சத்திய வீரதீரனை சந்தித்தல்
அப்பால் அவர்கள் தங்கள் வழியே போய் அற்ப விசுவாசி கொள்ளையிடப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அந்த இடத்தில் வந்தபோது, உருவின பட்டயத்தோடும், இரத்தம்பட்ட முகத்தோடும் ஒரு மனுஷன் நிற்கிறதை அவர்கள் கண்டார்கள். நீ யார்? என்று தைரிய நெஞ்சன் அவனைக் கேட்டார். அதற்கு அவன்: நான் சத்திய வீரதீரன் என்ற பேருடையவன். நான் உச்சித பட்டணம் போகும் மோட்ச பிரயாணிகளில் ஒருவன். நான் என் பாட்டிலே என் வழியே போகையில் மூன்று பேர் எதிர்பட்டு என்னை வளைந்து கொண்டு, நீ எங்களோடு கூடிக்கொள்ளுகிறாயா? இல்லையானால் நீ புறப்பட்டு வந்த ஊருக்குத் திரும்பிப் போகிறாயா? இல்லையானால் இந்த இடத்திலே சாகிறாயா? என்று மூன்று கேள்விகளைக் கேட்டார்கள். (நீதிமொழிகள் 1 : 11 – 14) அவர்களுடைய முதலாம் கேள்விக்கு உத்தரவாக நான் உத்தமனாகி வெகு காலமாகிறதால் இனித் திருடரோடு கூடிய திருடனாகிறது அசாத்தியம் என்று சொன்னேன். அப்படியானால் இரண்டாம் கேள்விக்கு என்ன ஆட்சேபனை சொல்லப் போகிறாய் என்று கேட்டார்கள். அதற்கு நான், என் ஜென்ம தேசம் எனக்கு பிடித்து இருந்தால் அங்குள்ள வாழ்வை எல்லாம் மறந்து இப்படி பரதேசியாகி இருக்கமாட்டேன். அந்த தேசம் எனக்கு எவ்வளவேனும் ஒத்துக் கொள்ளாததினாலேயும், நான் அந்த இடத்தில் ஒரு பலனும் காணாததினாலுமே அதை முற்றிலும் கைவிட்டு உதறிப் போட்டு இந்தப்படி பிரயாணி ஆனேன் என்றான். அப்படியானால் மூன்றாம் கேள்விக்கு என்ன சொல்லுகிறாய் என்று கேட்டார்கள். அதற்கு நான், லேசாய் விட்டுவிடுகிறதற்கு என் ஜீவன் அவ்வளவு அற்பமான பொருள் அல்ல, அதுவுமன்றி இப்படிச் செய்வாயா? அப்படிச் செய்வாயா? என்று என்னை நீங்கள் கேட்க நீங்கள் அண்ணாவிமாரா? என் ஜீவனோடு நீங்கள் நெருங்குவீர்களானால் உங்கள் ஜீவனுக்கு அழிவுகாலம் வந்தது என்று எண்ணிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இப்படிச் சொன்னவுடனே துஷ்டப்பயல், திடீரென் போன், வெடுக்கன் என்று பேருடைய அந்த மூவரும், அப்படியா செய்தி என்று வர்மம் கூறி என் முன்னே நெருங்கினார்கள். நானும் நெருங்கினேன். அப்புறம் அந்த மூவரும் நான் ஒருவனுமாக சுமார் மூன்று மணி நேரம் கடுஞ்சண்டை போட்டுக் கீழது மேலதாய்க் கிடந்து புரண்டோம்.
அவர்கள் தங்கள் வீரத்துவத்துக்கு சாட்சியாக நீங்கள் என்னிடம் பார்க்கும் இந்தக் காயங்களை உண்டு பண்ணினார்கள். என் வீராதிவீரத்துவம் அவர்கள் மேல் உள்ள காயங்களால் தெரிய வரும். அவர்கள் இப்போதுதான் ஓடிப்போனார்கள். நீங்கள் வந்த காலடி சத்தம் கேட்டுத்தான் ஓட்டம் பிடித்தார்கள் போல் இருக்கிறது என்று சொன்னான்.1
தைரி: இந்த இடத்தில் காரியம் விபரீதமாய் அல்லவோ இருந்திருக்கிறது. மூவருக்கு விரோதமாய் ஒரு ஆள் நின்று இருக்கிறீரே!
சத்திய வீரதீரன்: அது மெய்தான். ஆனால் சத்தியம் எவன் பட்சத்தில் இருக்கிறதோ அவனுக்கு விரோதமாய் கொஞ்சம் பேர் வந்தால் என்ன? அதிகம் பேர் வந்தால் என்ன? ஒன்றும் இல்லை. “எனக்கு விரோதமாய் ஒரு பாளையம் இறங்கினாலும் என் இருதயம் பயப்படாது, என்மேல் யுத்தம்எழும்பினாலும் இதிலே நான் நம்பிக்கையாய் இருப்பேன்” என்று ஒரு பக்தன் சொன்னாரே. (சங்கீதம் 27 : 3) அது மாத்திரமோ? ஒரு மனுஷன் ஒரு இராணுவத்தையும் எதிர்த்து மடக்கி ஜெயம் பெற்றிருக்கிறான் என்றும், சிம்சோன் என்பவர் கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு எத்தனையோ பேரை முறியடித்தார் என்றும் நான் சரித்திர ஆகமங்களில் வாசித்து இருக்கிறேனே!
தைரி: இப்படிப்பட்ட ஆபத்தில் இருக்கையில் நீர் ஆள்உதவி கிடைக்கும்படி அபயமிடக்கூடாதா?
சத்: அபயமிட மறப்பேனா? அந்த நிமிஷமே எங்கள் அரசனை நோக்கி அபயமிட்டேன். அவர் உடனே என் அபயக் குரலை கேட்டு என்னை அறியாமலே சகாயம் செய்வார் என்று எனக்குத் தெரியும். அதுவே எனக்கு போதும்.
தைரி: நீர் செய்த பிரயத்தனம் மெச்சிக் கொள்ளப்படத்தக்கது. உம்முடைய பட்டயத்தை காட்டும் பார்ப்போம் என்று தைரிய நெஞ்சன் கேட்டார். அப்படியே காட்டினார்.
தைரியநெஞ்சன் அதை வாங்கி சற்றுநேரம் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு, ஆகா! இது அசல் எருசலேமின் பட்டயம் என்றார்.2
சத்: ஆம் ஆம், இது அசல் எருசலேமின் பட்டயம்தான். இதில் ஒன்று மாத்திரம் ஒருவனுக்கு இருக்குமட்டும்; அவன் இதை தக்கபடி பிடிக்கும் புஜபலமும், பிரயோகிக்கும் சமர்த்தும் மாத்திரம் இருந்தால் பாதாள பூதத்துக்கும் எதிர்த்து போகலாமே. இதைப் பிரயோகிக்கும் சமர்த்து மாத்திரம் தெரியுமானால் பிடிக்கும் முறையைப்பற்றி அஞ்சவேண்டியதில்லை. அதின் கூர்மை ஒருக்காலும் மழுங்கிப் போகவே மாட்டாது. அது மாமிசத்தையும், ஆவியையும் மற்றவை எல்லாவற்றையும் கண்டதுண்டம் ஆக்கிவிடும்.
தைரி: நீர் வெகு நேரம் போராடி இருக்கிறீரே, உமக்கு இளைப்பு உண்டாகாதது மெத்த ஆச்சரியம்.
சத்: பட்டயம் என் கையோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் நான் போராடினேன். என் கைகள் இரண்டும் ஒன்றாய் ஒட்டிக்கொண்டு, என் கைக்குள் இருந்தே ஒரு கத்தி வளர்ந்தாற் போல் இருந்தது. என் விரல்கள் வழியாய் இரத்தம் தாரை தாரையாய் வடிந்ததைக் காண காண நான் அதிக வீரத்தோடு போர் புரிந்தேன்.
தைரி: வெகு சமர்த்தாய் சண்டை செய்து இருக்கிறீரே! பாவத்துக்கு விரோதமாய் இரத்தம் சிந்துமட்டும் போராடி இருக்கிறீர். நீர் எங்களுக்குச் சமீபமாய் வாசம்பண்ணி எங்கள் நடுவில் வந்து எங்களோடு புறப்படும். ஏனெனில் நாங்கள் உம்முடைய தோழர் என்று சொல்லி அவரை கூட்டிக்கொண்டு போய் அவருடைய காயங்களையும் இரத்தங்களையும் கழுவி அவர் களைப்பை ஆற்றும் படி தங்களிடத்தில் இருந்த வஸ்துக்களைக் கொடுத்து, அப்புறம் எல்லாரும் கூடி ஏகமாய் வழிநடந்து போனார்கள்.
இப்படி எல்லாரும் ஏகமாய் வழிநடந்து போகையில், அவர்களுடைய வழிகாட்டிக்கு உண்டான சந்தோசம் இவ்வளவு என்றில்லை. தன்னை போலொத்த பராக்கிரமனாகிய சத்திய வீரதீரன் பலவீனரான மற்ற பிரயாணிகளுடன் அகப்பட்டது தனக்கு கை உதவி போல இருந்தது. ஆதலால் அவருடன் அநேக விஷயங்களை குறித்து சம்பாஷித்துக் கொண்டு போனார்.
தைரிய நெஞ்சன் கேட்கிறார்: ஐயா! நீர் எந்த தேசத்தான்?
சத்: நான் அந்தகார பூமியான். அதுவே என் பிறந்தகம். என் தாய் தந்தையும் இன்னும் அங்கேதான் இருக்கிறார்கள்.
தைரி: அந்தகார பூமியா? அது நாசபுரியில் இருக்கும் கடல் துறைமுகப் பட்டணங்களில் ஒன்று அல்லவா?
சத்: ஆம் ஆம், அங்கேதான் இருக்கிறது. நான் மோட்ச பிரயாணியாகும்படி ஏவின காரணம் இதுதான்: சத்தியவாதி என்ற நாமமுடைய ஒருவர் எங்கள் ஊருக்கு ஒருதரம் வந்து, நாசபுரியில் இருந்த கிறிஸ்தியான் என்ற ஒருவன் தன் மனைவி மக்கள் எல்லாரையும் வெறுத்துவிட்டது எப்படி என்றும், தன் ஜீவ காலமெல்லாம் பிரயாணம் செய்தது எவ்வாறு என்றும் விவரமாய்ச் சொன்னார். அவன் தன் வழியே போகும்போது அவனுக்கு எதிர்ப்பட்ட வல்ல சர்ப்பம் ஒன்றை அவன் எப்படி எதிர்த்து கொலை செய்தான் என்றும், தான் நாடிய தேசத்தை எப்படி போய்ச் சேர்ந்தான் என்றும் கேள்விப் பட்டேன். அதுவும் அன்றி அவனுடைய ஆண்டவரின் சத்திரங்கள் தோறும் அவனுக்குசெய்யப்பட்ட உபசரணைகளும், கண்ணியங்களும் கொஞ்சம் இல்லையாம். விசேஷமாய் அவன் உச்சிதபட்டணத்தின் அலங்கார வாசலை சேர்ந்த உடனே அவனுக்கு நடத்தப்பட்ட மரியாதைகளுக்கு ஒரு கணக்கு இல்லையாம். அங்கே போய்ச் சேர்ந்த உடனே ஒளிமய ரூபிகள் பலர் ஓசையுள்ள எக்காள தொனியோடு அவனை உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள் என்றும் அவர் சொன்னார். அவன் உள்ளே போனவுடனே அங்குள்ள மணிகள் எல்லாம் எவ்வித இன்பநாத எதிரொலியால் முழங்கி அவனை ஏற்றுக்கொண்டது என்றும், எப்படிப்பட்ட பொன்சரிகை உடுப்பால் அவன் உடுத்தப்பட்டான் என்றும், இன்னும் என்னென்ன பாக்கியங் களோ அவனுக்கு உண்டாயிற்று என்றும் அவர் சொன்னார். அதை எல்லாம் இப்போது சொல்லி முடியாது. ஒரே வாசகத்தில் அடக்கிச் சொன்னால், கிறிஸ்தியான் பெற்ற மேன்மைகளை எல்லாம் கேட்டவுடனே என்ஆவியில் அனல் மூண்டு, உடனே அவன் பிறகாலே போக வேண்டும் என்ற ஆசை ஆவல் என்னைப் பிடித்துக் கொண்டது. என்னை நிறுத்திவிட என் தகப்பனாராலாவது, தாயாராலாவது கூடவில்லை.3 ஆகவே நானும் புறப்பட்டு இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து இந்த இடத்தில் வந்திருக்கிறேன்.
தைரி: திட்டி வாசலுக்கு வந்தீர் அல்லவா?
சத்: ஆம், வந்தேன். கிறிஸ்தியானுடைய சமாச்சாரங்களை எல்லாம் சொன்னவர்தான் நீ திட்டிவாசல் வழியாய்ப் போகா விட்டால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றும் சொன்னார்.
தைரி: அதைக் கேட்ட வழிகாட்டி கிறிஸ்தீனாளைப் பார்த்து: பார்த்தாயா அம்மா! உன் கணவனுடைய பிரயாணமும் அவருக்கு உண்டான பாக்கியங்களும் சமீபமானவர்களுக்கும், தூரமானவர் களுக்கும் பிரசித்தமாய் இருக்கிறது என்றார்.
சத்: அந்த அம்மாள் யார்? கிறிஸ்தியானுடைய மனைவியா?
தைரி: ஆம், அது அவர் மனைவிதான். இந்த நான்கு வாலிபரும் அவருடைய பிள்ளைகள்தான்.
சத்: என்ன அதிசயம்! மோட்ச பிரயாணம்தான் போகிறார்களா?
தைரி: ஆம், மெய்யாகவே இவர்கள் அவரை பின் தொடரு கிறார்கள்.
சத்: என் இருதயம் என்னமாய் களிகூருகிறது! கிறிஸ்தியான் பாக்கியவாளன். தன்னோடு கூட வரமாட்டோம் என்று சொன்ன வர்கள் தனக்கு பின்னாலே புறப்பட்டு உச்சித பட்டணத்தின் அலங்கார வாசலை மிதிக்கிறதை அவன் காணும்போது எவ்வளவு சந்தோசமாய் இருப்பான்.
தைரி: அதற்கும் சந்தேகமா? தான் அங்கே இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியோடு தன் மனைவி மக்களும் வருகிறதைக் கண்டால் எவ்வளவு பேரானந்தமும், ஆறுதலும் அவனுக்குஉண்டாகும்!
சத்: நாம் இப்பொழுது பரலோக சந்தோசங்களைப் பற்றிய பேச்சில் இருக்கிறோமே, அதோடு அதாய் ஒரு காரியத்தைக் குறித்து உம்முடைய அபிப்பிராயம் என்ன என்று அறிய ஆசையாயிருக்கிறேன். பரலோகத்தில் நாம் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்ளுவோமா?
தைரி: பரலோகம் சேர்ந்தவர்கள் தங்களை இன்னார் என்று அப்பொழுது அறிந்து கொள்ளுவார்களா? அல்லது தாங்கள் அந்தப் பாக்கியங்களை அனுபவிக்கிறதாக அறிந்து சந்தோசப்பட்டுக் கொள்ளுவார்களா? இதைப்பற்றி நீர் என்ன நினைக்கிறீர்? அவர்கள் தங்களை அறிந்து தாங்கள் அங்குள்ள பாக்கியங்களை அனுபவிப் பதை உணர்ந்து கொள்ளுவார்களானால், மற்றவர்களை அறிந்து அவர்களுடைய பாக்கியங்களை கண்டு ஏன் களிகூர மாட்டார்கள்?
மேலும் பெந்துக்கள் நம்மை அடுத்தவர்கள் ஆனதால் பரலோகத்தில் அந்த பாந்தத்துவம் அற்றுப்போன போதிலும் அவர்கள் அந்த இடத்தில் வராமல் இருப்பதிலும் வந்திருப்பது நமக்கு அதிக மகிழ்ச்சியை உண்டாக்கும் என்று தீர்மானிப்பது புத்திக்கு விரோதமாய் இருக்கமாட்டாதே.
சத்: இதைப்பற்றி உமது அபிப்பிராயம் எப்படி இருக்கிறது என்பதை இப்போது கண்டுகொண்டேன். என் பிரயாண ஆரம்பத்தைக் குறித்தும் இன்னும் ஏதாவது கேட்கப் போகிறீரா?
தைரி: ஆம் கேட்கத்தான் விரும்புகிறேன். நீர் பரதேச பிரயாணம் செய்வது உமது தாய் தந்தையருக்கு சம்மதமாய் இருந்ததா? 4
சத்: அவர்களுக்கு சம்மதமாய் இருக்குமா? அவர்கள் தங்கள் வீட்டைவிட்டு போகாதபடிக்கு பண்ணாத பிரயத்தனம் எல்லாம் பண்ணினார்கள்.
தைரி: அவர்கள் செய்த தடைகள்தான் என்ன?
சத்: பரதேசியாய் போவது படு சோம்பேறிகளுடைய ஜீவனார்த்தம். உனக்கு சோம்பலும், அசதியும் பிரியம் இல்லை. அதினால் பரதேசியாகவும் நீ பிரியப்படமாட்டாய் என்று சொன்னார்கள்.
தைரி: வேறே ஏதாகிலும் சொன்னார்களா?
சத்: அவர்கள் சொன்ன தடைகளுக்கு கணக்கு உண்டா? அது மோசமும் நாசமுமான வழி. மோட்ச பிரயாணம் செய்வதைப்போல மோசமான பிரயத்தனம் இந்த உலகத்தில் வேறு இல்லவே இல்லை என்றார்கள். 5
தைரி: இந்த வழி மோசமானது என்பதற்கு ஏதாவது முகாந் தரங்கள் சொன்னார்களா?
சத்: அவர்கள் அதற்கு சொன்ன திருஷ்டாத்தங்கள் மெத்த உண்டு.
தைரி: அவைகளில் சிலவற்றை சொல்லும் பார்ப்போம்.
சத்: கிறிஸ்தியான் விழுந்து திக்கு முக்கிட்டுப் போன நம்பிக்கையிழவு உளையைப் பற்றிச் சொன்னார்கள். திட்டிவாசலை போய் தட்டுகிறவர்களை அம்பு எய்து கொல்லும்படி பெயெல் செபூலின் அரண்மனை மேல் பல வில்வீரர் நிற்கிறார்கள் என்பதாய் சொன்னார்கள். வழியில் உள்ள காடுகள், அந்தகார பர்வதம், கஷ்டகிரி சிங்கங்கள் இவைகளைப் பற்றிச் சொன்னார்கள். இரத்தப் பிரியன், சங்காரன், நலங்கொல்லி ஆகிய இந்த மூவரைப் பற்றிச் சொன்னார்கள். மனத்தாழ்மையின் பள்ளத்தாக்கில் அவலட்சண ரூபமுள்ள ஒரு பூதம் சுற்றித் திரிகிறது என்றும் சொன்னார்கள். அதுவுமன்றி காளிகளும், கூளிகளும் குடியிருப்பதும், இருளே ஒளியாயிருப்பதும், கண்ணி களாலும், பள்ளங்களாலும், பொறிகளாலும் நிறைந்து இருப்பதுமான மரண நிழலின் பள்ளத்தாக்கு வழியாய் போக வேண்டியது என்றும் சொன்னார்கள். அதோடு அகோர பயங்கர ராட்சதனையும் அவனது சந்தேக துருக்கத்தையும், அரண்மனையையும் பற்றிச் சொல்லி பிரயாணிகள் அவனிடத்தில் படுகிற அவஸ்தைகளை எல்லாம் விவரித்தார்கள். அப்புறம் மயக்க பூமி என்ற ஓர் மைதானத்தை கடக்க வேண்டியது, அது மகா ஆபத்தான இடம் என்றும் சொன்னார்கள். கடைசியாக இவை எல்லாவற்றையும் கடந்து போன பின்பு அங்கே ஒரு பெரிய ஆறுஉண்டு. அதற்கு பாலமே இல்லை. ஆறு தாண்டி அக்கரை சேராவிட்டால் உச்சிதபட்டணம் சேரக்கூடாது என்று இப்படி எல்லாம் சொன்னார்கள்.
தைரி: இவ்வளவுதானா? இன்னமும் உண்டா?
சத்: இதோடு முடிந்ததா? இன்னும் இப்படி நான்கு பங்கு இருக்கிறது. அந்தப் பாதை மோசக்காரரால் நிறைந்திருக்கிறது என்றும் நல்ல மனிதரை நேர் வழியைவிட்டு விலக்கிப் போடும்படி அநேகர் பாதை ஓரங்களில் பதிவிருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள்.
தைரி: அந்த மோசக்காரரை குறித்து அவர்கள் சொன்னது என்ன?
சத்: லோக ஞானி என்று ஒருவன் வஞ்சிக்கும்படி வழியில் காத்துக்கொண்டு இருக்கிறான். அதற்குத் தப்பினால் வேஷக்காரன், மாயக்காரன் என்னும் இருவர் வழியிலே நிற்கிறார்கள். அங்கும் தப்பினால் உபாயியாவது, வாயாடியாவது, தேமாவாவது உன்னை வாயில் போட்டுவிடுவார்கள். அதற்கும் தப்பிக்கொண்டால் முகஸ்துதி உன்னை தன் வலைக்குள் உட்படுத்திவிடுவான்.
இவை எல்லாவற்றுக்கும் நீ தப்பிக் கொண்டு உன் இளம் பிராயத்துக்கு ஏற்ற மதியீனத்தால் துணிந்து உச்சித பட்டணத்தின் வாசலில் போய் மிதித்தது மெய்யானால், நரக பாதாளத்தின் குறுக்கு வழியே கொண்டு போகப்பட்டு மலைச் சரிவில் இருக்கும் படுகுழியில் தள்ளப்படுவாய் என்று எல்லாம் சொன்னார்கள்.6
தைரி: உன் மனதை உடைக்கும்படி இவ்வளவே போதும் அல்லவா? ஆனால் இவ்வளவுதானா? இன்னும் உண்டுமோ?
சத்: இன்னும் இருக்கிறது, பொறுமையாய் கேளும். இப்படிப் பட்ட ஒரு சிரேஷ்ட தேசம் இருக்கிறது என்று பலரும் புகழ்ந்து பேசின செய்தியை நம்பி அந்த மகிமைகளில் சிலவற்றை கண்டு கொள்ளலாம் என்று ஆவலாய் புறப்பட்டுப் போன பலர் ஏமாந்துபோய்த் திரும்பிவிட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் முந்தின மதியீனத்தை உணர்ந்து, ஐயோ! நமது வீடுவாசலை மறந்து வீணாய்க் காலம் கழித்தோமே என்று எல்லாருடைய மனதுக்கும் திருப்தி உண்டாக தங்கள் வாயினாலே அறிக்கையிட்டார்கள் என்றும்அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்டவர்களில் பிடிவாதன் ஒருத்தனாம், இணங்கு நெஞ்சன் ஒருத்தனாம், சந்தேகி ஒருவராம், அச்சன் ஒருவராம், மறுதலிப்பு ஒருவனாம், நாஸ்தீகன் ஒருவனாம். இப்படி இன்னும் அனந்தம் பேருடைய பேர்களை சொன்னார்கள். இவர்கள் எல்லாரும் தாங்கள் கேள்விப்பட்ட வாழ்வை கண்டு பிடிக்கும்படி வெகு தூரம் போயும் ஒரு கோழி இறகுக்கு முதலாய் வழி இல்லை என்று கண்டு திரும்பி விட்டார்களாம்.
தைரி: உமது மனதை உடைக்கும்படி அவர்கள் இன்னும்ஏதாவது சொன்னது உண்டா?
சத்: ஆம், ஆம், அச்சநெஞ்சன் என்று ஒருவன் பரதேசியாகி ஒண்டியாய் நடந்து, ஓயாத சஞ்சலத்தை உடையவனாய் இருந்தானாம். ஏக்கம் என்ற ஒருவனும் அப்படியே தன் பயணத்தில் பசியும் பட்டினியுமாய் கிடந்து வெகு பாடுபட்டானாம்.
இன்னும் ஒரு சங்கதியை மறந்தல்லோ போனேன். வெகு பிரஸ்தாபமாய் பேசிக்கொள்ளப்பட்ட கிறிஸ்தியான் இருக்கிறானே அவனும் உச்சித பட்டணத்தையும், கிரீடத்தையும் நாடிப்போய், கடைசியாக பாலமற்ற ஒரு கருமையான ஆற்றில் ஆழ்ந்தே போனா னாம். ஆற்றுக்கு அப்பால் அவன் ஒரு அடி முதலாய் போகாதிருந் தாலும் அவனுடைய பட்சத்தார் அந்தச் செய்தியை அப்படியே அடக்கிப் போட்டார்களாம். இப்படி எல்லாம் சொன்னார்கள்.
தைரி: இவைகளில் ஒன்றும் உன் மனதை அதைரியப்படுத்த வில்லையா?
சத்: அவர்கள் என்னதான் சொல்லட்டும், நான் யதார்த்தன் என்ற ஒரு குரு சொன்னதையே நம்பி பற்றிக் கொண்டேன். அது என் மனதை அசைக்கவேஇல்லை.
தைரி: உன் விசுவாசமே உனக்கு ஜெயம் ஆயிற்று என்று சொல்ல வேண்டியது.
சத்: அது சரியான வார்த்தை. நான் விசுவாசித்தேன், ஆகையினால் புறப்பட்டேன். ஆகையினால் ராஜபாதை சேர்ந்தேன். ஆகையால் எனக்கு விரோதமாய் எழும்பிய தடைகளை எல்லாம் ஜெயித்தேன். என் விசுவாசத்தினாலேதான் நான் இம்மட்டும் வந்து சேர்ந்து இருக்கிறேன்.
கும்மி
சத்தியவீரனை, தீரனை, சூரனை
சாட்சிபகரும் சற்புத்திரனை
பார்க்க விரும்பினால் காட்டுவேன் வா அப்பா!
பரதேச பிரயாணம் போவேனே.
காற்றோ, மழையோ, ஆடையோ, கோடையோ
கானலோ, வேனிலோ வந்திடினும்
கால்வைத்த கால் பிசகாதபடி வைப்பான்
மேலுலக பிரயாணியாக.
யார் அவன் பின்னேவந் தென்னதான் சொல்லட்டும்
யார் அவன் முன்னே வந்தேமாற்றப் பார்க்கட்டும்
நின்ற நிலை பேரான், வந்தவர் வெட்குவார்,
மேலுலகப் பிரயாணியாக.
சிங்கம் வந்தெதிர்த்தபோதிலுமே அவன்
அஞ்சா வீரனாய் நின்றெதிர்ப்பான்
ஒன்றும் அவனை அசைக்கமாட்டாது
மேலுலகப் பிரயாணியாக.
காளிகள், கூளிகள், காரியரூபிகள்
கண்ணி, பொறி பலசங்கடங்கள்
வந்திடினும் அவன் அஞ்சுவானா? அல்ல
மேலுலக பிரயாணியாக.
அந்தத்தில் நித்திய ஜீவன் இருக்குது
அதையே நானும் அனுபவிப்பேன்
என்றவன் அறிந்து ஆவியில் தேறுவான்
மேலுலகப் பிரயாணியாக.
தன்னை அறிந்தவர் என்னதான் சொல்லட்டும்
அதற்கெல்லாம் அவன் அஞ்சமாட்டான்
அல்லும்பகலும் முயலுவானே அவன்
மேலுலகப் பிரயாணியாக
1. இவர்களுக்குள் உண்டான கலகமானது உத்தமமான தொண்டர்களுக்கு விபரீத எண்ணமும் கோட்பாடும் உள்ளவர்களால் நேரிடும் விரோதத்தை காண்பிக்கிறது. அவர்களுடைய நம்பிக்கையிலும் செய்கையிலும் நாம் சரியொத்து நடவாவிட்டால் நம்மைக் கொடுமையாய்த் துன்பப்படுத்துகிற சிலர் உண்டு. நாம் சத்தியத்தில் நிலைத்து நிற்க உறுதியாய் தீர்மானம் பண்ணினால் அடிக்கடி இப்பேர்ப்பட்டவர்களுடன் மல்லுக்கட்டி நிற்கவேண்டி வரும்.
2. முற்காலத்தில் கிறிஸ்தவ பட்டாளம் ஐரோப்பாவிலிருந்து பிரயாணப் பட்டு பரிசுத்த தேசத்தை (கானான்) துருக்கியரை விட்டு ஜெயித்துக்கொள்ள வந்தபோது எதிரிகளை ஊடறுத்து எருசலேமுக்குள் பிரவேசிக்க வேண்டியதாய் இருந்தபடியால் முதல்தரமான வாள்களை உண்டுபண்ணிக் கொண்டார்கள். ஆகவே சத்துருக்களை ஜெயிக்க தகுந்த முதல்தரமான கத்திக்கு எருசலேமின் பட்டயம் என்று பேர் உண்டாயிற்று.
3. தேவனுடைய ஜனங்களின் சொந்த அனுபவ சரித்திரத்தை சொல்லுதல் ஒரு நன்மையான காரியம். அது மற்றவர்களையும் அந்தவிதமாக ஜீவனம் பண்ணவும், நடந்து கொள்ளவும் ஏவிவிடும்.
4. இது பன்னியன் என்பவர் காலத்தில் இருந்ததுபோலவே தற்காலத்திலும் தர்க்கிக்கப்படுகிற ஒரு கேள்வி. நாம் ஒருவரையொருவர் மோட்சத்தில் அறிந்து கொள்ளுவோம் என்பது சாதாரண கோட்பாடு.
5. சில கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய விஷயத்தில் கரிசனை உள்ளவர்களாய் இருக்கிறோம் என்று ஜாடைபண்ணிக்கொண்டு தங்கள் குடும்பக் கடமைகளில் அசட்டையாய் இருக்கிறார்கள். இது மிகவும் தப்பு. கிறிஸ்தவர்களே சோம்பலும், அஜாக்கிரதையும் உள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்று அஞ்ஞானிகள் குறை கூறுகிறார்கள். அப்பேர்ப்பட்ட குற்றஞ்சாட்டுதலுக்கு இடம் கொடாதபடி மெய் கிறிஸ்தவர்கள் மற்றவர்களை விட அதிக எச்சரிப்பும், சுறுசுறுப்பும், ஜாக்கிரதையும் காண்பிக்க வேண்டும்.
6. சத்துருக்கள் பேர்க் கிறிஸ்தவர்களுக்கு நேரிடும் தொந்தரவுகளை சுட்டிக் காண்பித்து சொல்லுகிறது மாத்திரம் அல்ல, அவர்களுடைய நேர்மையின்மையையும், அபாத்திர நடத்தைகளையும் கவனிக்கிறதில் மிகவும் கவனமாய் இருக்கிறார்கள். அயோக்கியமாய் நடக்கும் கிறிஸ்தவர்கள் மெய் விசுவாசிகளுக்கு அவமதிப்பை உண்டு பண்ணுகிறார்கள்.