பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது
இதற்குள்ளாக அவர்கள் மாயச்சரக்குகள் விற்பனையாகி வந்த மாயாபுரியண்டை வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஊருக்குள் போகாததற்கு முன்னே எவ்விதமாய் அந்த நகர வீதியை கடந்து போகலாம் என்று தங்களுக்குள்ளே ஆலோசித்துக் கொண்டார்கள். அப்போது, இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சிலரும், அப்படித்தான் செய்யவேண்டுமென்று சிலரும் சொன்னார்கள். கடைசியாக தைரிய நெஞ்சன் சொல்லுவார்: நீங்கள் அறிந்தமட்டும் நான் மோட்ச பிரயாணிகளை பல தரம் இந்தப் பட்டணத்தின் தெருக்களின் வழியாக அழைத்துக் கொண்டு போய் இருக்கிறேன். இந்த ஊரில் எனக்கு அறிமுகமான ஒருவர் இருக்கிறார். அவருக்கு மினாசோன் என்று பேர். அவர் சுயதேசம் சீப்புரு தீவு. அவர் பழைய சீஷன். (அப்போஸ்தலர் 21 : 16) அவர் வீட்டில் போய் நாம் தங்கி இருக்கலாம். நீங்கள் எல்லாரும் பிரியப்பட்டால் அவர் வீட்டுக்கு போகிறதே நலமாகத் தோன்றுகிறது என்றார்.
எனக்கும் சம்மதந்தான் என்று யதார்த்தன் சொன்னார். எனக்கும் அது பிரியம் என்று கிறிஸ்தீனாள் சொன்னாள். எனக்கும் அது இஷ்டம்தான் என்று ஏழைத்தனம் சொன்னார். இப்படி எல்லாரும் சம்மதித்துக் கொண்டார்கள். அவர்கள் அந்த பட்டணத்துக்குச் சமீபமானபோது இருட்டுகிற சமயமாய் இருந்தது. ஆனால் அந்த விருத்தாப்பியருடைய வீட்டுக்குப் போக, தைரிய நெஞ்சனுக்கு நன்றாய் வழி தெரியும். ஆதலால் நேரே அவர் வீடுபோய் எல்லாரும் சேர்ந்தார்கள்.
அவர்கள் வீட்டண்டை போய் கதவைத் தட்டினார்கள். தைரிய நெஞ்சன் குரல் அந்த வீட்டுக்காரருக்கு நன்றாய் தெரிந்து இருந்த படியால் உடனே கதவைத் திறந்து எல்லாரையும் உள்ளே சேர்த்துக் கொண்டார். இன்று எங்கேயிருந்து பிரயாணம் பண்ணி வருகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: அதி உத்தம சிநேகிதராகிய பரோபகார காயுவுடைய சத்திரத்தில் இருந்து நாங்கள் இன்று புறப்பட்டு வருகிறோம் என்றார்கள். அப்படியா? இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கின்றீர்களே, மெத்த களைப்பாய் இருக்குமே, உட்காருங்கள் என்றார். அப்படியே அவர்கள் எல்லாரும் உட்கார்ந்தார்கள்.
தைரி: நீங்கள் எல்லாரும் என் சிநேகிதருடைய வீட்டை வந்து சேர்ந்தது மெத்த சந்தோசம் அல்லவா? அவரும் நீங்கள் வந்ததற்காக ஆனந்தம் கொள்ளுவார் என்று நம்புகிறேன் என்று தைரிய நெஞ்சன் சொன்னார்.
மினாசோன்: எனக்கும் மெத்த சந்தோசம். நீங்கள் வந்ததே பெரிய பாக்கியம். உங்களுக்கு வேண்டியது எதுவோ அதை மனம் கூசாமல் கேளுங்கள். அதைச் செய்கிறதற்கு நான் ஆயத்தமாய் இருக்கிறேன் என்று மினாசோனும் சொன்னார்.
யதா: கொஞ்ச நேரத்துக்குமுன்னே எங்களுக்கு இரண்டு காரியங்கள் தேவையாய் இருந்தன. அதாவது தங்க ஒரு இடமும், சம்பாஷிக்க ஒரு சிநேகிதனும்தான். இப்போது எங்களுக்கு அந்த இரண்டும் இலவசத்தில் கிடைத்து இருக்கிறது என்று யதார்த்தன் சொன்னார்.
மினா: தங்க இடம்தான் இது ஆச்சுதே, இனி சம்பாஷிக்கும் உத்தம தோழரை பரீட்சையிலே கண்டு கொள்ள வேண்டியது என்று மினாசோன் சொன்னார்.
தைரி: ஐயா வீட்டுக்காரரே, இந்த பிரயாணிகள் படுத்து இளைப் பாறும்படியான அறை வீடுகள் எவை என்று காட்டுமேன் என்று தைரிய நெஞ்சன் கேட்டார்.
மினா: அப்படியே காட்டுகிறேன் என்று மினாசோன் அவரவர் தங்கும் அறைகளை காட்டி, ஒரு விஸ்தாரமான மண்டபத்துக்கும் அழைத்துக் கொண்டு போய், இதுதான் பொதுவான விருந்து மண்டபம் என்று சொன்னார்.
யதா: அவர்கள் எல்லாரும் சற்று உட்டகார்ந்து இளைப்பாறிக் கொண்ட பின்பு யதார்த்தன் அந்த வீட்டக்காரரை நோக்கி: ஐயா இந்த ஊரில் உத்தமர் உண்டோ என்று விசாரித்தார்.
மினா: உத்தமர் மெத்தக் கொஞ்சப் பேர்தான் உண்டு.1 இந்த நகரத்திலுள்ள துன்மார்க்கரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் ஒன்றும் இல்லை என்றே சொல்ல வேண்டியது.
யதா: அவர்களில் சிலரைக் கண்டு பேசுகிறது எப்படி? மோட்ச பிரயாணம் போகும் உத்தமரைக்கண்டு பேசிக்கொள்ளுகிறது கரை காணா சமுத்திரத்தில் யாத்திரை செய்கிறவர்களுக்கு சந்திர நட்சத்திராதிகள் கண்டாற்போல் களிப்பாய் இருக்குமே என்று யதார்த்தன் சொன்னார்.
மினா: உடனே மினாசோன் தன் காலால் மடமடவென்று தட்டினார். அந்த க்ஷணமே, அவருடைய குமாரத்தியாகிய கிருபை வந்து சேர்ந்தாள். அப்போதவர் அம்மா கிருபாவதியே, நீ துடியாய் நடந்து நொறுங்கிய நெஞ்சன், பரிசுத்தன், சுத்தர் நேசன், பொய் சொல்லத் துணியான், மனஸ்தாபன் ஆகிய இவர்கள் வீடுகளுக்குப் போய் நம்முடைய வீட்டில் சில விருந்தாடிகள் வந்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் உங்களை கண்டு பேசும்படி ஆசைப்படுகிறார்கள் என்றும் சொல்லி வரும்படி கேட்டுக்கொள்ளுகிறேன் என்று சொன்னார். அப்படியே அந்தப் பெண் ஓடி அவர்களுக்கு செய்தி சொல்லவே அவர்கள் எல்லாரும் வந்து விருந்து மண்டபசாலையில் கூடி ஒருவரையொருவர் மினவிக்கொண்டு உட்கார்ந்தார்கள்.
அப்பொழுது மினாசோன் அவர்களை நோக்கி: சிநேகிதரே! நீங்கள் பார்க்கிற இந்த அந்நியர் என் வீட்டுக்கு இன்று வந்தார்கள். இவர்கள் எல்லாரும் மோட்ச பிரயாணிகள். இவர்கள் வெகுதூரமான தேசத்திலிருந்து புறப்பட்டுச் சீயோன் மலையை நோக்கி பயணம் போகிறார்கள் என்று சொல்லி கிறிஸ்தீனாளை சுட்டிக் காண்பித்து, ஆனால், இதோ இந்த அம்மாள் யார் என்று நினைக்கின்றீர்கள்? பேர்போன மோட்ச பிரயாணியாகிய உண்மையோடுகூட இந்த நகரத்தில் படாதபாடெல்லாம் பட்ட கிறிஸ்தியானுடைய உத்தம பத்தினியாக்கும் என்றார். அது கேட்ட சிநேகிதர் அசந்துபோய், அப்படியா! உம்முடைய மகள் வந்து கூப்பிட்டபோது, கிறிஸ்தீ னாளைக் காண்போம் என்று நாங்கள் கனவிலும் நினைத்த தில்லை. ஆதலால் எங்களுக்கு உண்டாகும் பிரமிப்பு ஆறுதலை அளிக்கும் பிரமிப்பாய் இருக்கிறது என்றுசொல்லிவிட்டு, கிறிஸ்தீனா ளண்டை போய் அவளுடைய சுகக்ஷேமங்களை விசாரித்து, இந்த வாலிபர் அந்த மகாத்துமாவின் பிள்ளைகள்தானா என்று கேட்டார்கள்.
அவர்கள் அவருடைய பிள்ளைகள்தான் என்று சொன்ன பின்பு அவர்கள் அந்த வாலிபரை நோக்கி: நீங்கள் அன்புகூர்ந்து அடிபணிந்து போற்றும் அரசர் உங்கள் தகப்பனைப்போலவே உங்களையும் உத்தமராக்கி, அவர்இருக்கிற இடத்தில் நீங்களும் சமாதானத்தோடு தங்கும்படி தயைபுரிவாராக என்று வாழ்த்தினார்கள்.
யதா: அப்புறம் அவர்கள் எல்லாரும் உட்கார்ந்த பின்பு யதார்த்தன் அவர்களைப் பார்த்து: ஐயாமாரே! இப்போது உங்கள் நகரத்தின் சீர் எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
நொறு: அதற்கு நொறுங்கிய நெஞ்சன்: உற்சவ காலங்களில் எங்கள் ஊரில் பெரும் அமளிகள் எல்லாம் நடக்கும். கவலை மிகுந்த அந்தக் காலத்தில் எங்கள் ஆத்துமாவையும், மனதையும் ஒரு கிரமத்தில் வைத்துக்கொள்ளுவது என்பது வெகு வருத்தத்தில் இருக்கிறது. இதைப் போலொத்த இடத்தில் வசிக்கிறவனும் இந்த ஊரின் அமளி குமளிகளுக்கு ஊடே குடியிருக்கிறவனும் நிமிஷந்தோறும் எச்சரிக்கையாய் இருக்கும்படியான ஒரு தூண்டுகோல் அவசியமாய் இருக்கிறது என்றார்.
யதா: இப்போது உங்கள் ஊரில் பழையபடி அமளி குமளிகள் உண்டா? அமைதல் உண்டா?
நொறு: முன்னிலும் சற்று அமைதலாய்தான் இப்போது இருக்கிறார்கள். கிறிஸ்தியானுக்கும், உண்மைக்கும் முன்னே நடந்த நிஷ்டூரங்கள் எல்லாம் தெரியுமே. இப்பொழுது கொஞ்சகாலமாய் அப்படிப்பட்ட கலாபனைகள் ஒன்றையும் காணோம்.2 எனக்குத் தோன்றுகிறபடி உண்மையின் இரத்தப் பழி அவர்கள் மேல் இருந்து இறுத்துகிறாப்போல் இருக்கிறது. ஏனெனில் அவரைச் சுட்டெரித்தது முதல் மற்றவர்களையும் அப்படிச் செய்ய பயப்படுகின்றார்கள். அந்தக் காலங்களில் நாங்கள் தலைமறைவாகத்தான் நடமாட வேண்டியதாய் இருந்தது. இப்பொழுதோ அப்படியல்ல, தாரளமாய் தலைகாட்டித் திரிகிறோம். அந்தக் காலங்களில் கிறிஸ்தவன் என்ற பேர் அவ்வளவு இழிவாய்க் காணப்பட்டது. இப்போதோ இந்த விஸ்தாரமான பட்டணத்தின் சில மூலை முடங்குகளில் அவர்களைப்பற்றி அதிக மதிப்பு இருக்கிறது என்று சொல்லிவிட்டு, ஐயா, உங்கள் பிரயாண சம்பவங்கள் எப்படி இருக்கின்றன? நாட்டாருக்கும் உங்களுக்கும் எப்படி இருக்கிறது? என்று கேட்டார்.
யதா: அதற்கு அவர்: பிரயாணிகளுக்கு ஒத்த பாக்கியங்களே எங்களுக்கும் கிடைத்திருக்கிறது. சில வேளை நல்ல பாதை, சில வேளை பாதை கேவலம், சில இடங்களில் மலை ஏற்றம், சில இடங்களில் இறக்கம், இப்படி ஒரு நிலை இல்லாமல் இருக்கிறது. எப்போதும் காற்று முதுகுப்பக்கம் அடிக்கிறதும் இல்லை. எங்கள் வழியில் எதிர்பட்டு வருவோர் எல்லாரும் சிநேகிதரும் அல்ல. இதற்குள்ளாக பல துன்பங்கள் சம்பவித்திருக்கிறது. இன்னும் என்னென்ன நேரிடப் போகிறதோ அதை யார் அறிவார்? ஆனால் நல்ல மனுஷன் தொல்லைகளை அனுபவிக்க வேண்டும் என்று அநேக ஆண்டுகளுக்கு முன்னே சொல்லப்பட்ட வாசகம் மெய் என்று உணர்ந்து கொள்ளுகிறோம்.
நொறு: ஏதோ துன்பங்கள் சம்பவித்தது போல சொன்னீரே, அந்த துன்பங்கள் எவை?
யதா: அந்த துன்பங்களின் விபரம் எல்லாம் எங்கள் வழி காட்டியாகிய தைரிய நெஞ்சனைக் கேட்டால் தெரிய வரும்.
தைரி: அதைக் கேட்ட தைரிய நெஞ்சன் சொல்லுகிறார்: இதற்குள்ளாக மூன்று நான்கு தரம் பெரும் ஆபத்துக்கள் சம்பவித்திருக்கின்றன. எப்படியெனில் கிறிஸ்தீனாளும் அவள் பிள்ளைகளும் முதலாவது அவலட்சண ரூபிகள் இருவரால் சூழப்பட்டு ஜீவநாசம் நேரிடும் என்று பயந்தார்கள். அதுவும் அன்றி இரத்தப் பிரிய ராட்சதன், சங்கார ராட்சதன், நலங்கொல்லி ராட்சதன் ஆகிய இம் மூன்று அரக்கர் கையிலும் அகப்பட்டோம். இதில் நலங்கொல்லி ராட்சதன் எங்களை மடக்கும்படி வராமல் நாங்களே அவனுடைய குகைக்குப் போய் அவனை மடக்கினோம். அதின் விபரம் என்னவென்றால், எனக்கும் சபை அனைத்திற்கும் விருந்து செய்த பரோபகார காயுவுடைய சத்திரத்தில் சிலகாலம் தங்கினபின்பு ஒரு நாள் நாங்கள் வெளியே புறப்பட்டு பிரயாணிகளின் பகைஞர் யாராவது இந்த பக்கங்களில் அகப்படுவார்களா என்று பரிசோதிக்க போனோம். ஏனெனில் அந்த திசைகளில் ஒரு பிராண பகைஞன் இருக்கிறான் என்று கேள்விப்பட்டோம். பரோபகார காயு அந்தப் பக்கங்களில் வசித்து வந்ததால் அந்த சத்துருவின் நடமாட்டத்தை உன்னைவிட நன்றாய் அறிந்திருந்தார். நாங்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து தேடிக் கடைசியாக அவன் வாழ்ந்த குகையைக் கண்டு பிடித்தோம். அப்போது எங்கள் சந்தோசம் பெருகி எங்கள் ஆவி பெலன் கொண்டது.
அவனுடைய குகையின் வாசலில் போய் எட்டிப்பார்க்கவே, இதோ அவன் ஏழைத்தனத்தைப் பலாத்காரமாய் தன் வலைக்குட்படுத்தி பிடித்துக்கொண்டு போய், அவன் மாமிசத்தைப் பட்சிக்கும்படி ஆரம்பிக்கிறதைக் கண்டோம். எங்களை அவன் குகையின் வாயிலில் கண்டவுடனே தனக்கு வேறே வேட்டையும் வருகிறதென்று எண்ணினானோ என்னவோ அவன் ஏழைத்தனத்தை அப்படியே குகைக்குள் விட்டுப்போட்டு எங்களண்டை வந்தான். உடனே நாங்கள் அவனோடு கை கலந்தோம். கடைசியாக அவனை மடக்கி கீழ்ப்படுத்தி அவன் தலையையும் வெட்டி இவனைப்போல் இனிமேல் யாராவது அவபக்திக்கு ஏதுவாவார்களோ அவர்களுக்கு எச்சரிப்பு உண்டாகும்படி வழியோரத்தில் கழுவில் ஏற்றி வைத்தோம். இவ்வளவு நடந்தது வாஸ்தவம். ஏழைத்தனம் என்பவர் சிங்கத்தின் வாயிலிருந்து தப்புவிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியைப் போல் இதோ அத்தாட்சியாய் இருக்கிறார்.
ஏழை: இது எல்லாம் உண்மைதான். நலங்கொல்லி ராட்ச தனுடைய பல்லுக்கு இரையாகாமல் தப்பி இருக்கிறேன். அவன் என் எலும்பை முறித்து என் மாமிசத்தைப் பட்சிப்பதாய் ஒவ்வொரு நிமிஷமும் என்னைப் பயப்படுத்தினான். எனக்கு ஆறுதலாகவும் என் ஆத்துமா பிழைக்கும்படிக்கும் தைரிய நெஞ்சனும் அவருடைய சிநேகிதரும் தங்கள் அம்புகளோடும், ஆயுதங்களோடும் வந்து என்னை விடுதலை செய்தார்கள் என்று ஏழைத்தனம் சொன்னார்.
பரி: அதைக் கேட்ட பரிசுத்தன் சொல்லுவார்: மோட்ச பிரயாணி களுக்கு அவசியம் தேவையாய் இருக்கிற இரண்டு காரியங்கள் உண்டு. அதவாது அவர்களுக்கு தைரியமும், பரிசுத்தமும் வேண்டியது. தைரியம் இல்லையானால் தங்கள் பிரயாணத்தில் முடிவுபரியந்தம் நிலைநிற்க மாட்டார்கள். பரிசுத்த நடக்கை இல்லையானால் மோட்ச பிரயாணிகள் என்ற பேர் முதலாய் நாற்றமாகிப் போய்விடும்.
சுத்த: சுத்தர்நேசன் சொல்லுவார்: நான் சொல்லும் எச்சரிப்பு உங்களுக்கு அவசரம் இல்லாமல் இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும், இந்தப் பிரயாணத்தில் போகும் சிலர் தாங்கள் இந்த உலகத்தில் அந்நியரும், பரதேசிகளுமாய் இருக்கிறோம் என்று வெளிப்படுத்துகிறதைப் பார்க்கிலும் மோட்ச பிரயாணத்துக்கு தாங்கள் அந்நியரும், பரதேசிகளுமாய் இருக்கிறோம் என்று வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள்.
பொய்: பொய் சொல்லத் துணியான் சொல்லுவார்: அது மெய், அவர்களுக்கு மோட்ச பிரயாணிகளுக்கேற்ற குணமாவது, பெலனாவது இல்லை.
அவர்கள் தங்கள் கால்களை நேரே வைத்து நடவாமல் சரிந்து சரிந்து நடக்கிறார்கள். அவர்களுடைய ஒரு கால் பாதரட்சையின் உள்ளுக்கும் மறுகால் பாதரட்சையின் வெளியேயும் போகிறது. தங்கள் ஆண்டவரை வெட்கப்படுத்தும்படி அவர்களுடைய கால் சட்டை கிழிந்துபோய் இங்கே ஒரு கந்தை தொங்கும், அங்கே ஒரு பொத்தல் தெரியும்.
மன: மனஸ்தாபன் சொல்லுவார்: இப்படிப்பட்ட பரிசுத்தமற்ற நடக்கையை அவர்கள் நினைத்து மன வருத்தம் அடைய வேண்டியது தான். இந்த அழுக்குகளும், தவறுதல்களும் இல்லாமல் அவர்கள் வழி பரிசுத்தமாய் இருக்குமட்டும் பிரயாணிகளுக்கு அருளப்படும் கிருபையை பெறவாவது தாங்கள் விரும்பிய வண்ணம் பிரயாணம் செய்யவாவது கூடவே கூடாது என்றார். இந்தவிதமாய் அவர்கள் பல காரியங்களை குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து அப்புறம் இரவு போஜனம் சாப்பிட்டு அவரவர் அறைக்குள் இளைப்பாற போனார்கள்.
அப்புறம் அவர்கள் பின்னும் வெகு காலம் மாயாபுரியிலே தங்கி மினாசோன் வீட்டில் குடியிருந்தார்கள். மினாசோன் தன் மூத்த குமாரத்தியாகிய கிருபையை கிறிஸ்தீனாளுடைய குமாரனாகிய சாமுவேலுக்கும், இளைய குமாரத்தியாகிய மார்த்தாளை யோசேப் புக்கும் விவாகம் செய்து கொடுத்தார்.
மாயாபுரி முன்பு போல அமளி குமளி இல்லாமல் அமைதலான பட்டணமாய் இருந்ததால் அவர்கள் அநேக வருஷங்களாய் அங்கே வாசம் பண்ணினார்கள். அவர்கள் அந்த ஊரிலுள்ள பல நல்ல மனுஷருடன் பழகி அவர்களுக்கு தங்களால் ஆன சகாயங்களை செய்து வந்தார்கள். தயாளி தன் வழக்கம் போல ஏழைகளுக்கடுத்த பல தையல் வேலைகளைச் செய்து வந்தாள். பசி தீர்ந்த ஏழைகளின் வயிறும், குளிர் தீர்ந்த அவர்கள் முதுகும் அவளை வாழ்த்திப் புகழ்ந்தன. அவள் தன் தொழிலால் அந்த ஊரில் கீர்த்தி பெற்றாள். அதோடு கிருபையும், பெபேயாளும், மார்த்தாளும் தங்கள் சுபாவத்தின்படியே தங்களால் ஆன நன்மைகளை செய்து வந்தார்கள். அவர்கள் வேலையினால் அநேக பலன்களும் உண்டாயிற்று. ஆதலால் முன்னே சொன்னது போல கிறிஸ்தியானுடைய பேர் உலகத்தில் மங்கிப்போக ஏதுவில்லா திருந்தது போல் காணப்பட்டது.
1. சோதோமில் லோத்து இருந்தவண்ணம் மிகவும் கேடான இடங்களிலும் கூட நல்லவர்கள் இரண்டொருவர் இருப்பார்கள்.
2. இந்த புஸ்தகத்தின் முதல் பங்கை பன்னியன் எழுதின சமயத்தைவிட இப்போது பாப்பு மார்க்கத்தாரால் அதிகமான துன்பங்கள் இங்கிலாந்து தேசத்தில் இல்லை என்பதாக இதினால் காண்பிக்கின்றார்.