அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்
அந்த இடத்தில் வந்த உடனே அவர்கள் உட்கார்ந்து, தாங்கள் அநேகராய் இருப்பதினாலும், வீரதீர பராக்கிரமராகிய தைரிய நெஞ்சன் தங்களுக்கு வழிகாட்டியாய் இருப்பதினாலும் தாங்கள் அனைவரும் ஏகமாய்க்கூடி அந்த ராட்சதன் மேல் விழுந்து அவன் கோட்டையையும் அதமாக்கி, அவனுடைய அரண்மனைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் மோட்ச பிரயாணிகள் யாராவது உண்டானால் தாங்கள் இந்த இடம் விட்டு புறப்படும் முன்பு விடுதலை செய்யக்கூடாதா என்றும் ஆலோசித்துக் கொண்டார்கள். இந்த ஆலோசனைக்கு ஒருவர் ஒருவிதமாயும் மற்றொருவர் வேறுவிதமாயும் பேசினார்கள். அவர்களில் ஒரு ஆள், பரிசுத்தமாக்கப்படாத பூமியில் கால் மிதிக்கலாமா என்று ஆட்சேபித்தான். மற்றொருவன் நமது நோக்கம் நல்ல முடிவை நோக்கினதாக இருக்குமானால் கால் மிதிக்கலாம் என்றான். அது கேட்ட தைரிய நெஞ்சன், பிந்தின சித்தாந்தம் சிறந்தது என்பதை சர்வலோக சத்தியம் என்று ஒப்புக் கொள்ளக்கூடாதாயினும், பாவத்தை எதிர்க்கவும், பொல்லாப்பை ஜெயிக்கவும், விசுவாசத்தில் நல்ல போராட்டம் பண்ணவும் நான் கட்டளை பெற்று இருக்கின்றேன். இந்த நல்ல போராட்டத்தை நான் அகோர பயங்கர ராட்சதனோடு செய்யாவிட்டால் வேறு யாரோடுதான் நான் செய்ய வேண்டியது? நீங்களே சொல்லும்படி வேண்டுகிறேன். நான் அவன் உயிரை வாங்கி அவன் அரண் மனையையும் அர்த்தநாசம் பண்ணிவிடும்படி தீர்மானிக்கிறேன். என்னோடு யுத்தசன்னத்தராய் எழும்புகிறவர்கள் யார் என்று கேட்டார்? உடனே யதார்த்தன் என்ற பெரியவர் அதற்கு நானாச்சுது என்றார். நாங்களும் இதோ வருகிறோம் என்று கிறிஸ்தீனாளின் நான்கு குமாரராகிய மத்தேயுவும், சாமுவேலும், யோசேப்பும், யாக்கோபும் எழுந்திருந்தார்கள். ஏனெனில், அவர்கள் வாலிபமும், தைரியமும் உடையவர்களாய் இருந்தார்கள். (1 யோவான் 2 : 13 – 14) தாங்கள் திரும்பி வரும் மட்டும் நொண்டியையும், ஏழைத்தனத்தையும் ஸ்திரீகளுக்கு பாதுகாவலாக ராஜ பாதையில் அவரவர் தடியோடு அவர்களை நிறுத்தினார்கள்.
அகோர பயங்கர ராட்சதனுடைய கோட்டை வெகு சமீபத்தில் இருந்ததால் ராஜ பாதையில் இருப்பவர்களை ஒரு சிறு பையன் காபந்து செய்து நடத்திக் கொள்ளலாம். (ஏசாயா 11 : 6)
கடைசியாக, தைரிய நெஞ்சனும் யதார்த்தனும் அந்த நான்கு வாலிபரும் அகோர பயங்கர ராட்சதனுக்கு விரோதமாய் படையெடுத்துப் போனார்கள். அவர்கள் கோட்டை வாசலண்டை வந்த உடனே ஒருக்காலும் இல்லாத வண்ணமாக கதவைத் தட்டினார்கள். அந்த சத்தம் கேட்ட உடனே கிழவனான ராட்சதன் வந்தான். அவன் மனைவியாகிய கூச்சம் என்பவள் அவனைப் பின் தொடர்ந்தாள். ராட்சதன் வந்து, யார் அது? இவ்வளவு பலமாய்த் தட்டுகிற நீ யார்? அகோர பயங்கர ராட்சதர் திடுக்கிடும்படி தட்ட அவ்வளவு பயம் இல்லையா? என்று கேட்டான். அதற்கு தைரிய நெஞ்சன், மோட்ச பிரயாணிகளை பரலோகத்துக்கு வழிநடத்தும் உன்னத ராஜாவின் ஸ்தானாபதிகளில் ஒருவனுமாகிய தைரிய நெஞ்சன் தான் தட்டுகிறான். நான் உள்ளே பிரவேசிக்கும்படி நீ தாழ்ப்பாள்களை திறக்கவேண்டும் என்று உனக்கு கட்டளையிடுகிறேன். அதோடு என்னுடன் யுத்தம் செய்யவும் நீ ஆயத்தம் பண்ணிக் கொள். ஏனெனில், நான் உன் தலையை வாங்கிப் போடவும் சந்தேக துருக்கத்தை கட்டை மண்ணும் குட்டிச் சுவரும் ஆக்கிவிடவும் இதோ நான் வந்திருக்கிறேன் என்றார்.
நாமே ராட்சதன் ஆச்சுதே, நம்மை ஜெயிக்க இங்கே யாரால் ஆகும்? என்று அகோர பயங்கர ராட்சதன் எண்ணிக் கொண்டிருந்தான். பின்னும் அவன் சொல்லுவான்: தேவதூதரையும் ஜெயித்துப்போட்ட என்னை இந்த தைரிய நெஞ்சன் பயப்படுத்திப் போடுவானா? நல்லது ஒரு கை பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டு போர் ஆயுதங்களை தரித்து புறப்பட்டு வந்தான். அவன் உருக்கினால் செய்யப்பட்ட தலைச்சீரா அணிந்து, அக்கினி மார்ப்பதக்கம் கட்டி, இரும்பு பாதரட்சை தரித்து, கையில் ஓர் பெரிய தடியும் பிடித்து வந்தான். அவன் வெளிப்பட்டவுடனே அவர்கள்ஆறுபேரும் அவனை முன்னும் பின்னும், வலமும் இடமுமாய் சூழ்ந்து கொண்டார்கள். அவனுக்குத் துணை புரியும்படியாக அவனுடைய மனைவி கூச்சமும் வந்தாள். ஆனால் யதார்த்தன் தமது வாளால் அவள் சிரசை ஒரே வீச்சில் வீசிப்போட்டார். அப்புறம் அவர்கள் எல்லாரும் உயிர் நின்றாலும் நிற்குது, போனாலும் போகுது என்று வீரத்துவம் பாராட்டிக்கொண்டு ராட்சதனோடே போர்புரிந்து அகோர பயங்கர ராட்சதனை கீழே விழத் தள்ளினார்கள்.
ஆனால் அவன் உயிர் இலகுவில் போய்விடுகிறது போல் காணப்படவில்லை. அவன் வதைத்து வதைத்து வெகுநேரம் கிடந்தான். பல உயிர்கொண்ட பூனை உயிர் அவனுக்கு இருந்தது என்றே சொல்லவேண்டியது. கடைசியாக தைரிய நெஞ்சன் அவன் தலையை வெட்டி அவனுக்கு முடிவை உண்டாக்கினார்.
அப்பால் அவர்கள் சந்தேக கோட்டையை தரைமட்டமாக்க முயன்றார்கள். அகோர பயங்கர ராட்சதனே தொலைந்தானே, இனி அவன் கோட்டையை இடிக்க அவ்வளவு சங்கடம் இருக்குமா? அதை அர்த்த நாசமாக்க அவர்களுக்கு ஏழு நாள் சென்றது. அங்குள்ள அரண்மனைக்குள் சாகப்போகிறது போல காணப்பட்ட ஏக்கம் என்பவரும் அவருடைய செல்வ புத்திரியாகிய திகிலுற்றாளும் அகப்பட்டார்கள். இந்த இரண்டு பேரையும் அவர்கள் உயிரோடு பாதுகாத்தார்கள். ஆனால் அதற்குள் அங்கும் இங்கும் கிடந்த செத்த பிணங்களையும், குவிந்து கிடந்த மனுஷ எலும்புகளையும் நீ பார்த்தால் பிரமிப்பு அடைவாய் என்பதற்கு சந்தேகம் இல்லை.
தைரிய நெஞ்சனும் மற்றவர்களும் தாங்கள் போன காரியத்தை முடித்த பின்பு ஏக்கம் என்பவரையும் அவரது குமாரத்தி திகிலுற்றாளையும் தங்களோடு கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் அகோர பயங்கர ராட்சதனால் பிடிக்கப்பட்டுச் சந்தேக அரண்மனையின் சிறைச்சாலைக்குள் வாசம்பண்ணினவர்களாய் இருந்தாலும் அந்த இருவரும் உத்தமராகவே இருந்தார்கள். அவர்கள் அகோர பயங்கர ராட்சதன் பிணத்தின் மேல் கற்களை குவித்து அவன் தலையை மாத்திரம் வெட்டி கையில் தூக்கிக்கொண்டு, ஜெயம் ஜெயம் என்று சொல்லி ராஜ பாதையில் இருந்த மற்றவர்களிடத்திற்கு கொண்டு வந்து காண்பித்தார்கள். அதைக் கண்ட நொண்டியும், ஏழைத்தனமும் இந்த தலை அரக்கனுடைய தலைதான் என்று அறிந்து ஆனந்தங் கொண்டு துள்ளி குதித்தார்கள். இப்பொழுது கிறிஸ்தீனாள் கையில் ஒரு கின்னரமும் அவள் மருமகள்தயாளியின் கரத்தில் ஒரு நாகசுரமும் மாத்திரம் இருந்திருக்குமானால், அவர்கள் ஆட்டத்தையும், பாடலையும் கண்ணால் பார்க்கவும், வாயால் சொல்லவும் கூடாது. என்றாலும் அவர்கள் மனமகிழ்ச்சி அவ்வளவு அதிகமாய் இருந்த தினால் கிறிஸ்தீனாள் ஒரு கீதம் பாடினாள். அந்தக் கீதத்துக்கு ஏற்ற தாளம் போட்டு நொண்டி கூத்தாடினான். பின்பு அவர் ஏக்கம் என்பவன் மகளாகிய திகிலுற்றாளின் கையைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு கூத்தாடிக் கும்மி அடித்துக்கொண்டே வழிநடந்தார். நொண்டி ஒரு கையில் தடி பிடித்துக்கொள்ளுவது இன்றியமையாத அவசியமாய் இருந்தபோதினும் கீதத்துக்கு ஏற்ற தாளமாக காலெடுத்து வைத்தார்.
திகிலுற்றாளாகிய அந்தப் பெண் இருக்கிறாளே அவளை வெகுவாய் புகழ வேண்டியது. அவள் பாட்டின் அலுக்குக்கு ஏற்ற குலுக்குப் பண்ணி வெகு ஒய்யாரமாக நடனம் ஆடினாள்.
ஏக்கம் இருக்கிறாரே, அவர் பாட்டுக்கு அவ்வளவு ஆட்டாளி அல்ல. கூத்தாடுவதைப் பார்க்கிலும் வயிற்றை நிரப்புவதையே அவர் கவலைப்பட்டு ஆசித்தார். ஏனெனில் அவர் வெகு நாளாகப் பட்டினியாகக் கிடந்ததுண்டு. ஆதலால் கிறிஸ்தீனாள் தன் துருத்தியில் இருந்த பானத்தில் கொஞ்சம் அந்த நேரத்தில் கொடுத்து உதவி செய்து அப்பால் அவருக்கு அறுசுவையுள்ள போஜனத்தையும் சமைத்துக் கொடுத்தாள். உண்ணா மயக்கத்தில் தள்ளாடின அந்த கிழவர் உண்ட மகிழ்ச்சியால் ஸ்திரமடைந்து துள்ளாட்டம் போட ஆரம்பித்தார்.
இந்த காரியங்கள் நடந்த போதெல்லாம் நான் என் சொப்பனத்தில் இருந்தேன். கடைசியாக தைரிய நெஞ்சன் என்பவர் வழியோரத்தில் முன்பு கிறிஸ்தியான் பிரயாணிகளுக்கு எச்சரிப்பாய் பேத வழி மைதானத்திற்கு போகும் படிக்கட்டுக்குச் சமீபமாய் எழுப்பியிருந்த ஸ்தம்பத்துக்கு எதிரே ஒரு ஸ்தம்பம் கட்டி அதன்மேல் அகோர பயங்கர ராட்சதனுடைய தலையை கழுவில் ஏற்றி வைத்தார்.1
அந்த ஸ்தம்பத்தின் பால் வெள்ளைக் கல்லின்மேல்:
இந்த தலையை உடையவன்
நாமமே பிரயாணிகளை
பயப்படுத்தும், அவன் அரண்
அவன் மனைவி கூச்சம் என்பவள்
அனைத்தும் அழிந்தது வீரன்
தைரிய நெஞ்சனால், ஏக்கமும்
அவன் புத்திரி திகிலுற்றாளும்
தப்பினார்கள் குற்றுயிரோடும்
சந்தேகிப்பவர் கண்ணோக்குங்கால்
சந்தேகங்கள் யாவும் நீங்கும் பார்,
இந்தத்தலை பார்க்கும் வழிப்போக்கர்
இனி சங்கடம் இல்லை என்பார்
என்ற வாசகம் எழுதி வைக்கப்பட்டது.
இவ்வண்ணம் அவர்கள் தங்கள் வீரதீர பராக்கிரம செய்கை களைக் கொண்டு அகோர பயங்கர ராட்சதனை சங்காரம்பண்ணி அவன் அரணை நாசமாக்கின பிற்பாடு தங்கள் வழியே நடந்து கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் சிலகாலம் தங்கி பரம காட்சிளை கண்டு களிகூர்ந்த ஆனந்தமலை வந்து சேர்ந்தார்கள்.
1. சந்தேக துருக்கம் அநேகந்தரம் இடிந்துபோன போதிலும் லேசாய் திரும்பவும் எடுப்பிக்கக் கூடும். இந்தக் கோட்டை பிரயாணிகளால் கட்டப்பட்டிருக்கிறது. அந்த ராட்சதன் அவர்களுடைய பயங்கரம், சந்தேகம் இவற்றால் உண்டானவன். தேவன் பேரிலுள்ள பூரண நம்பிக்கை மாத்திரம் இந்த கோட்டையைத் திரும்பவும் கட்டப்படாமல் இடித்துப்போடும்.