகிற கடிதமாக தேவன் வேதத்தைக் கொடுத்திருக்கிறார். நாம் அதை கவனிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மை ஏவி எழுப்புகிறார்.