பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை
தைரி: மெத்த சந்தோசத்தோடு சொல்லுவேன்: கிறிஸ்தியான் என்ற ஒரு பிரயாணி தாழ்மையின் பள்ளத்தாக்கில் அப்பொல்லியோன் என்னும் அழிம்பனோடு போர்புரிந்ததும் மரண நிழலின் பள்ளத் தாக்கில் அவன் அவஸ்தைகளைப்பட்டதும் எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர் என்று நினைக்கின்றேன். அதோடு மோகினி, பழைய ஆதாம், நிரம்மியம், வெட்கம் என்ற நான்கு போக்கிரிகள் கையில் உண்மை அகப்பட்டு, பட்டபாடுகள் இவை என்று கேள்விப்பட்டிராமல் இருக்கமாட்டீர்.
யதா: அது எல்லாம் கேள்விப்பட்டேன் ஐயா. ஆனால் வெட்கம் என்பவனிடத்தில் உண்மை மெத்த சங்கடப்பட்டிருக்கிறார் அப்படி மனம் தளராமல் எதிர்க்க அவர்தான் வேண்டும்.
தைரி: ஆம் ஆம், அது மெய். அந்தப் பிரயாணி சொன்னது போல் அவன் ஒருவன் மாத்திரம் தனக்குத் தகாத பேரை வைத்துக் கொண்டிருக்கிறான்.
யதா: ஐயா, கிறிஸ்தியானும், உண்மையும் வாயாடியைச் சந்தித்தார்களே, அது எந்த இடத்தில்? அவனும் மெத்தப் பேரெடுத்த படுக்காளி பயல்தானே.
தைரி: அவன் தேறின மூடன்தான், என்றாலும் அவன் புத்தியில் நடக்கும் மக்கள் பலர் இருக்கிறார்கள்.
யதா: அவன் உண்மையை மோசம் போக்கப் பார்த்தான் அல்லவா?
தைரி: ஆம், ஆனால் கிறிஸ்தியான் அவனை விட்டானா? அவன் வாயை ஒரு நிமிஷத்துக்குள் அடைத்து அவன்இன்னான் என்று வெளிப்படுத்திவிட்டான் அல்லவா? என்று இப்படிப் பல பேச்சுக்களையும் பேசிக்கொண்டு சுவிசேஷகர் கிறிஸ்தியானையும், உண்மையையும் கண்டு சந்தித்து, மாயாபுரி சந்தையில் உண்டாகும் உபத்திரவங்களை குறித்து முன் அறிவித்த இடம் மட்டும் வந்து சேர்ந்தார்கள். அந்த இடத்துக்கு வந்தவுடனே அவர்கள் வழிகாட்டி: இந்த இடத்தில்தான் கிறிஸ்தியானையும், உண்மையையும் சுவிசேஷகர் சந்தித்து மாயாபுரியில் உண்டாகும் மரண அபாயங்கள் இவை என்று தீர்க்கத்தரிசனம் உரைத்து புத்தி சொன்னார் என்றார்.
யதா: அதுகேட்ட யதார்த்தன்: அப்படியா? இந்த இடத்தில் தானா? அவர் சொன்ன தீர்க்கத்தரிசனங்கள் அவர்கள் மனதுக்கு மிகுந்த சஞ்சலத்தை உண்டாக்கி இருக்குமே!
தைரி: சஞ்சலமாய்த்தான் இருந்தது. ஆனால் அவர் இவைகள் எல்லாவற்றோடும் தைரியமும் கொடுத்தார். அவர்களைப்பற்றி எங்கள் பேச்சு என்ன தெரியுமா? அவர்கள் சிங்கராசி மனுஷர். உளிக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் தீதட்டிக் கல்லுகள் என்றே சொல்லுகிறோம். நன்மை வெறுப்போன் என்னும் மாயாபுரி நியாயாதிபதி முன் அவர்கள் இருவரும் எவ்வளவு அஞ்சாநெஞ்சு உடையவர்களாய் இருந்தார்கள் என்று நீர் அறியமாட்டீரா?
யதா: ஆம் ஆம், எல்லாம் அறிவேன். உண்மை எவ்வளவு தைரியமாய்த்தான் பாடுகளை அனுபவித்தார்!
தைரி: மெய். வெகு தைரியம் காட்டினார். அவர் காட்டிய தைரியம் பெரும்பலனை வருவித்தது. எப்படி எனில் அவரைப்பற்றிய சரித்திரத்தின்படி திடநம்பிக்கையும் இன்னும் பலரும் அவருடைய மரணத்தால் மனம் திரும்பினார்கள்.
யதா: ஐயா, உமக்கு பிரயாணிகளின் சங்கதிகள் வெகு விவரமாய் தெரிகிறாற்போல் தோன்றுகிறது. 1 ஆதலால் தயவுசெய்து ஏதாவது செய்திகளை சொல்லும்.
தைரி: கிறிஸ்தியான் மாயாபுரியை விட்டுப் புறப்பட்ட பின்பு அவனுக்கு எதிர்ப்பட்ட சத்துருக்கள் எல்லாரிலும் உபாயி என்னும் ஒருவனே விசேஷித்த சத்துரு என்று சொல்லலாம்.
யதா: உபாயி, அவன் யார் ஐயா?
தைரி: அவன் ஒரு பரம சண்டாளத் துரோகி. அவனைப் போலொத்த மாயக்காரன் ஒருவனும் இல்லை. லோக வழக்கம் எப்படிப் போகுமோ அப்படி எல்லாம் அவன் தன் பாதையை திருப்பிக் கொள்ளுவான்.
ஆனால் தன் பக்தியின் நிமித்தம் ஒரு தம்பிடி குறையவாவது ஒரு சங்கடம் வரவாவது இடம் இராதபடி வெகு உபாய தந்திரமாய் நடந்துகொள்ளுவான். அவன் மார்க்க விஷயத்தில் காலத்துக்கேற்ற கோலம் போட்டுக் கொள்ளுவான். அவன் பெண்சாதியும் அவனைப் போலொத்தவள்தான். அவன் வேளைக்கு வேளை தன் கருத்துக்களில் பேதப்பட்டு அதற்கு நியாயம் உண்டென்று வழக்காடவும் அஞ்ச மாட்டான். ஆனால் நான் அறிந்த பிரகாரம் அவன் தன் காரியஸ்தனாகவே இருந்து மகா நிர்ப்பந்தமான முடிவை அடைந்தான். தேவனுக்குப் பயப்பட்ட கூட்டத்தார் அவன் மக்களில் ஒருவரை யாவது மதிக்கவே இல்லையென்றும் கேள்விப்பட்டேன் என்றார்.
1. துன்பமும், மோசமும் முன்னாடித் தெரிந்திருந்தால் எப்போதும் மனதுக்குச் சஞ்சலம் உண்டாகும். இயேசு கிறிஸ்து முதலாய்த் தாம் சிலுவையில் அடையப்போகும் பாடுகளை நினைத்தபோது அழுதுவிட்டார். ஆனால், இந்த மாதிரியாகச் சோதிக்கப்பட்டிருக்கும் எல்லாரையும் தேவன் தாங்கி பலப்படுத்துகிறார்.