பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது
அப்புறம் நான் என் சொப்பனத்தில், பிரயாணிகள் எல்லாரும் ஆனந்தமலைக்கு இந்தப்புறத்தில் இருந்த ஆற்றங்கரையைச் சேர்ந்ததாகக் கண்டேன்.
இரு கரையிலும் இலை உதிரா மரமுள்ளதும், பசும்புல் மைதானத் தால் சூழப்பட்டதும், “கம்” என்று மணமுள்ள புஷ்பங்களால் இலங்கினதும், சாங்கோபாங்கமாய் படுத்து உருண்டு சந்தோசப்பட நல்ல இடமுமான அந்த இன்ப நதியண்டைதான் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். (சங்கீதம் 23 : 2)
இந்த ஆற்றோரம் இருந்த பசும்புல் மைதானத்தில் ஆடுகள் தங்குவதற்கு ஏற்ற கிடைகளும், தொழுவங்களும், மோட்ச பயணம் போகும் ஸ்திரீகள் பெற்ற பாலகராகிய ஆட்டுக்குட்டிகளை பேணிப் போஷித்து வளர்ப்பதற்கு ஏற்றகுடில்களும், பட்டிகளும் கட்டப்பட்டு இருந்தன. அந்த குட்டிகள்மேல் மனதுருகி அவைகளை தமது புயத்தி னால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துகிறவரான ஒருவருடைய விசாரணைக்குள் அவைகள் ஒப்பு விக்கப்பட்டிருந்தன. (எபிரேயர் 5 : 2 ஏசாயா 46 : 11)
இவருடைய விசாரணைக்குள் அவரவர் தங்கள் பிள்ளைகளை ஒப்புவிக்கவும் இந்த ஆற்றோரத்தில் அவர்கள் தங்கி தாபரித்து பின்காலத்தில் அவர்களுக்கு ஒரு குறைவும் நேரிடாதபடி இந்த இடத்தில் உண்டு வளர்ந்து படித்துத் தேறி பூரண புருஷர் ஆகும்படி அவருடைய பராமரிப்புக்குள் இருக்கவும் கிறிஸ்தீனாள் தன் மருமக்கள்மார் நாலு பேருக்கும் திட்டம் பண்ணினாள். 1 அந்த மேய்ப்பன் இவர்களில் யாராவது வழிதப்பி போய்விட்டால் அல்லது காணாமலே போனால் அவர்களை திரும்பக் கொண்டு வந்து சேர்த்து அவர்கள் முறிவுகளைக் கட்டி நோய்கொண்டவர்களை பலப்படுத்தி வருவார். (எரேமியா 23 : 4 எசேக் 34 11 – 16) அன்னம் தண்ணீரை குறித்தாவது வஸ்திராபரணங்களை குறித்தாவது அவர்கள் இந்த இடத்தில் கவலைப்படவேண்டியதாய் இருந்ததில்லை. திருடரைக் குறித்தாவது, கொள்ளைக்காரரைப் பற்றியாவது இந்த இடத்தில் ஒரு பயமுமில்லை. ஏனெனில் இவர்களை விசாரிக்கிறவர் தமது குட்டிகளில் ஒன்றை இழந்து போவதிலும் தாமே தமது உயிரை கொடுத்துவிடுவார். மேலும் இவர்கள் கர்த்தருக்கு ஏற்ற பயத்திலும்,கண்டிப்பிலும் வளர்க்கப்பட்டு நேர்மையும் செவ்வை யுமான பாதையில் நடக்கப் பழக்குவிக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட வளர்ப்பு இலகுவில் கிடைக்கமாட்டாது என்று நீ அறிவாயே. மேலும் இந்த இடத்தில் தெளிந்த தண்ணீரும், சிறந்த மைதானமும், மணக்கும் புஷ்பங்களும் பலவித கனிகளைத் தரும் பல ஜாதி விருட்சங்களும் இருக்கின்றன. இங்கு உள்ள பழங்கள் எப்படிப்பட்டது? பெயல் செபூலின் தோட்டத்தில் இருந்து சுவருக்கப்பால் தொங்கி, மத்தேயு பிடுங்கித் தின்று அவஸ்தை பட்டானே, அப்படிப்பட்ட பழங்களோ? அல்ல, அல்ல. சுகம் அற்றோருக்கு சுகமும், சுகம் உள்ளவர்களுக்கு இருக்கிற பலத்தோடு அதிக பலமும் கொடுக்கத்தக்கதான பழங்களே இங்கே பழுத்தன. ஆதலால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த இடத்தில் ஒப்புவிக்கத் தீர்மானித்தார்கள். அவர்களுக்கு செல்லும் செலவு என்ன உண்டோ அவ்வளவும் ராஜமானியப் பொக்கிஷத்தில் இருந்து இலவசமாய் கொடுக்கப்பட்டு வந்ததாலும், ஆதரவற்ற பரதேசிகளின் பிள்ளைகளுக்கு அது ஒரு கல்விச்சாலை போலும், வைத்தியசாலை போலவும் இருந்ததாலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளை பூரண மன உற்சாகத்தோடு அந்த இடத்தில் இருந்த மேல் விசாரணைக்காரரிடம் ஒப்புவிக்கும்படி அதிகமாய் ஏவப் பட்டார்கள்.
அப்புறம் அவர்கள் தங்கள் வழியே நடந்து போனார்கள். அவர்கள், கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் ஏறிப்போய் சந்தேக அரண்மனைக்குள் அடைக்கப்படும் கைதிகளாக வழிதப்பி அகோர பயங்கர ராட்சதனால் பிடிபட்ட மைதானத்திற்குப் போகும் படிக் கட்டுப் பாதையண்டை வந்து சேர்ந்ததாக நான் என் சொப்பனத்தில் கண்டேன்.
1. நாம் குழந்தைகளை இயேசு கிறிஸ்துவின் ஆதரவுக்கும், அரவணைப் புக்கும் ஒப்புக்கொடுப்பதின் அவசியத்தை இதில் கற்றுக்கொள்ளுகிறோம். அவர்கள் இளமையாய் இருக்கையில்தானே அவர்கள் இருதயத்துக்குள் பாவவெறுப்பும், தீமைக்கு விலகும் தன்மையும் உண்டாகும்படி செய்யவேண்டும். வாலிபத்தில் நாம் எடுக்கும் அந்த தீர்மானமே நன்மையா னாலும், தீமையானாலும் அதுவே ஜீவநாள் பரியந்தம் நிலை கொண்டிருக்கும்.